search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98969"

    எந்த அதிகாரமும் இல்லாத வடகொரிய நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். #NorthKorea #ParliamentaryElection
    பியாங்காங்:

    வடகொரியாவின் தற்போதைய தலைவர் கிம் ஜாங் அன்னின் வம்சத்தினர்தான் அந்நாட்டை பல தலைமுறைகளாக ஆட்சி செய்து வருகின்றனர். அவர்களுக்கு அந்நாட்டு மக்கள் விசுவாசமாக இருப்பது கட்டாயமாகும்.

    அரசையும், ராணுவத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலைவரே நாட்டுக்கு தேவையான அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுப்பார். அந்நாட்டின் நாடாளுமன்றத்துக்கு எந்த வித அதிகாரமும் கிடையாது. தலைவரால் வரைவு செய்யப்படும் சட்டங்களுக்கு எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஒப்புதல் வழங்குவது மட்டுமே அதன் ஒரே பணி.



    சுப்ரீம் மக்கள் சபை (எஸ்.பி.ஏ.) என அழைக்கப்படும் வடகொரியாவின் நாடாளுமன்றத்துக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 9-ந் தேதி அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் கிம் ஜாங் அன், பியாங்காங் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் 5 ஆண்டு பதவிகாலம் முடிவடைந்ததையொட்டி நேற்று அங்கு தேர்தல் நடைபெற்றது. உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. கிம் ஜாங் அன், பியாங்காங் தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடிக்கு சென்று தனது வாக்கை செலுத்தினார்.

    அதே போல் நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடிகளில் லட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

    வடகொரியாவை பொறுத்தவரை மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை முடிவு செய்யப்படுகிறது. அதாவது 35 ஆயிரம் மக்களுக்கு ஒரு பிரதிநிதி தேர்வு செய்யப்பட்டு அவர் நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்படுகிறார்.

    கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 687 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஆண்டு சுமார் 700 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்ட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

    அதே போல் வடகொரியாவில் தேர்தலில் வாக்களிப்பது என்பது கட்டாயமானதாகும். 17 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். இதனால் ஒவ்வொரு தேர்தலிலும் 100 சதவீதத்தை ஒட்டிய அளவிலேயே வாக்குப்பதிவு இருக்கும். கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 99.97 சதவீத வாக்குகள் பதிவானது. 0.03 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்ததற்கு வாக்காளர்களின் உடல்நிலையே காரணம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டும் வாக்குப்பதிவு 100 சதவீதத்தை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஒரு தொகுதிக்கு ஒரே ஒரு வேட்பாளர்தான் நிறுத்தப்படுவார். கிம் ஜாங் அன் தலைவராக இருக்கும் கொரியா தொழிலாளர் கட்சியும், சமூக ஜனநாயக கட்சி மற்றும் சொண்டோயிஸ்ட் சோங்கு ஆகிய கூட்டணி கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை களத்தில் நிறுத்தும்.

    ஒரு வேட்பாளர் மட்டுமே நிறுத்தப்படுவதால் அவரை அங்கீகரித்து, அவருக்கு வாக்களிப்பதை தவிர மக்களுக்கு வேறு வழியே கிடையாது. மக்கள் தங்களது வேட்பாளரை புறக்கணிப்பது என்பது அரிதிலும் அரிதாக பார்க்கப்படுகிறது. அப்படி செய்யும் ஒரு சிலரை கூட பைத்தியக்காரர்கள் என போலீசார் அறிவித்துவிடுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. #NorthKorea #ParliamentaryElection
    வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனைக்கு தயார் ஆகி வருகிறது என்பதை காட்டும் செயற்கைகோள் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. #NorthKorea #MissileTest
    சியோல்:

    வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு சோதனைகளை நடத்தி வந்தது. ஏவுகணை சோதனைகளையும் தொடர்ச்சியாக நடத்தி வந்து உலக நாடுகளை அதிர வைத்தது. அமெரிக்கா மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றின் தொடர் பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாமல் அணு ஆயுத திட்டங்களை அந்த நாடு நடத்தியது. இது அமெரிக்காவுக்கு சவாலாக அமைந்தது.

    இரு நாடுகளுக்கும் இடையே தீராப்பகை மூண்டது.

    ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேசினார்கள்.

    அந்த சந்திப்பின்போது இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தாயின. கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக ஆக்குவதற்கு ஏற்ற விதத்தில் வடகொரியா பாடுபடும் என கிம் ஜாங் அன் உறுதி அளித்தார்.



    அந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து வடகொரியா அணுகுண்டு வெடித்து சோதிக்கவில்லை. ஏவுகணை சோதனைகளையும் நடத்தவில்லை. ஆனால் வடகொரியா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள் அகற்றப்படவும் இல்லை.

    இந்த நிலையில் இரு தலைவர்களும் சமீபத்தில் வியட்நாம் தலைநகர் ஹனோயில் கடந்த மாதம் 27, 28-ந்தேதிகளில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எந்தவொரு ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை.

    அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளில் ஒரு பகுதியைக் கூட அகற்ற முன்வராததுதான் இந்த பேச்சுவார்த்தையின் தோல்விக்கு காரணம் என வடகொரியா கூறியது.

    இந்த நிலையில் வடகொரியா மீண்டும் தனது அணு ஆயுதப்பாதையில் அடியெடுத்து வைப்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங் நகருக்கு அருகே அமைந்துள்ள சானும்டாங்க் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் அல்லது ஏவுகணையை ஏவுவதற்கான பணிகள் நடந்து வருவதை செயற்கைகோள் படங்கள் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அந்தப் படங்களில் சானும்டாங்க் ஏவுதளத்தில் பெரிய அளவிலான வாகன நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. கடந்த காலத்தில் இப்படி காணப்பட்டபோது அந்த நாடு, ஏவுகணை அல்லது ராக்கெட் சோதனை நடத்தி இருக்கிறது. எனவே இப்போது மறுபடியும் அந்த நாடு ஏவுகணை அல்லது ராக்கெட் சோதனையில் ஈடுபடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் வடகொரியாவின் பிரதான ராக்கெட் ஏவுதளமான சோஹேயும் மறு கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளதாக இந்த வாரத்தின் தொடக்கத்தில் தெரியவந்தது நினைவுகூரத்தக்கது.

    அதையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறுகையில், “நமது புரிதலில் இருந்து விலகிச்செல்கிற வகையில் அவர் (வடகொரிய தலைவர் கிம்) ஏதாவது செய்தால் அது எனக்கு ஏமாற்றத்தைத் தரும். இருப்பினும் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அவர்கள் மீண்டும் சோதனைகளை நடத்த தொடங்கினால் அது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தரும்” என்று குறிப்பிட்டார். 
    மனிதநேயத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து பயங்கரவாதத்தை ஒழிக்க முன்வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். #joinhands #joinhandsunite #eradicateterrorist #ModiinSKorea
    சியோல்:

    இந்திய மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியதற்காகவும், பல்வேறு நடவடிக்கைகள் மூலம் உலக அமைதிக்குப் பங்களிப்பை வழங்கியமைக்காகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு, தென் கொரிய நாட்டின் உயரிய விருதான ’சியோல் அமைதி விருது’ சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.  

    தற்போது அரசுமுறைப் பயணமாக தென்கொரியா வந்துள்ள பிரதமர் மோடிக்கு இன்று சியோல் அமைதி விருது வழங்கப்பட்டது.

    இவ்விருதுக்கு தன்னை தேர்வு செய்தமைக்காக தென்கொரியா அரசுக்கு நன்றி தெர்வித்த மோடி, இந்த விருது தனிப்பட்ட முறையில் தனக்காக வழங்கப்பட்டது இல்லை என்றும், 130 கோடி இந்தியர்களுக்கான விருதாக எடுத்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

    இந்த விருதுடன் அளிக்கப்பட்ட ரொக்கப்பரிசான 2 லட்சம் டாலர்களை இந்தியாவில் கங்கை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணிக்கு நன்கொடையாக அளிப்பதாகவும் அறிவித்தார்.



    பகைநாடான வடகொரியாவுடன் நட்புறவை ஏற்படுத்தியதுடன் சர்வதேச அரங்கில் வடகொரியா மீதான வெறுப்புணர்வை நீக்கும் வகையில் அந்நாட்டை பேச்சுவார்த்தையின் பக்கம் அழைத்துச் சென்ற தென்கொரியா அதிபர் மூன் ஜே-இன் ஆற்றிய பணியை மோடி பாராட்டினார். இது சாதாரணமான காரியமல்ல, இதன் மூலம் கொரியா தீபகற்பத்தில் விரைவில் அமைதி நிலவும் என்றும் அவர் தெரிவித்தார்.

    1988-ம் ஆண்டில் சியோல் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியபோது அல் கொய்தா என்ற பயங்கரவாத இயக்கம் தொடங்கப்பட்டது. இன்று மதவாதம் மற்றும் பயங்கரவாதம் என்பது உலகின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

    இப்போது, பயங்கரவாத அமைப்புகளை முற்றிலுமாக ஒழிப்பதற்கான நேரம் வந்து விட்டது. மனிதநேயத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து பயங்கரவாதத்தை ஒழிக்க முன்வர வேண்டும். இதன் மூலமாக மட்டுமே வெறுப்புணர்வை போக்கி நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.

    1988-ம் ஆண்டில் சியோல் ஒலிம்பிக் போட்டியின்போது இசைக்கப்பட்ட பாடலை நான் இந்த வேளையில் நினைவுப்படுத்த விரும்புகிறேன். கையோடு கைகள் இணைந்து இந்த பூமிப்பந்தில் வாழும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்போம். இந்த உலகத்தை நாம் வாழ்வதற்கான சிறந்த இடமாக மாற்றிடுவோம் என்ற அந்த பாடலின் வரிகளுக்கேற்ப நாம் செயலாற்ற வேண்டிய வேளை இப்போது வந்து விட்டது எனவும் மோடி தெரிவித்தார்.  #joinhands #joinhandsunite #eradicateterrorist #ModiinSKorea
    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடிதத்தை தொடர்ந்து, இரண்டாவது சந்திப்புக்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ளும்படி வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். #DonaldTrump #KimJongUn #SecondSummit
    பியாங்யங் :

    உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்ததால் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகி பொருளாதார தடைகளை சந்தித்தது. 
     
    அமெரிக்க அதிபர் டிரம்பும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் வார்த்தை போரில் ஈடுபட்டதால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. தென்கொரியாவின் முயற்சியினால் அமெரிக்கா, வடகொரியா தலைவர்களின் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் இரு தலைவர்களின் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நடைபெற்றது. அப்போது, அணு ஆயுதங்களை முற்றிலுமாக அழித்து விடுவதாக அறிவித்த கிம் ஜாங் அன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.



    ஆனாலும், அணு ஆயுத ஒழிப்பில் வடகொரியா மெத்தனம் காட்டுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியதற்கு, பதிலளித்த கிம் ஜாங் அன், அமெரிக்கா ஜனாதிபதி மீது தான் நம்பிக்கை வைத்துள்ளேன். அவரது ஆட்சிக் காலத்துக்குள் அணு ஆயுத ஒழிப்பு முழுமை பெறும் என கூறியதாக தெரிகிறது. அவரது இந்த நடவடிக்கையை பாராட்டி டிரம்ப் நன்றி தெரிவித்தார்.

    இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரிய அதிபருக்கு எழுதிய கடிதத்தில், மீண்டும் ஒரு சந்திப்பை எதிர்நோக்கி காத்திருப்பதாக  தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் எழுதிய கடிதத்தை தொடர்ந்து, இரண்டாவது சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்யும்படி கிம் ஜாங் அன் தனது அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.  

    மேலும், டிரம்பின் நேர்மறையான அணுகுமுறை புதிய வழிமுறையை காட்டுகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக அவரது செயல்பாடு உள்ளது என வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார். #DonaldTrump #KimJongUn #SecondSummit
    வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் திடீர் பயணமாக சீனாவுக்கு சென்றார். #NorthKorea #KimJongUn #China
    பீஜிங்:

    வடகொரியாவுக்கு நெருங்கிய மற்றும் முக்கிய கூட்டாளியாக சீனா மட்டுமே விளங்கி வருகிறது. தூதரக ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் சிறப்பான பங்களிப்பை வடகொரியாவுக்கு, சீனா வழங்கி வருகிறது.

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனது முதல் வெளிநாட்டு பயணமாக வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சீனாவுக்கு சென்றார். ரெயில் மார்க்கமாக ரகசிய பயணம் மேற்கொண்ட கிம் ஜாங் அன், சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த பயணத்துக்கு பின்னர் தான் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னரும் கிம் ஜாங் அன் 2 முறை சீனாவுக்கு சென்று அதிபர் ஜின்பிங்கை சந்தித்தார்.

    இந்த நிலையில் புத்தாண்டையொட்டி நாட்டு மக்களிடையே உரையாற்றிய கிம் ஜாங் அன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எந்த நேரத்திலும் சந்திக்க தான் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

    அதே போல் டிரம்பும், கிம் ஜாங் அன்னை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார். அதன்படி 2-வது உச்சி மாநாட்டுக்கான தேதி மற்றும் இடம் குறித்து இருநாட்டு அதிகாரிகளிடையே தீவிர ஆலோசனை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த நிலையில் கிம் ஜாங் அன் திடீர் பயணமாக நேற்று சீனா சென்றார். சீன அதிபர் ஜின்பிங் விடுத்த அழைப்பின் பேரில் 3 நாள் பயணமாக அவர் சீனா சென்றிருப்பதாக வடகொரிய அரசு ஊடகமான கே.என்.சி.ஏ. தெரிவித்துள்ளது.

    கிம் ஜாங் அன் தனது மனைவி ரீ சோல்-ஜூ, அவரது வலதுகரமாக விளங்கும் யோங்-ஜோல் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ரெயிலில் சீனாவுக்கு புறப்பட்டார். அந்த ரெயில் நேற்று சீன தலைநகர் பீஜிங் சென்றடைந்தது.

    இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததாகவும், ரெயில் நிலையத்தில் கிம் ஜாங் அன்னுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    3 நாட்கள் சீனாவில் தங்கி இருக்கும் கிம் ஜாங் அன், அந்நாட்டின் அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து தீவிர ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது.

    கிம் ஜாங் அன்னின் திடீர் சீன பயணம் டிரம்ப் - கிம் ஜாங் அன் இடையேயான 2-வது சந்திப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.

    வர்த்தக பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க பிரதிநிதிகள் சீனாவில் முகாமிட்டு இருக்கும் நிலையில், கிம் ஜாங் அன் அங்கு பயணம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  #NorthKorea #KimJongUn #China 
    தங்கள் நாட்டின் மந்திரி உள்பட 3 பேர் மீது தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. #NorthKorea
    பியாங்காங்:

    எதிர் எதிர் துருவங்களாக விளங்கிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர்.

    இந்த பேச்சுவார்த்தையின்போது, கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக ஆக்குவதற்கு ஏற்ற விதத்தில் வடகொரியா செயல்படும் என்ற உறுதிமொழியை டிரம்புக்கு கிம் ஜாங் அன் கொடுத்தார். அதன்படி வடகொரியா மேற்கொண்ட சில நடவடிக்கைகள் இரு நாட்டு உறவில் பதற்றத்தைத் தணிப்பதாக அமைந்தது.

    எனினும் தங்கள் மீது விதித்துள்ள கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும், அப்படி செய்யாவிட்டால் மீண்டும் தாங்கள் அணு ஆயுத கொள்கைக்கு திரும்புவது குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டியது வரும் என்றும் வடகொரியா எச்சரிகை விடுத்தது. மேலும் கடந்த மாதம் அதிநவீன அணு ஆயுத சோதனையை நடத்தி வடகொரியா அதிரவைத்தது.

    இதற்கிடையே இரு நாட்டுத் தலைவர்களிடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை டிரம்ப் உறுதி செய்தபோதும், பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு அவசரம் ஏதும் இல்லை என்று தெரிவித்தார்

    இந்த நிலையில், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுக்கு மிக நெருக்கமானவர் மற்றும் ஒரு மந்திரி உள்பட வடகொரியாவை சேர்ந்த 3 பேர் மீது அமெரிக்கா திடீரென தடைகளை விதித்துள்ளது.

    அமெரிக்க செனட் சபையில் வெளியுறவுத் துறை அமைச்சகம் தாக்கல் செய்த ஓர் அறிக்கையில், கிம் ஜாங் அன்னின் வலதுகரமாக செயல்படும் சோ ரியோங் ஹே, வடகொரிய பாதுகாப்புத்துறை மந்திரி ஜோங் கியோங் தாயிக் மற்றும் பிரசார அதிகாரி பாக் குவாங்ஹோ ஆகிய 3 பேரும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

    அதன் அடிப்படையில் அவர்கள் 3 பேர் மீதும் தடைகளை விதித்துள்ள அமெரிக்கா, அவர்களுக்கு சொந்தமாக அமெரிக்காவில் உள்ள சொத்துகளைப் பறிமுதல் செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளது.

    அமெரிக்காவின் இந்த நடவடிக்கை வடகொரியாவுக்கு கடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வடகொரியாவின் அரசு ஊடகமான கே.என்.சி. ஏ.வில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

    வடகொரியா உடனான உறவை மேம்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. ஆனால் அமெரிக்க வெளியுறவுத்துறையோ, இரு நாட்டு உறவை, கடந்த ஆண்டு இருந்ததை போல கடுஞ்சொற்களை பரிமாறிக்கொள்ளும் நிலைக்கு மீண்டும் கொண்டுவந்து நிறுத்துவது போல தலைகீழாக நிற்கிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்புக்கான பாதையை நிரந்தரமாக மூடிவிட செய்யும்.

    வடகொரியா மீது அதிகபட்ச அழுத்தம் தர வேண்டும் என்கிற அமெரிக்காவின் எண்ணம் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும். எனவே இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்புக்கு பின் எதிர்பார்க்கப்பட்ட பரஸ்பர நம்பிக்கையை அளிக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.  #NorthKorea 
    அணு ஆயுதங்களை வைத்து உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த வடகொரியா கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற அமெரிக்கா தவறியதால் அதிபயங்கர போராயுதத்தை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. #NorthKorea #threatens
    பியாங்யாங்:

    சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்து பேசினர். உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தையின்போது, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சம்மதம் தெரிவித்தார்.



    இதுதொடர்பாக அமெரிக்காவுடன் அவர் ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். அதைத்தொடர்ந்து பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாவிட்டாலும், வடகொரியா அணுகுண்டு சோதனையோ, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையோ நடத்தவில்லை.

    கடந்த சில தினங்களுக்கு முன் டிரம்பை மீண்டும் சந்தித்து பேச விருப்பம் தெரிவித்து கிம் ஜாங் அன் கடிதம் எழுதினார். அதன் எதிரொலியாக அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ வடகொரியாவுக்கு வந்து கிம் ஜாங் அன்-னை சந்தித்து பேசினார். விரைவில் இரண்டாவது முறையாக இருநாட்டு தலைவர்களும் சந்தித்துப் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில், அமெரிக்கா அரசு முன்னர் உறுதியளித்ததைப்போல் வடகொரியாவின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் எதுவும் இன்னும் விலக்கப்படவில்லை.

    அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாவிட்டால் தங்கள் நாட்டின் ‘பியாங்ஜின்’ (pyongjin) கொள்கைப்படி அணு ஆயுத பலத்தை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சிப் பாதைக்கு திரும்பப் போவதாக வடகொரியா சமீபத்தில் எச்சரித்திருந்தது.

    இந்நிலையில், பல ஆண்டுகளாக ரகசியமாக தயாரிக்கப்பட்ட பயங்கரமான பேரழிவை ஏற்படுத்தவல்ல அதிபயங்கர போராயுதத்தை வடகொரியா வெற்றிகரமாக பரிசோதித்ததாக அந்நாட்டின் அரசு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பரிசோதனையை பார்வையிட்ட அதிபர் கிம் ஜாங் உன் திருப்தி தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஒப்பந்தத்தை மீறிய வகையில் நடைபெற்ற இந்த பரிசோதனைக்கு அமெரிக்காவின் எதிர்வினை என்னவாக இருக்கும்? என்ற கேள்வி சர்வதேச அரசியல் நோக்கர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. #NorthKorea #threatens 
    வாடிகனில் உள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் வடகொரியா வருமாறு அதிபர் கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #NorthKorea #KimJongUn #PopeFrancis #SouthKorea #MoonJaeIn #Vatican
    பியாங்யாங்:

    2000-ம் ஆண்டு அப்போதைய அதிபரான கிம் ஜாங் இல் அப்போதைய போப் ஆண்டவரான இரண்டாம் ஜான் பாலுக்கு அழைப்பு விடுத்து இருந்தார். அவரது அழைப்பை ஏற்று வடகொரியா வந்தார் இரண்டாம் ஜான் பால். இதுவே வரலாற்றில் வடகொரியாவுக்கு போப் ஆண்டவர் வந்த முதலும் கடைசியுமான நிகழ்வு ஆகும்.

    இந்நிலையில், தற்போதைய போப் ஆண்டவருக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை அடுத்த வாரம் வாடிகன் செல்ல இருக்கும் தென்கொரிய அதிபர் மூன் ஜே போப் ஆண்டவரிடம் தெரிவிப்பார் என தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வாடிகனுக்கும் வடகொரியாவுக்குமான புதிய உறவை ஏற்படுத்துவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. #NorthKorea #KimJongUn #PopeFrancis #SouthKorea #MoonJaeIn #Vatican
    அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் இடையே இன்று சந்திப்பு நடைபெற்றதை அடுத்து, ட்ரம்ப் உடனான 2-வது கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #MikePompeo #KimJongUn #NorthKorea #US
    பியாங்யோங்:

    ஜப்பான், வடகொரியா, சீனா உள்ளிட்ட  தெற்காசிய நாடுகளில் அமெரிக்க வெளியுறத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    வடகொரியா-அமெரிக்கா இடையில் சமீபத்தில் சிங்கப்பூரில் செய்யப்பட்ட அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றுவது தொடர்பாக  வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னை வலியுறுத்துவது அவரது பயணத்தின் அதிமுக்கிய நோக்கமாக உள்ளது.

    இதையடுத்து இன்று காலை வடகொரிய தலைநகர் பியாங்யோங்கில் அதிபர் கிம் ஜாங் அன் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ இடையேயான சந்திப்பு நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் வரை இந்த சந்திப்பு நடைபெற்றது.



    இந்த சந்திப்பு தொடர்பான முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை எனினும், இந்த சந்திப்பு இனிமையான ஒன்றாக அமைந்ததாக மைக் பாம்ப்பியோ தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான சந்திப்பின்போது போடப்பட்ட அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கான வழிமுறைகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், இருநாடுகளுக்கும் இடையேயான நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும் என்பதே தனது லட்சியம் என குறிப்பிட்டுள்ள மைக் பாம்ப்பியோ, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது அடுத்த சந்திப்பு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் எனவும் கூறியுள்ளார். #MikePompeo #KimJongUn #NorthKorea #US
    அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ, வரும் ஞாயிறு அன்று வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். #MikePompeo #KimJongUn
    வாஷிங்டன் :

    உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்ததால் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகி பொருளாதார தடைகளை சந்தித்தது. 
     
    இதையடுத்து, தென்கொரியா எடுத்த முயற்சியின் பலனாகவே அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினர். 

    அப்போது கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற கிம் ஜாங் அன் உறுதி அளித்து, டிரம்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்பின், வடகொரியா அணுகுண்டுகளையோ, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையோ சோதித்து பார்க்கவில்லை. ஆனாலும், அணு ஆயுத ஒழிப்பில் வடகொரியா மெத்தனம் காட்டுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.



    சமீபத்தில் 3 நாள் பயணமாக வடகொரியா சென்ற தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த பயணத்தின் போது டொனால்டு டிரம்ப்புக்கு, கிம் ஜாங் அன் எழுதிய ரகசிய கடிதம் மூன் ஜே இன் வாயிலாக வெள்ளை மாளிகைக்கு கொண்டு சேர்க்கப்பட்டது. அதில், கிம் ஜான் அன் டிரம்ப்பை மீண்டும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டது. 

    இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர்ர் மைக் பாம்பியோ வரும் ஞாயிற்றுக்கிழ்மை அன்று வட கொரியா செல்கிறார். அங்கு அவர் அதிபர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. #MikePompeo #KimJongUn
    அணு ஆயுதங்களை அழிக்க வடகொரிய அதிபர் ஒப்புக்கொண்டதை அடுத்து, அந்நாட்டுடன் உடனடி பேச்சு வார்த்தைக்கு தயாராகி வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ அறிவித்துள்ளார். #NorthKorea #MikePompeo #US
    வாஷிங்டன்:

    வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்துவதை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனை நிறுத்தும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டது. அதன் அடிப்படையில், அமெரிக்க அதிபருடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் அணு ஆயுத சோதனையை நிறுத்த ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து சமீபத்தில் டிரம்பை மீண்டும் சந்தித்து பேச விருப்பம் தெரிவித்து கிம் ஜாங் அன் கடிதம் எழுதி உள்ளார். அதன்பின்னர், வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ நிரூபர்களிடம் பேசினார். அப்போது அவர், “சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவதற்கு அளித்த உறுதியை எப்படி நிறைவேற்றிக்காட்டுவது என்பது தொடர்பாக வடகொரியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என கூறினார்.



    இந்நிலையில், வடகொரியாவில் உள்ள அணு ஆயுத சோதனை மையங்களை அமெரிக்க அதிகாரிகள் மற்றும் உலக அணு ஆயுத தடுப்புப்பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் முற்றிலும் நிறுத்த கிம் ஜாங் அன் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2012-ம் ஆண்டுக்குள் அணு ஆயுதங்கள் இல்லாத பகுதியாக கொரியன் தீபகற்பத்தை உருவாக்கும் முயற்சியாக இந்த சந்திப்பு அமையும் எனவும் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். #NorthKorea #MikePompeo #US
    அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது தொடர்பாக வடகொரியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார். #NorthKorea #MikePompeo
    வாஷிங்டன்:

    சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர். உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தையின்போது, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சம்மதம் தெரிவித்தார். இதுதொடர்பாக அமெரிக்காவுடன் அவர் ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். அதைத்தொடர்ந்து பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாவிட்டாலும், வடகொரியா அணுகுண்டு சோதனையோ, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையோ நடத்தவில்லை.



    கடந்த சில தினங்களுக்கு முன் டிரம்பை மீண்டும் சந்தித்து பேச விருப்பம் தெரிவித்து கிம் ஜாங் அன் கடிதம் எழுதி உள்ளார்.

    இந்த நிலையில் வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவதற்கு அளித்த உறுதியை எப்படி நிறைவேற்றிக்காட்டுவது என்பது தொடர்பாக வடகொரியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என கூறினார்.

    இதற்கு இடையே வடகொரியா மீது ஏற்கனவே விதித்த பொருளாதார தடைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தடையாக உள்ள நாடுகள் பற்றி விவாதிப்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை நாளை (திங்கட்கிழமை) கூட்டவேண்டும் என்று அமெரிக்கா வேண்டுகோள் விடுத்து உள்ளது.  #NorthKorea #MikePompeo
    ×