search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி"

    தீபாவளி கூட்ட நெரிசலை கண்காணிக்க சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் மத்திய போலீஸ் படையினர் கூடுதலாக பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். #ChennaiCentral
    சென்னை:

    தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், மாம்பலம் ரெயில் நிலையங்களில் வழக்கத்தை விட அதிகமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது.

    ஒவ்வொரு நடைமேடையிலும் கூட்ட நெரிசல் அதிகம் உள்ளதால் இதை பயன்படுத்தி திருடர்களும் உள்ளே புகுந்து கைவரிசை காட்டத் தொடங்கி விட்டனர்.

    இதனால் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    ரெயில் நிலையங்களுக்கு வரும் மக்கள் தொகையை கணக்கெடுக்கையில் அங்கு பாதுகாப்புக்கு நிற்கும் போலீசாரின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு ரெயில்வே போலீசாருடன் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

    இவர்களுக்கு உதவுவதற்காக மத்திய போலீஸ் படையினரும் கூடுதலாக பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். ரெயில் நிலையங்களின் நுழைவாயில், பிளாட்பாரங்கள் ஆகிய இடங்களில் இவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை கூட்டம் இருக்கும்வரை மத்திய போலீஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #ChennaiCentral
    மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. சிந்தாமணி மாளவியா, ‘நான் தீபாவளி அன்று இரவு 10 மணிக்கு மேல் தான் பட்டாசு வெடிப்பேன்’ என தெரிவித்துள்ளார். #BJP #ChintamaniMalviya #FireCrackers
    போபால்:

    தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது.

    இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. சிந்தாமணி மாளவியா, ‘நான் தீபாவளி அன்று இரவு 10 மணிக்கு மேல் தான் பட்டாசு வெடிப்பேன்’ என தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் தீபாவளி பண்டிகையை பாரம்பரிய முறைப்படி கொண்டாடுவேன். இரவு 10 மணிக்கு லட்சுமி பூஜை முடிந்த பிறகே பட்டாசுகள் வெடிப்பேன். இந்து பாரம்பரியங்களில் பிறரின் தலையீட்டை நான் சகித்துக்கொள்ள மாட்டேன். என் மத பாரம்பரியத்தை கடைப்பிடிப்பதற்காக சிறை செல்வதாக இருந்தாலும், அதற்காக சந்தோஷப்படுவேன். இந்து விழாக்களை எப்போது கொண்டாட வேண்டும் என்பதற்கு ஏற்கனவே இந்து நாட்காட்டி உள்ளது. விழாக்களை நடத்த கால நேரம் நிர்ணயம் விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. முகலாயர்கள் ஆட்சியின் போது கூட, இந்து விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டது இல்லை.

    இவ்வாறு சிந்தாமணி மாளவியா கூறி உள்ளார். 
    தீபாவளி சிறப்பு சலுகையாக 899 ரூபாய் கட்டணத்தில் உள்நாட்டில் 64 வழித்தடங்களில் பயணம் செய்யலாம் என இன்டிகோ விமானச் சேவை நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. #IndiGoDiwalisale #IndiGofaresRs899
    புதுடெல்லி:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜெட் ஏர்வேஸ், ஏர் ஏசியா ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் பயணக் கட்டணத்தில் சலுகை திட்டங்களை அறிவித்திருந்தன.

    அவ்வகையில், 899 ரூபாய் கட்டணத்தில் தொடங்கி, உள்நாட்டில் 64 வழித்தடங்களில் பயணம் செய்யலாம் என இன்டிகோ விமானச் சேவை நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

    8-11-2018 முதல் 15-4-2019 வரை பயணம் செய்யும் வகையில் அக்டோபர் 24 (இன்று) முதல் 26-ம் தேதிவரை இதற்கான டிக்கெட்டுகளை இன்டிகோ இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அந்நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #IndiGoDiwalisale  #IndiGofaresRs899
    தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கு கோர்ட்டு விதித்துள்ள நிபந்தனைகளை ரத்து செய்ய அரசு முயற்சிக்க வேண்டும் என ராமகோபாலன் கூறியுள்ளார். #Diwali
    சென்னை:

    இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    உச்சநீதி மன்றம் அளிக்கும் தீர்ப்புகள், இந்துக்களின் நம்பிக்கைகளை சிதைப்பதாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக கருதப்பட்டு வருவது நீதிமன்றங்கள்.

    ஆனால், சமீப காலங்களில் அடுத்து அடுத்து வந்த தீர்ப்புகளான, ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி அளித்தது, தகாத உறவு குற்றமில்லை என்றது, ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்பது உள்பட பல தீர்ப்புகள் இந்துக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளன.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிப்பது குறித்த தீர்ப்பு நேற்று வந்துள்ளது. தீபா வளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே வெடிக்க வேண்டும். அதே சமயம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய நாட்களில் இரவு 11.55 மணியிலிருந்து 12.30 மணி வரை வெடிக்கலாம்.

    கண்டிப்பாக தீபாவளி இரவு நேரத்தில் கொண்டாடப் படுவதில்லை. ஒரு மதத்தின் நம்பிக்கையை ஏற்போம். பெரும்பான்மை மக்களின் மத உணர்வுகளை மதிக்க வேண்டிய அவசியமில்லை என்ற இரட்டை நிலைப் பாடு, ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கிவிடும். மக்களின் கடைசி நம்பிக்கையாக இருந்த நீதிமன்றங்கள் இன்று, அவநம்பிக்கையின் முதலிட மாக மாறுவது ஆபத்தானது என்பதை இந்து முன்னணி சுட்டிக்காட்டுகிறது.

    உச்சநீதி மன்றம், பட்டாசு வெடிக்க விதித்துள்ள கட்டுப்பாடு களை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் முயற்சியை உடனே எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. நமது பாரம்பரிய விழாக்கள், பண்டிகைகள் குறித்து போடப்படும் வழக்குகளில் இன்னமும் அரசு வழக்கறி ஞர்கள் அதிக கவனம் கொடுத்து வாதாடி மக்களின் உணர்வுகளை, உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

    வருகின்ற தீபாவளி திருநாள் எந்தவித இடர் பாடும் இல்லாமல் மக்கள் கொண்டாட, இந்து முன்னணி இயக்கம், மக்களை ஒருங்கிணைத்து ஜனநாயக வழியில் போராடும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Diwali
    தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை அனைவரும் ஒரே சமயத்தில் பட்டாசு வெடிப்பதால் காற்றில் மாசு அதிகமாகும். புகை மண்டலம் வழக்கத்தை விட அதிகரிக்கும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #Deepavali
    சிவகாசி:

    தீபாவளியன்று இரவில் 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து பட்டாசு தொழிலாளர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    சிவகாசியை சேர்ந்த தொழிலாளி சுந்தரமூர்த்தி கூறியதாவது:-

    தற்போது பருவமழை சீசன் உள்ளது. தீபாவளியன்று இரவு நேரத்தில் மழை பெய்தால் பட்டாசுகளை வெடிக்க முடியாமல் போய்விடும். தீபாவளி பண்டிகை என்பது தீமையை அழித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் தினமாகும். தீபாவளி அன்று பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்த இரவு வரை காத்திருக்க வேண்டும் என்பது நடைமுறைக்கு சாத்தியமல்ல.

    மேலும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை அனைவரும் ஒரே சமயத்தில் பட்டாசு வெடிப்பதால் காற்றில் மாசு அதிகமாகும். புகை மண்டலம் வழக்கத்தை விட அதிகரிக்கும் என்றார்.



    பிரபு என்பவர் கூறுகையில், பட்டாசு தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் தொழிலாளர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். விருதுநகர் மாவட்டம் பட்டாசு தொழிலை நம்பித்தான் உள்ளது. இதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கிறது.

    இதனால் அரசு வேலையை எதிர்பார்க்காமல் இளைஞர்கள் பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். உழைப்பாளிகளை உருவாக்கும் தொழிலாக பட்டாசு தொழில் உள்ளது. எனவே தீபாவளியன்று பட்டாசு வெடிக்க அதிக நேரம் கொடுக்க வேண்டும். இந்த தொழிலை பாதுகாப்பதுடன் அதன் வளர்ச்சிக்கு தமிழக அரசு உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Deepavali

    தீபாவளி போனசை உயர்த்தாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதாக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். #diwali
    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, மனுக்களை பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெற்றார். கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா முள்ளிப்பாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களது நில பத்திரங்களை எடுத்து கொண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

    அதில், கடவூர் ஜமீனிடமிருந்து கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. அதனை அனுபவித்து வந்த நிலையில், தற்போது கிராம கணக்கில் நிலஉச்சவரம்பு புஞ்சை நிலமாக தவறுதலாக உள்ளது. இதனை ரத்து செய்து விட்டு எங்களது கிரயபத்திரத்தின் அடிப்படையில் கணினியில் ஏற்றிவிட்டு மனைபட்டா மாற்றம் செய்து தர வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    குளித்தலையை சேர்ந்த மாட்டுவண்டி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில், குளித்தலை காவிரி ஆற்றில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டிருப்பதால் கடந்த 40 ஆண்டுகளாக எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மணல் அள்ள உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
    லாலாபேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் நாகராஜன் கொடுத்த மனுவில், கரூர் மாவட்டம் கள்ளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். எனவே இங்கு போதிய படுக்கை வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

    கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் சிலர் தங்களுக்கு பணிக்கொடை நீண்ட நாட்களாக வழங்கப்படாதது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
     
    தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கொடுத்த மனுவில், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனசை உயர்த்தி வழங்க வேண்டும். இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில் வருகிற நவம்பர் மாதம் 5-ந் தேதி இரவு 8 மணிக்கு தொடங்கி 6-ந் தேதி இரவு 8 மணி வரை வேலைநிறுத்த போராட்டம் நடத்துவோம். அதன்பிறகும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று கூறியிருந்தனர். #Diwali
    தி.நகர்-பாரிமுனை-வண்ணாரப்பேட்டையில் தீபாவளி திருடர்களை பிடிக்க 2500 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் இப்போதே தொடங்கியுள்ளனர்.

    அடுத்த மாதம் 6-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால் இந்த வார இறுதியிலேயே புத்தாடை மற்றும் பொருட்களை வாங்குவதற்கு பொது மக்கள் அலை மோதுவார்கள்.

    குறிப்பாக வருகிற 2 மற்றும் 3-ந்தேதிகளில் தி.நகர், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தி.நகரில் ரங்கநாதன் தெரு, உஸ்மான் ரோடு, பாண்டிபஜார், பனகல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதனை கருத்தில் கொண்டு சுமார் 500 போலீசாரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. துணை கமி‌ஷனர் அரவிந்தன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் 300 கேமராக்களும் பொறுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிகளை துரிதப்படுத்துவதற்காக நாளை மறுநாள் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட உள்ளது. திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்கள் கூட்டத்துக்குள் புகுந்து விட்டால் அதனை கண்காணித்து காட்டி கொடுக்கும் வகையிலும் ‘‘சிறப்பு சர்வர்’’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இதுபோன்ற நடைமுறைகளை தி.நகரில் போலீசார் பின்பற்றி வருகிறார்கள்.

    வடசென்னை பகுதியிலும் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் கூடுதல் கமி‌ஷனர் தினகரன், இணை ஆணையர் பிரேமானந்த் சின்கா ஆகியோரது மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. பூக்கடை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 452 கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. இன்னும் 135 கேமராக்கள் பொறுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிந்துவிட் டால் பூக்கடை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 100 சதவீதம் கேமரா பொறுத்தும் பணிகள் நிறைவு பெற்றுவிடும்.

    யானைக்கவுனி பகுதியில் 573 கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒரு மாதத்துக்கு முன்பே இதற்கான பணிகள் முடிந்து விட்டன. யானைக் கவுனி போலீஸ் நிலையத்தில் பிரத்யேகமான கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல வண்ணாரப் பேட்டை பகுதியில் 591 கேமராக்களும், தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் எல்லைக்குட்பட்ட பகுதியில் 509 கேமராக்களும் ராயபுரம் பகுதியில் 300 கேமராக்களும் பொறுத்தப்பட்டுள்ளன.

    இதன் மூலம் தி.நகர், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் அனைத்திலும் சுமார் 2500 கேமராக்கள் மூலமாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வண்ணாரப்பேட்டை எம்.ஜி.ரோடு ஜி.ஏ. ரோடு சந்திப்பில் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    போனஸ் அறிவிப்பு வெளியிடப்படாததால் தீபாவளி அன்று 108 ஆம்புலன்சுகளை இயக்க மாட்டோம் என்று ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். #diwali
    ஈரோடு:

    108 இலவச ஆம்புலன்சுகள் மூலம் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களையும், கர்ப்பிணி பெண்களையும் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்படுவார்கள்.

    பொதுமக்களுக்கு குறிப்பாக ஏழை மக்களுக்கு இந்த இலவச ஆம்புலன்சு சேவை மிக உபயோகமாக உள்ளது.

    இந்த நிலையில் 108 ஆம்புலன்சு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி தங்களுக்கு 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

    போனஸ் அறிவிப்பு வெளியிடப்படாததால் அவர்கள் தீபாவளி அன்று 108 ஆம்புலன்சுகளை இயக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.

    வரும் 5-ந் தேதி இரவு 8 மணிக்கு தொடங்கி மறுநாள் 6-ந் தேதி இரவு 8 மணி வரை மொத்தம் 24 மணி நேரம் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.

    மேலும் அவர்கள் கூறும் போது, ‘‘எங்கள் சங்கத்தை பொறுத்த வரையில் சேவையை நிறுத்தி பொதுமக்களை அவதிக்குள்ளாக்க ஒரு போதும் விரும்பவில்லை. ஆனால் எங்களை நிர்வாகம் போராட்டத்தில் தள்ளுகிறது என்பதை மறுக்க முடியாத உண்மையாகும்’’ என்று கூறினர்.

    ஈரோடு மாவட்டத்தை பொறுத்த வரை 108 ஆம்புலன்சுகள் 35 உள்ளன. இதில் 140 பேர் பணியாற்றுகிறார்கள். 70 டிரைவர்கள், 80 மருத்துவ உதவியாளர்கள் உள்ளனர்.

    தீபாவளி அன்று இவர்கள் அனைவரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். #diwali
    தீபாவளி பண்டிகைக்காக கோவையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் தனியார் ஆம்னி பஸ்களின் கட்டணத்தை இருமடங்கு உயர்த்தி உள்ளனர். #Diwali #OmniBus
    கோவை:

    கோவையில் இருந்து சென்னைக்கு வழக்கமாக ஆம்னி பஸ்களில் ரூ.700 முதல் ரூ.1200 வரை வசூலிக்கப்படும். ஆனால் ஆயுதபூஜை விடுமுறை முடிந்த நிலையில் நேற்று சென்னைக்கு சென்றவர்களிடம் ரூ.2 ஆயிரம் வரை டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

    இதை விட தீபாவளிக்கு ஊருக்கு செல்பவர்கள் அதிகமாக இருப்பார்கள் என்பதால் டிக்கெட் கட்டணத்தை கூடுதலாக உயர்த்தி உள்ளனர்.

    தீபாவளி பண்டிகை 6-ந் தேதி கொண்டாடப்படும் நிலையில் 2-ந் தேதி(வெள்ளிக்கிழமை) முதலே ஊருக்கு செல்வார்கள் என்பதால் அன்றைய தினம் டிக்கெட்டுகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கின்றனர்.

    முன்பதிவு டிக்கெட்டுகளை பொறுத்தவரை கோவையில் இருந்து சென்னைக்கு தற்போதே ரூ.2,500 வரை வசூலிக்கப்படுகிறது.

    இதேபோல கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு வழக்கமாக தனியார் பஸ்களில் ரூ.500 முதல் 900 வரை வசூலிக்கப்படும் நிலையில் தீபாவளி டிக்கெட் கட்டணம் ரூ.900 முதல் ரூ.1500 வரை வசூலிக்கப்படுகிறது.

    நாகர்கோவிலுக்கு வழக்கமாக ரூ.600 முதல் ரூ.1000 வரை வசூலிக்கப்படும் நிலையில் தற்போது ரூ.1000 முதல் ரூ.2 ஆயிரம் வரையும் வசூலிக்கப்படுகிறது. #Diwali #OmniBus
    தீபாவளி பண்டிகையின் போது கோவில்களை தகர்க்க தீவிரவாதிகள் திட்டம் தீட்டியிருப்பதாக வெளியான தகவலால் பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் உள்ளனர்.
    புதுடெல்லி:

    பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாதிகள் அடிக்கடி இந்தியாவுக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அவர்கள் மீண்டும் தீவிர தாக்குதல்களில் ஈடுபடுவதற்கு திட்டங்களை வகுத்துள்ளனர்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் ராவல்பிண்டியில் லஷ்கர்-இ-தொய்பா தளபதியாக செயல்படும் மவுலவி அபுஷேக் இந்தியாவில் பல இடங்களை தாக்கப் போவதாக கடிதம் ஒன்று அனுப்பி உள்ளான்.

    இந்த கடிதம் ஜெய்பூர் ரெயில் நிலைய மேலாளருக்கு வந்துள்ளது. அதில் தசரா மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களில் நாடு முழுவதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். கோவில்கள் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் ஆகியவற்றை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்துவோம் என்று குறிப்பிட்டுள்ளான்.

    மேலும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் எங்களுடைய தாக்குதல்கள் தீவிரமாக இருக்கும் என்று குறிப்பிட்டு எந்தெந்த இடங்களை தாக்கப் போகிறோம் என்ற விவரத்தையும் அதில் கூறி இருக்கிறான்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்பூர், ஜோத்பூர், பிகேனர், உதய்பூர், கங்கா நகர், ஹனுமன்கார், சித்தூர் கார் ரெயில் நிலையங்களையும், மத்திய பிரதேசத்தில் போபால், குவாலியர், ஜபல்பூர், காத்னி ரெயில் நிலையங்களையும், உஜ்ஜைனியில் உள்ள மகாகாளி கோவில், சாய்பாபா கோவில் ஆகியவற்றையும் தாக்குவோம் என்று அதில் தெரிவித்து இருக்கிறான்.

    அக்டோபர் 20-ந்தேதி வாக்கில் எங்களது தாக்குதல் நடைபெறும் என்று அவன் குறிப்பிட்டிருந்தான். நேற்று முன்தினம் 20-ந்தேதி ஆகும். எனவே அன்று தாக்குதல் நடக்கலாம் என கருதி வடமாநிலங்களில் அனைத்து இடங்களிலும் உஷார்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் எந்த தாக்குதலும் நடைபெறவில்லை.


    தீவிரவாதி தனது கடிதத்தில் தசரா மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தில் இந்த தாக்குதல் நடக்கும் என்று கூறியிருக்கிறான். வருகிற 6-ந்தேதி தீபாவளி பண்டிகை ஆகும். இந்த காலகட்டத்துக்குள் தாக்குதல் நடக்கலாம் என கருதி நாடு முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.

    கோவில்கள், ரெயில் நிலையங்கள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்கள் ஆகியவற்றில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்ச எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #ministermrvijayabaskar #omnibus #diwalifestival

    கரூர்:

    தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனின் குற்றசாட்டு குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் கரூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் நலன் கருதி 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை திருச்சி, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட முக்கிய மாநகராட்சி பகுதிகளில் காலதாமதம் இல்லாமல் பஸ்கள் கிடைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    குறிப்பாக போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவற்றை தவிர்க்கும் வகையில் போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள், தொழிற் சங்கத்தினர் ஆகியோர் அடங்கிய குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    பஸ் நிலையங்களில் இரு சக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து பணியை மேற்கொள்ளும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பண்டிகை கால பயணத்தை மக்கள் சிரமமின்றி மேற்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக செய்யப்பட்டுள்ளது.

    ஆம்னி பஸ்களில் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிப்பது குறித்த அந்த சங்கத்தினருக்கு தெரிவித்து உள்ளோம். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை தாண்டி கூடுதலாக கட்டணம் வசூலித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பஸ்களில் இதுபோன்ற செயல்கள் நடக்க வாய்ப்பில்லை. கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து உரிய ஆதாரத்துடன் புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ministermrvijayabaskar #omnibus #diwalifestival 

    ஒரு ஆண்டுக்கும் மேலாக வேலைவாய்ப்பை இழந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளிக்கு ரூ.5 ஆயிரம் வழங்க கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி:

    மணல் பிரச்சினையால் ஒரு ஆண்டுக்கும் மேலாக வேலைவாய்ப்பை இழந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு வேலை இழப்பீட்டு நிதியாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.

    மணல் பிரச்சினையை தீர்த்திட புதுவை அரசே மணல் விற்பனை செய்ய வேண்டும். அக்டோபர் மாதம் வரை உறுப்பினர் விண்ணப்பம் கொடுத்த அனைவருக்கும் தீபாவளி பணம் வழங்க வேண்டும். தீபாவளி பரிசு கூப்பனுக்கு பதிலாக ரொக்கமாக வங்கியில் செலுத்த வேண்டும். தீபாவளி உதவித்தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி புதுவை மாநில கட்டிடக்கலை தொழிலாளர்கள் சங்கம் (ஏ.ஐ.டி.யூ.சி.) சார்பில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பெரியார் சிலை அருகில் இருந்து தொடங்கிய ஊர்வலத்துக்கு சங்க தலைவர் அய்யம்பெருமாள், பொதுச்செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஊர்வலம் காமராஜர் சாலை, நேருவீதி, மி‌ஷன் வீதி வழியாக ஆம்பூர் சாலையை அடைந்தது. அங்கு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், ஏ.ஐ.டி.யூ.சி. செயல் தலைவர் அபிஷேகம், தலைவர் தினேஷ் பொன்னையா, பொதுச்செயலாளர் சேது செல்வம், பொருளாளர் ஜெயபாலன், செயலாளர் நளவேந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஊர்வலத்தில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். #tamilnews
    ×