search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாஸ்மாக்"

    வருவாய்க்காக டாஸ்மாக் கடைகளை மட்டும் நம்பாமல் மாற்று வழியில் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது. #MadrasHCBench #Tasmac #TNGovt
    மதுரை:

    திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கடந்த ஆண்டில் 31,244 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது. பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனையில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் மது அருந்தும் பழக்கம் 36 சதவீதமாகவும், தமிழகத்தில் மது அருந்தும் பழக்கம் 46.7 சதவீதமாகவும் உள்ளது. மது அருந்தும் பழக்கத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

    மதுப்பழக்கத்தால் மனமுறிவு, நிம்மதியின்மை, உடல் நலக்குறைவு உட்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 வரை செயல்படுகின்றன. இரவில் போதையில் வாகனத்தில் செல்வோர்களால் விபத்துகளும், உயிரிழப்புகளும் நடைபெறுகின்றன.

    மது விற்பனைக்கு எதிராகவும், மதுகடைகளை மூடவும் வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இருப்பினும் மது விற்பனை அதிகரித்து வருகிறது.

    எனவே தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க தடை விதிக்க வேண்டும். மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த அறிவிப்புகளை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் வைக்க வேண்டும்.

    மேலும் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலைப்பட்டியல் வைக்கவும், மது விற்பனைக்கு ரசீது வழங்கவும், கூடுதல் விற்பனைக்கு மது விற்றால் புகார் அளிக்க உயர் அதிகாரிகளின் தொடர்பு எண் மற்றும் விபரங்களை டாஸ்மாக் கடைகளில் எழுதி வைக்கவும், மதுபான பாட்டில்களில் அதில் கலந்துள்ள பொருட்கள் மற்றும் தயாரிப்பாளர் விபரங்களை தமிழில் குறிப்பிடவும், டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றியமைக்கவும் உத்தரவிட வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.



    இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மது அருந்துவது தொடர்பான புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டதோடு, மதுக்கடையின் நேரத்தை மாற்ற உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடப்பட்டது.

    அதற்கு நீதிபதிகள் 24 மணி நேரமும் மது கிடைக்கும் போது, மதுக்கடைகளின் நேரத்தை மாற்றி அமைப்பதால் என்ன பயன் என கேள்வி எழுப்பினர்.

    அரசுத்தரப்பில் மது விற்பனையை முறைப்படுத்த பல விதிகளும், அரசாணைகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    அதற்கு நீதிபதிகள், விதிகள் உள்ளன. ஆனால் அவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? பல்வேறு பிரச்சனைகளுக்கும் காரணம் மதுவே. சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தினால் பெரும்பாலான குற்றங்கள் குறையும்.

    வருவாய்க்காக டாஸ்மாக் கடைகளை மட்டும் நம்பாமல் அரசு வருவாயை உயர்த்த பல வழிகள் உள்ளன. அவற்றில் அரசு கவனம் செலுத்த வேண்டும். கிராமசபை கூட்டங்களை நடத்தி மதுக்கடைகள் வேண்டாமென தீர்மானம் நிறைவேற்றலாம்.

    தொடர்ந்து மதுவால் ஒரு தலைமுறையே சீரழிந்து விட்டது. இனிவரும் தலை முறைகளையாவது காக்க வேண்டும் என தெரிவித்து இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 28-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். #MadrasHCBench #Tasmac #TNGovt

    சங்கரன்கோவில் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த டாஸ்மாக் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள பனவடலிசத்திரத்தை சேர்ந்தவர் ராஜபாண்டியன் (வயது 41). இவரது மனைவி மகேஸ்வரி (35). ராஜபாண்டியன் தஞ்சாவூரில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு பல நாட்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. அதோடு அவர் குடிப்பழக்கத்திற்கும் அடிமையாகி விட்டதாக கூறப்படுகிறது.

    வயிற்று வலிக்கு பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் தீரவில்லை என கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் மிகவும் விரக்தி அடைந்த நிலையில் காணப்பட்டார். இந்நிலையில் கடையில் விடுமுறை எடுத்து விட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். வந்தவர் நேற்று சங்கரன்கோவிலுக்கு வந்தார்.

    பின்னர் பொட்டல் அருகில் உள்ள நகர்நல மையத்தின் அருகில் வி‌ஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகே டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கொடைரோடு:

    திண்டுக்கல் அருகே கொடைரோடு மாலைய கவுண்டன்பட்டி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு நேற்று வியாபாரம் முடிந்ததும் விற்பனையாளர்கள் மற்றும் பாரில் வேலை செய்பவர்கள் கடையை பூட்டிச் சென்றனர்.

    தோட்டத்து காவலுக்கு வெள்ளிமலை (வயது 45) என்பவர் மட்டும் இருந்தார். நள்ளிரவு சமயத்தில் இங்கு காரில் வந்த முகமூடி கும்பல் வெள்ளிமலையை கத்தியை காட்டி மிரட்டியது. மேலும் அவரை ஒரு ஓரமாக உட்கார வைத்து விட்டு கடையை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் சாவகாசமாக அமர்ந்து மதுகுடித்து கும்மாள மிட்டனர். அங்கிருந்த 240 மது பாட்டில்களையும் பணம் ரூ.900த்தையும் கொள்ளையடித்து அங்கிருந்து காரில் ஏறி தப்பிச் சென்றனர். முகமூடி அணிந்திருந்ததால் வந்தவர்கள் அடையாளம் தெரிய வில்லை. இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பொங்கல் பண்டிகை விற்பனை தொகையை விற்பனையாளர்கள் எடுத்துச் சென்றதால் பெருமளவு பணம் தப்பித்தது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் அருகே யாகப்பகன்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் கொள்ளை நடந்தது. தற்போது காவலாளி உள்ள கடையிலேயே அவரை மிரட்டி கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சேலம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று டாஸ்மாக் மாவட்ட மேலாளர் முத்துராமலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    சேலம்:

    தமிழகத்தில் 14 வகையான “பிளாஸ்டிக்” பொருட்களை பயன்படுத்த நேற்று முதல் தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யவோ, தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, கடைகளில் பயன்படுத்தவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சேலம் மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் உள்ள 204 அரசு டாஸ்மாக் கடைகளிலும், அதனுடன் உரிமம் பெற்று நடத்தி வரும் பார்களிலும் பிளாஸ்டிக் டம்ளர், தண்ணீர் பாக்கெட் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதற்கு பதில் தண்ணீர் பாட்டில்கள், சில்வர் மற்றும் கண்ணாடி டம்ளர் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு பார் உரிமையாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் நேற்று மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முத்துராமலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்ட 5 குழுவினர் சேலம், மேட்டூர், ஓமலூர், காடையாம்பட்டி, ஆத்தூர், கெங்கவல்லி, வாழப்பாடி, சங்ககிரி, எடப்பாடி உள்ளிட்ட பகுதியில் உள்ள டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்தனர்.

    மேலும் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் பார்களில் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முத்துராமலிங்கம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தின்பண்டங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்தும் அவர் விசாரணை நடத்தினார்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முத்துராமலிங்கம் கூறுகையில், அரசின் உத்தரவுபடி டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது. மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும். மீறி பயன்படுத்தப்படும் பார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் சங்ககிரி, வாழப்பாடியில் உள்ள பார்களில் பிளாஸ்டிக் டம்ளர் பறிமுதல் செய்யப்பட்டது என்றார்.
    பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக டாஸ்மாக் பார்களில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது. #Plasticban #Tasmacshop
    சென்னை:

    தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு அருகிலேயே ‘பார்’கள் இயங்கி வருகின்றன. அரசு அனுமதி பெற்ற பார்கள் 2 ஆயிரம் அளவிலும், அரசு அனுமதி பெறாத பார்கள் சுமார் 3 ஆயிரம் எண்ணிக்கையிலும் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

    இதுவரை இந்த பார்களில் குடிக்க வரும் மதுப்பிரியர்களுக்கு பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இந்த 2 பொருட்களும் அரசு தடை செய்த பொருட்கள் பட்டியலில் வருவதால், இனி இதை விற்பனை செய்ய முடியாது. கண்ணாடி டம்ளர், சில்வர் டம்ளர், தண்ணீர் பாட்டில்களைத் தான் பயன்படுத்த முடியும். இதனால், பார் உரிமையாளர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

    இந்த நிலையில், சமீபத்தில் மாவட்ட வாரியாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தலைமையில் பார் உரிமையாளர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பிளாஸ்டிக் பொருட்கள் தடை குறித்து எடுத்துக்கூறப்பட்டது. அப்போது, பார் உரிமையாளர்கள் தங்களுக்கு பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாக்கெட் விற்பனையின் மூலமே ஓரளவு பணம் கிடைக்கும். அதை நிறுத்தினால், எங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.

    அதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் பார்களில் நாளை (செவ்வாய்கிழமை) முதல் நுழைவுக் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்று வாய்மொழி உத்தரவு ஒன்றை டாஸ்மாக் அதிகாரிகள் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, நாளை முதல் டாஸ்மாக் பார்களில் ரூ.10 முதல் ரூ.20 வரை நுழைவு கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுப்பிரியர்களுக்கு கண்ணாடி டம்ளர், தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட இருக்கிறது.



    இதுகுறித்து டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பரசன் கூறும்போது, “டாஸ்மாக் பார்களில் வசூலிக்கப்படும் நுழைவு கட்டணம் மூலம் வாடிக்கையாளருக்கு தண்ணீர் பாட்டில், மது அருந்த கண்ணாடி டம்ளர் வழங்கப்படும். பிளாஸ்டிக்கை ஒழிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு தருவோம். அடுத்த மாதம் டாஸ்மாக் பார்களுக்கு டெண்டர் விடப்பட இருக்கிறது. எங்களிடம் இருந்து அரசு வசூலிக்கும் பார் உரிமைத்தொகையை குறைக்க வேண்டும். பெட்டிக்கடைகள், சிறிய வகை ஓட்டல்கள் பார்கள் போல் சட்டவிரோதமாக இயங்கி வருகின்றன. இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.  #Plasticban #Tasmacshop

    வத்தலக்குண்டுவில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    வத்தலக்குண்டு:

    தமிழகத்தில் டாஸ்மாக் கடை மூலம் அரசு மதுவிற்பனை செய்து வருகிறது. மதுவால் குடும்பங்கள் பாதிக்கப் படுவதாக கூறி பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடை பெற்றன. மேலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக் கடைகள் நகர் பகுதிக்குள் மாற்றப்பட்டன.

    குடியிருப்பு பகுதிகளில் கடைகள் திறக்கப்படுவதால் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    வத்தலக்குண்டு- மதுரை சாலையில் உள்ள தக்காளி மார்க்கெட் அழகர்நகர் பகுதியில் கோவில்கள் மற்றும் தேவாலயம் உள்ளது. கால்நடை மருத்துவமனை, விவசாய அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களும் உள்ளன. மேலும் இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

    தற்போது மேலும் ஒரு டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்து மாவட்ட கலெக்டர் முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகளுக்கு இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என ஓய்வு பெற்ற ஆசிரியர் நாகராஜ் தலைமையில் மனு அளித்தனர்.

    ஊத்தங்கரை அருகே நாட்டு துப்பாக்கியால் டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேரை சுட்டு ரூ.3½ லட்சம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. #Tasmac

    தருமபுரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த வெப்பளாம்பட்டியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப் பட்டியை அடுத்த நம்பியாம் பட்டியை சேர்ந்த ஆனந்தன் (வயது 42), விற்பனையாளராகவும், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா புட்டிரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன் (50) உதவியாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.

    நேற்று முன்தினம் இரவு இவர்கள் டாஸ்மாக் கடையில் வசூலான ரூ. 3 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்தனர். ஊத்தங்கரை- அரூர் சாலையில் காட்டேரி பகுதியில் அவர்கள் சென்றபோது இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டு அவர்களிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிவிட்டனர்.

    துப்பாக்கி குண்டு பாய்ந்த ஆனந்தன் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடலில் இருந்து 2 பால்ரஸ் குண்டுகள் அகற்றப்பட்டன.

    காதில் குண்டு பாய்ந்து காயம் அடைந்த முருகன் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, சேலம் சரக டி.ஐ.ஜி. செந்தில்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், ஊத்தங்கரை டி.எஸ்.பி. (பொறுப்பு) தங்கவேல், தடயவியல் நிபுணர் மாணிக்கம் உள்பட பலர் நேரில் வந்து சம்பவ நடந்த இடத்தை பார்வையிட்டனர்.

    பின்னர் ஐ.ஜி. பெரியய்யா போலீசாரிடம் கூறியதாவது:-

    இது ஒரு சவாலான வழக்கு. இதை உடனடியாக கண்டுபிடிக்காவிட்டால் மேலும் கொள்ளை சம்பவங்கள் அதிகமாகி விடும். எனவே உடனடியாக இந்த வழக்கில் துப்புதுலக்கி குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கொள்ளை குறித்து 5 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் எஸ்.பி.எம்.எல். என்று அழைக்கப்படும் சிங்கிள் பேரல் மஸ்லோடு கன் வகை துப்பாக்கி மூலம் டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேரையும் கொள்ளையர்கள் சுட்டது தெரியவந்து உள்ளது.

    இந்த வகை துப்பாக்கிகளை உள்ளூரை சேர்ந்த மிருகங்களை வேட்டையாடும் நபர்கள் வைத்திருப்பது வழக்கம். எனவே கொள்ளையர்கள் உள்ளூரை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    மேலும் கொள்ளை நடந்த இடத்தின் அருகே உள்ள செல்போன் டவரில் உபயோகத்தில் இருந்த செல்போன் நம்பர்களை இன்று போலீசார் கேட்டு வாங்கி உள்ளனர். அந்த செல்போன் எண்களை வைத்து துப்புதுலக்கும் பணியில் ஒரு தனிப்படையினர் ஈடுபட்டு உள்ளனர்.

    இதேபோல சம்பவம் நடந்த இடம் அருகே அரூர்- அனுமன்தீர்த்தம் சாலையிலும், ஊத்தங்கரையில் இருந்து சிங்காரப்பேட்டை செல்லும் சாலையிலும் காட்டு பகுதி உள்ளது. இங்கு மிருகங்களை வேட்டையாட சிலர் கள்ளத்துப்பாக்கி வைத்து உள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கள்ளத்துப்பாக்கிகளை ஒப்படைக்கும்படி வனத்துறையினரும், போலீசாரும் கேட்டுக் கொண்டபோது ஒருசிலர் மட்டுமே துப்பாக்கிளை ஒப்படைத்தனர். பலர் துப்பாக்கிகளை ஒப்படைக்கவில்லை. அவர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு அவர்கள் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓசூர் பகுதியில் டாஸ்மாக் ஊழியரை தாக்கி கொள்ளை நடந்தது. தற்போது ஊத்தங்கரையில் டாஸ்மாக் ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டு கொள்ளை நடந்து உள்ளது. இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் பீதியில் உள்ளனர்.

    ஊத்தங்கரை அருகே நாட்டு துப்பாக்கியால் டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேரை சுட்டு ரூ.3½ லட்சம் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tasmac

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காட்டேரி கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியையொட்டி அரசு மதுபான டாஸ்மாக் கடை அமைந்துள்ளது.

    இந்த டாஸ்மாக் கடையில் தருமபுரி மாவட்டம் புட்டிரெட்டிப் பட்டியைச் சேர்ந்த முருகன் (வயது 50) என்பவர் விற்பனையாளராகவும், அரூர் நம்பிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (42) என்பவர் உதவி விற்பனையாளராகவும் பணி புரிந்து வருகின்றனர்.

    இவர்கள் நேற்று இரவு மதுபான கடையில் கணக்கு சரிபார்த்து விட்டு 10.45 மணியளவில் கடையை பூட்டினர்.

    அப்போது விற்பனை செய்த ரூ.3½ லட்சத்தை எடுத்து கொண்டு 2 பேரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி வந்தனர். வண்டியை ஆனந்தன் ஓட்டி வந்தார்.

    அவர்கள் 2 பேரும் ஊத்தங்கரையில் உள்ள தனியார் கல்லூரி அருகே வந்தபோது பின்னால் மர்ம நபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வேகமாக துரத்தி வந்ததை கண்டனர். உடனே ஆனந்தன் வண்டியை வேகமாக ஓட்டினார். அப்போது மர்ம நபர்கள் டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேரையும் வழிமறித்தனர்.

    அவர்கள் முருகனையும், ஆனந்தனையும் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் தாக்கி பணத்தை முழுவதும் கொடுக்குமாறு கூறினர். அவர்களிடம் இருந்து பணத்தை பறிக்கும் முயற்சியில் மர்ம நபர்கள் ஈடுபட்டதால் முருகன் பணப்பையை தராமல் தடுக்க முயற்சி செய்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் நாட்டு துப்பாக்கியால் ஆனந்தனையும், முருகனையும் சுட்டனர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த ரூ.3½ லட்சத்தையும் எடுத்து சென்றனர்.

    இதில் முருகனுக்கு காதில் குண்டு பாய்ந்து காயம் அடைந்தார். ஆனந்தனுக்கு பின் முதுகு பகுதியில் குண்டு பாய்ந்தது. இதனால் இருவரும் வலியால் அலறி துடித்தனர். உடனே முருகன் தனது செல்போனில் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார். அதற்குள் அக்கம்பக்கத்தினர் அந்த பகுதியில் திரண்டனர். நடந்த சம்பவத்தை பற்றி அவர்களிடம் 2பேரும் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வந்ததும் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக முருகனை தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கும், பின்முதுகு பகுதியில் குண்டு பாய்ந்ததால் அதனை அகற்ற ஆனந்தனை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேரை துப்பாக்கியால் சுட்டு ரூ.3½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #Tasmac

    அவனியாபுரத்தில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

    அவனியாபுரம்:

    அவனியாபுரம் எம்.எம்.சி. காலனி பகுதியில் அரசு டாஸ்மாக் உள்ளது. நேற்று நள்ளிரவில் இங்கு வந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    அங்கு 36 பெட்டிகளில் இருந்த மது பாட்டில்களை திருடிச்சென்றனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

    நள்ளிரவில் அந்த பகுதியில் ரோந்து வந்த போலீசார் டாஸ்மாக் கடையின் கதவு திறந்து கிடந்ததை பார்த்து கடை மேற்பார்வையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதுகுறித்து மேற்பார்வையாளர் கருப்பையா அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை திருடிய கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    எம்.எம்.சி. காலனி பகுதியில் உள்ள இந்த டாஸ்மாக் கடையில் 7 மாதத்துக்கு முன்பு ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள், கண்காணிப்பு கேமிரா ஆகியவை கொள்ளைபோனது.

    அதன் பிறகு3 மாதத்துக்கு முன்பு ரூ.3 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டிகள் திருடுபோனது. இப்போது 3-வது முறையாக இந்த டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கொளத்தூரில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். #Tasmac

    மாதவரம்:

    கொளத்தூர், விவேக் நகர் பகுதியில் புதிதாக மதுக்கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    குடியிருப்பு பகுதியில் திறக்கப்படும் இந்த மதுக்கடைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் நாளை மறுநாள் மதுக்கடையை திறக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் இன்று காலை பெரம்பூர்-செங்குன்றம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    போலீசார் மற்றும் டாஸ்மாக் மேலாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த இடத்தில் மதுக்கடை திறக்கப்படாது என்று உறுதி அளித்தனர்.

    இதையடுத்து பொது மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #Tasmac

    சுசீந்திரத்தில் நள்ளிரவு டாஸ்மாக் சூப்பர் வைசரை தாக்கி ரூ.2½ லட்சம் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    என்.ஜி.ஓ. காலனி:

    சுசீந்திரத்தை அடுத்த அக்கரை பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது.

    புதுக்கிராமம் பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது 49) என்பவர் டாஸ்மாக் கடை சூப்பர் வைசராக பணி புரிந்து வருகிறார். அவருடன் இங்கு 2 விற்பனையாளர்களும் உள்ளனர். அவர்கள் தினமும் இரவு 10 மணிக்கு கடை மூடிய பின்பு வசூலான பணத்தை எண்ணி வீட்டிற்கு எடுத்துச் செல்வது வழக்கம்.

    நேற்றும் இதுபோல கடை மூடியதும், வசூல் பணம் முழுவதையும் எண்ணி பதிவேட்டில் குறிப்பிட்டனர். மொத்தம் ரூ.2 லட்சத்து 49 ஆயிரத்து 30 பணம் வசூலாகி இருந்தது.

    வசூலான பணம் ரூ.2½ லட்சத்தையும் ஒரு பையில் எடுத்துக் கொண்டு மூவரும் வீட்டிற்கு புறப்பட்டனர். சூப்பர் வைசர் முருகன், பணத்துடன் தனது மோட்டார் சைக்கிள் அருகே சென்றார். விற்பனையாளர்கள் இருவரும் கடையின் ‌ஷட்டரை அடைத்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது டாஸ்மாக் கடை அருகே மூடிக்கிடந்த பாருக்குள் இருந்து முனங்கல் சத்தம் கேட்டது. உடனே சூப்பர் வைசர் முருகன் அங்கு சென்று பார்த்தார். உள்ளே 4 மர்ம நபர்கள் இருந்தனர். கைகளில் அரிவாள், உருட்டுக்கட்டையுடன் இருந்த அவர்கள், முருகனை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர்.

    முருகனின் அலறல் சத்தம் கேட்டு விற்பனையாளர்கள் இருவரும் ஓடி வந்தனர். அவர்களையும் மர்மநபர்கள் மடக்கிப்பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் மூவருக்கும் கொலை மிரட்டல் விடுத்து விரட்டி அடித்தனர். அதன் பிறகு மர்மநபர்கள் 4 பேரும் டாஸ்மாக் கடையில் வசூலான மொத்த பணம் ரூ.2½ லட்சத்தையும் எடுத்துக் கொண்டு தலைமறைவாகினர்.

    இந்த கொள்ளை சம்பவம் பற்றி சூப்பர் வைசர் முருகன் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து டாஸ்மாக் கடை ஊழியர்களை தாக்கி பணம் கொள்ளையடித்த மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    சம்பவம் நடந்த டாஸ்மாக் கடை அருகே உள்ள கட்டிடங்களில் கண்காணிப்பு கேமிரா உள்ளதா? என்பதை போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் கொள்ளையரின் உருவப் படங்கள் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருக்கிறதா? என்பதையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    சம்பவம் நடந்த டாஸ்மாக் கடையின் பின்புறம் 4 வழிச்சாலை உள்ளது. டாஸ்மாக் ஊழியரிடம் கொள்ளை அடித்த மர்மநபர்கள் அந்த வழியாகத்தான் தப்பிச் சென்றிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள். அவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    கொள்ளை நடந்த டாஸ்மாக் கடை அருகில்தான் சுசீந்திரம் போலீஸ் நிலையம் உள்ளது. அதன் அருகேயே துணிகர கொள்ளை நடந்தி ருப்பது அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள் ளது.

    பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றாததாலும் முறையான அனுமதி இல்லாமல் மதுபான பார் செயல்பட்டதாலும் அந்த பாருக்கு சீல் வைக்க காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவிட்டார். #DenguFever
    காஞ்சீபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் டெங்கு கொசு பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுகின்றன.

    இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் பொன்னையா இன்று அதிகாலை காஞ்சீபுரம் ராஜாஜி மார்க்கெட் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கழிவு நீர் தேங்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தினார்.

    பின்னர் ரெட்டிப்பேட்டை பகுதியில் உள்ள கோழிக்கறி கடை மற்றும் ஐஸ் பேக்டரிகள் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார்.

    இந்தபகுதியில் அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றாததாலும் முறையான அனுமதி இல்லாமல் மதுபான பார் செயல்பட்டதாலும் உடனடியாக அந்த பாருக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். மேலும் அனுமதி இல்லாமல் பார் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.

    மாவட்டத்தில் சுகாதாரத்தை உறுதி செய்ய கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட கெடு இன்றுடன் முடிவடைகிறது. எனவே அனைத்து நிறுவனங்களும் தங்களுக்கு சொந்தமான இடங்களை சுத்தமாக வைக்க ஏற்பாடு செய்து வருகின்றன. #DenguFever
    ×