search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியூசிலாந்து"

    பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சதம் விளாசி புதிய சாதனை படைத்தார். #HarmanpreetKaur #WomenWorldT20 #India #NewZealand
    கயானா:

    பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.



    இதில் கயானாவின் புரோவிடென்சில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. விக்கெட் கீப்பர் தானியா பாட்டியா (9 ரன்), நட்சத்திர வீராங்கனை மந்தனா (2 ரன்) ஒற்றை இலக்கில் வீழ்ந்து சொதப்பினர். அடுத்து வந்த அறிமுக வீராங்கனை ஹேமலதாவும் (15 ரன்) நிலைக்கவில்லை.

    இதன் பின்னர் ஜெமிமா ரோட்ரிக்சும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் கைகோர்த்து அணியை நிமிர வைத்தனர். விக்கெட் சரிவை பற்றி கவலைப்படாமல் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியில் அமர்க்களப்படுத்தினார். அவ்வப்போது சிக்சர்களும் பறந்தன. இதனால் ஸ்கோர் மளமளவென எகிறியது. இவர்கள் 4-வது விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவூட்டினர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 59 ரன்களில் (45 பந்து, 7 பவுண்டரி) ஆட்டம் இழந்தார்.

    மறுமுனையில் நியூசிலாந்து பந்து வீச்சை சிதறடித்து ரன்மழை பொழிந்த ஹர்மன்பிரீத் கவுர், 49 பந்துகளில் சதத்தை எட்டினார். இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். அத்துடன் 20 ஓவர் உலக கோப்பையில் சதம் கண்ட 3-வது வீராங்கனை என்ற சிறப்பையும் பஞ்சாப்பை சேர்ந்த 29 வயதான ஹர்மன்பிரீத் கவுர் பெற்றார். ஒரு பந்து எஞ்சியிருந்த நிலையில் ஹர்மன்பிரீத் கவுர் (103 ரன், 51 பந்து, 7 பவுண்டரி, 8 சிக்சர்) விக்கெட் கீப்பர் கேட்டியிடம் கேட்ச் ஆனார்.

    நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. நமது வீராங்கனைகள் கடைசி 7 ஓவர்களில் மட்டும் 96 ரன்கள் திரட்டினர். 20 ஓவர் உலக கோப்பையில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்ததே சிறந்த ஸ்கோராக இருந்தது.



    அடுத்து 195 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியில் சுசி பேட்ஸ் மட்டும் நிலைத்து நின்று குடைச்சல் கொடுத்தார். மற்ற வீராங்கனைகள் இந்திய பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திண்டாடினர். அரைசதத்தை கடந்த சுசி பேட்ஸ் 67 ரன்களில் (50 பந்து, 8 பவுண்டரி) கேட்ச் ஆனதும் ஆட்டம் முழுமையாக இந்தியா பக்கம் திரும்பியது.

    20 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட்டுக்கு 160 ரன்களே எடுத்தது. இதன் மூலம் இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுழற்பந்து வீச்சாளர்கள் ஹேமலதா, பூனம் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானை நாளை (ஞாயிற்றுக்கிழமை) சந்திக்கிறது.
    10 அணிகள் இடையிலான பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்துடன் மோதுகிறது. #WomenWorldCup #T20 #India #NewZealand
    கயானா:

    பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 24-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.



    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    20 ஓவர் உலக கோப்பையை அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி 3 முறை (2010, 2012, 2014) வென்றுள்ளது. இங்கிலாந்து (2009), வெஸ்ட் இண்டீஸ் (2016) அணிகள் தலா ஒரு முறை வாகை சூடியுள்ளன. இந்திய அணி உலக கோப்பையை வென்றதில்லை. இறுதிப்போட்டிக்கு கூட முன்னேறியதில்லை. 2009, 2010-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டிகளில் அரைஇறுதியை எட்டியதே இந்தியாவின் சிறப்பான செயல்பாடாகும்.

    50 ஓவர் போட்டியில் ஓரளவு நன்றாக ஆடும் இந்திய அணி, 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் பெரிய அளவில் ஜொலித்ததில்லை. கடந்த ஜூன் மாதம் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி சுற்றில் வங்காளதேசத்திடம் மண்ணை கவ்வியது. ஆனாலும் தற்போதைய பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொஞ்சம் நம்பிக்கை அளிக்கிறது. மூத்த வீராங்கனை மிதாலி ராஜ், மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோரைத் தான் இந்திய அணி பேட்டிங்கில் மலை போல் நம்பி இருக்கிறது. இதே போல் சுழற்பந்து வீச்சாளர்கள் பூனம் யாதவ், எக்தா பிஷ்ட், தீப்தி ஷர்மா ஆகியோர் மிரட்டினால் இந்தியாவின் கை ஓங்கும்.

    இந்த போட்டியை பொறுத்தவரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் தான் வலுமிக்கதாக திகழ்கிறது. எனவே இந்திய அணி தனது பிரிவில் ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்தை தோற்கடித்தால் மட்டுமே அரை இறுதியை பற்றி நினைத்து பார்க்க முடியும். அதனால் கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. கடந்த மூன்று உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணி லீக் சுற்றை தாண்டவில்லை. இந்த முறையாவது எழுச்சி பெறுமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

    இந்திய துணை கேப்டன் மந்தனா கூறுகையில், ‘சமீபத்தில் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றினோம். தனிப்பட்ட முறையில் நான் அந்த தொடரில் போதிய ரன்கள் எடுக்கவில்லை. ஒரு ஆட்டத்தில் நானும், ஹர்மன்பிரீத் கவுரும் சரியாக ஆடவில்லை. ஆனாலும் மற்ற வீராங்கனைகளின் சிறப்பான ஆட்டத்தால் 170 ரன்கள் குவித்தோம். இதே போல் கடந்த மூன்று மாதங்களில் பந்துவீச்சிலும் பெரிய அளவில் மேம்பட்டு இருக்கிறோம். கடந்த உலக கோப்பையுடன் ஒப்பிடும் போது பீல்டிங்கிலும் முன்னேற்றம் அடைந்துள்ளோம்’ என்றார்.

    இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரமேஷ் பவார், இந்திய பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். எதை பற்றியும் கவலைப்படாமல் அதிரடியாக ஆட வேண்டும் என்று வீராங்கனைகளுக்கு அறிவுரை வழங்கியுள்ள ரமேஷ் பவார், ‘தனிப்பட்ட வீராங்கனைகளின் திறமை மேம்பட்டால், அணியும் வளர்ச்சி அடையும். அந்த வகையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் நன்கு முன்னேற்றம் கண்டுள்ளது. இது போன்ற ‘மெகா’ போட்டிகளில் சாதனைகள் முறியடிக்கப்படும் போது தான் அனைவராலும் கவனிக்கப்படுவார்கள். அதைத் தான் இந்த தொடரில் எதிர்பார்க்கிறேன். யாராவது ஒரு இந்திய வீராங்கனை சதம் அடிக்க வேண்டும், மற்றொருவர் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்த வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று குறிப்பிட்டார்.

    தொடக்க நாளான இன்று மூன்று ஆட்டங்கள் நடக்கின்றன. புரோவிடென்சில் நடக்கும் முதலாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி இந்த ஆட்டம் இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. மற்ற ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் (இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணி), வெஸ்ட் இண்டீஸ்-வங்காளதேசம் (இந்திய நேரப்படி மறுநாள் அதிகாலை 5.30 மணி) ஆகிய அணிகள் மோதுகின்றன.

    போட்டிக்கான இந்திய அணி வருமாறு:-

    ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிரிதி மந்தனா (துணை கேப்டன்), மிதாலி ராஜ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், வேதா கிருஷ்ணமூர்த்தி, தீப்தி ஷர்மா, தான்யா பாட்டியா, பூனம் யாதவ், ராதா யாதவ், அனுஜா பட்டீல், எக்தா பிஷ்ட், ஹேமலதா, மன்சி ஜோஷி, பூஜா வஸ்ட்ராகர், அருந்ததி ரெட்டி.

    இந்திய அணி மற்ற ஆட்டங்களில் 11-ந்தேதி பாகிஸ்தானையும், 15-ந்தேதி அயர்லாந்தையும், 17-ந்தேதி ஆஸ்திரேலியாவையும் எதிர்கொள்கிறது. இந்திய அணி ஆடும் ஆட்டங்கள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும். போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    நடுவர்களின் தீர்ப்பில் சந்தேகம் இருந்தால் அதை எதிர்த்து அப்பீல் செய்யும் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் பெண்கள் 20 ஓவர் உலக கோப்பையில் முதல்முறையாக பயன்படுத்தப்பட இருக்கிறது. 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த போட்டி நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. வழக்கமாக ஆண்கள் 20 ஓவர் உலக கோப்பையோடு தான் பெண்கள் உலக கோப்பையும் நடத்தப்படும். இந்த தடவை தான் பெண்கள் உலக கோப்பை தனியாக நடத்தப்படுகிறது. 
    பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். #PAKvNZ #NZvPAK #TrentBoult
    அபுதாபி:

    பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் சேர்த்தது. ராஸ் டெய்லர் (80 ரன்), டாம் லாதம் (68 ரன்) அரைசதம் அடித்தனர்.

    தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் திணறினர். 34 ஓவர் முடிந்திருந்த போது அந்த அணி 6 விக்கெட்டுக்கு 131 ரன்களுடன் தத்தளித்துக் கொண்டிருந்தது. பஹார் ஜமான் (1 ரன்), பாபர் அசாம் (0), முகமது ஹபீஸ் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் வரிசையாக கபளகரம் செய்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.



    ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்திய 3-வது நியூசிலாந்து வீரர் போல்ட் ஆவார். டேனி மோரிசன் (இந்தியாவுக்கு எதிராக, 1994-ம் ஆண்டு), ஷேன் பான்ட் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2007) ஆகியோர் ஏற்கனவே நியூசிலாந்து அணியில் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தவர்கள் ஆவர். #PAKvNZ #NZvPAK #TrentBoult


    அபுதாபியில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது. #PAKvNZ
    அபுதாபி:

    பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 80 ரன்கள் விளாசினார். லாதம் 68 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷஹீன் அப்ரிடீ, சதாப் கான் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    இதையடுத்து 267 ரன்கள் என்ற வெற்றி இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணிக்கு, நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர். குறிப்பாக மூன்றாவது ஓவரில் பஹார் ஜமான் (1 ரன்), பாபர் அசாம் (0), முகமது ஹபீஸ் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் வரிசையாக வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

    அதன்பின்னரும் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்த பாகிஸ்தான், ரன் குவிக்க திணறியது. கடுமையாக போராடிய சர்பிராஸ் அகமது 64 ரன்களும், இமாத் வாசிம் 50 ரன்களும் எடுத்து ஆறுதல் அளித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 47.2 ஓவர்களில் 219 ரன்களில் பாகிஸ்தான் ஆல் அவுட் ஆனது. இதனால், நியூசிலாந்து அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய டிரென்ட் போல்ட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளும் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. #PAKvNZ    
    துபாயில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் தொடரையும் கைப்பற்றியது. #PAKvNZ
    துபாய்:

    பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர் அபுதாபியில் நடைபெறுகிறது. முதல் டி 20 போட்டியில் 2 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டி-20 போட்டி அபுதாபியில் நேற்று நடைபெற்றது. 

    டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் காலின் முன்ரோ 28 பந்துகளில் 44 ரன்களும், கேப்டன் கேன் வில்லியம்சன்37 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.  

    கோரி ஆண்டர்சன் 22 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இறுதியில், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் ஷகின் அப்ரிதி 3 விக்கெட் எடுத்தார்.



    இதையடுத்து, 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. பாபர் அசாம் 40 ரன்களிலும், அசிப் அலி 38 ரன்களிலும், பகர் சமான் 24 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.

    ஆட்டத்தின் இறுதியில், மொகமது ஹபீஸ் நிலைத்து நின்று ஆடி 21 பந்துகளில் 34 ரன்கள் எடுத்துஅவுட்டாகாமல் பாகிஸ்தானை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். நியூசிலாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    ஆட்ட நாயகனாக ஷகின் அப்ரிதி தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் 2-0 என டி 20 தொடரை கைப்பற்றியுள்ளது. #PAKvNZ
    அபுதாபியில் நேற்று நடைபெற்ற முதலாவது டி-20 போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை 2 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது. #PAKvNZ
    அபுதாபி:

    பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர் அபுதாபியில் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற முதலாவது டி-20 போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் மொகமது ஹபீஸ் 45 ரன்னும், சர்ப்ராஸ் அகமது 34 ரன்னும் அடித்து அவுட்டாகினர். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இறுதியில், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது.



    இதைத்தொடர்ந்து, 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. காலின் மன்ரோ பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு ராஸ் டெய்லர் ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 42 ரன்னில் அவுட்டாகாமல் இருந்தார்.

    கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. ஒருபுறம் ராஸ் டெய்லர் நின்றாலும், அந்த ஓவரில் 2 பவுண்டரி உள்பட 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 

    இதையடுத்து, 2 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான். இந்த வெற்றியை தொடர்ந்து, பாகிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்கிறது. #PAKvNZ
    பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பனிமலைகளும், எரிமலைகளும் நிறைந்த நியூசிலாந்து நாட்டின் கெர்மாடெக் தீவில் சுமார் 5.5 ரிக்டர் அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. #Earthquake
    வெலிங்டன்:

    தென்மேற்கு பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பனிமலைகளும், எரிமலைகளும் நிறைந்த நியூசிலாந்து நாட்டின் கெர்மாடெக் தீவில் 5.5 ரிக்டர் அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. 

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்ட அதிர்வை உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.  #Earthquake
    இந்தியா - நியூசிலாந்து ஆண்கள் ஹாக்கி அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் நியூசிலாந்தை 4-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது. #India #NewZealand #hockey
    இந்தியா - நியூசிலாந்து ஆண்கள் ஹாக்கி அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை பந்தாடியது. இந்திய அணியில் ரூபிந்தர்சிங் (8-வது நிமிடம்), சுரேந்தர் (15-வது நிமிடம்), மன்தீப்சிங் (44-வது நிமிடம்), ஆகாஷ்தீப்சிங் (60-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர். ஏற்கனவே முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி கண்டிருந்த இந்திய அணி இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக தனதாக்கியது. #India #NewZealand #hockey 
    இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது. #India #NewZealand #Hockey
    பெங்களூரு:

    நியூசிலாந்து ஆக்கி அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

    இந்திய அணியில் ரூபிந்தர் பால்சிங் 2-வது மற்றும் 34-வது நிமிடத்திலும், மன்தீப்சிங் 15-வது நிமிடத்திலும், ஹர்மன்பிரீத் சிங் 38-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் ஸ்டீபன்ஸ் ஜென்னெஸ் 26-வது மற்றும் 55-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார். 
    நியூசிலாந்தின் டவுரங்கா நகரில் லாரியும் காரும் மோதிய விபத்தில் இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. #Accident
    மெல்போர்ன்:

    நியூசிலாந்து நாட்டின் ஒஹால்டி பகுதியில் வசித்து வந்தவர் பர்மிந்தர் ஜபால் (27). இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவர் நேற்று காலை தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

    டவுரங்கா நகரில் நெடுஞ்சாலை எண் 36ல் கார் சென்றபோது லாரி மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பர்மிந்தர் ஜபால் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்து விபத்து பிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்றனர். காயமடைந்த லாரி டிரைவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இந்திய அணியுடனான கால்பந்து போட்டியில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. #INDvNZL #WeAreIndia #BackTheBlue #IntercontinentalCup

    புதுடெல்லி:

    இந்தியா, கென்யா, சீன தைபே, நியூசிலாந்து ஆகிய நான்கு நாடுகளின் கால்பந்து அணிகள் பங்குபெறும் இண்டர்காண்டினெண்டல் கோப்பை மும்பையில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் வருகிற 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் கென்யாவை 3-0 என வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 47-வது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் சுனில் செத்ரி கோல் அடித்தார். இது அவரின் 62-வது சர்வதேச கோலாகும். இதனால் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. 



    அதைத்தொடர்ந்து 49-வது நிமிடத்தில் நியூசிலாந்து வீரர் டி ஜாங் கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 86-வது நிமிடத்தில் டயர் நியூசிலாந்து அணிக்காக இரண்டாவது கோல் அடித்தார். அதன்பின் இந்திய அணியினர் எவ்வளவு முயன்றும் இறுதிவரை மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. #INDvNZL #WeAreIndia #BackTheBlue #IntercontinentalCup 
    நியூசிலாந்து நாட்டில் மைக்கோபிளாஸ்மா போவிஸ் எனப்படும் பாக்டீரியா நோயை தடுக்கும் வகையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பசுக்களை கொல்ல அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Mycoplasmabovis

    வெல்லிங்டன்:

    உலகளவில் பால் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது. உலகின் மொத்த உற்பத்தில் 3 சதவீதம் அந்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. நியூசிலாந்தில் மொத்தம் சுமார் 66 லட்சம் பசு மாடுகள் உள்ளன. 

    இந்நிலையில், கடந்தாண்டு ஜூலை மாதம் பசுக்களில் நிமோனியா உள்ளிட்ட நோய்களை உண்டாக்கும் மைக்கோபிளாஸ்மா போவிஸ் எனப்படும் பாக்டீரியா அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கண்டறியப்பட்டது. இந்த பாக்டீரியாவினால், உணவு பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றாலும், நியூசிலாந்தின் முக்கியதொழில் வளமான பால்வளம் மற்றும் கால்நடை உற்பத்தியை பாதிக்கும் என்று கருதப்படுகிறது. 

    இதனால், பண்ணைகளில் பாக்டீரியா தொற்றுக்கு உள்ளான பசுக்களுடன், ஆரோக்கியமாக உள்ள பசுக்களையும் கொல்ல நியூசிலாந்து அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாக்டீரியா தாக்குதலுக்கு உள்ளான பசுக்களை கொன்று, எரிக்கவும், பாக்டீரியா தாக்காத பசுக்களை மரங்களுக்கு உரமாகவும், உணவிற்காகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் சுமார் 1,50,000 பசுக்களை கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. 



    பசுக்கள் கொல்லப்படுவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் கூறுகையில், இது போன்ற பசு ஒழிப்பு நடவடிக்கையை யாரும் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால், இந்த நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால், நியூசிலாந்து நாட்டின் கால்நடை வளம் அழிந்து விடும். இதற்கு உடனே நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், நாட்டில் உள்ள 2000 பால் பண்ணைகள் மற்றும் மாட்டிறைச்சி நிலையங்களை காக்க முடியாமல் போய்விடும், என்று தெரிவித்துள்ளார். #Mycoplasmabovis
    ×