search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97865"

    மோசமான பீல்டிங்கால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியில் தோல்வி அடைந்ததாக இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். #INDvAUS #ViratKholi
    மொகாலி:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியில் 358 ரன் குவித்தும் இந்தியா தோல்வி அடைந்தது.

    மொகாலியில் நடந்த இந்த ஆட்டத்தில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன் குவித்தது.

    தொடக்க வீரர் தவான் சதம் அடித்தார். 115 பந்தில் 18 பவுண்டரி, 3 சிக்சருடன் அவர் 143 ரன்கள் குவித்தார். ஒரு நாள் போட்டியில் தவானின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன்பு 2015-ல் மெல்போர்னில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 137 ரன் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

    மற்றொரு தொடக்க வீரர் ரோகித்சர்மா 92 பந்தில் 95 ரன் (7 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். கம்மின்ஸ் 5 விக்கெட்டும், ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    ஆஸ்திரேலிய அணி 359 ரன் இலக்கை எளிதில் எடுத்து இந்தியாவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. ஆஸ்டன் டர்னரின் அதிரடியால் அந்த அணிக்கு எளிதான வெற்றி கிடைத்தது.

    ஆஸ்திரேலிய அணி 47.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 359 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பீட்டர் ஹேண்ட்ஸ் ஹோம் சதம் அடித்தார். அவர் 105 பந்தில் 117 ரன்னும் (8பவுண்டரி, 3 சிக்சர்) தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 99 பந்தில் 91 ரன்னும் (7 பவுண்டரி) டர்னர் 43 பந்தில் 84 ரன்னும் (5 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தனர். பும்ரா 3 விக்கெட் கைப்பற்றினார்.

    இந்தியாவின் பீல்டிங் மிக மோசமாக இருந்தது. பல கேட்சுகளை தவற விட்டனர். டர்னரை விக்கெட் கீப்பர் ரிசப்பண்ட், ஸ்டம்பிங் செய்யும் வாய்ப்பை தவற விட்டார்.

    இந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-

    எங்களது பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இதனால் நாங்கள் வெற்றி வாய்ப்பை தவற விட்டோம். ஆஸ்திரேலியா பேட்டிங் செய்யும் போது பனி பொழிவு முக்கிய பங்கு வகித்தது. பனி பொழிவு குறித்து 2-வது முறையாக தவறாக கணித்து விட்டோம். இதனால் பந்து வீசுவது சவாலாக இருந்தது. பனி பொழிவு பந்து வீச்சை சேதப்படுத்தி விட்டது.

    டர்னர் சிறப்பாக விளையாடி ஆட்டத்தின போக்கை மாற்றிவிட்டார். இதே போல ஹேண்ட்ஸ் ஹோம், உஸ்மான் கவாஜாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வெற்றிக்கு அந்த அணி தகுதியானது. அவர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சாதனையான இந்த சேசிங்கை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

    இன்னும் கடினமாக உழைத்து அடுத்த போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற முயற்சிப்போம்.

    நடுவரின் முடிவை மறு பரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறை சீரற்றதாக இருக்கிறது. ஒவ்வொரு ஆட்டத்திலும் டி.ஆர்.எஸ். பற்றி விவாதிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த வெற்றி முலம் ஆஸ்திரேலியா 5 போட்டிக் கொண்ட தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஆட்டம் டெல்லியில் வருகிற 13-ந்தேதி நடக்கிறது. #INDvsAUS #ViratKholi
    மொகாலில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் ஹேண்ட்ஸ்கோம்ப், டர்னர் அதிரடியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. #INDvAUS #Rohitsharma #ShikarDhawan #PeterHandscomb #AshtonTurner
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை நடந்த 3 ஆட்டத்தின் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
     
    இந்நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர்.

    இருவரும் முதலில் இருந்தே அதிரடியாக ஆடினர். அதனால் இந்தியாவின் ரன் வேகம் அதிகரித்து வந்தது. இருவரும் எளிதில் அரை சதம் கடந்தனர்.

    அணியின் எண்ணிக்கை 193 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா அவுட்டானார். அவர் 92 பந்துகளில் 2 சிக்சர், 7 பவுண்டரியுடன் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் முதல் விக்கெட்டுக்கு ரோகித், தவான் ஜோடி 193 ரன்கள் எடுத்ததும் சாதனையாகும்.



    அடுத்து இறங்கிய கே.எல்.ராகுல் தவானுக்கு ஒத்துழைப்பு அளித்தார். ஷிகர் தவான் அதிரடியாக ஆடி சதம் கடந்தார். சிறப்பாக ஆடிய ஷிகர் தவான் 115 பந்துகளில் 3 சிக்சர், 18 பவுண்டரியுடன் 143 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அவரை தொடர்ந்து கே.எல்.ராகுல் 26 ரன்னிலும், விராட் கோலி 7 ரன்னிலும், ரிஷப் பந்த் 36 ரன்னிலும் விஜய்சங்கர் 26 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் எடுத்துள்ளது.

    ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்டும், ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஷான் மார்ஷ் 6 ரன்னில் வெளியேறினார். இதனால் 2 விக்கெட்டுக்கு 12 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

    அடுத்து இறங்கிய பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் உஸ்மான் கவாஜாவுடன் இணைந்து நிதானமாக ஆடினார். இருவரும் இணைந்து 192 ரன்கள் சேர்த்தனர். கவாஜா 91 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய மேக்ஸ்வெல் 23 ரன்னில் அவுட்டானார்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஹேண்ட்ஸ்கோம்ப் சதமடித்து அசத்தினார். அவர் 117 ரன்களில் வெளியேறினார்.

    அவருக்கு அடுத்து இறங்கிய ஆஷ்டன் டர்னர் அதிரடியில் மிரட்டினார். இவர் 43 பந்துகளில் 6 சிக்சர், 5 பவுண்டரியுடன் 84 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இதனால் ஆஸ்திரேலியா அணி 47.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதையடுத்து ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 2-2 என சமனிலை வகிக்கின்றன. #INDvAUS #Rohitsharma #ShikarDhawan #PeterHandscomb #AshtonTurner
    மொகாலில் இன்று நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் 2 சிக்சர்கள் அடித்து டோனியின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்தார். #INDvAUS #Rohitsharma #MSDhoni
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை நடந்த 3 ஆட்டத்தின் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
     
    இந்நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று நடைபெற்றது.

    இன்றைய ஆட்டத்தின் ஆரம்பத்தில் ரோகித் சர்மா 216 சிக்சர்கள் அடித்து 2-வது இந்தியராக இருந்தார். டோனி இந்தியாவுக்காக 217 சிக்சர்கள் அடித்துள்ளார்.

    இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா 92 பந்துகளில் 2 சிக்சர், 7 பவுண்டரியுடன் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்த போட்டியில் ரோகித் சர்மா 2 சிக்சர்கள் அடித்தார். இதனால் எம்.எஸ்.டோனியை முந்தி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    இரண்டாம் இடத்தில் டோனி 217 சிக்சர்களுடனும், அடுத்து தெண்டுல்கர் 195 சிக்சர்களுடனும், கங்குலி 189 சிக்சர்களுடனும், யுவராஜ் சிங் 153 சிக்சர்களுடனும் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர். #INDvAUS #Rohitsharma #MSDhoni
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் ரோகித் சர்மா ஷிகர் தவான் ஜோடி பார்ட்னர்ஷிப்பில் சாதனை படைத்துள்ளது. #INDvAUS #Rohitsharma #ShikarDhawan
    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. 

    ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். கடந்த சில போட்டிகளாக இந்திய அணியின் தொடக்கம் சரியாக அமையவில்லை.

    இந்நிலையில், இந்திய அணி 12வது ரன்னை அடித்த போது ரோகித், தவான் ஜோடி 4 ஆயிரத்து 389 ரன்களை சேர்த்தது. இந்த ஜோடி சச்சின் - சேவாக் ஜோடியின் முந்தைய பார்ட்னர்ஷிப்பை கடந்து இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.

    இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு ரோகித், தவான் ஜோடி 193 ரன்கள் எடுத்ததும் சாதனையாகும்.

    பார்ட்னர்ஷிப் முதல் இடத்தில் சச்சின் - கங்குலி ஜோடி 8 ஆயிரத்து 227 ரன்களை எடுத்து முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. #INDvAUS #Rohitsharma #ShikarDhawan
    கேப்டன் பதவியில் 4 ஆயிரம் ரன் எடுத்த 4-வது இந்தியர் என்ற பெருமையை தற்போதைய இந்திய கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். #ViratKholi #INDvAUS
    இந்திய அணி கேப்டன் விராட்கோலியின் பேட்டிங் நாளுக்கு நாள் சிறப்பாக இருந்து வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் செஞ்சூரி எடுத்த அவர் நேற்றைய 3-வது ஆட்டத்திலும் சதம் அடித்தார். 95 பந்தில் 123 ரன்கள் குவித்தார்.

    27-வது ரன்னை எடுத்தபோது கேப்டன் பதவியில் கோலி 4 ஆயிரம் ரன்னை தொட்டார். 66 இன்னிங்சில் அவர் இந்த ரன்னை எடுத்தார். இதன்மூலம் கேப்டன் பதவியில் 4 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் எடுத்தவர் என்ற சாதனையை கோலி படைத்தார். இதற்கு முன்பு டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா) கேப்டன் பதவியில் 77 இன்னிங்சில் 4 ஆயிரம் ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது.

    கேப்டன் பதவியில் 4 ஆயிரம் ரன் எடுத்த 4-வது இந்தியர் என்ற பெருமையை கோலி பெற்றார். இதற்கு முன்பு அசாருதீன், கங்குலி, டோனி ஆகியோர் எடுத்து இருந்தனர்.

    ஒருநாள் போட்டியில் கோலியின் 41-வது செஞ்சூரியை பதிவு செய்தார். கேப்டன் பதவியில் 19-வது சதமாகும். ஒருநாள் போட்டியில் அதிக சதம் எடுத்து சாதனை படைத்த டெண்டுல்கரை முந்த அவருக்கு இன்னும் 9 செஞ்சூரிகளே தேவை. டெண்டுல்கர் 49 சதம் அடித்துள்ளார்.

    சர்வதேச போட்டியில் கோலியின் 66-வது சதமாகும். 2-வது இடத்தில் உள்ள பாண்டிங்கை முந்த 6 செஞ்சூரிகளே தேவை.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலியின் 8-வது சதமாகும். இன்னும் ஒரு சதம் அடித்தால் டெண்டுல்கரை சமன் செய்வார். டெண்டுல்கர் 9 சதம் எடுத்து இருந்தார். #ViratKholi #INDvAUS
    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒயிட்வாஷ் ஆனதன் மூலம் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 3 முறை ஒயிட்வாஷ் ஆகி உள்ளது. #INDvAUS
    பெங்களூர்:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு 20 ஓவர் ஆட்டத்திலும் தோற்று இந்தியா ‘ஒயிட்வாஷ்’ ஆனது.

    20 ஓவர் போட்டியில் இந்திய அணி 3-வது முறையாக ஒயிட்வாஷ் ஆகி உள்ளது. இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிடமும், 2009-ம் ஆண்டு நியூசிலாந்திடமும் 0-2 என்ற கணக்கில் தோற்று ஒயிட்வாஷ் ஆகி இருந்தது. #INDvAUS
    ஆஸ்திரேலியா அணி எங்களைவிட அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டது என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறினார். #ViratKohli #INDvAUS
    பெங்களூர்:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேற்று பெங்களூரில் நடந்தது.

    முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 190 ரன் எடுத்தது. கேப்டன் விராட் கோலி 72 ரன் எடுத்தார்.

    பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா, மேக்ஸ்வெல் (113 ரன்) சதத்தால் 19.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இருந்தது.

    இதன் மூலம் 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தோல்வி குறித்து கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-

    ஆஸ்திரேலியா அணி எங்களைவிட அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டது. வெற்றிக்கு அவர்கள் தகுதியான அணி. பெரும்பாலான மைதானங்களில் 190 ரன் என்பது நல்ல ஸ்கோர்தான்.

    ஆனால் இரவு நேரத்தில் பனி பொழிவு அதிகமாக இருக்கும் போதும், மேக்ஸ்வெல் போன்ற வீரர் அதிரடியாக விளையாடும் போதும் நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது.

    நாங்கள் ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு அளிக்க விரும்புகிறோம். அவர்கள் நெருக்கடி சூழ்நிலையில் எவ்வாறு செயல்படுகிறார்கள். என்பதை பார்க்கிறோம். அடுத்த ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடுகிறோம்.

    அதில் பல முயற்சிகளை செய்து பார்ப்போம். இது அவர்களுக்கு நல்ல பலன் அளிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #INDvAUS #ViratKholi
    பெங்களூருவில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில், மேக்ஸ்வெல்லின் அதிரடியான சதத்தால் இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது ஆஸ்திரேலியா. #INDvAUS
    பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றுள்ளதால், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், லோகேஷ் ராகுலும் களமிறங்கினர்.

    இருவரும் அடித்து விளையாடியதால் இந்தியா பவர் பிளே-யான முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் சேர்த்தது.

    கேஎல் ராகுல் 26 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 47 ரன்கள் சேர்த்து அவுட்டானார். தவான் 24 பந்தில் 14 ரன்கள் சேர்த்து வெளியேறினார். ரிஷப் பந்த் 1 ரன் எடுத்த நிலையில் ஏமாற்றம் அளித்தார். இதனால் இந்தியா 11 ஓவரில் 74 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது.

    4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் டோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடனும், அதிரடியாகவும் ஆடியது. இதனால் ரன்கள் உயர்ந்தன. இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 50 பந்தில் 100 ரன்கள் குவித்தது. டோனி 23 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 40 ரன்கள் சேர்த்து வெளியேறினார். விராட் கோலி அதிரடியாக ஆடி அரை சதமடித்தார்.


     
    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது. விராட் கோலி 38 பந்தில் 2 பவுண்டரி, 6 சிக்சருடன் 72 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 3 பந்தில் 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆர்கி ஷாக்கும், மார்கஸ் ஸ்டோனிசும் இறங்கினர்.

    ஸ்டோனிஸ் 7 ரன்னிலும், ஆரோன் பின்ச் 8 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர். அடுத்து இறங்கிய அனுபவ வீரர் மேக்ஸ்வெல் ஷாக்குடன் இணைந்தார். இருவரும் பவுண்டரி, சிக்சராக விளாசினர்.

    இதனால், முதல் 10 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்தது. 73 ரன்கள் சேர்த்த நிலையில் ஷாக் 40 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய ஹேண்ட்ஸ்கோம்ப் மேக்ஸ்வெல்லுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். மேக்ஸ்வெல் கிடைத்த பந்துகளை பவுண்டரி, சிக்சர்களுக்கு பறக்கவிட்டார். சிறப்பாக ஆடிய மேக்ஸ்வெல் சதமடித்து அசத்தினார். அவர் 113 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.

    இறுதியில், ஆஸ்திரேலியா அணி 19.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதையடுத்து, டி20 தொடரை ஆஸ்திரேலியா 2-0 என கைப்பற்றியது. #INDvAUS
    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வேகப்பந்து வீரர் பும்ரா, தொடக்க வீரர் ரோகித்சர்மா புதிய சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது. #INDvAUS #RohitSharma #JaspritBumrah
    பெங்களூர்:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.

    விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதற்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

    இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி விராட்கோலி தலைமையிலான இந்திய அணிக்கு உள்ளது. ஏனென்றால் தோற்றால் தொடரை இழந்துவிடும். அதே நேரத்தில் ஆரோன்பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா இன்றைய ஆட்டத்திலும் வென்று தொடரை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது.

    இன்றைய ஆட்டத்தில் வேகப்பந்து வீரர் ஜஸ்பிரித் பும்ரா, தொடக்க வீரர் ரோகித் சர்மா புதிய சாதனை படைக்க வாய்ப்பு இருக்கிறது.

    பும்ரா கடந்த ஆட்டத்தில் 16 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் 50-வது விக்கெட்டை தொட்டு 2-வது இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

    பெங்களூர் போட்டியில் பும்ரா 2 விக்கெட் கைப்பற்றினால் 20 ஓவர் சர்வதேச ஆட்டத்தில் அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். அஸ்வின் 46 ஆட்டத்தில் 52 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். பும்ரா 41 ஆட்டத்தில் 51 விக்கெட் கைப்பற்றி அதற்கு அடுத்த நிலையில் உள்ளார்.

    ரோகித் சர்மா 94 ஆட்டத்தில் 102 சிக்சர்கள் அடித்து சர்வதேச அளவில் 2-வது இடத்தில் உள்ளார். கிறிஸ்கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்), மார்டின் குப்தில் (நியூசிலாந்து) தலா 103 சிக்சர்களுடன் முதல் இடத்தில் உள்ளனர்.

    விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் போட்டியில் ரோகித்சர்மா 2 சிக்சர்கள் அடித்து புதிய சாதனை படைப்பார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 5 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். இன்றைய போட்டியிலாவது அவர் சிறப்பாக விளையாடி 2 சிக்சர் அடித்து புதிய சாதனை நிகழ்த்துவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. #INDvAUS #RohitSharma #JaspritBumrah
    ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்திய அணி இன்றிரவு 2-வது 20 ஓவர் போட்டியில் களம் இறங்குகிறது. #AUSvIND
    பெங்களூரு:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

    தொடக்க ஆட்டத்தில் மெதுவான தன்மை கொண்ட ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்ட முடியாமல் திணறினர். லோகேஷ் ராகுல் (50 ரன்) தவிர வேறு யாரும் மெச்சும்படி ஆடவில்லை. மூத்த வீரர் டோனி கடைசி கட்டத்தில் (29 ரன், 37 பந்து) நிறைய பந்துகளை விரயம் செய்து விட்டார். அணி வெறும் 126 ரன்கள் மட்டுமே எடுத்த போதிலும் இந்திய வீரர்கள் போராட தவறவில்லை. ஒரு கட்டத்தில் வெற்றிக்கனி கனியும் சூழல் கூட வந்தது. கடைசி ஓவரில் எதிரணியின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவை என்ற நிலையில், உமேஷ் யாதவ் 2 பவுண்டரி உள்பட 14 ரன்கள் விட்டுக்கொடுத்து சொதப்பி விட்டார். ஜஸ்பிரித் பும்ரா அளவுக்கு துல்லியமாக பந்து வீசக்கூடிய பவுலர் இருந்திருந்தால் முடிவு நிச்சயம் நமக்கு சாதகமாக அமைந்திருக்கும்.

    எது எப்படியோ இப்போது முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடியில் இந்திய வீரர்கள் உள்ளனர். இதில் வெற்றி பெற்றால் தான் தொடரை இழக்காமல் தப்பிக்க முடியும். முதல் ஆட்டத்தில் ஷிகர் தவானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. இன்றைய ஆட்டத்தில் அவர் விளையாட வாய்ப்புள்ளது.

    இந்திய சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் குருணல் பாண்ட்யா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘தொடக்க ஆட்டத்தில் குறைந்த ரன்களே எடுத்த போதிலும் நாங்கள் முழுமூச்சுடன் போராடினோம். நமது பந்து வீச்சு மிக அபாரமாக இருந்தது. ஒவ்வொருவரும் அளித்த பங்களிப்பு காரணமாக கிட்டத்தட்ட வெற்றியின் விளிம்புக்கு வந்து தான் தோல்வியை தழுவினோம். பேட்டிங்கை பொறுத்தவரை நாங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். தொடரில் 0-1 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கும் நிலையில் இன்றைய ஆட்டம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. முதல் ஆட்டத்தில் அடைந்த தோல்வியால் எங்களது உத்வேகம் தளர்ந்து விடவில்லை. நிச்சயம் சிறப்பாக ஆடுவோம்.

    என்னை பொறுத்தவரை பேட்டிங்கில் முன்வரிசையில் ஆட வேண்டும் என்பது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. சூழ்நிலைக்கு தக்கபடி விளையாடுவதில் கவனம் செலுத்துகிறேன். பந்து வீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் பங்களிப்பை அளிக்க விரும்புகிறேன். விசாகப்பட்டினத்தை விட பெங்களூரு ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாகவே தெரிகிறது. அதனால் இங்கு நிறைய ரன்கள் எடுக்க முடியும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்.

    ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டத்தில் பந்து வீச்சில் அமர்க்களப்படுத்தியது. ஆனால் பேட்டிங்கில் மேக்ஸ்வெல் அரைசதம் அடித்து வெளியேறியதும் தடுமாற்றத்திற்குள்ளானது. பிறகு ஒரு வழியாக தட்டுத்தடுமாறி கடைசி பந்தில் வெற்றி கண்டது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை அதிகமாகியுள்ளது. சொந்த மண்ணில் இந்தியாவிடம் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை பறிகொடுத்த ஆஸ்திரேலிய அணியினர், அதற்கு பழிதீர்க்கும் ஆர்வமுடன் இருப்பதால் இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று நம்பலாம்.

    பெங்களூரு மைதானம் பொதுவாக பேட்டிங்குக்கு உகந்த வகையில் இருக்கும். சுழற்பந்து வீச்சும் எடுபடும். இங்கு இதுவரை ஐந்து 20 ஓவர் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி 3 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றியும் (இங்கிலாந்து, வங்காளதேசத்துக்கு எதிராக), ஒன்றில் தோல்வியும் (பாகிஸ்தானுக்கு எதிராக) கண்டுள்ளது.

    ஆஸ்திரேலிய அணி இந்த மைதானத்தில் 2016-ம் ஆண்டு உலக கோப்பை தொடரில், ஒரே ஒரு ஆட்டத்தில் ஆடி வங்காளதேசத்தை தோற்கடித்து இருந்தது. 2017-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா குவித்த 202 ரன்களே, இந்த ஸ்டேடியத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும். இங்கு இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் 20 ஓவர் போட்டியில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

    கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாரிகள் கூறுகையில், ‘ஐ.பி.எல். போன்று பெரிய அளவில் ரன் மழை பொழியும் ஆடுகளமாக இது இருக்காது. ஆனாலும் கணிசமான ரன்கள் குவிக்க முடியும். விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு கடந்த 2 மாதங்களாக இந்த ஆடுகளம் எந்த போட்டிக்கும் பயன்படுத்தப்படவில்லை. 180 ரன்கள் வரையிலான இலக்கு இங்கு சவாலான ஸ்கோராக இருக்கும்’ என்றனர்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா அல்லது ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), ரிஷாப் பான்ட், விஜய் சங்கர் அல்லது தினேஷ் கார்த்திக், டோனி, குருணல் பாண்ட்யா, உமேஷ் யாதவ் அல்லது சித்தார்த் கவுல், யுஸ்வேந்திர சாஹல், மயங்க் மார்கண்டே, ஜஸ்பிரித் பும்ரா.

    ஆஸ்திரேலியா: மார்கஸ் ஸ்டோனிஸ், டார்சி ஷார்ட், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), மேக்ஸ்வெல், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், ஆஷ்டன் டர்னர், நாதன் கவுல்டர்-நிலே, கம்மின்ஸ், ஜெயே ரிச்சர்ட்சன், ஜாசன் பெரேன்டோர்ப், ஆடம் ஜம்பா.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. #AUSvIND
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் 37 பந்துகளை சந்தித்து 20 ரன்களே எடுத்த டோனியின் ஆட்டம் குறித்து சமூக வலை தளங்களில் ரசிகர்கள் ஆதங்கப்பட்டு விமர்சித்து உள்ளனர். #MSDhoni #INDvAUS

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் டோனி 37 பந்துகளை சந்தித்து 20 ரன்களே எடுத்தார். இதில் ஒரே ஒரு சிக்சர் மட்டுமே அடங்கும்.

    அவரது இந்த மந்தமான ஆட்டத்தால் ரசிகர்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர்.

    ராகுல், வீராட்கோலியின் சிறப்பான ஆட்டத்தை பார்க்கும் போது இந்திய அணி 160 முதல் 180 ரன்களை குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கடைசி 10 ஓவர்களில் 46 ரன்களே மட்டுமே எடுத்தது. இதனால் 20 ஓவரில் 126 ரன்களே எடுக்க முடிந்தது.

    டோனியின் ஆமை வேக ஆட்டத்தால் ரன்களை அதிக அளவு குவிக்க முடியவில்லை. விக்கெட்டுகள் சரிந்தாலும், ஆடுகளம் மோசமாக இருந்தாலும் அவர் பந்துகளை அடித்து ஆடாமல் விட்டது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.

    டோனியின் இந்த ஆட்டம் குறித்து சமூக வலை தளங்களில் ரசிகர்கள் ஆதங்கப்பட்டு விமர்சித்து உள்ளனர்.

    டோனி கிட்டத்தட்ட பாதி பந்துகளில் (18) ஒரு ரன்கூட எடுக்காமல் ‘டாட்’ பந்துகளாக மாற்றினார். அதுவும் கடைசி ஓவரில் 4 டாட் பந்துகள் என்பது மிகவும் கொடுமையானது. டோனியின் மிகவும் மோசமான பேட்டிங் என்று அவரது ரசிகர்களே பலரும் வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ஒரு ரசிகர் கூறும்போது, “டோனி ஓய்வு பெற வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த போட்டியால் பலரும் அவரது ஓய்வு குறித்து பேச வைத்துவிட்டதாக தெரிகிறது. குறைந்தபட்சம் 20 ஓவர் போட்டியில் இருந்து அவர் நாகரீகமான முறையில் ஓய்வை அறிவித்துவிட வேண்டும்” என்றார்.

    மற்றொரு ரசிகர் கூறும்போது, “அடுத்த போட்டியுடன் டோனி தனது ஓய்வு முடிவை அறிவித்துவிடுவார்” என்றார்.

    கிரிக்கெட் ஆர்வலர் ஒருவர் கூறும்போது, “டோனியின் ஆலோசனை வீரர்களுக்கு வேண்டு மானால் அவரை அணியில் ஆலோசகராக மட்டும் வைத்துக்கொள்ளலாம்” என்றார்.

    சமூகவலை தளங்கள் முழுவதும் டோனியை வைத்து டிரோல் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த இக்கட்டான நிலையில் ஒருசில ரசிகர்கள் மட்டும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். #MSDhoni #INDvAUS

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் எங்களது பேட்டிங் சிறப்பாக இல்லை என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். #INDvAUS #ViratKholi
    விசாகப்பட்டினம்:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் தோல்வியை தழுவியது.

    விசாகப்பட்டினத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்னே எடுக்க முடிந்தது.

    லோகேஷ் ராகுல் அதிகபட்சமாக 30 பந்தில் 50 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்) டோனி 29 ரன்னும் எடுத்தனர். நாதன் கோல்ட்டர் 3 விக்கெட்டும், பெகரன்டார்ப், ஆடம் ஜம்பா, கும்மின்ஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் கடைசி பந்தில் அந்த அணி வெற்றி பெற்றது.

    மேக்ஸ்வெல் 43 பந்தில் 56 ரன் (6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். பும்ரா 16 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். யுசுவேந்திர சாஹல், கர்ணல் பாண்டியா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    எங்களது பேட்டிங் சிறப்பாக இல்லை என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஒப்புதல் அளித்து உள்ளார். தோல்வி குறித்து அவர் கூறியதாவது:-

    எங்களது பேட்டிங் சிறப்பாக இல்லை. ஆட்டத்தின் 15-வது ஓவர் வரை இந்த ஆடுகளம் பேட்டிங் செய்ய ஏதுவாகவே இருந்தது. ஆனால் உண்மையில் நாங்கள் பேட்டிங்கில் நன்றாக ஆடவில்லை. லோகேஷ் ராகுல் சிறப்பாக ஆடினார். அவரும், நானும் சிறந்த பார்ட்னர் ஷிப் அமைத்தோம்.

    126 ரன் என்பது போதுமான ஸ்கோர் இல்லை. நாங்கள் 150 ரன்னுக்கு மேல் எடுத்து இருக்கலாம். அப்படி எடுத்து இருந்தால் வெற்றிக்கான ஸ்கோராக இருந்து இருக்கும்.

    எங்களது பந்துவீச்சு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. 19-வது ஓவர் வரை நாங்களே நல்ல நிலையில் இருந்தோம். பும்ரா ஆச்சரியம் அளிக்கும் வகையில் அபாரமாக பந்துவீசினார்.

    புதுமுக வீரரான மான்யக் மிடில் ஓவரில் நன்றாக வீசினார். ஒட்டு மொத்தத்தில் எங்களைவிட ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடியது. அந்த அணியே வெற்றிக்கு தகுதியானது.

    உலககோப்பைக்கு முன்பு ராகுல், ரி‌ஷப் பந்துக்கு மேலும் கால அவகாசம் கொடுக்க விரும்புகிறார்.

    இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டிக்கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது 20 ஓவர் ஆட்டம் பெங்களூரில் வருகிற 27-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. #INDvAUS #ViratKholi
    ×