search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97622"

    • இந்த விரதத்தை உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம்.
    • பூஜை நேரம் வரை பட்டினியாக இருப்பது சிறப்பு.

    விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார். அதனால்தான் அவர் எல்லோருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார்.

    விநாயகர் விரதத்தை பார்வதி தேவியே மேற்கொண்டி ருக்கிறார். தன் கணவரை அவமதித்து யாகம் நடத்திய தந்தை தட்சனிடம் நியாயம் கேட்கப் போனாள் பார்வதி என்ற தாட்சாயணி. ஆனால், தட்சனோ மிகவும் கர்வம் பிடித்தவன். மருமகனை அவமானப்படுத்தியது போதாதென்று, மகளையும் கேலி பேசினான்.

    இந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாத தாட்சாயணி, தட்சன் வளர்த்து வைத்திருந்த யாக குண்டத்தில் அப்படியே பாய்ந்துவிட்டாள்.

    அதன்பிறகு, பர்வதரா ஜனுக்கு மகளாகப் பிறந்து பார்வதி என்னும் பெயருடன் வளர்ந்து வந்தாள். சிறு வயதில் இருந்தே கயிலைநாதன்தான் தன் கணவன் என்று தீர்மானமாக இருந்தாள். அவளுடைய அந்த எண்ணம் பலிக்க வேண்டும் என்றால், அவள் விநாயகரை நினைத்து சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டுமென்று அவளுடைய தந்தையார் பர்வதராஜன் யோசனை சொன்னார்.

    அவர் சொன்னபடியே, மண்ணால் ஒரு விநாயகர் விக்ரகத்தை உருவாக்கினாள் பார்வதி. கூடவே தங்கத்தாலும் ஓர் உருவம் செய்து இரண்டையும் பொற்கும்பம் ஒன்றின் பக்கத்தில் வைத்தாள். அந்த விக்ரகங்களுக்கு ஆகம விதிப்படி பூஜைகளை செய்தாள். ஆவணி மாத அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தியில் இப்படி பூஜையை ஆரம்பித்து, பவுர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில் தினமும் பூஜை செய்தாள்.

    அதற்குப் பிறகு மண் பிள்ளையாரை, மேள தாளத்தோடு ஊர்வலமாக எடுத்துப் போய் நதியிலே இறக்கி விட்டாள். அந்த பதினைந்து நாட்களும் நியம நிஷ்டைகளை மீறாமல் இருந்த விரதத்தின் பலனாக, தான் ஆசைப்பட்டாற்போல கயிலைநாதனை கைப்பிடித்தாள்.

    விநாயகர் ஆதி பரம்பொருள். எல்லோருக்கும் மூத்தவர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று எல்லோரையும் உருவாக்கியவர் அவர்தான். அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருந்ததால் அவர் பலவித அவதாரங்களை எடுத்தார். அந்த மாதிரியான ஒரு அவதாரம்தான் சிவன் மகனாக அவர் தோன்றியது. அற்பத் தாவரமான புல்லையும் (அருகம்புல்) அவர் ஏற்றுக் கொள்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைக் கூட அவர் மறுப்பதில்லை.

    விநாயகர் சதுர்த்தி தினத்தன்று விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டலாம்.முடிந்தால், இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டி வைக்கலாம். பிறகு, பூஜையறையில் சுத்தம் செய்த ஒரு மனையை வைக்க வேண்டும்.

    அதன்மேல் ஒரு கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இந்த இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.

    பூமியில் இருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். களிமண் மட்டும்தான் என்றில்லாமல், உலோகம், கற்சிலை விக்ர கங்களையும் வைக்கலாம்.

    பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என்று எத்தனை வகை பூக்களை வாங்க முடியுமோ, அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம். அதேபோல முடிந்த அளவுக்கு சில வகை பழங்களையும் வாங்கிக் கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் விட, விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை செய்து கொள்ளலாம்.

    அதாவது கொழுக்கட்டை. தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது. இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம்.

    உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும்.

    (விநாயகருக்கு முதன் முதலாக இந்தக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்தது, வசிஷ்ட முனிவருடைய மனைவியான அருந்ததி.)

    பிள்ளையாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்கள் எதை வேண்டுமானாலும் பாடலாம்.

    அவ்வையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத் தரும். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயாசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம். பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம். நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை; ஈடுபாடுதான் முக்கியம். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.

    இந்த விரதத்தை காலையில் இருந்தே உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். பூஜை நேரம் வரை பட்டினியாக இருப்பது சிறப்பு. சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரிப்பார்கள். அப்படித் தொடர்ந்து, பவுர்ணமிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்வார்கள்.

    • ஆவணியில் அத்தனை நாள்களும் மங்கல நாள்களே என்பது ஆன்றோர் வாக்கு.
    • ஆவணி சோமவார விரதமும் முக்கியமானது.

    ஆடி மாதம் போய் ஆவணி வந்தால் ஆயிரம் நன்மைகள் தேடி வரும் என்பார்கள். ஆவணியில் அத்தனை நாள்களும் மங்கல நாள்களே என்பது ஆன்றோர் வாக்கு. பெருமைமிகு இந்த மாதத்தில் தான் கணநாதர், கண்ணபிரான் திருஅவதாரங்கள் நடைபெற்றன. மாணிக்கவாசகருக்காக இறைவன் குதிரைகளைக் கொண்டு வந்து மதுரையம்பதியில் ஒப்படைத்த ஆவணி மூல விழாவும் இந்த மாதத்தில் சிறப்பு.

    அரசர்களில் சிறந்தவரான மகாபலி மன்னன், வாமன மூர்த்திக்கு மூன்றடி தானம் கொடுத்தது இந்த ஆவணி மாத சிரவண துவாதசி நாளில்தான். சிரவண தீபம் என்று போற்றப்படும் ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில் ஏற்றப்படும் இந்த தீபம் வேண்டுதலை நிறைவேற்றக் கூடிய அற்புத வழிபாடு என்பர். இந்த நாளில் திருமலை திருப்பதியில் உற்சவரான மலையப்ப சுவாமி ஊஞ்சல் மண்டபத்தில் திருச்சேவை சாதிப்பார். அப்போது அங்கே ஆயிரத்தெட்டு திரிகளைக் கொண்ட நெய் விளக்கு ஏற்றப்பட்டு அந்த பகுதியே ஒளிவெள்ளத்தில் மிதக்கும். இது சஹஸ்ர தீபாலங்கார சேவை என்பர்.

    ஆவணி மூலம், ஆவணி ஞாயிறு, ஆவணி அவிட்டம், புத்ரதா ஏகாதசி, காமிகா ஏகாதசி உள்ளிட்ட பல விரத நாள்களும் இந்த மாதத்தில் வருகின்றன. மேலும் ஆவணி மாத செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளும் விரத முக்கியத்துவம் வாய்ந்த நாள்கள் என்கிறார்கள். புதிதாக திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் பெற ஆவணி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மங்கள கெளரி விரதம் அனுஷ்டிப்பார்கள்.

    அதேபோல் ஆண்களும் தங்கள் விருப்பங்கள் நிறைவேற ஆவணி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கான நோன்பை கடைப்பிடிப்பார்கள். ஆவணி சோமவார விரதமும் முக்கியமானது. ஆவணி மாதம் சிவபெருமானை வழிபடுவதற்கு ஏற்ற மாதம் என்பதால் திங்களும் வியாழனும் சைவர்களுக்கு இன்றியமையாத நாள்கள் ஆகும். ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை சூரிய வழிபாட்டுக்கு ஏற்ற நாள். அதேபோல் அன்றிலிருந்து சூரிய நமஸ்கார வழிபாட்டைத் தொடருவதும் நல்லது.

    இந்த மாதத்தில் திருமணம் செய்தால் வாழ்க்கை இன்பமாக அமையும் என்பதெல்லாம் நம்பிக்கை. அநேக தீமைகள் ஒழிந்து மங்கலங்கள் சூழும் இந்த மாதம் நம்பிக்கைக்கும் நன்மைகளுக்கும் ஏற்ற மாதம் என்று பெரியோர்களால் சொல்லப்படுகிறது. எனவே இந்த மாதத்தில் விரதம் இருந்து இறைவனை வழிபட்டு இன்பமுற்று வாழ்வோம்.

    • இந்து முன்னணி சார்பில், 1.25 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
    • கோவை, திருப்பூரில் 11 ஆயிரம் சிலைகள் வைக்கப்பட உள்ளன.

    திருப்பூர் :

    வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில், 1.25 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.அதில், கோவை திருப்பூரில் 11 ஆயிரம் சிலைகள் வைக்கப்பட உள்ளன.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் காப்பு கட்டி, விரதம் துவங்கினர்.

    திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் திரளான தொண்டர்கள் பங்கேற்று காப்பு கட்டி கொண்டனர்.மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், மாநில பொது செயலாளர் கிஷோர்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • ஆவணி அமாவாசை இன்று பிற்பகல் 1.23 மணிக்கு தொடங்குகிறது.
    • தர்ப்பணம் விடுவதற்கு தொடங்கும் முன்பு குலதெய்வத்தை வணங்க வேண்டும்.

    இன்று (வெள்ளிக்கிழமை) ஆவணி அமாவாசை தினம்.

    தமிழர்களின் ஜோதிட கணக்கின்படி சூரியன் சிம்ம ராசியில் பிரவேசிக்கும் மாதமே ஆவணி மாதம் என கணக்கில் கொள்ளப்படுகிறது. எனவே தான் இம்மாதத்தை சிங்க மாதம் எனவும் அழைக்கின்றனர்.

    இம்மாதத்தில் வருகின்ற பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.

    ஆவணி அமாவாசை இன்று பிற்பகல் 1.23 மணிக்கு தொடங்குவதால் இன்று காலை அமாவாசை தர்ப்பணம், திதி போன்ற சடங்குகளை செய்யலாம். ஆவணி மாத அமாவாசை தினத்தன்று காலையில் குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் மைத்ர முகூர்த்த நேரம் எனப்படும் அதிகாலை நேரத்தில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும்.

    தர்ப்பணம் விடுவதற்கு தொடங்கும் முன்பு குலதெய்வத்தை வணங்க வேண்டும். பின்பு இந்த தர்ப்பணம் சடங்கு நன்றாக அமைய தேவர்களின் நாயகனாகிய விநாயகரை மஞ்சளில் பிடித்து வழிபட வேண்டும். அல்லது மானசீகமாக வழிபடலாம்.

    பின்பு உங்கள் தாய்வழி மற்றும் தந்தை வழி முன்னோர்களை மனதில் நினைத்து, வேதியர்கள் கூறும் மந்திரங்களை திரும்ப கூறி, அரிசி பிண்டத்தில் கருப்பு எள் போட்டு, அதில் தூய்மையான நீரை சிறிது விட வேண்டும். கருப்பு எள் சனி பகவானின் ஆதிபத்தியம் கொண்டது. இதை இச்சடங்கில் பயன்படுத்துவதால் ஆயுள் காரகனாகிய சனி பகவானின் அருளாசி ஒருவருக்கு கிடைக்கின்றது. வீட்டின் பூஜையறையை சுத்தம் செய்து தீபமேற்ற வேண்டும். பின்பு உங்கள் வீட்டில் இருக்கும் மறைந்த முன்னோர்களின் படத்திற்கு பூக்கள் சமர்ப்பித்து, தூபங்கள் கொளுத்தி வணங்க வேண்டும்.

    ஆவணி மாதம் சுப மற்றும் தெய்வீக காரியங்கள் செய்வதற்கான சிறப்பான மாதமாக இருக்கிறது. இந்த ஆவணி மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் மேற்கண்ட முறையில் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் தந்து முன்னோர்களை வழிபடுவதால் வீட்டில் கஷ்ட நிலை நீங்கி சுபிட்சங்கள் பெருகும்.

    • குரு பகவானுக்கு உரிய நாளாகிய வியாழக்கிழமை விரதம் இருப்பது சிறப்பானது.
    • மஞ்சள் நிற ஆடையைத் தானம் செய்யலாம்.

    குரு பகவானை விரதம் இருந்து வழிபாடு செய்வதற்குக் குருபகவான் உச்சம் பெறும் ஆடி மாதமும், ஆட்சி பெறும் மார்கழி, பங்குனி மாதங்களும், குரு நட்சத்திரங்கள் ஆகிய விசாகம், புனர்பூசம், பூரட்டாதி வியாழக்கிழமைகளில், குரு ஓரையில் வழிபட்டு, பரிகாரம் செய்வது மிக, மிகச் சிறப்பாகும்.

    வியாழக்கிழமையில் குரு ஓரை காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரையிலும் ஆகும்.

    குரு கிரக பரிகாரங்கள்

    வியாழபகவானுக்கு உரிய நாளாகிய வியாழக்கிழமை விரதம் இருந்து மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்தும், குருபகவானுக்கு மஞ்சள் நிற ஆடையாலும், சரக்கொன்றை, முல்லை மலர்களாலும் அலங்கரித்தும் வழிபட வேண்டும். அரசமர சமீத்து கொண்டு தூபம் காட்ட வேண்டும். கடலைப் பொடி சாதம், வேர்க்கடலைக் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் இவற்றை குரு பகவானுக்கு நிவேதனம் செய்து, மற்றவர்களுக்குத் தானம் செய்திடல் வேண்டும்.

    மஞ்சள் நிற ஆடையைத் தானம் செய்யலாம். கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நிவேதனம் செய்து குழந்தைகளுக்குத் தானம் செய்து விட வேண்டும். குரு பகவானின் ஆதி தேவதைகளான பிரம்மன், இந்திரன் இவர்களை வழிபட்டாலும் குரு மகிழ்வார். குரு பகவானை, அடாணா ராகத்தில் குருபகவானின் கீர்த்தனைகளைப் பாடி பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.

    ஜாதகத்தில் குரு பலவீனமுற்றோ, தோஷமுற்றோ இருந்தால், நவமி அன்று சண்டிஹோமம் செய்ய சிறப்பாகும்.

    • இன்று விரதம் இருந்து சிவாலய வழிபாடு செய்வது கடன் தொல்லையை நீக்கும்.
    • இன்று நந்தியை மனம் உருக வழிபட்டால் தடைபட்ட சுப காரியங்கள் மளமளவென நடக்க தொடங்கும்.

    இன்று பிரதோஷம். புதன்கிழமையில் வருகிற பிரதோஷத்தன்று சிவ தரிசனம் செய்வது நன்மை தரக்கூடியது. இன்று விரதம் இருந்து மாலை சிவ ஆலயம் சென்று அபிஷேகத்துக்கு பொருட்களை வழங்கி இறைவனை தரிசித்தால் வீட்டில் உள்ள கடன் தொல்லை நீங்கும். 16 வகை செல்வங்கள் கிடைக்கும். வீட்டில் சுபிட்சம் நிலவும். புத்திர பாக்கியம் கிடைக்கும். சிவன் நந்தி அபிஷேகத்திற்கு இளநீர் வாங்கித் தந்தால் நல்ல புத்திசாலியான மக்கள் பேறு உண்டாகும். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் தடைகள் நீங்கி மளமளவென்று நடைபெறும்.

    புதன் என்பது அள்ளித்தரக்கூடிய ஒரு பொன்னான நாள். அந்த நாளில் யார் ஒருவர் விரதம் இருந்து பிரதோஷ வழிபாடு செய்கிறார்களோ, அவர்களின் வாழ்வில் செல்வம் பெருகும். செல்வம் என்பது பணம் மட்டுமல்ல அறிவுச் செல்வம், ஆரோக்கியம், குழந்தை செல்வம், திருமண பாக்கியம், குடும்ப ஒற்றுமை என 16 வகையான செல்வங்கள் இருக்கின்றன. அந்த 16 செல்வங்களைப் பெற புதன்கிழமைகளில் வரும் பிரதோஷ நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும். .

    புதன்கிழமை வரும் பிரதோஷத்தில் விரதம் இருந்து சிவாலய வழிபாடு செய்வது கடன் தொல்லையை நீக்கும். இன்று நந்தி அபிஷேகத்துக்கு இளநீர் வாங்கிக் கொடுத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீக நம்பிக்கையாக உள்ளது. இன்று நந்தியை மனம் உருக வழிபட்டால் தடைபட்ட சுப காரியங்கள் மளமளவென நடக்க தொடங்கும்.

    இன்று மாலை கோவிலில் தயிர் சாதம் வழங்குபவர்களுக்கு, நீண்ட நாள் காரியம் நிறைவேறும். பசுவிற்கு 4 மஞ்சள் வாழைப்பழம் கொடுக்கவும்.

    • தவறாமல் காமிகா ஏகாதசி அன்று துளசி கொண்டு பூஜிக்க வேண்டும்.
    • காமிகா ஏகாதசியின் கதையைக் கேட்பது ஒரு யாகத்தை நிகழ்த்துவதற்கு சமம்.

    தமிழ் மாதத்தின் அடிப்படையில் ஒரு மாதத்திற்கு இரண்டு வீதம் மொத்தம் 24 ஏகாதசி உள்ளது. சில வருடங்களில் மட்டும் 25 ஏகாதசி வரும். அதனை சுக்லபட்ச ஏகாதசி மற்றும் கிருஷ்ணபட்ச ஏகாதசி எனக் குறிப்பிடுகின்றனர். சுக்லபட்சம் என்பது வளர்பிறை ஏகாதசி ஆகவும், கிருஷ்ணபட்சம் என்பது தேய்பிறை ஏகாதசி ஆகவும் குறிக்கிறார்கள். ஏகாதசி என்பது ஏக் (ஒன்று) தஸ் (பத்து) அதாவது ஒன்று + பத்து = பதினொன்று. அமாவாசை முடிந்து 11-வது நாள் வளர்பிறை ஏகாதசி, பவுர்ணமி முடிந்து 11-வது நாள் தேய்பிறை ஏகாதசி ஆகும்.

    விஷ்ணுவின் உபேந்திர அவதாரம் இந்த நாளில் வழிபடப்படுகிறது. இந்த ஏகாதசிக்காக உண்ணாவிரதம் இருப்பதன் மூலம் முந்தைய வாழ்க்கையின் தடைகள் நீக்கப்படும். இந்த புனிதமான ஏகாதசி விரதத்தின் விளைவாக ஆயிரக்கணக்கான பசுவை தானம் செய்த பலன் கிடைக்கும். காமிகா ஏகாதசி தினத்தன்று விஷ்ணுவை வணங்குவதால் முடிக்கப்படாத அனைத்து பணிகளும் நிறைவேறும்.

    இந்த நாளில் விஷ்ணுவை வணங்குவது ஒரு பக்தருக்கு லாபம் தருவது மட்டுமல்லாமல், அவரது முன்னோர்களின் துன்பங்களையும் முடிவுக்குக் கொண்டுவருகிறது. காமிகா ஏகாதசி தினத்தன்று ஒரு ஏரி, நதி அல்லது குளத்தில் யாத்ரீக இடங்களில் குளித்துவிட்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும் . காமிகா ஏகாதசியின் கதையைக் கேட்பது ஒரு யாகத்தை நிகழ்த்துவதற்கு சமம்.

    மகாபாரத காலத்தில் தர்மராஜ் யுதிஷ்டிரர் ஸ்ரீகிருஷ்ணரிடம், "ஆண்டவரே தயவுசெய்து ஏகாதசியின் கதையையும் முக்கியத்துவத்தையும் சொல்லுங்கள்" என்றார் கடவுள் கிருஷ்ணர் கூறினார். "இந்த ஏகாதசியின் கதையை தேவர்ஷி நாரதிடம் பிரம்மா விவரித்தார். எனவே நானும் இதைத்தான் கூறுவேன்". பிரம்மாவிடமிருந்து காமிகா ஏகாதாசியின் கதையைக் கேட்க நாரதர் தனது விருப்பத்தை வெளிப்படுத்திய ஒரு காலம் இருந்தது.

    காசி, நைமிஷாரண்யா, கங்கா, புஷ்கர் போன்ற யாத்திரைகளில் குளிப்பதன் மூலம் கிடைக்கும் பலன்களும் விஷ்ணுவை வழிபடுவதிலிருந்து பெறப்படுகின்றன. தனது பாவங்களுக்கு பயப்படுபவர் காமிகா ஏகாதசி வேகமாக செய்ய வேண்டும். காமிகா நோன்பை நிகழ்த்தும் மக்கள் தாழ்ந்த வாழ்க்கையில் பிறப்பதில்லை என்று கடவுளே கூறியுள்ளார். இந்த ஏகாதசி விரதத்தில் விஷ்ணுவிடம் பக்தியுடன் துளசி இலைகளை வழங்கும் எந்தவொரு பக்தரும் நல்ல முடிவுகளையும் அதிர்ஷ்டத்தையும் பெறுகிறார்.

    காமிகா ஏகாதசி அன்று ஸ்ரீஹரியை துளசி கொண்டு அர்ச்சித்து வழிபடுபவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து விடுபடுவர். மதிக்க முடியாத தங்கத்தையும் வைர வைடூரியங்களையும் கொண்டு அர்ச்சிப்பதை விட ஒரே ஒரு துளசி இலை சமர்ப்பித்து வழிபடுவது மேன்மையுடையது. துளசிச் செடியில் துளசி மாதா வாசம் செய்வதாக ஐதிகம். எனவே, காமிகா ஏகாதசி அன்று துளசிச் செடியை தரிசனம் செய்வதே புண்ணியம் தரும்.

    துளசிச் செடிக்கு நீரூற்றி அருகே ஓர் விளக்கேற்றிக் கோலமிட்டு நமஸ்காரம் செய்து வழிபட்டால் நோய் நொடிகள் நம்மை அணுகாது. மேலும், இந்த நாளில் புதிதாகத் துளசிச் செடி நடுவது மிகவும் மங்களமானது. அவ்வாறு செய்பவர்களுக்கு யம வாதை இருக்காது.

    தினமும் துளசி மாதாவின் சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுபவர்களின் புண்ணியக் கணக்கை சித்திர குப்தனாலும் அளவிட முடியாது என்று துளசியின் பெருமையையும் அதைக் கொண்டு செய்யும் வழிபாட்டின் மகிமைகளையும் பிரம்ம தேவர் விவரிக்கிறார். வேறெந்த ஏகாதசியின் மகிமைகளைக் குறிப்பிடும்போதும் இந்த அளவுக்கு துளசியின் பெருமைகளை பிரம்ம தேவர் எடுத்துரைக்கவில்லை. எனவே, தவறாமல் காமிகா ஏகாதசி அன்று துளசி கொண்டு பூஜிக்க வேண்டும்.

    ஏகாதசி விரதமுறை

    ஏகாதசி விரதம் என்பதில் உபவாசம் ஒரு நாள் என்றாலும் விரதமுறை மூன்று நாள்கள் சேர்ந்தது. தசமி திதி அன்றே விரதம் தொடங்கிவிடுகிறது. தசமி திதி அன்று இரவு உணவைத் தவிர்க்க வேண்டும். ஏகாதசி திதி அன்று செய்ய வேண்டிய பூஜைகளுக்காகவும் தீர்த்தத்தில் சேர்ப்பதற்காகவும் வேண்டிய துளசி இலையை தசமி அன்றே பறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஏகாதசி அன்று துளசி இலையைப் பறிப்பது பாவம் என்கின்றது சாஸ்திரம். மறுநாள் ஏகாதசி அன்று நாள் முழுவதும் உபவாசம் இருப்பது உத்தமம். இயலாதவர்கள் முழு அரிசி சோற்றைத் தவிர்த்து ஒரு வேளை உணவு உட்கொள்ளலாம். பழம் அல்லது பால் ஆகியவற்றை பகவானுக்குப் படைத்து உண்ணலாம். ஏகாதசி நாள் முழுவதும் இறைவழிபாட்டிலும் நாம ஜபத்திலுமே செலவிட வேண்டும். துவாதசி அன்று காலை பாரனை முடித்து விரதத்தை முடிக்கலாம்.

    • வட இந்தியாவில் செவ்வாய்க்கிழமையை மங்கலவாரம் என்பார்கள்.
    • மங்கல காரியங்கள், தெய்வ வழிபாடு மேற்கொள்ள இந்நாள் உகந்தது.

    செவ்வாய் என்பது சிவந்த வாய் என்பதின் சுருக்கம். இந்த கிரகத்தின் நிறம் சிவப்பு அதனால் அந்த காலத்தில் ரிஷிகள் இந்த யெரை வைத்தார்கள்.

    வட இந்தியாவில் செவ்வாய்க்கிழமையை மங்கலவாரம் என்பார்கள். இந்த நாளில் பூமி சம்பந்தப்பட்ட காரியங்கள் செய்யலாம். விவசாய வேலைகள் செய்யலாம். மங்கல காரியங்கள், தெய்வ வழிபாடு மேற்கொள்ள இந்நாள் உகந்தது.

    செவ்வாய் முருகனுக்கு உகந்த நாளாகும். இந்த நாளில் விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும். வாழ்வு வளம் பெறும். மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியக் கிழமை வெள்ளிக்கிழமை. இந்த கிழமையில் அம்மனுக்கு விரதம் இருந்தால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.

    இறந்தவர்களை எழுப்பும் சஞ்சீவி மந்திரத்தை கற்ற சுக்கிராச்சாரியார் அம்சம் பெற்றது இந்த கிழமை. சுப காரியங்கள், திருமண காரியங்கள், தெய்வ காரியங்கள் இந்த கிழமையில் செய்வது மிகவும் சிறப்பாகும். இதனால்தான் செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது.

    • ஆவணி ஞாயிறு விரதம் இருந்து பொங்கல் வைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகமாகும்.
    • தமிழ்நாட்டில் பல இடங்களில் சூரிய பகவானுக்கு சிறப்பு ஆலயங்கள் இருக்கின்றன.

    சூரியனுக்கு சிம்மம் ஆட்சி வீடாகும். ஆவணி மாதம் சூரிய பகவான் சிம்ம ராசியில் இருப்பார். அதாவது இந்த மாதம் முழுவதும் சூரியன் தன் சொந்த வீட்டில் இருப்பார். எனவே சூரியனுக்கு உகந்த ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமைகளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் மிகவும் நல்லது என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல இடங்களில் சூரிய பகவானுக்கு சிறப்பு ஆலயங்கள் இருக்கின்றன. இந்த ஆலயங்களில் எல்லாம் ஆவணி மாதங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டதாக குறிப்புகள் உள்ளன.

    பழங்காலத்தில் தமிழர்கள் ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபட்டுள்ளனர். வீட்டின் முன்பு வெட்டவெளியில் புதுபானையில் பொங்கல் வைப்பார்கள். தை மாத பொங்கல் நிகழ்ச்சி போன்றே இந்த பொங்கலும் நடத்தப்படும். எனவே இந்த பொங்கலை ஆவணி ஞாயிறு பொங்கல் என்று அழைத்தனர். ஆவணி ஞாயிறு விரதம் இருந்து பொங்கல் வைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகமாகும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஞாயிறு கிராமம், கொளப்பாக்கம், திருக்கழுக்குன்றம், காஞ்சி கச்சயேஸ்வரர் ஆலயம் ஆகியவற்றில் சூரியனுக்கு சிறப்பான ஆலயமும், சன்னதிகளும் உள்ளன.

    • கிருஷ்ண கமல் பூவால் அர்ப்பணம் செய்ய வேண்டும்.
    • ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும்.

    ஸ்ரீகிருஷ்ண பூஜை செய்வதற்கு முன் வழிபடுவர் நடுவிரலால் விஷ்ணுவைப் போல் இரண்டு நேர் கோடுகளை வரையவும் அல்லது அடர்த்தியான ஒரு நேர் கோட்டை போட்டுக் கொள்ளவும்.

    ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும்.

    கிருஷ்ண கமல் பூவால் அர்ப்பணம் செய்ய வேண்டும்.

    மூன்று அல்லது மூன்றின் பேருக்குத் தொகை எண்ணிக்கை உள்ள பூக்களை அர்ப்பணிக்க வேண்டும்.

    அர்ப்பணம் செய்யும் போது பூவின் காம்பு கிருஷ்ணனை நோக்கியிருக்க வேண்டும்.

    பூக்களை நீள்வட்ட வடிவத்தில் அலங்கரிக்க வேண்டும்.

    சந்தனம், தாழம்பூ, மல்லிகை, மணம் கொண்ட ஊதுபத்தியை உபயோகிக்க வேண்டும்.

    வாசனை திரவியங்களில் சந்தனம் உபயோகிக்க வேண்டும்.

    ஸ்ரீ கிருஷ்ணனை மூன்று முறை அல்லது மூன்றின் பெருக்கல் தொகை எண்ணிக்கை பிரதட்சணம் செய்ய வேண்டும்.

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கணவன், மனைவி இருவரும் தம்பதி சகிதமாகவே விரதம் இருக்க வேண்டும். பகலில் விரதம் இருக்க வேண்டும். இரவில் ஸ்ரீகிருஷ்ணரை பூஜித்து கண் விழித்து இருந்து அவரது வரலாறை கேட்க வேண்டும்.

    மறுநாள் கிருஷ்ணருக்கு மீண்டும் பூஜைகள் செய்து வழிபாடுகள் நடத்தி அன்னதானம் செய்ய வேண்டும். அதன்பிறகு விரதத்தை பூர்த்தி செய்வது மிகவும் சிறந்தது.

    • சுமங்கலிகள் கன்னி தெய்வங்களை வழிபட்டால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும்.
    • கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கைகூடும்.

    ஆடி மாத வளர்பிறைசெவ்வாய் கிழமை அல்லதுவெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் 6 மணிக்கு மேல் வீட்டின் தென்மேற்கு பகுதியில் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த கன்னிப் பெண்களை மனதில் நினைத்து தலை வாழை இலையில் வடை, பாயாசத்துடன் உணவு, சர்க்கரை பொங்கல்,அதிரசம் அல்லது பணியாரம் போன்ற இனிப்பு பண்டங்களை தேங்காய் வெற்றிலை, பாக்கு வாழைப்பழத்துடன் படைக்க வேண்டும்.

    மேலும் இறந்த கன்னியின் வயதுக்கு ஏற்ற உடை(பாவாடை, சட்டை, தாவணி, சேலை ) மஞ்சள் கிழங்கு,கண்ணாடி, சீப்பு, வளையல், பொட்டு, வாசனையான ஜாதி மல்லி, குண்டு மல்லி மரிக்கொழுந்து படைக்க வேண்டும். தீபம் ஏற்ற வேண்டும்.

    போட்டோ வைக்க வேண்டிய அவசியம் இல்லை.சாம்பிராணி மணத்தை வீடு முழுவதும் நிரப்பி கன்னியை பூஜையில் ஆவாகனம் செய்து உங்களின் கோரிக்கைகளை கூற வேண்டும்.

    பிரார்த்தனை பலிதமாக உங்களின் ஆத்மார்த்த ஈடுபாடு மற்றும் வழிபாடு மிக முக்கியம். இதை கூட்டாக பகை மறந்து அங்காளி, பங்காளிகளுடன் இணைந்து வழிபட பலன் இரட்டிப்பாகும். பிறகு பூஜையில் படைத்தஉணவை பயபக்தியுடன் அனைவரும் உண்ண வேண்டும்.

    படைத்த ஆடை மற்றும் மங்கலப் பொருட்களை (மூங்கில் கூடை நார்ப்பெட்டியில்) வைத்துபின்னர் வீட்டின் தென்மேற்கு பகுதியானகன்னி மூலையில் உயரமான இடத்தில் இந்த பெட்டியை வைக்க வேண்டும். முதலாண்டு வைத்து படைத்த கன்னிப் பெட்டியை மறு ஆண்டுதான் எடுக்க வேண்டும்.

    கன்னி பெட்டி உள்ள அறைக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணி தூபம் இடலாம். மறு வருடம் கன்னி வழிபாடு செய்யும் போதுவீட்டை சுத்தம் செய்து விட்டு பெட்டியை திறக்க வேண்டும். பெட்டியை திறந்தவுடன் பூ வாசம்மணக்கும். பூ வாசம் மணந்தால் கன்னி தெய்வம் துடியாக இருப்பதாக நம்பிக்கை. அதற்குள் வைத்திருந்த துணியை குடும்பத்தில் உள்ள நிறைவேறாத பிரார்த்தனை உள்ள பெண்களுக்கு கொடுக்க வேண்டும். இதை பல குடும்பத்தினர் வீட்டு சாமி கும்பிடுதல் என்றும் கூறுவார்கள். இந்த வழிபாட்டை ஆடி மாதங்களில் கடை பிடிக்க முடியாதவர்கள் தை மாதங்களிலும் வழிபடலாம். கன்னி தெய்வத்தை வழிபட வெள்ளிக்கிழமையை விட செவ்வாய்கிழமை தான்ஏற்ற நாள்.

    சுமங்கலிகள் கன்னி தெய்வங்களை வழிபட்டால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும். கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் செய்வினை கோளாறு நீங்கும். பேய் பிசாசு அண்டாது. நோய் நொடிகள் தீர்ந்து விடும். குழந்தைகள் நன்றாக படிப்பார்கள்.

    • சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வணங்குபவர்களுக்கு சந்திர தோஷம் ஏற்படாது.
    • இன்று விநாயகரை விரதம் இருந்து வழிபாடு செய்தால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்..

    சதுர்த்தி தினத்தில் சந்திரனை ஆட்டிப் படைத்தவர் விநாயகப் பெருமான். எனவே சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்து விநாயகரை வணங்குபவர்களுக்கு சந்திர தோஷம் ஏற்படாது என்பது நம்பிக்கை.

    தேய்பிறை சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்று அதாவது நமக்கு ஏற்படக்கூடிய சங்கடங்கள் அனைத்தையும் போக்கும் சதுர்த்தி என்று போற்றுகின்றன ஞானநூல்கள். அன்றைய நாளில் விரதம் இருந்து செய்யும் விநாயகர் வழிபாடு நம் சங்கடங்கள் எல்லாவற்றையும் போக்கும் என்பது நம்பிக்கை. சங்கடஹர சதுர்த்திகளில் தலையாயது மகா சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக வரும் தேய்பிறை சதுர்த்தியையே நாம் மகாசங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கிறோம்.

    இன்று (திங்கட்கிழமை) மகா சங்கடஹர சதுர்த்தி தினமாகும். இன்று விநாயகரைக் கட்டாயம் விரதம் இருந்து வழிபட வேண்டும். ஓராண்டு முழுவதும் வரும் 11 சங்கட ஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து வழிபாடு செய்ய இயலாதவர்கள் இன்று மகா சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருப்பது விசேஷம். அவ்வாறு விரதம் இருந்தாலோ மாலையில் விநாயகரை வழிபட்டாலோ ஓராண்டு முழுவதும் சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும்.

    மகாசங்கடஹர சதுர்த்தி நாளில் செய்யும் விநாயகர் விரத வழிபாடு பல்வேறு வரங்களை வழங்கும். குறிப்பாகக் கடன் பிரச்சினைகளில் திண்டாடுபவர்கள் மகாசங்கடஹர சதுர்த்தி அன்று மாலை சந்திர உதயநேரத்தில் வீட்டிலேயே விநாயகப்பெருமானை நினைத்து ஒரு மலர் சாத்தி விநாயகப் பெருமானுக்குப் பிரியமான விநாயகர் அகவல் போன்ற துதிகளைப் பாடிப் போற்றினால் வீட்டில் வறுமை நீங்கிச் செல்வ வளம் சேரும் என்பது நம்பிக்கை.

    ×