search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி"

    தீபாவளிக்காக வெளியூர் செல்லும் பயணிகளின் வசதியாக நவம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் மெட்ரோ ரெயில் சேவை இரவு 11 மணிவரை நீட்டிக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. #MetroTrain
    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    தற்போது சென்னை சென்ட்ரலில் இருந்து எழும்பூர், அண்ணாநகர், கோயம்பேடு, வடபழனி வழியாக விமான நிலையம் வரை ஒருவழி தடத்தில் மெட்ரோ ரெயில் செல்கிறது. இதுதவிர தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்.-ல் இருந்து விமான நிலையத்துக்கும் மெட்ரோ ரெயில் போகிறது.

    மெட்ரோ ரெயிலில் விரைவாக செல்லலாம். எனவே இதில் ஏராளமானோர் விரும்பி பயணம் செய்கிறார்கள். தீபாவளி பண்டிகை நெருங்குவதால் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.



    தற்போது மெட்ரோ ரெயில் அதிகாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படுகிறது. வருகிற நவம்பர்-2, 3 ஆகிய தேதிகளில் தீபாவளி விடுமுறைக்காக வெளியூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை பலமடங்கு அதிகமாகும்.

    எனவே வருகிற 2, 3 ஆகிய தேதிகளில் மெட்ரோ ரெயில் சேவை அதிகரிக்கப்படுகிறது. இதற்காக அதிக எண்ணிக்கையில் ரெயில்கள் விடப்படும். இந்த 2 நாட்களும் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை நீடிக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. #MetroTrain
    தமிழகத்தில் தீபாவளி நாளில் 2 மணி நேரத்திற்கு மேல் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. #Diwali #DiwaliCrackers #CrackersBurstingTime #SupremeCourt
    புதுடெல்லி:

    இந்தியா முழுவதும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பட்டாசுகளை தயாரிக்கவோ விற்பனை செய்யவோ, வெடிக்கவோ தடை இல்லை என தீர்ப்பளித்தது. அதேசமயம், பட்டாசுகளை தயாரிக்கவும் வெடிக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

    குறிப்பாக தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கலாம், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது இரவு 11.30 மணி முதல் இரவு 12.30 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என நிபந்தனை விதிக்கப்பட்டது. மேலும், பட்டாசு தயாரிக்கவும், விற்பனை செய்யவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.



    இந்த தீர்ப்பில் திருத்தம் கோரி தமிழக அரசின் சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு வக்கீல் பா.வினோத் கன்னா மனுவை தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், கோர்ட்டு உத்தரவின்படி குறைந்த அளவு நேரமான 2 மணி நேரத்தில் பட்டாசு வெடிக்கும் போது ஒரே நேரத்தில் அனைவரும் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பெருமளவில் மாசுக்கேடு விளைவிக்கும் என்றும், தீபாவளியின் போது தமிழ்நாட்டில் வசிக்கும் மக்கள் அன்று கூடுதல் நேரம் பட்டாசு வெடிக்க (அதிகாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை) அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    அந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்றும் அரசு வக்கீல் பா.வினோத் கன்னா கோரிக்கை விடுத்தார்.

    இதேபோல் பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பான நிபந்தனைகளை தளர்த்தக்கோரி சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த இரண்டு மனுக்களும் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி என்றும், எந்த 2 மணி நேரம் என்பதை அரசு முடிவு செய்யலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    காலையில் ஒன்றரை மணிநேரம், மாலையில் ஒன்றரை மணி நேரம் அனுமதி வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

    பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்த்த தமிழக மக்கள் இந்த தீர்ப்பினால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். #Diwali #DiwaliCrackers #CrackersBurstingTime #SupremeCourt

    கோயம்பேடு எம்.ஜி.ஆர். பஸ்நிலையம், தாம்பரம் சானடோரியம், தாம்பரம் ரெயில் நிலையம், மாதவரம் புதிய பஸ்நிலையம், பூந்தமல்லி பஸ்நிலையம், கே.கே.நகர் பஸ்நிலையம் ஆகிய இடங்களில் இருந்து தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. #Diwali #SpecialBus
    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு கோயம்பேடு எம்.ஜி.ஆர். பஸ்நிலையம், தாம்பரம் சானடோரியம், தாம்பரம் ரெயில் நிலையம், மாதவரம் புதிய பஸ்நிலையம், பூந்தமல்லி பஸ்நிலையம், கே.கே.நகர் பஸ்நிலையம் ஆகிய இடங்களில் இருந்து தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    வருகிற 3-ந்தேதி முதல் 5-ந்தேதி வரையில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லவும், 7-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை வெளியூர்களில் இருந்து சென்னைக்கு திரும்பவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    சென்னையில் இருந்து தினசரி செல்லக்கூடிய 2,275 பஸ்களுடன் 4,542 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கு மொத்தம் 11,367 பஸ்கள் இயக்கப்படும். அதேபோல் வெளியூர்களில் இருந்து 3 நாட்களுக்கு 9,200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.


    தீபாவளி முடிந்த பிறகு முக்கிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு திரும்ப 4 நாட்களுக்கு 7,635 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு வருகிற 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை நடைபெறும். கோயம்பேடு எம்.ஜி.ஆர். பஸ்நிலையத்தில் 26 முன்பதிவு சிறப்பு கவுண்டர்களும், தாம்பரம் சானடோரியம் பஸ்நிலையத்தில் 2 சிறப்பு முன்பதிவு கவுண்டர், பூந்தமல்லியில் 1 கவுண்டர், மாதவரம் புதிய பஸ்நிலையத்தில் 1 கவுண்டர் என மொத்தம் 30 சிறப்பு முன்பதிவு கவுண்டர்கள் செயல்படும் என அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. #Diwali #SpecialBus
    தீபாவளி அன்று கூடுதல் நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு வருகிறது. #DiwaliCrackers #CrackersBurstingTime #SupremeCourt
    புதுடெல்லி:

    தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின் போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு சுவாச கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதாகவும், எனவே டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி 3 சிறுவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது.



    தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு அனுமதி வழங்கி அப்போது நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள்

    இந்த தீர்ப்பில் திருத்தம் கோரி தமிழக அரசின் சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு வக்கீல் பா.வினோத் கன்னா தாக்கல் செய்த அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கடந்த 23-ந் தேதியன்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் அனைத்து பண்டிகைகளின் போதும் இரவு 8 மணியில் இருந்து 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

    இந்தியா பல்வேறு கலாசாரங்கள் அடங்கிய கூட்டாட்சியின் அடிப்படையில் இயங்கும் நாடு ஆகும். ஒவ்வொரு மாநிலமு ஒவ்வொரு பகுதி மக்களும் தங்களுக்கான பாரம்பரியம், கலாசாரம், நம்பிக்கை ஆகியவற்றை கொண்டு விளங்குகிறார்கள்.

    வடமாநிலங்களில் தீபாவளி இரவில் கொண்டாடப்படுகிறது. ராமர் போரில் ராவணனை கொன்றதை கொண்டாடும் வகையில் அங்கு கொண்டாடப்படுகிறது.

    தமிழ்நாட்டில் நரகாசுரனை வதம் செய்ததை கொண்டாடும் வகையில் விடியற்காலையில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. அன்று மக்கள் அதிகாலை 4 மணிக்கே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்த தீபாவளி கொண்டாடுவது வழக்கமாகும். காலையில் தொடங்கும் இந்த கொண்டாட்டம் நாள் முழுவதும் தொடரும். மேலும் தமிழ்நாட்டில் தீபாவளி அமாவாசையன்று சதுர்த்ததி திதியில் கொண்டாடப்படுகிறது. அந்த திதி தீபாவளி அன்று காலை 4 மணிக்கு வருகிறது.

    வட மாநிலங்களில் தீபாவளியன்று இரவு தீபம் ஏற்றுகிறார்கள். தமிழ்நாட்டில் தீபாவளி அன்று தீபம் ஏற்றாமல் கார்த்திகை பண்டிகையன்று தீபங்கள் ஏற்றப்படுகின்றன. எனவே வடக்கிலும், தெற்கிலும் கொண்டாடப்படும் தீபாவளி கொண்டாட்டங்களில் அதிக வேறுபாடு உள்ளது.

    மேலும் கோர்ட்டு உத்தரவின்படி குறைந்த அளவு நேரமான 2 மணி நேரத்தில் பட்டாசு வெடிக்கும் போது ஒரே நேரத்தில் அனைவரும் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பெருமளவில் மாசுக்கேடு விளைவிக்கும்.

    எனவே, தீபாவளியின் போது தமிழ்நாட்டில் வசிக்கும் மக்கள் அன்று அதிகாலை காலை 4.30 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை பட்டாசு வெடித்து பண்டிகையை கொண்டாட அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் பா.வினோத் கன்னா, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஆஜராகி தமிழ்நாட்டுக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பான திருத்தம் கோரும் மனுவை தாக்கல் செய்திருப்பதாகவும், அந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை (இன்று) இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

    இதற்கிடையே சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஏற்கனவே தாக்கல் செய்துள்ள மனுவில்; “இந்த ஆண்டுக்கான பட்டாசுகளை ஏற்கனவே தயாரித்து முடித்தாகி விட்டது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டுள்ள நேரக்கட்டுப்பாட்டினால் நிறைய பட்டாசுகள் விற்பனையாகாமல் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள நேரக்கட்டுப்பாட்டை இந்த ஆண்டுக்கு விலக்கிக் கொள்ள வேண்டும். மேலும் இத்தீர்ப்பில் பசுமை பட்டாசு மட்டுமே வெடிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே விதிமுறைகள் எதுவும் கூறப்படவில்லை. எனவே பசுமை பட்டாசு என்பதற் கான விளக்கம் தேவைப்படுகிறது” என்று கூறப்பட்டு உள்ளது.

    இந்த மனுவும் தமிழக அரசின் மனுவுடன் சேர்த்து இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. #DiwaliCrackers #CrackersBurstingTime #SupremeCourt
    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ. 5-ம் தேதி அரசு விடுமுறை என அறிவித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளதால் அரசு பணியாளர்களுக்கு 4 நாள் விடுமுறை கிடைத்துள்ளது. #Diwali #GovernmentHoliday
    சென்னை:

    தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நவம்பர் 6-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. நவம்பர் 6-ம் தேதி செவ்வாய்க்கிழமை என்பதால் அரசு மற்றும் தனியார் பணியாளர்கள் திங்கட்கிழமை விடுமுறை எடுத்து தீபாவளியை கொண்டாட முடிவு செய்திருந்தனர்.

    எனவே, நவம்பர் 5-ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில், தீபாவளிக்கு முந்தைய தினமான நவம்பர் 5-ம் தேதி அன்று அரசு விடுமுறை என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முந்தைய தினமான நவம்பர் 5-ம் தேதி அரசு விடுமுறை என அறிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது.

    அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் இரண்டாவது சனிக்கிழமையான நவம்பர் 10-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து, தீபாவளிக்காக சொந்த ஊர் செல்ல விரும்பும் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் கிடைத்துள்ளது. ஏற்கனவே, சனி ஞாயிறு விடுமுறை என்பதால் மேலும் இரு நாள்கள் விடுமுறை கிடைத்துள்ளது அவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. #Diwali #GovernmentHoliday
    விழுப்புரத்தில் இன்று காலை பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் தீயில் கருதி சேதமடைந்தன.

    விழுப்புரம்:

    விழுப்புரம் பகுதியில் உள்ள காமராஜர் வீதி மற்றும் குபேரன் வீதி இணையும் இடத்தில் தனியாருக்கு சொந்தமான புத்தகக்கடை உள்ளது. அந்த கடையின் உரிமையாளர் முறையான அனுமதி பெற்று அந்த கடையில் வைத்து பட்டாசு விற்பனை செய்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை அந்த கடைக்கு வாடிக்கையாளர் ஒருவர் தனது குழந்தையுடன் பட்டாசு வாங்க வந்தார். பட்டாசுகளை வாங்கி கொண்டு கடையின் வெளியே சென்ற போது அந்த குழந்தை பட்டாசு ஒன்றை பற்ற வைக்குமாறு கூறி அடம் பிடித்து அழுதது. இதை தொடர்ந்து குழந்தையின் தந்தை பட்டாசை பற்றவைத்தார் .

    அப்போது பட்டாசில் இருந்து தீப்பொறி ஒன்று பறந்து அந்த பட்டாசு கடையில் விழுந்தது. இதில் கடையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இதை பார்த்து கடையில் இருந்து ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கடையில் இருந்து வேகமாக வெளியே ஓடிவந்தனர்.

    இதுகுறித்து விழுப்புரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு 2 வண்டிகளில் விரைந்து வந்து தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர். இதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் தீயில் கருதி சேதமடைந்தன.

    தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் தீவிபத்து தடுக்கப்பட்டது.

    தீபாவளி பட்டாசு வெடிக்கக் கட்டுப்பாடுகள் விதித்திருப்பது குறித்து தமிழக அரசு சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. #Diwali
    சென்னை:

    இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம. ரவிக்குமார், முதலமைச்சர் தனிப்பிரிவில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பட்டாசு வெடிக்கக் கட்டுப்பாடுகள் விதித்திருப்பது இந்துக்களின் வழிபாட்டு உரிமையில் தலையிடுவதாகும். எனவே தமிழக முதல்வர் இதில் தலையிட்டு மத ரீதியான வழிபாட்டு உரிமைகளில் கோர்ட்டு தலையிட வேண்டாம் என வலியுறுத்தி சிறப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Diwali
    தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. #DiwaliCrackers #CrackersBurstingTime #SupremeCourt
    புதுடெல்லி

    தீபாவளி பண்டிகையின்போது இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. பட்டாசு விற்பனைக்கும் கட்டுப்பாடுகளை விதித்தது.

    இந்நிலையில், தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பட்டாசு வெடிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    பட்டாசு வெடிக்க 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதை மாற்றி, காலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை பட்டாசுவெடிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


    மேலும், இரவில் தொடர்ச்சியாக 2 மணி நேரம் பட்டாசுகளை வெடித்தால் சுற்றுச்சூழல் அதிக அளவில் மாசுபடும் என்றும் தமிழக அரசின் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, பசுமை பட்டாசு என்றால் என்ன என்று விளக்கம் அளிக்கக் கோரி தமிழக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. #DiwaliCrackers #CrackersBurstingTime #SupremeCourt
    தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் 4 நாட்களுக்கு வெளியூர் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #Diwali
    சென்னை:

    சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நவம்பர் 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை 3 நாட்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்து கழக பஸ்கள் அதிகமாக இயக்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும் கீழ்கண்ட இடங்களில் பஸ்களை நிறுத்தி சென்னை நகருக்குள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி வண்டலூர் மேம்பாலம், இரும்புலியூர், மதுரவாயல் சுங்கச்சாவடி, கார்த்திகேயன் நகர், எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம், நெற்குன்றம், பூந்தமல்லி பைபாஸ் சாலை, மதுரவாயல் மேம்பாலம், வானகரம் ஏசு அழைக்கிறார் வளாகம், கோயம்பேடு மேம்பாலம், கோயம்பேடு மலர் வணிக வளாகம், கோயம்பேடு போலீஸ் நிலையம் அருகில் ஆகிய இடங்களில் அரசு பஸ்களை நிறுத்திவைத்து, அங்கிருந்து கோயம்பேடு பஸ் பணிமனைக்கு உள்ளே அனுமதிக்கப்படும்.

    ஆம்னி பஸ்கள், கோயம்பேடு மார்க்கெட் ‘இ’ சாலையில் உள்ள நிறுத்தத்தில் இருந்து ‘பி’ சாலை வழியாக பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்று அங்கிருந்து வெளிவட்ட சாலை (நசரத்பேட்டை) வழியாக ஊரப்பாக்கம் செல்லலாம். அங்கிருந்து செல்ல வேண்டிய ஊர்களுக்கு புறப்படலாம்.

    ஆம்னி பஸ்கள் மதுரவாயல் பைபாஸ் சாலை மற்றும் 100 அடி சாலையில் வடபழனி நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நவம்பர் 3, 4, 5 மற்றும் 7-ந் தேதிகளில் மதியம் 2 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மார்க்கங்களில் இருந்து சென்னை வரும் கனரக வாகனங்கள் தடை செய்யப்படுகிறது.

    செங்கல்பட்டு மார்க்கமாக வரும் வாகனங்கள் வண்டலூர் பாலம், சென்னை வெளிவட்ட சாலை வழியாக நெமிலிச்சேரி, சி.டி.எச்.சாலையை அடையலாம். அங்கிருந்து பாடி மேம்பாலம் வழியாக ஜி.என்.டி. சாலை, மாதவரம் ரவுண்டானாவை அடையலாம்.

    திருவள்ளூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் மார்க்கமாக வரும் வாகனங்கள் நசரத்பேட்டை இடதுபுறம் திரும்பி வெளிவட்ட சாலை வழியாக சென்னை செல்லவும் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    100 அடி சாலை, பாடி வழியாக கோயம்பேடு நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் பாடி மேம்பால சந்திப்பில் சி.டி.எச். சாலை வழியாக திரும்பி செல்லவேண்டும்.

    பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் நடுவாங்கரை சந்திப்பு மற்றும் நெல்சன்மாணிக்கம் சாலை மேம்பாலம் வழியாக அண்ணாநகர் 3-வது அவென்யூ, சாந்தி காலனி, அம்பத்தூர் எஸ்டேட் சாலை, மாந்தோப்பு வழியாக மாற்று பாதையில் செல்லவேண்டும்.

    கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள தனியார் வாகனங்கள் ஈ.வெ.ரா. சாலையில் மதுரவாயல் நோக்கி செல்பவர்கள் நடுவாங்கரை சந்திப்பு, சாந்தி காலனி, 13-வது மெயின்ரோடு, 2-வது அவென்யூ சாலை, எஸ்டேட் ரோடு, மாந்தோப்பு, வானகரம் வழியாக மாற்று பாதையில் செல்ல வேண்டும்.

    வடபழனி நோக்கி செல்லும் தனியார் வாகனங்கள் என்.எஸ்.கே.நகர் சந்திப்பு, ரசாக் கார்டன், எம்.எம்.டி.எ. காலனி, வினாயகபுரம் வழியாக செல்லவேண்டும்.

    தாம்பரம் - பெருங்களத்தூர் இடையே போக்குவரத்து நெரிசல் இயல்பாக உள்ளதால் தென் மாவட்டங்களுக்கு செல்ல நினைக்கும் தனியார் வாகன ஓட்டுனர்கள் இ.சி.ஆர். மற்றும் ஓ.எம்.ஆர். சாலை வழியாக செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் வழியாக செல்ல வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #Diwali

    தீபாவளி திருடர்களை கண்காணிக்க ஆள் இல்லாத விமானம் இந்த ஆண்டு பயன்படுத்தப்படுகிறது. ரிமோட் மூலம் இயக்கப்படும் இந்த சிறிய விமானத்தை அண்ணா பல்கலை கழக தொழில்நுட்ப குழுவினரிடமிருந்து போலீசார் வாங்கி உள்ளனர். #Drone
    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்குவதற்கு இன்றும், நாளையும் கூட்டம் அலைமோதும்.

    இதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகை வரையில் மாம்பலம், பாண்டி பஜார் உள்ளிட்ட இடங்களில் தினமும் மாலை நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.

    ஆண்டுதோறும் தீபாவளி நேரத்தில் தி.நகரில் மக்கள் கூடும் இடங்கள் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் அதே போல் பாதுகாப்பு பணிகள் இன்று தொடங்கின.

    தி.நகர் பாண்டிபஜார் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் நடமாட்டமும் அதிகமாக இருக்கும். பொருட்களை வாங்க வரும் பொது மக்களின் உடமைகளை கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு வலம் வரும் இந்த கொள்ளையர்களை பிடிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தி.நகர் ரங்கநாதன் தெரு உஸ்மான் ரோடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில் 750 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று தொடங்கி வைத்தார். மாம்பலம் போலீஸ் நிலையத்தில் நடந்த இந்த விழாவில் கூடுதல் கமி‌ஷனர் மகேஷ் குமார் அகர்வால், தி.நகர் துணை கமி‌ஷனர் அரவிந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கேமராவில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க மாம்பலம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.


    தி.நகர் பஸ் நிலையம், போத்தீஸ் சந்திப்பு ஆகிய 2 இடங்களில் சிறிய கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    கூட்டத்தில் புகுந்து திருடும் கொள்ளையர்களின் 50-க்கும் மேற்பட்ட போட்டோக்களை போலீசார் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்துள்ளனர். பேஸ் டிடெக்டிவ் என்கிற கண்டு பிடிப்பு முறையில் புகைப்படத்தில் இருக்கும் குற்றவாளிகள் கூட்டத்துக்குள் புகுந்தால் அவர்களை காட்டிக் கொடுக்கும் வகையிலும் சிஸ்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் திருடும் எண்ணத்தில் எந்த குற்றவாளியாவது மாம்பலம் பகுதியில் ஊடுருவினால் நிச்சயம் போலீசில் சிக்கிக் கொள்வார்கள். அவர்கள் தப்ப முடியாது.

    தீபாவளி திருடர்களை கண்காணிக்க ஆள் இல்லாத விமானமும் இந்த ஆண்டு பயன்படுத்தப்படுகிறது. ரிமோட் மூலம் இயக்கப்படும் இந்த சிறிய விமானத்தை அண்ணா பல்கலை கழக தொழில்நுட்ப குழுவினரிடமிருந்து போலீசார் வாங்கி உள்ளனர். இதன் மூலம் போலீசார் பணியில் இல்லாத இடங்களிலும் கூட்டத்தை எளிதாக கண்காணிக்க முடியும்.


    தீபாவளி பாதுகாப்பில் இன்னொரு சிறப்பு ஏற்பாடாக போலீசாரின் சீருடையில் கேமரா பொருத்தி கண்காணிக்கும் முறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது. 15 போலீசாரின் சீருடைகளில் கேமராக்களை கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பொருத்திவிட்டார். இந்த போலீசார் பணியில் ஈடுபட்டிருக்கும்போது கேமரா இயங்கிக் கொண்டே இருக்கும். போலீசாரின் எதிரே நின்று பேசுபவர்களின் குரலும், போலீசின் குரலும் அதில் பதிவாகும்.

    ஜி.பி.எஸ். கருவியுடன் கேமரா இணைக்கப்பட்டிருப்பதால் போலீஸ்காரர் எங்கு இருக்கிறார்? என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் மூலம் போலீசார் யாராவது தவறு செய்திருந்தாலும் எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

    இது தவிர 7 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும், 8 இடங்களில் கண்காணிப்பு கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. #Drone
    சென்னையில் தீபாவளி பாதுகாப்பு பணியில், அஜித் ஆலோசனையில் செயல்படும் தக்‌ஷா குழுவினர் ஈடுபட உள்ளனர். #Ajith #DhakshaTeam
    நடிகர் அஜித்குமார் நடிப்பு மட்டுமல்லாமல் புகைப்படக் கலை, பைக் ரேஸ், கார் ரேஸ், ரிமோட் மூலம் இயங்கும் குட்டி விமானங்களை இயக்குதல் போன்றவற்றிலும் ஆர்வம் காட்டுபவர்.

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி வளாகத்தில் பயிலும் ஏரோநாடிகல் மாணவர்கள் ஆளில்லா விமானங்கள் குறித்து ஆய்வு செய்ய தக்‌ஷா எனும் குழுவை உருவாக்கினர். இந்த குழுவின் ஆலோசகராக அஜித் நியமிக்கப்பட்டார். ஏற்கனவே ரிமோட் மூலம் வாகனங்களை இயக்குவதில் கைதேர்ந்தவரான அஜித்திடம் பொறுப்பு கொடுக்கப்பட்டதால் தக்‌ஷா குழு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.



    இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பல்கலைக்கழக அளவிலான ஏரோ டிசைன் போட்டியில் தக்‌ஷா குழு தங்களது திறனை வெளிப்படுத்தியது. இதையடுத்து ஆஸ்திரேலியாவின் குயின்ஸ் லேண்டில் நடந்த யூஏவி மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்ச் போட்டியில் தக்‌ஷா குழு பங்கேற்றது. அஜித் ஆலோசகராக இருந்து வழிநடத்திய தக்‌ஷா அணிக்கு அந்த சர்வதேசப் போட்டியில் 2-வது இடம் கிடைத்தது.

    தற்போது அஜித்தை ஆலோசகராக கொண்ட தக்‌ஷா அணியினர், காவல் துறையுடன் இணைந்து ட்ரோன் மூலம் சென்னை தி.நகரை கண்காணிக்க உள்ளனர். #ThalaAjith #DakshaTeam #Ajith
    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரூர் பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. #diwali
    நொய்யல்:

    தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 6-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே இனிப்பு வகைகள் பிரதானமாக இருக்கும். இதற்காக வெல்லம் தயாரிக்கும் பணி கரூர் பகுதிகளில் தீவிரமாக நடந்து வருகிறது. முத்தனூர், கவுண்டன்புதூர், நடையனூர், கரைப்பாளையம், நொய்யல், சேமங்கி, கொளத்துப்பாளையம், வேட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர்.

    நிலத்தில் கரணை பதித்தவுடன் பல விவசாயிகள் புகளூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டிச் செல்வதற்கு பதிவு செய்கின்றனர். பதிவு செய்யாத விவசாயிகள் கரும்பு விளைந்தவுடன் பல்வேறு பகுதிகளில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலை அதிபர்களுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,300-க்கு விற்பனை செய்கின்றனர்.

    கொள்முதல் செய்யப்படும் கரும்புகளை நவீன எந்திரத்தின் மூலம் சாறு பிழிந்து இரும்பு கொப்பரையில் ஊற்றி காய வைத்து சரியான பதத்துடன் பாகு வந்தவுடன், மர அச்சுத் தொட்டியில் ஊற்றி உலர வைத்து குப்புற கவிழ்த்து மர சுத்தியலால் தட்டுகின்றனர். அதிலிருந்து அச்சு வெல்லம் விழுகிறது.

    அதேபோல மரத்தொட்டியில் கரும்பு பாகை ஊற்றி உலர வைத்து துணிகள் மூலம் உருண்டை பிடித்து உருண்டை வெல்லம் தயாரிக்கப்படுகிறது. பின்னர் நன்கு உலர வைத்து சாக்குகளில் 30 கிலோ கொண்ட சிப்பங்களாக தயாரிக்கப்படுகிறது. தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை வியாபாரிகள் வாங்கி லாரிகள் மூலம் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், சண்டிகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

    தீபாவளிக்கு இன்னும் சிறிது நாட்களே உள்ளதால் இந்த பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணி இரவு-பகலாக நடந்து வருகிறது. கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,150-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,150-க்கும் வியாபாரிகள் வாங்கிச்சென்றனர். இந்த வாரம் ஒரு சிப்பம் உருண்டை வெல்லம் ரூ.1,200-க்கும், அச்சு வெல்லம் ரூ.1200-க்கும் வாங்கிச் செல்கின்றனர். வெல்லத்துக்கு ஓரளவு விலை கிடைப்பதால், விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #diwali
    ×