search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98969"

    வட கொரியாவின் 70-வது ஆண்டு விழாவையொட்டி, பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடந்தது. இதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இடம்பெறவில்லை. #NorthKorea #70YearsCelebrate
    பியாங்யாங்:

    வடகொரியாவில் கம்யூனிஸ்டு ஆட்சி மலர்ந்ததின் ஆண்டு விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9-ந் தேதி பிரமாண்டமாக நடைபெறும். அதையொட்டி நடக்கிற ராணுவ அணிவகுப்பு, உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் அமையும். ராணுவ அணிவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் முக்கிய இடம் பிடிக்கும்.



    இந்த ஆண்டு, 70-வது ஆண்டு விழா, வடகொரியாவில் எப்படி அமையப்போகிறது என்ற கேள்வி எழுந்தது.

    இதற்கு காரணம், கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி சிங்கப்பூரில் நடந்த உச்சி மாநாட்டில், இரு துருவங்களாக கருதப்பட்டு வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்துப் பேசியபோது, கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற வடகொரியா ஒப்புக்கொண்டது. இதையொட்டி இரு தரப்பினரும் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தினர்.



    அந்த ஒப்பந்தத்தில் அணு ஆயுதங்களை வடகொரியா கைவிடுவது தொடர்பாக கூடுதலான தகவல்கள் இல்லை. இருப்பினும், அதன் பின்னர் வடகொரியா இதுவரையில் அணுகுண்டு வெடிக்கவும் இல்லை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தவும் இல்லை.



    அதே நேரத்தில் அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பான அந்த நாட்டின் நடவடிக்கையில் முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதன் எதிரொலியாகத்தான் சமீபத்தில் அந்த நாட்டுக்கு அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ மேற்கொள்ளவிருந்த பயணத்தை ஜனாதிபதி டிரம்ப் ரத்து செய்தார்.



    இந்த நிலையில்தான், வடகொரியாவில் நேற்று நடந்த 70-வது ஆண்டு விழா பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த விழாவையொட்டிய பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு எப்படி நடைபெறப்போகிறது, வடகொரியா தனது ஆயுத பலத்தை காட்டுமா, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இடம் பெறச்செய்யுமா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.



    இந்த நிலையில் நேற்று காலை உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு விழா தொடங்கியது. ராணுவ வீரர்கள், வீராங்கனைகள் அணிவகுப்பில் கலந்து கொண்டு வீர நடை போட்டனர்.

    அதே நேரத்தில் அணிவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இடம்பெறவில்லை. பிற பாரம்பரிய ஆயுதங்கள், தளவாடங்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தன.



    அணிவகுப்பை வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், சீன அதிபர் ஜின்பிங்கின் சிறப்புத்தூதர், லி ஜான்சுவுடன் பார்வையிட்டார்.

    இந்த விழாவில் கிம் ஜாங் அன் உரை ஆற்றவில்லை. அவரது வலதுகரமாக கருதப்படுகிற கிம் யோங் நாம் உரை ஆற்றினார். அவரது பேச்சில் வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்கள் பற்றி எதுவும் இடம் பெறவில்லை. நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றவதுதான் முக்கிய அம்சமாக இடம் பெற்று இருந்தது.



    இந்த அணிவகுப்பை சீனா, ரஷியா, கியூபா நாடுகளின் உயர் அதிகாரிகள், பத்திரிகையாளர்களும் பார்வையிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

    ராணுவ அணுவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இடம்பெறாதது அமெரிக்காவுக்கு நிம்மதியை அளிப்பதாக அமைந்தது.



    அது மட்டுமின்றி, அமெரிக்காவுக்கு அளித்த வாக்குறுதிப்படி கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத ஒழிப்பு தொடர்பாக வடகொரியா ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையும் உலக அரங்கில் உருவாகி உள்ளது.   #NorthKorea #70YearsCelebrate
    அணு ஆயுதங்களை அழித்தால் மட்டுமே வடகொரியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தும் என அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்தார். #MikePompeo
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது சந்திப்பு கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்றது.

    அப்போது, அணு ஆயுத சோதனை மையங்கள் விரைவில் அழிக்கப்படும் என கிம் ஜாங் அன் டிரம்பிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, வடகொரியா அணு ஆயுத சோதனை மையங்களை அழித்து வந்தது.

    ஆனாலும், வடகொரியா அரசு தற்போதும் அணு ஆயுதங்களை சோதனைக்கு உட்படுத்தி வருகிறது என சமீபத்தில் அமெரிக்கா குற்றம் சாட்டியது.
      
    இந்நிலையில், அணு ஆயுதங்களை அழித்தால் மட்டுமே வடகொரியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த தயாராகும் என அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், டிரம்புடனான சந்திப்பில் கிம் ஜாங் அன் தெரிவித்ததை போல் அணு ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டும். அப்படி அழிக்கப்பட்டால் மட்டுமே அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு தயாராகும் என தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, மைக் பாம்பியோ வடகொரியாவுக்கு செல்லவிருந்த பயணத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #MikePompeo
    வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னை மீண்டும் சந்திபேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். #NorthKorea #KimJongUn #DonaldTrump
    வாஷிங்டன்:

    வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி நடந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சந்தித்துப் பேசினார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பின்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் இல்லாத பிரதேசமாக மாற்ற உறுதி கொண்டு வடகொரியா, அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது.



    இந்த நிலையில் டிரம்ப், ரெயிட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியின்போது அவர் கூறுகையில், “வடகொரிய தலைவர் கிம் அணு ஆயுதங்களை கைவிடுவாரா, மாட்டாரா என்பதில் பரவலாக சந்தேகங்கள் இருந்தாலும்கூட, அவர் சொன்னபடி அணு ஆயுதங்களை கைவிடும் வகையில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்து உள்ளார். வடகொரியாவுடன் பல நல்ல விஷயங்கள் நடந்து உள்ளன. இந்த விஷயத்தில் எதிர்பார்த்த அளவுக்கு சீனா உதவிகள் செய்யவில்லை. அமெரிக்காவுடன் சீனாவுக்கு உள்ள வர்த்தக பிரச்சினைகள்தான் இதற்கு காரணம்” என்று கூறினார்.

    மேலும் அவர் கூறும்போது, “வடகொரியா அணு ஆயுதங்களை சோதிப்பதை தடுத்து நிறுத்தி விட்டேன். அவர்கள் ஏவுகணைகளை சோதித்துப் பார்ப்பதையும் நிறுத்தி உள்ளேன். ஜப்பான் இதைக் கண்டு சிலிர்த்துப்போனது. இனி என்ன நடக்கப்போகிறது? யாருக்கு தெரியும்? நாங்கள் மீண்டும் சந்திக்கப்போகிறோம்” என்று குறிப்பிட்டார்.  #NorthKorea #KimJongUn #DonaldTrump #tamilnews
    சட்ட விரோதமாக எல்லை தாண்டிச்சென்ற தென்கொரியரை விடுதலை செய்தது வடகொரியா. #NorthKorea #SouthKorean
    சியோல்:

    தென் கொரியாவை சேர்ந்தவர் சியோவ் (வயது 34). இவர் கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி சட்ட விரோதமாக எல்லை தாண்டி வட கொரியாவுக்குள் நுழைந்தார். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

    ஆனால் அவரை நேற்று வடகொரியா விடுதலை செய்துவிட்டது. இது குறித்து தென்கொரியாவின் ஒருங்கிணைப்புத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது.

    அந்த அறிக்கையில், “வடகொரியா இன்று (நேற்று) காலை 11 மணிக்கு நம் நாட்டைச் சேர்ந்த சியோவ் என்பவரை பான்முன்ஜோமில் (எல்லையோர கிராமம்) வைத்து எங்களிடம் ஒப்படைத்தது. அவர் கடந்த 22-ந் தேதி சட்ட விரோதமாக தங்கள் நாட்டில் நுழைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டதாக வடகொரியா கடந்த திங்கள்கிழமை அறிவித்தது. இந்த நிலையில் இப்போது அவர் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்” என கூறப்பட்டு உள்ளது.

    மேலும், வடகொரியாவில் பல்லாண்டு காலமாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தங்கள் நாட்டைச் சேர்ந்த மேலும் 6 கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று தென்கொரியா வேண்டுகோள் விடுத்து வந்தது. இந்த நிலையில் இப்போது சியோவை வடகொரியா விடுதலை செய்து இருப்பதை சாதகமான அறிகுறியாக தென்கொரியா எடுத்துக்கொண்டு உள்ளது.

    கொரியப்போருக்கு பின்னர் வட கொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே தீராத பகை நிலவி வந்தது. இப்போது அந்த நிலை மாறி இரு நாடுகளுக்கு இடையே இணக்கமான சூழல் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. 
    வடகொரியா இன்னும் அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ குற்றம் சாட்டியுள்ளார். #MikePompeo
    வாஷிங்டன்:

    பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு கடந்த மாதம் சிங்கப்பூரில் நடைபெற்றது.  சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள  கேபெல்லா ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது.  

    இந்த சந்திப்பின் போது, அணு ஆயுதங்கள் கைவிடல், பொருளாதார பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். 

    இதைத்தொடர்ந்து, வடகொரியா தங்கள் நாட்டில் செயல்பட்டு வரும் அணு ஆயுத சோதனை மையங்களை மூடுவதாக அறிவித்தது. ஆனால் அதில் மெத்தனம் காட்டியது வடகொரியா.

    இந்நிலையில், வடகொரியா இன்னும் அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், டிரம்ப் - கிம் ஜாங் அன் சந்திப்பு நடந்து ஆறு வார காலமாகியும் வடகொரியா அணு ஆயுத சோதனை மையங்களை அழிக்கவில்லை.

    வடகொரியா அரசு இன்னும் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை நிறுத்தவில்லை. கிம் ஜாங் அன் கொடுத்த வாக்குறுதியால் அந்த பகுதியில் நிலவிய பதட்டம் பெருமளவு குறைந்துள்ளது என தெரிவித்துள்ளார். #MikePompeo
    கொரிய போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான உடன்படிக்கையை தீவிரமாக செயல்படுத்தும்படி தென்கொரியாவை வடகொரியா அரசு வலியுறுத்தி உள்ளது. #KoreanWar #KimJongUn
    பியாங்யாங்:

    எலியும் பூனையுமாக இருந்த வடகொரியா, தென் கொரியா நாடுகளிடையே இருந்த போர்ப்பதற்றம் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு தணியத் தொடங்கியது. போரை முடிவுக்கு கொண்டு வந்து, இணக்கமாக செல்வற்கு வடகொரிய அதிபர் முன்வந்ததையடுத்து, ஏப்ரல் மாதம் 27-ம் தேதி இரு நாட்டு தலைவர்களிடையே வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு நடைபெற்றது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், தென்கொரிய அதிபர் முன் ஜே இன் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.



    இந்த சந்திப்பின்போது, 65 ஆண்டுகளாக நீடித்து வந்த கொரிய போரை முடிவுக்கு கொண்டு வரவும், கொரிய தீபகற்பத்தினை அணு ஆயுதமற்ற பிரதேசம் ஆக்கவும் உறுதி பூண்டனர்.

    இந்நிலையில், கொரிய போரை முறைப்படி முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ஏப்ரல் மாதம் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்ததை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என தென் கொரியா அரசாங்கத்தை வடகொரியா வலியுறுத்தி உள்ளது.

    இது தொடர்பாக வடகொரிய இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், போர்நிறுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கூடிய கடமை தென் கொரியாவுக்கு உள்ளதாகவும், இனியும் தாமதிக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #KoreanWar #KimJongUn
    டொனால்ட் டிரம்ப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு வடகொரியா அதிபரை வலியுறுத்த அமெரிக்க வெளியுறவு மந்திரி இன்று பியாங்யாங் வந்துள்ளார்.
    பியாங்யாங்:

    சிங்கப்பூரில் சமீபத்தில் அமெரிக்கா - வடகொரியா இடையில் கையொப்பமான அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை பெரும்பாலான உலக நாடுகள் வரவேற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையும் மகிழ்ச்சி தெரிவித்தது.

    வடகொரியா இந்த ஒப்பந்தத்தை ஒழுங்காக நிறைவேற்றினால் அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும் என டிரம்ப் அறிவித்தார்.

    இதற்கிடையில், டிரம்ப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறிய வகையில் வடகொரியா ரகசியமாக அணு ஆயுத உற்பத்திக்கு தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.

    வடகொரியாவின் யாங்பியான் பகுதியில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் நிலையத்தில் பணிகள் நடைபெற்று வருவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக தென்கொரியாவை சேர்ந்த இணையச் செய்தி நிறுவனம் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தது.

    இந்நிலையில், டொனால்ட் டிரம்ப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு வடகொரியா அதிபரை வலியுறுத்த அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்ப்பியோ இன்று பியாங்யாங் வந்துள்ளார்.



    வடகொரியா அதிபரின் உதவியாளர் கிம் யோங் சோல் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ரி யோங் ஹோ ஆகியோர் அவரை வரவேற்றனர்.

    முன்னதாக, அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட மைக் பாம்ப்பியோ, வரும் வழியில் விமானத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    வடகொரியாவில் அணு ஆயுதங்களை முழுமையாக ஒழித்துவிட வேண்டும் என சிங்கப்பூரில் நடைபெற்ற சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் உறுதியளித்துள்ளனர். உலகத்துக்கு அவர்கள் அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடகொரியா அதிபரை இந்த பயணத்தின்போது நான் வலியுறுத்துவேன்.

    இதற்கு வடகொரியாவும் தயாராக இருப்பதாகவே நான் கருதுகிறேன். அதிகமாக சந்திப்பதன் மூலம் நட்புறவும், நம்பிக்கையும் பலப்படும் என்பதால் வடகொரியா தரப்பில் இருந்து உரிய எதிர்வினையை எதிர்பார்க்கிறேன் என பேட்டியின்போது மைக் பாம்ப்பியோ குறிப்பிட்டார். #PompeoinNKorea 
    வடகொரிய அரசின் நடவடிக்கைகள், கொள்கைகள் ஆகியவை அமெரிக்க தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக்கொள்கை, பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிரம்ப் அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    சிங்கப்பூரில் கடந்த 12-ந் தேதி நடந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்துப் பேசினர்.

    அந்த சந்திப்பு நடந்த மறுநாளில் டிரம்ப், வடகொரியாவிடம் இருந்து இனி அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவித்தார்.

    இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “வடகொரியாவிடம் இருந்து இனி அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லை. இன்று இரவு நன்றாக தூங்குங்கள்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

    ஆனால் நேற்று முன்தினம் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு டிரம்ப் அளித்த அறிக்கை ஒன்றில் வடகொரியாவிடம் இருந்து அணு ஆயுத அச்சுறுத்தல் இருப்பதாக கூறி ‘பல்டி’ அடித்து உள்ளார்.

    அந்த அறிக்கையில், “கொரிய தீபகற்பத்தின் ஆயுத பயன்பாடு மற்றும் வடகொரிய அரசின் நடவடிக்கைகள், கொள்கைகள் ஆகியவை அமெரிக்க தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக்கொள்கை, பொருளாதாரத்துக்கு அசாதாரணமான அச்சுறுத்தலாக தொடர்கின்றன” என கூறப்பட்டு உள்ளது.

    மேலும் வட கொரியாவினால் அச்சுறுத்தல் தொடர்கிற நிலையில், அமெரிக்காவில் தேசிய நெருக்கடி நிலையை மேலும் ஓராண்டுக்கு தொடர்வதாகவும் டிரம்ப் அதில் தெரிவித்து உள்ளார்.

    இதற்கிடையே வட கொரியாவுடன் ராஜ்ய ரீதியிலான பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருப்பதால், தென்கொரியா உடனான கூட்டு ராணுவ பயிற்சிகள் காலவரையறையற்று நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ் கூறி உள்ளார். 
    வடகொரியாவின் அணு ஆயுத ஒழிப்பினை உறுதிப்படுத்துவதற்காக அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் இணைந்து செயல்பட உள்ளன. #Denuclearisation #NKorea
    சியோல்:

    அணு ஆயுத சோதனைகள் மற்றும் ஏவுகணை சோதனைகளால்
    கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை அதிகரித்து வந்த வடகொரியா, தற்போது சமாதானத்தையும் அமைதியையும் விரும்புகிறது. முதற்கட்டமாக அணு ஆயுத சோதனை மையத்தை அழித்தது. அத்துடன் அணு ஆயுத திட்டங்களையும் கைவிட தயாராக உள்ளது. இதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இருவரும் சிங்கப்பூர் சந்திப்பின்போது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அப்போது தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை முழுவதும் ஒழிக்கப்படும் என வட கொரிய தலைவர் அறிவித்தார்.



    இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பைத் தொடர்ந்து வட கொரியாவிடம் உள்ள அணு ஆயுதங்களை ஒழிப்பதை உறுதிப்படுத்துவதற்காக அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகள் இணைந்து செயல்பட உள்ளன.

    இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ, தென்கொரிய வெளியுறவுத்துறை மந்திரி காங் கியுங்-வா மற்றும் ஜப்பான் வெளியுறவு மந்திரி டாரோ கோனோ ஆகியோர் சியோலில் இன்று சந்தித்து பேசினர். அப்போது வடகொரியா கூறியபடி அந்த நாட்டில் இருக்கும் அணு ஆயுதங்களை ஒழிக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    இந்த சந்திப்புக்குப் பிறகு அமெரிக்க வெளியுறவு மந்திரி பாம்பியோ கூறுகையில், ‘வடகொரியா தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கு முன்வந்துள்ளது. ஆனால் அவற்றை முற்றாக அழிப்பது பெரிய செயல்முறை, எளிதான காரியமல்ல’ என்றார். #Denuclearisation #NKorea

    வடகொரியாவும் அமெரிக்காவும் சிங்கப்பூரில் சமாதானம் செய்துகொண்டது போல் இந்தியாவும் பாகிஸ்தானும் சமாதானமாக போக வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் தம்பி குறிப்பிட்டுள்ளார். #ShahbazSharif #Indiapaktalks
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் ஊழல் வழக்கில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் ஆளும்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) தலைவர் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளதால் அவரது தம்பி ஷாபாஸ் ஷரிப் கட்சி தலைவர் பதவியை ஏற்றுள்ளதுடன் வரும் ஜூலை மாதம் 25-ம் தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராகவும் முன்நிறுத்தப்பட்டுள்ளார்.



    இந்நிலையில்,  சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பரம எதிரிகளாக இருந்து வந்த வடகொரியாவும் அமெரிக்காவும் சமாதானம் செய்துகொண்டது போல் இந்தியாவும் பாகிஸ்தானும் சமாதானமாக போக வேண்டும் என ஷாபாஸ் ஷரிப் குறிப்பிட்டுள்ளார்.

    ‘கொரியா போரின் ஆரம்பகட்டத்தில் இருந்தே அமெரிக்காவும் வடகொரியாவும் பரம எதிரிகளாக இருந்து வந்துள்ளன. அணு ஆயுத வலிமையை காட்டி ஒருநாட்டை மற்றொரு நாடு அச்சுறுத்தி வந்தன. அணு ஆயுதம் என்ற கொள்கையை கைவிட்டு வடகொரியாவும் அமெரிக்காவும் அமர்ந்துப் பேசி சமாதானம் செய்துகொள்ள முடியுமானால், காஷ்மீர் விவகாரத்தை மையமாக வைத்து முதலில் பேச்சுவார்த்தையை தொடங்கி, அதே பாதையை இந்தியாவும் பாகிஸ்தானும் ஏன் கையாள கூடாது?’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
     
    நமது பிராந்தியத்தில் இருதரப்பு அமைதி பேச்சுவார்த்தைக்கான நேரம் கனிந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுவதை சர்வதேச சமுதாயம் உறுதிப்படுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்துக்கு உடன்பட்டு நீண்டகாலமாக நிலுவையில் உள்ள காஷ்மீர் விவகாரத்துக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஷாபாஸ் ஷரிப் வலியுறுத்தியுள்ளார். #ShahbazSharif #Indiapaktalks
     
    கடந்தகால இருண்ட நாட்களை மறந்துவிட்டு வடகொரியாவுடன் புதிய வரலாறை எழுதப் போவதாக தென்கொரியா அதிபர் மூன் ஜே தெரிவித்துள்ளார். #SKoreaMoonJae #newhistoryNKorea
    சியோல்:

    சிங்கப்பூரில் இன்று அமெரிக்கா - வடகொரியா இடையில் கையொப்பமான அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை பெரும்பாலான உலக நாடுகள் வரவேற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், கடந்தகால இருண்ட நாட்களை மறந்துவிட்டு வடகொரியாவுடன் புதிய வரலாறை எழுதப் போவதாக தென்கொரியா அதிபர் மூன் ஜே தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் வடகொரியாவுடன் எப்போதும் இணைந்திருப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையே, முன்னர் வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்ற
    எல்லையோர பன்மன்ஜோம் கிராமத்தில் இருநாடுகளின் ராணுவ உயரதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் வரும் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வடகொரிய ராணுவத்தின் லெப்டினண்ட் ஜெனரல் அன் இக்-சான் தலைமையில் வடகொரியாவை சேர்ந்த 5 பேர் தென்கொரியாவுக்கு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #SKoreaMoonJae #newhistoryNKorea
    அமெரிக்காவும் வடகொரியாவும் இணைந்து புதிய வரலாறு படைக்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். #singaporesummit #Trumpkimsummit #Trumpspeech
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் இன்று கையொப்பமிட்டனர்.

    பின்னர், செய்தியாளர்களிடையே பேசிய டொனால்ட் டிரம்ப், இன்றைய ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதுபோல், அதில் உள்ள அம்சங்களின்படி கிம் ஜாங் அன் வாழ்ந்து காட்ட வேண்டும் என தெரிவித்தார்.

    பின்னர் டிரம்ப் பேசியதாவது:-

    இன்றைய நாள் உலக வரலாற்றில் மிக முக்கியமான உயர்வான நாளாகும். புதிய வரலாறு படைக்கவும், புதிய அத்தியாயத்தை எழுதவும் நாங்கள் தயாராகி விட்டோம். எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என்பதை கடந்தகாலம் வரையறுக்க முடியாது. யார் வேண்டுமானாலும் போரை ஏற்படுத்தலாம். ஆனால், விவேகமானவர்களால் மட்டுமே அமைதியை ஏற்படுத்த முடியும்.

    போரின் பயங்கரங்களை அமைதிக்கான வரங்களால் நாம் மாற்றி அமைக்க முடியும். அணு ஆயுதங்களை ஒழிக்கும் வடகொரியாவின் நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கும். இன்றைய ஒப்பந்தத்துக்கு பின்னர் வடகொரியாவுடன் உறவுகளை ஏற்படுத்தி கொள்ள உலக நாடுகள் ஆர்வம் காட்டும்.



    தனது நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்தை உறுதிப்படுத்த பாடுபடும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் மிகவும் திறமைசாலி. எங்கள் இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நேர்மையாகவும், நேரடியாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அமைந்திருந்தது.

    முந்தைய அமெரிக்க அதிபர்கள் மூலம் இந்த ஒப்பந்தம் உருவாகி இருக்க முடியாது என நம்பியதாக கிம் ஜாங் அன் என்னிடம் தெரிவித்தார். இந்த சந்திப்பு வடகொரியா மக்களுக்கு மட்டுமின்றி, அமெரிக்க மக்களுக்கும் நன்மையாக அமையும் என எண்ணுகிறேன்.

    அணு ஏவுகணைகள் ஒரு பொருட்டல்ல என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்படும்போது, முன்னர் (வடகொரியா மீது) விதிக்கப்பட்ட தடைகள் எல்லாம் நீக்கப்படும் நாளுக்காக நான் காத்திருக்கிறேன். அணு ஆயுதங்களை கைவிடுவதால் வடகொரியா பெறும் நன்மைகள் ஏராளம். உரிய நேரம் வரும்போது அமெரிக்காவுக்கு வருமாறு கிம் ஜாங் அன்-ஐ அழைக்கப் போவதாக நான் தெரிவித்தேன். அவரும் அதற்கு சம்மதித்துள்ளார்.

    கிம் ஜாங் அன் வடகொரியாவுக்கு போய் சேர்ந்ததும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள பணிகளை தொடங்குவார் என நான் நினைக்கிறேன். கொரிய தீபகற்பத்தில் இனி அமெரிக்கா போர் பயிற்சியில் ஈடுபடாது.

    இவ்வாறு அவர் பேசினார். #singaporesummit #Trumpkimsummit #Trumpspeech
    ×