search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாதனை"

    சென்னை பல்கலைக் கழக தடகள போட்டியில் பிருந்தா, ரகுராம் ஆகியோர் புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றனர். #UniversityofMadras #AthleticChampionship
    சென்னை:

    சென்னை பல்கலைக்கழக உடற்கல்வியியல் துறை சார்பில் ஏ.எல்.முதலியார் பொன்விழா நினைவு 51-வது தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. மத்திய அமலாக்கத்துறை உதவி இயக்குனர் டெர்ரான்ஸ் ரோட்ரிஜோ போட்டியை தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் சென்னை பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் வி.மகாதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நாளை வரை நடைபெறும் இந்த போட்டியில் 66 கல்லூரிகளை சேர்ந்த 1,200 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    முதல் நாளான நேற்று 2 புதிய போட்டி சாதனைகள் படைக்கப்பட்டன. பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி வீராங்கனை எம்.பிருந்தா 47.73 மீட்டர் தூரம் எறிந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதற்கு முன்பு 2002-ம் ஆண்டில் எத்திராஜ் வீராங்கனை சாந்தி 46.96 மீட்டர் தூரம் எறிந்ததே சாதனையாக இருந்தது. ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எம்.சி.சி. வீரர் எம்.ரகுராம் 1 நிமிடம் 52.2 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 2016-ம் ஆண்டில் லயோலா கல்லூரி வீரர் வெள்ளையதேவன் 1 நிமிடம் 53.1 வினாடியில் பந்தய தூரத்தை கடந்ததே முந்தைய சாதனையாக இருந்தது. சாதனை படைத்த பிருந்தா, ரகுராம் ஆகியோர் செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியாளர் நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.

    தங்கம் வென்ற வினோதா உயரம் தாண்டிய காட்சி.

    பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எம்.ஐஸ்வர்யாவும், உயரம் தாண்டுதலில் வினோதாவும், டிரிபிள் ஜம்ப்பில் ஆர்.ஐஸ்வர்யாவும், 5 கிலோ மீட்டர் நடைப்பந்தயத்தில் லாவண்யாவும் (4 பேரும் எம்.ஓ.பி.வைஷ்ணவா), 400 மீட்டர் தடை ஓட்டத்தில் திவ்யாவும் (அண்ணா ஆதர்ஷ்), 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சுஷ்மிதாவும் (எஸ்.டி.என்.பி.வைஷ்ணவா) முதலிடம் பிடித்தனர்.

    ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அஜய் தர்மாவும், போல்வால்ட்டில் சந்தோஷ்குமாரும், டிரிபிள்ஜம்ப்பில் அரவிந்தும், 20 கிலோ மீட்டர் நடைப்பந்தயத்தில் வெற்றிவேலும் (4 பேரும் டி.ஜி.வைஷ்ணவா), சங்கிலி குண்டு எறிதலில் முரளிதரனும், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் கெவின் குமார் ராஜூம் (2 பேரும் லயோலா) தங்கம் வென்றனர்.  #UniversityofMadras #AthleticChampionship
    ஷிகர் தவான்- ரோகித் சர்மா ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 210 ரன் குவித்ததன் மூலம் சேசிங்கில் அதிக ரன் எடுத்த இந்திய ஜோடி என்ற சாதனையை படைத்துள்ளது. #Asiyacup2018 #RohitSharma #ShikharDhawan
    ஷிகர் தவான்- ரோகித் சர்மா ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 210 ரன் குவித்தது. இதன் மூலம் சேசிங்கில் தொடக்க விக்கெட்டுகள் அதிக ரன் எடுத்த இந்திய ஜோடி என்ற சாதனையை படைத்தது.

    இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரக ஹேமில்டன் மைதானத்தில் காம்பீர்- ஷேவாக் ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 201 ரன் (அவுட் இல்லை) குவித்ததே சாதனையாக இருந்தது.

    பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த தொடக்க ஜோடி என்ற சாதனையை தவான்- ரோகித் சர்மா படைத்தனர். இதற்கு முன்பு கங்குலியும், தெண்டுல்கரும் தொடக்க ஜோடியாக 1998-ம் ஆண்டு டாக்காவில் 159 ரன் எடுத்ததை அவர்கள் கடந்தனர். ஒட்டு மொத்தத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன் எடுத்த 2-வது ஜோடியாகும்.



    1996-ம் ஆண்டு சார்ஜாவில் 2-வது விக்கெட்டுக்கு சித்துவும், தெண்டுல்கரும் 231 ரன் குவித்ததே சாதனையாக இருந்தது. #Asiyacup2018 #RohitSharma #ShikharDhawan
    இன்றைய சூழலில் உயர் கல்வி என்பது மாணவர்கள் மிகவும் அவசியமானது என்று சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் கூறினார்.
    காரைக்குடி:

    காரைக்குடியில் உள்ள அழகப்பச் செட்டியார் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. முருகப்பா அரங்கில் நடைபெற்ற விழாவிற்கு வந்தவர்களை கல்லூரி முதல்வர் இளங்கோ வரவேற்று பேசினார். விழாவில் சென்னை ஐ.ஐ.டி. மெக்கானிக்கல் துறை பேராசிரியர் ரமேஷ் தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி விழா பேரூரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்றைய சூழலில் மாணவர்களுக்கு உயர்கல்வி என்பது மிகவும் அவசியமானது. தற்போதைய வாழ்க்கை முறையில் சாதிக்க வேண்டும் என்றால் உயர்கல்வி தேவை. மாணவர்கள் நீண்ட தொலைநோக்கு சிந்தனையோடு செயல்பட வேண்டும். எனவே அதற்கான இலக்கை நோக்கியே முன்னேற வேண்டும். முடியும் என்ற முனைப்போடு செயல்பட்டு வெற்றியை காண வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பட்டமளிப்பு விழாவில் 328 பி.இ. மாணவ-மாணவிகளுக்கும், 121 எம்.இ. மாணவ-மாணவிகளுக்கும் பட்டம் வழங்கப்பட்டது. முடிவில் துணை முதல்வர் கணேசன் நன்றி கூறினார். முன்னதாக விழாவில் மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்துகொண்டு பட்டங்களை பெற்றனர். 
    மாநில அளவிலான தடகள போட்டிகளில் சாதனை படைத்த மாணவிகளை கலெக்டர் சாந்தா பாராட்டினார்.
    பெரம்பலூர்:

    சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான இளையோர் தடகள போட்டிகளில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு 4 தங்கப்பதக்கம், 3 வெள்ளிப்பதக்கம், 2 வெண்கலப்பதக்கம் பெற்றுள்ளனர். மேலும் சென்னையில் நடைபெற்ற ரிலையன்ஸ் பவுன்டேசன் மூலம் நடத்தப்பட்ட மாநில அளவிலான தடகளபோட்டிகளில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகள் கலந்துகொண்டு 4 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் மற்றும் சீனியர் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் ரூ.25 ஆயிரத்திற்கான பரிசுத்தொகையும் பெற்று சாதனை படைத்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இதையடுத்து அவர்கள் மாவட்ட கலெக்டர் சாந்தவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இவர்கள் புனித தோமினிக் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தொடர்ந்து வருகிற 15-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற உள்ள தென்னிந்திய அளவிலான தடகளபோட்டிகளில் தமிழக அணி சார்பாக கலந்துகொள்ள உள்ள மாணவிகள் பிரியதர்ஷினி, சுபாஷினி, சங்கீதா, கிருத்திகா, பவானி, நாகபிரியா ஆகியோரும் மாவட்ட கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளையும், பயிற்சியாளர் கோகிலா ஆகியோரை மாவட்ட கலெக்டர் பாராட்டினார். மேலும் தென்னிந்திய அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் மாணவிகள் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். அப்போது மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராமசுப்பிரமணியராஜா உடனிருந்தார். 
    இந்தோனேஷிய ஆசிய விளையாட்டில் இந்தியா மொத்தம் 69 பதக்கங்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. #AsianGames #India
    ஜகர்தா:

    இந்தோனேஷியாவில் இரண்டு வார காலமாக நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டு திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடைசி நாளான இன்று டிரையத்லானில் (நீச்சல், சைக்கிளிங், ஓட்டம் ஆகிய மூன்று போட்டிகள் அடங்கியது) கலப்பு பிரிவு போட்டி மட்டும் நடக்கிறது. இதில் இந்திய தரப்பில் யாரும் இல்லாததால் நமக்குரிய பதக்க வாய்ப்புகள் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.



    இந்த ஆசிய விளையாட்டில் 572 வீரர், வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி பங்கேற்றது. 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என்று மொத்தம் 69 பதக்கங்களை இந்தியா குவித்து பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தை பிடித்துள்ளது. இதில் தடகளம் (7 தங்கம் உள்பட 19 பதக்கம்), துப்பாக்கி சுடுதல் (9 பதக்கம்), ஸ்குவாஷ் (5 பதக்கம்) ஆகிய போட்டிகளில் ஓரளவு ஆதிக்கம் செலுத்திய இந்தியா எதிர்பார்க்கப்பட்ட கபடி, ஆக்கியில் ஜொலிக்கவில்லை.



    இருப்பினும் இதுவே இந்தியாவுக்கு புதிய வரலாற்று சாதனையாக அமைந்துள்ளது. சீனாவில் 2010-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டில் இந்தியா 14 தங்கம் உள்பட 65 பதக்கங்கள் வென்றதே ஒரு ஆசிய விளையாட்டில் இந்தியாவின் அதிகபட்ச பதக்க எண்ணிக்கையாக இருந்தது. அதை விட இப்போது கூடுதலாக 4 பதக்கங்கள் கிடைத்துள்ளது. அத்துடன் 1951-ம் ஆண்டு நடந்த முதலாவது ஆசிய விளையாட்டில் 15 தங்கம் வென்றதே, ஒரு ஆசிய விளையாட்டில் இந்தியாவின் அதிகபட்ச தங்கவேட்டையாக இருந்தது. அது தற்போது சமன் செய்யப்பட்டு இருக்கிறது.

    வழக்கம் போல் பதக்கப்பட்டியலில் சீனா முதலிடத்தை (132 தங்கம் உள்பட 289 பதக்கம்) ஆக்கிரமித்துள்ளது. ஆச்சரியம் அளிக்கும் வகையில் போட்டியை நடத்திய இந்தோனேஷியா 31 தங்கம் உள்பட 98 பதக்கங்களை அள்ளியுள்ளது. போட்டியையும் வெற்றிகரமாக நடத்தியிருப்பதால் 2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு உரிமம் கோரப்போவதாக இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ உற்சாகமாக அறிவித்து இருக்கிறார்.

    ஆசிய விளையாட்டு போட்டியின் கோலாகலமான நிறைவு விழா ஜகர்தாவில் உள்ள ஜி.பி.கே. ஸ்டேடியத்தில் இன்று அரங்கேறுகிறது. கண்கவர் கலை நிகழ்ச்சிகள், நடனம், இசை, பாடல் உள்ளிட்டவையுடன் பிரமிக்கத்தக்க வாணவேடிக்கைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நிறைவு விழா அணிவகுப்பில் பங்கேற்கும் இந்திய அணிக்கு, வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய பெண்கள் ஆக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்கிறார். இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் நிறைவு விழாவை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 
    ஜப்பான் நீச்சல் வீராங்கனை ரிகாகோ, ஆசிய விளையாட்டில் நீச்சலில் 6 தங்கம் வென்ற முதல் நபர் என்ற மகத்தான சாதனையை படைத்திருக்கிறார். #AsianGames2018
    ஜகர்தா:

    18-வது ஆசிய விளையாட்டில் ஜப்பான் நீச்சல் வீராங்கனை 18 வயதான ரிகாகோ இகீ, நீச்சல் குளத்திற்குள் பாய்ந்தால் பதக்கத்தோடு தான் வெளியே வருகிறார். 50 மீட்டர், 100 மீட்டர் பட்டர்பிளை, 50 மீட்டர், 100 மீட்டர் பிரிஸ்டைல், 4 x 100 மீட்டர் மெட்லே தொடர் நீச்சல், 4x 100 மீட்டர் பிரிஸ்டைல் தொடர் நீச்சல் என்று 6 தங்கப்பதக்கங்களை அள்ளியிருக்கிறார். இதன் மூலம் ஒரு ஆசிய விளையாட்டில் நீச்சலில் 6 தங்கம் வென்ற முதல் நபர் என்ற மகத்தான சாதனையை படைத்திருக்கிறார்.

    நடப்பு ஆசிய விளையாட்டில் நீச்சலில் மட்டும் ஜப்பான் 19 தங்கம் உள்பட 52 பதக்கம் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    வடகொரிய துப்பாக்கி சுடுதல் வீரர் சோ ஜின்-மான் 1982-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் 7 தங்கம் வென்றிருந்தார். ஒரு ஆசிய விளையாட்டில் அதிக தங்கம் வென்ற சாதனையாளராக அவர் நீடிக்கிறார். #AsianGames2018
    கேரள மீட்பு பணியில் இதுவரை இல்லாத வகையில் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 58 அணியினரும் களம் இறங்கி மழை, வெள்ள மீட்பு, நிவாரண பணியில் மிகப்பெரிய அளவில் ஈடுபட்டு சாதனை படைத்து வருகின்றனர். #NDRF #KeralaFlood
    புதுடெல்லி:

    தேசிய பேரிடர் மீட்பு படை 2006-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 58 அணிகளை கொண்டு உள்ளது. இதுவரை இல்லாத வகையில் இந்த படையினர் கேரளாவில் மழை, வெள்ள மீட்பு, நிவாரண பணியில் மிகப்பெரிய அளவில் ஈடுபட்டு சாதனை படைத்து வருகின்றனர்.



    எந்த ஒரு மாநிலத்திலும் எந்தவொரு இயற்கை பேரிடரிலும் தேசிய பேரிடர் மீட்பு படையின் அத்தனை அணியினரும் களம் இறங்கியது கிடையாது. ஆனால் கேரளாவில் 55 அணிகள் களத்தில் உள்ளன. எஞ்சிய 3 அணிகளும் அங்கு விரைகின்றன. ஒவ்வொரு அணியிலும் சுமார் 40 வீரர்கள் இடம் பெற்று உள்ளனர்.



    கேரளாவில் இந்தப் படையின் மீட்பு பணி பற்றி அதன் செய்தி தொடர்பாளர் நேற்று கூறும்போது, “இதுவரை வெள்ள பாதிப்பில் இருந்து 194 பேர் எங்கள் படையினரால் மீட்கப்பட்டு உள்ளனர். 12 விலங்குகளும் மீட்கப்பட்டன. 10 ஆயிரத்து 467 பேர் வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளனர். 159 பேருக்கு ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்கு முந்தைய மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு உள்ளன” என்று குறிப்பிட்டார்.

    டெல்லியில் உள்ள கட்டுப்பாட்டு அறை, கேரளாவில் நடைபெற்று வருகிற மீட்பு, நிவாரண பணியினை இரவு, பகலாக கண்காணித்து வருகிறது.  #NDRF #KeralaFlood
    சி.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் ஜமைக்கா கேப்டனும், ஆல்-ரவுண்டருமான ஆந்த்ரே ரஸ்செல் கடைசி ஓவரில் வரிசையாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். #AndreRussell
    போர்ட் ஆப் ஸ்பெயின்:

    ஐ.பி.எல். பாணியில் கரீபியன் பிரிமியர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் டிரின்பகோ நைட் ரைடர்ஸ்-ஜமைக்கா தலவாஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டிரின்பகோ அணி 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. காலின் முன்ரோ (61 ரன், 42 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), பிரன்டன் மெக்கல்லம் (56 ரன், 27 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) அரைசதம் விளாசினர். ஜமைக்கா கேப்டனும், ஆல்-ரவுண்டருமான ஆந்த்ரே ரஸ்செல் கடைசி ஓவரில் வரிசையாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.

    பின்னர் இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய ஜமைக்கா அணி 41 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. இதைத் தொடர்ந்து இறங்கிய கேப்டன் ஆந்த்ரே ரஸ்செல், முதல் பந்தில் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை அலிகான் கோட்டை விட்டார். அதன் பிறகு ருத்ர தாண்டவமாடிய ரஸ்செல் சிக்சர் மழை பொழிந்து மிரள வைத்தார். 40 பந்துகளில் சதத்தை எட்டிய அவர் சி.பி.எல். தொடரில் அதிவேகமாக சதம் அடித்தவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார். அவருக்கு கென்னர் லீவிஸ் (51 ரன்) ஒத்துழைப்பு கொடுத்தார். ஜமைக்கா தலவாஸ் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரஸ்செல் 121 ரன்களுடன் (49 பந்து, 6 பவுண்டரி, 13 சிக்சர்) களத்தில் இருந்தார்.

    20 ஓவர் போட்டி வரலாற்றில் ஒரே ஆட்டத்தில் ‘ஹாட்ரிக்’ விக்கெட்டுடன் சதத்தை சுவைத்த 2-வது வீரர் என்ற பெருமையை 30 வயதான ரஸ்செல் பெற்றார். இதற்கு முன்பு இங்கிலாந்தை சேர்ந்த ஜோ டென்லி, உள்நாட்டில் நடந்த 20 ஓவர் கிரிக்கெட்டில் கென்ட் அணிக்காக கடந்த மாதம் இச்சாதனையை செய்திருந்தார். 
    அமெரிக்காவில் சிப்பி வகை மீன் உணவு சாப்பிடும் போட்டியில் 8 நிமிடத்தில் 40 டஜன் அதாவது 480 சிப்பி மீன்களை சாப்பிட்டு விரிஜீனியா மாகாணத்தை சேர்ந்தவர் சாதனை படைத்தார்.
    நியூயார்க்:

    அமெரிக்காவில் நியூ ஒர்லியன்ஸ் நகரில் சிப்பி வகை மீன் உணவு சாப்பிடும் போட்டி நடைபெற்றது. அதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இறுதிப் போட்டிக்கு அவர்களில் 7 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டனர்.

    தெற்கு லூசியானாவில் இருந்து 4 ஆயிரம் சிப்பி மீன்கள் கொண்டு வரப்பட்டு நன்றாக பொரித்து வைக்கப்பட்டிருந்தன. இத்துடன் சேர்ந்து சாப்பிட பீர், மற்றும் பிற பானங்கள் வைக்கப்பட்டிருந்தன.


    போட்டி தொடங்கியதும் அதில் பங்கேற்றவர்கள் ஆர்வத்துடன் சாப்பிட தொடங்கினர். அவர்களில் விரிஜீனியா மாகாணத்தை சேர்ந்த டேரன் பிரீடன் வெற்றி பெற்றார். அவர் 8 நிமிடத்தில் 40 டஜன் அதாவது 480 சிப்பி மீன்களை சாப்பிட்டு சாதனை படைத்தார்.

    அவருக்கு அடுத்தப்படியாக 156 சிப்பி மீன்களை சாப்பிட்ட மைக்கேல் லெஸ்கோ 2-வது இடம் பிடித்தார். இவர் அரிசோனாவை சேர்ந்தவர். இந்த போட்டி நடுவர்கள் மத்தியில் நடைபெற்றது. போட்டியில் வென்ற டேரன் பிரீடனுக்கு உலக சிப்பி மீன் சாப்பாட்டு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது. #Tamilnews
    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜ் சர்வதேச டி20 போட்டிகளில் 2000 ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். #MithaliRaj #FirstIndianWomanCricketer #2KT20IRuns #BCCI

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனையான மிதாலி ராஜ், இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டனாக இருந்து வருகிறார். இவர், அனைத்துக் காலத்திற்குமான சிறந்த மகளிர் பேட்ஸ்மேன்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். 

    ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த முதல் பெண் எனும் சாதனையைப் படைத்துள்ளார். இவர் ஒருநாள் போட்டிகளில் 6,000 ஓட்டங்கள் எடுத்த முதல் வீராங்கனை ஆவார். ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக ஏழு முறை அரைசதம் அடித்த முதல் வீராங்கனை ஆவார். மேலும் அதிகமுறை 50 ஓட்டங்கள் எடுத்த வீராங்கனை எனும் சாதனைகளைப் படைத்துள்ளார்.

    இந்நிலையில், மிதாலி ராஜ் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இன்று இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற மகளிர் ஆகிய கோப்பை லீக் போட்டியில் மிதாலி ராஜ் 23 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மிதாலி ராஜ் படைத்துள்ளார். இதுவரை 73 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2 ஆயிரம் ரன்கள் எடுத்துள்ளார்.



    இந்த பட்டியலில், சார்லட் எட்வர்ட்ஸ் (இங்கிலாந்து) 2,605 ரன்கள், ஸ்டெபானி டெய்லர் (வெஸ்ட்இண்டீஸ்) 2,582 ரன்கள் ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். இதுதவிர இன்னும் 5 வீராங்கனைகள் 2000 ரன்களை கடந்துள்ளனர். சர்வதேச அளவில் 2 ஆயிரம் ரன்களை கடந்த 7வது வீராங்கனை மிதாலி ராஜ் ஆவார். #MithaliRaj #FirstIndianWomanCricketer #2KT20IRuns #BCCI
    சென்னை துறைமுகம் கடந்த 13-ந்தேதி ‘எம்.வி. லேடி செலின்’ என்கிற கப்பலில் இருந்து 4 ஆயிரத்து 257 டன் சரக்குகளை ஒரே நாளில் இறக்குமதி செய்து சாதனை படைத்து உள்ளது.#chennaiharbor
    சென்னை:

    சென்னை துறைமுக சபை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை துறைமுகம் கடந்த 13-ந்தேதி ‘எம்.வி. லேடி செலின்’ என்கிற கப்பலில் இருந்து 4 ஆயிரத்து 257 டன் சரக்குகளை ஒரே நாளில் இறக்குமதி செய்து சாதனை படைத்து உள்ளது.

    இதற்கு முன்பாக கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ந்தேதி ‘எம்.வி.ஒயின் ஷன்’ என்ற கப்பலில் இருந்து ஒரே நாளில் 3 ஆயிரத்து 531 டன் சரக்கு இறக்குமதி செய்தது சாதனையாக இருந்தது.

    தற்போதைய சாதனைக்கு காரணமான, கப்பலில் இருந்து சரக்குகளை இறக்குமதி செய்த பெல் நிறுவனத்துக்கும், சரக்கு இறக்கும் ஊழியர்களுக்கும் துறைமுக சபை தலைவர் ரவீந்திரன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #chennaiharbor
    ×