search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98113"

    திருவள்ளூர் மாவட்டத்தில் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #bankrobbery
    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் இருந்து சென்னை வரும் சாலையில் சுமார் 2½ கிலோ மீட்டர் தொலைவில் ஆயில் மில் என்றொரு பகுதி உள்ளது.

    அங்குள்ள 3 மாடி கட்டிடத்தில் கீழ் தளத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றும், முதல் தளத்தில் “பேங்க் ஆப் இந்தியா” கிளையும் செயல் பட்டு வருகிறது.

    அந்த வங்கியின் அருகில் மற்றொரு வங்கியும் 4 ஏ.டி.எம்.களும் இருக்கின்றன. இந்த வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.களுக்கு இரவு நேர காவலாளிகள் இல்லை. அதைப் பயன்படுத்தி நேற்றிரவு மர்ம மனிதர்கள் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்குள் புகுந்து கைவரிசை காட்டி விட்டனர்.

    முதல் தளத்தில் உள்ள அந்த வங்கிக்கு செல்ல, கீழ் தள சூப்பர் மார்க்கெட்டின் பக்கவாட்டுப் பகுதியில் பாதை உள்ளது. மாலையில் வங்கிப் பணிகள் முடிந்ததும் அந்த பாதையை “‌ஷட்டர்” மூலம் மூடி விட்டு செல்வார்கள்.

    நேற்று முன்தினம் சனிக்கிழமை மதியம் வரைதான் வங்கிப் பணிகள் நடந்தது. அதன் பிறகு ஊழியர்கள் வங்கியை பூட்டி விட்டுச் சென்றனர்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கி மூடப்பட்டிருந்தது. இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணி அளவில் வங்கிக்கு ஊழியர்கள் வந்தனர். நுழைவுப் பகுதியில் உள்ள ‌ஷட்டர் திறந்து இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

    பதட்டத்துடன் வங்கி உள்ளே சென்று பார்த்த போது, ஊழியர்கள் அமர்ந்து பணிபுரியும் இடங்களில் எந்த குளறுபடிகளும் இல்லாமல் இருந்தது. கேஷியர் அறையும் உடைக்கப்படவில்லை.

    வங்கி ஊழியர்கள் அவசரம், அவசரமாக நகைகள் உள்ள பெட்டகம் அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு பெட்டகங்கள் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    நகைப் பெட்டகங்கள் அனைத்தும் கள்ளச் சாவிப் போட்டு திறக்கப்பட்டிருந்தன. அவற்றுக்குள் வாடிக்கையாளர்களின் அடகு நகைகள் வைக்கப்பட்டிருந்தன. அந்த அடகு நகைகள் அனைத்தையும் மர்ம மனிதர்கள் வாரி சுருட்டி எடுத்துச் சென்று விட்டனர்.

    அடகு நகைகளில் ஒரு நகையைக்கூட கொள்ளையர்கள் விட்டு வைக்கவில்லை. பெட்டகங்களை துடைத்து வைத்தது போல அனைத்தையும் அள்ளிச் சென்று விட்டனர்.

    இந்த கொள்ளை குறித்து பேங்க் ஆப் இந்தியா வங்கியின் மேலாளர் சேகர் உடனடியாக திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி, துணைப் போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி மற்றும் டவுன் போலீசார் ஆயில் மில் பகுதிக்கு விரைந்து சென்று கொள்ளை குறித்து விசாரித்து ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளை போன அடகு நகைகளின் மதிப்பு ரூ.6 கோடி என்பது தெரிய வந்தது.

    ஆனால் வெளிச்சந்தையில் அந்த நகைகளின் மதிப்பு ரூ. 8 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. போலீசார் அந்த வங்கியில், எத்தனை பேர், எத்தனை பவுன் நகைகளை, எவ்வளவு ரூபாய்க்கு அடகு வைத்தனர் என்ற விவரங்களை சேகரித்தனர்.

    அப்போது அந்த வங்கியில் திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 624 பேர் தங்களது நகைகளை அடகு வைத்திருந்தது தெரிய வந்தது. மொத்தம் 32 கிலோ அளவுக்கு அடகு நகைகள் இருந்தன. அந்த நகைகள் அனைத்தும் பறிபோய் விட்டன.

    இந்த கொள்ளையை மர்ம மனிதர்கள் மிகவும் திட்டமிட்டு அரங்கேற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. பாதுகாவலர்கள் இல்லாததால் மிகவும் நிதானமாக அவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

    அடுத்தப்படியாக அவர்கள் கொள்ளையடிப்பதற்கு விடுமுறை தினத்தை தேர்வு செய்துள்ளனர். சனிக்கிழமை இரவே மர்ம மனிதர்கள் வங்கிக்குள் புகுந்து இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    கொள்ளையர்கள் அந்த வங்கியின் எந்த ஒரு பூட்டையும் உடைக்கவில்லை. அனைத்து பூட்டுக்களையும் அவர்கள் கள்ளச்சாவியைப் பயன்படுத்தி கைவரிசை காட்டி உள்ளனர். நுழைவுப் பகுதியில் உள்ள ‌ஷட்டரில் இருந்து பாதுகாப்புப் பெட்டகம் வரை மர்ம மனிதர்கள் எந்த ஒரு இடத்திலும் பூட்டை தகர்க்கவில்லை.

    சில வங்கிகளில் கொள்ளையர்கள் பூட்டை உடைக்க முடியாதபட்சத்தில் சுவரில் துளைப்போட்டு நகைகளை கொள்ளையடிப்பார்கள். இல்லையெனில் வெல்டிங் செய்யும் கருவி மூலம் பெட்டகங்களை உடைத்து கைவரிசை காட்டுவார்கள்.

    ஆனால் அப்படி எதுவுமே இங்கு நடக்கவில்லை. கள்ளச்சாவி போட்டு காரியத்தை கச்சிதமாக முடித்து விட்டனர்.

    கொள்ளை போன நகைகளை வைத்திருந்த பெட்டகத்தின் சாவிகள் அனைத்தும் துணை மேலாளர் ஒருவர் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. சாவிகள் அனைத்தும் அவரிடம் பத்திரமாக உள்ள நிலையில் மர்ம மனிதர்கள் கள்ளச் சாவியை பயன்படுத்தி இருப்பது போலீசாருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். வங்கி ஊழியர்கள், கட்டிட உரிமையாளர் மற்றும் வங்கிக்கு அடிக்கடி வந்து செல்லும் வாடிக்கையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    ஆனால் அதில் பயன் உள்ள வகையில் எந்த துப்பும் துலங்கவில்லை.

    கொள்ளையர்கள் வங்கிக்குள் எந்த தடயத்தையும் விட்டுச் செல்லவில்லை. அந்த வங்கிக்குள் ரூ.25 லட்சம் ரொக்கப் பணம் இருந்தது.

    ஆனால் அந்த பணம் இருக்கும் பகுதிக்கு மர்ம மனிதர்கள் செல்லவில்லை. அடகு நகைகளை மட்டுமே குறி வைத்தே அவர்கள் கை வரிசை காட்டி உள்ளனர்.

    கடந்த வாரம்தான் இந்த வங்கியில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு ஆடிட்டர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருந்தனர். அன்று சுமார் 200 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    அந்த சம்பவம் நடந்து இன்னும் ஒரு வாரம் கூட நிறைவு பெறவில்லை. அதற்குள் அதே பகுதியில் 32 கிலோ தங்கம் கொள்ளை போய் இருப்பது மக்களிடம் கடும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    பேங்க் ஆப் இந்தியாவில் அடகு நகைகள் கொள்ளை போய் விட்டது என்ற தகவல் பரவியதும் மக்கள் ஆயில்மில் பகுதியில் திரண்டனர். நகைகளை அடகு வைத்த சில பெண்கள் கண்ணீர் மல்க காணப்பட்டனர்.

    திருவள்ளூரில் அடுத் தடுத்து நடக்கும் கொள்ளைகள் போலீசாருக்கு சவால் விடும் வகையில் உள்ளது. ஆடிட்டர் வீட்டில் 200 பவுன் கொள்ளை போன போதே வங்கிகள் உஷாராகி காவலாளியை ஏற்பாடு செய்திருந்தால் அடகு நகைகள் கொள்ளை போய் இருக்காது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    சென்னை வளசரவாக்கத்தில் கடந்த மார்ச் மாதம் ரூ.45 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளைபோனது. அதிலும் இன்னமும் துப்பு துலங்கவில்லை. இந்த நிலையில் திருவள்ளூரில் ஆடிட்டர் வீட்டிலும் வங்கியிலும் கைவரிசை காட்டியது ஒரே கும்பலாகத்தான் இருக்கும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.#bankrobbery
    மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் நடைபெற்ற சோதனையில், பல லட்சம் மதிப்பிலான பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. #Malaysia #NajibRazak
    கோலாலம்பூர்:

    பணமோசடி வழக்கில், மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் வீடு மற்றும் அலுவலகம் என 6 இடங்களில் காவல்துறையினர் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தினர்.

    சோதனையின் போது சுமார் 284 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த மாடர்ன் கைப்பைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த பைகள் பலவற்றில் நகைகளும், பல லட்சம் மதிப்பிலான பணமும் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

    இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி கூறுகையில், இன்று அதிகாலை நஜீப் ரசாக்கிற்கு சொந்தமான இடத்திலிருந்து விலையுயர்ந்த கைப்பைகள், நகைகள், கைக்கடிகாரம் போன்றவற்றை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், இதுதொடர்பாக அப்பகுதி தொலைக்காட்சிக்கு அளிக்கப்பட்ட பேட்டி ஒன்றில் பேசிய குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை காவல் உயர் அதிகாரி அமர் சிங், கைப்பற்றபட்ட பணம், நகைகளின் மதிப்பை தற்போது வெளியிட முடியாது எனவும், மீதமுள்ள பைகளையும் சோதனை செய்து அவற்றின் மதிப்பையும் கண்டறிய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

    நஜீப் ரசாக் நிறுவிய மலேசியா வளர்ச்சி நிறுவனம் மூலம் பல கோடி டாலர்கள் பண மோசடியில் நஜீப் ஈடுபட்டதாக பல்வேறு நாடுகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது நஜீப் ரசாக்கும் அவரது மனைவியும் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. #Malaysia #NajibRazak 
    துபாயில் இயங்கும் மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி நகைக்கடை நிறுவனத்தில் இருந்து ரூ.85 கோடி மதிப்புள்ள 34 ஆயிரம் தங்க நகைகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. #PNBScam #MehulChoksi
    புதுடெல்லி:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி மோசடியில் ஈடுபட்ட தொழில் அதிபர்கள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றனர். அவர்கள் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனி வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

    இந்த வழக்கு தொடர்பாக சமீபத்தில் சி.பி.ஐ. மும்பை கோர்ட்டில் 2 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தது. அதே சமயம் மோசடியில் ஈடுபட்ட தொழில் அதிபர்களின் சொத்துகளை முடக்கி, பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் அமலாக்கத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    அந்த வகையில் துபாயில் இயங்கும் மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி நகைக்கடை நிறுவனத்தில் இருந்து ரூ.85 கோடி மதிப்புள்ள 34 ஆயிரம் தங்க நகைகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து கொண்டு வந்து இருப்பதாகவும், விரைவில் தாங்களும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வோம் என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  #PNBScam #MehulChoksi
     
    பெண்கள் தங்கத்தை வெறும் நகையாகத்தான் வாங்க வேண்டும் என்பதில்லை. வேறு வகைகளிலும் வாங்கலாம் என்பதை இன்றும் பலரும் அறிந்திருக்கவில்லை.
    இந்தியர்கள் அனைவரும் தங்க நகைகள் மீது கொண்டிருக்கும் மாறாக்காதலுக்கு, அவை அவசரப் பணத் தேவையில் உடனடியாகக் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையும் முக்கியக் காரணம். ஆனால், தங்கத்தை வெறும் நகையாகத்தான் வாங்க வேண்டும் என்பதில்லை. வேறு வகைகளிலும் வாங்கலாம் என்பதை இன்றும் பலரும் அறிந்திருக்கவில்லை.

    சரி, தங்கத்தில் முதலீடு செய்யும் பல்வேறு வழிகளைப் பார்க்கலாம்...

    தங்க நகைகள்:

    தங்க நகைகளை வாங்குவதன் மூலம் தங்கத்தில் முதலீடு செய்வது வழக்கமாக நாம் பின்பற்றும் வழி. தங்க நகைகள் வாங்கும்போது மொத்தக் கொள் முதல் செலவுடன், தயாரிப்புச் செலவுகளும் சேர்ந்திருக்கும். அது மொத்தச் செலவில் 10 முதல் 20 சதவீதம் வரை இருக்கலாம். அதாவது, செய்கூலி, சேதாரம் என்று நாம் கணிசமானதொரு தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.

    வாங்கிய நகையை அதே நகைக்காரரிடம் விற்கும்போது அவர் சந்தை விலைக்கு அல்லது அதைவிடக் கொஞ்சம் குறைவான விலைக்கு வாங்கிக்கொள்வார் என்றாலும் சேதாரம் அல்லது அழுக்கு என்கிற பெயரில் குறிப்பிட்ட அளவு தங்கத்தைக் கழித்துவிடுவார். இதனால் நமக்குக் கிடைக்க வேண்டிய லாபத்தின் அளவு குறையும். ஆனால் பலர் இதை உணர்வதில்லை.

    தங்க நாணயம், தங்கக் கட்டிகள்:

    தங்க நகைகள் வாங்குவதைவிட தங்க நாணயங்கள் மற்றும் தங்கக் கட்டிகளில் முதலீடு செய்வது சிறந்தது. நகைக் கடைகளிலும் வங்கிகளிலும் தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    வங்கிகள் தங்க நாணயங்களை விற்றாலும், அவற்றை அவை திரும்ப வாங்கிக்கொள்வதில்லை. நகைக் கடைகள் திரும்ப வாங்கிக் கொண்டாலும், பணமாக திரும்பக் கிடைக்காது. மீண்டும் நகையாகவே வாங்கிக்கொள்ளும்படி வற்புறுத்துவார்கள். தங்கக் கட்டிகளைப் பொறுத்தவரை, மிக அதிகமான பணம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அது சரியாக இருக்கும்.

    தங்க நகைகளாக இருந்தாலும் சரி அல்லது தங்க நாணயம் மற்றும் கட்டிகளாக இருந்தாலும் சரி அவற்றின் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும்.

    கோல்டு ஈ.டி.எப்:

    மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் இருக்கும் பலவகையான முதலீட்டு முறைகளில் இந்த கோல்டு ஈ.டி.எப்.பும் ஒன்று. இதில் முதலீடு செய்யப்படும் பணத்தைக் கொண்டு தங்கம் வாங்கி வைக்கப்படும். தங்கத்தின் விலை உயர்வு அல்லது குறைவுக்கேற்ப நம் முதலீட்டின் மதிப்பு மாறும்.



    பொதுவாக, யூனிட் கணக்கில் (ஒரு யூனிட்- ஒரு கிராம் தங்கம்) இதில் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்வதற்கு டீமேட் கணக்கு மற்றும் டிரேடிங் கணக்கு அவசியம். டீமேட் பராமரிப்புக் கட்டணத்தை நாம் கட்ட வேண்டும். மேலும், இதை வாங்கும்போதும், விற்கும்போதும் தரகருக்கான கட்டணத்தைச் செலுத்தியாக வேண்டும். வாங்கிய யூனிட்களை விற்றால் பணமாகத்தான் கிடைக்கும், தங்கமாகக் கிடைக்காது.

    கோல்டு பண்டு:

    கோல்டு பண்டும் கோல்டு ஈ.டி.எப். போன்றதுதான். தங்களுக்கு டீமேட் கணக்கு இல்லை, டிரேடிங் கணக்கு இல்லை என்பவர்கள் இந்த கோல்டு பண்டு மூலம் முதலீடு செய்யலாம். இதில் ஒருமுறை முதலீடு செய்வதற்கு ரூ. 5 ஆயிரம் குறைந்தபட்சத் தொகையாகும். எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் ரூ. 500, ரூ. 1000 என்கிற அளவில் செய்யலாம்.

    கோல்டு ஈ.டி.எப் மற்றும் கோல்டு பண்டு திட்டங்கள் காகித வடிவில் இருப்பதால் பராமரிப்பது எளிது. திருடு போய்விடும் என்கிற பயமில்லை. மேலும் செய்கூலி, சேதாரம் என்கிற எந்தப் பிரச்சினையும் இல்லை. வேண்டும் என்கிறபோது உடனே விற்கவும் முடியும்.

    பங்கு அடிப்படையிலான தங்க முதலீடு:

    நேரடியாக தங்கத்தில் முதலீடு செய்யாமல், தங்கச் சுரங்க நிறுவனங்கள் மற்றும் தங்கத்தைப் பிரித்தெடுப்பது மற்றும் மார்க்கெட்டிங் செய்வது போன்றவற்றில் ஈடுபடும் நிறுவனங்களில் முதலீடு செய்வதாகும். இந்த நிறுவனங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பொறுத்தே நமக்குக் கிடைப்பது லாபமா அல்லது நஷ்டமா என்பது முடிவாகும்.

    ஆனால் மேற்சொன்ன முதலீட்டில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துக்கு ஏற்ப உங்கள் லாப, நஷ்டம் அமையும். எனவே, அதிக ரிஸ்க் எடுக்க நினைப்பவர்கள் மட்டுமே இதில் முதலீடு செய்யலாம். இதற்கு டீமேட் கணக்கு வேண்டும். அதற்கு ஆண்டு பரிவர்த்தனைக் கட்டணம் கட்ட வேண்டும்.

    ‘ரிஸ்க்’ வேண்டாம் என்பவர்கள் கோல்டு ஈ.டி.எப். அல்லது கோல்டு பண்டு ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்வது நல்லது.

    அவ்வப்போது சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் எப்போதும் தங்கம் ஒரு நல்ல முதலீடுதான். எனவே நாம் விரும்பும் விதத்தில் தங்கம் வாங்கலாம்.
    ×