search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி"

    தி.நகர் ரங்கநாதன் தெருவில் மாஸ்க் அணியாமல் சென்றவர்களை காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் பிடித்து கொரோனா பரிசோதனை செய்து அனுப்பி வைத்தனர்.
    சென்னை:

    தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி தி.நகர் உள்ளிட்ட வணிகப் பகுதிகளில் இன்று பொதுமக்கள் அதிகளவில் திரண்டு பொருட்களை வாங்கினார்கள். தி.நகர் ரங்கநாதன் தெருவில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    கூட்ட நெரிசலை கண்டு கொள்ளாமல் பலர் மாஸ்க் அணியாமல் அலட்சியமாக சென்றனர். அதுபோன்று மாஸ்க் அணியாமல் சென்றவர்களை காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் பிடித்து கொரோனா பரிசோதனை செய்து அனுப்பி வைத்தனர்.

    இதேபோன்று கூட்டத்துக்குள் மாஸ்க் அணியாமல் சென்றவர்களை மடக்கி பிடித்த போலீசார் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளீர்களா? என்று விசாரணை நடத்தினர். அப்போது தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசியும் போட்டு அனுப்பி வைத்தனர்.

    இதனை கேள்விப்பட்டு முககவசம் அணியாமல் சென்ற பலர் அக்கம் பக்கத்தில் உள்ள கடைகளில் முககவசங்களை வாங்கி அணிந்ததை காணமுடிந்தது.

    இதுபோன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் தி.நகர் ரங்கநாதன் தெரு இன்று பரபரப்பாக காணப்பட்டது.
    குடிசைப்பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகே பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பொது மக்கள் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது.

    வரும் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று கடந்த ஆண்டை போலவே காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பொதுமக்கள் பசுமை பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் பேணி காப்பது நமது கடமையும் பொறுப்புமாகும். அதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் கீழ்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுதல் தன்மையும் கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். ஆஸ்பத்திரிகள், வழிபாட்டுத்தலங்கள் போன்ற இடங்களின்அருகில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசைப்பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகே பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். எனவே சுற்றுச் சூழலுக்கு ஏற்ப அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    தீபாவளிக்கு மக்கள் விரும்பி வாங்கும் மல்லிகை, முல்லை, பிச்சி உள்ளிட்ட மலர்கள் சுமார் ஒரு டன் என்ற அளவிலேயே விற்பனைக்கு வந்தது. இதனால் பூக்களின் விலையும் அதிகரித்தது.
    மதுரை:

    மதுரை மாட்டுத்தாவணியில் ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் 100 டன்னுக்கும் அதிகமான மலர்கள் இந்த சந்தைக்கு விற்பனைக்கு வருவது வழக்கம்.

    தீபாவளி உள்ளிட்ட விசே‌ஷ நாட்களில் கூடுதல் மலர்கள் விற்பனைக்கு வரும். மதுரை உள்ளிட்ட அண்டை மாவட் டங்களில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக செடிகளில் பூக்கள் மலராமல் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் இன்று பூ மார்க்கெட்டுக்கு சுமார் 5 டன் அளவு மலர்கள் மட்டுமே வந்தன.

    குறிப்பாக தீபாவளிக்கு மக்கள் விரும்பி வாங்கும் மல்லிகை, முல்லை, பிச்சி உள்ளிட்ட மலர்கள் சுமார் ஒரு டன் என்ற அளவிலேயே விற்பனைக்கு வந்தது. இதனால் பூக்களின் விலையும் அதிகரித்தது. ஆனாலும் மக்கள் அதிக ஆர்வம் காட்டாததால் விற்பனை மந்தமாகவே காணப்பட்டது.

    மதுரை மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ 1,700 ரூபாய்க்கும், முல்லை 1,500 ரூபாய்க்கும், பிச்சி 1,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அரளி 250 ரூபாய்க்கும் சிவந்தி 200 ரூபாய்க்கும், செண்டு பூக்கள், மரிக்கொழுந்து 100 ரூபாய்க்கும், சம்பங்கி 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. சிவந்தி மற்றும் சீசன் மலர்கள் மழை காரணமாக அழுகிய நிலையில் காணப்பட்டது.

    இந்த மலர்களை பொதுமக்கள் யாரும் வாங்க ஆர்வம் காட்டாததால் வியாபாரிகள் மார்க்கெட் பகுதியில் உள்ள குப்பை கொட்டும் இடங்களில் கொட்டினர்.

    இதனால் அந்த பகுதியில் குப்பைகள் குவிந்து குப்பை மேடாக மார்க்கெட் காட்சி அளிப்பதுடன் துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சில நாட்களாக அந்த பகுதியில் குப்பைகள் அகற்றப்படாததால் மலைபோல குப்பைமேடு காட்சியளிக்கிறது. இதனால் மழை காலங்களில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

    எனவே குப்பைகளை உடனடியாக அகற்ற மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தீபாவளியை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் உள்ள பூ மார்க்கெட்டில் இன்று காலை மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.2,000 வரை விற்பனையானது.
    நெல்லை:

    தீபாவளியை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்ததால் பூக்கள் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் இன்று அனைத்து பூ மார்க்கெட்டுகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    நெல்லை சந்திப்பில் உள்ள பூ மார்க்கெட்டில் இன்று காலை மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.2,000 வரை விற்பனையானது. பிச்சிப்பூ ரூ.1,500 வரை விற்பனையானது. ரோஜா பூ ரூ.250-க்கும், அரளிப்பூ ரூ.250-க்கும், சம்பங்கி பூ ரூ.120-க்கும் விற்பனையானது.

    இதுபோல சங்கரன்கோவில், ஆலங்குளம் பூ மார்க்கெட்டிலும் பூக்கள் அதிக விலைக்கு விற்பனையானது.

    டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள், தற்காலிக பணியாளர்கள், சூப்பர் வைசர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர் ஆகியோருக்கும் 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    வீட்டு வசதி துறையின் கீழ் உள்ள சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    அதில் வீட்டு வசதித்துறையின் கீழ் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 1,036 பணியாளர்களுக்கு 8.33 சதவீத போனஸ் மற்றும் 1.67 சதவீத கருணைத்தொகை என மொத்தமாக 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள், தற்காலிக பணியாளர்கள், சூப்பர் வைசர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர் ஆகியோருக்கும் 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில தலைவர் பெரியசாமி (ஏ.ஐ.டி.யு.சி.) கூறியதாவது:-

    சென்ற அரசு நிதியை காரணம் காட்டி 10 சதவீத போனஸ் வழங்கியதை இந்த அரசு பின்பற்றி தொடர்வது சரியல்ல. கொரோனா காலகட்டத்தில் மதுக்கடைகளை திறந்து அரசின் நிதி நிலைமையை உயர்த்தியவர்கள் டாஸ்மாக் ஊழியர்கள்.

    எனவே அவர்கள் உழைப்பை கருத்தில் கொண்டு 10 சதவீத போனசை உயர்த்தி வழங்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் பசுமையான தீபாவளியை, இறைவனுக்கு மிகவும் பிடித்த எளிமையான முறையில் கொண்டாடி மகிழ வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
    புதுச்சேரி:

    தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் தங்கள் குடும்பத்தோடும் நண்பர்களோடும் உறவினர்களோடும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு நாள் தீபாவளித் திருநாள்.

    இந்த தீபாவளித் திருநாள் அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தையும் சிறந்த ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டுவர வாழ்த்துகிறேன்.

    இந்த தருணத்தில், மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோனா நடத்தை விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்றும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் பசுமையான தீபாவளியை, இறைவனுக்கு மிகவும் பிடித்த எளிமையான முறையில் கொண்டாடி மகிழ வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    புதுவை, தமிழக மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.
    தீபாவளி பண்டிகைக்கு அமெரிக்காவில் பொது விடுமுறை அளிப்பதற்கான மசோதாவை அமெரிக்க பாராளுமன்றத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி.யான கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்தார்.
    அமெரிக்காவில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர்கள் எம்.பி.களாகவும் உள்ளனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு அமெரிக்காவில் பொது விடுமுறை அளிப்பதற்கான மசோதாவை அமெரிக்க பாராளுமன்றத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி.யான கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்தார்.

    அப்போது அவர் பேசும்போது, ‘அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள இந்தியர்களுக்கு தீபாவளி என்பது நன்றியறிதலுக்கான நேரமாகவும், இருளின் மீது ஒளி மற்றும் தீமையின் மீது நன்மையின் வெற்றி கொண்டாட்டமாகவும் இருக்கிறது. தீபாவளியின் மகத்தான மத, கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்காக இந்த தீர்மானத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன்’ என்றார்.
    பஸ்கள் புறப்படுவது சம்பந்தமாக அறிந்து கொள்ளவும், புகார்களை தெரிவிப்பதற்கும் 9445014450, 9445014436 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆண்டுதோறும் தமிழக அரசு சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளியின்போது கொரோனா பயம் காரணமாக குறைந்த அளவிலேயே பொதுமக்கள் பஸ்களில் பயணம் செய்தனர்.

    இப்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல மீண்டும் ஆர்வம்காட்டி வருகின்றனர். குடும்பத்தோடு உற்சாகமாக பயணம் செய்கின்றனர்.

    இதனால் இந்த ஆண்டு அதிகளவு மக்கள் பஸ்களை பயன்படுத்தி வருவதால் தமிழக அரசு பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது. அதன்படி அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தம் உள்ள 20 ஆயிரத்து 334 பஸ்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டு வருகின்றன.

    கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கோயம்பேடு பஸ்நிலையம், மாதவரம் புதிய பஸ் நிலையம், கே.கே.நகர் பஸ் நிலையம், தாம்பரம் ரெயில் நிலையம் மற்றும் தாம்பரம் ‘மெப்ஸ்’ பஸ் நிலையம், பூந்தமல்லி பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதில் கடந்த திங்கட்கிழமை முதல் சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 6,300 பஸ்களுடன் 10,240 சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து துறை விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.

    இதில் கடந்த 1-ந்தேதி சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 தினசரி பஸ்களுடன் 388 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. இதில் 89,932 பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

    நேற்று (2-ந்தேதி) 7 மணி நிலவரப்படி சென்னையில் இருந்து இயக்கப்படும் 2,100 வழக்கமான பஸ்களில் 1,796 பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் 1,575 சிறப்பு பஸ்களில் 501 பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் 1 லட்சத்து 88 ஆயிரத்து 107 பயணிகள் பயணம் செய்திருந்தனர்.

    நேற்று இரவு 12 மணி நிலவரப்படி மொத்தம் 5,932 பஸ்களில் 2 லட்சத்து 34 ஆயிரத்து 918 பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதுதவிர இன்று அதிகாலை வரை 60 ஆயிரம் பயணிகள் வெளியூர் சென்றனர். மொத்தம் இதுவரை 3 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

    நாளை தீபாவளி என்பதால் இன்று சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்வதற்கு 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வருவார்கள் என்பதால் பஸ் நிலையங்களில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து இன்று 2,100 பஸ்களுடன் 1,540 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.

    இதில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 744 பயணிகள் இன்று பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். பயணச்சீட்டு முன்பதிவு செய்துகொள்ள www.tnstc.in, tnstcApp, www.redbus.in, www.paytm.com, www.busindia.com என்ற இணையதளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பஸ்கள் புறப்படுவது சம்பந்தமாக அறிந்து கொள்ளவும், புகார்களை தெரிவிப்பதற்கும் 9445014450, 9445014436 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    கோயம்பேடு பேருந்து நிலையம்


    பொதுமக்கள் கோயம்பேடு பஸ்நிலையத்துக்கு அதிக அளவில் வருவதால் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று இரவு பஸ் நிலையத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு வந்திருந்த பயணிகளிடம் எந்த ஊர்களுக்கு செல்கிறீர்கள் என்று கேட்டறிந்தார். சொந்த ஊர்களுக்கு செல்ல போதுமான அளவு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

    பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தாம்பரம், மாதவரம் உள்ளிட்ட 4 பஸ் நிலையங்களுக்கு மக்கள் சென்றுவர மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஏராளமான இணைப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருவதாக பொதுமக்களிடம் தெரிவித்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘பொதுமக்களின் வசதிக்காக தேவையான அளவு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எந்தெந்த ஊர்களுக்கு கூட்டம் அதிகமாக உள்ளதோ அந்த ஊர்களுக்கு கூடுதலான பஸ்களை இயக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்.

    ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் செய்தால் பொதுமக்கள் தாராளமாக புகார் செய்யலாம். இதற்காக 24749002, 18004256151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார். பயணிகளின் வசதிக்காக 20 இடங்களில் தகவல் மையங்கள் செயல்பட்டு வருகிறது. அதையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்றார்.

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் இன்று காலை முதல் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதேபோல் தாம்பரம், பூந்தமல்லி பஸ் நிலையங்களிலும் அதிக அளவு கூட்டம் இருந்தது. அதற்கேற்ப பஸ்களும் உடனுக்குடன் வந்து பயணிகளை ஏற்றி சென்றது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து இதுவரை 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இன்று மேலும் 2 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம். இன்று வழக்கமான 2100 பஸ்களுடன், 1,540 சிறப்பு பஸ்களும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்களின் கூட்டத்துக்கு ஏற்ப தேவையான பஸ்களை இயக்கி வருகிறோம். நாளை அதிகாலை வரை சிறப்பு பஸ்கள் வந்து செல்லும். எனவே பொதுமக்கள் அரசு பஸ்களில் உடனே சொந்த ஊருக்கு செல்லலாம். அந்த அளவுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அரசு பஸ்கள் மட்டுமின்றி தனியார் ஆம்னி பஸ்களிலும் ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். அங்கும் ஏராளமான சிறப்பு ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.


    யாரெல்லாம் காற்று மாசுபாடு குறித்து கவலை கொள்கிறீர்களோ, நீங்கள் பட்டாசு வெடிக்கும் ஆனந்தத்தை தியாகம் செய்துவிடுங்கள் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறியுள்ளார்.
    கோவை:

    “தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க தடை விதிக்க கூடாது” என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "குழந்தைகளுக்கு பட்டாசுகள் அளித்திடும் சந்தோஷத்தை மறுக்க காற்றுமாசு ஒரு காரணமல்ல. நீங்கள் அவர்களுக்காக செய்யும் தியாகமாக, 3 நாட்களுக்கு அலுவலகத்திற்கு நடந்து செல்லுங்கள். குழந்தைகள் பட்டாசு வெடித்து மகிழட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், அந்த ட்வீட்டுடன் சேர்த்து வெளியிட்டுள்ள வீடியோவில், "நான் பட்டாசுகள் வெடிப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், நான் சிறுவனாக இருந்த போது பட்டாசு வெடிப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான ஒரு செயலாக இருந்தது. நாங்கள் செப்டம்பர் மாதத்தில் இருந்தே பட்டாசுகள் பற்றி கனவு காண தொடங்கிவிடுவோம். தீபாவளி பண்டிகை முடிந்த பிறகும் ஓரிரு மாதங்களுக்கு அந்த பட்டாசுகளை பத்திரப்படுத்தி தினமும் வெடித்து மகிழ்வோம்.

    ஆனால், இப்போது என்னவென்றால், சுற்றுச்சூழல் மீது திடீர் அக்கறை காட்டும் சிலர் குழந்தைகள் பட்டாசு வெடிக்க கூடாது என கூறுகிறார்கள். இது சரியல்ல. 

    யாரெல்லாம் காற்று மாசுபாடு குறித்து கவலை கொள்கிறீர்களோ, நீங்கள் பட்டாசு வெடிக்கும் ஆனந்தத்தை தியாகம் செய்துவிடுங்கள். வேண்டுமென்றால், பெரியவர்கள் பட்டாசுகள் வெடிப்பதை நிறுத்திவிடுங்கள். ஆனால், குழந்தைகள் பட்டாசுகள் வெடித்து ஆனந்தமாக இருக்கட்டும். அவர்களுக்காக, நீங்கள் உங்கள் அலுவலகங்களுக்கு 3 நாட்கள் வாகனங்களில் செல்வதற்கு பதிலாக நடந்து செல்லுங்கள்" என்று கூறியுள்ளார்.

    அவரது தீபாவளி வாழ்த்து செய்தியில், "அன்பிலும், ஆனந்தத்திலும், விழிப்புணர்விலும் நீங்கள் ஒளிர்வது, உங்களை இருளில் தள்ளக்கூடிய இக்கட்டான் காலங்கட்டங்களில் மிக அவசியம். இந்த தீபாவளி திருநாளில், உங்கள் மனிதத் தன்மையை அதன் முழு சிறப்புடன் ஒளிரச் செய்திடுங்கள்” என தெரிவித்துள்ளார்.
    அயோத்தியில் சரயு ஆற்றங்கரையில் உள்ள படித்துறைகளில் 9 லட்சம் விளக்குகளும், நகரின் மற்ற இடங்களில் 3 லட்சம் விளக்குகளும் ஏற்றப்பட உள்ளன.
    அயோத்தி:

    தீபாவளியை முன்னிட்டு, இன்று (புதன்கிழமை) இரவு 12 லட்சம் அகல் விளக்குகளால் அயோத்தியை அலங்கரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 14 ஆண்டுகள் வனவாசம் மற்றும் ராவணனை தோற்கடித்த பிறகு அயோத்திக்கு திரும்பும் ராமர், சீதையை வரவேற்கும் வகையில் அங்கு தீபாவளி கொண்டாடப்படுகிறது.

    அயோத்தியில் சரயு ஆற்றங்கரையில் உள்ள படித்துறைகளில் 9 லட்சம் விளக்குகளும், நகரின் மற்ற இடங்களில் 3 லட்சம் விளக்குகளும் ஏற்றப்பட உள்ளன. இதன்மூலம் புதிய சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அயோத்தி ராமர் கோவில்

    கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள். யோகி ஆதித்யநாத் அழைப்பின்பேரில், மத்திய கலாசாரத்துறை மந்திரி கிஷன் ரெட்டியும் பங்கேற்கிறார்.

    மேலும், நாட்டுப்புற கலைஞர்களின் நிகழ்ச்சி, ராமாயண சம்பவங்களை விளக்கும் அலங்கார ஊர்திகள் ஊர்வலம், ராமலீலா, லேசர் ஷோ ஆகிய நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.


    புதுவை மற்றும் காரைக்கால், ஏனாம் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வருகிற 5 மற்றும் 6-ந்தேதிகளிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    தீபாவளி பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி புதுச்சேரி விடுதலை நாள், கல்லறை திருநாள் என தொடர்ச்சியாக தீபாவளி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு செல்பவர்கள் மீண்டும் புதுவைக்கு திரும்ப வசதியாக கூடுதல் நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    இதைத்தொடர்ந்து புதுவை மற்றும் காரைக்கால், ஏனாம் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வருகிற 5 மற்றும் 6-ந்தேதிகளிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி பிறப்பித்துள்ளார். இந்த விடுமுறைகள் முடிந்து வருகிற 8-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
    மருத்துவமனை, வழிபாட்டு தலங்களில் இருந்து 100 மீட்டருக்குள் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ஸ்மிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகையின்போது பசுமை பட்டாசுகளை மாவட்ட நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்ட 2 மணி நேரத்திற்கு மட்டுமே வெடிக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் மற்ற பட்டாசுகளுக்கு பதிலாக பசுமை பட்டாசுகள் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

    அமைதி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள், வழிபாட்டுதலங்கள், கல்விக்கூடங்கள் மற்றும் நீதிமன்ற வளாகத்தின் சுற்று வட்டாரங்களில் 100 மீட்டருக்குள் பட்டாசுகள் வெடிப்பது முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

    125 டெசிபெல் அளவுக்கு அதிகமாக வெடிக்கும் பட்டாசுகளை உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் உடல் நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய பேரியம், ரசாயனம் கலந்து தயாரிக்கப்படும் பட்டாசுகள் மற்றும் சரவெடிக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே அதுபோன்ற பட்டாசுகளை சேமித்து வைக்கவோ, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லவோ, விற்பனை செய்யவோ, வெடிக்கவோ கூடாது.

    தீபாவளி பண்டிகையை மக்கள் பொறுப்புடன் கொண்டாட வேண்டும். கொண்டாட்டத்தால் சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்க வேண்டும். இயற்கையோடு இணைந்து தீபத்திருநாளை புதுச்சேரி மக்கள் கொண்டாட வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு குழு கேட்டுக்கொள்கிறது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    ×