search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீவிபத்து"

    நல்லூரில் அடுக்குமாடி குடியிருப்பில் மின்கசிவு காரணமாக நிகழ்ந்த தீ விபத்தில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.
    நல்லூர்:

    திருப்பூர்-காங்கேயம் ரோடு ராக்கியாபாளையம் பகுதியில் ஜெய்நகர் 4-வது வீதியில் உள்ள கணபதி அவென்யூ அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது மாடியில் வசித்து வருபவர் கந்தசாமி (வயது 40). இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் நாச்சிபாளையத்தில் நடைபெறும் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் இவரது வீட்டின் சமையல் அறையில் தீவிபத்து ஏற்பட்டு புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இது பற்றி கந்தசாமிக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அவர் வீட்டிற்கு விரைந்து வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தனர். பின்னர் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    இது குறித்து திருப்பூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல்தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்தனர். அதற்குள் அங்கு வந்த கந்தசாமி வீட்டை திறந்து உள்ளே சென்றுபார்த்த போது மிக்சியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு அங்கு இருந்த பொருட்கள் தீப்பிடித்தது தெரியவந்தது. உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தார். இதில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன. 
    வாலாஜா அருகே தனியாருக்கு சொந்தமான ஊதுபத்தி கம்பெனியில் அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாயின.
    வாலாஜா:

    வாலாஜா அடுத்த வன்னிவேடு மோட்டூர் ஆற்காடு தெற்கு தெருவில் தனியாருக்கு சொந்தமான ஊதுபத்தி கம்பெனி கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

    இதில் ஆண்கள், பெண்கள் என 200க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று ஊதுபத்தி கம்பெனி திறக்கப்பட்டு மாலை வழக்கம் போல் பணிகள் முடிந்து மூடிவிட்டு சென்றனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை ஊதுபத்தி கம்பெனியின் ஏ பிளாக் பிரிவில் திடீரென தீபிடித்தது. பற்றி எரிந்த தீ அறை முழுவதும் பரவியது. கம்பெனியில் இருந்து கரும்புகை வெளியில் வந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர். அதற்குள் ஊதுபத்தி கம்பெனி முழுவதும் தீ வேகமாக பரவியது. ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு தீயணைப்பு நிலையத்தில் இருந்து மேலும் 2 தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீயை போராடி அணைத்தனர். தீயால் பாதிப்படைந்த ஊதுபத்தி கம்பெனி சுவர் இடிக்கப்பட்டது.

    இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தயார் செய்யப்பட்ட நிலையில் இருந்த ஊதுபத்தி மற்றும் மூலப்பொருட்கள் எரிந்து நாசமாகின. தீ விபத்து விடியற்காலையில் ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜா போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். #Tamilnews
    எண்ணூர் காசி விஸ்வநாதர் கோவில் குப்பம் விரிவாக்கம் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 60 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல் ஆயின.
    திருவொற்றியூர்:

    எண்ணூர் காசி விஸ்வநாதர் கோவில் குப்பம் விரிவாக்கம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இங்கு ஆந்திராவை சேர்ந்த ஏராளமான கட்டுமான தொழிலாளர்கள் தங்கி உள்ளனர்.

    இன்று காலை பூட்டி இருந்த ஒரு வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் வீடு முழுவதும் தீப்பற்றியது. காற்றின் வேகத்தில் அருகில் இருந்த மற்ற குடிசைகளுக்கும் தீ பரவியது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவொற்றியூர், எண்ணூர், மணலி பகுதிகளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

    அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டதால் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைக்க முடியவில்லை. சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் 60 குடிசைகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

    வீடுகளில் இருந்த கட்டில், பீரோ, பணம், நகை அனைத்தும் நாசமானது. இதனை கண்டு பெண்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    தீவிபத்து பற்றி அறிந்ததும் சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், திருவொற்றியூர் மேற்கு பகுதி தி.மு.க. செயலாளர் கே.பி.சங்கர், அ.தி.மு.க. பகுதி செயலாளர் கிருஷ்ணன், தாசில்தார் ராஜ்குமார் மற்றும் வருவாய்த்துறை, மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்கள் தீவிபத்தால் பாதிக்கப்பட்டவர்களுககு ஆறுதல் கூறினர். #Tamilnews
    மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் உள்ள பட்டேல் சேம்பர்ஸ் கட்டிடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர். #MumbaiPatelChambers #fireaccident
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகர் மும்பை மிகப்பெரிய தொழில்நகரம் ஆகும். இங்குள்ள துறைமுகம் அருகில் உள்ள பட்டேல் சேம்பர்ஸ் என்ற கட்டிடத்தில் இன்று அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயானது சற்று நேரத்தில் கட்டிடம் முழுவதும் பரவி அனைத்து இடங்களும் வேகமாக எரியத்துவங்கின.

    தகவல் அறிந்து முதற்கட்டமாக 12 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரரகள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வெகு நேரமாக போராடியும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. தீயும் வேகமாக அடுத்தடுத்த அறைகளுக்கு பரவி எரியத்துவங்கியது.



    இதையடுத்து, கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென அந்த கட்டிடத்தின் முன்பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதில் 2 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர்.

    பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தீயணைப்புத்துறை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

    மேலும், தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும், தீயினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் விசாரணைக்கு பிறகே தெரியவரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

    நாட்டின் முக்கிய தொழில் நகரமான மும்பையில் இதுபோன்ற தீவிபத்துக்கள் சமீபத்தில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மகாராஷ்டிரா அரசு கவனம் செலுத்தி உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். #MumbaiPatelChambers #fireaccident
    சேலம் அருகே இன்று டிரான்ஸ்பார்மரில் பயங்கர தீ விபத்து பெரும் விபத்து ஏற்பட்டது. உரிய நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கே.ஆர்.தோப்பூரில் மத்திய அரசுக்கு சொந்தமான ‘பவர் கிரிப்ட்’ உள்ளது. இதேப்போல் அப்பகுதியில் தமிழ்நாடு மின்பகிர்மான வட்டத்திற்கு சொந்தமான ‘பவர்ஹவுஸ்’ உள்ளது.

    இந்த துணை மின்நிலையத்திற்கு மேட்டூர் அனல் மின்நிலையம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி பவர் ஸ்டேசன் ஆகிய இடங்களில் இருந்து டவர்கள் மூலம் உயர் அழுத்த மின்சாரம் கொண்டு வந்து சேமித்து வைத்து சேலம் மாநகரின் சில பகுதிகளுக்கும் கே.ஆர்.தோப்பூர், தாரமங்கலம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கும் மின்விநியோகம் செய்யப்படுகிறது.

    இந்த துணை மின்நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மர்களில் ஒன்று சில நாட்களுக்கு முன்பு பழுதானது. இதனால் கடந்த ஒருவாரகாலமாக பராமரிப்புப்பணி மேற்கொள்ளப்பட்டு பழுதடைந்த டிரான்ஸ்பார்மர் சரி செய்யப்பட்டது. நேற்று மாலை முதல் டிரான்ஸ்பார்மர் இயக்கப்பட்டது. இன்று காலை 8.30 மணி அளவில் இந்த டிரான்ஸ்பார்ம் திடீரென தீப்பிடித்து குபு, குபுவென கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்தது.

    இதனை தொடர்ந்து துணைமின்நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் மின் விநியோகம் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டது. தீ விபத்து குறித்து இரும்பாலை, ஓமலூர், சூரமங்கலம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் 5 வாகனங்களில் கொண்டு வந்த தண்ணீரை டிரான்ஸ்பார்மரில் பீய்ச்சி அடித்து தீ முழுவதையும் அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இங்கிருந்து சற்று தொலைவில் தான் தமிழக மின்வாரிய ஊழியர்களுடைய குடியிருப்புகள் உள்ளன. இங்கு செயற் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் பலர் குடும்பத்துடன் தங்கி இருக்கிறார்கள். டிரான்ஸ் பார்மர் தீப்பிடித்து எரிவதை அறிந்தவுடன் அவர்கள் வெடித்து விடுமோ? என பீதி அடைந்தனர். இந்த டிரான்ஸ்பார்மரின் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும். இது வெடித்து இருந்தால் பெரிய அளவில் விபத்து நேரிட்டு இருக்கும். ஏனெனில் இதன் பக்கத்தில் ஏராளமான டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன. மேலும் அருகில் மத்திய அரசுக்கு சொந்தமான பவர் கிரிப்ட் மற்றும் மின்வாரிய குடியிருப்புகள் உள்ளது. உரிய நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். #Tamilnews
    தனியார் வங்கி இன்சூரன்ஸ் அலுவலகத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின. தீயை அணைக்க வீரர்கள் தீவிர பணியில் ஈடுபட்டனர்.
    மதுரை:

    மதுரை கே.கே.நகர் 100 அடி ரோட்டில் பிரபல வணிக வளாகம் அருகே உள்ள கட்டிடத்தில் 2-வது மாடியில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் இன்சூரன்ஸ் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகத்தில் இன்று காலை 8 மணியளவில் தீப்பிடித்தது. இதனால் பெரிய அளவில் கரும்புகை வெளியேறியது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக 3 வண்டிகளில் வந்த தீயணைப்பு படையினர் ராட்சத ஏணியை பயன்படுத்தி 2-வது மாடிக்கு சென்று தண்ணீரை பீய்ச்சி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் நேரம், ஆக... ஆக... அங்குள்ள அலுவலகம் முழுவதும் தீப்பிடித்ததால் கரும்புகை சூழ்ந்தது. இதனால் தீயை அணைப்பதிலும் சிரமம் ஏற்பட்டது. ஆனாலும் 30-க்கும் மேற்பட்ட தீயணைக்கும் வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    ஆனாலும் புகை மண்டலம் இன்னும் இருப்பதால் தொடர்ந்து தீயணைப்பு படையினர் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த தீ விபத்து காரணமாக இன்சூரன்ஸ் அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், டேபிள், சேர் உள்ளிட்ட பர்னிச்சர் வகைகள் தீயில் எரிந்து சாம்பலாயின. இதுதொடர்பாக அண்ணாநகர் போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.


    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காலை நேரம் என்பதால் அலுவலகத்தில் பணியாளர்கள் யாரும் இல்லை. இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

    2 மணி நேரமாக தீ பிடித்ததால் அங்குள்ள சேத மதிப்பு இன்னும் மதிப்பிடப்படவில்லை. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் உள்ள கட்டிடம் தீ பிடித்து எரிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    பொதுமக்களும் ஏராளமானோர் திரண்டு தீயை அணைக்கும் பணிக்கு உதவினர். தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. #Tamilnews
    துபாய் மரினா பகுதியில் உள்ள 15 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயில் சிக்கிய அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
    துபாய்:

    துபாயின் மரினா பகுதியில் ஜென் டவர் என்ற 15 மாடி கொண்ட குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இதில் தரைத் தளத்தில் ஓட்டல்கள், கிளினிக் உள்பட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் இயங்கி வருகிறது.

    இந்த கட்டிடத்தில் ஆசிய நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புகளின் உள்ளே 3 முதல் 5 படுக்கையறை கொண்ட வீடுகள் உள்ளது. நேற்று காலை சுமார் 10 மணியளவில் இந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள குடியிருப்பில் திடீரென்று தீப்பிடித்தது.

    ஏற்கனவே அந்த பகுதியில் அதிவேகத்துடன் புழுதிக்காற்று வீசிக்கொண்டிருந்தது. இதன் காரணமாக கட்டிடம் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. அப்போது புகை அதிகமாக வெளிவந்ததால் அந்த கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த புகை உணரும் கருவியில் அலாரம் ஒலித்தது.

    இதனால் விபரீதத்தை உணர்ந்த குடியிருப்பில் வசித்தவர்கள் தீயில் இருந்து தப்பிக்க அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். கட்டிடம் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால் அதில் வசித்து வந்தவர்கள் பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு உயிர்பிழைத்தால் போதும் என அவசர அவசரமாக கீழே இறங்கினர்.

    ஆனால் கீழ் தளங்கள் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால் மேல் தளங்களில் வசித்து வந்தவர்கள் கீழே இறங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தங்களை காப்பாற்றுமாறு மரண ஓலமிட்டனர்.

    தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சில நிமிடங்களில் ஜென் டவர் கட்டிடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து தீயணைப்புத்துறை வீரர்கள் கவச உடைகளை அணிந்து கட்டிடத்திற்குள் சென்றனர்.

    முதற்கட்டமாக அந்த கட்டிடத்தின் உள்ளே புகையால் மூச்சு திணறி உயிருக்கு போராடி கொண்டு இருந்தவர்களை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். தொடர்ந்து கட்டிடத்தில் சிக்கிய அனைவரையும் பத்திரமாக மீட்டனர். அவர்கள் அனைவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் கிரேன் மூலம் உயரமான பகுதியில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்த தீயை 45 நிமிடங்கள் கடுமையாக போராடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அவசர உதவிக்கான வாகனங்கள் அந்த இடத்தில் குவிக்கப்பட்டது.

    இந்த விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் போலீசார் தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் அருகில் உள்ள சாலைகளில் போக்குவரத்தை நிறுத்தினர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறை பொது இயக்குனர் ராஷித் தாணி அல் மட்ரூஷி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

    இந்த தீவிபத்து காரணமாக ஷேக் ஜாயித் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பயங்கர தீ விபத்தில் அந்த கட்டிடத்தின் 5 மாடிகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. 10 மாடிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. அந்த கட்டிடத்தில் வசித்து வந்தவர்களின் உடைமைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகின.

    அந்த குடியிருப்பில் வசித்தவர்களை துபாய் போலீசார் சிறப்பு பஸ்சில் அழைத்து செல்லப்பட்டு, துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டி பகுதியில் உள்ள கயா கிராண்ட் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீவிபத்து மின்கசிவினால் ஏற்பட்டு இருக்கலாம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இருப்பினும் போலீசாரின் முழுமையான விசாரணைக்கு பிறகுதான் தீ விபத்துக்கான காரணம் குறித்து தெரிய வரும்.

    வாரத்தின் முதல் நாள் என்பதால் அந்த கட்டிடத்தில் வசித்தவர்களில் பலர் அலுவலகங்களுக்கு சென்று விட்டனர். இதனால் பெரும் உயிரிழப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.  #Tamilnews
    ×