search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97622"

    • நம்பினோர்க்கு சாந்த வடிவமானவர்.
    • தலை விதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர்.

    அனைத்து சிவாலயங்களிலும் கால பைரவஅஷ்டமி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். குறிப்பாக காசி பைரவர் ஆலயம், இலுப்பைக்குடி சொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம், சீர்காழி சட்டைநாதர் ஆலயம், வாஞ்சியத்தில் யோக பைரவர் சந்நிதி, புதுவை இடையார் பாளையம் சொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் ஆகிய இடங்களில் பைரவருக்கான ஸ்ரீ ருத்ர ஹோமம், ஸ்ரீ பைரவர் ஹோமம் போன்றவை நடைபெறும்.

    காலபைரவர் அவதரித்த கால பைரவஅஷ்டமி நாளில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கி சகல சவுபாக்கியங்களும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

    ஆணவத்தை அழிக்க சிவபெருமான், ஸ்ரீ கால பைரவராக அவதரித்த நாளே கால பைரவஅஷ்டமி எனப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வழிபடுவது சிறப்பானதாகும்.

    அந்த நாளில் திருமகளின் எட்டு வடிவங்களும் பைரவரை வணங்குவதாக ஐதீகம். அதிலும் அவர் அவதரித்த கால பைரவஅஷ்டமி நாளில் அவரை வணங்குவது, சிறப்பு பூஜைகள், யாகங்களில் கலந்து கொள்வது என்பது சகல வித செல்வங்களையும் அள்ளித்தரும்.

    சொர்ண கமல ரேகை அமைந்திருக்கும் சொர்ணாகர்ஷண பைரவ மூர்த்தியை வணங்குவது இன்னும் சிறப்பானது. ஸ்ரீ பகவத்பாதாள் ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த பைரவ வழிபாடு தொன்மையான பிணி தீர்க்கும் வழிபாடு.

    ராகு கேதுவை முப்புரி நூலாக அணிந்து இருக்கும் பைரவ மூர்த்தி மழு, பாசம், சூலம், தண்டம் ஏந்தி காண்பவரை மெய்சிலிர்க்கச் செய்யும் வடிவம் கொண்டவர். நம்பினோர்க்கு சாந்த வடிவமானவர்.

    காலத்தின் கடவுளான கால பைரவர் தலை விதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர். எனவே துன்பப்படும் எல்லா மக்களும் நாளை வரும் கால பைரவஅஷ்டமி நாளில் பைரவருக்கு வில்வம் அல்லது செவ்வரளி மாலை சூட்டி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி , விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் எல்லா வளங்களும் பெறலாம்.

    மூன்று கண்கள் இருக்கும் தேங்காய் மூடியில் ஐந்து எண்ணெய்களை ஊற்றி விளக்கிடுவதும் விசேஷம். நெய் தீபமும், மிளகுத் திரி தீபமும் சில ஆலயங்களில் சிறப்பாக ஏற்றப்படுகிறது. பைரவருக்கு சந்தனக்காப்பு, வடைமாலை சாத்துவதும் உண்டு.

    பைரவ லட்சார்ச்சனை, ஸ்ரீருத்ர யாகம், ஸ்ரீபைரவ ஹோமம் போன்றவற்றில் கலந்துகொள்வது மிகவும் விசேஷம். எட்டு விதமான மலர்களால் அர்ச்சித்து, பைரவரின்

    "ஓம் கால காலாய வித்மகே

    கால தீத்தாய தீமகீ

    தந்நோ கால பைரவ பிரசோதயாத்:"

    என்ற காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வழிபட்டால், தீராத பிணிகளும் தீரும்; கிடைக்காத செல்வங்களும் கிடைக்கும். எனவே, கால பைரவஅஷ்டமி தினத்தில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று பைரவரை வழிபடுவோம். அதன் பயனாக, எதிரிகளின் தொல்லை, வறுமைப் பிணி போன்ற பிரச்சினைகள் எல்லாம் நீங்கி, லட்சுமி கடாட்சத்துடன் சகல செல்வங்களும் பெற்று சிறப்புற வாழலாம்.

    • பிள்ளையார் நோன்பானது மாலையில் அனுஷ்டிக்கப்படும் நோன்பு ஆகும்.
    • திருமண தடைகள் நீங்கும்.

    பிள்ளையார் நோன்பு நமது கலாச்சாரத்தின் பாரம்பரியத்தின் ஒரு இன்றியமையாத முக்கியமான அடையலாம். பிள்ளையார் நோன்பு எடுக்கும் முறை பிள்ளையார் நோன்புன் வரலாறு இவற்றை எல்லாம் பிள்ளைகளுக்கு எடுத்து சொல்லுங்கள் . ஒரு விழா என்பது ஏன் கொண்டாப்படுகிறது அதன் வராலாறு தொன்மை இவைகளை எடுத்து சொல்லுங்கள் அப்போது அந்த விழா இன்னும் சிறப்பாகவும் பிள்ளைகள் வரலாறு அறிந்து அந்த விழாவில் முழு ஈடுபாடு கொள்வர் அப்போது அந்த விழா முழுமைபெரும்.

    இந்த நோன்பு முன்னொரு காலத்தில் செட்டிநாட்டை சுற்றியுள்ள நகரத்தார்களால் கடைபிடிக்கப்பட்டு பின்னாளில் அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்டு வருகின்ற மேன்மைகள் மிகுந்த நோன்பாக இந்த பிள்ளையார் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது.

    பல்வேறு ஆண்டுகளாக நகரத்தார்களின் மிகுந்த நம்பிக்கைக்குரிய நோன்பாக கடைபிடிக்கப்பட்டு வரும் பிள்ளையார் நோன்பானது மாலையில் அனுஷ்டிக்கப்படும் நோன்பு ஆகும்.

    முதல் நாள் வீடுகளை சுத்தமாக கூட்டி மொழுகி மாவிலைத் தோரணம் கட்டுவார்கள். அதனையடுத்து நோன்பு அன்று நடு வீட்டில் கோலம் இட்டு அப்பம் ,கருப்பட்டிப் பணியாரம், வெள்ளப்பணியாரம், கந்தரப்பம் ,உளுந்துவடை, மோதகம், உப்புகொழுக்கட்டை ,சீடை ,அதிரசம் என பல்வேறு வகையான பலகாரங்கள் செய்து வைத்து ஐந்து வகையான பொரிகளை வீட்டிலே வறுத்து பிள்ளையாருக்கு படைத்தது மகிழ்வர்.

    நகரத்தார்கள் இடையே பிள்ளையார் நோன்புக்கு என்று பிறந்த வீட்டில் இருந்து சீராக அரிசியும் வெல்லமும் கொடுத்தனுப்பும் பழக்கம் அன்றில் இருந்து இன்றுவரை கடைபிடிக்கப்படுகிறது. அதுபோலவே நகரத்தார்களின் திருமணத்தில் வெள்ளிச்சாமான்களுடன் வெள்ளிப் பிள்ளையாரும் உடன் வைப்பர் இது இப்போதும் நடைமுறையில் உள்ளது.

     

    வீட்டில் உள்ள மனைப்பலகையில் மாக்கோலம் இட்டு பிள்ளையார் படத்தை வைத்து பூச்சூட்டி உடன் வெள்ளிப்பிள்ளையாருக்கும் பூச்சூட்டி இருபுறமும் ஒரு குச்சியில் கண்ணுப்பிள்ளைப்பூ, ஆவாரம்பூவும், மாவிலையும் வைத்து கட்டி இதை விநாயகரின் இருபுறத்திலும் வைத்து விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்வார்கள்.

    வீட்டில் உள்ளோரின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி கருப்பட்டிப் பாகையும் அரிசிமாவையும் பிசைந்து செய்த மாவினால் கூம்பு வடிவில் பிள்ளையார் பிடித்து வைத்து அந்த பிள்ளையார் பூஜையை செய்யும் தலைவன் (பெண்கள் இதைச் செய்யக்கூடாது).

    இந்தக் கருப்பட்டிப் பிள்ளையாரின் மீது 21 நூல்இழைகள் கொண்ட திரியைப் போட்டு நெய் ஊற்றி நுனி வாழையிலையை விரித்து வைத்து அதன் நுனியில் வெள்ளி அகல் விளக்கு வைத்து மலர்ச்செண்டு சாற்றி, தீபம் ஏற்றி வைக்கின்றனர்.

    அதன் பின்னர் பிள்ளையாருக்குப் பொரியினால் அபிஷேகம் செய்கின்றர்,அபிஷேகம் செய்யும் போது சங்கு ஊதுகின்றனர் அதன் பின்னர் கருப்பட்டி அப்பம், பொரி, முதலான 21 வகைப் பலகாரங்களை நிவேதனம் செய்து, தேங்காய் உடைத்துப் பழம் வெற்றிலை பாக்கு வைத்துப் படைத்துத் தீபம் காட்டி வழிபடுகின்றனர்.

    ஒரு தடுக்கு போட்டு அதில் வீட்டுக்கு பெரிய ஆண் மகன் அமர்ந்து அனைவரும் ஒன்றாக சேர்ந்து விநாயகர் அகவல் படித்த பின் நிவேதனம் செய்து தீபம் பார்த்த பின் அனைவரும் இலை எடுத்துக் கொள்வார்கள். வீட்டில் யாரேனும் முழுகாமல் இருந்தால் வயிற்றில் உள்ள பிள்ளைக்கும் சேர்த்து இரண்டு இலை எடுத்துகொள்வார்கள்.

    வழிபாட்டின் நிறைவாக, இந்த வழிபாட்டினை முன்னின்று செய்யும் குடும்பத் தலைவன், கூம்பு வடிவான பிள்ளையாரின் உச்சியில் தீபம் எறிந்து கொண்டிருக்கும் போது ஜோதியுடன் சுடரோடு பிள்ளையாரை எடுத்து அப்படியே தனது வாயினுள் போட்டுக் கொள்கின்றனர்.

    இந்த நோன்பு கடைபிடித்தால் நம் துன்பங்கள், கஷ்டங்கள் படிப்படியாக விலகும். திருமண தடைகள் நீங்கும்.

    • சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும்.
    • மாங்கல்ய தோஷம், களத்திரதோஷம், நீங்கும்.

    சோமவாரம் என்பது திங்கள் கிழமையை குறிக்கிறது. 16 திங்கள் கிழமைகள் சிவபார்வதியை நினைந்து விரதமிருந்து பிரார்த்தனை செய்தால் எவ்வளவு மன கஷ்டங்களும் உங்களிடம் இருந்து சுலபமாக நீங்கி விடும்.

    சாபத்தினால் ஒளியிழந்த சோமனான சந்திரன் சோமாவார விரதம் இருந்தபோது எம்பெருமான் காட்சியளித்ததோடு தேய்ந்து கீழே விழும் சந்திரனை தன்னுடைய இருகாரங்களாலும் காப்பாற்றி பிறைச்சந்திரனாக தலையில் சூடிக்கொண்டார் எம்பெருமான். பிறகு, சந்திரன் வளரும் நிலையையும் பெற்றான். அதுவே, தற்போது பௌர்ணமி, அமாவாசை என்றழைக்கப்டுகிறது.

    சோமவார விரதத்தை மேற்கொள்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் எந்த திங்கட் கிழமையிலும் துவங்கலாம். திங்கட்கிழமை அன்று அதிகாலையில் நீராடி மாலை வரை விரதம் இருந்து சிவபார்வதி பூஜைகள் மேற்கொள்ள வேண்டும். இதனால் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் சூழ்நிலைகளை இந்த விரதம் மேற்கொள்பவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

    மேலும் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர மனதை ஒருநிலைப்படுத்தி 21 திங்கள் கிழமை விரதம் இருந்தால் மனம் மாறி இல்லறம் நல்லறமாக மாறும். மேலும் மாங்கல்ய தோஷம், களத்திரதோஷம், நீங்கும். இவ்விரதமுறையில் பெரியவர்களின் ஆசீர்வாதம் மிக முக்கியமானதாாகும்.பெற்றோரிடமோ அல்லது மாமனார் மாமியாரிடமோ அல்லது வயதான தம்பதியரிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ளலாம்.

    திங்கட்கிழமையில் சிவபெருமான் பார்வதி தேவியுடன் இணைந்த படத்திற்கு வில்வ அர்ச்சனை செய்து லிங்காஷ்டகம் படிக்கலாம். அல்லது சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்கு உரிய மந்திரங்களை ஜபிக்கலாம். முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள் நீர் ஆகாரத்தை உணவாக எடுத்துக் கொள்ளலாம். பழச்சாறுகள், பால், பழம் போன்றவற்றை உட்கொண்டு விரதம் மேற்கொள்ளலாம்.

    நைவேத்தியமாக பழங்களையும் உங்களால் முடிந்த பாயாசம், சர்க்கரைப் பொங்கல் போன்ற ஏதாவது ஒரு நிவேதனத்தையும் படைக்கலாம். இது போல் தொடர்ந்து 16 திங்கட்கிழமைகள் விரதம் மேற்கொண்டு சிவ பார்வதியை வணங்கினால் நிச்சயம் நம்முடைய வேண்டுகோள்கள் நிறைவேறும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும்.

    • கண்ணனை வேண்டி கன்னிப் பெண்கள் மேற்கொள்வதுதான் இந்தப் பாவை நோன்பு.
    • பெண்கள் பாவை நோன்பு இருந்தால் விரும்பிய கணவன் கிடைப்பர் என்பது நம்பிக்கை.

    பாவை நோன்பு என்பது உண்மையில் கன்னிப் பெண்களுக்கானது. தனக்கு ஏற்றார்போல் வாழ்க்கைத் துணையை அடையவும், தனது மனதிற்கேற்றார் போல் ஒரு வாழ்க்கை அமையவும், கண்ணனை வேண்டி கன்னிப் பெண்கள் மேற்கொள்வதுதான் இந்தப் பாவை நோன்பு.

    பக்தியின் மிகுதியால், தன்னையும் ஆயர்பாடியில் பிறந்த ஒரு பெண்ணாக பாவித்து, தான் மிகவும் நேசித்த கடவுளான கண்ணனையே தன்னுடைய கணவனாக அடையவேண்டி, பாவை நோன்பு மேற்கொண்டு ஆண்டாள் பாடிய பாடல்களே திருப்பாவை. 

    பன்னிரண்டு ஆழ்வார்களில், ஆண்டாள் மட்டுமே பெண் என்பதால், மற்ற ஆழ்வார்களுக்கில்லாத சிறப்பாக, கண்ணன் மீது கொண்ட பக்தியை அவளால் காதலாகவும் வழங்க முடிந்தது.

    கண் நிறைந்த கணவன் வேண்டும் என்று விரும்பும் பெண்கள் பாவை நோன்பை கடைபிடித்தால் அந்த ஆசை நிறைவேறும்.

    பெண்கள், எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவள் ஆண்டாள். பெருமாள் மீது பக்தி கொண்டு அவரையே தன் கணவனாக அடைய விரும்பியவள்.

    அவள் கண்ணனை மணக்க வேண்டி மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்தாள். அவளுக்கு அருள் செய்த சுவாமி, பங்குனி உத்திரத்தில் திருமணம் செய்து கொண்டார்.

    ஆகவே, பெண்கள் பாவை நோன்பு இருந்தால் விரும்பிய கணவன் கிடைப்பர் என்பது நம்பிக்கை.

    திருப்பாவை 30 பாசுரங்களும் மார்கழி மாதம் கன்னிப் பெண்கள் நல்ல கணவன் வேண்டியும் மழை வேண்டியும் செய்யும் நோன்பு முறைகளைப் பற்றிக் கூறுகின்றன.

    காத்தியாயனி என்னும் பாவைக்கு வழிபாடு செய்து அவரவர்களுக்கு வேண்டுவனவற்றை அருளும்படி வேண்டுவது வழக்கம். பாவை நோன்பு பெண்மக்கள் எடுக்கும் நோன்பு ஆகும்.

    கண்ணனை மனத்தில் வரித்த ஆண்டாள் தன்னை ஆய்ப்பாடிப் பெண்களில் ஒருத்தியாகப் பாவித்துக் கொள்கின்றாள்.

    திருவில்லிபுத்தூரை ஆய்ப்பாடியாகவும், வடபெருங்கோயில் நந்தகோபர் மாளிகையாகவும், அங்கு எழுந்தளியிருக்கும் இறைவனைக் கிருஷ்ணனாகவும் பாவித்து இடைப்பெண்கள் நோற்ற நோன்பை நோற்கின்றாள்.

    அந்நோன்பைப் பற்றித் திருப்பாவை, நிகழ்ச்சி அடிப்படையில் பதிவு செய்துள்ளது.

    • துளசி தீர்த்தம் மட்டுமே பருகி உபவாசம் இருக்க வேண்டும்.
    • இன்று முழுவதும் ஸ்ரீராமஜெயம் எழுதுவது நல்ல பலன்களை அளிக்கும்.

    அனுமன் பிறந்தநாளன்று அவருக்கு விரதம் இருந்து அவரை வணங்கினால், அனைத்து துன்பங்களும் நீங்கி வாழ்க்கையில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும் என்பது ஐதீகம். இப்போது அனுமனுக்கு விரதம் இருக்கும் முறைகள் என்னென்ன? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

    அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையிலேயே குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி உபவாசம் தொடங்க வேண்டும்.

    அருகில் இருக்கும் ராமர் அல்லது அனுமன் கோயிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். வசதி இருந்தால் வெற்றிலை மாலை, வெண்ணெய்க் காப்பு சாத்தியும் வணங்கலாம். அன்று ஸ்ரீராமஜெயம் எழுதுவது நல்ல பலன்களை அளிக்கும்.

    பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே பருகி உபவாசம் இருக்க வேண்டும்.

    மதிய வேளையில் உணவு எடுத்துக்கொள்ளலாம். சனிபகவானை வெற்றிகொண்ட வீர ஆஞ்சநேயரை அனுமன் ஜெயந்தி நாளில் வணங்கினால் சனிதோஷங்களிலிருந்து பாதுகாப்பினைப் பெறலாம்.

    சகல ஆனந்தங்களையும் அள்ளித்தருபவர் ஆஞ்சநேயர் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவனையும் திருமாலையும் ஒன்றிணைக்கும் தெய்வமாக விளங்குபவர் ஆஞ்சநேயர், எனவே இவரை வணங்கி அளவில்லாத ஆனந்த நிலையினைப் பெறலாம்.

    ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்: 'ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே, வாயுபுத்ராய தீமஹி, தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத்' என்ற இந்த அனுமன் காயத்ரி மந்திரத்தை உச்சரித்து சகல பாவங்களில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் நிவர்த்தி பெறலாம்.

    அனுமன் ஜெயந்தி நாளில் அனுமனுக்கு மிகவும் பிடித்த இனிப்பு பலகாரங்களான லட்டு, பூந்தி, மற்றும் உகந்த மலர்களான துளசி, வெற்றிலை போன்றவற்றை படையலிட்டு வழிபாடு செய்வார்கள். 

    ஒருவர் ஸ்ரீராமரையோ அல்லது ஆஞ்சநேயரையோ மனமுருகி வேண்டினாலும் அவர்களைக் காக்கும் பெரும் பொறுப்பை அனுமன் ஏற்பார்.

    வியாழக்கிழமையும், சனிக்கிழமையும் அனுமனுக்கு முக்கிய வழிபாட்டு தினங்கள் ஆகும். கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட்டால் சனியின் பிடியிலிருந்து நம்மை காப்பாற்றுவார்.

    ஒருமுறை ராமபிரானுக்கே, அனுமன் தனது வாலை சுற்றி வைத்து கோட்டை போல எழுப்பி, பாதுபாப்பு அளித்ததாக புராணங்கள் சொல்கின்றன. அனுமனின் பலம் அனைத்தும் வாலில் இருப்பதாக ஐதீகம். எனவே அந்த வாலைத் தொட்டு வழிபட்டால் நாளும் நன்மை கிடைக்கும்.

    அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையிலேயே குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி உபவாசம் தொடங்க வேண்டும். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே பருகி விரதம் இருக்க வேண்டும். இன்று நாள் முழுவதும் ஸ்ரீராமஜெயம் எழுதுவது நல்ல பலன்களை அளிக்கும்.

    • ராவணனை அழிக்கும் பொருட்டு ராமனாக அவதரித்தார், மகாவிஷ்ணு.
    • ‘அனுமன் ஜெயந்தி’யான நாளை ஆலயங்களில் வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள்.

    இறப்பில்லாது வாழ்பவர்களை 'சிரஞ்சீவி' என்று அழைப்பார்கள். ராவணன் தன் அண்ணன் என்றாலும், நியாயத்தின் பக்கம் நின்றான் விபீஷணன். பெருமாளுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற தன்னையே அர்ப்பணித்தான், மகாபலி சக்கரவர்த்தி. சிவனே கதி என்று சரணாகதியில் பக்தி செலுத்தியதால் எமனையே வென்றார், மார்க்கண்டேயர். படிப்பவர்களின் பாவங்களைப் போக்கும் புராணங்களையும், காவியங்களையும் எழுதினார் வியாசர். தாயைக் கொன்று, தந்தையின் சொல்லை செயல்படுத்தியதுடன், மீண்டும் தாயை உயிர்ப்பித்தார் பரசுராமர். கடைசி வரை கட்சி மாறாமல், கவுரவர்களுக்காக தன் வீரத்தை வெளிப்படுத்தினான், துரோணரின் மகன் அஸ்வத்தாமன். இதுபோன்ற செய்கையால் மேற்கண்ட ஆறுபேரும் இறப்பில்லா சிரஞ்சீவி வாழ்வைப் பெற்றனர். ஆனால் யார் என்று தெரியாத ராமனுக்காக, எந்த எதிர்பார்ப்பும் இன்றி சேவை புரிந்த அனுமனுக்கும் சிரஞ்சீவி பட்டியலில் இடமுண்டு.

    ராவணனை அழிக்கும் பொருட்டு ராமனாக அவதரித்தார், மகாவிஷ்ணு. அவருக்கு உதவிபுரிய அனைத்து ஜீவராசிகளும் முன்வந்தன. ராமருக்கு உதவுவதில் தன் பங்கும் இருக்க வேண்டும் என்று நினைத்த சிவபெருமான், தன்னுடைய சக்தியை, ஒரு பெண்ணிடம் தருமாறு வாயுதேவனை பணித்தார். அப்போது கிஷ்கிந்தா வனத்தில் அஞ்சனை என்ற வானரப் பெண், தனக்கு குழந்தை வரம் கிடைக்க சிவபெருமானை வேண்டி தவமிருந்தாள். அவளிடம் ஈசனின் சக்தியை கொண்டு போய் சேர்த்தார், வாயுதேவன். அதன்மூலமாக அஞ்சனைக்கு பிறந்தவர்தான், அனுமன்.

    கைகேயியால் வனத்திற்கு அனுப்பப்பட்ட ராமன், அங்கே தன் மனைவியை பறிகொடுக்கிறார். செய்வதறியாத நின்ற ராமனுக்கு, வழிகாட்டியாக, சிறந்த சேவகனாக தோளோடு தோள் நின்றவர் அனுமன்தான். அவர்தான் சுக்ரீவனிடம் ராமரை அழைத்துச் சென்றார். வாலிக்கும், சுக்ரீவனுக்கும் இருந்த பகையை முடிவுக்குக் கொண்டுவந்தார். சீதையால் 'சிரஞ்சீவியாக இரு' என்று ஆசீர்வதிக்கப்பட்டார். ராமருக்காக, ராவணனிடம் தூது சென்றார். ராவணனுடனான யுத்தத்தில் இந்திரஜித்தின் அம்பு பட்டு மூச்சையான லட்சுமணனை காப்பாற்ற சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து வந்தார். 14 ஆண்டு வனவாசம் முடிந்தும் ராமர் திரும்பி வராததால் தீக்குளிக்க முயன்ற பரதனை, காற்றை விட வேகமாகச் சென்று காப்பாற்றினார். மகாபாரத காலத்திலும் கூட, அர்ச்சுனனின் தேரில் கொடியாக இருந்து, அனைத்து ஆபத்துகளையும் தாங்கி நின்றார்.

    மகாபாரதத்தில் வரும் கிருஷ்ணன்- அர்ச்சுனன் நட்பை விட உயர்வானது, ராமாயணத்தில் ராமருக்கும், அனுமனுக்கும் உரிய பந்தம். மகாபாரதத்தில் அர்ச்சுனனுக்காக கடவுளான கிருஷ்ணர் துணை நின்றார். ஆனால் ராமாயணத்தில் கடவுளான ராமருக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாது சேவை புரிந்தவர் அனுமன். இப்படிப்பட்ட பெருமைக்குரியவர் என்பதால்தான் மகாவிஷ்ணு, கருடனுக்கு அடுத்தபடியாக தன்னுடைய வாகனமாக அனுமனையும் ஏற்றுக்கொண்டார். அதே சமயம் கருடனுக்கு இல்லாத பெருமை அனுமனுக்கு உண்டு. அது பெரிய திருவடியான கருடன் பெரும்பாலும் பெருமாள் கோவிலில் தனிச் சன்னிதியில் அல்லது பெருமாளுக்கு எதிரில்தான் அருள்பாலிப்பார். ஆனால் அனுமன் பெருமாள் கோவில்களில் இருந்தாலும், அவருக்கென்று தனியாகவும் பல ஆலயங்கள் எழுப்பப்பட்டு இருக்கின்றன. அதற்கு அவரது தியாகமும், தன்னலமற்ற இறை சேவையும்தான் காரணம்.

    அனுமன் அவதரித்ததாகக் கூறப்படும் மார்கழி மாத மூல நட்சத்திரமும், அமாவாசையும் இணையும் தினத்தில் அவரை வழிபடுவது சிறப்பானது. 'அனுமன் ஜெயந்தி'யான நாளை ஆலயங்களில் வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். அனுமனை வழிபாடு செய்தால், திருமால், சிவன், ருத்ரன், பிரம்மா, இந்திரன், கருடாழ்வார் ஆகியோரை வழிபட்ட பலன் கிடைக்கும். அவரது வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி இருப்பதால், அவரை வழிபடுபவர்களுக்கு நவக்கிரக தோஷம் விலகும். அறிவு கூர்மையாகும், உடல் வலிமை பெருகும். மனஉறுதி ஏற்படும். அச்சம் அகலும். நோய் நொடிகள் விலகும். தெளிவு உண்டாகும். வாக்கு வன்மை அதிகரிக்கும். அனுமனை வெண்ணெய் சாத்தியும், வெற்றிலை, வடை, துளசி, எலுமிச்சைப்பழம் போன்றவற்றால் ஆன மாலைகளை அணிவித்தும் வழிபடுவது சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும்.

    ராமர் அல்லது அனுமன் கோயிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும். அனுமன் உணவுப்பிரியர். நன்றாக சாப்பிடுவார் அவருக்கு பொரி, அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர், பழங்கள், வாழைப்பழம் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம்.

    • ஒவ்வொரு மாதமும் வரும் மாத சிவராத்திரிக்கு ஒரு சிறப்பு உண்டு.
    • ஒவ்வொரு மாத சிவராத்திரி வழிபாடும் ஒவ்வொரு தெய்வத்தால் வழிபடப்பட்டதாகும்.

    பெருமானுக்குரிய விரதங்களில் ஒன்று சிவராத்திரி விரதம். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி தினத்தில் வருவதை மகா சிவராத்திரி என்கிறோம். மாசி மாதம் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி அன்று அமாவாசைக்கு முந்தைய நாள் அனுஷ்டிக்கப்படும் சிவராத்திரி தான் மகா சிவராத்திரி என்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    மகா சிவராத்திரியில் விரதம் இருப்போருக்கு நினைத்த காரியங்கள் கைகூடும். பொருளாதார முன்னேற்றம் அடைந்து சகல வளங்களும் வெகு விரைவில் கிட்டும். வேண்டிய வேண்டுதல்கள் எல்லாம் தடையின்றி நிறைவேறும். அனைத்து பாவங்களும் நீங்கி இறுதியில் சிவபெருமானின் திருவடியை அடைந்து மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    விரதம் கடைபிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்ய வேண்டும். அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணைசெய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

    தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் வரும் மாத சிவராத்திரிக்கு ஒரு சிறப்பு உண்டு. ஒவ்வொரு மாத சிவராத்திரி வழிபாடும் ஒவ்வொரு தெய்வத்தால் வழிபடப்பட்டதாகும். அதன் முழு விபரத்தை இங்கே பார்க்கலாம்.

    சித்திரை மாதம் - உமாதேவியால் வழிபடப்பட்டது.

    வைகாசி மாதம் - சூரிய பகவானால் வழிபடப்பட்டது.

    ஆனி மாதம் - ஈசனால் வழிபடப்பட்டது.

    ஆடி மாதம் - முருகனால் வழிபடப்பட்டது.

    ஆவணி மாதம் - சந்திரனால் வழிபடப்பட்டது.

    புரட்டாசி மாதம் - ஆதி சேஷனால் வழிபடப்பட்டது.

    ஐப்பசி மாதம் - இந்திரனால் வழிபடப்பட்டது.

    கார்த்திகை மாதம் - சரஸ்வதி தேவியால் வழிபடப்பட்டது.

    மார்கழி மாதம் - லட்சுமியால் வழிபடப்பட்டது.

    தை மாதம் - நந்தி தேவரால் வழிபடப்பட்டது.

    மாசி மாதம் - தேவர்களால் வழிபடப்பட்டது.

    பங்குனி மாதம் - குபேரனால் வழிபடப்பட்டது.

    மாத சிவராத்திரி நாளில், சிவ வழிபாடு செய்வதும், சிவ தரிசனம் செய்வதும், சிவ நாமங்களை சொல்லி ஜெபிப்பதும் மகத்தான பலன்களை தந்தருளும் என்பது ஐதீகம். மாத சிவராத்திரியில் சிவாலயத்துக்குச் சென்று சிவலிங்கத் திருமேனியையும் நந்திதேவரையும் வழிபட வேண்டும். சிவனாருக்கு வில்வம் சார்த்தி பிரார்த்தனை செய்தால் பிரச்சினைகள் எல்லாம் தீர்த்து வைப்பார் சிவபெருமான்.

    • மார்கழி என்பது பூஜைகளுக்கு உரிய மாதம்.
    • பிரதோஷம் என்பது திரயோதசி திதியில் வருவது.

    மார்கழி மாதத்தின் பிரதோஷ நன்னாள் நாளை (21-ம் தேதி). பிரதோஷ வேளையில் சிவ தரிசனம் செய்து வேண்டிக்கொண்டால், பாவங்கள் தொலையும், புண்ணியங்கள் பெருகும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    மார்கழி மாதம் என்பது வழிபாட்டுக்கு உகந்த அற்புதமான மாதம். மார்கழி என்பது பூஜைகளுக்கு உரிய மாதம். இந்த மாதத்தில் நாம் செய்யும் வழிபாடுகள் எண்ணற்ற பலன்களை வழங்கும் என்பது ஐதீகம். இந்த மாதத்தில் நாம் செய்யும் பூஜைகளும் ஜபதபங்களும் மந்திரங்களும் மும்மடங்கு பலன்களைக் கொடுக்கும்.

    சிவ வழிபாடுகளில் மிக மிக முக்கியமான வழிபாடு என்று பிரதோஷத்தைக் குறிப்பிடுவார்கள். பிரதோஷம் என்பது திரயோதசி திதியில் வருவது. திரயோதசி என்பது ஒவ்வொரு பெளர்ணமிக்கும் முந்தைய மூன்றாம் நாளும் அமாவாசைக்கு முந்தைய மூன்றாவது நாளும் வருகிறது.

    திரயோதசி திதி வருகிற மாலை நேரம் பிரதோஷம். பிரதோஷத்தில் சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளும் அபிஷேக ஆராதனைகளும் விமரிசையாக நடந்தேறும். பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை. இந்த நேரத்தில்தான் சிவனாருக்கு பூஜைகள் நடத்தப்படும்.

    பிரதோஷ நன்னாளில், சிவலிங்கத்திருமேனிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது போலவே, அந்த நாளில், நந்திதேவருக்கும் வழிபாடுகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். நந்திதேவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். பிரதோஷம் என்பது எப்போதுமே, மாலை 4.30 முதல் 6 மணி வரை.

    செவ்வாய்க் கிழமையிலும் வெள்ளிக்கிழமையிலும் ராகுகால வேளையில், அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று துர்கைக்கு விளக்கேற்றுவார்கள். நெய்தீபம் அல்லது எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவார்கள்.

    மார்கழி மாதத்தின் பிரதோஷ நாளில், விரதம் இருந்து மாலையில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் செல்லுங்கள். நந்திதேவருக்கும் சிவலிங்கத்திருமேனிக்கு நடைபெறும் பிரதோஷ அபிஷேகத்துக்கு பொருட்களை வழங்கி, அபிஷேகத்தை தரிசியுங்கள். நமசிவாய மந்திரத்தைச் சொல்லி சிவனாரை வழிபடுங்கள். சிந்தையைத் தெளிவாக்கி, வாழ்வை வளமாக்கித் தந்தருள்வார் சிவனார்!

    • மார்கழி மாதம் முழுவதுமே பெருமாளுக்கு உரிய மாதம்.
    • பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசிக்கும் பக்தர்கள் ஏராளம்.

    மார்கழி மாதம் என்பது வழிபாடுகளுக்கும் பூஜைகளுக்கும் உரிய மாதம். வேறு எந்த நிகழ்வுகளிலும் கவனம் செலுத்தாமல், உரிய முறையில் காலையும் மாலையும் பூஜைகளிலும் வழிபாடுகளிலும் ஈடுபடுவது மிக உன்னதப் பலன்களையெல்லாம் வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    மார்கழி மாதம் முழுவதுமே, பனியும் குளிரும் பரவிக்கிடக்கிற பிரம்ம முகூர்த்தத்தில், ஆண்டாளின் திருப்பாவை பாடி அனந்தனை, அரங்கனை, மாலோனை, மகாவிஷ்ணுவை வழிபடுவார்கள் பக்தர்கள். 'மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்' என கீதையில், கிருஷ்ணவதாரத்தில் தெரிவித்துள்ளார் பகவான். மார்கழி மாதம் முழுவதுமே பெருமாளுக்கு உரிய மாதம்.

    ஒவ்வொரு மாதமும் வருகிற ஏகாதசி திதியில், பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசிக்கும் பக்தர்கள் ஏராளம். அதேசமயம், ஏகாதசி நன்னாளில், விரதம் மேற்கொள்ளும் பக்தர்களும் இருக்கிறார்கள்.

    ஏகாதசி நன்னாளில், விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வதும் பெருமாளுக்கு உகந்த புளியோதரை நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்வதும் எண்ணற்ற பலன்களை வாரி வழங்கும்.

    இன்று விரதம் இருந்து மாலையில் பெருமாள் கோயிலுக்குச் செல்லுங்கள். துளசி மாலை சார்த்துங்கள். துளசி தீர்த்தம் பருகுங்கள். பாவங்களையெல்லாம் விலக்கித் தந்து, புண்ணியங்களையெல்லாம் போக்கி அருளுவார். மங்கல காரியங்களை நடத்தித் தந்தருளுவார். மங்காத செல்வம் தந்தருளுவார்.

    • மார்கழி மாத நோன்பு என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. 
    • தொழிலில் நஷ்டம் நீங்கி லாபம் பெருகும். 

    மார்கழி மாதத்தில் வழிபாடு என்பது வழிவழியாகத் தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் மார்கழி மாத நோன்பு என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. 

    மார்கழி மாதத்தில் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம். மேலும் திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், தொழிலில் நஷ்டம் நீங்கி லாபம் பெருகும்.

    மார்கழி மாதத்தின் ஒவ்வொரு நாளும் நித்ய விரத நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீமந்நாராயணனின் கேசவா, நாராயணா, கோவிந்தா, மாதவா, மது சூதனா, விஷ்ணு, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மனாபா, தாமோதரா என்ற பனிரெண்டு நாமங்களும், பனிரெண்டு மாதங்களாக கருதப்படுகின்றன. இதில் முதல் நாமமாக விளங்கும் ஸ்ரீமந்நாராயணனின் கேசவா என்பது மாதங்களுக்கு மணிமகுடமான மார்கழியாக விளங்குகிறது. 

    மார்கழி மாதத்தில், பெண்கள் இருக்கும் விரதங்களில் முக்கியமானது மார்கழி நோன்பாகும். இது பாவை நோன்பு என்றும் அழைக்கப்பெறுகின்றது. பாவை நோன்புக் காலத்தில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி மற்றும் ஆழ்வார்கள் பாசுரங்களை பாடி மகிழ்ந்து விரதத்தை கடைபிடிப்பார்கள்.

    திருவெம்பாவை நோன்பு: திருவெம்பாவை நோன்பு என்பது மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஒன்பது நாட்களுக்கு முன்பு தொடங்கி கடைபிடிக்கப்படும் நோன்பாகும். இந்த நோன்பு பாவை நோன்பு, கார்த்யாயனி விரதம் என்று அழைக்கப்படும் சிவ விரதமாகவும், வைணவ விரதமாகவும் போற்றப்படுகிறது.

    மார்கழி மாதத்தில் வைகுண்ட பதவி பெறும் வைகுண்ட ஏகாதசி வருகின்றது. இது வருடத்தில் முக்கிய ஏகாதசி என்பதால் வைகுண்ட ஏகாதசி வழிபட மறவாதீர்கள். மார்கழியில் வருகின்ற பாவை நோன்பு பெண்கள் இருக்கும் விரதங்களில் முக்கியமானது.

    திருமொழி, திருப்பாவை, ஆழ்வார்கள் பாசுரங்களை பாடி மகிழ வேண்டும். திருவாதிரை நட்சத்திரத்துடன் கூடிய திருவாதிரை நோன்பு சிவ விரதமாக போற்றப்படுகின்றன. திருவாதிரை நோன்பு, திருவெம்பாவை நோன்பு, பௌர்ணமி அன்று கடைபிடிக்கப்படும்.

    இன்றைய தினம் திருவாதிரை களி செய்து சிவபெருமானுக்கு படைத்து வழிபடுவார்கள். மாங்கல்ய பலம் பெற நோன்பு இருக்கும் பெண்கள் அன்றைய தினம் உபவாசம் இருந்து மறுநாள் பாராயணம் செய்வர். திருவாதிரை நட்சத்திரம் அன்று புது மாங்கல்யச் சரடு மாற்றிக் கொள்வார்கள்.

    • இந்த மாதம் ஒரு வழிபாட்டு மாதமாகும்.
    • மார்கழி மாதங்களில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை.

    இறையருள் பெறுவதில் சிறந்ததாக மார்கழி மாதம் இருக்கிறது. 'மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்' என்று கிருஷ்ணர் கூறுவதில் இருந்தே அதன் சிறப்பை நாம் உணரலாம்.

    சூரிய பகவான் தனுசு ராசியில் பிரவேசிக்கும் மாதம் என்பதால், ஜோதிட சாஸ்திரம் இந்த மாதத்தை 'தனுர் மாதம்' என்று குறிப்பிடுகிறது.

    இந்த மாதம் ஒரு வழிபாட்டு மாதமாகும். மார்கழி மாதம் முழுவதும் சகல சைவ, வைணவ ஆலயங்களில் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே வழிபாடுகள் நடத்தப்படும். மேள,தாள வாத்தியங்கள் முழங்கப்படும். சிவாலயங்களில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியும், விஷ்ணு ஆலயங்களில் திருப்பாவையும் பாராயணம் செய்யப்படும். பக்தர்கள் பலரும் அதிகாலையில் எழுந்து நீராடி, வாசல்களில் அழகிய வண்ணக் கோலங்கள் இட்டு, ஆலயம் சென்று இறைவனை வழிபாடு செய்வார்கள்.

    ஒரு நாளுக்கு 60 நாழிகை (ஒரு நாழிகை என்பது 24 நிமிடம்). பகல் 30 நாழிகை, இரவு 30 நாழிகை. மனிதர்களுக்கான இந்த கணக்கின்படி, ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தை முதல் ஆனி மாதம் வரையுள்ள காலம் தேவர்களுக்கு பகல் நேரம் ஆகும். ஆடி முதல் மார்கழி மாதம் வரை உள்ள காலம் இரவு நேரம் ஆகும். இரவுக் காலம் முடிகிற தேவர்களின் வைகறைப் பொழுது மார்கழி மாதம் என்று சொல்லப்படுகிறது.

    நமக்கு மார்கழி மாதம் என்பது, தேவர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையுள்ள இரண்டு மணி நேரத்தைக் குறிப்பதாகும். சூரிய உதயத்துக்கு முன்பு வரும் இது 'பிரம்ம முகூர்த்தம்' என்று அழைக்கப்படும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மார்கழியில் தான் இறைவனை அதிகமாக வழிபடும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மகாபாரத யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது. திருப்பாற்கடல் கடையப்பட்டதும், முதலில் வெளிப்பட்ட விஷத்தை, சிவன் உண்டு உலக ஜீவராசிகளை காப்பாற்றியதும் ஒரு மார்கழி மாதத்தில்தான் என்கிறது, புராணங்கள்.

    இந்திரனால் பெருமழை வெள்ளமாக உருவாக்கப்பட்டு, கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் மார்கழி மாதமே. எல்லாவற்றுக்கும் மேலாக ஆண்டாள் நாள்தோறும் வைகறையில் எழுந்து ஒவ்வொரு பாசுரமாகப் பாடி, திருப்பாவையால் திருமாலின் திருவடியைத் தொழுது, திருமணம் புரிந்ததும் மார்கழி மாதம் என்னும் சிறப்பு மிக்க மாதத்தில் தான்.

    தேவர்களின் அதிகாலைப் பொழுதான இந்த நேரத்தில்தான், சிதம்பரம் நடராஜர் ஐந்தொழில்களையும் செய்கிறார். சிதம்பரத்தில் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியும் மிக, மிக விசேஷமானவை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

    மார்கழி மாதங்களில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை. இதன் காரணமாக சிலர் மார்கழி மாதம் என்பது பீடை மாதம் என்ற கருத்தை கொண்டவர்களாக இருக்கின்றனர். அவ்வாறு மார்கழி மாதமானது பீடை மாதமாக இருந்தால், அர்ச்சுனனுக்கு உபதேசித்த கீதா உபதேசத்தில் 'மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்' என்று கிருஷ்ண பரமாத்மா கூறி இருப்பாரா? என்பதை அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    நோன்புக்கு புலனடக்கம் அவசியம். நமது நாட்டில் மழை, குளிர் காலங்களில் தான் பெரும்பாலும் விரத நாட்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவர்களின் பகல் காலமான தை முதல் ஆனி மாதம் வரை சுப காரியங்கள், அதாவது விவாகப் பேச்சுகள், திருமணங்கள் நடத்துகிறோம்.

    தேவர்களின் இரவு காலமான ஆடி முதல் மார்கழி வரையிலான மாதங்களில் விரதம், தியானம் முதலியவற்றைச் செய்கிறோம். விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, கந்த சஷ்டி, கார்த்திகை தீபம், ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி போன்ற வழிபாட்டு நிகழ்வுகள் இந்த கால கட்டத்தில் நடைபெறுகின்றன.

    • ஒரே ஒரு குறிக்கோளை வைத்துதான் வேண்டுதல் மேற்கொள்ளப்பட வேண்டும்.
    • எச்சில் படாத பாத்திரமாக இருக்க வேண்டும்.

    ஒரு வீட்டின் முன்னேற்றத்திற்கு குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்று. தினம்தோறும் இஷ்ட தெய்வத்தை வேண்டி வழிபட்டாலும், குலதெய்வத்தின் நாமத்தை ஒரு முறையாவது உச்சரித்து, தீபம் ஏற்றுவது நம்முடைய வீட்டிற்கு மிகவும் நல்லது.

    குலதெய்வத்தை வியாழக்கிழமை அன்று, இந்த முறைப்படி விரதமிருந்து வழிபடும் போது, நீங்கள் என்ன நினைத்து விரதத்தை தொடங்குகிறீர்களோ, அந்த வேண்டுதலானது 14வது வாரம் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    வியாழக்கிழமை காலையிலேயே வீட்டை துடைத்து சுத்தம் செய்துவிடுங்கள். அதன் பின்பு குளித்து முடித்துவிட்டு, இறைவனுக்கு பூக்களை அணிவித்து, ஒரே ஒரு தீபம் ஏற்றி வைத்து, உங்களின் குலதெய்வத்தின் பெயரை உச்சரித்து, உங்களுடைய வேண்டுதலை சொல்லி உங்களது விரதத்தை தொடங்க வேண்டும். சில பேருக்கெல்லாம் வாழ்க்கையில் தீர்க்கவே முடியாத கஷ்டம் என்று ஒன்று கட்டாயம் இருக்கும். அந்த கஷ்டம் தீர வேண்டும் என்று கூட, வேண்டுதலை வைக்கலாம். 14 வாரமும் அந்த வேண்டுதலை நினைத்துதான் விரதத்தை மேற்கொள்ள வேண்டும். ஒரே ஒரு குறிக்கோளை வைத்துதான் வேண்டுதல் மேற்கொள்ளப்பட வேண்டும். வேண்டுதலை மாற்றக்கூடாது.

    காலையில் உங்களது விரதத்தை தொடங்கலாம். உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லாதவர்கள், உடல் ஆரோக்கியத்தோடு இருப்பவர்கள், அந்த நாள் முழுவதும் ஒரு வேளை மட்டும் சாப்பிட வேண்டும். அதுவும், குறிப்பாக நாட்டு பசும்பாலால் செய்யப்பட்ட தயிர் சாதத்தை மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது கோடி புண்ணியத்தை உங்கள் குலத்திற்கே தேடித் தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அந்த தயிர் சாதத்தில் உப்பு சேர்க்காமல் சாப்பிட்டால் இன்னும் உத்தமம். பிடிக்காதவர்கள் உப்பு சேர்த்துக் கொள்ளலாம் தவறில்லை.

    வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கும் பெண்களாக இருந்தால், இந்த வியாழக்கிழமை நாள் முழுவதுமே குலதெய்வத்தை நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருக்கலாம். அதாவது நீங்கள் வேலை செய்தது போக மீதம் இருக்கும் நேரத்தில். மாலை நேரம் வழக்கம் போல் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து உங்கள் வீட்டில் இருக்கும் வெள்ளிக்கிண்ணமாக இருந்தாலும் சரி, அல்லது பித்தளை பாத்திரமாக இருந்தாலும் சரி. கண்ணாடிக் கிண்ணமாக இருந்தாலும் சரி. ஏதாவது ஒரு கிண்ணத்தை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். எச்சில் படாத பாத்திரமாக இருக்க வேண்டும். சில்வர் பாத்திரத்தை பயன்படுத்த வேண்டாம்.

    அந்த சிறிய கிண்ணத்தில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, உங்கள் மனதில் இருக்கும் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று சொல்லி, மனமுருகி, மாலையும் குலதெய்வத்தை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். மாலை தீபம் ஏற்றிவைத்து உங்களது விரதத்தை முடித்துக் கொள்ளுங்கள். அதனால் இரவு நிச்சயம் சாப்பிடக் கூடாது. ஒரு வேலை தயிர் சாதம் சாப்பிடுவதோடு மட்டும் விரதம் இருக்கலாம்.

    14வது வாரம் உங்களது விரதம் முடியும்போது, அந்த ஒரு ரூபாய் நாணயங்களை குலதெய்வக் கோவில்களில் கொண்டுபோய் செலுத்திவிடலாம். குலதெய்வக் கோயில் தூரமாக உள்ளவர்கள், ஒரு மஞ்சள் துணியை எடுத்து, அந்த நாணயங்களை, முடிந்து வைத்து விடுங்கள். எப்போது குலதெய்வ கோயிலுக்கு செல்கிறீர்களோ, அப்போது அந்த நாணயங்களை குலதெய்வ கோயிலில் சேர்த்து விடுங்கள்.

    வாரம் தோறும் வரும் வியாழக்கிழமை அன்று, மேல் சொல்லப்பட்ட முறைப்படி சுலபமான முறையில் குலதெய்வ வழிபாட்டை நம்பிக்கையோடு செய்தால் போதும். 14வது வாரம் வியாழக்கிழமை அன்று, உங்களது இந்த விரதம் முடியும் போது, உங்களது வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும். நம்பிக்கையோடு பிரார்த்தனை வைத்து குல தெய்வத்தை வேண்டி தான் பாருங்களேன்! ரொம்ப நாளா உங்க வீட்ல இருக்கிற பிரச்சினை கூட விரைவில் ஒரு முடிவுக்கு வரும். இந்த விரதத்திற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது என்பதை, உங்கள் வேண்டுதல் நிறைவேறிய பின்பு தான், உங்களால் உணர முடியும். ஆனால், நீங்கள் வைக்கும் வேண்டுதல் நிறைவேறுவதற்கான முயற்சியை, நீங்கள்தான், இடைவிடாமல் தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்பதை மட்டும் மறந்துடாதீங்க! உங்களை கைதூக்கி விடும் ஒரு ஊன்றுகோல் தான் உங்கள் குலதெய்வம்.

    ×