search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97757"

    சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில், பெண்களின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தி, கேரளாவில் நாளை மாலை 4 மணிக்கு பெண்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறார்கள். #Sabarimalai #AyyappaTemple
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில், பெண்களின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தி, கேரளாவில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு பெண்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறார்கள். ‘பெண்கள் சுவர்’ எனப்படும் இப்போராட்டம், கேரளாவின் வட எல்லையான காசர்கோடில் தொடங்கி, தலைநகர் திருவனந்தபுரம் வரை நடக்கிறது.

    மேற்கண்ட 620 கி.மீ. தூரத்துக்கு பெண்கள் மனித சங்கிலியாக நிற்க உள்ளனர்.

    நடிகை சுகாசினி, ஒவ்வொரு பெண்ணும் இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். மேலும், நடிகைகள் பார்வதி திருவோத், ரீமா கலிங்கல், கீது மோகன்தாஸ், ரம்யா நம்பீசன் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். #Sabarimalai #AyyappaTemple

    அரியானாவில் இருந்து கேரளாவுக்கு லாரியில் எரிசாராயம் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியில் நாமக்கல் மாவட்ட மது விலக்கு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் செந்தில் மேற்பார்வையில் திருவள்ளூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ரகசிய தகவலின் அடிப்படையில் ஆந்திரா வழியாக சென்னை நோக்கி வந்த குறிப்பிட்ட சரக்கு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் 338 பிளாஸ்டிக் கேன்களில் 11 ஆயிரத்து 830 லிட்டர் எரி சாராயம் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. அரியானாவில் இருந்து கடத்தி வந்த எரிசாராயம் சென்னை வழியாக கேரளாவுக்கு கொண்டு செல்ல இருந்ததாக லாரியில் இருந்த 3 பேரும் தெரிவித்தனர்.

    மேலும் சென்னை போரூர் சுங்கச்சாவடி வரை சென்றதும் அங்கிருந்து மதுரவாயலை சேர்ந்த பாபு என்கிற ரமேஷ் என்பவரின் வழிகாட்டுதலின்படி ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அந்த லாரி செல்ல இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து லாரி டிரைவர் திண்டிவனத்தை சேர்ந்த ரமேஷ், கிளீனராக இருந்த மேல்மலையனூர் முருகன், மாமண்டூர் சங்கர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் போலீசாரிடம் கூறும்போது, டெல்லியில் இருந்து இவ்வாறு எரிசாராயம் தொடர்ந்து திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களின் வழியே கடத்தப்பட்டு வருவதாகவும், இதே போல மற்றொரு லாரி சுமார் 6 மணி நேரம் கழித்து டெல்லியில் இருந்து புறப்பட்டதாகவும், அந்த லாரி எந்த வழியில் தமிழ்நாட்டிற்குள் வருகிறது என்பது தங்களுக்கு தெரியவில்லை என்றும் தெரிவித்தனர்.

    தமிழகத்தில் கள்ள சாராயத்தால் ஏற்பட்ட பல உயிரிழப்புகளுக்கு பின்னணியில் இந்த கும்பல் தொடர்ந்து இருந்து வருவது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    எரிசாராயம் கடத்திவரும் மற்றொரு லாரியை பிடிக்கும் வகையில் வேலூர், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளையும் தற்போது போலீசார் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து உள்ளனர்.

    இது தவிர ஆந்திர மாநிலம் நெல்லூரில், தமிழக போலீசார் மாறு வேடத்தில் முகாமிட்டு வடமாநிலத்தில் இருந்து அப்பகுதியை கடந்து தமிழக எல்லை பகுதிக்குள் நுழையும் எரிசாராய கடத்தல் லாரிகள் குறித்து ரகசியமாக தகவல்களை சேகரித்து வருகிறார்கள்.

    கேரளாவில் லாரியின் தார்பாய் கயிறு மொபட்டில் சிக்கி இளம் பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் பறாசாலை அடுத்துள்ள கொளத்தூரில் உள்ளது தும்புக்கல் லட்சம் வீடு காலனி. இந்த பகுதியை சேர்ந்தவர் அனிதா (வயது 32). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தார்.

    தனது சொந்த உழைப்பு மற்றும் கடன் வாங்கி அதே பகுதியில் புதுவீடு கட்டினார். புதுமனை புகு விழா அடுத்த வாரம் நடத்த இருந்தது. பல்வேறு வேலைக்கு செல்லும் அனிதா டாக்டர், வக்கீல்கள் வீடுகளுக்கு வீட்டு வேலைக்கு சென்று வந்தார்.

    நேற்று மொபட்டில் கரமனா என்ற பகுதியில் உள்ள டாக்டர் வீட்டுக்கு வேலைக்கு சென்றார். வேலை முடிந்ததும் வீட்டுக்கு புறப்பட்டார். அங்குள்ள பாலத்தில் சென்றபோது முன்னாள் திருச்சியில் இருந்து சரக்கு ஏற்றிய லாரி சென்றது.

    திடீரென லாரியின் தார்பாயில் கட்டியிருந்த கயிறு அவிழ்ந்தது. அவிழ்ந்த கயிறு அனிதா ஓட்டி வந்த மொபட்டின் கிக்கரில் சிக்கியது. அதிர்ச்சியடைந்த அனிதா சத்தம்போட்டார். அதற்குள் கயிறு இறுக்கி அங்குள்ள தடுப்பு சுவரில் மொபட் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அனிதா ரத்தவெள்ளத்தில் விழுந்தார்.

    அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து லாரியை நிறுத்தி அனிதாவை மீட்டனர். அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    பலியான அனிதாவுக்கு அங்கீதா, சமியா என்ற மகள்களும், அனுப் என்ற மகனும் உள்ளனர்.

    கணவரை பிரிந்தாலும் உழைத்து கவுரவமாக வாழ வேண்டும் என்ற வைராக்கியத்துடன் 3 குழந்தைகளை படிக்க வைத்து புதுவீடு கட்டி வந்தார். அனிதாவின் இந்த திடீர் மரணம் துரதிஷ்டவசமானது என்று அந்த பகுதிமக்கள் கூறினர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த திருச்சியை சேர்ந்த டிரைவர் சக்ரவர்த்தியை கைது செய்து அவர் மீது மனப்பூர்வ மற்ற கொலை என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தமிழகத்தைச் சேர்ந்த பெண் பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு செல்ல உள்ளதாக கருதி ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #Sabarimala #AyyappaDevotees
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக திறந்துள்ளது. இதனால் சபரிமலைக்கு திரளான ஐயப்ப பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் சபரிமலையில் இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலையே இதுவரை நிலவுகிறது. சபரிமலை செல்லும் இளம்பெண்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகிறார்கள்.

    இதனால் சபரிமலையில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கேரளாவில் தமிழக பெண் பக்தர்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கொல்லம் அருகே புனலூரில் பிரசித்தி பெற்ற ஆரியங்காவு அச்சன்கோவில் என்ற ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். பெண் பக்தர்களும் சென்று வழிபாடு நடத்துவது வழக்கம்.

    சபரிமலை செல்லும் பக்தர்களும் இந்த கோவிலுக்குச் சென்றுவிட்டு சபரிமலை செல்வார்கள். தற்போது சபரிமலை கோவில் நடைதிறந்து உள்ளதால் அச்சன் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் பக்தர்கள் 27 பேர் வேன் மூலம் ஆரியங்காவு அச்சன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் சிவப்பு சேலை அணிந்து அந்த கோவிலுக்குச் சென்றனர். அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்ததும் ஐயப்ப பக்தர்கள் அங்கு திரண்டு தமிழக பெண் பக்தர்களை முற்றுகையிட்டு கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலுக்கு அந்த பெண்கள் சாமி தரிசனத்திற்கு செல்ல உள்ளதாக கருதி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரும் விரைந்துச் சென்று ஐயப்ப பக்தர்களை சமரசப்படுத்தினார்கள்.

    தமிழக பெண் பக்தர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது தாங்கள் சபரிமலை செல்லவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். கேரளாவில் உள்ள முக்கிய கோவில்களான அச்சன் கோவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில், சோட்டானிகரை பகவதி அம்மன் கோவில் போன்ற ஆன்மீக தலங்களுக்கு தான் செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

    அதன் பிறகு சமாதானம் அடைந்த ஐயப்ப பக்தர்கள் தமிழக பெண்பக்தர்கள் அங்கிருந்து செல்ல அனுமதித்தனர்.

    இதுபற்றி தமிழக பெண் பக்தர்கள் கூறும்போது, நாங்கள் சபரிமலை கோவிலின் ஆச்சாரத்தை மதிப்பதாகவும், தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் பலர் சபரிமலைச் சென்று உள்ளதாகவும் தெரிவித்தனர்.  #Sabarimala #AyyappaDevotees


    பிரதமர் மோடி அடுத்த மாதம் கேரளா வரும்போது கட்சியை வலுப்படுத்தும் வகையில் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்தித்து பேச உள்ளதாக அம்மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை தெரிவித்தார். #PMModi #BJP
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.

    அங்கு கம்யூனிஸ்டு கட்சிக்கு பலமான போட்டியாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது. பா.ஜனதா கட்சியும் கேரள அரசியலில் முக்கிய இடம் பிடிக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது பா.ஜனதா கட்சிக்கு ஓ.ராஜகோபால் என்ற ஒரே ஒரு எம்.எல்.ஏ. மட்டும் தான் உள்ளார்.

    அதே சமயம் கேரள உள்ளாட்சி அமைப்புகளில் பா.ஜனதா கணிசமான இடங்களை கைப்பற்றி உள்ளது.

    விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் கேரளாவில் அதிக எம்.பி. இடங்களை கைப்பற்றி அந்த மாநிலத்தில் பலமாக கால்ஊன்ற பா.ஜனதா திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அந்த கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பலமுறை கேரளா சென்று கட்சி வளர்ச்சி பற்றி ஆலோசனை வழங்கி உள்ளார்.

    மேலும் தற்போது சபரிமலையில் இளம் பெண்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கட்சிக்கு எதிராக பா.ஜனதா தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. அந்த கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தலைமை செயலகம் முன்பு இந்த கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதமும் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் பா.ஜனதா மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் பேசிய ஸ்ரீதரன் பிள்ளை அடுத்த மாதம் (ஜனவரி) பிரதமர் நரேந்திர மோடி கேரளா வர உள்ள தகவலை தெரிவித்து கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தினார்.

    பிரதமர் கேரளா வரும்போது அவர் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாகவும், பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பா.ஜனதா தயாராக வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

    இதனால் பா.ஜனதா தொண்டர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். #PMModi #BJP
    கேரளாவில் ஒரு மாதத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தொல்லை மற்றும் கற்பழிப்பு புகார்கள் என 589 வழக்குகள் பதிவாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    கேரளாவில் கடந்த 10 ஆண்டுகளில் பதிவான வழக்குகளில் மூன்றில் ஒரு வழக்கு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்காக பதிவாகி உள்ளது. போஸ்கோ வழக்குகளும் அதிகரித்து வருகிறது.

    கடந்த 2008-ம் ஆண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 215 வழக்குகள் பதிவாகி இருந்தது. இது 2017-ம் ஆண்டு 1101 வழக்குகளாக உயர்ந்துள்ளது.

    2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை மட்டும் கேரளாவில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தொல்லை மற்றும் கற்பழிப்பு புகார்கள் என 999 வழக்குகள் பதிவாகி உள்ளது.

    இதிலும் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 589 வழக்குகள் பதிவாகி இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 19 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமைகளை போல பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் கேரளாவில் அதிகரித்து வருகிறது.

    கடந்த 2017-ம் ஆண்டு பெண்கள் வன்கொடுமை தொடர்பாக 14254 வழக்குகள் பதிவாகி உள்ளது. இதில் 1987 வழக்குகள் கற்பழிப்பு தொடர்பான வழக்குகள் ஆகும். இந்த ஆண்டு அக்டோபர் வரை 11302 பெண்கள் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளது. இதில், 1645 கற்பழிப்பு வழக்குகள் ஆகும். #tamilnews
    திருவனந்தபுரத்தில் நடந்த போராட்டத்தின்போது ஆர்.எஸ்.எஸ். தொண்டர் தீக்குளித்து இறந்ததையடுத்து, கேரளாவில் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. #KeralaBJPBandh #SabarimalaIssue
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும், ஐயப்ப பக்தர்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன்பு பந்தல் அமைத்து பா.ஜனதா கட்சியினர் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். நேற்று அதிகாலை வேணுகோபாலன் என்ற ஆர்.எஸ்.எஸ். தொண்டர் போராட்ட பந்தலின் முன்பு ‘சாமியே சரணம் ஐயப்பா’ என்று கோஷம் எழுப்பியபடி தனது உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.

    வேணுகோபாலன்

    சபரிமலை விவகாரத்தில் திருவனந்தபுரம் மட்டும் அல்லாமல் கேரளா முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வந்தாலும் முதல் முறையாக ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஒருவர் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் திருவனந்தபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சபரிமலை போராட்ட விவகாரத்தில் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த முன்வராததை கண்டித்து இன்று மாநில அளவிலான முழு அடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்தது. அதன்படி இன்று காலை முதல் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் இயக்கப்படவில்லை. தமிழகத்தில் இருந்து செல்லும் பேருந்துகள் அனைத்தும் கேரள எல்லையில் நிறுத்தப்பட்டன. பாஜகவினர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான தேர்வுகள் 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள பல்கலைக்கழக மற்றும் கேரள தொழில்நுட்ப பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

    முழு அடைப்பு போராட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது. வன்முறைச் சம்பவங்களை தவிர்க்கும் வகையில், முக்கிய சந்திப்புகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.  #KeralaBJPBandh #SabarimalaIssue
    சபரிமலை விவகாரம் தொடர்பாக உண்ணாவிரதம் இருந்த இடத்தில் தீக்குளித்த ஐயப்ப பக்தர் இறந்ததை தொடர்ந்து, கேரளாவில் நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. #SabarimalaiIssue #Kerala #BJP #Hardal
    திருவனந்தபுரம்:

    சபரிமலை விவகாரம் தொடர்பாக, கேரள மாநில அரசின் அணுகுமுறையை கண்டித்து அம்மாநில பாஜக சார்பில் கடந்த 4-ம் தேதி காலவரையற்ற தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்பட்டது.

    போராட்டத்தை பாஜக மாநில தலைவர் சி.கே.பத்மநாபன் தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.  திருவனந்தபுரத்தில், தலைமை செயலகம் எதிரில்  இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே, இன்று அதிகாலை உண்ணாவிரம் போராட்டம் நடைபெற்ற பகுதியில் 49 வயது ஐயப்ப பக்தர் ஒருவர் சுவாமியே சரணம் ஐயப்பா  என்ற கோஷத்துடன் தனக்கு தானே தீவைத்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.



    விசாரணையில்,  தீக்குளித்தவர் பெயர் வேணுகோபாலன் நாயர் என்பதும், முத்தடா பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. சிகிச்சை பலனிறி அவர் மருத்துவமனையில் இறந்தார்.

    இந்நிலையில், சபரிமலை விவகாரம் தொடர்பாக உண்ணாவிரதம் இருந்த இடத்தில் தீக்குளித்த ஐயப்ப பக்தர் இறந்ததை தொடர்ந்து, கேரளாவில் நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக பாஜகவினர் கூறுகையில், வேணுகோபாலன் நாயர் மரணத்துக்கு கேரள அரசின் அலட்சியமே காரணம். அவரது சாவுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். எனவே கேரள அரசை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளோம் என தெரிவித்தனர்.  #SabarimalaiIssue #Kerala #BJP #Hardal
    கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வீட்டை முற்றுகையிட சென்ற பாஜகவினர் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. #Kearala #PinarayiVijayan #BJPProtest
    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை அமல்படுத்தும் முயற்சியில் கேரள அரசு இறங்கியது.

    இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. சபரிமலையின் பாரம்பரிய விதிகளை சீர்குலைக்கக் கூடாது என்று அய்யப்ப பக்தர்கள் கூறி வருகின்றனர். கேரளா முழுவதிலும் பல்வேறு இடங்களில் அய்யப்ப பக்தர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாஜகவும், இந்து அமைப்புகளும் போராட்டத்தை தீவிரப்படுத்தியதை தொடர்ந்து, கோவில் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.



    இந்நிலையில், கேரளா பாஜகவினர் இன்று முதல் மந்திரி பினராயி விஜயன் வீட்டை முற்றுகையிட பேரணியாக சென்றனர். அப்போது போராட்டக்காரர்களை போலீசார் தடுப்பு அமைத்து தடுத்து நிறுத்தினர். ஆனாலும் பாஜகவினர் தடுப்பை உடைத்து உள்ளே செல்ல முயற்சி மேற்கொண்டனர்.

    இதையடுத்து, அங்கு கூடியிருந்த போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் பாஜகவினரை விரட்டினர். இச்சம்பவத்தினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #Kearala #PinarayiVijayan #BJPProtest
    கேரளாவில் தனது ஆடைக்குள் ரூ. 14 லட்சம் ஹவாலா பணத்தை கடத்தியவரை போலீசர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெருந்தல் மண்ணா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் லால் இன்று காலை விருந்து மண்ணா பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றார்.

    அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அவரை பிடித்து விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினார்.

    இதனை தொடர்ந்து அவரை சோதனை செய்தனர். அப்போது அவர் தனது ஆடைக்குள் ரூ. 14 லட்சத்தை மறைத்து வைத்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    விசாரணையில் அவர் கோடூர் பகுதியை சேர்ந்த சைனுதீன் (47) என்பது தெரிய தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    சைனுதீன் வைத்திருந்தது ஹவாலா பணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை மலப்புரத்தை சேர்ந்த ரசீது என்பவர் தன்னிடம் கொடுத்து பாலக்காட்டில் உள்ள முக்கிய பிரமுகர் ஒருவரிடம் கொடுக்கும் படி கூறியதாக கைதான சைனுதீன் தெரிவித்தார். அவரிடமிருந்து பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. #tamilnews
    பீகார், கேரள மாநில எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க மாவட்டம்தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்குமாறு சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #Criminalcases #casesagainstMPMLAs #specialcourts
    புதுடெல்லி:

    குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட  அரசியல்  தலைவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க கோரி, வழக்கறிஞரும் பா.ஜ.க. தலைவருமான அஸ்வினி உபாத்யாய் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

    கிரிமினல் வழக்குகளில் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகி தண்டனை அளிப்பதில் நீண்டகால இழுத்தடிப்பு நடந்து வருவதால் கிரிமினல்கள் மக்கள் பிரதிநிதிகளாக உலா வருகின்றனர். எனவே, இவர்கள் மீதான வழக்குகளில் விசாரணையை விரைவுப்படுத்தி, தண்டித்து அரசியலில் ஈடுபட தடை விதிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டுக்கு உதவுவதற்காக வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா ‘அமிகஸ் கியூரி’யாக நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில், இவ்வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா தனது அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், நாடு முழுவதிலும் பல்வேறு நீதிமன்றங்களில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக 4122 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் அதிகபட்சமான வழக்குகள் பீகார் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் நடந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், பீகார், கேரள மாநில எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க மாவட்டம்தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்குமாறு சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. தேவை ஏற்படும் மாவட்டங்களில் எத்தனை சிறப்பு நீதிமன்றங்களை வேண்டுமானாலும் அமைத்து கொள்ளலாம்.

    தற்போது, மாநில ஐகோர்ட் மற்றும் சில சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றுவரும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகள் அனைத்தும் புதிதாக அமைக்கப்படும் மாவட்ட சிறப்பு நீதிமன்றங்களுக்கு உடனடியாக மாற்றப்பட வேண்டும். இந்த நீதிமன்றங்களில் ஆயுள் தண்டனைக்கு வாய்ப்புள்ள குற்ற வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து விசாரிக்கப்பட வேண்டும்.

    இவ்வகையில், பீகார் மற்றும் கேரளாவில் மாவட்டங்கள்தோறும் அமைக்கப்படும் புதிய சிறப்பு நீதிமன்றங்களின் பட்டியலை பாட்னா மற்றும் கேரளா ஐகோர்ட்டுகள் வரும் 14-ம் தேதிக்குள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். #Criminalcases #casesagainstMPMLAs #specialcourts #Biharpecialcourts #Keralapecialcourts
    சபரிமலை விவகாரத்தில் தலையிட வேண்டும் என கேரள ஆளுநருக்கு அம்மாநில பாஜக எம்பிக்கள் வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். #SabarimalaiIssue #Sathasivam #BJPMPs
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து, அங்கு பெண்கள் செல்ல முயன்றனர். ஆனால், பக்தர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து, சபரிமலையில் மாநில அரசு கெடுபிடிகளை அதிகரித்துள்ளது. சபரிமலையில் பெண்கள் நுழைவதற்கு போராட்டம் நடத்தியதாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜக முழு அடைப்பு போராட்டம் நடத்தியது.

    மேலும், சமீபத்தில் சபரிமலைக்கு சென்ற மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் எம்.பி கேரள போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், கேரளாவை சேர்ந்த பாஜக எம்.பி.,க்கள் அம்மாநில கவர்னர் சதாசிவத்தை அவரது அலுவலகத்தில் இன்று நேரில் சந்தித்தனர். அவர்கள் ஆளுநரிடம் ஒரு மனு அளித்தனர்.

    அந்த மனுவில், சபரிமலை விவகாரத்தில் ஆளுநர் உடனடியாக தலையிட வேண்டும். 144 தடை உத்தரவை நீக்க வேண்டும். அங்கு மீண்டும் அமைதி ஏற்பட தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. 
    #SabarimalaiIssue #Sathasivam #BJPMPs
    ×