search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99004"

    ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் சேவைகள் சில மணி நேரங்கள் முடங்கியதை தொடர்ந்து டெலிகிராம் பயனர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. #Telegram



    ஃபேஸ்புக் சேவை முடங்கியது டெலிகிராமிற்கு நல்லதாக அமைந்தது. ஃபேஸ்புக் நிறுவன செயலிகள் உலகம் முழுக்க முடங்கியதைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் டெலிகிராம் பயனர் எண்ணிக்கை முப்பது லட்சம் வரை அதிகரித்தது. 

    பிரிட்டனை சேர்ந்த டெலிகிராம் செயலியை கடந்த ஆண்டு வெளியான நிலவரப்படி உலகம் முழுக்க சுமார் 20 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். ஃபேஸ்புக், வாட்ஸ்அப் சேவை முடங்கியதால் மட்டுமே டெலிகிராம் பயனர் எண்ணிக்கை அதிகரித்தது என கூற முடியாது.

    எனினும், 24 மணி நேரத்தில் இத்தனை லட்சம் பயனர்கள் டெலிகிராமில் இணைந்திருப்பது எதேர்ச்சியான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. புதிய பயனர்கள் சேர்ந்திருப்பதை டெலிகிராம் தலைமை செயல் அதிகாரி பவெல் துரோவ் தனது டெலிகிராம் சேனலில் தெரிவித்திருக்கிறார். 



    கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் முப்பது லட்சம் புதிய பயனர்கள் டெலிகிராம் சேவையில் இணைந்திருக்கின்றனர். நாங்கள் உண்மையாகவே தனியுரிமை மற்றும் அனைருக்கும் வரம்பற்ற முறையில் இடமளிக்கிறோம் என துரோவ் தனது டெலிகிராமில் பதிவிட்டிருக்கிறார். 

    டெலிகிராம் சேவையும் வாட்ஸ்அப் போன்று முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்ட இலவச மெசேஜிங் சேவையாகும். இதில் வாய்ஸ் கால்களுக்கு முழுமையான என்க்ரிப்ஷன் மற்றும் ரகசிய சாட்களுக்கு முழுமையான என்க்ரிப்ஷன் வசதி தனியே வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் போன்று டெலிகிராமில் அனைத்து சாட்களும் என்க்ரிப்ட் செய்யப்படுவதில்லை.

    டெலிகிராம் செயலிகள் ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ்., மேக் ஓ.எஸ்., லினக்ஸ், விண்டோஸ் போன் மற்றும் விண்டோஸ் என்.டி. உள்ளிட்ட தளங்களில் கிடைக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை டெலிகிராம் சேவையை சுமார் 20 கோடி பேர் பயன்படுத்துவதாக அறிவிக்கப்பட்டது.
    ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் போன்ற செயலிகளின் சேவை முடங்கியதற்கான காரணம் அது கிடையாது என ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. #Facebook



    வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்று்ம மெசஞ்சர் சேவை நேற்றிரவு சில மணி நேரங்களுக்கு முடங்கியது. இந்நிலையில், சேவை முடங்கியதற்கு சைபர் தாக்குதல் காரணமில்லை என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. 

    உலகின் பல்வேறு பகுதிகளில் ஃபேஸ்புக்கின் மெசஞ்சர் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளில் குறுந்தகவல் அனுப்புவதில் பயனர்கள் பிரச்சனைகளை எதிர்கொண்டனர். இதே போன்று ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் சேவைக்கும் தடங்கல் ஏற்பட்டது. பயனர்கள் சேவை முடக்கம் பற்றி வலைதளங்களில் தெரிவிக்க துவங்கினர்.



    இதற்கு ஃபேஸ்புக் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ஃபேஸ்புக் நிறுவன செயலிகளில் சிலவற்றை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டதை நாங்கள் அறிவோம். இந்த பிரச்சனையை மிக விரைவில் சரி செய்வதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் சேவை முடங்கியதிற்கு டிஸ்ட்ரிபியூட்டெட் டினையல் ஆஃப் சர்வீஸ் (DDoS) சைபர் தாக்குதல் காரணமில்லை என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. பிரச்சனையை விரைவில் செய்வதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறோம். சேவை முடங்கியதற்கு சைபர் தாக்குதல் காரணமாக இருக்கலாம் என எண்ணியவர்களுக்காக ஃபேஸ்புக் தகவல் வழங்கியிருக்கிறது.

    ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மொபைல் செயலிகள் சீராக வேலை செய்தாலும், போஸ்ட்களை அப்லோடு செய்வதில் சில பயனர்கள் சிரமம் எதிர்கொண்டதாக தெரிவித்திருக்கின்றனர். பிரபல சமூக வலைதளங்களின் சேவை முடங்கியதை தொடர்ந்து பயனர்கள் ட்விட்டர் தளத்தில் தங்களது பிரச்சனைகளை பதிவிட்டனர்.
    வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். செயலியில் விரைவில் அட்வான்ஸ் சர்ச் வசதி வழங்கப்படுகிறது. #WhatsApp



    வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுக்க சுமார் 130 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். செயலியின் ஒட்டுமொத்த பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. 

    வாட்ஸ்அப் க்ரூப் இன்விடேஷன், டார்க் மோட், சாட்களுக்கு கைரேகை சென்சார் லாக், தொடர்ச்சியாக வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் வசதி மற்றும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை சரிபார்க்க புதிய வசதி உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கின்றன. 

    இவை தவிர, வாட்ஸ்அப் விரைவில் அட்வான்ஸ்டு சர்ச் மோட் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அம்சம் வாட்ஸ்அப் சர்ச் ஆப்ஷனை தினந்தோரும் பயன்படுத்துவோருக்கு மிக எளிமையான ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. அட்வான்ஸ் சர்ச் அம்சம் மூலம் ஒருவர் அதிகப்படியான குறுந்தகவல்களை தேட முடியும் என கூறப்படுகிறது.


    புகைப்படம் நன்றி: WABetaInfo

    புதிய ஆப்ஷனிற்கென வாட்ஸ்அப் செயலியில் மீடியா எனும் புதிய வசதி சேர்க்கப்படும் என்றும் இதனை கொண்டு பயனர்கள் புகைப்படங்கள், ஜிஃப்கள், வீடியோக்கள், டாக்குமென்ட், லிண்க் மற்றும் ஆடியோ உள்ளிட்டவற்றை தேட முடியும். உதாரணத்திறஅகு வாட்ஸ்அப் மீடியா ஆப்ஷனில் புகைப்படங்களை தேர்வு செய்யும் போது, புகைப்படங்கள் மட்டும் வரிசைப்படுத்தப்படும்.

    இதுதவிர மீடியா அபனஷன் வாட்ஸ்அப் ஸ்டோரேஜில் எத்தனை மீடியா ஃபைல்கள் சேமிக்கப்பட்டுள்ளன என்ற விவரங்களும் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இதனுடன் சர்ச் ஹிஸ்ட்ரியை பார்க்கும் வசதியும், தேவைப்படாத சமயங்களில் இதனை நீக்கும் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.

    வாட்ஸ்அப் சர்ச் ஆப்ஷனில் தேடும் போது பிரீவியூ வழங்கப்படும் என்பதால், பயனர் தேடும் தரவுகளை மிகச்சரியாக தேர்வு செய்து பெற முடியும். புதிய அட்வான்ஸ் சர்ச் ஆப்ஷன் தொடர்ந்து உருவாக்கும் பணிகளில் இருப்பதாகவும், விரைவில் இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் கிடைக்கும் என தெரிகிறது.
    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியின் செட்டிங்ஸ் அம்சம் புதிய வடிவமைப்பை பெற இருக்கிறது. இதற்கான அப்டேட் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. #WhatsApp



    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் மேம்படுத்தப்பட்ட செட்டிங்ஸ் பகுதி வழங்கப்பட்டிருக்கிறது. இதில் செட்டிங்ஸ் தோற்றம் மாற்றப்பட்டு பல்வேறு டூல்களுக்கு புதிய ஐகான்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    புதிய மாற்றங்கள் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.45 செயலியில் வழங்கப்பட்டிருக்கிறது. புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும் செட்டிங்ஸ் மெனு மற்றும் புதிய மாற்றங்கள் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    புதிய மாற்றங்களில் முதன்மையானதாக பேமென்ட்ஸ் (Payments) ஆப்ஷன் இருக்கிறது. இது இணைக்கப்பட்டிருக்கும் வங்கி கணக்கில் மேற்கொள்ளப்பட்ட பரிமாற்றங்களை பட்டியலிடுகிறது.

    அக்கவுண்ட்ஸ் (Accounts) பகுதியை திறக்கும் போது ஒவ்வொரு ஆப்ஷனிற்கும் பிரத்யேக ஐகான் வழங்கப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. இதன் செக்யூரிட்டி (Security), சேஞ்ச் நம்பர் (Change number), டு-ஸ்டெப் வெரிஃபிகேஷன் (Two-step verification) உள்ளிட்டவற்றுக்கும் புதிய ஐகான்கள் வழங்கப்பட்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: WABetaInfo

    எனினும், நோட்டிஃபிகேஷன்ஸ் (Notifications) பகுதியில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ஹெல்ப் (Help) பகுதியின் அனைத்து டூல்களும் பிரத்யேக ஐகான்களும் மாற்றப்பட்டிருக்கிறது.

    இதேபோன்று டேட்டா மற்றும் ஸ்டோரேஜ் யூசேஜ் (Data and storage usage) போன்ற ஆப்ஷன்களில் இனி டேட்டா பயன்பாடு பற்றிய விவரங்களை பார்க்க முடியும். இதற்கு நெட்வொர்க் யூசேஜ் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுக்கு செல்ல வேண்டும். புதிய இன்டர்ஃபேஸ் மெசஞ்சர் செயலியின் ஸ்டேபிள் பதிப்பில் காணப்படவில்லை.

    இத்துடன் நெட்வொர்க் யூசேஜ் பக்கத்தில் இனி மெமரி பயன்பாட்டு விவரம் மற்றும் தேதி, நேரத்துடன் காண்பிக்கிறது. பேமென்ட்ஸ் தவிர பீட்டா செயலியின் மற்ற அம்சங்கள் சீராக இயங்குகிறது.
    வாட்ஸ்அப் செயலியில் அதிகப்படியான குறுந்தகவல்களை அனுப்பும் மற்றும் தாணியங்கி நடவடிக்கைகளை கண்டறிய அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. #WhatsApp



    வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் போலி செய்திகள் பரப்பப்படுவதை எவ்வாறு தடுக்கிறது என்பதை தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் செயலியினுள் மெஷின் லேர்னிங் எனும் அதிநவீன தொழில்நுட்பத்தை உருவாக்கி இருப்பதாக அறிவித்துள்ளது. 

    இந்த தொழில்நுட்பம் வழக்கத்தை விட அதிகளவு குறுந்தகவல்களை அனுப்புவோர் மற்றும் பல்வேறு அக்கவுண்ட்களை உருவாக்கி தீங்கு விளைவிக்கும் போலி தகவல்களை பரப்புவோரை கண்டறியும். இதுபோன்ற அக்கவுண்ட்களை செயலி முழுக்க வெவ்வேறு தளங்களில் முடக்குவதாக வாட்ஸ்அப் உறுதியளித்துள்ளது.

    அந்த வகையில் போலி தகவல்களை பரப்புவதற்கென உருவாக்கப்படும் அக்கவுண்ட்கள் பதிவு செய்யப்படும் போது, குறுந்தகவல் அனுப்பும் போது அல்லது மற்றவர்கள் புகார் எழுப்பும் போது என பல்வேறு தளங்களில் முடக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் வாட்ஸ்அப் செயலியில் சுமார் இருபது லட்சம் அக்கவுண்ட்கள் இவ்வாறு முடக்கப்படுவதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.



    வாட்ஸ்அப் உருவாக்கி இருக்கும் மெஷின் லேர்னிங் மென்பொருளால் தற்சமயம் 20% அக்கவுண்ட்களை பதிவு செய்யப்படும் போதே முடக்கமுடிகிறது. அக்கவுண்ட்களை முடக்க பயனரின் ஐ.பி. முகவரி, அவர் வசிக்கும் நாடு, அவர்கள் பயன்படுத்தும் மொபைல் நம்பர், அக்கவுண்ட் எவ்வளவு பழையதாக இருக்கிறது என பல்வேறு விவரங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.

    ஒரே ஸ்மார்ட்போனில் பல்வேறு வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை பயன்படுத்த அனுமதிக்கும் விசேஷ மென்பொருள் உள்பட செயலியை தவறாக பயன்படுத்த அனுமதிக்கும் பல்வேறு வழிகளை வாட்ஸ்அப் கண்டறிந்துள்ளது. வாட்ஸ்அப் செயலியில் வியாபாரங்களை கண்கானிக்க பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.

    போலி தகவல்கள் பரப்பப்படுவதை கண்காணிக்க பயனர் ஒரு குறுந்தகவலை மற்றவருக்கு ஃபார்வேர்டு செய்யும் எண்ணிக்கையை குறைத்துள்ளது. இதுதவிர ரேடியோ, தொலைகாட்சி, வலைதளம் உள்ளிட்டவற்றில் போலி செய்திகள் பரப்புவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விளம்பரங்களை வாட்ஸ்அப் வெளியிடுகிறது.
    வாட்ஸ்அப் செயலியின் ஐ.ஓ.எஸ். பதிப்பில் பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தில் இயங்கும் பாதுகாப்பு வசதி சேர்க்கப்பட்டுள்ளது. #WhatsApp #iOS



    வாட்ஸ்அப் செயலியின் ஐ.ஓ.எஸ். பதிப்பின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் வகையில் ஆப்பிளின் டச் ஐ.டி. மற்றும் ஃபேஸ் ஐ.டி. வசதி சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அம்சம் செயலியை பயோமெட்ரிக் முறையில் லாக் செய்து கொள்ளும்.

    புதிய பயோமெட்ரிக் பாதுகாப்பை செயல்படுத்த வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும். ஐ.ஓ.எஸ். தளத்தில் வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்ய ஆப்பிள் ஆப் ஸ்டோர் சென்று செட்டிங்ஸ் -- அக்கவுண்ட் -- பிரைவசி உள்ளிட்ட ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்.

    எனினும், வாட்ஸ்அப் நோட்டிபிகேஷன் மற்றும் அவற்றுக்கான க்விக் ரிப்ளை ஆப்ஷன்களை தொடர்ந்து பார்க்க முடியும். வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். தளத்தின் நோட்டிபிகேஷனில் க்விக் ரிப்ளை வசதி வழங்கப்பட்டிருந்தாலும், செயலியை முழுமையாக பயன்படுத்த பயோமெட்ரிக் முறையை கடக்க வேண்டியது அவசியமாகும்.  



    புதிய பாதுகாப்பு வசதி பற்றி ஆப்ஸ்டோரில் எழுதப்பட்டிருப்பதாவது: வாட்ஸ்அப் செயலியை அன்லாக் செய்ய ஃபேஸ் ஐ.டி. அல்லது டச் ஐ.டி. உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம். இதற்கு செட்டிங்ஸ் - - அக்கவுண்ட் -- பிரைவசி உள்ளிட்ட ஆப்ஷன்களுக்கு சென்று ஸ்கிரீன் லாக் வசதியை செயல்படுத்த வேண்டும்.

    முன்னதாக ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட தகவல்களில் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட தளங்களை 2020 ஆம் ஆண்டிற்குள் ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வசதியை கொண்டு மூன்று செயலிகளுக்கு இடையே பயனர்கள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.
    வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல் அனுப்ப டைப் செய்வதற்கு மாற்றாக குரல் மூலம் குறுந்தகவல் அனுப்பும் வழிமுறையை பற்றி தொடர்ந்து பார்ப்போம். #Whatsapp



    வாட்ஸ்அப்பில் டைப் செய்து குறுந்தகவல் அனுப்புவது பலருக்கு சிரமமான விஷயமாக இருக்கிறது. டைப் செய்வதால் அதிக நேரம் பிடிப்பதுடன், பிழைகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு என்பதால் பலரும் மைக் மூலம் குரலை பதிவு செய்து வாய்ஸ் மெசேஜாக அனுப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    பேசுவதை எழுத்துகளாக சைப் செய்து வழங்கும் நுட்பம் எப்போதோ கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. அதுபோன்ற பயன்பாடு வாட்ஸ்அப்பில் வராதா? என்பது பலரது எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. 

    இந்நிலையில், கூகுளின் ஜி-போர்டு ‘கீபோர்டு’ அப்ளிகேசனை பயன்படுத்தி பயனர் தங்களது பேச்சை டைப் செய்துவிட முடியும். இதுவரை வாட்ஸ்அப்பில் அந்த வசதி அறிமுகம் செய்யப்படாவில்லை என்றாலும், ஜிபோர்டு வசதியைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் செயலிலும் குறுந்தகவலை டைப் செய்யலாம்.



    இதை செயல்படுத்த வாட்ஸ்அப் செயலியின் புதிய பதிப்புக்கு உங்களது செயலியினை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். மேலும் ஜிபோர்டு செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து நிறுவிக் கொள்ள வேண்டும். 

    பின் டைப் செய்யும்போது வழக்கமான வாட்ஸ்அப் மைக் அருகே ஜிபோர்டின் மைக் குறியீடு தோன்றும். அதை அழுத்திவிட்டு பேசினால், அது நமது பேச்சை எழுத்துகளாக டைப் செய்துவிடும். இந்த வகையில் பாஸ்வேர்டு மற்றும் சில ரகசிய குறிகளை மட்டும் டைப் செய்ய முடியாது. இந்த வசதியை வாட்ஸ்அப் செயலியில் சேர்ப்பது பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.

    குறுந்தகவலை எழுத்துக்களாக டைப் செய்யும் பணியினை ஜிபோர்டு பார்த்துக் கொள்ளும் என்றாலும், குறுந்தகவலை அனுப்பும் முன் பிழை இல்லாததை உறுதி செய்துகொள்ள வேண்டும். #Whatsapp
    வாட்ஸ்அப் செயலியில் சமீபத்தில் வழங்கப்பட்ட பி.ஐ.பி. மோட் வசதி வாட்ஸ்அப் வெப் பதிப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளது. #WhatsApp #Apps



    வாட்ஸ்அப் வெப் பதிப்பில் 0.3.2041 அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த அப்டேட் சில புதிய வசதிகளையும், பாதுகாப்பு குறைபாடுகளும் சரி செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்கதாக பி.ஐ.பி. மோட் பார்க்கப்படுகிறது.

    அந்த வகையில் வாட்ஸ்அப் வெப் பதிப்பில் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்டிரீமபிள் போன்ற சேவைகளுக்கு பி.ஐ.பி. (பிக்சர் இன் பிக்சர்) மோட் வசதி நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக வாட்ஸ்அப் வெப் 0.3.1846 பதிப்பில் பி.ஐ.பி. மோட் வசதி வழங்கப்பட்டது.

    இந்த அம்சத்தினை சோதனை செய்ய வீடியோ லின்க் ஒன்றை நீங்கள் அனுப்ப வேண்டும். அல்லது உங்களுக்கு எவரேனும் அனுப்பியிருக்க வேண்டும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் வீடியோ லின்க் உடன் வீடியோ பிரீவியூ வாட்ஸ்அப் சாட் திரையில் தோன்றும். இதனை க்ளிக் செய்யும் போது வீடியோ சாட் ஸ்கிரீனுள் ஓடத்துவங்கும்.



    இதனுடன் பி.ஐ.பி. திரையை மூடாமல் சாட் ஸ்கிரீனை மாற்றிக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. ஒருவேளை பி.ஐ.பி. மோட் உங்களுக்கு இயங்காத பட்சத்தில் நீங்கள் வாட்ஸ்அப் வெப் பழைய பதிப்பை பயன்படுத்தி வருகின்றீர்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

    அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் வெப் பயன்படுத்த உங்களது பிரவுசரின் கேச்சிக்களை அழித்து விட்டு பின் பிரவுசரை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தபின் உங்களது வாட்ஸ்அப் வெப் அப்டேட் ஆகியிருக்கும். இந்த நிலையில் பி.ஐ.பி. மோட் சீராக இயங்கும். #WhatsApp #Apps
    மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளை ஒன்றிணைக்க ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. #Facebook #WhatsApp



    ஃபேஸ்புக் நிறுவனம் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளை ஒன்றிணைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு செய்யும் பட்சத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்துவோருடன் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும். 

    வாட்ஸ்அப், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் தொடர்ந்து தனித்தனியே இயங்கினாலும், இதன் உள்கட்டமைப்பு கொண்டு வாடிக்கையாளர்கள் மற்ற செயலிகளை பயன்படுத்துவோருடன் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும். 

    இதுகுறித்து தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் மூன்று செயலிகளுக்கிடையே நடைபெறும் சாட்கள் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதற்கான ஒப்புதலை ஃபேஸ்புக் இதுவரை வழங்கவில்லை. இவ்வாறு செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் சேவைகளை அதிகளவு பயன்படுத்த வைக்கலாம் என ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது.



    குறுந்தகவல் அனுபவத்தை பொருத்தவரை மக்களுக்கு வேகமான, எளிமையான, நம்பத்தகுந்த மற்றும் தனியுரிமை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என ஃபேஸ்புக் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    எங்களது குறுந்தகவல் செயலிகளை முழுமையாக என்க்ரிப்ட் செய்து அவற்றை ஒவ்வொரு நெட்வொர்க் மூலம் மிக எளிமையாக தகவல் பரிமாற்றம் செய்ய வைக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    இவ்வாறு செய்லபடுத்தும் பட்சத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் அனைவரும் மற்ற இரு செயலிகளை நிச்சயம் பயன்படுத்துவர் என கருதமுடியாது. சில பயனர்கள் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் பயன்படுத்திக் கொண்டு மெசஞ்சரை இன்ஸ்டால் செய்யாமல் இருக்கலாம். 



    மூன்று சேவைகளையும் இணைக்கும் போது வாட்ஸ்அப் பயனர்கள் மற்ற செயலிகளான மெசஞ்சர் அல்லது இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவோருடன் தகவல் பரிமாற்றம் செய்ய வாய்ப்பளிக்கும். இதுதவிர ஃபேஸ்புக் தனது விளம்பரதாரர்களிடம் அதிக வாடிக்கையாளர்கள் தங்களது சேவையை பயன்படுத்துவதாக தெரிவிக்க முடியும்.

    இதன் மூலம் ஃபேஸ்புக் விளம்பர வருவாய் அதிகரிக்கும். ஃபேஸ்புக் சமூக வலைதளத்தை அதிகளவு வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு சேவைகளை ஒன்றிணைப்பதன் மூலம் ஃபேஸ்புக் தனது போட்டி நிறுவனங்களான ஆப்பிள் ஐமெசேஜ் மற்றும் கூகுளின் மெசேஜிங் சேவைகளுக்கு போட்டியை பலப்படுத்த முடியும்.
    வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோர் தங்களுக்கு வரும் குறுந்தகவல்களை இனி ஒரே சமயத்தில் ஐந்து பேருக்கு மட்டுமே ஃபார்வேடு செய்ய முடியும். #WhatsApp



    வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்களை ஐந்து பேருக்கு மட்டும் ஃபார்வேடு செய்யக் கூடியதாக கட்டுப்படுத்தப்பட்டது. இதன் மூலம் குறுந்தகவல்களை ஒரே சமயத்தில் ஐந்து பேருக்கு மட்டுமே அனுப்பவோ அல்லது ஃபார்வேடு செய்யவோ முடியும். இந்த கட்டுப்பாடு இந்தியாவில் மட்டும் அமலாகி இருந்த நிலையில், தற்சமயம் உலகம் முழுக்க நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் உலகம் முழுக்க வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் இனி ஒரே சமயத்தில் ஐந்து பேருக்கு அதிகமாக குறுந்தகவல்களை அனுப்பவோ அல்லது ஃபார்வேடு செய்யவோ முடியாது. இந்த கட்டுப்பாடை அமல்படுத்துவது பற்றி ஆறு மாதங்களாக பயனர்களிடம் கருத்து கேட்கப்பட்டதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.



    கடந்த ஆண்டு வாட்ஸ்அப் செயலியில் ஃபார்வேடு செய்யப்படும் குறுந்தகவல்களை சுட்டிக்காட்டும் வகையில் ஃபார்வேடு லேபல் குறுந்தகவல்களில் இடம்பெற்றது. இதன் மூலம் வாட்ஸ்அப் செயலியில் ஃபார்வேடு செய்யப்படும் குறுந்தகவல்களில் அவை ஃபார்வேடு செய்யப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டு இருக்கும்.

    இவ்வாறு செய்வதால் பயனர்களுக்கு வரும் குறுந்தகவல் அனுப்புவோர் டைப் செய்ததா அல்லது மற்றவர் அனுப்பியதை ஃபார்வேடு செய்திருக்கிறாரா என்பதை மிக எளிமையாக தெரிந்து கொள்ள முடியும்.

    இன்று முதல் வாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்களில் பயனர்களால் ஒரே சமயத்தில் அதிகபட்சம் ஐந்து பேருக்கு மட்டுமே குறுந்தகவல்களை ஃபார்வேடு செய்ய முடியும். தொடர்ந்து வாடிக்கையாளர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு அவற்றை செயல்படுத்துவது பற்றிய பணிகள் நடைபெறும் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான பீட்டா செயலியில் க்ரூப் கால் செய்வதற்கான ஷார்ட்கட் வழங்கப்பட்டுள்ளது. #WhatsApp



    வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் மேற்கொள்ளும் வசதி வழங்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இதைத் தொடர்ந்து வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ கால் வசதி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சேர்க்கப்பட்டது. 

    பயனுள்ள அம்சம் என்றாலும், வீடியோ கால் மேற்கொள்வது சற்றே சிக்கல் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. முதலில் ஒரு நபருடன் வீடியோ கால் துவங்கி, பின் மற்றவர்களை அதில் இணைத்துக் கொள்ள வேண்டும். தற்சமயம் சிக்கல் நிறைந்த அம்சமாக இருந்தாலும், விரைவில் இது எளிமையாக்கப்படுகிறது.

    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.9 செயலியில் வீடியோ கால் செய்ய பிரத்யேக பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் க்ரூப் சாட் செய்யும் போது ஒற்றை க்ளிக் மூலம் வீடியோ கால் செய்யலாம். பலருக்கு ஒரே சமயத்தில் வீடியோ கால் செய்ய க்ரூப் காண்டாக்ட்கள் இடம்பெற்றிருக்கும் ஸ்லைடிங் டிரே பயன்படுத்தலாம். புதிய அப்டேட் மூலம் க்ரூப் கால் ஷார்ட்கட் மட்டுமின்றி செயலியில் இருந்த பிழைகளும் சரி செய்யப்பட்டுள்ளது.



    வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். செயலியில் ஏற்கனவே க்ரூப் வீடியோ கால் பட்டன் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அம்சம் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் கடந்த மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் தற்சமயம் சோதனை செய்யப்படும் இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சமீபத்தில் லாட்ஸ்அப் செயலியில் கண்டறியப்பட்ட பிழை பயனரின் பழைய குறுந்தகவல்களை தானாக அழிக்க செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. பலர் தங்களது வாட்ஸ்அப் குறுந்தகவல்கள் தானாக அழிந்துவிட்டதாக அவரவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டனர்.

    சில பயனர்கள் 2015 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட குறுந்தகவல்கள் அழிந்து போனதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தனர். குறுந்தகவல்கள் தானாக அழிந்து போகும் பிழை குறித்து வாட்ஸ்அப் சார்பில் இதுவரை எவ்வித விளக்கமும் வழங்கப்படவில்லை.
    சிவகாசி போலீஸ் நிலைய வாசலில் நின்று போலீசாரை சினிமா வசனத்துடன் கிண்டல் செய்து நடித்து ‘வாட்ஸ்அப்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.
    சிவகாசி :

    கேலி, கிண்டல் செய்து சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிடுவது தற்போது அதிகரித்து வருகிறது. அவ்வாறு கருத்து பதிவிட்டு சிலர் வீண் வம்பையும் விலை கொடுத்து வாங்குகிறார்கள். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தை பற்றி, அந்த போலீஸ் நிலையத்தின் வாசலிலேயே கேலியான சினிமா வசனத்தை நடித்துக்காட்டி 4 வாலிபர்கள் கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து அந்த போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் முத்துமாரியப்பன் அளித்த புகார் வருமாறு:-

    நான் பணியில் இருந்தபோது தூத்துக்குடியில் நடைபெற்ற அரசியல் தலைவர் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாகனத்தில் செல்ல அனுமதி கேட்டு 4 வாலிபர்கள் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட நான், அந்த வாலிபர்களுக்கு அனுமதி அளித்தேன். பின்னர் சிறிது நேரத்தில் எனது ‘வாட்ஸ்அப்’பில் ஒரு நம்பரில் இருந்து வீடியோ ஒன்று பதிவிடப்பட்டு இருந்தது.

    அந்த வீடியோவை பார்த்த போது, அதில் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலைய வாசலில் நின்று போலீஸ் நிலையத்தை அவதூறான முறையிலும், கிண்டல் செய்தும் சினிமா வசனத்துடன் அந்த 4 வாலிபர்களும் நடித்துக் காட்டுவது போல் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த புகார் குறித்து இன்ஸ்பெக்டர் சீனிவாசகன் வழக்குப்பதிவு செய்தார். தகாத வார்த்தையால் பேசுவது, காவல்துறையை களங்கப்படுத்துவது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுதொடர்பாக ஆனையூர் துலுக்கப்பட்டியை சேர்ந்த முருகேசன் (வயது 25), தங்கேஸ்வரன் (23), ராமச்சந்திராபுரம் குருமகன் (24), சுப்பிரமணியபுரம் ஈஸ்வரன் (21) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    போலீசாரையும், போலீஸ் நிலையத்தையும் கிண்டல் செய்து போலீஸ் நிலைய வாசலில் நின்று வாலிபர்கள் நடித்துக் காட்டிய வீடியோ வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
    ×