search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாஸ்மாக்"

    டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க டாஸ்மாக் நிறுவன நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். #Tasmac
    சென்னை :

    டாஸ்மாக் நிறுவன மேலாண்மை இயக்குனர் கிருலோ‌ஷ் குமார், அனைத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸூம், 11.67 சதவீதம் கருணை தொகையும் சேர்த்து 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்.

    இதில் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அறிவித்துள்ள அரசாணைப்படி போனஸ் பெற தகுதி உச்சவரம்பு ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

    அதனடிப்படையில் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களில் ரூ.21 ஆயிரம் வரை சம்பளம் பெறும் பணியாளர்கள் போனஸ் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

    அதன்படி டாஸ்மாக் கடைகளில் பணிபுரிய கூடிய மேற்பார்வையாளர்களுக்கு ரூ.16 ஆயிரத்து 800-ம், விற்பனையாளர்களுக்கு ரூ.15 ஆயிரத்து 400-ம், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.13 ஆயிரத்து 300-ம், உதவியாளர்களுக்கு ரூ.16 ஆயிரத்து 800-ம் வழங்க வேண்டும்.

    இந்த போனஸ் பட்டுவாடா சட்டம் 1956-ன்படி போனஸ் உச்சவரம்பு ரூ.7 ஆயிரம் என்ற அடிப்படை கொண்டு வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில தலைவர் நா.பெரியசாமி கூறியதாவது:-

    டாஸ்மாக் பணியாளர்களுக்கு கடந்த ஆண்டுகளில் 2 முறை பத்து, பத்து சதவீதமாக பிரித்து போனஸ் வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஒரே முறையாக 20 சதவீதம் போனஸ் வழங்குவதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் கடுமையான உழைப்பால் தமிழக அரசின் பட்ஜெட்டில் 33 சதவீதம் வருவாயை ஈட்டித்தரும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு போனஸ் உச்சவரம்பை காரணம் காட்டி வழங்கப்படும் 20 சதவீதம் என்று கூறி தடுப்பது சரியான நடவடிக்கை இல்லை.

    40 சதவீதம் போனஸ் வாங்க தகுதியான இந்த பணியாளர்களுக்கு உச்சவரம்பை தளர்த்தி முழு தொகையை வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tasmac
    விழுப்புரம் அருகே கணவன்மார்கள் நீண்ட தூரம் சென்று குடிக்க முடியாமல் தவிப்பதாகக் கூறி மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வேண்டும் என பெண்களே போராட்டத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Viluppuram #Tasmac
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் சாலாமேடு பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை, அப்பகுதியைச் சேர்ந்த சில பெண்களின் போராட்டத்தால் மூன்று மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இதனால் மதுப்பிரியர்கள் 5 கிலோ மீட்டர் தூரம் சென்று மது வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில், தங்கள் கணவன்மார்கள் மது வாங்குவதற்காக வெகுதூரம் சென்று சிரமப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று கூறி மதுப்பிரியர்களின் மனைவிகள், மீண்டும் டாஸ்மாக்கை திறக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதனிடையே டாஸ்மாக் கடை மூடுவதற்கு காரணமாக இருந்த பெண்கள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மீண்டும் டாஸ்மாக் கடை திறந்தால் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வோம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #Viluppuram #Tasmac
    டாஸ்மாக் வருமானத்தில் தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதாக அமைச்சர் கே.சி.வீரமணி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. #Tasmac #Teacher

    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்ன மூக்கனூரில் அரசு நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திய நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துக்கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில் அமைச்சர் பேசிக்கொண்டிருந்தபோது, முதியவர் ஒருவர் மதுபானம் குடித்து விட்டு போதையில் தள்ளாடிய படி வந்து ரகளையில் ஈடுபட்டார்.

    அவரை போலீசார் அப்புறப்படுத்தி வெளியேற்ற முயன்றனர். போதையில் இருந்த முதியவரை விடுமாறு போலீசாருக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

    அதைத் தொடர்ந்து அமைச்சர் கே.சி.வீரமணி பேசியபோது ‘‘டாஸ்மாக் கடை வருமானம் அனைத்தும் என்னுடைய துறைக்குத்தான் வருகிறது.

     


    அதில் இருந்துதான் புதிய பள்ளிகள் திறக்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கு சம்பளமும் வழங்கப்படுகிறது. பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகிறது. அவரை நான் குடிக்க வேண்டாம் என்று சொன்னால், இந்த பணிகள் எல்லாம் கெட்டுப் போய்விடும்’’ என்றார்.

    அமைச்சரின் இந்த சர்ச்சை பேச்சு கூட்டத்தில் இருந்தவர்களிடம் முதலில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. பிறகு சலசலப்பை உண்டாக்கியது.

    ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில் மதுகுடிக்க ஊக்குவிப்பதை போல் அமைச்சர் வீரமணி பேச்சு அமைந்திருந்தாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

    டாஸ்மாக் வருமானத்தில் சம்பளமா? என்று நினைக்கும் போது வேதனையளிப்பதாக ஆசிரியர்களும், அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சரின் பேச்சு விவாத பொருளாகவும் மாறியுள்ளது.

    தமிழகம் முழுவதும் மாலை 6 மணியுடன் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #KauveryHospital #KalaignarHealth #KarunanidhiHealth #Karunanidhi #DMK
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சற்று முன்பு வெளியான காவிரி மருத்துவமனையின் அறிக்கையில் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதேசமயம், கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு செல்லும் அனைத்து வழித்தடங்களும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் தனியார் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அதேபோல, வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு புறப்படும் ஆம்னி பஸ்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

    தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மாலை 6 மணிக்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #KauveryHospital #KarunanidhiHealth #Karunanidhi #DMK
    திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான கூடங்களில் பிளாஸ்டிக் டம்ளர்களை பயன்படுத்தக் கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். #Tasmac #plasticban
    சென்னை:

    வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

    அதன் அடிப்படையில் இப்போதே ஒரு சில மாவட்டங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் வகையில் நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    முதல் கட்டமாக டாஸ்மாக் மதுக்கடைகள், மதுபான கூடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருவதால் அவற்றை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

    டாஸ்மாக் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்கள். ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

    அதனை தொடர்ந்து டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான கூடங்களில் பிளாஸ்டிக் டம்ளர், தண்ணீர் பாக்கெட் உள்ளிட்ட அடைத்து விற்கப்படும் தின்பண்டங்கள் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

    பார் உரிமையாளர்களை அழைத்து டாஸ்மாக் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக காகிதங்கள் அல்லது கண்ணாடி டம்ளர் போன்றவற்றை பயன்படுத்துமாறு எடுத்துரைத்துள்ளனர். அதனால் வருகிற 1-ந்தேதி முதல் பார்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    படிப்படியாக அனைத்து மாவட்டத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக உருவாக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. #Tasmac #plasticban

    நெடுவாசலில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர். #Tasmac
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் நெடுவாசல் பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெடுவாசல் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவில், ஆதிதிராவிடர் பள்ளி அருகே ஒரு டாஸ்மாக்கடை இயங்கி வருகிறது. இதனால் அந்த பகுதியில் மது குடிப்பவர்கள் சுற்றித் திரிவதால் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல முடியவில்லை. ஆதிதிராவிடர் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் செல்ல சிரமப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆதிதிராவிடர் காலனியில் இருந்து இறுதி சடங்கு செய்ய சுடுகாட்டிற்கு போக முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டு வருகிறது. மேலும் விவசாய வேலைக்காக செல்லும் பெண்கள் அச்சத்துடன் அந்த வழியை கடந்து செல்கின்றனர்.

    குடிப்பழக்கத்தால் தினசரி வீடுகளில் தொடர்ந்து பிரச்சினை ஏற்படுகிறது. எனவே இந்த டாஸ்மாக் கடையை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல ஜெகதாப்பட்டினம் அருகே உள்ள சித்தநேந்தல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- சித்தநேந்தல் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் அரசு சார்பில் டாஸ்மாக்கடை இயங்கி வருகிறது. இதனால் அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் டாஸ்மாக் கடை அருகே கோவில்கள் உள்ளன.

    இந்த கோவிலுக்கு பக்தர்கள் நிம்மதியாக சென்று வர முடியவில்லை. டாஸ்மாக் கடையில் மதுவை வாங்கும் குடிமகன்கள் நடுரோட்டில் வைத்து குடிக்கின்றனர். பின்னர் அங்கேயே பாட்டிலை உடைத்து போடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெண்கள் உள்பட பலரும் அந்த வழியாக செல்ல முடியவில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற தகுந்த நட வடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Tasmac  
    காஞ்சீபுரம் அருகே டாஸ்மாக் குடோனுக்கு தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tasmac #Tasmacgodownfire

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் அரசு டாஸ்மாக் குடோன் உள்ளது. மதுபான உற்பத்தி தொழிற்சாலைகளில் இருந்து எடுத்து வரப்படும் மதுபான பாட்டில்கள் இங்கிருந்து வாகனங்கள் மூலம் அரசு மதுபானக் கடைகளுக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.

    நேற்று படப்பை, வாலாஜா பாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லாரிகளில் மதுபான வகைகள் கொண்டு வரப்பட்டது. மதுபாட்டில்களுடன் லாரிகள் குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

    இந்த நிலையில் நள்ளிரவில் டாஸ்மாக் குடோனுக்கு மர்ம நபர்கள் வந்தனர். திடீரென அவர்கள் அங்கு மதுபாட்டில்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 லாரிகளுக்கு தீ வைத்து தப்பி ஓடினர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    எனினும் 3 லாரிகளும் அதில் இருந்த ரூ. 80 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் அங்கிருந்த மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இந்த தீ வைப்பு சம்பவம் நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    அரசு டாஸ்மாக் குடோனில் மதுபான லாரிகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காஞ்சீபுரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்கு பதிவு செய்து தீ வைத்து மர்ம நபர்களை தேடி வருகிறார். #Tasmac #Tasmacgodownfire

    டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்கள் 29-ந்தேதி 1 நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். #TASMAC

    சென்னை:

    தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டாஸ்மாக் மதுக்கடையில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் இன்னும் தொகுப்பு ஊதியம்தான் பெறுகிறார்கள். 2 ஆண்டுகளில் 480 நாட்கள் பணியாற்றினால் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இது அரசு விதியாகும். ஆனால் 13 வருடமாக வேலை பார்த்தும் இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர்.

    இது மட்டுமல்ல, கால முறை ஊதியம், அரசு துறைகளில் மாற்றுப் பணி உள்பட 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் 29-ந்தேதி (செவ்வாய்) 1 நாள் கடையடைப்பு தமிழகம் தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளனர்.


    இதற்காக சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் பிரசார இயக்கம் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த சூழ்நிலையில் வருகிற 28-ந்தேதி பேச்சு வார்த்தைக்கு வருமாறு டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார். இதை ஏற்று மாநில நிர்வாகிகள் பேச்சு வார்த்தையில் பங்கேற்க உள்ளனர்.

    பேச்சுவார்த்தை முடிவு ஒருபக்கம் இருந்தாலும் அதுவரை வேலை நிறுத்தம் தொடர்பான பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று சங்க நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TASMAC

    1,300 டாஸ்மாக் கடைகளை மூடும் விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. #Tasmac #SupremeCourt #ChennaiHighCourt
    புதுடெல்லி:

    தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் மதுக்கடைகள் மூடப்பட்டன.

    அதன் பின்னர், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்யப்பட்டு, அடைக்கப்பட்ட மதுக்கடைகளில் பல மீண்டும் திறக்கப்பட்டன. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து வக்கீல்களுக்கான சமூகநீதிப்பேரவையின் தலைவர் கே.பாலு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.



    இதை விசாரித்த ஐகோர்ட்டு ‘தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து, அதுகுறித்த முறையான அறிவிப்பு வெளியிடாமல், அந்த சாலைகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு இருந்தால், அப்படிப்பட்ட கடைகளை உடனடியாக மூட வேண்டும்’ என கடந்த 28-ந்தேதி உத்தரவிட்டது. வகைமாற்றம் செய்யாமல் புதிதாக டாஸ்மாக் கடைகளை திறக்கவும் தடை விதித்த நீதிபதிகள், நட்சத்திர ஓட்டல்களில் உள்ள மதுபான விடுதிகளுக்கு எந்த தடையும் இல்லை என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

    இதனால் 1,300 மதுக்கடைகள் மூடும் நிலை ஏற்பட்டது. எனவே சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் திடீரென்று மூடப்படுவதால் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்த தமிழக அரசு, மதுவால் ஏற்படும் சாலை விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியிருந்தது.

    இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோத்தகி, யோகேஷ் கன்னா ஆகியோர் ஆஜரானார்கள்.

    அவர்கள் தங்கள் வாதத்தில், ‘டாஸ்மாக் கடைகள் மூடும் விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு வழங்கி உள்ள தீர்ப்பு சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக அமைந்துள்ளது. சண்டிகர் தொடர்பான வழக்கின் தீர்ப்புக்கு தமிழக அரசு தாக்கல் செய்த விளக்கம் கோரும் மனுவின் மீது சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில்தான் நகராட்சி பகுதிகளில் புதிதாக மதுக்கடைகள் திறக்கப்பட்டன. எனவே சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறினர்.

    ஆனால் மனுதாரர் கே.பாலு மற்றும் அவரது சார்பில் ஆஜரான வக்கீல் தனஞ்செயன் தங்கள் வாதத்தில், ‘சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் நகராட்சி பகுதிகளில் செல்லும் நெடுஞ்சாலைகளுக்கு முழு விதிவிலக்கு அளிக்கவில்லை. ஆனால் தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தவறாக புரிந்து கொண்டு, இரவோடு இரவாக 1,300 மதுக்கடைகளை நகராட்சி பகுதிகளில் திறந்துள்ளது’ என்று குற்றம் சாட்டினர்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தங்கள் உத்தரவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது எனக்கூறியதுடன், சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.

    அவர்கள் மேலும் கூறுகையில், ‘நகராட்சி பகுதிகளில் வரும் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் திறப்பது குறித்து கடைவாரியாகத்தான் முடிவெடுத்து இருக்க வேண்டும். ஒரே உத்தரவில் இத்தனை கடைகள் திறந்துள்ளதை அனுமதிக்க முடியாது. எனவே சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய உத்தரவை அடிப்படையாக கொண்டு புதிய உத்தரவை பிறப்பித்து அதை சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டனர்.

    பின்னர் இந்த வழக்கின் விசாரணையை 23-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 
    ×