search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97622"

    • பெருமாளை வழிபட உகந்த நாட்களில் ஒன்று, ஏகாதசி.
    • ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது.

    பெருமாளை வழிபட உகந்த நாட்களில் ஒன்று, ஏகாதசி. இந்த நாளில் பெருமாளை வழிபாடு செய்தால் பலன்கள் இரு மடங்காகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மாதம் இரண்டு ஏகாதசிகள் என்று, வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வரும். சில வருடம் 25 ஏகாதசிகள் கூட வருவதுண்டு. இந்த ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. அந்த வகையில் இந்த மாதம் ஐப்பசியில் வரும் ஏகாதசிகளுக்கு பாபாங்குசா ஏகாதசி, இந்திர ஏகாதசி என்று பெயர். இந்த ஏகாதசி விரதங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    இந்திர ஏகாதசி

    ஐப்பசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியை, 'இந்திர ஏகாதசி' என்பார்கள். இந்த ஏகாதசி விரதம், நாரதர் மூலமாக வெளிப்பட்டது. புராண காலத்தில் இந்திரசேனன் என்ற மன்னன், மாஹிஷ்மதி என்ற நகரை ஆட்சி செய்தான். ஒருநாள் அவனது அரசவைக்கு நாரத முனிவர் வருகை தந்தார். அவரை வரவேற்று அமரச் செய்த மன்னன், நாரதர் வந்ததற்கான காரணத்தைக் கேட்டறிந்தான். அதற்கு நாரதர், "நான் எமலோகம் சென்றிருந்தபோது, உன்னுடைய தந்தையை சந்தித்தேன். அங்கு நரகத்தில் அவர் கடும் துன்பத்தை அனுபவிக்கிறார். அவர் என்னிடம், 'என் மகனிடம் கூறி, இந்திர ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளச் செய்யுங்கள். அப்படிச் செய்தால், நான் இந்த நரகத்தில் இருந்து விடுபடுவேன். என்னை கரையேற்றும்படி அவனிடம் கூறுங்கள்' என்று சொல்லியனுப்பினார். அதற்காகவே நான் வந்தேன்" என்றார்.

    அதைக் கேட்ட மன்னன், தந்தையின் நிலை அறிந்து வருந்தினான். தொடர்ந்து தன் தந்தையின் ஆன்மா துன்பத்தில் இருந்து விடுபடுவதற்காக, இந்திர ஏகாதசி விரதம் மேற்கொள்ள முடிவு செய்தான். அதற்கான வழிமுறைகளை நாரத முனிவரிடம் இருந்துகேட்டு, அதன்படியே செய்தான். இதனால் அவனது தந்தை நரக வேதனையில் இருந்து விடுபட்டு சொர்க்கம் சென்றார். இந்த இந்திர ஏகாதசி விரதத்தை மேற்கொண்டால், முன்னோர்களின் ஆசி நமக்குக் கிடைக்கும். மேலும் முன்னோர்களின் ஆன்மா, நரகத்தில் துன்பம் அனுபவித்து வந்தால், அவர்களின் சந்ததியினர் செய்யும் இந்திர ஏகாதசி விரதத்தின் காரணமாக, அந்த துன்பத்தில் இருந்து விடுபடுவார்கள்.

    பாபாங்குசா ஏகாதசி

    ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு, 'பாபாங்குசா ஏகாதசி' என்று பெயர். ஒருவருடைய பாவத்தை அகற்றும் அங்குசம் போன்றது என்பதால், இந்தப் பெயர் வந்தது. இந்த விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு, கங்கை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால், யாகங்கள், உயர்ந்த தான - தர்மங்கள் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ, அந்த பலன்கள் அனைத்தும் கைவரப்பெறும். இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், நரக வேதனையை அனுபவிக்க மாட்டார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன. ஐப்பசி ஏகாதசி நாளில், ஏகாதசி விரதத்தை கடைப்பிடிக்கும் வழிமுறை தெரியாமலோ, அல்லது மற்றவர்கள் வியந்து பார்க்க வேண்டும் என்றோ, எப்படிச் செய்தாலும், இந்த விரதத்திற்கான பலன் கிடைக்கப்பெறும் என்பதே, பாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மேன்மையாகும்.

    • சக்திவாய்ந்த தேவதையாக போற்றப்படுகிறாள் வராஹி தேவி.
    • வராஹியை வழிபடும் பக்தர்களிடம் தோல்வி கூட தோற்றே விடும்.

    வராஹி ஆதி பரமேஸ்வரி அல்லது ஆதி பராசக்தியின் சக்தி ஸ்வரூபம். மகிஷனை அழித்த மகிஷாசுர மர்த்தினியின் குதிரைப் படை தலைவி எனவும் கூட சிலர் இவளைச் சொல்வதுண்டு. கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே அன்னைக்கு நிகரானவள். இவள் லலிதையின் படைத்தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இந்த தெய்வத்திற்குரிய காயத்ரி மந்திரத்தை ஜெபிப்போருக்கு கேட்ட வரங்களை மிக விரைவில் தரக்கூடியவள்.

    சக்திவாய்ந்த தேவதையாக போற்றப்படுகிறாள் வராஹி தேவி. மகா சக்தியாகத் திகழும் பராசக்தி, தன்னில் இருந்து ஒவ்வொரு சக்தியாக வெளிப்படுத்தினாள் என்றும் அவர்களைக் கொண்டு அசுரக் கூட்டங்களையும் தீய சக்திகளையும் அழித்தாள் என்றும் விவரிக்கிறது புராணம்.

    இந்த சக்திகள் ஏழு என்றும் இவர்களை சப்தமார்கள் என்றும் விவரிக்கிறார்கள் ஸாக்த வழிபாடு செய்பவர்கள். சப்த மாதர்களில் அதீத வீரியமும் தீய சக்திகளை அழிப்பதில் வேகமும் துடிப்பும் கொண்டு ஓடோடி வருபவள் வராஹிதேவி.

    வராஹியை முறையே வழிபடும் பக்தர்களிடம் தோல்வி கூட தோற்றே விடும். குறிப்பாக, பஞ்சமி திதி, அமாவாசை திதி மற்றும் சொந்த ஜாதகத்தில் லக்கினத்திற்கு குரு 6 ஆம் இடத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெற்று பிறந்தவர்கள் வராஹியின் காயத்திரி மந்திரத்தை வாழ்நாள் முழுவதும் முறைப்படி ஜபித்து வந்தால் மந்திர சித்துக்கள் கூட வசப்பட இடம் உண்டு.

    சப்த கன்னியர்களில் ஒருவரான வராஹி தேவியை பஞ்சமியில் விரதம் இருந்து வழிபடுவது மிகச் சிறப்பு.

    வராஹியை எப்படி முறைப்படி வழிபடுவது?

    நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வாசனை மலர்கள் சாற்றி வாசனை தூபங்கள் ஏற்றி ஐம்புலன்களும் ஆன்மீகத்தில் ஒடுங்க மேற்கண்ட வராஹி தேவியின் காயத்திரி மந்திரத்தை பஞ்சமி திதி பிரம்ம முகூர்த்தத்தில் ஆரம்பித்து தொடர்ந்து ஜபித்து வர வேண்டும். பசும்பால் அல்லது இனிப்புகளை நிவேதனமாகப் படைக்கலாம். கண்டிப்பாக புளிப்பு இருக்கக்கூடாது. புளிப்பு அந்த அம்பாளுக்கு ஆகாது.

    வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்..

    1. வழக்குகள் சாதகம் ஆகி... எதிரிகளின் பலம் குறைந்து உங்களது பலம் அதிகரிக்கும். உடன், வெற்றி உங்கள் வாகை சூடும்.

    2. கல்வி, தொழில் அல்லது உத்யோகம் மேம்படும்.

    3. கண்திருஷ்டி, செய்வினை கோளாறுகள் அகலும்.

    4. புத்தி நல்ல விதத்தில் வேலை செய்யும். இதனால் ஞானம் சித்திக்கும்.

    5. பயம் தெளிந்து மனதில் துணிச்சல் - தைரியம் - தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

    • சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பதால் நினைத்த காரியம் கைகூடும்.
    • திருமண தடை அகலும், கடன் தொல்லை தீரும்.

    மூல முழு முதற் கடவுளான கணபதியின் 32 முக்கிய வடிவங்களில் சங்கடஹர கணபதியும் ஒருவர் ஆவார். இவர் சங்கடங்களை நீக்குவதால், சங்கடஹர கணபதி என்றழைக்கப்படுகிறார். எளிமையின் வடிவமான விநாயகரை சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்து காலையும், மாலையும் பூஜிக்க நன்மைகள் யாவும் சேரும் என்பது ஐதீகம்.

    வெள்ளிக்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தியை சுக்கிர வார சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். சிவ பெருமானுக்கு உரிய விரதங்களில் பிரதோஷ விரதம் எப்படி உயர்வானதாக கருதப்படுகிறதோ, அதே போல் விநாயகரை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும் விரதத்தில் மிக சிறந்ததும், பழமையானதும் சங்கடஹர சதுர்த்தி விரதம் ஆகும். 'சங்கஷ்டம்" என்றால் கஷ்டங்கள் சேருதல் என்று பொருள். வாழ்வில் சேரும் சகல சங்கடங்களை நீக்க சதுர்த்தி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

    விநாயகரை போலவே விரதங்களில் முதன்மையானதும், எளிமையானதும் சதுர்த்தி விரதம் தான். சதுர்த்தி அன்று காலையில் குளித்துவிட்டு, வீட்டிற்கு அருகிலுள்ள கோவிலுக்கு சென்று, விநாயகரை 11 முறை வலம் வர வேண்டும். அறுகம்புல் கொடுத்து அர்ச்சனை செய்து விநாயகரை வணங்க வேண்டும். பின் வெள்ளெருக்கன் பூவை மாலையாக கோர்க்க வேண்டும். அம்மாலையில் உள்ள பூக்கள் 1008 அல்லது 21 என்ற எண்ணிக்கையில் தான் இருக்க வேண்டும். அவ்வாறு கோர்க்கப்பட்ட மாலையை விநாயகருக்கு அணிவித்து அவரை வணங்க வேண்டும்.

    மேலும் இன்று விநாயகருக்கு நெய்வேத்தியமாக மோதகத்தை படைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பண கஷ்டம், மன கஷ்டம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த பிரச்சனைகள் என அனைத்தும் நீங்கி செல்வ வளம் நிச்சயம் பெருகும். கோயிலுக்கு செல்ல இயலாத நிலையில் வீட்டிலேயே விநாயகருக்கு நெய்வேத்தியம் செய்து வழிபடலாம்.

    சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பதால் நினைத்த காரியம் கைகூடும். வீண் பழி அகலும். பகைவர்களும் நண்பர்களாவார்கள். தீவினை அகலும். மனச்சுமை நீங்கும்.

    • பாவங்களைப் போக்குபவர் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் ஆயிற்றே.
    • வியாழக்கிழமையில் திரளான பக்தர்கள் வந்து குருவை ஆராதித்துச் செல்கிறார்கள்.

    ஆலங்குடியைப்பொறுத்தவரை ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் கருவறை கோஷ்டத்தில் தரிசனம் தரும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியே குரு பகவானாக, நவக்கிரக தோஷத்தை நீக்குபவராக வழிபடப்படுகிறார். வருடத்துக்கு ஒருமுறை நிகழும் குருப்பெயர்ச்சியின் போது இங்கே லட்சார்ச்சனை நடைபெறும்.

    ஆலய பிரகாரத்திலேயே நெய் தீபங்கள் கிடைக்கின்றன. 25 தீபங்கள் வாங்க வேண்டும். அதில், முதல் தீபத்தைக் கலங்காமல் காத்த விநாயகர் சந்நிதியில் ஏற்றி வைத்து வணங்க வேண்டும். ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர், ஸ்ரீஏலவார் குழலம்மை உட்பட அனைத்து தெய்வங்களையும் தரிசித்து விட்டு, மவுனமாக பிரகார வலம் வந்து, கொடிமரம் அருகே விழுந்து வணங்கி விட்டு, குரு பகவானுக்குப் பரிகாரமாக நாம் ஏற்ற வேண்டிய 24 தீபங்களையும் ஏற்றி வைக்க வேண்டும்.

    'மொத்தமாக தீபங்களை ஏற்றக்கூடாது. 24 சுற்றுக்கள் வலம் வர வேண்டும். ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு தீபம் ஏற்ற வேண்டும்' என்ற நடைமுறையும் இங்கே சொல்லப்படுகிறது. தீபங்கள் ஏற்றுவதற்கு முன் ஆலய அர்ச்சகரை ஒரு முறை கலந்தாலோசித்துவிட்டுச் செய்வது உத்தமம்.

    பிரம்மனின் மூல மந்திரம் 24 என்கிற எண்ணிக்கையில் இருப்பதால், இங்கே 24 தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இப்படிச் செய்வதால், குருவினால் ஏற்பட்ட சகல தோஷங்களும் விலகுகின்றன. தீபங்கள் ஏற்றி குரு பகவானின் அருள் பெற்ற பின்னர் திருக்கோயிலை மூன்று முறை வலம் வர வேண்டும். அப்படி ஒவ்வொரு முறை வலம் வரும்போதும் கொடி மரத்தின் கீழே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும் என்கிறது தல புராணம்.

    சுயம்பு லிங்க மூர்த்தியான ஆபத்சகாயேஸ்வரரின் புராணக் கதைகள் இன்னும் முடிவில்லை. இந்த ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் குருவை தரிசிப்பதில் எந்த அளவுக்கு முனைப்பாக இருக்கிறார்களோ, அந்த அளவுக்கு ஈசனான ஆபத்சகாயேஸ்வரரையும் தரிசிக்க வேண்டும். அவர்தம் தேவியான ஏலவார் குழலம்மையையும் வணங்க வேண்டும். எத்தகைய கொடுஞ்செயல்கள் புரிந்தவனும், ஆலங்குடி சேத்திரம் வந்து, 'ஆபத்தில் இருந்து என்னைக் காப்பாற்று இறைவா' என்று வேண்டித் துதித்தால், ஆபத்சகாயேஸ்வரர் மன்னித்து அருள்வதாகத் தல புராணம் சொல்கிறது.

    சுவாசனன் என்பவன் ஓர் அரசன். ஆனால், கொடுங் கோலன். நாட்டு மக்களைத் துன்புறுத்தியே வாழ்ந்தான். அவனது அட்டூழியத்தைத் தாங்க முடியாத பிற மன் னர்கள், அவனைக் கொன்றுவிட்டனர். எம தூதர்கள் வந்து அவனை எமலோகம் இழுத்துச் சென்றனர். அவன் செய்த பாவங்களைப் பட்டியலிட்டு கூறினர் எமதர்மனிடம். 'இத்தகைய கொடுங்கோலனான இவன் பூலோகத்தில் பிசாசாக அலைய வேண்டியது விதி' என்று எமன் சொல்ல, அதன்படி பூலோகத்தில் பிசாசாகத் திரிந்தான். முன் ஜென்மத்தில் செய்த நல்வினைப் பலனால், அகத்திய மாமுனியைச் சந்தித்தான் சுவாசனன். அவரது அறிவுரைப்படி, காசி ஆரண்யம் எனப் படும் ஆலங்குடித் திருத்தலம் வந்து புனித நீராடி, ஸ்ரீஆபத் சகாயேஸ்வரரை தரிசித்தான்.

    பாவங்களைப் போக்குபவர் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் ஆயிற்றே! சுவாசனனது பாவங்கள் அனைத்தையும் விலக்கி, அவன் இழந்த செல்வத்தையும், ராஜ்யத்தையும் திரும்பக் கொடுத்தாராம் இந்த ஈசன்.

    ஆலயத்தினுள் எண்ணற்ற திருமேனிகளின் தரிசனம் காணலாம். கலங்காமல் காத்த விநாயகரை வணங்கி உள்ளே நுழைந்தால் முதல் பிரகாரம். எதிரே தெற்கு நோக்கிய ஏலவார் குழலி அம்மையின் தரிசனம். கொஞ்சம் உள்ளே போய் மேற்கு நோக்கித் திரும்பி இரண்டாவது வாயிலைக் கடந்ததும், உள்ளே சூரிய பகவான், உத்சவர் சுந்தரமூர்த்தி, சோமாஸ்கந்தர் தரிசனம்.

    இதை அடுத்து நால்வர், சூரியேசர், சோமேசர், குரு மோகே சுரர், சோமநாதர், சப்தரிஷி நாதர், விஷ்ணுநாதர், பிரம்மேசர் ஆகிய லிங்கத் திருமேனிகளின் தரிசனத்தோடு காசி விசுவநாதர், விசாலாட்சி மற்றும் அகத்தியரையும் வணங்கிப் பேறு பெறலாம். தொடர்ந்து தரிசனத்தில் நின்ற கணபதி, வள்ளி, தெய் வானை சமேத ஸ்ரீசுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், கல்யாண சாஸ்தா, சப்தமாதா, நவக்கிரகம், ஸ்ரீநடராஜர், பைரவர், சந்திர பகவான் என்று தரிசனம் நீள்கிறது. கோஷ்டத்தில் காட்சி தரும் ஸ்ரீலிங் கோத்பவரும், சுக்கிரவார அம்மன் சந்நிதியும் அவசியம் தரிசிக்க வேண்டியவை.

    ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் திரளான பக்தர்கள் வந்திருந்து குருவை ஆராதித்துச் செல்கிறார்கள். குருப்பெயர்ச்சி காலம் என்றால், கூட்டத்துக்கும் கோலாகலத்துக்கும் கேட்கவே வேண்டாம். ஆலங்குடி திமிலோகப்படும். குருவின் பார்வை என்பது ஒவ்வொரு ஜாதகருக்கும் முக்கியம். குருவின் பார்வை சிறக்காததால்தான், பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் போக நேரிட்டது. வாழ்க்கையில் நிம்மதியைத் தொலைக்கும்படி ஆனது. ஒரு ஜாதகத்தில் சுலபமான இடத்தில் குருவின் பார்வை விழுந்தால்தான், அந்த ஜாதகரின் வாழ்க்கை சிறக்கும். உத்தியோகம், குழந்தைப் பேறு உள்ளிட்ட பல வளங்களையும் வழங்குபவர் குரு பகவான்.

    மூலவர் குரு பகவானுக்கு அபிஷேகம் செய்து வணங்க, ஆலயத்தில் கட்டணம் கட்ட வேண்டும். உத்சவருக்கு அபிஷேகம் என்றால், கட்டணம் கட்ட வேண்டும். அபிஷேகத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு குரு பகவான் உருவம் பதித்த இரண்டு கிராம் வெள்ளி டாலர் பிரசாதமாக வழங்கப்படுகிறது. குரு பகவானின் அனுகிரகம் பெற விரும்புவோர், வியாழக் கிழமைகளில் தங்கள் சக்திக்கு ஏற்றவாறு அபிஷேகம் செய்து, மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, வெண் முல்லைப் பூக்களால் அலங்காரம் செய்து, கொண்டைக் கடலை சுண்டல் நைவேத்தியம் செய்வது நல்லது.

    கொட்டிக் கொடுப்பவர் குரு, குருவை வணங்கினால் கோடி நன்மை என்றெல்லாம் சொல்வர். இத்தகைய சிறப்புகள் பெற்ற ஆலங்குடி குரு பகவானை, குடும்பத்துடன் சென்று வழிபட்டு பயன்பெறலாம்.

    • இன்று முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட உகந்த நாள்.
    • அன்னதானம் செய்தால் புண்ணிய பலன்கள் கிடைக்கும்.

    ஐப்பசி மாத கிருத்திகை விரதம் மேற்கொள்ள இருப்பவர்கள் அதிகாலையில் நீராடி முருகனை வழிபட வேண்டும். பிறகு பகலில் உறங்காமலும், உணவு உண்ணாமலும் முருகனைப் பற்றி சிந்தனை செய்து தீயச்செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.

    மேலும் முருகனின் மந்திரங்கள், கந்த புராணம், திருப்புகழ், கந்தர் கலிவெண்பா போன்றவற்றை படிப்பதும், பாராயணம் செய்வதும் சிறந்தது. விரதம் இருக்க முடியாதவர்கள் பழம் மற்றும் பால் ஆகியவற்றை உண்ணலாம்.

    ஐப்பசி மாத கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும், ஆராதனைகளும் செய்யப்படுகின்றன. ஐப்பசி மாத கிருத்திகை தினத்தில் பகல் மற்றும் இரவு உறங்காமல், முருகனை வழிபாடு செய்து, மறுநாள் காலையில் நீராடி முருகனை வழிபட்ட பின்பு விரதத்தை முடிக்க வேண்டும்.

    இவ்விரத முறையினை தொடர்ந்து பனிரெண்டு ஆண்டுகள் பின்பற்றுபவர்கள் வாழ்க்கையின் பெரும்பேற்றினையும், இறுதியில் முக்தியையும் பெறுவார்கள்.

    பலன்கள்: ஐப்பசி மாதம் கிருத்திகை தினத்தன்று விரதமிருப்பவர்கள் அன்றைய தினத்தில் அன்னதானம் செய்தால் புண்ணிய பலன்கள் கிடைக்கும். மேலும் முருகனின் அருளால் நோய்கள் மற்றும் துஷ்ட சக்திகளின் பாதிப்புகள் நீங்கும். அதுமட்டுமல்லாமல் நன்மக்கட்பேறு, செழிப்பான பொருளாதார நிலை, நீண்ட ஆயுள் ஏற்படும்.

    • கந்த சஷ்டி கவசத்தை படிப்பது நல்லது.
    • முருகப்பெருமானுக்கு ஆறு விளக்குகள் ஏற்றி வழிபடுவது சிறப்பு.

    செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட மிகவும் விசேஷமான நாள். பொருளாதாரத்தில் நாம் முன்னேற்றம் அடைய முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் முறையாக வழிபட்டால் அனைத்து செல்வங்களையும் பெற முடியும்.

    கார்த்திகை, விசாகம் இந்த இரண்டு நட்சத்திரங்களும், செவ்வாய் கிழமையில் சேர்ந்து வந்தால் அது இன்னும் சிறப்பு. ஆடிக் கிருத்திகையில் முருகனை வழிபடுவது இன்னும் விசேஷமானது.

    முருகனை தினசரி நம் வீட்டில் வழிபட வேண்டும் என்றால் அந்த முருகப்பெருமானின் படம் வள்ளி-தெய்வானையுடன் நம் வீட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டும். அந்த சுவாமி படத்திற்கு முன்னால் "ஓம் சரவணபவ" என்ற எழுத்தினை அரிசி மாவால் எழுதி கோலமிட வேண்டும். முருகப்பெருமானுக்கு ஆறு விளக்குகள் ஏற்றி வழிபடுவது சிறப்பு. ஆனால் தினசரி 6 விளக்குகள் ஏற்றுவது சாத்தியம் இல்லை என்பதால், ஒரு விளக்கினை ஏற்றி வைத்து, நைவேத்தியமாக பழங்கள் கற்கண்டு, உலர்திராட்சை இவைகளில் ஏதாவது ஒன்று படைத்து, முருகனை பூக்களால் அலங்கரித்து தீப தூப கற்பூர ஆரத்தியில் முருகனை பூஜை செய்யலாம்.

    முருகப் பெருமானுக்கு உகந்த மலர்களான முல்லை, சாமந்தி, ரோஜா முதலிய பூக்களை சமர்ப்பிப்பது இன்னும் சிறப்பு. சரவணபவ என்ற ஆறு எழுத்துக்களை உடையவன் முருகன். சரவணபவ என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் என்று பொருள்படும். ச என்றால் மங்களம், ர என்றால் ஒளி கொடை, வ என்றால் சாத்வீகம், ந என்றால் போர், பவன் என்றால் உதித்தவன் என்ற பொருளில், மங்களம், ஒலி கொடை, சாத்வீகம், வீரம் போன்ற சிறப்பியல்புகளுடன் தோன்றியவன் என்றும் கூறுவர்.

    இந்த பூஜையில் "ஓம் சரவணபவ" என்ற மந்திரத்தை மூன்று முறை முதலில் உச்சரிக்க வேண்டும். அதன்பின்பு, அருவமும் உருவமாகி, அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய், பிரமமாய் நின்றசோதிப் பிழம்பதோர் மேனியாகி, கருணை கூர் முகங்களாறும், கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே, ஒருதிரு முருகன் வந்து, ஆங்கு, உதித்தனன் உலகமுய்ய. ஏறுமயில் லேறி விளையாடுமுக மொன்றே ஈசனுடன் ஞானமொழி பேசும்முக மொன்றே கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே ஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும் ஆதியருணாசல மமர்ந்த பெருமாளே.

    இந்த இரண்டு முருகப்பெருமானின் பாடல்களையும் பாட வேண்டும். உங்களால் முடிந்தால் கந்த சஷ்டி கவசத்தை வாரம் ஒருமுறை செவ்வாய்க்கிழமையில் படிப்பது நல்லது. படிக்க முடியாத பட்சத்தில் உங்கள் வீட்டில் ஒலிக்கச் செய்து காதால் கேட்பதும் மூலமும் நல்ல பலன் கிடைக்கும். செவ்வாய் தோஷம் உள்ளவர்களும் திருமணம் தடை உள்ளவர்களும் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளிலும், மாதம் தோறும் வரும் சஷ்டியிலும் முருகனை நினைத்து விரதம் இருந்தால் இந்த தோஷங்களில் இருந்து விடுபடலாம். அழகன் முருகனை நினைத்து நாம் மனதார வழிபடும் ஒவ்வொரு வழிபாடும் நமக்கு பலனை அள்ளி தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    • சூரிய பகவானின் காயத்ரி மந்திரத்தை துதிக்க வேண்டும்.
    • சமூகத்தில் பிறர் மதிக்கின்ற சூழ்நிலை ஏற்படும்.

    ஞாயிறு விரதம்" அல்லது "சூரிய விரதம்" இருக்க விரும்புவர்கள் எல்லா காலங்களிலும் இவ்விரதத்தை மேற்கொள்ளலாம் என்றாலும் "ஐப்பசி" மாத வளர்பிறை ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விரதத்தை அனுஷ்டிப்பது மிகவும் சிறப்பானதாகும். இந்த ஞாயிறு விரதத்தை எந்த ஒரு மாதத்திலும் வளர்பிறை ஞாயிற்றுக்கிழமையில் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு, சூரியன் உதிக்கின்ற காலை வேளையில் சூரியனை தரிசித்தவாறே, அவருக்குரிய மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும்.

    பின்பு நவகிரக சந்நிதிக்கு சென்று சூரிய பகவானுக்கு செந்தாமரை பூவை சமர்ப்பித்து, கோதுமை தானியங்கள் சிறிதளவு வைத்து, நெய் தீபங்கள் ஏற்றி, வாசனை மிக்க தூபங்கள் கொளுத்தி, கோதுமை கொண்டு செய்யப்பட்ட இனிப்பு உணவுகளை நைவேத்தியமாக வைத்து சூரிய பகவானின் காயத்ரி மந்திரங்கள், பீஜ மந்திரங்கள் போன்றவற்றை 108 எண்ணிக்கை அல்லது 1008 எண்ணிக்கையில் துதித்து வழிபட வேண்டும்.

    இந்த விரதம் இருப்பவர்கள் அந்த ஞாயிற்றுக்கிழமை முழுவதும் திடஉணவு சாப்பிடாமல் நோன்பிருந்து மறுநாள் காலையில் சூரிய தரிசனம் செய்த பின்பு, சூரிய பகவானுக்கு வீட்டிலேயே ஒரு செம்பு பாத்திரத்தில் சிறிது நீர் நிவேதனமாக அளித்த பின்பே விரதத்தை முடிக்க வேண்டும். உணவு சாப்பிட வேண்டிய நிலையிலிருப்பவர்கள் நீராகாரம், பழச்சாறுகள் போன்றவற்றை அருந்தி விரதமிருக்கலாம்.

    சூரிய விரதம் மேற்கொள்ளும் நபர்களுக்கு உடலாரோக்கியம் மேம்படும். கொடிய நோய்கள் ஏதும் அண்டாது. முகத்தில் ஒரு வசீகரம் உண்டாகும். சமூகத்தில் பிறர் மதிக்கின்ற சூழ்நிலை ஏற்படும். தந்தையின் உடல்நலம் மேம்பட்டு அவரின் ஆயுள் நீடிக்கும். பொருளாதார வளர்ச்சி உண்டாகும். துஷ்ட சக்திகள், செய்வினை மாந்திரிகம் போன்றவை சூரிய விரதம் இருப்பவர்களை அண்டாது.

    • சனிப்பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    • பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு முதல் வழிபாடு செய்யப்படுகிறது.

    சிவனுக்குரிய வழிபாடுகளில் சிவராத்திரியும் பிரதோஷமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. பிரதோஷம் நித்ய பிரதோஷம், மாதப் பிரதோஷம், மஹா பிரதோஷம் என்று மூன்று வகைப்படும்.

    தினம் தோறும் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான காலம் நித்ய பிரதோஷ காலம் எனப்படும். மாதம் தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான காலம் மாதப் பிரதோஷம் எனப்படும்.

    மஹா பிரதோஷம் : மாதங்களில் தேய்பிறை அல்லது வளர்பிறை திரயோதசியுடன் சனிக்கிழமை கலந்து வந்தால் அது மஹா பிரதோஷம் என்று வழங்கப்படுகிறது. இவை சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வந்தால் மிகவும் உத்தமம் என்று புராணங்களும் கூறுகின்றன.

    பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு முதல் வழிபாடு செய்யப்படுகிறது. பிரதோஷ தரிசனத்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும்.

    மற்ற பிரதோஷம் வழிபட சனிப்பிரதோஷ முக்கியத்துவம் பெறுவதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், சிவ ஆலயத்தில் இந்த வழிபாட்டின் மூலம் கிடைக்கும் நன்மைகள் தான் காரணம். ஒருவர் பிற நாட்களில் கோயிலுக்கு செல்வதை விட இந்த சனிப் பிரதோஷ நாட்களில் அவர்கள் மனதில் நினைத்த விஷயங்களை எண்ணி வழிபாடு செய்வதன் மூலமாக எண்ணிய காரியங்களில் எண்ணியவாறு அவர்கள் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். முக்கியமாக சிவாலயங்களுக்கு நீங்கள் சென்று வழிபடுவது ஐந்து வருட வழிபாட்டிற்கு சமமாக இந்த ஒரு நாள் வழிபாடும் கருதப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    என்ன வகைப்பட்ட தோஷங்கள் ஒருவரை ஆட்டிப் படைத்தாலும், அவர்கள் இந்த நாளில் சிவனை வழிபடுவதன் மூலமாக அந்தப் ஒரு தோஷங்களில் இருந்து விலகுவதாக ஐதீகம் உள்ளது. சாதாரண தினங்களில் ஏற்படும் வழிபாடுகளை விட சனிக்கிழமை பிரதோஷம் செய்யும் வழிபாடு ஆயிரம் மடங்கு நன்மைகளை வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த நாள் முழுவதும் விரதம் இருந்து, பால் ஆகாரம் மற்றும் எடுத்துக் கொண்டு, மாலையில் சிவன் கோவில் சென்று வழிபடுவது மிகவும் நன்மை பயக்கும்.

    • ஸ்ரீமகாவிஷ்ணு இன்று (வெள்ளிக்கிழமை) துயில் எழுகிறார்.
    • ஸ்ரீவிஷ்ணு துயில் எழுப்பும் பாட்டுகளைப்பாடி ஸ்ரீமகாவிஷ்ணுவை எழுப்ப வேண்டும்.

    ஐப்பசி மாதத்தில் வருகிற வளர்பிறை ஏகாதசிக்கு உத்தான ஏகாதசி, பிரபோத ஏகாதசி, பாசாங்குச ஏகாதசி என்று பல பெயர்கள் உண்டு. ஸ்ரீமகாவிஷ்ணு இன்று (வெள்ளிக்கிழமை) துயில் எழுகிறார். ஆகவே இன்றைய ஏகாதசிக்கு பிரபோத ஏகாதசி, உத்தான ஏகாதசி எனப் பெயர்.

    இன்று அதிகாலை ஸ்ரீமகாவிஷ்ணு சன்னதியில் தீபம் ஏற்றி வைத்து பழம், பூக்கள், மஞ்சள், குங்குமம், பசுமாடு, கறிகாய்கள், தங்கம், ரத்னங்கள் போன்ற மங்கள திரவியங்களை வைத்து, சாத்திய கதவின் முன்பாக பக்தியுடன் ஸ்ரீவிஷ்ணு ஸ்தோத்ரம் - சுப்ரபாதம் சொல்லி அல்லது ஸ்ரீவிஷ்ணு துயில் எழுப்பும் பாட்டுகளைப்பாடி ஸ்ரீமகாவிஷ்ணுவை எழுப்ப வேண்டும்.

    அதன்பிறகே பூஜை அறையின் கதவைத் திறக்க வேண்டும். பிறகு விஷ்ணுவிற்கு நிவேதனம் செய்து கற்பூரம் காட்டி வணங்க வேண்டும். இதனால் சகல செல்வங்களையும் தரும் ஸ்ரீவிஷ்ணுவின் அருள் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.

    இன்றைய ஏகாதசிக்கு பாசாங்கு ஏகாதசி என்றும் பெயர் உண்டு.

    இந்த ஏகாதசிக்கு அனைத்துப் பாவங்களையும் போக்கும் சக்தி உண்டு. எனவே இந்த ஏகாதசியில், பத்மநாப மூர்த்தியை பூஜிக்க வேண்டும். இந்த ஏகாதசி விரதம் உலகத்தில் உள்ள எல்லா புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய பலன் தரும். ஏகாதசி அன்று இரவு, ஹரிநாம சங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.

    இந்த ஏகாதசி விரதம் இருப்பவர்கள் எமலோகத்தை மிதிக்க மாட்டார்கள். விரதம் இருந்து அன்னம், நீர், குடை, பாதரட்சை ஆகியவற்றை தானம் செய்வது சிறந்த பலனை அளிக்கும். ஏகாதசி முடிந்து நாளை மறுநாள் துவாதசி பாரணை செய்ய வேண்டும். இந்த துவாதசிக்கு பிருந்தாவன துவாதசி என்று பெயர். நாளைய மறுநாள் துளசி பூஜை செய்வது மிகச் சிறப்பு.

    • இந்த விரதம் இருந்து ஆத்ம சாதனையில் முன்னேறினார் என்று சொல்லப்படுகிறது.
    • பஞ்சகம் என்றால் ஐந்து.

    இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பவுர்ணமி தினம் வரை 5 நாட்கள் இருக்க வேண்டிய விரதம் பீஷ்ம பஞ்சக விரதம். பஞ்சகம் என்றால் ஐந்து. பீஷ்மர் 5 நாட்கள் இந்த விரதத்தில் இருந்தார் என்பதால் பீஷ்ம பஞ்சக விரதம் என்று அழைக்கப்படுகிறது. பீஷ்மர் இந்த விரதம் இருந்து ஆத்ம சாதனையில் முன்னேறினார் என்று சொல்லப்படுகிறது. இந்த விரதத்தை கடைபிடிப்பதன் மூலமாக, மனஉறுதியும் தெளிவும் ஆன்மீக முன்னேற்றமும் பெறலாம்.

    பிஷ்ம பஞ்சங்க நாட்களில் பல பக்தர்கள் முழுமையான விரதம் இருப்பார்கள். அதாவது நிர்ஜலம் நீர் கூட அருந்தால் விரதம் இருப்பவர்கள் (இது ஒருவருடைய உடல்நிலை பொருத்து கடைபிடிக்க வேண்டும்) அல்லது இந்த ஐந்து நாட்களில் ஒவ்வொரு நாள் ஒருமுறை ஒரு சிறிய தேக்கரண்டி அளவிற்கு பஞ்ச காவ்யத்தில் ஏதாவது ஒன்றை குடிக்கலாம் வேறு எதையும் உண்ணக்கூடாது.

    முதல் நிலை விரதம் அனுஷ்டிக்க முடியாதவர்கள் இந்த 5 நாட்களில் பழங்களும்(கொய்யா பழம், மாதுளம் பழம் போன்ற நிறைய உள்ள பழங்களை தவிர்த்தல் நல்லது) பேரிச்சம் பழம், உலர்ந்த திராட்சை போன்றவை எடுத்து கொள்ளலாம். வாழைக்காய், கிழங்கு வகைகளும் வேகவைத்து பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்து பின் அந்த மகாபிரசாதத்தை உண்டு விரதத்தை கடைபிடிக்கலாம்.

    • குருவின் அம்சமாகத் திகழும் அற்புதத் தெய்வம் ஸ்ரீதட்சிணாமூர்த்தி.
    • வியாழன் என்பவரே குரு பகவானைக் குறிக்கும்.

    தேவர்களுக்கெல்லாம் அதிபதியாக விளங்கக்கூடிய குரு பகவானை வணங்க கூடிய கிழமை வியாழக்கிழமை. வியாழன் என்பவரே குரு பகவானைக் குறிக்கும். குரு பிரகஸ்பதிதான், நவக்கிரகங்களில் குரு பகவானாகத் திகழ்கிறார். அதேபோல், குரு ஸ்தானத்தில் குரு தட்சிணாமூர்த்தியே காட்சி தருவதால், சிவ சொரூபமாகத் திகழும் தென்முகக் கடவுளாம் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வணங்கினால், புத்தியில் தெளிவும் செயலில் திண்மையும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

    வியாழக்கிழமையின் பிரகஸ்பதி என்று கூறப்படும் குரு பகவானை எவ்வாறு விரதமிருந்து வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

    * அதாவது அமாவாசை முடிந்து வளர்பிறையில் வரக்கூடிய வியாழக்கிழமையில் தொடங்கி தொடர்ந்து 16 வியாழக்கிழமை விரதம் இருந்து பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றி குருபகவானின் காயத்ரி மந்திரங்கள் சொல்லி இனிப்பு பதார்த்தங்களை வைத்து விரதங்களை கடைப்பிடிக்க வேண்டும். பின்பு சிவன் கோவிலுக்குச் சென்று நவகிரகதோடு இருக்கும் குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை சாத்தி வழிபாடு செய்வது நன்மையை பயக்கும்.

    * ஏதோ ஒரு காரணத்தால் நமக்கு அவப்பெயரை ஏற்படுதல், ஆன்மிகத்தில் நாட்டமின்மை, ஆரோக்கியத்தின் குறைபாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியின்மை போன்ற குறைபாடு உள்ளவர்கள் 16 வியாழக்கிழமை விரதமிருந்து குரு பகவானை வழிபட்டு வந்தால் குறைபாடுகள் கலைந்து நல்லதொரு முன்னேற்றப் பாதையை அடையலாம்.

    * வியாழன் தோறும் மாலை வேளையில் நம் வீட்டிலேயே லட்சுமி குபேர பூஜை செய்து வந்தால் செல்வம் கொழிக்கும்.

    * அதேபோன்று ஞானத்தை போதிக்கும் மகான்களை (ஸ்ரீ சாய் பாபா, ஸ்ரீ ராகவேந்திரா) வணங்குவதற்கு ஏற்ற நாளாக வியாழக்கிழமை உள்ளது.

    • விரதத்தில் பல விதிகள் உள்ளன.
    • விரதம் இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.

    ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் சடங்குகளின்படி விரதம் மேற்கொள்கின்றனர். நாட்கள், சிறப்பு நாள் விருந்துகள் உட்பட மற்ற நேரங்களில் விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த விரதத்தில் பல விதிகள் உள்ளன. விரதம் இருப்பது அறிவியல் மற்றும் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பார்க்கப்படுகிறது. உண்ணாவிரதத்தின் போது இந்த விஷயங்களை நினைவில் கொள்ளாவிட்டால், விரதம் தோல்வியடையும். எனவே நோன்பு நோற்கும்போது மனதில் கொள்ள வேண்டியவை என்னென்ன என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம் வாங்க...

    விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும் அத்துடன் கோவில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று.

    ஒவ்வொரு விரதத்திற்கும் வித்தியாசமான உணவு முறைக் கட்டுப்பாடுகள் உண்டு. அதற்கு ஏற்றபடி உணவினை உட்கொள்ளுதல் நன்று. உரிய நேரத்தில் சமைத்து சாப்பிடுதல் வேண்டும்.

    குழந்தை பிறந்து நாற்பத்து எட்டு தினங்களுக்குப் பிறகே குழந்தை பெற்ற பெண்கள் விரதம் கடைப்பிடிக்கலாம். குடும்ப உறுப்பினர் எவரேனும் இறந்தால், அவர்கள் இறந்து மூன்று மாதங்களுக்குப் பிறகே குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்கள் விரதங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

    நோயாளிகள், பாலகர்களும், மாதவிலக்கான பெண்களும் விரதம் அனுஷ்டிக்கக்கூடாது. பெண்கள் மாத விலக்காகி ஏழு தினங்கள் ஆன பின்பே விரதம் மேற்கொள்ளலாம்.

    விரதம் இருப்பவர்கள் பிறர் மீது கோபப்படுதல், பிறரைப் பற்றி தவறாகப் பேசுதல், பிறர் மனம் புண்படும்படி கேலி செய்தல், பிறரிடம் பேசாதிருத்தல், அதிகமாகப் பேசுதல் ஆகிய எதுவுமே செய்யக் கூடாது.

    விரதத்தின் போது அசைவ உணவுகளை சாப்பிடுதல், பிறருக்கு சமைத்துக் கொடுப்பது கூட தவறாகும். வெற்றிலை பாக்கு போடுதல், புகைப்பிடித்தல், மது அருந்துதல், சூதாடுதல் ஆகியவையும் கூடாது.மேலும் விரதத்தை கொண்டாடும் போது முன்னோர்களை கடவுளுடன் நினைவு கூற வேண்டும்.

    விரதம் அனுஷ்டிக்கும் போது மௌன விரதம் இருப்பது மிகவும் நல்லது. விரதம் இருக்கும் போது கடவுளின் பெயரையோ, ஸ்லோகங்களை உச்சரித்துக் கொண்டே இருப்பது மிகவும் நல்லது.

    ×