search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோன்டாவெய்ட்"

    உலக பெண்கள் டென்னிஸ் போட்டியில் கோன்டாவெய்ட் 6-4, 6-0 என்ற நேர்செட்டில் பிளிஸ்கோவாவை வீழ்த்தி தொடர்ச்சியாக 2-வது வெற்றியை ருசித்ததுடன் அரைஇறுதியையும் உறுதி செய்தார்.
    குவாடலஜரா:

    ‘டாப்-8’ வீராங்கனைகள் மட்டும் பங்கேற்றுள்ள டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று என்று அழைக்கப்படும் உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் உள்ள குவாடலஜரா நகரில் நடந்து வருகிறது. 8 வீராங்கனைகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகிறார்கள். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிப்பவர்கள் அரைஇறுதிக்கு முன்னேறுவார்கள்.

    இதன் 3-வது நாளில் நடந்த ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் அனெட் கோன்டாவெய்ட் (எஸ்தோனியா) தனது 2-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) எதிர்கொண்டார். 57 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் கோன்டாவெய்ட் 6-4, 6-0 என்ற நேர்செட்டில் பிளிஸ்கோவாவை வீழ்த்தி தொடர்ச்சியாக 2-வது வெற்றியை ருசித்ததுடன் அரைஇறுதியையும் உறுதி செய்தார். சர்வதேச போட்டியில் தொடர்ந்து 12 வெற்றிகளை குவித்துள்ள கோன்டாவெய்டுக்கு, பிளிஸ்கோவாவுடன் 4-வது முறையாக மோதியதில் அதில் பெற்ற முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

    மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா, பிரெஞ்ச் ஓபன் சாம்பியனும், 3-ம் நிலை வீராங்கனையுமான பார்போரா கிரெஜ்சிகோவாவை (செக்குடியரசு) சந்தித்தார். 2 மணி 10 நிமிடம் நீடித்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் முகுருஜா சரிவை சமாளித்து 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் கிரெஜ்சிகோவாவை சாய்த்து முதல் வெற்றியை தனதாக்கினார். கிரெஜ்சிகோவாவுக்கு இது 2-வது தோல்வியாகும்.
    ×