search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷால்"

    பிப்ரவரி மாதம் இளையராஜா 75 நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி, நடிகர் ரஜினிக்கு விஷால் நேரில் சென்று அழைப்பு வைத்திருக்கிறார். #Ilayaraja75 #Rajini
    இசை அமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்த நாளையொட்டி அவரது இசை சாதனையை பாராட்டி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ‘இளையராஜா-75’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வருகிற பிப்ரவரி மாதம் 2, 3-ந்தேதிகளில் இந்த இசை நிகழ்ச்சி நடக்கிறது. இந்த 2 நாட்களிலும் இளையராஜா கலந்து கொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.

    இது தொடர்பாக விஷால் கூறுகையில், “பிப்ரவரி 2-ந்தேதி அனைத்து மொழி கலைஞர்களும் கலந்து கொள்ளும் பாராட்டு விழாவாக நடத்தப்படுகிறது. தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பின்னணி பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜேசுதாஸ் மற்றும் பாடகிகள் சுசீலா, ஜானகி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுப்போம்” என்றார்.



    இதையடுத்து விஷால் இன்று போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து ‘இளையராஜா-75’ இசை நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தார். அழைப்பை ரஜினிகாந்த் ஏற்றுக் கொண்டார். இதே போல் மற்ற பிரபலங்களையும் விஷால் நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கிறார்.
    நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் ஆந்திராவைச் சேர்ந்த அனிஷாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Vishal #Anisha #VishalMarriage
    நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிப்பவர் விஷால். தமிழில் முன்னணி நடிகராக இருக்கிறார். அரசியல் கருத்துகளை வெளியிட்டும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் விஷாலுக்கும் ஆந்திராவை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது. அனிஷா ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் விஜய் ரெட்டி-பத்மஜா தம்பதியின் மகள் ஆவார். அவரது புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இவர்கள் திருமணம் விரைவில் நடக்க உள்ளது. அனிஷாவின் புகைப்படம் தெலுங்கு இணையதளங்களில் வெளியாகி உள்ளது.

    திருமணம் குறித்து விஷால் கூறியதாவது:-

    “எனக்கும் அனிஷாவுக்கும் இந்த வருடம் திருமணம் நடைபெறும். நாங்கள் இருவரும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து காதல் வயப்பட்டோம்.

    எங்கள் காதல் விவகாரம் நெருக்கமான சிலருக்கு தெரிந்துவிட்டது. இருவீட்டு பெற்றோர்களும் பேசி திருமண தேதியை முடிவு செய்வார்கள்.



    நடிகர் சங்க கட்டிடத்தை கட்டிய பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஏற்கனவே கூறி இருந்தேன். அந்த முடிவில் மாற்றம் இல்லை. எனது திருமணம் சென்னையில் நடைபெறும்.”

    இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.

    மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது திருமணம் பற்றி தவறான தகவல்கள் பரவுகின்றன. இது எனது சொந்த வாழ்க்கை. எனது திருமணம் பற்றி நானே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்” என்று குறிப்பிட்டு உள்ளார். #Vishal #Anisha #VishalMarriage

    அயோக்யா படத்தில் பிசியாக இருக்கும் விஷால், ஆந்திராவை சேர்ந்த அனிஷாவை காதலிப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்யவிருப்பதாகவும் கூறினார். #VishalMarriage #Vishal #Anisha
    தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகங்கள் கொண்ட நடிகர் விஷால் தமிழ்திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார்.

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் மனுதாக்கல் செய்ய வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    நடிகர் விஷால் திருமணம் செய்யாமல் இருந்து வந்தார். திருமணம் பற்றி கேட்ட போது, நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிந்ததும்தான் திருமணம் செய்வேன் என்றும், நடிகையை காதலித்து வருவதாகவும் அவரையே திருமணம் செய்வேன் என்றும் பலவாறு கூறிவந்தார்.

    தற்போது முதல் முறையாக அவரே தனது திருமண தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளார். மணமகள் பெயர் அனிஷா ரெட்டி. ஆந்திரா - தெலுங்கானா மாநில தலைநகரான ஐதராபாத்தைச் சேர்ந்தவர். தொழில் அதிபர் விஜய் ரெட்டி-பத்மஜா தம்பதியின் மகள் ஆவார்.



    திருமணம் பற்றி ‘அயோக்யா’ படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஷாலிடம் கேட்டபோது கூறியதாவது:-

    எனக்கும் அனிஷா ரெட்டிக்கும் திருமணம் என்ற தகவல் உண்மைதான். இது காதல் திருமணம். நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறுவது தவறு. நாளை (வெள்ளிக்கிழமை) தான் எனது பெற்றோரும் அனிஷா பெற்றோரும் சந்தித்து பேசுகிறார்கள். இதில் நிச்சயதார்த்தம் மற்றும் திருமண தேதி முடிவு செய்யப்படும்.

    இந்த ஆண்டு திருமணம் நடைபெறும். திருமண தேதியை இந்தவார இறுதியில் அறிவிப்போம். அனிஷா ரெட்டியை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன். பார்த்ததும் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. எங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு இது தெரிந்துவிட்டது. திருமணத்துக்கு தயாராகிவிட்டேன்.

    நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின்புதான் எனது திருமணம் நடக்கும் என்று கூறினேன். அதில் மாற்றம் இல்லை. கண்டிப்பாக நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்படும். அதன்பிறகு அனிஷாவை திருமணம் செய்வேன். திருமணம் சென்னையில் தான் நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #VishalMarriage #Vishal #Anisha

    ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' பட பிரச்சனையில், அவதூறு பரப்பியதாக நடிகர் விஷால் மீது சிம்பு வழக்கு பதிவு செய்த நிலையில், விஷால் பதிலளிக்க ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #AAA #STR #Vishal
    மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் நடிகர் சிம்பு நடித்து வெளியான படம் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்'. இந்த படத்தில் நடிப்பதற்கு நடிகர் சிம்புக்கு ரூ.8 கோடி சம்பளம் பேசப்பட்டது. ரூ.1 கோடியே 51 லட்சம் மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படம் தோல்வி அடைந்தது. இதையடுத்து சிம்புவுக்கு பாக்கித் தொகை வழங்கப்படவில்லை.

    இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு புகார் செய்தார். அதேபோல, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் புகார் செய்தார்.

    இந்த புகாரை விசாரித்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், சிம்புவுக்கு எதிராகவும், மைக்கேல் ராயப்பனுக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சிம்பு குறித்து, அவதூறு செய்தியை விஷால் பரப்பியதாகவும் கூறப்பட்டது.



    இதனால், நடிகர் விஷாலிடம், ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் சிம்பு, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில், விஷாலுக்கு எதிராக நான் செயல்பட்டேன். இந்த பகையை மனதில் வைத்து, இந்த விவகாரத்தில்எனக்கு எதிராக விஷால் செயல்படுகிறார். அவர் உள்நோக்கத்துடன், எனக்கு எதிராக அவதூறு பரபரப்பி உள்ளார். எனவே, எனக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த வழக்கு நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். அதற்குள் நடிகர் விஷால் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார். #AAA #STR #Vishal

    டி.எஸ்.ராஜ்குமார் இயக்கத்தில் சாயாஜி ஷிண்டே நடிப்பில் உருவாகி இருக்கும் 'அகோரி' படத்தின் டீசரை நடிகர் விஷால் வெளியிட்டார். #Aghori #AghoriTeaser #Vishal
    ஆர்.பி.பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா, மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே.மேனனுடன் இணைந்து 'அகோரி' என்ற படத்தை தயாரித்துள்ளார். அறிமுக இயக்குநர் டி.எஸ்.ராஜ்குமார் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் சாயாஜி ஷிண்டே அகோரியாக நடிக்கிறார்.

    நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்க, வில்லனாக சகுல்லா மதுபாபு நடிக்கிறார். மைம் கோபி, சித்து, டார்லிங் மதனகோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி, கார்த்தி, கலக்கப்போவது யாரு சரத், டிசைனர் பவன் உள்ளிட் பலரும் நடித்துள்ளனர். 



    சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும், தீய சக்திகளுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையப்படுத்தி படம் கதை உருவாகி இருக்கிறது. 'அகோரி' படத்தின் டீசரை நடிகரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் வெளியிட்டார். படத்தை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. #Aghori #AghoriTeaser #Vishal

    விஷாலுக்கு எதிராக போராடி, தயாரிப்பாளர் சங்கத்தை பூட்டிய தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. #Vishal #ProducerCouncil
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக நடிகர் விஷால் உள்ளார். விஷாலுக்கும் தயாரிப்பாளர் சங்கத்தில் அவரது எதிர்தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

    விஷால் மீது அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டை முன்வைத்து ஏ.எல்.அழகப்பன், ஜே.கே.ரித்தீஷ், எஸ்.வி.சேகர், டி.சிவா உள்ளிட்ட உறுப்பினர்கள் டிசம்பர் 19-ந்தேதி தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்துக்கு வந்து போராட்டம் நடத்தியதோடு சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர்.

    20-ந்தேதி காலையில் விஷால் தனது ஆதரவாளர்களுடன் வந்து பூட்டை உடைத்து அலுவலகத்துக்கு உள்ளே செல்ல முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசாருக்கும் விஷாலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    விஷால், மன்சூர் அலிகான் உள்ளிட்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து வருவாய்த் துறை அதிகாரிகள் சங்க அலுவலகத்தை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஷால் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அரசு கட்டுப்பாட்டில் தயாரிப்பாளர் சங்கத்தைக் கொண்டு வந்ததற்கு கண்டனம் தெரிவித்து சீலை அகற்ற உத்தரவிட்டது.

    தயாரிப்பாளர் சங்கத்துக்கு அரசு வைத்த சீல் அகற்றப்பட்ட பின்னர் கடந்த 24-ந்தேதி மாலை தயாரிப்பாளர் சங்கத் தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின் நிருபர்களிடம் பேசிய விஷால் ‘தயாரிப்பாளர் சங்கத்துக்குப் பூட்டு போட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உள்ளோம்.



    பூட்டு போடும் வீடியோவில் உள்ள அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்புவதோடு, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்கள் இல்லாத யாராவது வீடியோவில் இருந்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

    விஷால் கூறியதை போலவே பூட்டு போட்ட உறுப்பினர்களுக்கு சங்கம் சார்பில் ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் ராதா கிருஷ்ணன், ஏ.எல்.அழகப்பன், எஸ்.வி.சேகர், டி.சிவா, ஐங்கரன் விஜயகுமார், கே.ராஜன், தனஞ்ஜெயன், சுரேஷ் காமாட்சி, சவுந்தர பாண்டியன், பழனிவேல், ஜான் மேக்ஸ், வடிவேல், பஞ்சு பரத், திருமலை, பிஜி பாலாஜி, ஜோதி நளினி, சுப்பையா, சாலை சகாதேவன், சக்தி சிதம்பரம், பாபு கணேஷ், அடிதடி முருகன், குண்டு முருகன், ஆர்.எச்.அசோக், கணபதி, விடியல் ராஜு, சீனிவாசன், மீரா கதிரவன், கோயம்பேடு தமிழரசு, அஸ்ஸலாம் உள்ளிட்ட 29 தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    ஷோகாஸ் நோட்டீஸ் என்பது ‘சங்கத்துக்கு விரோதமாக செயல்படுகிறீர்கள். தங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?’ என்று எச்சரிக்கை விடுக்கும் நோட்டீஸ் ஆகும்.

    இந்த நோட்டீசுக்கு எதிர் தரப்பினர் தரும் பதிலை பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை அமையும் என தயாரிப்பாளர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷாலுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தெரிவித்துள்ளார். #VishalMarriage #Vishal #Anisha
    ‘செல்லமே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமனாவர் விஷால். தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, சிவப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்யம், தோரணை, தீராத விளையாட்டு பிள்ளை, அவன் இவன், சமர், பட்டத்து யானை, பாண்டியநாடு, பூஜை, ஆம்பள, பாயும்புலி, மருது, கதகளி, துப்பறிவாளன், இரும்புத்திரை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களை தயாரிக்கவும் செய்தார்.

    தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடித்ததும் திருமணம் செய்து கொள்வதாக விஷால் கூறியிருக்கிறார்.

    இந்த நிலையில், விஷால் - வரலட்சுமி இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டது. சமீபத்தில் விஷால் நண்பர் மட்டுமே என்று வரலட்சுமி விளக்கம் அளித்திருந்தார். விஷால் கூறும்போது, வரலட்சுமி எனது பால்ய நண்பர். என் மனதுக்கு நெருக்கமானவர், சமயம் வரும்போது எனது திருமணம் குறித்தும், யாரைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்பது குறித்தும் தெளிவுபடுத்துவேன் என்று கூறியிருந்தார்.



    நடிகர் சங்க கட்டிட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஷாலுக்கு பெண்பார்க்கும் முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டு, தற்போது மணமகளை தேர்வு செய்துள்ளனர்.

    மணப்பெண்ணின் பெயர், அனிஷா. ஆந்திராவை சேர்ந்தவர். விஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடக்க உள்ளது. இதற்காக விஷால், குடும்பத்தினருடன் ஐதராபாத் செல்கிறார். நிச்சயதார்த்தத்தில் திருமண தேதியை முடிவு செய்கிறார்கள்.



    விஷாலுக்கு மணமகள் முடிவானதையும், ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடப்பதையும் அவரது தந்தையும் தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி பிரத்யேகமாக தெரிவித்தார். #VishalMarriage #Vishal #Anisha

    விஷால் தலைமையில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் பார்த்திபன் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். #ProducersCouncil #TFPC #Vishal
    தயாரிப்பாளர் சங்க அலுவலகம் சென்னை அண்ணாசாலையில் இயங்கி வருகிறது. நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக பொறுப்பேற்ற பிறகு, தியாகராய நகரில் உள்ள யோகாம்பாள் தெருவில் வாடகைக்கு இடம்பார்த்து அங்கு அலுவலகத்தை மாற்றினார். 

    இந்த நிலையில் விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தயாரிப்பாளர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு இரண்டு அலுவலகங்களையும் பூட்டினார்கள். அலுவலக பூட்டை உடைக்க முயன்ற விஷால் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டார். கோர்ட்டு உத்தரவின் பேரில் தற்போது இந்த அலுவலகங்கள் திறக்கப்பட்டு உள்ளன. 

    இந்த பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் அண்ணா சாலையில் உள்ள சங்க அலுவகத்தில் விஷால் தலைமையில் இன்று நடந்தது.

    இதில் தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் பலரும் கலந்துக் கொண்டனர். இந்த செயற்குழுவில் முக்கிய விவாதங்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சங்க துணைத்தலைவர் கவுதம் மேனனுக்கு பதிலாக பார்த்திபன் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சங்கத்தை பூட்டு போட்ட உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஜிஎஸ்டி குறைப்பால் சினிமா டிக்கெட்டிற்கான கட்டணம் குறையும். அடுத்த செயற்குழு கூட்டத்தில் பொதுக்குழு தேதி குறித்து முடிவு எடுக்கப்படும். இளையராஜா நிகழ்ச்சி தொடர்பாக முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம் என தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்தார். #ProducersCouncil #TFPC #Vishal
    தயாரிப்பாளர் சங்க செயற்குழு இன்று கூடவிருக்கும் நிலையில், சமீபத்தில் சங்கத்தை பூட்டியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது குறித்து செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. #ProducersCouncil #TFPC #Vishal
    தயாரிப்பாளர் சங்க அலுவலகம் சென்னை அண்ணாசாலையில் இயங்கி வருகிறது. நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக பொறுப்பேற்ற பிறகு, தியாகராய நகரில் உள்ள யோகாம்பாள் தெருவில் வாடகைக்கு இடம்பார்த்து அங்கு அலுவலகத்தை மாற்றினார். 

    இந்த நிலையில் விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தயாரிப்பாளர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு இரண்டு அலுவலகங்களையும் பூட்டினார்கள். அலுவலக பூட்டை உடைக்க முயன்ற விஷால் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டார். கோர்ட்டு உத்தரவின் பேரில் தற்போது இந்த அலுவலகங்கள் திறக்கப்பட்டு உள்ளன. 

    இந்த பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் அண்ணா சாலையில் உள்ள சங்க அலுவகத்தில் விஷால் தலைமையில் இன்று மாலை நடக்கிறது.



    இதில் துணைத்தலைவர்கள் பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன், செயலாளர்கள் கதிரேசன், எஸ்.எஸ்.துரைராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் ஆர்.வி.உதயகுமார், ஆர்யா, பார்த்திபன், எஸ்.எஸ்.குமரன், பாண்டிராஜ், சுந்தர்.சி, மன்சூர் அலிகான், ராமச்சந்திரன், மனோஜ்குமார், ஜெமினி ராகவா, பிரவீன்காந்த், எ.வி.தங்கராஜ், கே.பாலு, அன்புதுரை உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்ட பிரச்சினை குறித்து விவாதிக்கப்படுகிறது. பூட்டு போட்டு போராட்டம் நடத்திய 15-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களை அடையாளம் கண்டு பட்டியல் தயாரித்து உள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்புவது குறித்து செயற்குழுவில் முடிவு செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    சங்கத்துக்கு நிதி திரட்ட நடத்தப்படும் இளையராஜா இசைநிகழ்ச்சி குறித்தும் ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. #ProducersCouncil #TFPC #Vishal

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தயாரிப்பாளர் சங்கத்துக்கு போடப்பட்ட சீலை தாசில்தார் இன்று அகற்றினார். #TFPC #Vishal #ProducersCouncil
    சென்னை:

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பதவி விலக கோரியும், சங்கத்தில் ரூ.7 கோடி முறைகேடு நடந்து இருப்பதாக குற்றம்சாட்டியும் எதிர்தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தி.நகரில் உள்ள சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர்.

    இதையடுத்து சங்க அலுவலகத்தில் போடப்பட்ட பூட்டை உடைத்து விஷால் உள்ளே நுழைய முயன்றார். அப்போது எதிர்தரப்பினர் அங்கு குவிந்ததால் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

    இதையடுத்து விஷாலை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

    இதற்கிடையே விஷாலின் எதிர்தரப்பினர் அளித்த புகாரின் பேரில் சங்கங்களின் பதிவுத்துறை அதிகாரிகள் 2 பேர் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்துக்கு போடப்பட்ட பூட்டை திறந்து ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

    பின்னர் சங்க அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். அலுவலக சாவியை கிண்டி தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

    இதனால் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு போடப்பட்ட ‘சீலை’ அகற்றக்கோரி தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் எம்.அன்புத்துரை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.



    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த வெங்கடேஷ், “தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு வைத்துள்ள சீலை உடனடியாக அகற்ற வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

    சங்கங்களுக்கான துணை பதிவாளர் இன்று அலுவலகத்துக்கு சென்று முக்கிய ஆவணங்களை அங்குள்ள ஒரு அறையில் வைக்க வேண்டும். அந்த அறையை பூட்டி சாவியை தன்னிடம் வைத்துக் கொள்ள வேண்டும். சங்கத்தின் அன்றாட பணி சுமூகமாக நடைபெறும் விதமாக தேவைப்படும் ஆவணங்களை சங்க நிர்வாகிகள் நகல் எடுத்துக் கொள்ளலாம்.

    சங்க நிர்வாகிகள் அலுவலகத்துக்குள் செல்வதை யாரும் தடுக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.

    கோர்ட்டு உத்தரவுப்படி இன்று தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை கிண்டி தாசில்தார் ராம்குமார் அகற்றினார். அப்போது சங்கத்தின் கவுரவ செயலாளர்கள் எஸ்.எஸ்.துரைராஜ், கதிரேசன் மற்றும் விஷாலின் எதிர் தரப்பைச் சேர்ந்த டி.ராதாகிருஷ்ணன், சுரேஷ் காமாட்சி ஆகியோர் உடன் இருந்தனர்.



    அலுவலகத்துக்கு சென்ற அதிகாரிகள் அங்கிருந்த முக்கிய ஆவணங்களை எடுத்து ஒரு அறையில் வைத்து பூட்டினார்கள்.

    விஷாலின் எதிர் தரப்பினர் முக்கிய ஆவணங்களை நகல் எடுத்து அதில் முறைகேடு நடந்து இருந்தால் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.

    தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு வருகிற பிப்ரவரி மாதம் கூட்டப்படும் என்று விஷால் அறிவித்து இருந்தார். தற்போது சங்கத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பொதுக்குழுவை முன்கூட்டியே கூட்ட திட்டமிட்டுள்ளனர்.

    அதன்படி ஜனவரி 20-ந் தேதி பொதுக்குழு கூடும் என்று தெரிகிறது.

    இதுதொடர்பாக அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் 21 நாட்களுக்கு முன்பு கடிதம் அனுப்ப வேண்டும். எனவே இன்னும் சில தினங்களில் பொதுக்குழு கூடுவது தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு கடிதம் அனுப்பப்படுகிறது. #TFPC #Vishal #ProducersCouncil

    தயாரிப்பாளர் சங்கம் சார்பில் விஷால் தரப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டது. #TFPC #Vishal #ProducersCouncil
    நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அவருக்கு எதிராக தயாரிப்பாளர்கள் சிலர் போர்க்கொடி தூக்கினார்கள்.

    நிர்வாகம் சரியாக செயல்படவில்லை என்று சங்க வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதோடு சங்க அலுவலகத்தைப் பூட்டினார்கள். விஷால் நேற்று காலையில் தயாரிப்பாளர் சங்கத்துக்குப் போடப்பட்ட பூட்டை உடைத்து, உள்ளே செல்ல முற்பட்டார்.

    அப்போது அவருக்கும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து விஷால் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டார்.

    இந்த விவகாரம் சங்கம் தொடர்புடையது என்பதால் இதுபற்றி உரிய முறையில் விசாரிக்க வருவாய் துறையினருக்கு போலீசார் பரிந்துரை செய்தனர். இதன் காரணமாக சங்க விதிகளுக்கு உட்பட்டு தயாரிப்பாளர் சங்கம் செயல்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய பதிவுதுறை அதிகாரிகள் அண்ணாசாலை அலுவலகத்திலும் விசாரணை நடத்தினர். பின்னர் அண்ணாசாலை அலுவலகத்துக்கும் சீல் வைக்கபபட்டது.



    இதுகுறித்து விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்ததாவது, ‘’சட்ட விரோதமான 8 மணி நேர காவலுக்குப் பிறகு, வெளியே வந்துவிட்டேன். நான் செய்யாத தவறுக்குப் பாதிக்கப்பட்டேன். எங்கள் சொந்த அலுவலகத்திற்குள் நுழையவிடவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

    சட்ட விரோதமாக கதவுகளைப் பூட்டியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. நிச்சயம் இது நியாயமற்றது. நீதித்துறையின் மிது நம்பிக்கை இருக்கிறது. இன்று நடந்ததற்கு எனக்கு நீதி கிடைக்குமென நம்புகிறேன்.’’ என்று பதிவிட்டிருந்தார்.

    அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீல் வைக்கப்பட்டது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் விஷால் தரப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், சங்கத்துக்கு போடப்பட்ட சீலை அகற்றுமாறு வருவாய் கோட்டாட்சியர், பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். #TFPC #Vishal #ProducersCouncil #ChennaiHighCourt

    தயாரிப்பாளர் சங்கத்துக்கு போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்றததால் கைது செய்யப்பட்ட விஷால், திருட்டு பூட்டுக்கு காவல் காக்கிறார்கள், அவர்களை ஏன் இவ்வளவு போலீசார் பாதுகாக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். #TFPC #ProducersCouncil #Vishal
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நடிகர் விஷால் தலைவராக இருக்கிறார்.

    துணைத் தலைவர்களாக நடிகர் பிரகாஷ்ராஜ், டைரக்டர் கவுதம்மேனன் உள்ளனர். செயலாளர்களாக எஸ்.எஸ்.துரைராஜ், கதிரேசன் உள்ளனர்.

    திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் திடீரென பிளவு ஏற்பட்டு உள்ளது. நடிகர் விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

    சிறு பட்ஜெட் படத் தயாரிப்பாளர்களின் நலனுக்கு எதிராக நடிகர் விஷால் செயல்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் விதிமுறைகளுக்கு எதிராக விஷால் செயல்பட்டு தன்னிச்சையாக முடிவு எடுப்பதாகவும் புகார்கள் கூறப்படுகின்றன.

    இதற்கிடையே தயாரிப்பாளர்கள் சங்க நிதியில் ரூ.7.80 கோடியை நடிகர் விஷால் முறைகேடு செய்துவிட்டார் என்றும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து நடிகர் விஷால் விலக வேண்டும் என்று ஒரு பிரிவினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

    நேற்று காலை தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன், ரித்தீஷ், ராதாகிருஷ்ணன், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட எதிர்தரப்பினர் சென்னை அண்ணாசாலையில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு அமர்ந்து விஷாலுக்கு எதிராக ஆலோசனை நடத்தினார்கள்.

    கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்க அலுவலகங்களுக்கு பூட்டு போட்டு பூட்டுவதற்கு முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி அண்ணாசாலையில் உள்ள தயாரிப்பாளர் சங்க தலைமை அலுவலகத்துக்கு பூட்டு போடப்பட்டது. பின்னர் தி.நகர் ராகவைய்யா சாலையில் லோகாம்பாள் தெருவில் இருக்கும் தற்காலிக அலுவலகத்துக்கும் பூட்டு போட்டு மூடப்பட்டது.



    அதன்பிறகு இரு பூட்டுகளின் சாவிகளையும் தேனாம்பேட்டையில் உள்ள மாவட்ட பதிவாளரிடம் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து ஏ.எல்.அழகப்பன், ரித்தீஸ் ஆகியோர் கூறுகையில், “ஓரு ஆண்டுக்குள் சொன்னதை செய்யாவிட்டால் சங்கத்துக்கு பூட்டு போடுங்கள் என்று விஷால்தான் சொல்லி இருந்தார். அதனால்தான் பூட்டு போட்டு இருக்கிறோம்” என்றனர்.

    மேலும் விஷால் கர்நாடகாவில் தமிழ் படங்கள் வெளியிட அனுமதிப்பதில்லை. ஆனால் கர்நாடக படங்களை தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட அனுமதிக்கிறார் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

    இந்த குற்றச்சாட்டுகளை நடிகர் விஷால் மறுத்தார். தயாரிப்பாளர் சங்க அலுவலகங்களுக்கு பூட்டு போட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். தயாரிப்பாளர் சங்கத்தின் கணக்குகளை பொதுக்குழுவில் தாக்கல் செய்வேன் என்றும் கூறினார்.

    மேலும் சங்கத்துக்கு போடப்பட்ட பூட்டை திறந்து உள்ளே செல்லப் போவதாகவும் அறிவித்தார். இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர்கள் எஸ்.எஸ்.துரைராஜ், கதிரேசன் இருவரும் இன்று காலை பாண்டிபஜார் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.



    தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்துக்கு போடப்பட்டுள்ள பூட்டை உடைத்து திறக்கப்போகிறோம். அதற்கு நீங்கள் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று அவர்கள் போலீசாரிடம் கேட்டுக்கொண்டனர்.

    இதையடுத்து அண்ணா சாலை, தி.நகரில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகங்கள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். காலை 10 மணி அளவில் அண்ணாசாலை தயாரிப்பாளர் சங்க தலைமை அலுவலகத்துக்கு மாவட்ட பதிவாளர் அலுவலக ஊழியர்கள் வந்தனர்.

    அவர்கள் மூலம் அண்ணா சாலை தயாரிப்பாளர் சங்க அலுவலகம் திறக்கப்பட்டது. அதன்பிறகு விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் தி.நகர் லோகம்பாள் தெருவில் இருக்கும் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு புறப்பட்டு வந்தனர்.

    அங்கு தேனாம்பேட்டை போலீஸ் உதவி கமி‌ஷனர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். அங்கு வந்த நடிகர் விஷால் போலீசாரிடம், “வழிவிடுங்கள். நான் பூட்டை உடைத்து திறந்து உள்ளே செல்ல வேண்டும்” என்று கூறினார். ஆனால் போலீசார் அதை ஏற்கவில்லை.

    “மாவட்ட பதிவாளர் வந்து கொண்டு இருக்கிறார். அவர் வந்ததும் பூட்டை திறந்து விடுகிறோம்” என்று போலீசார் தெரிவித்தனர். இதை விஷாலும் அவர்களுடன் வந்த தயாரிப்பாளர்களும் ஏற்கவில்லை. பூட்டை உடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.



    இதையடுத்து போலீசாருக்கும், நடிகர் விஷால் தலைமையில் வந்த தயாரிப்பாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. விஷால் கூறுகையில், “இது எங்களது அலுவலகம். எங்கள் அலுவலகத்துக்கு செல்ல நாங்கள் யாரிடம் அனுமதி பெற வேண்டும். பதிவாளர் வரும்வரை நாங்கள் ஏன் காத்திருக்க வேண்டும். காத்திருக்க முடியாது” என்று வாதிட்டார்.

    அதற்கு போலீசார், “பூட்டு போடப்பட்டு இருக்கிறது. அதிகாரி வரட்டும். பொறுமையாக இருங்கள்” என்று தெரிவித்தனர். உடனே விஷால், “சட்ட விரோதமாக போடப்படும் பூட்டுக்கு போலீசாரே எப்படி துணை போகலாம்” என்று தெரிவித்தhர். இதனால் சுமார் 20 நிமிடம் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நீடித்தது.

    இந்த நிலையில் தி.நகர் துணை கமி‌ஷனர் அரவிந்தன் போலீஸ் படையுடன் அங்கு வந்தார். அவர் விஷாலுடன் பேச்சு நடத்தினார். அப்போதும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    துணை கமி‌ஷனர் அரவிந்தன் கூறுகையில், “எதுவாக இருந்தாலும் என் அலுவலகத்துக்கு வாருங்கள் பேசி கொள்ளலாம். தெருவில் இப்படி திரண்டு நின்று பேசுவது தவறு” என்றார். இதை விஷாலும், தயாரிப்பாளர்களும் ஏற்கவில்லை. இதனால் வாக்குவாதம் அதிகரித்தது.

    இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்படாத நிலையில் ஒரு கட்டத்தில் தொடர்ந்து சட்ட விரோதமாக செயல்பட்டால் கைது செய்ய நேரிடும் என்று போலீஸ் அதிகாரிகள் எச்சரித்தனர். இதனால் நடிகர் விஷால் ஆவேசம் ஆனார். அவராகவே தாமாகவே முன் சென்று கதவை திறந்து விடுங்கள் என்று சொல்லி போலீஸ் வேனில் ஏறி அமர்ந்தார்.

    அவரை கைது செய்வதாக போலீஸ் அதிகாரிகள் அறிவித்தனர். இதையடுத்து தயாரிப்பததளர் சங்க செயலாளர்கள் எஸ்.எஸ்.துரைராஜ், கதிரேசன், செயற்குழு உறுப்பினர்கள் சங்கர், பிரவீண்காந்த், ஜெ.எஸ்.செந்தில், ராமச்சந்திரன், அன்பு, ஆகிய 7 தயாரிப்பாளர்களும் வேனில் ஏறி அமர்ந்தனர். அவர்கள் தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் தேவர் கல்யாண மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.



    நடிகர் விஷாலும், 7 தயாரிப்பாளர்களும் வேனில் அழைத்து செல்லப்பட்ட போது அந்த பகுதியில் நின்ற நடிகர் மன்சூர்அலிகான் தொடர்ந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசார் அவரிடம் கலைந்து செல்லுமாறு கூறினார்கள். ஆனால் மன்சூர் அலிகான் ஆவேசமாக பேசினார்.

    “திருடனுக்கு பாதுகாப்பு கொடுக்கிறீர்களே” என்று சத்தமிட்ட அவர் சில தரக்குறைவான வார்த்தைகளையும் பேசியதாக தெரிகிறது. இதை கேட்டதும் போலீசார் அவரையும் கைது செய்தனர். அவரை போலீசார் வலுக் கட்டாயமாக தள்ளி சென்று போலீஸ் ஜீப்பில் ஏற்றி அழைத்து சென்றனர்.

    தயாரிப்பாளர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “விஷால் அளித்த புகார் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் விஷால் அந்த பூட்டை உடைத்து திறக்க முயற்சி செய்தார். இதனால் விஷாலும், தயாரிப்பாளர்களும் கைது செய்யப்பட்டனர்” என்றனர்.

    முன்னதாக போலீசார் கைது செய்ததும் வேனில் அமர்ந்து இருந்த நடிகர் விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ஒரு திருட்டு பூட்டுக்கு காவல் காக்கிறார்கள். சம்பந்தமில்லாதவர்கள் பூட்டு போட்டு இருக்கிறார்கள். அவர்களை ஏன் இவ்வளவு போலீசார் பாதுகாக்கிறீர்கள். எங்கள் பூட்டு, எங்கள் அலுவலகம், நான் எந்த தப்பும் செய்யவில்லை. அந்த பூட்டை உடைத்து உள்ளே போகணும் என்றேன். முடியாது என்றார்கள்.

    கேள்வி கேட்டதற்கு நாங்கள் அரசு ஊழியர்கள். எங்கள் வேலையை செய்ய விடுங்கள் என்று கைது செய்கிறார்கள். இந்த செயல்பாடுகள் நம்ப முடியாத அளவுக்கு உள்ளது.

    இவ்வாறு விஷால் கூறினார்.

    விஷால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ள தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் இது தொடர்பாக கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க முடிவு செய்தனர். அதன்பேரில் தயாரிப்பாளர்கள் எஸ்.எஸ்.துரைராஜ், கதிரேசன் இருவரும் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்றனர். #TFPC #ProducersCouncil #Vishal

    ×