search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97622"

    • விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும்.
    • பூஜையில் கலசம் வைத்தும் கலைவாணியை வணங்கலாம்.

    சரஸ்வதி பூஜை அன்று வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். அவ்வாறு வழிபாடு செய்வதற்கு முன்பு, வழிபாடு செய்ய இருக்கும் இடத்தை தூய்மைப்படுத்த வேண்டும். சந்தனம், தெளித்து குங்குமம் இட வேண்டும்.

    சரஸ்வதியின் படத்திற்கும், படைக்கப்பட வேண்டிய பொருட்களுக்கும் சந்தனம் தெளித்து குங்குமம் இடவும், படத்திற்கு பூக்கள் வைத்து அலங்கரிக்க வேண்டும். அன்னையின் திருவுருவின் பார்வையில் புத்தகங்களை வைத்து அதன் முன்பாக வாழை இலை விரித்து அதில் படையலுக்காக சமைக்கப்பட்டவைகளை வைக்க வேண்டும்.

    சுண்டல், சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவற்றை கலைவாணிக்கு நைவேத்தியங்களாக படைக்கலாம். வாழை இலையை வைத்து அதில் பொறி, கடலை, அவல், நாட்டு சர்க்கரை, பழங்களை வைக்க வேண்டும். செம்பருத்தி, ரோஜா, வெண்தாமரை மலர்கள் அன்னைக்கு உகந்த மலர்களாகும். இவற்றால் மாலைகள் தொடுத்து அன்னைக்கும், அவள் உறைந்திருக்கும் புத்தகங்களுக்கும் அணிவித்தல் வேண்டும்.

    எதற்கும் விநாயகரே முழு முதலானவர், எனவே மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பூஜையில் வைத்து

    சுக்லாம் பரதரம் விஷ்ணும்

    சச்இவர்ணம் சதுர்புஜம்!

    பிரசந்த் வதனம் தீயாயேத்

    சர்வ விக்நோப சாந்தயே'

    என்று கூறி விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும்.

    சரஸ்வதி பூஜையின் போது `துர்க்கா லட்சுமி சரஸ்வதீப்யோ நம' என்று கூறி பூஜையை ஆரம்பிப்பது நன்று. பூஜையில் கலசம் வைத்தும் கலைவாணியை வணங்கலாம். கலசம் வைத்து அம்பிகையை முறைப்படி எழுந்தருளச் செய்து பூஜிப்பதால் கூடுதல் நலன் கிடைக்கும்.

    பூஜையின் போது வீட்டில் உள்ள குழந்தைகள், பெண்கள் உள்பட அனைவரும் கலைவாணிக்குரிய பாடல்களைப் பாடி வணங்கலாம். சகலகலாவல்லி மாலை பாடல்களை பாராயணம் செய்யலாம். நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க இயலாதவர்கள் சரஸ்வதி பூஜை அன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினால் போதும். அம்பிகையின் அருள் பூரணமாய் கிடைக்கும்.

    • லட்சுமியை தியானித்து பூஜை செய்ய வேண்டும்.
    • சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

    நவராத்திரியில் வரும் ஜேஷ்டா நட்சத்திர லட்சுமி பூஜை மிகவும் விசேஷமான பூஜையாகும். மூல நட்சத்திரத்திற்கு முதல் நாள் வரும். தமிழில் கேட்டை நட்சத்திரம் என்று சொல்வார்கள்.

    சாதாரணமாக இந்த லட்சுமி பூஜை படம், படி அரிசி, குத்து விளக்கு, இதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் லட்சுமியை தியானித்து பூஜை செய்ய வேண்டும். இதனால் வறுமை அகலும் என்பது ஐதீகம். அன்று சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும். மகாலட்சுமியை குறித்து சொல்லும் சுலோகங்கள், அஷ்டோத்திரம், சகஸ்ர நாமம் சொல்லி குங்குமம், புஷ்பம், அட்சதைகளினால் அர்ச்சிக்கலாம்.

    மூலநட்சத்திர தீபம்: மூல நட்சத்திர தீபம் என்பது நவராத்திரி பூஜை சமயத்தில் சரஸ்வதி ஆவாகனம் செய்யும் மூலநட்சத்திரத்தன்று ஏற்றும் ஒரு அகண்ட தீபம் ஆகும். இந்த தீபமானது சரஸ்வதி பூஜை வரையிலும் அகண்டமாக அணையாமல் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.

    இதை ஏற்றுவதற்கு நந்தாதீபம் போன்ற நாக்கு வைத்த விளக்கு அல்லது காமாட்சி விளக்கு உசிதமானது. மூலம் நட்சத்திரத்தன்று காலையில் குளித்து புதிய ஆடை அணிந்து கொண்டு சுவாமியின் முன் ஒரு இடத்தைசுத்தம் செய்து செம்மண் கோலம் போட்டு அலங்கரித்து அதன் மேல் ஒரு சிறிய மர பலகை அல்லது தட்டு வைத்து சிறிய அரிசியை பரப்பி அதன் மேல் விளக்கு வைத்து ஏற்றி பூக்களைப்போட்டு நமஸ்கரிக்க வேண்டும். பசு நெய் ஸ்ரேஷ்டம் ஆனால் மூன்று நாட்களும் எரிந்து கொண்டிருக்க வேண்டியதினால் அந்த அளவு நெய் கிடைப்பது கஷ்டம். ஆகையால் நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றலாம்.

    விளக்கு மலையேறாமல் அடிக்கடி எண்ணெய் ஊற்றி திரியை தூண்டிவிட வேண்டும். இரவில் படுப்பதற்கு முன்பு நிதானமாக திரியின் மேல் பாகத்தை சுத்தம் செய்து எண்ணெய் ஊற்ற வேண்டும். திரியைசுத்தம் செய்யும் பொழுது அணையாமல் இருக்க வேறு திரியை ஏற்றி விட்டு சுத்தம் செய்து பிறகு ஏற்ற வேண்டும்.

    • விரதங்கள் இருப்பது அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
    • எந்த விரதத்தை கடைப்பிடித்தால், எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.

    பொதுவாக நம்மில் பலரும் விரதங்கள் இருப்பது அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். எந்த விரதத்தை கடைப்பிடித்தால், எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பதை இங்கே பார்ப்போம்.

    சங்கடஹர சதுர்த்தி:- தேவையற்று ஏற்படும் சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து மனதில் அமைதி நிலவும்.

    விநாயக சதுர்த்தி:- வாழ்வின் விக்னங்கள் அனைத்தும் தீர்ந்து விநாயகரின் பூரணமான அருள் கிட்டும்.

    சரவண விரதம்:- குடும்பத்தில் அனைவரிடமும் ஒற்றுமை பெருகி, ஆனந்தமும், சந்தோஷமும் கிட்டும்.

    சஷ்டி விரதம்:- மனதில் எண்ணிய காரியங்கள் அனைத்தும் இனிதே நிறைவேறும். புண்ணியம் தரும்.

    வைகுண்ட ஏகாதசி:- குடும்பத்தில் நிலவி வந்த வறுமைகள் அனைத்தும் நீங்கி, செல்வ வளம் கொழித்திடும்.

    கோகுலாஷ்டமி விரதம்:- மனநலம், நீண்ட ஆயுள், குறையாத செல்வம் அனைத்தும் கிடைக்கப் பெறுவர்.

    கவுரி விரதம்:- குறையாத செல்வமும், நீண்ட ஆயுளும், நல் மனைவியும், குழந்தைகளும் கிடைக்கும்.

    வரலட்சுமி விரதம்:- மாங்கல்ய பாக்கியம் கிடைத்திடும். திருமணமான தம்பதியரிடையே ஒற்றுமை நிலவும்.

    பிரதோஷ விரதம்:- மன அமைதி கிடைத்திடும், நீண்ட ஆயுள் அமைந்திடும். செல்வ வளம் பெருகிடும்.

    மகா சிவராத்திரி:- சிவபெருமானின் அருள் கிடைக்கும், வாழ்வில் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

    வைகாசி விசாகம்:- நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்கள் குழந்தைச் செல்வம் கிடைக்கப் பெறுவர்.

    நவராத்திரி விரதம்:- மனநலம், நீண்ட ஆயுள், குறையாத செல்வம் அனைத்தும் கிடைக்கப் பெறுவர்.

    அமாவாசை விரதம்:- பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணத்தால், அவர்களது ஆசிகள் அனைத்தும் கிடைக்கும்.

    பவுர்ணமி விரதம்:- வாழ்வில் ஏற்பட்ட அனைத்து கஷ்டங்களும் விலகி, சுகமான வாழ்வு அமையும்.

    கார்த்திகை விரதம்:- எல்லாவிதமான நன்மைகளும் வந்தடையும். முருகனின் பரிபூரண ஆசி கிடைக்கும்.

    • தேவியின் அருள் கிடைக்க, தேவர்கள் கடும் தவம் செய்தனர்.
    • கொலுப்படிகளை ஒற்றைப்படையில் அமைக்க வேண்டும்.

    'நவம்' என்பதற்கு 'ஒன்பது' என்றும், 'ராத்திரி' என்பதற்கு 'இரவு' என்றும் பொருள். ஒன்பது இரவுகளில் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டுவந்தால் பொன், பொருள் குவியும் என்று சாஸ்திரம் சொல்கிறது. இந்த அற்புதமான நவராத்திரி திருநாள், புரட்டாசி 9-ம் நாள் (26.9.2022) திங்கட்கிழமை தொடங்குகிறது.

    ஒருவர் வாழ்க்கையில் கல்வி, செல்வம், வீரம் மூன்றும் இருந்தால்தான், கல்வியால் செல்வம் ஈட்டி, ஈட்டிய செல்வத்தை வீரத்தால் காப்பாற்றி வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்த இயலும். எனவே தான் 'வீரம்' தரும் துர்க்கா தேவியை முதல் மூன்றும் நாட்களும், செல்வம் தரும் லட்சுமியை அடுத்த மூன்று தினங்களும், கல்விச் செல்வம் தரும் சரஸ்வதியை அடுத்த மூன்று தினங்களும் பூஜைசெய்து வழிபட வேண்டும். அங்ஙனம் வழிபட்டால் இல்லத்தில் நல்ல சம்பவங்கள் ஏராளமாக நடைபெறத் தொடங்கும்.

    தேவியின் அருள் கிடைக்க, தேவர்கள் கடும் தவம் செய்தனர். இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகிய மூன்று சக்திகளின் பேரருளையும் பெற முயற்சி எடுத்தனர். தேவர்கள் உடலை அசைக்காமல் தவம் செய்த நாட்களில், எல்லா பொருட்களும், உயிர்களும் அசையாமல் இருந்தன. அதன் நினைவாக நாம் கொலு வைத்துக் கொண்டாடுகிறோம். கொலுப்படிகளை ஐந்து, ஏழு, ஒன்பது என்று ஒற்றைப்படையில் அமைக்க வேண்டும். படிக்கட்டுகளில் வெள்ளை அல்லது மஞ்சள் துணிகளை விரிக்க வேண்டும். முதல் படிக்கட்டில் கலசத்தை வைக்க வேண்டும். உயரமான பீடத்தில் பராசக்தியை வைத்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அலங்கரித்துக் கொண்டாட வேண்டும்.

    கொலு வைக்கும் பொழுது முதல் படியில் ஓரறிவு கொண்ட உயிரினங்களான புல், பூண்டு, செடி, கொடி தாவர வகைகளை வைக்க வேண்டும். இரண்டாவது படியில் இரண்டு அறிவு கொண்ட ஜீவ ராசிகளான நத்தை, சிப்பி, சங்கு போன்றவற்றை இடம்பெறச் செய்ய வேண்டும். மூன்றாவது படியில் மூன்றறிவு கொண்ட எறும்பு, கரையான், நான்காவது படியில் நான்கறிவு கொண்ட உயிரினங்களான நண்டு, வண்டு போன்ற ஜீவ ராசிகளின் பொம்மைகளையும், ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட விலங்குகள், பறவைகளின் பொம்மைகளையும், ஆறாவது படியில் ஆறறிவு கொண்ட மனித பொம்மைகள், நாட்டிற்காக உழைத்த தலைவர்களின் பொம்மைகளையும் வைக்க வேண்டும். ஏழாவது படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மைகளை இடம்பெறச் செய்ய வேண்டும். எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள், தெய்வங்கள், நவக்கிரகங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும், அவர்களின் துணைவியர்களான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகிய மூவரையும் வைக்க வேண்டும். இதற்கெல்லாம் நடுநாயகமாக கொலுபீடத்தில் விநாயகப் பெருமானையும், ஆதிபராசக்தியையும் வைத்து வழிபட வேண்டும்.

    சரஸ்வதி பூஜை அன்று பூஜையறையில் புத்தகங்கள், எழுதுகோல், கல்வி சம்பந்தப்பட்ட பொருட்கள், தொழிற்கருவிகள் போன்றவற்றை வைத்து வழிபட வேண்டும். மறுநாள் தேவி வெற்றி பெற்ற திருநாளான விஜயதசமியிலும் வழிபாடுகள் செய்தால் வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.

    'ஜோதிடக்கலைமணி' சிவல்புரி சிங்காரம்

    • அம்பிகையை வழிபடுவதற்கான ஒன்பது ராத்திரிகள் ‘நவராத்திரி’.
    • நவராத்திரி விரத வழிபாட்டின் மூலமாக கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.

    26-9-2022 முதல் நவராத்திரி ஆரம்பம்

    சிவனை வழிபட ஒரு ராத்திரி, 'சிவராத்திரி'. அம்பிகையை வழிபடுவதற்கான ஒன்பது ராத்திரிகள் 'நவராத்திரி'. ஆண்டு முழுவதும் அம்பாளை வழிபடுவதை விட, இந்த ஒன்பது தினங்களில் வழிபாடு செய்தாலே சகல சவுபாக்கியங்களையும் பெற்றுவிட முடியும். நவராத்திரி விரத வழிபாட்டின் மூலமாக கிடைக்கும் சில பலன்களை இங்கே சிறிய தொகுப்பாக பார்க்கலாம்.

    * நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை, தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும். நவராத்திரி நாட்களில் பெண்கள் அனைவரும், விரதம் இருந்து கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.

    * நவராத்திரி பூஜையின் ஒன்பது நாட்களும், ஈசனும் அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை காண்பவர்களுக்கு, நவராத்திரி பூஜை செய்ததற்கான பலன் முழுமையாக கிடைக்கும்.

    * அம்பாள் ஒரு சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரியின் அனைத்து நாட்களிலும், அம்பாளை சிறப்பிக்கும் வகையிலான பாடல்களில் ஒன்றையாவது பாட வேண்டும்.

    * நவராத்திரி நாட்களில் பகல் வேளையில் சிவபெருமானையும், இரவு நேரத்தில் அம்பிகையையும் பூஜை செய்வதே சரியான வழிபாடாகும். நவராத்திரி ஒன்பது நாட்களும் தினமும் பகலில் ஆயிரெத்தெட்டு சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபட்டால், அளவில்லாத பலன்களைப் பெறலாம்.

    * இன்றைய காலகட்டத்தில் வீட்டில் கோலமிடும் பலரும், சுண்ணாம்பு மாவைதான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் நவராத்திரியின் ஒன்பது தினங்களில் மட்டுமாவது அரிசி மாவை பயன்படுத்தி கோலமிட வேண்டும். இதனால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து அருள்வாள். வீட்டில் கொலு வைத்திருப்பவர்கள், அதன் முன் நவக்கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.

    * நவராத்திரி ஒன்பது நாள் பூஜையையும் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள். சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை சுண்டல் நைவேத்தியம் படைப்பது அவசியம். நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும். நவராத்திரி ஒன்பது நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.

    * நவராத்திரி காலத்தில் முடிந்தவரை தேவியின் நாமத்தை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும். 'ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நமஹ' என்று நூற்றியெட்டு முறை சொன்னாலே போதும். சிறப்பான பலன் கிடைக்கும்.

    * நவராத்திரியில் வரும் வெள்ளிக்கிழமை அன்று ஐந்து சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து, புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் திருமணம் ஆகாதவர்களுக்கு உடனடியாக திருமணம் கைகூடும்.

    * நவராத்திரியில் வரும் திங்கட்கிழமை, லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று ஒன்பது சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும். நவராத்திரி ஒன்பது நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

    * தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல், ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும். தனித்து தானம் செய்வதை விட, பலர் கூட்டாக சேர்ந்து மங்கலப் பொருட்களை மிகப் பெரிய அளவில் ஏராளமான பேர்களுக்கு தானமாக அளிப்பது நன்மைகளை வழங்கும்.

    * நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதிஅன்று ஹயக்கிரீவரை வழிபட்டால் ஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதாசகஸ்ர நாமத்தையும் ஓதுவது சிறப்பான பலன்களைத் தரும்.

    * விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.

    • ஏழைகளுக்கு அன்னம் இடலாம்.
    • எள் மற்றும் காசு வைத்து தானம் கொடுக்கலாம்.

    மறைந்த அப்பா, அம்மா படத்தை எடுத்து சுத்தம் செய்து உரிய திதி நாளில் துளசி, மலர்மாலை சாற்றி பொட்டு வைத்து அதற்கு முன்பாக ஒரு தாம்பளத்தை வைத்து தர்ப்பை சட்டம் போட வேண்டும். அதன்மேல் முன்னோர் பெயரைச் சொல்லி அதில் எழுந்தருள்க என்று சொல்ல வேண்டும். அதாவது, எனது தாயே எழுந்தருள்க!

    தந்தையே எழுந்தருள்க! என்று எள்ளும் தண்ணீரும் விட வேண்டும். பிறகு சிவ (அல்லது) விஷ்ணு கோத்ரத்தை சேர்ந்தவருக்கு தர்பணம் செய்கிறேன் என்று கூறி 3 முறை நீர் எள் விடவும், அடுத்ததாக, எனது தந்தையின் தந்தைக்கு தர்ப்பணம் செய்கிறேன், என்று 3 முறை எள் தீர்த்தம் விடுக.

    மூன்றாவதாக எனது பாட்டனார்க்கு தர்ப்பணம் விடுகிறேன் என்று மூன்றுமுறை எள், தண்ணீர் விடவும். அடுத்ததாக, எனக்குத் தெரியாமல் என் வம்சாவழியில் வருகின்ற பித்ருக்களுக்கு (காருணீக பித்ரு) தர்ப்பணம் செய்கிறேன் என்று எள் நீர் விடவும். இதன் பொருட்டு தேவர்களும், தேவருலகவாசிகள் அனைவரும் எனது தர்ப்பண வழிபாட்டால் திருப்தி அடையட்டும் திருப்தியக என்று 3 முறை கூறுக. இது தான் எளிய தர்ப்பண பூஜை முறை.

    பிறகு எழுந்து நின்று கையில் எள் நீர் எடுத்துக்கொண்டு மூன்று முறை தன்னையே சுற்றுக்கொண்டு முட்டி போட்ட நிலையில், கட்டி கொண்டுள்ள வேட்டி துணியால் எள் தீர்த்தத்தை தொட்டு நெற்றி கண்களில் ஏற்றிக்கொள்ள வேண்டும்.

    அதில் உள்ள கூர்ச்ச முடிச்சை அவிழ்த்து எடுத்து என்னை சேர்த்துக் கொண்டு குலம் உறவினர்கள் தழைக்க தர்ப்பணம் செய்தேன். உலக மக்கள், என் மக்கள் நலன் காக்கப்பட்டும் என்று மூன்று முறை சொல்ல வேண்டும். பிறகு யாருக்கு தர்ப்பணம் செய்தோமோ அவக்குப் பிடித்தமான பண்டத்துடன், தேங்காய்,வாழைப்பழம் வைத்து மலர் துளசி போட்டு நெய் தீபம் காட்ட வேண்டும். தர்ப்பண நீரை அருகில் உள்ள நீர் நிலைகளில் அல்லது செடிகளில் விட்டுவிட வேண்டும்.

    பிறகு ஒரு பிடி சாதத்தை உருண்டையாகப் பிடித்து எள் நீர் விட்டு சிறிது பருப்பு கலந்து காக்கையை அழைத்து அது சாதத்தை எடுத்த பிறகு கயா....கயா... கயாதிதி சமர்ப்பணம் என்று மூன்று முறை கூறிய பின் விளக்கில் உள்ள திரியை மட்டும் மாற்றி தீபம் ஏற்றி விட்டு பிறகு வீட்டு தெய்வத்திற்கு பூஜை செய்த பிறகு குடும்பத்தில் உள்ளவர்கள் உணவு சாப்பிட வேண்டும்.

    பித்ருக்களும் தேவர்களும் காக்கை வடிவில் உணவு எடுக்க வருவதாக சாஸ்திரம் கூறுவதால் காக்கைக்கு அன்னமிட்டு கயாவில் சிரார்த்தம் செய்தது போல இந்த தர்ப்பணம் செய்தேன் என்று கூறுகிறோம்.

    பித்ரு தர்ப்பண பூஜை செய்வதால் மனிதர்களுக்கு உணவு, மற்ற தானங்கள், காக்கைக்கும் பசுவுக்கும் பிண்ட உணவு இறைகின்ற அரிசி எள் முதலியவற்றுக்கு உணவு என்று இயற்கையாகவே உயிரோம்புதல் நடைபெறுகிறது.

    சில கடுமையான பணி நிமித்தமாக வெளியூரில் இருப்பவர்களே தனக்குச்சக்தி இல்லாமை காரணமாக தடை வந்து செய்ய முடியாவிட்டால் மட்டும் அதற்கு வேறு வழி கூறப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு அன்னம் இடலாம். எள் மற்றும் காசு வைத்து தானம் கொடுக்கலாம். அதுவும் முடியவில்லை எனில் கட்டை விரலை ஈரம் செய்து அதில் ஒட்டிய எள்ளை தானம் தந்து பித்ருக்களை நினைக்கலாம்.

    பசுவுக்குப் புல் எடுத்துப்போட்டு அதைத் தர்ப்பணமாக ஏற்கும் படி பித்ருக்களை வணங்கிக்கேட்கலாம். அதுவும் முடியாதவர்கள் ஆகாயத்தை அன்னாந்து பார்த்து ஏ பித்ருக்களே! எனக்கு எதுவும் செய்ய இயலவில்லை வேண்டுகிறேன். திருப்தி பெறுவீர்களாக என்று வேண்டி விழுந்து வணங்கலாம்.

    • மாலையில் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வணங்கி வாருங்கள்.
    • காலையில் தீபம் ஏற்றி, இறைவனுக்கு ஏதேனும் ஒரு நைவேத்தியம் படையுங்கள்.

    புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமை தினத்திலும் விரதம் இருந்து பெருமாளை வழிபடுதல் மற்றும் விரத தினத்தில் செய்யக் கூடியது என்ன என்பதை தெரிந்து கொண்டு அதை பின்பற்றுவது நம் வாழ்க்கையை செம்மைப்படுத்தும்.

    பிரம்ம முகூர்த்தம் எனப்படும் காலை 4 மணி முதல் 6 மணிக்குள் எழுந்து விடுங்கள். வீட்டைச் சுத்தம் செய்து கொள்ளவும். காலையில் எண்ணெய் வைக்காமல் தலைக்கு குளியுங்கள். நெற்றியில் பெருமாளுக்கு உகந்த நமம் இட்டுக் கொள்ளவும். வீட்டில் அழகிய கோலம் இடவும். மாவிலை தோரணம் கட்டவும். வெள்ளிக்கிழமைகளில் தீபம் ஏற்றி இருந்தால், அந்த விளக்கில் இருக்கும் எண்ணெய், திரியை எடுத்துவிட்டு, புதிதாக எண்ணெய்யை ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றவும்.

    காலையில் தீபம் ஏற்றி, இறைவனுக்கு ஏதேனும் ஒரு நைவேத்தியம் படையுங்கள். எளிமையாக ஒரு இனிப்பை இறைவனுக்கு படைக்க விரும்பினால், பொரிகடலை மற்றும் சர்க்கரை கலந்து சுவாமிக்கு படைக்கலாம்.

    அதன் பின்னர், உங்கள் வீட்டில் இருக்கும் சொம்பை நன்றாக சுத்தம் செய்து, காயவைத்து, அதற்கு மூன்று நாமம் இடவும். அதில் சிறிது அரிசி, ஓரிரு நாணயங்களை இடவும். அதை வைத்து பெருமாளிடம் வேண்டவும். பின்னர் அந்த சொம்பை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள நான்கு வீட்டிற்காவது சென்று "கோவிந்தா, கோவிந்தா" என ஒலி எழுப்பு அரிசியை, யாசகம் பெற வேண்டும்.

    பின்னர் வீட்டுக்கு வந்து, அந்த அரிசியால், சமைக்கவும். பருப்பு, இரண்டு காய்கறிகள் போட்டு சாம்பார், பொரியல் செய்து படைக்கலாம். அதோடு உங்களால் முடிந்தால், அதே சமயம் இனிப்பு உங்கள் வீட்டில் சாப்பிடுவீர்கள் என்றால் கூடுதலாகச் சர்க்கரைப் பொங்கல், வடை, பாயசம் செய்யலாம்.

    சமைத்த உணவுகளை ஒரு வாழை இலையில் படைக்கவும். மதியம், பெருமாளை வழிபட்டு, தீபாராதனை, தூப ஆராதனை காட்டவும். நாம் சமைத்த அனைத்து உணவுகளிலிருந்து சிறிதளவு எடுத்து ஒரு இலையில் வைத்து, காகத்திற்கு வைக்கவும்.

    நாம் சமைத்து வைத்த உணவுகளை, அருகில் குழந்தைகளை அழைத்து விருந்து படைக்கவும். அவர்கள் வாயால் "கோவிந்தா, கோவிந்தா" என்ற நாமம் சொல்ல சொல்லவும்.

    அவர்கள் கூறும் "கோவிந்தா" என்ற நாமத்தின் மூலம் பெருமாள் நம் வீட்டிற்கு வந்து அருளுவார். குழந்தைகள் வயிறார விருந்து படைத்து பின்னர், நாம் சாப்பிட வேண்டும்.

    வீட்டில் நீங்கள் விருந்து படைக்க முடியாவிட்டால், ஏதேனும் ஆதரவற்றவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கலாம். அல்லது ஆதரவற்ற இல்லங்களுக்கு ஒருநாள் உணவு வழங்கலாம். மாலையில் அருகில் உள்ள ஏதேனும் ஒரு பெருமாள் கோயிலுக்குச் சென்று வணங்கி வாருங்கள்.

    • புண்ணியம் நிறைந்த மாதம் புரட்டாசி என்பார்கள்.
    • கஷ்டங்களையெல்லாம் போக்கி அருளுவார் தென்னாடுடைய சிவனார்.

    இன்று புரட்டாசி விரதம். இந்த நன்னாளில், சிவ வழிபாடு செய்யுங்கள். பிரதோஷ பூஜையில் கலந்துகொள்ளுங்கள். புண்ணியம் நிறைந்த மாதம் புரட்டாசி என்பார்கள். புரட்டாசி மாதம் என்பதே வழிபாட்டுக்கு உரிய மாதம் ஆகும். புரட்டாசி மாதத்தில் நாம் எந்த வழிபாட்டைச் செய்தாலும் இரட்டிப்புப் பலன்கள் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

    புரட்டாசி மாதம் வெயிலும் இல்லாத, குளிரும் இல்லாத அற்புதமான மாதம். இந்த மாதத்தில், மனம் ஒரு நிலைப்படுத்தி, அரைமணி நேரம் பூஜையிலும் வழிபாட்டிலும் இருக்க, உள்ளொளி கிடைப்பது நிச்சயம். அதேபோல், மந்திர ஜபங்கள் செய்வதும் ஸ்லோகங்கள் சொல்வதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய பிரதோஷ காலமும் மிக மிக முக்கியமானது. மகாவிஷ்ணு வழிபாடு எப்படி முக்கியமோ அதேபோல் சிவ வழிபாடும் அளப்பரிய நன்மைகளைக் கொடுக்கக் கூடியது.

    புரட்டாசி மாதம் நிறைவுறும் தருணத்தில் பிரதோஷம் வருகிறது. அதுவும் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்லுவார்கள்.

    இன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்யுங்கள். சிவ ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள். ருத்ரம் ஒலிக்கவிட்டு கேளுங்கள். அருகில் உள்ள சிவாலயத்துக்கு, மாலையில் பிரதோஷ வேளையில் சென்று தரிசியுங்கள். சிவனாருக்கும் நந்திதேவருக்கும் நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துகொண்டு கண் குளிரத் தரிசியுங்கள்.

    கஷ்டங்களையெல்லாம் போக்கி அருளுவார் தென்னாடுடைய சிவனார். துக்கங்களையெல்லாம் நீக்கி அருளுவார் ஈசன்.

    இன்று மாலையில் சிவன் ஆலயத்தில் நடைபெறும் பிரதோஷ பூஜையில் கலந்துகொள்ளுங்கள். பிரதோஷத்தில் சிவ தரிசனம் செய்தால், புத்தியில் தெளிவு உண்டாகும். மனோபலம் பெருகும். மனக்கிலேசம் விலகும். மங்கல காரியங்கள் நடந்தேறும்.

    • மாதாந்தம் கிருஷ்ண பட்ஷத்தில் வருகின்ற சதுர்த்தியை ‘சங்கடஹர சதுர்த்தி’ என்பர்.
    • சுக்கில பட்ச சதுர்த்தியை ‘சதுர்த்தி விரதம்‘ என்று கொள்வர்.

    ஒவ்வோர் ஆண்டிலும் விநாயகருக்கான விரத நாட்கள் அனேகமாக சதுர்த்தித் திதியன்றே கூடுவதை அவதானிக்கலாம். சுக்கில பட்ச சதுர்த்தி என்றும் கிருஷ்ண பட்ச சதுர்த்தி என்றும் இரண்டு சதுர்த்தி விரத தினங்கள் மதாந்தம் சம்பவிக்கின்றன. சுக்கில பட்சச் சதுர்த்தியை 'சதுர்த்தி விரதம்' என்று கொள்வர்.

    அவற்றுள்ளும் ஆடி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை 'நாக சதுர்த்தி' என்றும் ஆவணி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை 'விநாயக சதுர்த்தி' என்றும் கைக்கொள்கின்றனர்.

    மாதாந்தம் கிருஷ்ண பட்ஷத்தில் வருகின்ற சதுர்த்தியை 'சங்கடஹர சதுர்த்தி' என்பர். விநாயகரைத் துதிப்போரின் சங்கடங்களை அவர் நீக்கியருளுவார் என்பதனால் அத்தினத்தில் வருகின்ற விரதத்தை 'சங்கடஹர சதுர்த்தி விரதம்' என்கின்றனர். இருந்தும் ஆவணி மாதத்தில் வருகின்ற கிருஷ்ண பட்ஷச் சதுர்த்தியை 'சங்கடஹர விநாயக சதுர்த்தி' என்று வழங்குவர். ஆவணி மாதத்தில் வருகின்ற இரண்டு சதுர்த்தி விரதங்களும் முக்கியமானவை.

    எனினும் 'விநாயக சதுர்த்தி விரதமே அதிவிஷேடமானது. சுக்கில பட்ஷ சதுர்த்தியின் அதிபதியான 'தேவி' விநாயகரை வழிபட்டு மத்தியான நேரத்தில் தரிசனம் பெற்று உய்ந்தாள் என்றும், அந்நாளில், அந்நேரத்தில் விநாயரைக் குறித்து விரதம் அனுஷ்டித்து வழிபடுபவர்களுக்கு விநாயகரின் அருளும், சுகபோக சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவது நிச்சயம் என்றும் கூறுவர்.

    • ஒவ்வொரு ஏகாதசி திதியும் தனித்துவம் வாய்ந்தது.
    • அஜா ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கும்.

    புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசிக்கு "அஜா ஏகாதசி" என்று பெயர். "அஜா" என்றால் வருத்தத்தை நீக்குவது என்று பொருள். உயிர்களின் வருத்தத்தை நீக்கி, உயர்நிலைக்குக் கொண்டு செல்லுகின்ற ஆற்றலைத் தருகிறது இந்த ஏகாதசி.

    இந்த ஏகாதசியை பெருமாளுக்குரிய புரட்டாசி மாதத்தில், நம்மால் இயன்ற அளவு அனுஷ்டித்தால், நாம் இழந்ததை மீண்டும் பெறலாம். இதனால் மன கவலை நீங்கும்.

    அஜா ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கும். பொதுவாக விரத முறைகள் வழிபாடுகள் அனைத்தையும் கடைப்பிடிக்க வாய்ப்பில்லாதவர்கள் இந்த அஜா ஏகாதசி அன்று வெறும் உபவாசம் இருந்தாலே முழு விரத பலன்களைப் பெறுவார்கள்.

    அஜா ஏகாதசி விரதத்தின் பெருமைகளைத் தமக்கு விளக்கி அருளுமாறு யுதிஷ்டிரர் பகவான் கிருஷ்ணனிடம் கேட்கிறார். கிருஷ்ணரும் அஜா ஏகாதசி விரதத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கிறார்.

    "தர்ம புத்திரரே, அஜா ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கும். பொதுவாக விரத முறைகள் வழிபாடுகள் அனைத்தையும் கடைப்பிடிக்க வாய்ப்பில்லாதவர்கள் இந்த அஜா ஏகாதசி அன்று வெறும் உபவாசம் இருந்தாலே முழு விரத முறையையும் ஆச்ரயித்த பலன்களைப் பெறுவார்கள். மேலும் ரகுவம்சத்தில் தோன்றிய ஹரிச்சந்திரன் இந்த விரதத்தை அனுஷ்டித்து தன் துன்பம் நீங்கப் பெற்றான்" என்று ஹரிச்சந்திரனின் கதையினை எடுத்துக்கூறினார்.

    உலகம் போற்றும் சத்தியசந்தனாக விளங்கிய ஹரிச்சந்திர மகாராஜா தன் முன்வினைப்பயன்களால் தன் நாட்டை இழந்தான். மேலும் தன் மனைவி, மகனையும் பிரியும் நிலை வந்தது. ஆனாலும் தன் இயல்பில் மாறாது சுடுகாட்டைக் காக்கும் வேலையைச் செய்து சத்தியத்தையே கடைப்பிடித்துவந்தான். ஒருநாள் ரிஷி கௌதமரை சந்தித்தான். ரிஷியின் பாதங்களைப் பணிந்த ஹரிச்சந்திரன் தன் வாழ்க்கையில் நடந்த துயரங்களை எடுத்துக்கூறினான். அவற்றைக் கேட்ட முனிவர் மிகவும் மனம் வருந்தி, "நல்லவர்களும் துன்பப்படுகிறார்கள் என்றால் அதன்காரணம் அவர்களின் முன்வினைப்பயன்தான்.

    அதை அழிக்கும் சக்தியுடைய விரதம் அஜா ஏகாதசி விரதம். அடுத்து வரும் ஏகாதசி அஜா ஏகாதசிதான். அந்த நாளில் நீ முழு உபவாசம் இருந்து, ஹரியை நாள்முழுவதும் மனதாலும் வாக்காலும் துதிப்பாயாக. அப்படிச் செய்வதன் மூலம் ஹரி மகிழ்ந்து உன் வினைப்பயன்களை நீக்குவார். மேலும் நீ விரைவில் நன்னிலை அடைவாய். நீ அடையும் நன்னிலையே இந்த ஏகாதசி விரதத்தின் மகிமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும்" என்று உபதேசித்தார்.

    ஹரிச்சந்திரனும் அதன்படி விரதமிருந்து உபவாசம் அனுஷ்டிக்க விரைவில் அவன் வினைப்பயன்கள் நீங்கின. அவனோடு வாதம் செய்தவர் தோற்றார். அவன் துன்பங்கள் யாவும் நீங்கின. தன் பிள்ளையோடும் மனைவியோடும் இணைந்தான். அவன் ராஜ்ஜியம் மீண்டது என்று பகவான் கிருஷ்ணர் அவற்றை எடுத்துரைத்தார்.

    மேலும் அஜா ஏகாதசியின் சிறப்புகளை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறினாலும் அதைக் கேட்டாலும் சகல நன்மைகளும் உண்டாகும். கலியுகத்தில் சில யாகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட யாகங்களில் ஒன்று அஸ்வமேத யாகம். அந்த யாகம் செய்வதால் உண்டாகும் புண்ணிய பலனை நாம் அஜா ஏகாதசி விரத்தைக் கடைப்பிடித்து, அதன் பலனை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதன் மூலம் பெறலாம் என்கிறது ஏகாதசி புராணம்.

    இத்தகைய சிறப்புகளையுடைய அஜா ஏகாதசி இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. எனவே தவறாமல் இந்த நாளில் உபவாசம் இருந்து ஹரியை வழிபட வேண்டும். இந்த நாளைத் தவறவிடாமல் பகவான் விஷ்ணுவை வழிபட்டு சகல நலன்களையும் பெறுவோம்.

    • மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
    • தேங்காய் சாதம் அல்லது பாயாசம் நைவேத்தியமாக படைக்க வேண்டும்.

    துர்க்கை அம்மன் வழிபாடு என்பது மிகவும் விசேஷமானது. ஒவ்வொரு தினமும் ஒரு குறிப்பிட்ட வேளையில், துர்க்கை அம்மனை வழிபடும்போது, நாம் வைக்கும் கோரிக்கைகளை அம்பாள் நிறைவேற்றித் தருவார் என்பது ஐதீகம். அதோடு திருமணத் தடையால் அவதிப்படுபவர்கள், அதில் இருந்து வெகு விரைவாக விடுபடுவார்கள் என்பதும் அசைக்க முடியாத நம்பிக்கை. துர்க்கை அம்மனை எந்த தினங்களில் எப்படி வழிபடலாம் என்பதை இங்கே பார்ப்போம்.

    ஞாயிறு: ஆலயங்களில் காட்சி தரும் துர்க்கைக்கு, ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள், புதிய வெள்ளைத் துணியில் திரி செய்து விளக்கேற்றி வழிபட வேண்டும். அப்போது சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைக்க வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகும். அதோடு எல்லா நலன்களும் உண்டாகும்.

    திங்கள்: திங்கட்கிழமைகளில் காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள், துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து, வெண் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். இதனால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும். மேலும் வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிடைக்கும்.

    செவ்வாய்: ராகு கால நேரமான மாலை 3 மணி முதல் 4.30 மணிக்குள் வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்தியம் படைத்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

    புதன்: மதியம் 12 மணி முதல் 1.30 மணிக்குள் பஞ்சில் திரி செய்து விளக்கேற்றி, புளியோதரை நைவேத்தியம் படைத்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் பதவி உயர்வு கிடைக்கும். மேலும் ரத்த சம்பந்தமான நோய் ஏதாவது இருந்தால், அது நீங்கும்.

    வியாழன்: வியாழக்கிழமைகளில் மதியம் 1.30 மணி முதல் 3 மணிக்குள் விளக்கேற்றி, எலுமிச்சம் பழம் சாதம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். இதனால் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். மேலும் இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

    வெள்ளி: வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து ராகுகால நேரமான காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் துர்க்கையை வழிபட வேண்டும். இது மற்ற நாட்களை விட, மிகவும் ஏற்றம் தரும் காலம் ஆகும். எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு, அதை குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். தேங்காய் சாதம் அல்லது பாயசம் நைவேத்தியமாக படைக்க வேண்டும். இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும்.

    சனி: சனிக்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் மஞ்சள் துணி திரியில் விளக்கேற்றி, காய்கறி கலந்த அன்னத்தை நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். இதனால் வேலைவாய்ப்பு கிட்டும், அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர், சிறுநீரக கோளாறு நீங்கும்.

    • புதன் கிழமையில் விரதம் இருந்து இறை வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பு.
    • சனிக்கிழமையில் விரதம் இருந்தால் வருமானம் பன்மடங்கு உயரும்.

    உடம்பில் இருக்கும் கெட்ட கழிவுகளும், தீய சக்திகளும் அழிய நம் முன்னோர்கள் காலம் காலமாக விரதம் என்கிற ஒன்றை கடைபிடித்து வந்தனர்.விரதம் என்னென்ன நாளில்? இருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    ஞாயிற்றுக்கிழமை: ஞாயிற்றுக் கிழமைகளில் விரதம் இருக்க நீண்ட நாள் பிணிகள் அனைத்தும் தீரும் என்கிறது சாஸ்திரம். நீண்ட நாளாக ஏதாவது ஒரு நோயால் நீங்கள் அவதிப்பட்டு கொண்டிருந்தால் அந்த நோய் விரைவாக தீர ஞாயிற்றுக் கிழமைகளில் விரதம் இருந்து பாருங்கள். ஒரு சில வாரம் இருந்தாலே உங்களுடைய அந்த நோய்க்கான தீர்வு கிடைப்பது போன்று உங்களுக்கே தோன்றிவிடும். நீண்ட கால நோயிலிருந்து மீண்டு ஆரோக்கிய வாழ்வைப் பெற ஞாயிறு விரதம் மேற்கொள்ளுங்கள்.

    திங்கட்கிழமை: திங்கட் கிழமைகளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் இருக்கும் சண்டை, சச்சரவுகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும் என்கிறது சாஸ்திரம். நம் ஆன்றோர்கள் உடைய வாக்கின்படி திங்கட் கிழமையில் விரதம் இருந்து இறை வழிபாட்டை மேற்கொள்வது குடும்பத்தில் ஒற்றுமையையும், அமைதியையும் கொடுக்கும். ஒரு குடும்பத்தில் யார் வேண்டுமானாலும் விரதம் இருக்கலாம். ஒருவர் இருந்தால் கூட அந்த குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கும் அதனுடைய பலனில் பங்கு போய் சேரும்.

    செவ்வாய்க்கிழமை: செவ்வாய்க் கிழமையில் விரதம் இருந்தால் கணவன், மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகள் தீரும். கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை பிறக்கும். எத்தகைய உறவுகளுக்குள் இருக்கும் பிரச்சனைகளும் தீர்ந்து நிம்மதி பிறக்கும்.

    புதன்கிழமை: புதன் கிழமையில் விரதம் இருந்தால் கலை, கல்வி போன்ற விஷயங்களில் சாதகமான பலன்களை பெறலாம். கலை, கல்வி தாகம் கொண்டவர்கள் புதன் கிழமை தோறும் விரதமிருந்து இறை வழிபாடுகளை மேற்கொண்டால் அதில் நிச்சயமாக சிறந்த எதிர்காலத்தை அடைய முடியும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க புதன் கிழமையில் விரதம் இருந்து இறை வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பு.

    வியாழன் கிழமை: வியாழன் கிழமையில் விரதம் இருந்து வழிபட்டால் புத்திரப் பேறு உண்டாகும் என்பது நம்பிக்கை. தம்பதியர்களாக வியாழன் கிழமை தோறும் விரதமிருந்து அதற்குரிய தெய்வத்தை வணங்கி வழிபட்டு இருந்து வந்தால் சந்தான பாக்கியம், குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும்.

    வெள்ளிக்கிழமை: வெள்ளிக் கிழமையில் விரதமிருந்து எத்தகைய தெய்வத்தை வணங்கி வந்தாலும் ஆயுள் விருத்தி ஏற்படும் என்பது சாஸ்திர நம்பிக்கையாக இருந்து வருகிறது. தம்பதியர்கள் ஒற்றுமையாக நீண்ட காலம் வாழ்ந்து ஆயுள் பலம் பெற வெள்ளிக் கிழமை தோறும் இருவருமாக விரதமிருந்து இறை வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

    சனிக்கிழமை: சனிக்கிழமையில் விரதம் இருந்து வழிபட்டு வந்தால் வருமான விருத்தி உண்டாகும். தொழில், வேலை, வியாபாரம் என்று எத்தகைய விஷயங்களில் நீங்கள் வெற்றி பெற விரும்பினாலும், சிறப்புற விளங்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் ஒவ்வொரு சனிக் கிழமையும் விரதம் இருந்து இறை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சனிக்கிழமையில் விரதம் இருந்தால் வருமானம் பன்மடங்கு உயர்ந்து செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

    ×