search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா.ஜனதா"

    ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், பா.ஜனதா குற்றச்சாட்டுக்கு சோனியா காந்தியின் மருமகன் மறுப்பு தெரிவித்துள்ளார். #RafaleDeal #RobertVadra #BJP
    புதுடெல்லி:

    காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின்போது, சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு நெருக்கமான நிறுவனத்தை பங்குதார நிறுவனமாக சேர்த்துக்கொள்ள பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனம் மறுத்து விட்டதால்தான், அந்த பேரத்தை காங்கிரஸ் அரசு முறித்துக்கொண்டதாக பா.ஜனதா சமீபத்தில் குற்றம் சாட்டியது.



    இதற்கு ராபர்ட் வதேரா நேற்று மறுப்பு தெரிவித்தார். தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

    பா.ஜனதா கடந்த 4 ஆண்டுகளாக எனக்கு எதிராக அடிப்படையற்ற அரசியல் அவதூறுகளை பரப்பி வருகிறது. எனக்கு தொடக்கத்தில் அது வியப்பாக இருந்தது. ஆனால், இப்போது அது முழுமையான கேலிக்கூத்தாக தோன்றுகிறது.

    ஏனென்றால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, எரிபொருள் விலை உயர்வு என எந்த பிரச்சினையில் நெருக்கடியில் சிக்கினாலும், பா.ஜனதா எனது பெயரை இழுத்து வருகிறது.

    அதிலும், ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், பா.ஜனதா முழுமையாக அம்பலப்பட்டு நிற்கிறது. பொய்களின் பின்னால் ஒளிந்து கொள்வதை பா.ஜனதா நிறுத்த வேண்டும். அவர்கள் திரும்பத்திரும்ப சொல்வதை கேட்டு மக்கள் வெறுத்துப்போய் விட்டனர்.

    அதற்கு பதிலாக 56 அங்குல மார்பை நிமிர்த்திக்கொண்டு, இந்த விவகாரத்தில் உண்மையை சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மன்மோகன் சிங் அரசு நடந்தபோது, அந்த அரசு துணிச்சலாக செயல்பட வேண்டும் என்ற பொருளில், ‘56 அங்குல மார்பு வேண்டும்’ என்ற சொற்றொடரை நரேந்திர மோடி பயன்படுத்தி வந்தார். அதை சுட்டிக்காட்டும் வகையில், அதே சொற்றொடரை ராபர்ட் வதேரா பயன்படுத்தி உள்ளார்.  #RafaleDeal #RobertVadra #BJP
    விலைவாசி உயர்வை விரைவில் கட்டுப்படுத்தாவிட்டால் பா.ஜனதாவுக்கு பாதிப்பு ஏற்படும் என ராம்தேவ் எச்சரிக்கை விடுத்து உள்ளார். #Ramdev #FuelPriceHike
    புதுடெல்லி:

    டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற யோகா குரு ராம்தேவ், இளைஞர்களுடன் கலந்துரையாடினார். அப்போது மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:-

    மோடி அரசின் கொள்கைகளை ஏராளமானோர் பாராட்டி உள்ளனர். ஆனால் சில கொள்கைகளை திருத்தியமைக்க வேண்டிய தேவை இருக்கிறது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் விலைவாசி, மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்து இருக்கிறது. எனவே இதை மோடி உடனடியாக சரிசெய்ய வேண்டும்.



    பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை உடனே தொடங்க வேண்டும். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்து, அதற்கு குறைவான வரி விதிக்க வேண்டும்.

    இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறினால் மோடி அரசு மிகப்பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்படும்.

    நான் வலதுசாரியும் இல்லை, இடதுசாரியும் இல்லை. மாறாக ஒரு நடுநிலைவாதி. வலுவான தேசியவாதியும் கூட. முக்கியமான பிரச்சினைகள் பலவற்றில் நான் மவுனம் சாதித்ததால், நான் யாருக்கும் தேவையில்லை.

    2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். ஆனால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்யப்போவது இல்லை. அரசியலில் இருந்து விலகிவிட்டேன். அனைத்து கட்சிகளுடனும் நான் இருக்கிறேன். நான் சுதந்திரமாக இருக்கிறேன்.

    ‘தூய்மை இந்தியா’ போன்ற திட்டங்களை செயல்படுத்தியும், பெரிய ஊழல் எதுவும் நடக்க அனுமதிக்காமலும் பிரதமர் மோடி சிறப்பாக செயலாற்றுகிறார். எனினும் அவரை விமர்சிப்பது மக்களின் அடிப்படை உரிமை ஆகும்.

    இவ்வாறு ராம்தேவ் கூறினார். #Ramdev #FuelPriceHike
    விஜய் மல்லையா நாட்டை விட்டு தப்பி ஓடியதற்கு காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளே காரணம் என்று மாயாவதி குற்றம்சாட்டினார். #Mayawati #VijayMallya
    லக்னோ:

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தான் வசித்த அரசு பங்களாவை காலி செய்துவிட்டு லக்னோ நகரில் புது வீட்டில் குடியேறிய பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது நாடாளுமன்றம் மற்றும் விரைவில் நடைபெற இருக்கும் 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

    நாடாளுமன்ற தேர்தல் என்றாலும் சரி, மாநில சட்டசபை தேர்தல்கள் என்றாலும் சரி எங்களுக்கு மதிப்பளித்து கணிசமான தொகுதிகளை ஒதுக்கினால் மட்டுமே கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். இல்லையென்றால் பகுஜன் சமாஜ் தனித்தே களம் இறங்கும்.

    நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளுக்கு சம பொறுப்பு உள்ளது. இதனால்தான் சில தொழில் அதிபர்கள் தொழில் முதலீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. நாட்டை கொள்ளையடித்து விட்டு தொழில் அதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பி ஓடியதற்கும் இந்த 2 கட்சிகளுமே முக்கிய காரணம்.



    பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. இது ஜனநாயகத்தின் மீது படியும் கறை ஆகும். இப்பிரச்சினையில் பா.ஜனதா ஆளும் மாநில அரசுகள் மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கின்றன.

    2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், மக்களை பிளவுபடுத்தி ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா இதே தந்திரத்தை கையாள முயற்சிக்கிறது. கவர்ச்சிகரமான அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. வாஜ்பாய் உயிருடன் இருந்தவரை ஒரு நாளும் பா.ஜனதா அவருடைய வழியை பின்பற்றி நடந்தது இல்லை. தற்போது பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும், தங்களது தோல்விகளை மறைக்க வாஜ்பாயின் பெயரை பயன்படுத்தத் தொடங்கி உள்ளன. இதனால் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Mayawati #VijayMallya
    அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பா.ஜனதாவை வீழ்த்தும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார். #PetrolDieselPriceHike #BharatBandh #RahulGandhi #ModiRule
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் நேற்று ‘பாரத் பந்த்’ என்னும் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடந்த கண்டன கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அகமது பட்டேல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங், லோக் தந்திரிக் ஜனதாதளம் தலைவர் சரத்யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுகேந்து சேகர் ராய் மற்றும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட 20 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.



    முன்னதாக கயிலாய மானசரோவர் புனித யாத்திரை முடிந்து டெல்லி திரும்பிய ராகுல்காந்தி நேற்று காலை ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்றார். அங்கு மானசரோவர் ஏரியின் நீரை தெளித்து மரியாதை செய்தார்.

    பின்னர் அங்கிருந்து காங்கிரஸ், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் புறப்பட்டு ஊர்வலமாக ராம் லீலா மைதானத்துக்கு வந்தார்.

    அங்கு அனைத்து எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன கூட்டத்தில் பங்கேற்று ராகுல் காந்தி ஆவேசமாக பேசியதாவது:-

    4 ஆண்டுகளுக்கு முன்பு மோடி பிரதமர் பதவி ஏற்றபோது கடந்த 70 ஆண்டுகளில் எதுவும் நடக்கவில்லை. அதை நாங்கள் 4 ஆண்டுகளில் முடித்துக் காட்டுவோம் என்றார். அவர் சொன்னது உண்மைதான். ஆம் கடந்த 4 ஆண்டுகளில் நடந்துள்ள அனைத்தும் அதற்கு முந்தயை 70 ஆண்டுகளில் எப்போதும் நிகழ்ந்திடாதவை ஆகும்.

    இந்த 4 வருடங்களில் நாட்டு மக்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதை உங்களால் காண முடிகிறது. நீங்கள் எங்கே சென்றாலும் மத ரீதியாக, சாதி ரீதியாக மக்கள் பிளவுபட்டு இருப்பதையும் பார்க்க முடிகிறது. அதுமட்டுமின்றி ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்துக்கு எதிராக செயல்படுவதையும் காணலாம்.

    எரிபொருளின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதுபற்றி பிரதமர் எதுவும் பேசாமல் மவுனம் சாதிக்கிறார். இதேபோல் ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் நடந்துள்ள ஊழல் பற்றி வாய்திறக்க மறுக்கிறார். விவசாயிகள் தற்கொலை, பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள், வேலைவாய்ப்பு பிரச்சினை ஆகியவை குறித்தும் எதுவும் பேசுவதில்லை.

    பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. ரூபாயின் மதிப்பும் சரிந்துள்ளது. ஆனால் இதுபற்றி மோடி எதுவும் கூற மறுக்கிறார். 4 வருடங்களுக்கு முன்பு தேர்தல் பிரசாரத்தின்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை கடுமையாக கண்டித்துப் பேசினார். இப்போதோ மவுனமாக இருக்கிறார்.

    இங்கே அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் ஒரே மேடையில் அமர்ந்து இருக்கிறோம். இது எங்களிடையே இருக்கும் ஒற்றுமையை காட்டுகிறது. எங்களிடையே உள்ள சித்தாந்தங்களை பகிர்ந்து கொண்டு அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பா.ஜனதாவை வீழ்த்தும்.

    நாட்டு மக்களின் துயரங்களையும், வேதனையையும் எதிர்க்கட்சிகள் உணர்ந்துள்ளன. ஆனால் மோடி இதுபற்றி எதையும் அறியாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. இதுதான் எதிர்க்கட்சிகளாகிய எங்களுக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம். இந்த இடத்தில் இருந்து நாங்கள் உறுதியளிக்கிறோம். நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசும்போது, பொதுமக்கள் இந்த அரசின் மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர். விவசாயிகள், சிறு வணிகர்கள் மிகுந்த துயரத்தில் இருக்கின்றனர். வேலைவாய்ப்புகள் இல்லாமல் இளைஞர்கள் கவலையோடு காணப்படுகின்றனர். அரசியல் கட்சிகள் தங்களுக்குள் உள்ள சிறுசிறு கருத்துவேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு பா.ஜனதா அரசுக்கு எதிராக போராட ஒருங்கிணையவேண்டும். நாட்டுக்கு நிறைய செய்து இருக்கிறோம் என்று மோடி அரசு கூறுகிறது. ஆனால் அது நாட்டின் நலன்களுக்கானது அல்ல. இந்த அரசு அனைத்து எல்லைகளையும் மீறி விட்டது. நமது ஜனநாயகத்தை பாதுகாக்க நாம் அனைவரும் தயாராவோம். இந்த அரசாங்கத்தை மாற்றுவதற்குரிய சரியான நேரம் விரைவில் வரும் என்றார்.

    இந்த கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி கலந்துகொண்டாலும் உடல் நலக்குறைவு காரணமாக அவர் பேசவில்லை.

    கூட்டம் தொடங்கியபோது 20 கட்சிகளின் தலைவர்களும் ஒன்றாக எழுந்து நின்று ஒருவருக்கொருவர் கைகோர்த்து மோடி அரசுக்கு எதிராக தங்களது ஒற்றுமையை காண்பித்தது, குறிப்பிடத்தக்கது.  #PetrolDieselPriceHike #BharatBandh #RahulGandhi #ModiRule
    நீங்கள் காதலிக்கும் பெண் உங்களது பெற்றோருக்கு பிடித்து விட்டால், அந்த பெண்ணை நான் கடத்தி கொண்டு வந்து உங்களிடம் கொடுத்து விடுகிறேன் என்று பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம் கூறிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #BJP #RamKadam
    மும்பை:

    மும்பையில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி நிகழ்ச்சிகள் நடந்தன. காட்கோபரில் பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம் ஏற்பாட்டில் உறியடி நிகழ்ச்சி நடந்தது.

    கூட்டத்தில் ராம் கதம் பேசும்போது, தாங்கள் விரும்பும் பெண்கள் காதலை ஏற்க மறுக்கிறார்கள் என பல இளைஞர்கள் என்னிடம் உதவி கேட்கிறார்கள். நீங்கள் உங்களது பெற்றோரை அழைத்து கொண்டு என்னிடம் வாருங்கள். நீங்கள் காதலிக்கும் பெண்ணை அவர்களுக்கு பிடித்து விட்டால், அந்த பெண்ணை நான் கடத்தி கொண்டு வந்து உங்களிடம் கொடுத்து விடுகிறேன் என்றார்.

    ராம் கதமின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ காட்சி நேற்று வைரலாகியது. அவரது இந்த பேச்சுக்கு பல்வேறு கட்சி தரப்பில் கண்டனங்கள் எழுந்து உள்ளன.

    இது தொடர்பாக ராம் கதம் எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது, நான் சர்ச்சைக்குரிய வகையில் பேசவில்லை, என்னுடைய பேச்சு திரித்து வெளியிடப்பட்டு உள்ளது என்றார்.  #BJP #RamKadam
    கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா பகல் கனவு காண்கிறது. அந்த கனவு பலிக்காது என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார். #BJP #Siddaramaiah
    உப்பள்ளி :

    முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    இனி தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று நான் முன்பு கூறினேன். தற்போது நான் அடுத்த தேர்தலில் போட்டியிடுவேன் என்று எங்கும் சொல்லவில்லை. மக்கள் ஆசிர்வதித்தால் மீண்டும் முதல்-மந்திரியாவேன் என்று தான் சொன்னேன். இந்த கருத்துக்கு பல்வேறு அர்த்தங்களை கற்பிக்க வேண்டாம். காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபாலுக்கு ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் எந்த கடிதமும் எழுதவில்லை.

    பா.ஜனதாவினர் தேவை இல்லாமல் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்கள். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது செயல்படுத்தப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் இந்த கூட்டணி அரசு நிதியை ஒதுக்கி வருகிறது. அனைத்து திட்டங்களும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுகுறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும்.



    கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு வருகின்றன. அனைத்து மந்திரிகளும் நல்ல முறையில் பணியாற்றி வருகிறார்கள். எங்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலர் பா.ஜனதாவில் சேர்ந்து கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பார்கள் என்று கூறுவதில் அர்த்தம் இல்லை. அது தவறானது.

    கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. கூட்டணி ஆட்சியில் எந்த முடிவு எடுக்கப்பட்டாலும் அதன் பயன் கூட்டணியில் உள்ள 2 கட்சிகளுக்கும் சேரும். நான் மீண்டும் முதல்-மந்திரியாவேன் என்று கூறிய கருத்துக்கு மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில் என்ன தவறு உள்ளது?.

    அடுத்து நடைபெறும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் நான் மீண்டும் முதல்-மந்திரியாவேன். கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதாவினர் பகல் கனவு காண்கிறார்கள். அந்த கனவு பலிக்காது. ஆட்சியில் எந்த முடிவு எடுத்தாலும், அதற்கு முன்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அவற்றுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதனால் ஆட்சியில் காங்கிரஸ் புறக்கணிப்படுவதாக கூறுவது அர்த்தமற்றது.

    இவ்வாறு சித்தராமையா கூறினார். #BJP #Siddaramaiah
    அஸ்தியை கரைப்பதில் அரசியல் சாயம் பூசி வாஜ்பாயை பா.ஜனதா சிறுமைப்படுத்துவதாக சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது. #AtalBihariVajpayee #ShivSena
    மும்பை :

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி நாடு முழுவதும் உள்ள நதிகளில் கரைக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதா செய்துள்ளது.

    இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறந்தபின் உருவான அரசியல் வெற்றிடத்தை மோசமான மற்றும் பொருத்தமற்ற வழிகளில் நிரப்புவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

    பா.ஜனதா கட்சியில் மூத்த தலைவர்களுக்கு எந்த ஒரு மரியாதையும் இல்லை. ஆனால் இறந்த மூத்த தலைவர்களின் அஸ்தி மதிப்பு மிக்கதாக கருதப்படுகிறது.

    வாஜ்பாய் இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளாலும் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக கருதப்பட்டார். இதனால் தான் அவரின் இறுதி ஊர்வலத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கலந்துகொண்டனர்.

    ஆனால் இறப்பிற்கு பின் அவரை சிறுமைப்படுத்தும் முயற்சிகள் நடக்கிறது.



    அவர் அஸ்தி கரைக்கப்படும் நிகழ்ச்சி ஒரு கட்சியால் நடத்தப்படுவதாக இருக்க கூடாது. அனைத்து கட்சிகளும் உள்ளடக்கிய ஒரு தேசிய நிகழ்வாக அது நடந்திருக்கவேண்டும்.

    ஜவகர்லால் நேருவும், அடல்பிகாரி வாஜ்பாயும் அரசியல் வட்டத்திற்கு அப்பாற்பட்ட மிகப்பெரிய தலைவர்கள் ஆவர். ஆனால் வாஜ்பாயின் அஸ்தியை கரைக்கும் நிகழ்ச்சிக்கு அரசியல் சாயம் பூசுவது நல்லதல்ல.

    சில மந்திரிகளும், கட்சியின் பொறுப்பாளர்களும் வாஜ்பாயின் அஸ்தி கலசத்தை வாங்கிக்கொண்டு, உலக கோப்பையை வென்றது போன்ற உணர்வை வெளிப்படுத்துகின்றனர்.

    எப்படி அவர்களால் மகிழ்ச்சியுடன் அவரின் அஸ்தியை வாங்க முடிகிறது? இது டி.வி. கேமராக்களில் பதிவாகிறது. சிலர் அந்த அஸ்தி கலசத்துடனேயே ‘செல்பி’ எடுத்து கொள்கின்றனர். இது வாஜ்பாயின் மீது நீங்கள் வைத்துள்ள பாசத்தின் முகமூடியற்ற வெளிப்பாடாகும்.

    வாஜ்பாயின் அஸ்தி அரசியலாக்கப்படுவதை கண்டு அவரின் குடும்பத்தினர் கூட வருத்தப்படுவார்கள். இது ஒரு தீவிரமான பிரச்சினையாகும். இனி யாருக்கும் இதுபோல் நிகழக்கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #AtalBihariVajpayee #ShivSena
    டெல்லியில் பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் அடுத்த மாதம் 8-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. #BJP #ExecutiveMeet
    புதுடெல்லி:

    பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் கடந்த 18, 19-ந் தேதிகளில் நடைபெற இருந்தது. ஆனால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 16-ந் தேதி மரணம் அடைந்ததால் செயற்குழு கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில் பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8, 9-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முதலில் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது.

    இரு நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில், பா.ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல் குறித்தும், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

    கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள், மாநில தலைவர்கள், மாநில பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர் என அக்கட்சியின் தேசிய செயலாளர் தருண் சக் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.

    இதற்கு முன்பு பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.  #BJP #ExecutiveMeet 
    சித்தராமையாவுக்கு துணை ஜனாதிபதி பதவி வழங்கி அவரது ஆதரவாளர்களின் ஆதரவுடன் கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா புது வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #BJP #Siddaramaiah #kumaraswamy
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் முன்பு சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. சித்தராமையா 5 ஆண்டுகள் பதவி காலத்தை முழுமையாக நிறைவு செய்தார். ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாததாலும், பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தியதாலும், சட்டசபை தேர்தலில் மீண்டும் காங்கிரசே வெற்றி பெறும் என்று பெரும்பாலானவர்கள் கணித்தனர்.

    ஆனால் தேர்தல் முடிவுகள் அவ்வாறு அமையவில்லை. இந்த தோல்வியில் இருந்து சித்தராமையாவால் மீள முடியவில்லை. 2 தொகுதிகளில் போட்டியிட்ட அவர் சொந்த தொகுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். பாதாமி தொகுதியிலும் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை எட்டி பறித்தார்.

    எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளன. ஜனதா தளம்(எஸ்) கட்சி முன்னாள் தலைவர் குமாரசாமி முதல்-மந்திரி பதவியில் அமர்ந்துள்ளார். தேவேகவுடாவும், சித்தராமையாவும் அரசியலில் எதிரெதிர் துருவங்களாக உள்ளனர். அவர்கள் அவ்வப்போது பேசிக்கொண்டாலும் இருவரும் அரசியலில் பரம எதிரிகளாகவே பார்க்கப்படுகிறார்கள்.

    குமாரசாமி முதல்-மந்திரி ஆனதை சித்தராமையா சிறிதளவும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்து இந்த அரசின் செயல்பாடுகள் பற்றியோ அல்லது அரசியல் பற்றியோ அதிகம் பேசாமல் சித்தராமையா சற்று ஒதுங்கியே இருக்கிறார். தனது ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை கைவிடும் முடிவை எதிர்த்து குமாரசாமிக்கு 4, 5 கடிதங்களை சித்தராமையா எழுதினார். கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவராக சித்தராமையா இருக்கிறார். இந்த குழுவின் கூட்டம் நடந்து ஏறத்தாழ ஒரு மாதம் ஆகிவிட்டது.

    இந்த நிலையில் சித்தராமையா தனது குடும்பத்தினருடன் வருகிற செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளார். அந்த நேரத்தில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால், காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியின் பெரும்பான்மை பலம் குறைந்துவிடும். இதனால் குமாரசாமியின் கூட்டணி ஆட்சி நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.



    அதே நேரத்தில் பா.ஜனதாவுக்கு தன்னிச்சையாகவே பெரும்பான்மை கிடைத்துவிடும். இதன் மூலம் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமையும் என்று சொல்கிறார்கள். இதுபற்றி தகவல் அறிந்து வைத்துள்ள குமாரசாமி, அந்த திட்டத்தை முறியடிக்க தன்னிடம் ஒரு திட்டத்தை தயாரித்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சிலரை இழுத்து ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள குமாரசாமி திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

    கூட்டணி ஆட்சியை கவிழ்க்க சித்தராமையா ஏன் முயற்சி செய்கிறார் என்ற கேள்வி அனைவரிடமும் எழுகிறது. கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி அமைத்தபோதும், அந்த ஆட்சி அமைந்த பிறகும் சித்தராமையாவை காங்கிரஸ் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக பேசப்படுகிறது. தன்னை புறக்கணித்த காங்கிரசுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்பது தான் சித்தராமையாவின் எண்ணமாக உள்ளதாக சொல்லப்படுகின்றன.

    பா.ஜனதா சார்பில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், சித்தராமையாவை தொடர்பு கொண்டு பேசியதாகவும், 2022-ம் ஆண்டில் துணை ஜனாதிபதி பதவியை வழங்க பா.ஜனதா தயாராக இருப்பதாகவும் கூறியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

    பா.ஜனதா மதவாத கொள்கையை பின்பற்றி வருவதாக மேடைக்கு மேடை பேசி வரும் சித்தராமையா அக்கட்சியை கடுமையாக குறை கூறுகிறார். அப்படிப்பட்ட மதசார்பற்ற கொள்கையை கொண்ட பா.ஜனதாவுக்கு சாதகமாக அவர் செயல்படுவாரா? என்ற கேள்வி மதசார்பற்ற கொள்கையை பின்பற்றும் அரசியல் வாதிகள் இடையே எழுந்துள்ளது.  #BJP #Siddaramaiah #kumaraswamy
    முன்னாள் பிரதமரும், பா.ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய்க்கு மும்பையில் நினைவு சின்னம் அமைக்கப்படும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
    மும்பை :

    முன்னாள் பிரதமரும், பா.ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் கடந்த 16-ந் தேதி உயிரிழந்தார். மும்பையில் அவருக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், உத்தரபிரதேச கவர்னர் ராம் நாயக், ரெயில்வே துறை மந்திரி பியூஷ் கோயல், மாநில பா.ஜனதா தலைவர் ராவ் சாகேப் தன்வே, மந்திரிகள் சுதிர் முங்கண்டிவார், சந்திரகாந்த் பாட்டீல், வினோத் தாவ்டே மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    இதில் மாநிலத்தில் உள்ள கோதாவரி, பஞ்சகங்கா மற்றும் சந்திரபாகா உள்ளிட்ட 14 ஆறுகளில் கரைப்பதற்காக வாஜ்பாயின் அஸ்தியை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வழங்கினார்.

    பின்னர் நிகழ்ச்சியில் முதல்-மந்திரி கூறியதாவது:-

    நாட்டை நேசிப்பதற்கான பாதையை வாஜ்பாய் காட்டியுள்ளார். நாம் அவரை தலைவணங்கி அவர் வகுத்து தந்த பாதையில் பயணிக்க வேண்டும். அவர் தன் சித்தாந்தங்களை வாய்வழியாக மட்டுமே சொல்லவில்லை. அதன்படி வாழ்ந்து காட்டினார்.

    அவர் இந்த நாட்டிற்கு தான் முதலில் முன்னுரிமை அளித்தார். அடுத்ததாக கட்சிக்கு, கடைசியில் தான் அவர் தன்னை பற்றி சிந்தித்தார். வாஜ்பாய் ஒன்றும் பொருளாதார மேதை இல்லை. ஆனால் மனித வளர்ச்சி தேவையானவற்றை அவர் அறிந்திருந்தார். அவர் சமூக நீதியை வலியுறுத்தினார்.

    அவருக்காக மும்பையில் மராட்டிய அரசு நினைவு சின்னம் அமைக்கும். அதற்கான வேலைகள் விரைவில் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    மழை குறைவாக பெய்துள்ள 13 மாவட்டங்களை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா வலியுறுத்தினார்.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 29-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பீதரில் பிரசாரத்தை தொடங்கினார். அவர் தேர்தல் பிரசாரம் செய்ய நேற்று யாதகிரிக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் 13 மாவட்டங்களில் இயல்பை விட மழை குறைவாக பெய்துள்ளது. அந்த மாவட்டங்களில் வறட்சி நிலவுகிறது. இதனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். மாநில அரசு உடனடியாக அந்த 13 மாவட்டங்களையும் வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். அங்கு தேவையான வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) அரசு அமைந்து 3 மாதங்கள் ஆகிறது. ஆனால் இந்த கூட்டணி அரசு இன்னும் செயல்பட தொடங்கவில்லை. அரசு ஊழியர்கள் பணி இடமாற்றத்தில் அதிகளவில் முறைகேடுகள் நடந்து வருகின்றன. இதை தவிர்த்து வேறு எந்த பணிகளும் நடைபெறவில்லை. விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக குமாரசாமி சொன்னார். அதை இன்னும் செய்யவில்லை. விவசாயிகளை குமாரசாமி ஏமாற்றுகிறார்.

    விவசாயிகளின் கஷ்டங் களை தீர்ப்பதில் இந்த அரசு அக்கறை செலுத்தவில்லை. மாநிலத்தில் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஆனால் விவசாயத்துறை மந்திரி வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கோ அல்லது மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கோ சென்று ஆய்வு நடத்தவில்லை. நிவாரண பணிகளை மேற்கொள்ளவில்லை.

    இந்த அரசு பொறுப்புடன் செயல்படவில்லை. ஆட்சி எந்திரம் முழுவதுமாக சீர்குலைந்துவிட்டது. கூட்டணி கட்சியான காங்கிரஸ் இதுபற்றி பேசவில்லை. தவறான ஆட்சி நிர்வாகத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார். 
    வாஜ்பாய் ஆட்சிதான் பொற்காலம் என்றும் மோடியுடன் கூட்டணி சேர்ந்ததால் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் மெகபூபா முப்தி கூறியுள்ளார். #BJP #Modi #MehbubaMufti
    ஜம்மு:

    காஷ்மீரில் மெகபூபா முப்தி தலைமையில் மக்கள் ஜனநாயக கட்சி-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்தது. அங்கு தீவிரவாதிகள் தாக்குதல் நாளுக்குநாள் அதிகரித்ததால் மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது.

    இதனால் மெகபூபா முப்தி முதல்-மந்திரி பதவியை இழந்தார். பா.ஜனதா-மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணியும் முடிவுக்கு வந்தது.

    இந்தநிலையில் மெகபூபா முப்தி ஜம்முவில் நடந்த கூட்டத்தில் பேசுகையில் கூறியதாவது:-

    பிரதமர் மோடி அரசு மற்றும் தற்போதைய பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்ததால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டோம். மோடி அரசுடன் ஒப்பிடும் போது முந்தைய வாஜ்பாய் அரசு ஒரு பொற்காலம் என்று சொல்லலாம்.

    அப்போது நாங்கள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டது. இதனால் தான் எனது தந்தை முப்தி முகமது சயீத் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்துக்கொண்டார். வாஜ்பாயுடன் எங்கள் கட்சிக்கு நல்ல உறவு இருந்தது.

    ஆனால் இப்போது பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்தது வி‌ஷம் குடித்தது போல் ஆகிவிட்டது. அதனுடன் கூட்டணி சேர்ந்ததால் 2 ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டேன்.



    காஷ்மீரைப் பொருத்த வரை முப்தி முகமது சயீத் ஆட்சிதான் பொற்காலமாக இருந்தது. அவரது ஆட்சியின் போது காஷ்மீர் நல்ல வளர்ச்சி அடைந்தது. தீவிரவாதிகள் நடவடிக்கையும் கட்டுக்குள் இருந்தது. எல்லையில் அமைதி நிலவியது. சாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன. ஆனால் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்ததும் வளர்ச்சி தடைபட்டு விட்டது.

    இவ்வாறு அவர் பேசினார். #BJP #Modi #MehbubaMufti
    ×