search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97865"

    சிட்னியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 193 ரன்கள் குவித்த புஜாரா, 7 ரன்களில் இரட்டை சதத்தை தவறவிட்டார். #CheteshwarPujara #AUSvIND
    சிட்னி:

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டு மற்றும் மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் 3-வது வீரராக களமிறங்கி விளையாடி வரும் புஜாரா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அடிலெய்டு மற்றும் மெல்போர்ன் டெஸ்டில் சதம் அடித்த புஜாரா இன்று சிட்னி டெஸ்டிலும் சதம் விளாசி அசத்தினார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் சேர்த்திருந்தது. புஜாரா 250 பந்தில் 130 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தார்.

    இன்று தொடர்ந்து ஆடிய புஜாரா சிறிது நேரத்தில் 150 ரன்களைக் கடந்தார். உணவு இடைவேளையின்போது இந்திய அணியின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 181 ரன்களுடன் இரட்டை சதத்தை நோக்கி பயணித்தார்.



    உணவு இடைவேளைக்குப்பிறகு அணியின் ஸ்கோர் 400 ரன்னைத் தாண்டியது. உற்சாகத்துடன் பந்துகளை பறக்க விட்ட புஜாரா இன்று தனது நான்காவது இரட்டை சதத்தை பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 193 ரன்களில் ஆட்டமிழந்தார். 373 பந்துகளில் 22 பவுண்டரிகளுடன் அவர் இந்த இலக்கை எட்டினார்.  அவரது விக்கெட்டை லயன் கைப்பற்றினார். 7 ரன்களில் புஜாரா தனது இரட்டை சதத்தை தவறவிட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இரட்டை சதத்தை தவறவிட்டபோதிலும், இந்த போட்டியின்போது பல்வேறு சாதனைகளை எட்டியுள்ளார் புஜாரா. #CheteshwarPujara #AUSvIND

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. #AUSvIND #India #Australia
    சிட்னி:

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது.  முதல் 3 டெஸ்டுகளில் 2-ல் இந்தியாவும், ஒன்றில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன.

    தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி கடைசி டெஸ்டை டிரா செய்தாலே தொடரை வசப்படுத்தி விடலாம். மேலும் 71 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடி வரும் இந்திய அணி புதிய சரித்திரம் படைக்கும் வேட்கையுடன் விராட் கோலி தலைமையில் களமிறங்கி உள்ளது.

    இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் ஆஸ்திரேலியாவும் களமிறங்கி உள்ளது.

    டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் சார்பில் மயங்க் அகர்வால் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் முதலாவதாக களமிறங்கி விளையாடி வருகிறார்கள்.

    இரு அணிகளில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியல்:-

    இந்தியா: மயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷாப் பான்ட், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா.

    ஆஸ்திரேலியா: மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஸ்சானே, டிம் பெய்ன் (கேப்டன்), பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட். #AUSvIND #India #Australia 
    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மாரிசன் இன்று புத்தாண்டு விருந்து அளித்தார். #ScottMorrison #NewYearHost #IndianPlayers #AustralianPlayers
    சிட்னி:

    இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.

    முதலில் நடைபெற்ற டி 20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன. தொடர்ந்து, டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், 3 போட்டிகள் முடிந்த நிலையில் இந்திய அணி 2 - 1 என முன்னிலை வகிக்கிறது.



    இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 4வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ம் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்களுக்கு தனது இல்லத்தில் இன்று புத்தாண்டு விருந்தளித்து அசத்தினார்.

    இந்த விருந்தில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி உள்பட அனைத்து வீரர்களும், அணி ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

    மேலும், ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தங்களது பாரம்பரிய நீல நிற உடையுடன் இதில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. #ScottMorrison #NewYearHost #IndianPlayers #AustralianPlayers
    ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா மீண்டும் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. #ICC #TesrCricket #TestRanking #India
    இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    மெல்போர்னில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடரில் 2 -1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.



    இந்நிலையில், டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி 116 புள்ளிகள் பெற்று முதலிடத்தை மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

    108 புள்ளிகள் பெற்ற இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்திலும், 3-வது இடத்தில் நியூசிலாந்தும், 4-வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவும், 5-வது இடத்தில் ஆஸ்திரேலியாவும் இடம்பிடித்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #ICC #TesrCricket #TestRanking #India
    ஒரே வருடத்தில் வெளிநாட்டு தொடரில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் பும்ரா முதல் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். #AUSvIND #JaspritBumrah
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர் மிகவும் சிறப்பான வகையில் பந்து வீசி வருகின்றனர். தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து தொடரில் அசத்திய இவர்களின் சாதனை ஆஸ்திரேலியாவிலும் தொடர்கிறது.

    மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்கு முன் பும்ரா 39 விக்கெட்டுக்களும், முகமது ஷமி 43 விக்கெட்டுக்களும் வீழ்த்தியிருந்தனர். இதனால் ஒரே வருடத்தில் வெளிநாட்டில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய பட்டியலில் முதல் இடம் பிடிக்கப் போகும் இந்திய வீரர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.



    இந்நிலையில், இந்தியாவிற்கான இந்த ஆண்டின் கடைசி டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இதில் பும்ரா முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்களும், இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். மொத்தம் 9 டெஸ்ட் போட்டிகளில் 48 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    இதன்மூலம் ஒரே ஆண்டில் வெளிநாட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் பும்ரா முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #AUSvIND #JaspritBumrah
    மெல்போர்னின் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்கு 399 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணையித்துள்ளது. #AUSvIND #AaronFinch #MarcusHarris
    மெல்போர்ன்:

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா அணி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் எந்த ஒரு வீரரும்  25 ரன்களை கூட தொடவில்லை. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 66.5 ஓவர்களில் 151 ரன்களில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. பும்ரா 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

    292 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பாலோ-ஆன் வழங்கவில்லை. ஒரு வேளை கடைசி நாளில் பேட்டிங் செய்யும் நிலை ஏற்பட்டால் சேசிங் செய்வது மிகவும் கடினம் என்று கருதிய இந்திய அணி நிர்வாகம் 292 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடுவது என்று முடிவு செய்தது.

    ஆனால் 2-வது இன்னிங்ஸ் இந்தியாவுக்கு திருப்திகரமாக அமையவில்லை. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் மிரட்டினார். இந்திய வீரர்கள் மயங்க் அகர்வாலை தவிர, விராட் கோலி, புஜாரா உள்பட முன் வரிசை வீரர்கள் அனைவரும் சொதப்பினார். இந்திய அணி 2-வது இன்னிங்சில் நேற்றைய ஆட்ட நேர முடிவில், 27 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்திருந்தது. மயங்க் அகர்வால் 28 ரன்களுடனும் (79 பந்து, 4 பவுண்டரி), விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் துவங்கியதும், அதிரடியாக ஆடிய ரிஷப் பந்த் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். மயங்க் அகர்வால் 42 ரன்களில் வெளியேறினார். ஜடேஜா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 37.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்து இருந்த போது தனது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சின் 292 ரன்கள் முன்னிலையுடன் சேர்த்து இந்திய அணி, 399 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணையித்தது.

    இதனைத்தொடர்ந்து இமாலய இலக்குடன் 2-வது இன்னிங்சை துவங்கி ஆஸ்திரேலிய அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பந்து வீச்சுக்கு சாதகமாக மைதானம் மாறியிருப்பதால், இந்த இலக்கை துரத்துவது மிக கடினம். இதனால்,  இந்த ‘பாக்சிங் டே’ டெஸ்டில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியிருக்கிறது. தற்போது வரை ஆஸ்திரேலிய அணி 11 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. #AUSvIND
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அகர்வால், புஜாரா, கோலி ஆகியோர் சிறப்பாக ஆடிய நிலையில், இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் சேர்த்துள்ளது. #INDvAUS
    மெல்போர்ன்:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன் வித்தியாசத்திலும் பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

    இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5 மணிக்கு மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது.

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் விளையாடும் இப்போட்டி ‘பாக்சிங் டே’ டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. இப்போட்டியில் இந்திய தொடக்க ஜோடியான முரளி விஜய்-லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டனர். புதுமுக வீரர் மயங்க் அகர்வால், ரோகித்சர்மா, ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

    ஆஸ்திரேலிய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. பீட்டர் ஹேண்ட்ஸ் கோம்புக்கு பதிலாக மிட்செல் மார்ஷ் சேர்க்கப்பட்டார்.

    டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் விராட்கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால்-ஹனுமா விகாரி களம் இறங்கினர்.

    இருவரும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை கவனமுடன் எதிர்கொண்டனர். ஆடுகளத்தில் பந்து நன்கு பவுன்ஸ் ஆனது. திடீரென்று பந்து பேட்ஸ்மேன் கால் முட்டிக்கு கீழேயும் சென்றது.

    இதனால் விகாரி மிகவும் பொறுமையுடன் விளையாடினார். மயங்க் அகர்வால் ஓரளவுக்கு ரன்களை சேர்த்தார்.

    பேட் கும்மின்ஸ் வீசிய பவுன்ஸ் பந்தை விகாரி தவிர்க்க முயன்றபோது கையுறையில் பட்டு கேட்ச் ஆனது. விகாரி 66 பந்தில் 8 ரன் எடுத்தார். அப்போது ஸ்கோர் 40 ரன்னாக இருந்தது. அடுத்து புஜாரா களம் வந்தார்.

    மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா 28 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 57 ரன் எடுத்து இருந்தது. மயங்க் அகர்வால் 34 ரன்னுடனும், புஜாரா 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    உணவு இடைவேளைக்கு பிறகு மயங்க் அகர்வால் 95 பந்தில் அரை சதம் அடித்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. இந்தியா 45-வது ஓவரில் 100 ரன்னை தொட்டது. சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த மயங்க் அகர்வால் 76 ரன்னில் அவுட் ஆனார். அவர் கும்மின்ஸ் பந்தில் விக்கெட் கீப்பர் டிம்பெய்னிடம் கேட்ச் ஆனார். இந்த ரன்னை மயங்க் அகர்வால் 161 பந்தில் எடுத்தார். இதில் 8 பவுண்டரி, 1 சிக்சர் அடங்கும். அறிமுக போட்டியில் அவர் ஆஸ்திரேலிய பந்துவீச்சை திறம்பட சமாளித்து ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    அகர்வால் அவுட் ஆனவுடன் தேனீர் இடைவேளையின்போது இந்தியா 54.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 123 ரன் எடுத்து இருந்தது. புஜாரா 33 ரன்னுடன் களத்தில் இருந்தார்.



    தேனீர் இடைவேளைக்கு பிறகு புஜாரா, கேப்டன் கோலி இருவரும் நிதானமாக விளையாடினார்கள். இந்தியா 63-வது ஓவரில் 150 ரன்னை தொட்டது. தொடர்ந்து ஆடிய புஜாரா அரை சதம் கடந்தார். மறுமுனையில் விராட் கோலியும் அரை சதத்தை நெருங்க, முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆட்டநேர முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்தது. புஜாரா 68 ரன்களுடனும், விராட் கோலி 47 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த 7 வயது சிறுவன் ஆர்ச்சி சில்லர் மெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியில் இணை கேப்டனாக சேர்க்கப்பட்டான். இதய கோளாறால் பல்வேறு அறுவை சிகிச்சை செய்துள்ள அவனுக்கு ஆஸ்திரேலிய அணி கேப்டனாக வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது.

    இதையடுத்து அவன் ஆஸ்திரேலிய அணியின் 15-வது வீரராக சேர்க்கப்பட்டுள்ளான். டாஸ் போடும்போது கேப்டன்களுடன் சிறுவன் ஆர்ச்சி சில்லரும் வந்திருந்தான். #INDvAUS
    பெர்த் டெஸ்டில் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் விளையாடியது ஆச்சரியம் அளித்தது என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கும்ப்ளே கூறியுள்ளார். #kumble

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    4 போட்டி கொண்ட தொடரில் அடிலெய்வில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியாவும், பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன.

    இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் 26-ந்தேதி தொடங்குகிறது.

    பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் காயம் காரணமாக இந்தியாவின் முதன்மை வீரர் அஸ்வின் விளையாடவில்லை. பெர்த் ஆடுகளம் வேகத்துக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்பட்டதால் இந்திய அணி 4 வேகப் பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. சுழற்பந்து வீச்சாளரை சேர்க்கவில்லை.

    ஆனால் அந்த போட்டியில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 8 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    இதனால் பெர்த் டெஸ்டில் இந்திய அணியில் ஒரு சுழற்பந்து வீச்சாளரை சேர்த்திருக்க வேண்டும் என்று கருத்து எழுந்தது.

    இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கும்ப்ளே அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அணியில் ஒரு சுழற்பந்து வீச்சாளர் தேவை என்றே கருதுகிறேன். எல்லா சூழ்நிலையிலும் தாக்குதல் பந்தவீச்சு தேவைப்படும்.

    ஆடுகளம் வேகப்பந்துக்கு நன்கு ஒத்துழைத்தால் 4 வேகப் பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கலாம். அப்படி இல்லையென்றால் ஒரு சுழற்பந்து வீச்சாளர் தேவை.

    இந்திய அணி சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை பெற்று இருக்கிறது. தற்போதுள்ள ஆஸ்திரேலிய அணி சுழற்பந்துக்கு திணறுகிறது.

    இதனால் அணியில் சுழற்பந்து வீச்சாளர் இருக்க வேண்டும். ஆனால் பெர்த் டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் இந்திய அணி களம் இறங்கியது ஆச்சரியம் அளித்தது.

    அஸ்வின், ஜடேஜா ஆகியோர் காயத்தால் விளையாட முடியாமல் போய் விட்டது. ஆனால் குல்தீப் யாதவ் முதன்மை சுழற்பந்து வீச்சாளர் ஆவார். அவர் இளம் வீரர்.

    ஏற்கனவே அவரது பந்துவீச்சுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் திணறி உள்ளனர். எனவே குல்தீப் யாதவை பரிசீலித்து இருக்கலாம் என்றார். #kumble

    ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் பந்து வீச்சை இந்திய வீரர்கள் சமாளிக்க முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை வழங்கியுள்ளார். #AUSvIND #SouravGanguly #NathanLyon
    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    4 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரில் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியாவும், பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இதனால் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    3-வது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந்தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறி வருகிறார்கள். 2 டெஸ்டிலும் சேர்த்து நாதன் லயன் 16 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

    இந்த நிலையில் நாதன் லயன் பந்து வீச்சை இந்திய வீரர்கள் சமாளிக்க முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நாதன் லயன் பந்து வீச்சு தொடர்பாக கேப்டன் விராட்கோலிக்கு தகவல் அனுப்ப நினைத்து இருந்தேன். ஆனால் இன்னும் அனுப்பவில்லை. அவரிடம் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் வெளிநாட்டு மண்ணில் சுழற்பந்து வீச்சுக்கு அதிக விக்கெட்டுகளை பறிகொடுக்கக்கூடாது.



    லயன் பந்துவீச்சில் இந்திய வீரர்கள் ஸ்டெம்புக்கு வெளியே சென்ற பந்துகளை தடுத்து ஆடினார்கள். அதற்கு பதிலாக அவரது பந்துவீச்சை தாக்குதல் தொடுத்து விளையாட வேண்டும். அப்போழுது தான் 300-ல் இருந்து 350 ரன் வரை எடுக்க முடியும்.

    லயன் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஷேன் வார்னே, முரளீதரன், சுவான் ஆகியோர் போல் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #AUSvIND #SouravGanguly #NathanLyon
    மைதானத்தில் துடிப்பாகவும், ஆக்ரோ‌ஷத்துடனும் செயல்படும் விராட் கோலி போன்ற வீரர்கள் தான் தற்போது கிரிக்கெட்டுக்கு தேவை என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் கூறியுள்ளார். #ViratKholi #AUSvIND #AllanBorder
    மெல்போர்ன்:

    இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மைதானத்தில் ஆக்ரோ‌ஷத்துடன் செயல்படுவார். விக்கெட் வீழ்ந்ததும் துள்ளி குதித்து கத்தியபடி மகிழ்ச்சியை வெளிபடுத்தி வருகிறார்.

    பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் கோலிக்கும், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னுக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. இருவரும் நேருக்கு நேர் நின்று கோபத்துடன் பேசி கொண்டனர். நடுவர்கள் தலையிட்டு சமாதானப்படுத்தினர்.


    கோலியின் ஆக்ரோ‌ஷ செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியது. ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன், கோலியை கடுமையாக விமர்சித்து இருந்தார். அதுபோன்று முன்னாள் வீரர்கள் சிலரும் கண்டித்து இருந்தனர்.



    இந்த நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர், விராட் கோலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-



    மைதானத்தில் துடிப்பாகவும், ஆக்ரோ‌ஷத்துடனும் செயல்படும் விராட் கோலி போன்ற வீரர்கள் தான் தற்போது கிரிக்கெட்டுக்கு தேவை. தனது அணி விக்கெட்டை வீழ்த்தியதும் கேப்டனாக கோலி வெளிபடுத்தும் உணர்ச்சியை வேறு எந்த கேப்டனிடமும் இருந்தும் நான் பார்த்ததில்லை.



    அது உண்மையில் அதிகமானதுதான். ஆனால் அவர் சரியான பாதையில் செல்கிறார். தற்போது கோலியை போன்று குணாதிசயம் கொண்டவர்கள் கிரிக்கெட்டில் நிறையபேர் இல்லை. ‘நம்பர் ஒன்’ இருக்க நாங்கள் தகுதியானவர்கள் என்பதை நிரூபித்து ஒரு கேப்டனாக அன்னிய மண்ணிலும் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆஸ்திரேலிய முன்னாள் பயிற்சியாளர் டேரன் லீமேன் கூறியதாவது:-

    விராட் கோலி மிகவும் உணர்ச்சிமிக்க வீரராக இருக்கிறார். இதனால் தான் மைதானத்தில் அவரிடம் இருந்து ஆக்ரோ‌ஷத்தை நீங்கள் பெறுகிறீர்கள்.



    அவர் சவால்களை உற்சாகத்துடன் எதிர்கொள்கிறார். எப்போதும் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறார். தான் மட்டுமல்ல தனது நாடும் வெற்றி பெற வேண்டும் என்றே கருதுகிறார்.

    பெர்த் டெஸ்டில் கோலியும், டிம்பெய்னும் தங்களது எல்லையை தாண்டவில்லை. வேடிக்கையாக பேசி கொண்டனர். அவர்கள் ஜாலியாக பேசுவது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி இருந்தது என்றார். #ViratKholi #AUSvIND #AllanBorder
    ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை இந்திய அணியால் வெல்ல இயலாது என்று அந்நாட்டு முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். #AUSvIND #RickyPonting
    பெர்த்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

    4 டெஸ்ட் தொடரில் அடிலெய்டுவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் டெஸ்ட் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை இந்திய அணியால் வெல்ல இயலாது என்று அந்நாட்டு முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இந்த டெஸ்ட் தொடரில் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளையும் கவனித்து வருகிறேன். இந்திய அணியால் இந்த டெஸ்ட் தொடரை நிச்சயமாக வெல்ல முடியாது. ஏனென்றால் இந்தியாவின் பேட்டிங் வரிசை மோசமாகவே இருக்கிறது. பெர்த் டெஸ்டில் இது வெட்டவெளிச்சமாகி விட்டது.

    தொடக்க வீரர் காயம், புதிய வீரரை அடுத்த டெஸ்டில் களம் இறக்குதல் போன்ற சூழல் இந்திய வீரர்களின் மனநிலையை பாதிக்கும்.

    ஆஸ்திரேலிய அணி மெல்போர்னில் நடைபெறும் அடுத்த போட்டிக்கு பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டாம். மிகவும் அமைதியாக ஆடினாலே இந்தியாவை எளிதில் வென்றுவிடலாம்.

    மெல்போர்ன், சிட்னி ஆடுகளங்கள் இந்திய வீரர்களுக்கு ஏற்றவையாக இருந்தாலும் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெறும். அந்த அணியின் வெற்றி நீடிக்கும்.

    இவ்வாறு பாண்டிங் கூறியுள்ளார். #AUSvIND #RickyPonting
    எந்த வீரரும் காயம் அடையாத பட்சத்தில் கடைசி இரு டெஸ்டில் லோகேஷ் ராகுலுக்கு விளையாட வாய்ப்பு அளிக்கக்கூடாது என இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். #SunilGavaskar #KLRahul #IndiavsAustralia
    மும்பை:

    பெர்த்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் 4 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமனிலை வகிக்கிறது. 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந்தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. பெர்த் டெஸ்டில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். குறிப்பாக இந்த டெஸ்டில் சொதப்பிய ராகுலை (2 ரன் மற்றும் 0) கடுமையாக விமர்சித்துள்ளார். கவாஸ்கர் கூறியதாவது:-



    தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இருந்து நமது அணியில் வீரர்கள் தேர்வில் தொடர்ந்து மிகப்பெரிய தவறு நடந்து வருகிறது. இதனால் பாதிப்பு அணிக்கு தான். வீரர்கள் தேர்வு சரியாக இருந்திருந்தால் பல போட்டிகளில் வெற்றி பெற்று இருக்க முடியும். குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை களைந்து, சரியான கலவையில் அணியை தேர்வு செய்தால் நிச்சயம் எஞ்சிய இரு டெஸ்டில் வெற்றி பெற முடியும். ஸ்டீவன் சுமித், வார்னர் ஆகியோர் இல்லாத ஆஸ்திரேலிய அணியை வெல்ல முடியாமல் போனால், அதன் பிறகு இந்திய கேப்டன், பயிற்சியாளர், உதவி பயிற்சியாளர்கள் ஆகியோரின் பங்களிப்பு குறித்து தேர்வு குழு சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.

    எந்த வீரரும் காயம் அடையாத பட்சத்தில் கடைசி இரு டெஸ்டில் லோகேஷ் ராகுலுக்கு விளையாட வாய்ப்பு அளிக்கக்கூடாது. அவர் தாயகம் திரும்பி, கர்நாடக அணிக்காக ரஞ்சி கிரிக்கெட்டில் ஆட வேண்டும் என்று கருதுகிறேன். பெர்த் டெஸ்டின் முதலாவது நாளில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்கள் மார்கஸ் ஹாரிசும், ஆரோன் பிஞ்சும் வேகப்பந்து வீச்சுக்கு உகந்த சூழலை நன்றாக சமாளித்து நிலைத்து நின்று ஆடியதே போட்டியில் திருப்பு முனையாகும்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.  #SunilGavaskar #KLRahul #IndiavsAustralia
    ×