search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷ்ணு"

    நம்முடைய முன்னோர்களின் காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு தங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை வைத்ததற்கு காரணம் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    ஒரு மன்னன் பெருமாளிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தான். தினமும் பெருமாளை வணங்காமலும், அவரது திருநாமங்களை உச்சரிக்காமலும் அவனுக்கு எந்த வேலையையும் செய்ய முடியாது. ஆனாலும் அவனின் முன் வினை அவனை தொடர்ந்தது. அதன் பலனாக அவன் பல நோய்களால் அவதிப்பட்டான். தன்னால் சரிவர நாட்டை கவனிக்க முடியாது போகவே, தன் மூத்த மகனுக்கு பட்டம் சூட்டிவிட்டு, படுத்த படுக்கையாக கிடந்தான்.

    அந்நிலையிலும் அவனுக்கு திருமாலின் பெயர் மட்டும் மறக்கவில்லை. அச்சுதா... அச்சுதா... என் வாழ்வை முடித்து விடு. உன்னோடு சேர்த்துக் கொள், என சதா நேரமும் புலம்பிக்கொண்டே இருந்தான்.ஒருநாள் ஒரு முனிவர் அரண்மனைக்கு வந்தார். அவரிடம், "சுவாமி, நோயின் கொடுமையை சகிக்க முடியவில்லை. என் உயிர் பிரிய மறுக்கிறதே" என அழுதான். முனிவர் அவன் நிலை கண்டு அவனை தேற்றி , "மன்னா! நீ அன்னதானம் செய்தாயா?" என்றார்.

    மன்னனும் ஆமாம் சுவாமி! தினமும் அந்தணர்களுக்கும், ஏழைகளுக்கும் வயிறார உணவு படைக்கிறேன், என்றான். "சரி ,இனிமேல் அப்படி செய்யாதே! அரை வயிற்றுக்கு உணவிடு. அரைகுறையாக உணவிட்டால், சாப்பிடுவோர் உனக்கு சாபமிடுவர். சாபத்தின் கடுமையால் இறந்து போவாய்" என்றார் முனிவர். அவர் சொன்னதில் மன்னனுக்கு உடன்பாடு இல்லையென்றாலும், ஒரு மகானே சொல்கிறாரே என ஏற்றுக்கொண்ட மன்னன் அரை சாப்பாடு போட உத்தரவு போட்டான்.

    சாப்பிட்டவர்கள் சபித்தார்கள். ஆனாலும், மன்னனின் உயிர் பிரியவில்லை.இதென்ன ஆச்சரியம், என வியாதியின் கொடுமையையும், சாபத்தையும் சேர்த்து அனுபவித்த சூழ்நிலையில், முனிவர் மீண்டும் வந்தார்."சுவாமி! நீங்கள் சொன்னது போல செய்தும் உயிர் பிரியவில்லையே" என்றான் மன்னன். "மன்னா! நானும் வரும் வழியில் தான் கவனித்தேன். உன் ஏவலர்கள் தானமிடும் போது, அச்சுதா... அச்சுதா என பரந்தாமனின் பெயரைச் சொல்லி உணவிடுகின்றனர். அச்சுதன் என்று பெயர் சொன்னால், உயிர் பிரியாது. பரந்தாமன் அவர்களைக் கைவிடுவதில்லை. இனி நீ பெருமாள் பெயரைச் சொல்வதையும் நிறுத்து" என்றார்.

    அதிர்ச்சியடைந்த மன்னன் மறுத்து விட்டான். "எனக்கு இன்னும் அவஸ்தை அதிகரிக்குமானாலும் பரவாயில்லை. இந்த நோய் நீடித்து விட்டு போகட்டும். ஆனால், பகவான் பெயரைச் சொல்வதை மட்டும் என்னால் நிறுத்த முடியாது. நீண்டநாளாக ஏற்பட்ட பழக்கத்தை அவ்வளவு எளிதில் ஒருவரால் விட்டுவிட முடியாது" என சொல்லிவிட்டான். மன்னனுடைய மன உறுதியை கண்டு மகிழ்ந்த பரந்தாமனும் மன்னன் முன் தோன்றி, அவனைப் பாராட்டி, வைகுண்டத்தில் வாழும் பாக்கியத்தையும், பிறவா நிலையும் தந்து மகிழ்ந்தார்.

    கடவுளின் நாமத்துக்கு தான் எவ்வளவு சக்தி. நம்முடைய முன்னோர்களின் காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு தங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை வைத்த காரணமும் இது தான். இறைவன் திருநாமத்தை திரும்பத் திரும்பச் சொன்னால் அவன் அருளுக்கு பாத்திரம் ஆவோம்.

    தாமதப்பட்ட காரியங்கள் தடையின்றி நடைபெற, நான்கு வடிவங்களில் காட்சிதரும் திருமால் படங்களை இல்லத்து பூஜையறையில் வைத்து வழிபடலாம்.
    எந்தவொரு காரியத்திலும் தடைகள் அதிகரிக்கிறதா? வேலைவாய்ப்பு, திருமணம், சொத்து விற்பனை, தொழில் முயற்சி போன்றவற்றில் தடைகளும், தாமதங்களும் அதிகரிப்பவர்கள், அந்த போராட்டமான நிலை அகல விஷ்ணுவின் நான்கு நிலையுடைய திருக்கோவில்களுக்கும் வரிசைப்படி சென்று வழிபட்டு வரவேண்டும்.

    திருமாலின் நின்ற கோலம், அமர்ந்த கோலம், சயன கோலம், நடந்த கோலம் அமைந்த ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால், காரியத்தடைகள் காணாமல் போகும். தாமதப்பட்ட காரியங்கள் தடையின்றி நடைபெற, இந்த நான்கு வடிவங்களில் காட்சிதரும் திருமால் படங்களை இல்லத்து பூஜையறையில் வைத்து வழிபடலாம். உலகளந்த பெருமாள் படத்தை நடந்த கோலமாக வைத்து வழிபடலாம். 
    மனிதகுலத்தின் மேம்பாட்டுக்காக எடுத்த அவதாரங்களுள் காக்கும் கடவுளான விஷ்ணுவின் ‘தசாவதாரம்’ எனப்படும் பத்து அவதாரங்களே வெகு சிறப்பாக கருதப்படுகிறது.
    மனித வாழ்வின் நியதிகளை பேணும் பொருட்டு, தெய்வங்கள் நம்மில் ஒருவராக அவதாரமெடுத்து நமக்கு வரும் துன்பங்களை தீர்த்து வைப்பதாக புராணங்களும் இதிகாசங்களும் தெரிவிக்கின்றன. அப்படி மனிதகுலத்தின் மேம்பாட்டுக்காக எடுத்த அவதாரங்களுள் காக்கும் கடவுளான விஷ்ணுவின் ‘தசாவதாரம்’ எனப்படும் பத்து அவதாரங்களே வெகு சிறப்பாக கருதப்படுகிறது.

    ‘பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்
    தர்ம ஸம்ஸ்தா பநார்தாய ஸம்பவாமி யுகே யுகே’

    அதாவது ‘நல்லோரைக் காக்கவும், தீயோரை அழிக்கவும், அறத்தை நிலைநாட்டவும், நான் யுகந்தோறும் பிறக்கிறேன்’ என்று பகவத் கீதையில் கண்ணன் கூறுகிறார்.

    நீதியும், நேர்மையும் அழிந்து.. தீமைகள் பெருகி உலகமே அழிந்து போகும் நிலையான ஒவ்வொரு யுகங்களின் முடிவிலும், நீதியை நிலைநாட்டும் பொருட்டு ஒவ்வொரு அவதாரத்தையும் அவர் எடுத்துள்ளதாக ஐதீகம். அந்த அவதாரங்களின் நோக்கம் மற்றும் சிறப்புகளை சுருக்கமாக இங்கே காண்போம்.

    மச்ச அவதாரம்

    தசாவதாரத்தின் முதல் அவதாரம் இது. ஒரு யுகத்தின் முடிவான பிரளய காலத்தில், பிரம்மன் தவத்தில் ஆழ்ந் திருந்தார். அப்போது அவரிடம் இருந்த படைப்புத் தொழிலுக்கும், உயிர்களின் உன்னத வாழ்விற்கும் அடிப்படையான நான்கு வேதங்களையும் மது, கைடபர் எனும் அசுரகுணம் கொண்டவர்கள் திருடிச் சென்றனர். உலகத்தை தங்கள் வசம் அடக்கும் பேராசையுடன் வேதங்களை திருடிய அவர்கள், அதைக் கடலில் ஒளித்து வைத்தனர். தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, திருமால் மச்ச (மீன்) அவதாரமெடுத்து கடலில் நீந்திச் சென்று, அசுரர்களை அழித்து வேதங்களை மீட்டார். பின்னர் வேதங்களை சுவாயம்புவ மனுவுக்கு உபதேசித்து, அவரைப் பிரளயத்திலிருந்து காப்பாற்றியதாக வரலாறு. உயிர்களின் ஆதாரம் நீர் என்பதை உணர்த்தவே பெருமாளின் முதல் அவதாரம் நீரில் வாழும் உயிராக நிகழ்ந்தது.

    கூர்ம அவதாரம்

    காலம் காலமாக நன்மைக்கும் தீமைக்கும் இடையில் யார் பெரியவர் எனும் போட்டிகள் நிகழ்ந்த வண்ணமே உள்ளது. அநீதியை வென்று தர்மமே நிலைக்கும் என்பதை உலகத்தாருக்கு உணர்த்த அந்த தேவலோகத்திலும் இப்போட்டிகள் அவ்வப்போது நிகழ்வதுண்டு. அவ் வகையில் புராணங்களிலும் இதிகாசங்களிலும் பெருமளவில் பேசப்பட்ட நிகழ்வு இது. இறைவன் துயிலும் பாற்கடலில் நிறைந்திருக்கும் இறவா வரம் தரும் அமுதத்தை பெற தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் கடும்போட்டி நிலவியது. பாற்கடலைக் கடைவதற்கு மகாமேருவான மந்தாரமலையும், பலம் பொருந்திய நாகமாகிய வாசுகியும் களமிறங்கின. மந்தார மலை கடலைக் கடையும் மத்தாகவும் வாசுகி கயிறாகவும் மாறினர். மலையைத் தாங்கும் வலிமை கொண்ட பெருமாள், மந்தார மலை நிலையாக நிற்க அதைத் தாங்கும் கூர்மம் (ஆமை) அவதாரம் எடுத்து அவர்களுக்கு உதவியதாக புராணம் சொல்கிறது.

    வராக அவதாரம்

    தசாவதாரத்தின் மூன்றாம் அவதாரம் இது. பன்றியின் வடிவம் கொண்டது. உயிர்களில் உயர்வு தாழ்வு எதுவும் இல்லை என்பதை உலகுக்கு உணர்த்த இறைவன் எடுத்த அவதாரம் இது. ஒரு பிரளயகாலத்தில் தன் அசுர சக்தியை பிரயோகித்து பூமியை பாய் போல் சுருட்டி, கடலின் அடியில் மறைத்து வைத்தார் இரண்யாட்சன். மகாவிஷ்ணு.. வராக அவதாரம் எடுத்து, அசுரனை அழித்து பூமியை தன் கொம்புகளால் ஏந்தி வந்ததாக வரலாறு.

    அசுரனின் கொடுமைகளைத் தாங்காமல் பூமிமாதா கடலுக்குள் அழுந்தியதாகவும் அசுரனை அழித்து பழையபடி பூமியை நிலை நிறுத்த வராகம் உதவியதாகவும் மற்றொரு கதையும் உண்டு.

    நரசிம்ம அவதாரம்

    தசாவதாரத்தில் நினைத்ததும் வந்து காப்பாற்றும் கடவுளாக, விளங்குபவர் நரசிம்மர். வராக அவதாரத்தில் விஷ்ணு வதம் செய்த இரண்யாட்சனின் சகோதரன் இரண்யகசிபு. இவர் விஷ்ணுவை வெறுத்து தானே கடவுள் என்று கூறிக்கொண்டான். ஆனால் இரண்யனின் மகனான பிரகலாதன், நாராயணரின் மீதும் பக்தி கொண்டவனாக இருந்தான். இதனால் மகன் என்றும் பாராமல் அவனைக் கொல்ல முயன்றபோது, நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்டு இரண்யனை வதம் செய்தார். பக்தன் நம்பிக்கையுடன் சரணடைந்தால், இறைவன் எந்த உருவெடுத்தும் வருவார் என்பதைக் காட்டிய அவதாரம் இது.

    வாமன அவதாரம்

    தசாவதாரத்தில் ஐந்தாவது வாமன அவதாரம். பிரகலாதனின் வழித்தோன்றலான மகாபலி எனும் அசுர அரசன், தேவலோகத்தையும் பூலோகத்தையும் வெற்றிகொண்டு தேவேந்திர பதவியையும் அடைந்தான். இவனுக்குப் பயந்த இந்திரன் முதலிய தேவர்கள், மகாபலி வரமுடியாத இடத்தில் போய் மறைந்து வாழ்ந்தனர். மகாபலியின் புகழ் ஓங்குவது கண்ட இந்திரன் முதலானவர்கள், தாங்கள் இழந்த பதவியை மீண்டும் பெற உதவுமாறு விஷ்ணுவிடம் வேண்டினர். இதையடுத்து திருமால், குள்ளமான உருவம் கொண்டு மகாபலியிடம் மூன்று அடி மண் கேட்டார். முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்தவர், மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து அவனை பாதாளத்தில் தள்ளி முக்தி அருளியதாக புராணம் சொல்கிறது.



    பரசுராமர்

    தசாவதாரத்தின் ஆறாவது அவதாரம் பரசுராமர். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை உலகமக்களுக்கு நிரூபித்தவர். ஜமதக்னி எனும் தவசீலருக்கும் ரேணுகாதேவிக்கும் கடைசி புத்திரனாக அவ தரித்தவர். ஒரு நாள் ரேணுகாதேவி ஒரு கந்தர்வனின் அழகில் மயங்கி, தன் கணவனுக்கு செய்யும் பூஜையில் தவறினாள். இதனால் அவளது தலையை வெட்டும்படி ஜமதக்னி, தன் மகன்களை அழைத்து கூறினார். அவர்கள் தயங்கினர். இதனால் கடைசி மகனான பரசுராமரை அழைத்து, தாய் மற்றும் சகோதரர்களின் தலையை வெட்டச் சொன்னார். அவரும் வெட்டி வீழ்த்தினார். பின்னர் ஜமதக்னி என்ன வரம் வேண்டும் என்று கேட்க, ‘தாயையும், சகோதரர்களையும் மீட்டுத் தாருங்கள்’ என்று வேண்டினார். மற்றொரு முறை தன் தந்தையைக் கொன்ற சத்திரியர்களின் வம்சத்தையே அழித்தொழித்தார்.

    ராமபிரான்

    ராமர் அவதாரமே தசாவதாரத்தின் ஏழாம் அவதாரமாகும். ஒருவனுக்கு ஒருத்தி எனும் தத்துவத்தை உலகுக்கு உணர்த்தவும், பெற்றவர்களின் சொல் கேட்டு நடந்து சகோதர்களுடன் ஆன உறவை மேன்மை செய்யவும், அநியாயம் புரிபவரை அழிக்கும் வீரனாகவும், இன்னும் மனிதருக்கான பல வாழ்வியல் நெறிகளை அதன்படி வாழ்ந்து காட்டிய அவதாரம் இது. ராவணன், சீதையைக் கவர்ந்து சென்றான். தன் மனைவியை மீட்க வானரங்களோடு சேர்ந்து ராவணனுடன் போரிட்டு அவனை அழித்தார் ராமபிரான்.

    பலராமர்

    விஷ்ணுவின் எட்டாம் அவதாரம், பலராமன். விஷ்ணுவின் அம்சமான ஆதிசேஷனே இரண்டாகப் பிரிந்து பலராமனாகவும், கிருஷ்ணராகவும் தோன்றியதாக சில கருத்துகள் உள்ளன. பலராமர் கண்ணனின் சகோதரர் என்பதற்கே அதிக ஆதாரங்கள் உண்டு. இப்படி இருவேறு கருத்துகள் இருக்கின்றன. வசுதேவருக்கும் அவரின் முதல் மனைவியான ரோகினிதேவிக்கும் பிறந்தவரே பலராமன். தம்பியான கண்ணனுக்கு பலவிதங்களில் உதவி செய்து தன் தாய் தந்தையரையும் மக்களையும் இம்சித்து வந்த கம்சனை அழித்ததில் இவருக்கும் முக்கியப் பங்குண்டு. இவரின் தோளில் எந்நேரமும் வீற்றிருக்கும் கலப்பை, உலகின் ஆதாரமான விவசாயத்தின் முக்கியத்துவத்தை உலகுக்கு எடுத்துரைக்கிறது.

    கிருஷ்ணர்

    விஷ்ணுவின் ஒன்பதாம் அவதாரமான கண்ணன், பாலகனாக பல லீலைகள் புரிந்தவர். கம்சன் எனும் கொடுங்கோலனை வதம் செய்தவர். பின் கிருஷ்ணனாக நீதிக்கும் அநீதிக்கும் நடந்த போரில் நீதியின் பக்கம் நின்று குருசேத்திரப் போர் நடக்க உதவியவர். பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்குமான அந்த யுத்தத்தில், பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனனின் சாரதியாக இருந்து, அவனுக்கு பகவத் கீதையை போதித்தவர். அநீதியை சூழ்ச்சியால் முறியடிப்பது தீமையாகாது என்பதை உணர்த்திய அவதாரமே கிருஷ்ணாவதாரம்.

    கல்கி

    உலகில் நன்மைகள் குறைந்து, தீமைகள் கட்டுக்குள் அடங்காமல் போகும்போது, இறைவன் தோன்றி தீமைகளை அழித்து புதுயுகத்தைப் படைப்பார் என்பது இந்து சமயத்தின் நம்பிக்கை. அதன்படி தற்போது நடைபெறும் கலியுகத்தின் முடிவில் விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரம் நிகழும் என்று அனைவராலும் நம்பப்படுகிறது. உலகில் தீமைகள் தலைவிரித்தாடும் போது விஷ்ணுவின் தீவிர பக்தனுக்கு மகனாக பிறப்பார் கல்கி என்கிறது பாகவதம். 
    ஹரி கதையை படிப்பதன் வாயிலாகவும் நமது பாவங்கள் அனைத்தும் விலகும். அதே நேரம் இறைவனின் பக்தனை நிந்திப்பது என்பது பாவத்திலும் பாவமாகும்.
    கங்கை நதிக்கரையில் இருந்து 4 மைல் தூரத்தில் உள்ள சிறிய கிராமத்தில் புண்ணியதாமா என்பவர் வசித்து வந்தார். அதே ஊரில் பிருஹத்தபா என்ற பெரும் தவசியும் வாழ்ந்து வந்தார். அவர் தினமும் மாலை வேளைகளில் இறைவனின் லீலைகளை, ஹரி கதையாக கூறுவார். அந்த கதைகளை புண்ணியதாமா தவறாமல் கேட்டு விடுவார். தனது அன்றாட பணிகளை முடித்துக் கொண்டு, பிருஹத்தபா கூறும் கதையைக் கேட்க கிளம்பிவிடுவார்.

    தனது நூறாண்டு கால வாழ்க்கையில், ஒரு நாள் கூட அவர் ஹரி கதையை கேட்க தவறியதில்லை. அன்றாட பணிகளை முடிப்பது, ஹரி கதையை கேட்பது, உணவு கேட்டு, தங்க இடம் கேட்டு வரும் அதிதிகளை உபசரிப்பது என்பவையே அவரது முக்கியப் பணிகளாக இருந்தன. கங்கையில் இருந்து 4 மைல் தூரத்தில் இருந்தாலும், ஒரு நாள் கூட புண்ணியதாமா கங்கையில் நீராடியதில்லை.

    அவருக்கு அது பற்றிய சிந்தனையும் இருந்ததில்லை. ஒரு முறை வெகு தொலைவில் இருந்து இரண்டு யாத்திரிகர்கள், கங்கா ஸ்நானம் செய்வதற்காக காசி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இரவு நேரம் ஆகி விட்டதால் வழியில் எங்காவது தங்கி மறுதினம் பயணத்தை தொடர இருவரும் நினைத்தனர். அருகில் இருந்த புண்ணியதாமாவின் வீட்டிற்கு சென்று, ‘வீட்டு திண்ணையில் தங்க இடம் கிடைக்குமா?’ என்று கேட்டனர். அவர்கள் இருவரையும் யாத்திரிகர்கள் என்று தெரிந்து கொண்ட புண்ணியதாமா, வீட்டிற்குள் அழைத்துச் சென்று தனது மனைவியிடம் கூறி அன்னம் பரிமாறக் கூறினார். இரண்டு யாத்திரிகர்களும் உணவருந்துவதற்காக அமர்ந்தனர்.

    அப்போது அவர்கள், புண்ணியதாமாவிடம், ‘ஐயா! நாங்கள் காசிக்கு சென்று கங்கையில் நீராட உள்ளோம். இங்கிருந்து கங்கை எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று கூறமுடியுமா?’ என்று கேட்டனர்.

    அதற்கு புண்ணியதாமா, ‘நான் நூறு ஆண்டுகளாக இந்த கிராமத்தில் இருக்கிறேன். இங்கிருந்து 4 மைல் தூரத்தில் கங்கை நதி இருப்பதாக, பிறர் சொல்ல நான் கேள்விப்பட்டுள்ளேன். உண்மையைக் கூறவேண்டும் என்றால், இதுவரை நான் ஒருமுறை கூட கங்கையில் ஸ்நானம் செய்தது கிடையாது’ என்றார்.

    ஒரு கணம் திகைத்த அந்த அதிதிகள், மறுகணம் அன்னத்தை நிராகரித்து எழுந்து விட்டனர். ‘பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு கங்கா! என்று சொன்னாலும் கூட பாவங்கள் விலகிவிடும். இவர் என்னடா என்றால், அருகிலேயே இருந்து கொண்டு கங்கையில் நீராடவில்லை என்கிறார். இவரை விட பாவி யாரும் இருக்க முடியாது. இவ்வளவு அருகில் இருந்து கொண்டு கங்கா ஸ்நானம் செய்யாதவரின் வீட்டில் நாம் அதிதிகளாக தங்கியதே மகா பாவம்’ என்று நினைத்து வீட்டை விட்டு உடனடியாக வெளியேறினர்.

    அவர்களின் செய்கையைக் கண்டு புண்ணியதாமாவின் மனம் மிகவும் துயரத்தில் ஆழ்ந்துவிட்டது. ஆனால் அந்த இரு யாத்திரிகர்களும், ‘கங்கையில் நீராடாதவரின் வீட்டில் தங்கியிருந்த பாவத்தை கங்கையில் நீராடிதான் போக்க வேண்டும்’ என்று தங்களுக்குள் பேசியபடியே கங்கை நதியை நோக்கி வேகமாக நடைபோட்டுச் சென்றனர். கங்கை நதிக்கரையை அவர்கள் அடைந்த போது கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கங்கை நதி வறண்டுபோய் கிடந்தது. அதில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. கானல் நீர் கூட தென்படவில்லை. கங்கை நதிக்கரை ஓரமாகவே நடந்து கங்கை உற்பத்தியாகும் இடம் வரை சென்று விட்டனர். ஆனாலும் அவர்களால் கங்கையை காணமுடியவில்லை. ‘எவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருக்கிறோம். நம்மால் கங்கையில் நீராட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதே! நாம் ஏதோ அபவாதம் செய்து விட்டதாக தெரிகிறதே!’ என்று இருவரும் புலம்பத் தொடங்கி விட்டனர்.

    பின்னர் கங்கா தேவியை மனதார நினைத்து, ‘தாங்கள் செய்த குற்றத்தை பொறுத்து தங்களுக்கு காட்சி தர வேண்டும்’ என்று மனமுருக வேண்டினர்.

    அப்போது அங்கு ஒரு அசரீரி ஒலித்தது. ‘என்னை காணும் தகுதியை நீங்கள் இழந்து விட்டீர்கள். மிகவும் பாக்கியசாலியும், புண்ணியவானுமான, புண்ணியதாமாவை இருவரும் சேர்ந்து நிந்தித்து விட்டீர்கள். ஹரி கதை எங்கெல்லாம் நடக்கிறதோ, அங்கெல்லாம் அனைத்து தீர்த்தங்களும் இருக்கின்றன. அதே போல் ஹரி கதையை தொடர்ந்து கேட்பவர்கள், புனிதத்திலும் புனிதம் அடைந்தவர் ஆகிறார்கள். அத்தகைய சிறப்பு மிக்க புண்ணியவானின் பாதங்கள் என் மீது படாதா என்று பல காலங்களாக நான் காத்திருக்கிறேன். நீங்களானால் அவரது மனம் புண்படும்படி நடந்து கொண்டு வந்திருக்கிறீர்கள். புண்ணியதாமாவிடம் சென்று மன்னிப்பு கோருங்கள். அதுவரை உங்களால் கங்கையில் நீராட முடியாது’ என்றது அந்தக் குரல்.

    தங்கள் தவறை உணர்ந்து கொண்ட இருவரும் உடனடியாக, புண்ணியதாமாவிடம் சென்று அவரது காலில் விழுந்து தங்கள் தவறை பொறுத்துக் கொள்ளும் படி கேட்டனர்.

    அவர்களை அரவணைத்துக் கொண்ட புண்ணியதாமா, இருவரையும் பிருஹத்தபாவிடம் அழைத்துச் சென்று இரண்டு ஆண்டுகள் ஹரி கதை கேட்கும்படியாக செய்தார். பின்னர் அனைவரும் சென்று கங்கையில் நீராடி மகிழ்ந்தனர். கங்கையில் நீராடுவது என்பது நிச்சயமாக அனைவராலும் முடியாதது. ஆனால் ஹரி கதை கேட்பது, படிப்பது என்பது அனைவராலும் நிச்சயம் செய்து முடிக்கக் கூடிய விஷயம்தான். ஹரி கதையை படிப்பதன் வாயிலாகவும் நமது பாவங்கள் அனைத்தும் விலகும். அதே நேரம் இறைவனின் பக்தனை நிந்திப்பது என்பது பாவத்திலும் பாவமாகும். 
    அமாவாசையை அடுத்துவரும் ஏகாதசியை சுக்கில பட்ச ஏகாதசி என்றும், பவுர்ணமியை அடுத்த ஏகாதசியை கிருட்ண பட்ச ஏகாதசி என்றும் அழைக்கின்றனர்.
    தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான் முரன் என்னும் அசுரன். இதனால் அவனை அழித்து தங்களை காக்குமாறு ஈசனை துதித்தனர். அவர்களை மகாவிஷ்ணுவை சரணடைய கூறினார் சிவபெருமான். அதன்படி அனைவரும் விஷ்ணுவை சரணடைந்தனர். அவர்களை காக்க எண்ணிய மகாவிஷ்ணு, அந்த அசுரனோடு போர் புரியத் தொடங்கினார்.

    போர் 1000 ஆண்டுகள் கடுமையாக நீடித்தது. அதன் பிறகு மிகவும் களைப்படைந்தவராய் மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார். அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டு, ‘முரன்’ பகவானை கொல்லத் துணிந்த போது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது.

    இவளை அசுரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது. விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட நாராயணன், அந்த சக்திக்கு ‘ஏகாதசி' எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார். எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து நாராயணனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம்.
    சிரவண நட்சத்திரம் மகா விஷ்ணுவுக்கு உகந்த நட்சத்திரம். இத்தினத்தில் விரதம் இருந்து மகா விஷ்ணுவைப் பூஜித்தால் பாபங்கள் நீங்கி புண்ணியத்தை அடையலாம் என்று புராணங்கள் கூறுகின்றன.
    சித்திரை 24 (07.05.2018) திங்கள்
    வைகாசி 21 (04.06.2018) திங்கள்
    ஆனி 17 (01.07.2018) ஞாயிறு
    ஆடி 12 (28.07.2018) சனி
    ஆவணி 08. (24.08.2018) வெள்ளி
    புரட்டாசி 05 (21.09.2018) வெள்ளி
    ஐப்பசி 01 (18.10.2018) வியாழன்
    ஐப்பசி 28 (14.11.2018) புதன்
    கார்த்திகை 26 (12.12.2018) புதன்
    மார்கழி 24 (08.01.2019) செவ்வாய்
    தை 21 (04.02.2019) திங்கள்
    மாசி 20 (04.03.2019) திங்கள்
    பங்குனி 17 (31.03.2019) ஞாயிறு

    சிரவண நட்சத்திரம் மகா விஷ்ணுவுக்கு உகந்த நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை விஷ்ணு. துவாதசி தினமும் விஷ்ணுவுக்கு உகந்த தினம். இவை இரண்டும் கூடுவது சிரவண துவாதசி ஆகும்.

    இத்தினத்தில் விரதம் இருந்து மகா விஷ்ணுவைப் பூஜித்தால் பாபங்கள் நீங்கி புண்ணியத்தை அடையலாம் என்று புராணங்கள் கூறுகின்றன. இதனால் ஒவ்வொரு ஏகாதசிக்கு அடுத்த நாள் வரும் துவாதசியன்றும் திருவோணத்தன்றும் மகா விஷ்ணுவை ஆராதிக்க வேண்டும்.
    ×