search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98196"

    • உலகேஸ்வரசாமி கோவில் பல நுாற்றாண்டுகள் பழமையானது.
    • இங்கிருந்த தெப்பக்குளத்தை சுற்றி 12 தீர்த்த கிணறுகள் இருந்துள்ளது.

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரத்தில் நூற்றாண்டுகள் பழமையான உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில், கரிய காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில்களின் கும்பாபிஷேக பணிகளுக்காக பாலாலய பூஜை போடப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து பழுதடைந்த கட்டிடங்களை சீரமைத்தல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதையடுத்து கோவில் கும்பாபிஷேகம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான யாக சாலை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமாக மின் விளக்குகளும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து விழா குழுவினர் கூறியதாவது:-

    உலகேஸ்வரசாமி கோவில் பல நுாற்றாண்டுகள் பழமையானது. சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டது. அப்பர் அடிகளாரால் பாடல் பெற்ற திருத்தலம் என்றும் வரலாறுகள் கூறுகின்றன. உலகேஸ்வர சுவாமியை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வழிபட்டனர் என்பதற்கு அடையாளமாக கோவில்களில் பல்வேறு சின்னங்கள், சிலைகள் இன்றும் உள்ளது.

    இங்கு மூலவராக சிவபெருமான் லிங்க வடிவிலும், இவருக்கு வலப்புறம் உண்ணாமுலை அம்மன் நின்ற கோலத்திலும் அருள் பாலிக்கின்றனர். மேலும் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர் மற்றும் நவகிரகங்கள் சன்னதிகள் தனித்தனியே உள்ளன. இந்த கோவிலில் முன்பு தேர் இருந்ததாகவும், தேரோட்டம் சிறப்பாக நடந்ததாகவும் கூறப்படுகிறது.

    மேலும் இங்கிருந்த தெப்பக்குளத்தை சுற்றி 12 தீர்த்த கிணறுகள் இருந்துள்ளது. கரிய காளியம்மன் கோவில் சிலையானது 8 கைகளுடன் வேல், திரிசூலம், போர் கவசம், பாம்புடன் கூடிய உடுக்கை, கத்தி, கிளி, தீச்சட்டி, ஆயுதம், மணி ஆகியவற்றை ஏந்தியபடி, மண்டை ஓடுகளை அணிகலன்களாகக் அணிந்து கொண்டு, ஆக்ரோஷமாக காட்சிஅளிக்கிறது. இப்படிப் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த உலகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தீர்த்தக்குட ஊர்வலம் ஜண்டை மேளங்கள் முழங்க நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்படுகிறது.

    குமாரபாளையத்தில் பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி யானை, ஒட்டகம், குதிரைகளுடன் தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.

    குமாரபாளையத்தில் தம்மண்ணன் வீதி பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 19-ந் தேதி யாகசாலைகால்கோள் விழாவுடன்தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து 29-ந் தேதி முளைப்பாரி இடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று யானை, ஒட்டகம், குதிரையுடன் காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் ஜண்டை மேளங்கள் முழங்க நடைபெற்றது. இதனையடுத்து 6, 7 ஆகிய நாட்களில் யாக சாலை பூஜைகள், இன்று காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேக விழாவும் நடைபெற உள்ளது.

    பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்படுகிறது. கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை சாந்த மல்லிகார்ஜுன சுவாமிகள், சாலுரு புருஹன் மாதா, தொழிலதிபர்கள் சிவசக்தி சண்முகசுந்தரம், சிவசக்தி தனசேகரன், சேர்மன் விஜய்கண்ணன், தொழிலதிபர் பழனிசாமி, நாட்டாண்மைக்காரர் முருகேசன் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

    • அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • முஸ்லிம்கள், ஜமாத்தார்கள் சீர் கொடுத்து சிறப்பித்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே சேமங்கோட்டை விநாயகர், வில்லிதமுடையார் அய்யனார், தூண்டி கருப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் முக்கிய நிகழ்வாக அரசனாகரிபட்டினம், கோபாலபட்டினம், ஆர்.புதுப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த முஸ்லிம்கள், ஜமாத்தார்கள் மற்றும் இளைஞர்கள் கோவிலுக்கு சீர் கொடுத்தும் மற்றும் அன்னதானத்திற்கு 50 மூட்டை அரிசியும் கொடுத்து சிறப்பித்தனர். முஸ்லிம் இளைஞர்கள் மோர், தண்ணீர் பந்தல் மற்றும் ஊரில் நுழைவுவாயிலில் கும்பாபிஷேக வரவேற்பு குறித்து பதாகை வைத்திருந்தனர். இந்த பகுதியில் இந்துக்கள், முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாக அங்கு உள்ளவர்கள் கூறினர்.

    • இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 2-ந்தேதி தொடங்கியது.
    • பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது.

    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 2-ந்தேதி தொடங்கியது. அன்றையதினம் விக்னேஷ்வர பூஜை, அனுக்ஞை, தனபூஜைகள் ஆகியவை நடந்தது. 3-ந்தேதி கணபதி பூஜை, நவக்கிரக பூஜை, லட்சுமி பூஜை ஆகியவை நடந்தது.

    4-ந்தேதி காலை உலுப்பகுடி அருகே உள்ள கரந்தமலையில் இருந்து பக்தர்கள் கன்னிமார் தீர்த்தம் எடுத்து சந்தன கருப்பு சாமி கோவிலுக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து மேளதாளம் முழங்க தீர்த்தக்குடங்களை சுமந்தபடியும், முளைப்பாரி எடுத்தும் பக்தர்கள் நத்தம் மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.

    அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடந்தது. அதன் பின்னர் வாஸ்து சாந்தி பூஜை, முதல் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி ஆகியவை நடந்தது. 5-ந்தேதி காலையில் 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. விழாவின் 6-ம் நாளான நேற்று முன்தினம் 4, 5-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.

    7-ம் நாளான நேற்று காலையில் 6-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து கரந்தமலையில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தக்குடங்கள், காசி, ராமேஸ்வரம், திருமலைக்கேணி, அழகர்கோவில் ஆகிய புண்ணிய தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தக்குடங்கள் ஆகியவை கோவில் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    பின்னர் காலை 11.35 மணி அளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை ஓதி கோவில் கோபுர கலசங்கள் மீது புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். அப்போது அங்கு வந்த கருடன் கோபுரத்தை சுற்றி வானில் வட்டமிட்டது. இதைக்கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்தில் அம்மனை வேண்டி வழிபாடு நடத்தினர்.

    கும்பாபிஷேக விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் பங்கேற்று வழிபட்டனர். பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • 5ம் கால யாக பூஜை, நாடிசந்தானம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.
    • அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கு கோவில் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரத்தில் உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில் மற்றும் கரிய காளியம்மன் கோவில் உள்ளது.இக்கோவில் கும்பாபிஷேகவிழா இன்று நடைபெற்றது. அதன்படி நேற்று யாக சாலையில் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், 4ம் கால யாகபூஜை, பூர்ணாகுதி,தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், 5ம் கால யாக பூஜை, நாடிசந்தானம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.

    இதற்கிடையே நேற்று அல்லாளபுரம் உலகேஸ்வரர் கோவிலுக்கு செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வருகை தந்தார் .அவருக்கு கோவில் விழா குழுவினர் சார்பில் பரிவட்டம் கட்டி பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் கணபதிபாளையம் சோமசுந்தரம், பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், கணபதிபாளையம் ஊராட்சி தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் இன்று 8ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், 6-ம் கால யாக பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மகா பூர்ணாகுதி தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. காலை 5.15 மணி முதல் உண்ணாமுலை அம்மன், உலகேஸ்வரர், கரிய காளியம்மன் கோவில் பரிவார மூர்த்திகள் மற்றும் விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மகாதீபாராதனை, திருக்கல்யாண உற்சவம், பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, அன்னதானம் வழங்குதல் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேக விழாவையொட்டி பாரம்பரிய கலைகளான வள்ளி கும்மி, பெருசலங்கை ஆட்டம், பவளக்கொடி கும்மி ஆட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • இரண்டாம் கால யாகபூஜைகள் நடந்தது
    • ஆரணி எம்.எல்.ஏ கலந்து கொண்டார்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் கிராம தேவதை செல்லியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதைமுன்னிட்டு அம்மன் கரிக்கோலம் நடைபெற்றது மாலை முதல் கால யாகபூஜைகளும். இரண்டாம் கால யாகபூஜைகளுடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதேபோல் ராமசாணிக்குப்பம் கன்னியப்பன் நகரில் பாலசுப்பிரமணியர், கன்னிமூல கணபதி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் ஆரணி சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    விழாவில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராமசாணிக்குப்பம் மகேஸ்வரிபார்த்தீபன், புதுப்பாளையம் நந்தினிகண்ணன், ஒன்றிய செயலாளர் கொளத்தூர் திருமால், ஆரணி நகர கழக செயலாளர் அசோக்குமார், ஆரணி நகர மன்ற துணைத் தலைவர் பாரிபாபு, குண்ணத்தூர் செந்தில், ஆரணி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோவில் கும்பாபிேஷக விழா இன்று மாலை மங்கள இசையுடன் துவங்குகிறது.
    • காலை 7:45 மணிக்கு ஆலய கோபுர கலசம் மற்றும் ஸ்ரீ மகாலட்சுமி அம்மனுக்கு கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது.

    உடுமலை :

    உடுமலை அருகே கொடுங்கியத்தில், ஸ்ரீ மகா லட்சுமி அம்மன் கோவில் உள்ளது. கோவில் கும்பாபிேஷக விழா இன்று மாலை 6மணிக்கு மங்கள இசையுடன் துவங்குகிறது.

    தொடர்ந்து விநாயகர் வழிபாடு, புண்யாக வாசனம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது. இரவு 7 மணிக்கு மேல் திருவிளக்கு பூஜை, அஷ்டலட்சுமி பூஜை, கோபுர கலச கண் திறத்தல், அம்மனுக்கு யந்திர பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் முதற்கால யாக வழிபாடு உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது.வரும் 8-ந் தேதி, அதிகாலை இரண்டாம் கால யாக பூஜை, யாத்ரா தானம், கலசங்கள் புறப்பாடு நடக்கிறது. காலை 7:45 மணிக்கு மேல் ஆலய கோபுர கலசம் மற்றும் ஸ்ரீ மகாலட்சுமி அம்மனுக்கு கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. காலை 8:30 மணிக்கு மேல், கோபுர கலசத்துக்கு தீர்த்தம் விடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.  

    • திண்டுக்கல்-நத்தம் சாலையில் குடகனாறு இல்லம் எதிரில் அஷ்டலெட்சுமி கோவில் உள்ளது.
    • அஷ்டலட்சுமி அம்மன் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல்-நத்தம் சாலையில் குடகனாறு இல்லம் எதிரில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட அஷ்டலெட்சுமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று கும்பாபிஷேகம் விழா சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.

    இன்று காலை 6.30 மணி அளவில் மங்கள இசையுடன் நான்காம் காலம் ஆரம்பம்,வேதி கார்ச்சனை, விஷ்ணுசகஸ்ரநாம பாராயணம், தன பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்து ஹோமங்கள் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து காலை 9:30 மணி அளவில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீர் கலசம் யாகசாலையை வலம் வந்து ஆலய கோபுர கலசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    பின்னர் அஷ்டலட்சுமி அம்மன் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.அதனை தொடர்ந்து மூலஸ்தான மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து அம்மனுக்கு மஞ்சள், சந்தனம்,திருநீறு உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது.

    இவ்விழாவில் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ்,துணை மேயர் ராஜப்பா,வார்டு கவுன்சிலர்கள் ஜோதிபாசு,தி.மு.க மாநகர பொருளாளர் சரவணன், சபரி இந்திரகோபால்,அரசியல் பிரமுகர்கள்,தொழில் அதிபர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அஷ்டலெட்சுமி கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் தொழிலதிபர்கள் ரவிச்சந்திரன், ராமையா,செயலாளர் தில்லை நடராஜன்,பொருளாளர் மாரிமுத்து, வழக்கறிஞர் குப்புசாமி மற்றும் நிர்வாகிகள்,உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • ராமேசுவரம் அருகே சுந்தர மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • இதில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ள சுந்தரமுடையான் கிராமத்தில் பழமையான சுந்தர மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்ட கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ராமேசுவரம் துர்க்கை அம்மன் கோவில் குருக்கள் சிவாச்சாரியார் தலைமையில் 4 கால யாக பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீரை கோவில் விமானத்திற்கு மேளதாளத்துடன் எடுத்து சென்றனர். கோவில் கோபுரத்தில் உள்ள விமான கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அப்போது அங்கு கூடிஇருந்த ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

    பின்னர் 4 யாக கால பூஜையில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.இதைதொடர்ந்து கோவில் கருவறையில் உள்ள அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை கிராமத் தலைவர் பாண்டி, சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் மகேந்திரன் தலைமையில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • 24 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடந்தது சேலம் சுகவனேசுவரர் கோவில் கும்பாபிஷேகம்
    • இரவு 7 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெறுகிறது.

    சேலம்

    சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற சுகவனேசுவரர் கோவில் முக்கியமான வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. பல்வேறு வரலாற்று சிற்பங்களையும், மூலவரின் உருவசிலையையும் இக்கோவிலின் பிரகாரத்தில் காணலாம். பழமை வாய்ந்த இந்த கோவிலில் சுகவனேசுவரர், சொர்ணாம்பிகை அம்மனுடன் அருள்பாலிக்கிறார்.

    சுகவனேசுவரர் கோவில் 24 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து சுகவனேசுவரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிக்கு கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 29-ந்தேதி பாலாலயம் செய்யப்பட்டது.

    இதையடுத்து கும்பாபிஷேக விழா கடந்த 1-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்கியது.

    7-வது நாளான இன்று (7-ந்தேதி) அதிகாலை 4 மணிக்கு மங்கள இசை இசைக்கப்பட்டது. அதன் பின் 6-ம் கால பரிவார சாமிகளுக்கு யாக பூஜை நடைபெற்றது. காலை 6 மணிக்கு மேளதாளங்கள் முழங்க அனைத்து பரிவார கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து 6.30 மணிக்கு அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 7 மணிக்கு பிரதான யாக சாலைகளில் 6-ம் கால யாக பூஜை, 9 மணிக்கு மகா பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு யாத்ராதானம், அனைத்து விமானங்கள், ராஜகோபுரங்கள், மூலஸ்தான சாமி, அம்மன், விநாயகர், சுப்ரமணியர், கலசங்கள் புறப்பாடு நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    அதனை தொடர்ந்து அனைத்து விமானங்கள் மற்றும் அனைத்து ராஜகோபுரங்களுக்கு சமகால மகா கும்பாபிஷேகம், சுகவனேசுவரர் சாமி, சொர்ணாம்பிகை அம்மனுக்கு மகா குப்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது கோவில் வெளியே நின்றிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் சிவனே போற்றி என பக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர்.

    இவ்விழாவில் அரசு சார்பில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன், எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், அருள், கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதா தேவி, மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ், அஸ்தம்பட்டி மண்டல குழு தலைவி உமாராணி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கும்பாபிஷேக விழாவையொட்டி கோவில் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள், பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. குறிப்பாக கோவிலை சுற்றியுள்ள சாலைகள், கோவில் நந்தவனம், தொப்பக்குளம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பக்தர்கள் திரண்டிருந்தனர்.

    24 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடந்த இந்த கும்பாபிஷேக விழாவை காண சேலம் மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் தங்களது குடும்பத்தினருடன் வந்திருந்தனர்.

    கோவிலுக்குள் சென்று சுகவனேசுவரர், சொர்ணாம்பிகை அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை வழிபட இரும்பு கம்பிகளாலும், கம்புகளாலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த தடுப்புகள் வழியாக பக்தர்கள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம் செய்ய நின்றனர். இந்த வரிசை கோவில் வெளியே உள்ள சாலை நெடுகிலும் காணப்பட்டது.

    கோவில் மற்றும் கோவில் வளாகத்தில் நெரிசல் ஏற்படமால் இருக்க குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் நுழைய போலீசார் அனுமதித்தனர். போலீசாரின் கெடுபிடி அதிகமாகவே இருந்தது. இதனால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவில் வெளியே உள்ள சாலையில் நின்று சாமியை தரிசனம் செய்தனர்.

    கோவில் முன்பு மெயின்ரோட்டில் பல்வேறு அமைப்புகள், சங்கங்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம், மோர் உள்ளிட்டவை தொடர்ச்சியாக வழங்கப்பட்டது.

    விழாவையொட்டி பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி வாயிலாக தொடர்ந்து போலீசார் பல்வேறு அறிவுரைகளை வழங்கியபடி இருந்தனர். மேலும் திருட்டு மற்றும் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்க அங்கு உளவுபிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு, ஆயுதப்படை போலீசார் சாதாரண உடையில் கண்காணித்தனர். மேலும் சி.சி.டி.வி. காமிராக்கள், வாகனங்களில் பொருத்தி, எல்.இ.டி. திரை மூலம் போலீசார் கண்காணித்தபடி இருந்தனர்.

    மதியம் மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 4 மணிக்கு சொர்ணாம்பிகை சமேத சுகவனேசுவரர் சாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதையடுத்து இரவு 7 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெறுகிறது.

    • யாகம் வளர்க்கும் சிவாச்சாரியார்களுக்கு, காப்புக் கட்டுதல் நடைபெற்றது.
    • நவக்கிரக ஹோமம், மகா கணபதி ஹோமம், முதல்கால யாகபூஜை உள்ளிட்டவை நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி,அல்லாளபுரத்தில் உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில் மற்றும் கரிய காளியம்மன் கோவில் உள்ளது. இந்த நிலையில், நாளை கும்பாபிஷேகவிழா நடைபெற உள்ளது. இதனையொட்டி நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் துவங்கின.

    யாக சாலை மண்டபத்தில் தானியங்கள் கொட்டப்பட்டும், கலசங்கள் தயார் செய்யப்பட்டும், யாகசாலை அலங்கரிக்கப்பட்டது. யாகம் வளர்க்கும் சிவாச்சாரியார்களுக்கு, காப்புக் கட்டுதல் நடைபெற்றது.தொடர்ந்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகா கணபதி ஹோமம், முதல்கால யாக பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. தொடர்ந்து நடராஜ பெருமான், சிவகாமி அம்மையாருடன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதனை தொடர்ந்து நேற்று 2-ம் கால யாகபூஜை, கும்ப அலங்காரம், யாத்ரா தானம், 3ம் கால யாகபூஜை, மூல மந்திர ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கொங்கு நாட்டின் பாரம்பரியக் கலையான பெருஞ்சலங்கை ஆட்டம் நடைபெற்றது. இதனை கொங்கு பண்பாட்டு மையத்தினர் நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து மங்கை வள்ளிகும்மி குழுவினரின், கும்மி ஆட்டம் நடைபெற்றது. இதனை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். முன்னதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., உலகேஸ்வரர் கோவிலுக்கு வருகை புரிந்தார். அவருக்கு கோவில் விழாகமிட்டி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 31-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
    • நாளை மாலை மாலை திருக்கல்யாண உற்சவமும், பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெறுகிறது.

    ஈரோடு கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற வாரணாம்பிகை உடனமர் ஆருத்ர கபாலீஸ்வரர் (ஈஸ்வரன்) கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 31-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு யாக பூஜைகள் நடந்து வருகிறது. 2-ந் தேதி கோ-கஜ பூஜை நடந்தது. 3-ந் தேதி சாந்தி ஹோமம், திசா ஹோமம், மூர்த்தி ஹோமம் ஆகியன நடத்தப்பட்டன. 4-ந் தேதி மாலையில் முதல்கால யாக பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலையில் 2-ம் கால யாக பூஜையும், மாலையில் 3-ம் கால யாக பூஜையுடன் நடந்தன. நேற்று காலையில் 4-ம் கால யாக பூஜையும், மாலையில் 5-ம் கால யாக பூஜையும் நடைபெற்றது.

    இன்று (புதன்கிழமை) காலை 7 மணிக்கு 6-ம் கால யாக பூஜையும், மாலை 5 மணிக்கு 7-ம் கால யாக பூஜையும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு 8-ம் கால யாக பூஜை நடக்கிறது. தொடர்ந்து காலை 10.35 மணிக்கு கோவில் ராஜகோபுர கலசங்களுக்கும், வாரணாம்பிகை உடனமர் ஆருத்ர கபாலீஸ்வரர் சாமி, பரிவார மூர்த்தி கோபுர கலசங்களுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு மகா அபிஷேகமும், திருக்கல்யாண உற்சவமும், பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற உள்ளது.

    இந்த கும்பாபிஷேக விழாவில் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அறநிலையத்துறை ஆணையாளர் குமரகுருபரன், மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உள்பட அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், பக்தர்கள் என ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்.

    விழாவையொட்டி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    ×