search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரபாடா"

    சார்ஜாவில் நடந்த போட்டியில் இங்கிலாந்தை 10 ரன் வித்தியாசததில் வீழ்த்தினாலும் தென் ஆப்பிரிக்கா அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது.
    சார்ஜா:

    டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 189 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது.

    இப்போட்டியின் கடைசி ஓவரை தென் ஆப்பிரிக்கா அணியின் ரபாடா வீசினார். முதல் பந்தில் வோக்ஸ், இரண்டாவது பந்தில் மார்கன், முன்றாவது பந்தில் ஜோர்டான் ஆகியோரை வெளியேற்றினார். இதன்மூலம் ரபாடா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    டி20 உலக கோப்பை போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 4-வது பந்துவீச்சாளர் ரபாடா என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கனவே, 2007ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ, இந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் அயர்லாந்தின் கர்ட்டிஸ் கேம்பர், இலங்கை அணியின் ஹசரங்கா ஆகியோர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தி ‘பிளே-ஆப்ஸ்’ சுற்றுக்கு முன்னேறியது டெல்லி கேப்பிட்டல்ஸ் #IPL2019 #DCvRCB
    ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கேப்பிட்டல்ஸ் தவான் (50), ஷ்ரேயாஸ் அய்யர் (52), ரூதர்போர்டு (13 பந்தில் 28 ரன்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது.

    பின்னர் 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் களம் இறங்கியது. விராட் கோலி நிதானமாக விளையாட பார்தீவ் பட்டேல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

    அணியின் ஸ்கோர் 5.5 ஓவரில் 63 ரன்னாக இருக்கும்போது பார்தீவ் பட்டேல் 20 பந்தில் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் விராட் கோலி 23 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்து வந்த ஏபி டி வில்லியர்ஸ் 17 ரனனில் ஆட்டமிழந்தார்.



    ஏபி டி வில்லியர்ஸ் ஆட்டமிழந்ததும் ஆர்சிபி-யின் தோல்வி ஏறக்குறைய உறுதியானது. அதன்பின் வந்த டுபே 16 பந்தில் 24 ரன்கள் அடித்தார். இவரையும், கிளாசனையும் அமித் மிஸ்ரா ஒரே ஓவரில் வீழ்த்தினார். அத்துடன் ஆர்சிபி தோல்வி உறுதியானது.

    கடைசி 7 ஓவரில் 77 ரன்கள் வேண்டும் நிலையில் குர்கீரத் சிங் மான், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அணியின் வெற்றிக்காக போரடினார்கள். இசாந்த சர்மா வீசிய 17-வது ஓவரில் 16 ரன்கள் அடித்தனர். இதனால் சற்று நம்பிக்கை இருந்தது. ஆனால் ரபாடா 18-வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி இரண்டு ஓவரில் 30 ரன்கள் தேவைப்பட்டது.



    இசாந்த் சர்மா வீசிய 19-வது ஓவரில் குர்கீரத் மான் சிங் 19 பந்தில் 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் இசாந்த் நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    ரபாடா வீசிய கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்டது. ரபாடா 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்த ஆர்சிபி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களே எடுத்தது. இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 வெற்றிகளுடன் ‘பிளே-ஆப்ஸ்’ சுற்றுக்கு முன்னேறியது.
    கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் நாங்கள் உலகக்கோப்பையை வெல்லுவோம் என்று தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #WorldCup2019
    50 ஓவர் உலகக்கோப்பை தென்ஆப்பிரிக்கா இதுவரை வென்றது கிடையாது. அந்த அணி சிறப்பாக விளையாடினாலும் ராசி கைக்கொடுப்பதில்லை. 2015 உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடியது. ஆனால், நியூசிலாந்துக்கு எதிராக மழை குறுக்கீட்டதால் வெற்றி பெற இயலாமல் போனது.

    இதுபோன்ற ஏராளமான சம்பவங்களை சொல்லலாம். இங்கிலாந்தில் அடுத்த மாதம் தொடங்கும் உலகக்கோப்பையை வெல்ல கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் போதுமானது என தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்டெயின் கூறுகையில் ‘‘எங்கள் அணியில் சில தலைசிறந்த வீரர்கள் உள்ளனர். குயின்டான் டி காக்கில் இருந்து 11-வது வீரர்கள் வரை மேட்ச் வின்னர்கள்தான். நோ-பால் போன்ற விஷயத்தில் கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை. அப்படியிருந்தால் நாங்கள் தொடரை கட்டாயம் வெல்வோம்.



    நீங்கள் ரபாடாவை பார்த்தீர்கள் என்றால், அபாரமாக பந்து வீசி வருகிறார். அவரது பார்மை-ஐ தொடர்வார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் சர்வதேச போட்டிக்குள் நுழைந்து, அவரது வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார். சில வீரர்கள் வருவார்கள், சிறப்பாக செயல்படுவார்கள். திடீரென்று சென்று விடுவார்கள். ஆனால், ரபாடா போன்ற வீரர்களை நாம் பயன்படுத்தி கொள்ள முடியும்’’  என்றார்.
    டெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தொடர்ந்து 6-வது தோல்வியை சந்தித்துள்ளது.#IPL2019 #RCBvDC
    ஐபிஎல் தொடரின் 20-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முதலில் களம் இறங்கியது. ரபாடா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்த ஆர்சிபி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களே அடித்தது. விராட் கோலி 41 ரன்னும், மொயீன் அலி 32 ரன்களும் சேர்த்தனர்.

    பின்னர் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர் தவான் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அடுத்து பிரித்வி ஷா உடன் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அணியின் ஸ்கோர் 69 ரன்னாக இருக்கும்போது பிரித்வி ஷா 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    அடுத்து வந்த இங்கிராம் 22 ரன்னிலும், ரிஷப் பந்த் 18 ரன்னிலும், கிறிஸ் மோரிஸ் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். ஷ்ரேயாஸ் அய்யர் 67 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் டெல்லி அணி 6 பந்தில் மூன்று விக்கெட்டுக்களை இழந்ததால் ஆட்டத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    என்றாலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் 18.4 ஓவரில் 152 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆர்சிபி தான் விளையாடிய ஆறு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
    சூப்பர் ஓவரில் யார்க்கர் மட்டுமே வீச வேண்டும் என்ற குறிக்கோளுடன் களம் இறங்கினேன் என டெல்லி கேப்பிட்டல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா தெரிவித்துள்ளார். #DCvKKR
    டெல்லியில் நேற்று டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. இதனால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.

    முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் 10 ரன்கள் அடித்தது. பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. டெல்லி அணியின் ரபாடாவின் துள்ளிய யார்க்கரால் கேகேஆர் அணியால் 7 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றி பெற்றது.



    சூப்பர் ஓவரில் சிறப்பாக பந்து வீசிய ரபாடா, அந்த ஓவர் குறித்து கூறுகையில் ‘‘உண்மையிலேயே கடைசி ஓவரின்போது பதற்றம் அதிக அளவில் இருந்தது. இதுபோன்ற நேரத்தில் எப்படி பந்துவீச வேண்டும் என்பதை உங்களது மனதில் தெளிவாக பதிவு செய்துவிட வேண்டும்.



    யார்க்கர் பந்துகள் வீச வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கினேன். அது சரியாக வேலை செய்தது. நான் என்னுடைய திட்டத்தில் தெளிவாக இருந்தேன்’’ என்றார்.

    ரபாடா வீசிய துல்லியமான 3-வது யார்க்கர் பந்தில் ரஸல் க்ளீன் போல்டானார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை முதல் இன்னிங்சில் 154 ரன்னில் சுருண்டது. #SAvSL
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    தொடக்க வீரர் மார்க்கிராம் 60 ரன்களும், விக்கெட் கீப்பர் டி காக் 86 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 222 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இலங்கை அணி சார்பில் பெர்னாண்டோ, ரஜிதா தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    பின்னர் இலங்கை முதல் இன்னிங்சில் விளையாடியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இலங்கை 3 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்திருந்தது. திரிமானே 25 ரன்னுடனும், ரஜிதா ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரஜிதா 1 ரன் எடுத்த நிலையிலும், திரிமானே 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். விக்கெட் கீப்பர் டிக்வெல்லா தாக்குப்பிடித்து 42 ரன்கள் அடிக்க இலங்கை அணி 37.4 ஓவர்கள் மட்டுமே விளையாடி 154 ரன்னில் சுருண்டது. ரபாடா 4 விக்கெட்டும், ஆலிவியர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.



    தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 68 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்த முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. மார்கிராம், டீன் எல்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டீன் எல்கர் 2 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அத்துடன் 2-வது நாள் உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது தென்ஆப்பிரிக்கா ஒரு விக்கெட் இழப்பிற்கு 10 ரன்கள் எடுத்துள்ளது.
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. #SAvPAK
    டர்பன்:

    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில், நேற்று 2-வது ஒருநாள் போட்டி டர்பனில் நடைபெற்றது. 

    இதில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் தொடக்கம் முதலே விக்கெட்டுக்களை பறிகொடுத்து தடுமாறினார்கள். பாகிஸ்தானின் ஹசன் அலி 59 (45) மட்டும் அதிரடியாக விளையாடி அரைசதம் கண்டார். இவர் 5 பவுண்டரிகளும், 3 சிக்சர்களையும் விளாசினார். கேப்டன் சர்ப்ராஸ் அகமது 41 (59) ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 203 ரன்கள் எடுத்தது.



    தென்ஆப்பரிக்கா சார்பில் பெலுக்வாயோ 4 விக்கெட்டுகளும், ஷம்சி 3 விக்கெட்டுக்களையும், ரபாடா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

    204 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்ஆப்பரிக்க அணியின் தொடக்க வீரர்களாக ஹெண்ட்ரிக்ஸ், அம்லா களமிறங்கினர். ஷகின் ஷா அப்ரிடி வீசிய இரண்டாவது ஓவரை எதிர்கொண்ட அம்லா 8 (5) ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். ஷகின் ஷா அப்ரிடி வீசிய நான்காவது ஓவரில், 5 ரன்கள் எடுத்திருந்த ஹெண்ட்ரிக்ஸ் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். கேப்டன் பேஃப் டு பிளசிஸ் 8 ரன்னில் வெளியேறினர். 



    இதையடுத்து ஹி வேன் டெர் டுசன், டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 42 ஓவர்களில் தென்ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 207 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பொறுப்புடன் விளையாடிய டுசன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 80 (123) ரன்கள் சேர்த்தார். மில்லர் 31 (26) ரன்னில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் சார்பில் ஷகின் ஷா அப்ரிடி 3 விக்கெட்டுக்களும், ஷதப் கான் 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.



    4 விக்கெட்டுகளை வீழ்த்திய தென்ஆப்பிரிக்காவின் பெலுக்வாயோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில், 1-1 என தென்ஆப்பிரிக்க அணி சமன் செய்தது. 3-வது ஒருநாள் போட்டி 25-ந் தேதி செஞ்சூரியனில் நடைபெற இருக்கிறது. #SAvPAK

    ஹசன் அலி அதிரடியாக விளையாடி அரைசதம் அடிக்க தென்ஆப்பிரிக்காவிற்கு 204 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான் #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் களம் இறங்கியது. தொடக்க வீரர் இமாம் உல் ஹக் (5), அடுத்து வந்த பாபர் ஆசம் (12) ஆகியோரை ரபாடா வெளியேற்றி பாகிஸ்தானுக்கு தொடக்கத்திலேயே முட்டுக்கட்டை போட்டார். அதன்பின் பாகிஸ்தான் விக்கெட்டுக்கள் மளமளவென சரிய ஆரம்பித்தது. 112 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்தது தடுமாறியது.


    3 விக்கெட் வீழ்த்திய ஷம்சி

    அந்த நேரத்தில் கேப்டன் சர்பிராஸ் அகமது உடன் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி ஜோடி சேர்ந்தார். ஹசன் அலி ருத்ரதாண்டவம் ஆட பாகிஸ்தான் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஹசன் அலி 38 பந்தில் தலா மூன்று பவுண்டரி, சிக்சருடன் அரைசதம் அடித்தார்.


    4 விக்கெட் வீழ்த்திய பெலுக்வாயோ

    பாகிஸ்தான் ஸ்கோர் 202 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. சர்பிராஸ் அகமது 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 9-வது விக்கெட்டுக்கு சர்பிராஸ் அகமது - ஹசன் அலி ஜோடி 90 ரன்கள் குவித்தது. அடுத்து ஷஹீன் அப்ரிடி களம் இறங்கினார். ஹசன் அலி 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 45.5 ஓவரில் 203 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இதனால் தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 204 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் பெலுக்வாயோ 4 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
    ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 107 ரன்கள் வெற்றி பெற்ற நிலையில், பாகிஸ்தானை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது. #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தது. செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப் டவுனில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.

    இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 262 ரன்களும், பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 185 ரன்களும் சேர்த்தன. தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 303 ரன்கள் குவித்தது.

    இதனால் பாகிஸ்தான் வெற்றிக்கு 381 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது தென்ஆப்பிரிக்கா. 381 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்திருந்தது.

    ஆசாத் ஷபிக் 48 ரன்னுடனும், பாபர் ஆசம் 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதும் ஆசாத் ஷபிக் அரைசதம் அடித்தார். மறுமுனையில் பாபர் ஆசம் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் சர்பிராஸ் அகமது ரன்ஏதும் எடுக்காமல் முதல் பந்திலே ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த ஆசாத் ஷபிக் 65 ரன்னில் ஆட்டமிழந்தார்.



    ஷபிக் ஆட்டமிழந்ததும் பாகிஸ்தான் தோல்வி உறுதியானது. பஹீம் அஷ்ரப் 15 ரன்னிலும், முகமது அமிர் 4 ரன்னிலும், ஹசன் அலி 22 ரன்னிலும், முகமது அப்பாஸ் 9 ரன்னிலும் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 273 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் தென்ஆப்பிரிக்கா 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சதாப் கான் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ஆலிவியர், ரபாடா தலா 3 விக்கெட்டுக்களும், ஸ்டெயின் இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார். ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருந்ததால் பாகிஸ்தானை 3-0 என ஒயிட் வாஷ் செய்தது.
    கேப் டவுன் டெஸ்டில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்த நிலையில், தென்ஆப்பிரிக்காவிற்கு 41 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 177 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா டு பிளிசிஸ் (103), மார்கிராம் (78), பவுமா (75), டி காக் (59) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 431 ரன்கள் குவித்தது.

    பின்னர் 254 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஷான் மசூத் 61 ரன்களும், ஆசாத் ஷபிக் 88 ரன்களும், பாபர் ஆசம் 72 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற பாகிஸ்தான் 294 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.


    பாபர் ஆசம்

    254 ரன்களை தாண்டியதால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது. தற்போது 40 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 41 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. ஸ்டெயின், ரபாடா தலா நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்கள்.


    ரபாடா

    பாகிஸ்தான் 294 ரன்னில் ஆல்அவுட் ஆனதுடன் நேற்றைய 3-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் தென்ஆப்பிரிக்கா சேஸிங் செய்து எளிதில் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றி முன்னிலை வகிக்கும்.
    ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் பெருமையுடன் 2018-ம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர் விராட் கோலி, ரபாடா #ICCTestRankings #ViratKohli #Rabada
    டெஸ்ட் கிரிக்கெட் இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கிலும், தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர் ரபாடா பந்து வீச்சிலும் அசத்தி வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

    இந்த ஆண்டின் கடைசி டெஸ்டில் விராட் கோலி ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும், ரபாடா பாகிஸ்தானுக்கு எதிராகவும் சிறப்பாக செயல்பட்டனர். இதனால் நம்பர் ஒன் பெருமையுடன் 2018-ம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

    விராட் கோலி 937 புள்ளிகளுடன் முதல் இடத்தில் கடந்த 135 நாட்களாக இருந்து வருகிறார். ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் முதல் இடத்தை இழந்த ரபாடா மீண்டும் முதல் இடத்தை பிடித்தார். செஞ்சூரியனில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டில் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இந்த வருடத்தில் 52 விக்கெட்டுக்கள் வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
    செஞ்சூரியனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 149 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான். #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் செய்த பாகிஸ்தான் ஆலிவியரின் (6) பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181 ரன்னில் சுருண்டது.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்திருந்தது. நேற்றும் மட்டும் 15 விக்கெட்டுக்கள் வீழ்ந்தன.


    மசூத்

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பவுமா 53 ரன்களும், டி காக் 45 ரன்களும், ஸ்டெயின் 23 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 223 ரன்கள் சேர்த்தது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தானை விட 42 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்த 42 ரன்கள் தென்ஆப்பிரிக்காவிற்கு மிகமிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    42 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் (57), 3-வது வீரராக களம் இறங்கிய ஷான் மசூத் (65) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற பாகிஸ்தான் 190 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அத்துடன் இன்றைய 2-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.


    இமாம் உல் ஹக்

    முதல் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்திய ஆலிவியர் 2-வது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கள் சாய்த்தார். ரபாடா 3 விக்கெட்டும், ஸ்டெயின் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    முதல் இன்னிங்சில் 42 ரன்கள் பின்தங்கியிருந்தால் 148 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 149 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக இருப்பதால் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீசினால் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்த வாய்ப்புள்ளது.



    நேற்று 15 விக்கெட்டுக்கள் வீழ்ந்த நிலையில் இன்றும் 15 விக்கெட்டுக்கள் வீழ்ந்துள்ளன. நாளை எந்தவொரு முடிவு எட்டினாலும் தேனீர் இடைவேளைக்கு முன் போட்டி முடிவடைந்துவிடும்.
    ×