search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99024"

    திருநின்றவூரில் குடிநீர் நிறுவனத்துக்கு எந்திரம் கொடுப்பதாக ரூ.7½ லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகர் 26-வது தெருவைச் சேர்ந்தவர் தயாளன். இவர் திருநின்றவூர் கொசுவம் பாளையத்தில் குடிநீர் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவர் குடிநீர் பாட்டில் தயாரிக்கும் எந்திரம் வாங்குவதற்காக நூம்பல் சூசையா நகர் மகாத்மா காந்தி ரோட்டைச் சேர்ந்த பாலேஸ்வர் சிங் என்பவரை அணுகினார்.

    அப்போது அவரிடம் எந்திரம் வாங்க இரண்டு தவணையாக ரூ. 7 லட்சத்து 50ஆயிரத்தையும் தயாளன் கொடுத்தார். இந்த நிலையில் எந்திரங்களை சப்ளை செய்யாமல் பணத்தையும் திருப்பி தராமல் தொடர்ந்து பாலேஸ்வர் சிங் காலம் தாழ்த்தி வந்தார்.

    இதுகுறித்து தயாளன் மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட பாலேஸ்வர் சிங்கை கைது செய்தனர்.

    கைதான பாலேஸ்வர் சிங் இதே போல் எம்.கே.பி. நகர், வடபழனி, போரூர் மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் எந்திரங்கள் சப்ளை செய்வதாக கூறி பணத்தை பெற்றுக் கொண்டு நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் போலி ரசீது தயாரித்து கொடுத்து ரூ.21 லட்சம் மோசடி செய்த கிளை மேலாளர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் கோர்ட்டு வீதியில் பிரபல தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் கிளை அலுவலகம் உள்ளது.

    இந்த நிறுவனத்தில் கிளை மேலாளராக நாகராஜன் முருகன் பணியாற்றி வருகிறார். இதே கிளையில் பிரிவு மேலாளர்களாக கோவை டாடாபாத்தை சேர்ந்த அருண்குமார் (வயது 30), கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ்பாபு (54), திருப்பூர் கவுண்டம்பாளையம் நால்ரோட்டை சேர்ந்த திவாகர்(30), மற்றும் சங்கர், மணிகண்டன் ஆகியோர் பணியாற்றினார்கள்.

    இவர்கள் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு அதை நிறுவனத்துக்கு செலுத்தாமல், அதற்கு போலியாக ரசீது தயாரித்து கொடுத்து கையாடல் செய்துள்ளனர். மேலும் வாடிக்கையாளர் சம்மதம் இல்லாமல் அவர்களின் பாலிசிகளையும் ரத்து செய்துள்ளனர்.

    இதுகுறித்து அறிந்த மேலாளர் நாகராஜன் முருகன் இதுதொடர்பாக திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல், கிளை மேலாளர்கள் அருண்குமார், வெங்கடேஷ் பாபு, திவாகர் மற்றும் சங்கர், மணிகண்டன் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    இதில் 5 பேரும் சேர்ந்து போலியாக ரசீது தயாரித்து கொடுத்ததுடன் பாலிசிகளை ரத்து செய்து வாடிக்கையாளர்கள் 30 பேரிடம் ரூ.21 லட்சம் கையாடல் செய்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அருண்குமார், வெங்கடேஷ்பாபு, திவாகர் ஆகிய 3 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 3 பேரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    ரூ.27 லட்சம் மோசடி குறித்து போலீசில் புகார் கூறிய வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் சுந்தரராஜபுரம் மாசானம் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகேசுவரன் (வயது 37) ரெடிமேட் ஆடை வியாபாரி.

    இவரிடம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜரத்தினம் (45) பழகி வந்தார். அப்போது கத்தார் நாட்டிற்கு பின்னலாடை ஏற்றுமதி செய்யலாம் என கூறியுள்ளார்.

    இதனை தொடர்ந்து இருவரிடையே கடந்த நவம்பர் மாதம் ஏற்றுமதி தொழில் வியாபார ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் பின்னர் பல தவணைகளில் ரூ.31 லட்சத்து 27 ஆயிரத்தை மகேசுவரன் கொடுத்துள்ளார்.

    பணத்தை பெற்றுக் கொண்ட ராஜரத்தினம், ஏற்றுமதி தொழிலை தொடங்காமல் காலம் கடத்தி உள்ளார். இதனால் மகேசுவரன் பணத்தை திருப்பிக் கேட்டபோது, ரூ.3 லட்சத்து 95 ஆயிரம் மட்டும் கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.27 லட்சத்து 32 ஆயிரத்தை மோசடி செய்து விட்டதாக சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் மகேசுவரன் புகார் செய்தார்.

    இதனால் ராஜரத்தினம் ஆத்திரம் அடைந்தார். சம்பவத்தன்று மகேசுவரன் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு ராஜரத்தினம், அவரது தந்தை கருமலை, தாயார் கல்யாணி, சகோதரர் கண்ணன் உள்பட 7 பேர் காரில் வந்து வழிமறித்தனர். அவர்கள் போலீசில் எப்படி புகார் கொடுக்கலாம் எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக, ராஜபாளையம் போலீசில் மகேசுவரன் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து ராஜரத்தினம் கைது செய்யப்பட்டார்.

    வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ.2லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    புதுக்கோட்டை மாவட்டம் சுந்தரபட்டி புல்வயலை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 28). இவர் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பிவருவதாக தெரிவித்துள்ளார். இதை நம்பிய மானாமதுரை அருகே உள்ள தெ.புதுக்கோட்டையை சேர்ந்த சத்தியராசு (37) என்பவர் சிங்கப்பூரில் வேலைக்கு அனுப்பி வைக்க கேட்டாராம்.

    இதற்காக கடந்த ஆகஸ்டு மாதம் 2 தவணைகளில் ரூ.2 லட்சத்தை வங்கி கணக்கு மூலம் கிருஷ்ணமூர்த்திக்கு கொடுத்தாராம்.

    அதையடுத்து நீண்ட நாட்கள் ஆகியும் சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்பவில்லையாம். மேலும் வாங்கிய பணத்தையும் திருப்பி தரவில்லையாம். இதுகுறித்து சத்தியராசு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடம் புகார் அளித்தார்.

    அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டிசெல்வம், இன்ஸ்பெக்டர் சாதுரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழிவர்மன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளச்சாமி, திருமுருகன் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.
    சிவகாசியில் நிலம் விற்பதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர்:

    சிவகாசி விஜயகருக்கல் குளத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 54). இவர் தன்னிடம் 5 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், ஏக்கர் ரூ.3 லட்சம் என்றும் கூறியுள்ளார்.

    இதனை கேள்விப்பட்ட திருத்தங்கல் ராமராஜ் (42) நிலத்தை வாங்க ஆசைப்பட்டு ரூ.15 லட்சம் கொடுத்தாராம். பணத்தை பெற்றுக் கொண்ட ரவிச்சந் திரன், நிலத்தை பதிவு செய்து கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார்.

    4 ஆண்டுகளாக அவர் தன்னை மோசடி செய்து விட்டதாக கூறி திருத்தங்கல் போலீசில் ராமராஜ் புகார் செய்தார்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பணம் மோசடி செய்ததாக ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்.

    அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்த ஓய்வுபெற்ற துணை பதிவாளரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கையை அடுத்த சக்கந்தி மில்கேட் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கும் சிவகங்கை செந்தமிழ்நகரில் வசிக்கும் ராகவன்(வயது60) என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்ததாம். ராகவன் ராமநாதபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் துணை பதிவாளராக இருந்து ஓய்வு பெற்று விட்டார்.

    சுரேஷின் மனைவி சங்கீதாவுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக ராகவன் கடந்த 1.9.2017-ம் ஆண்டு ரூ.8 லட்சம் பணம் பெற்றாராம். ஆனால் அவர் பேசியபடி வேலை வாங்கி கொடுக்காமல் வாங்கிய பணத்தை திரும்பி கொடுக்காமல் மோசடி செய்து விட்டாராம். இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் சங்கீதா புகார் செய்தார்.

    அப்போது முன் பணமாக ரூ.3 லட்சத்தை ராகவன் திருப்பி கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.5லட்சத்தை திருப்பி கொடுக்க வில்லையாம். இது குறித்து சங்கீதா மீதி பணத்தை கேட்கும் போது அவரை மிரட்டியுள்ளார். இதுகுறித்து சங்கீதா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடம் புகார் செய்தார்.

    அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாதுரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் அருண்மொழிவர்மன், சசிகலா ஆகியோர் ஓய்வு பெற்ற கூட்டுறவு துணை பதிவாளர் ராகவன் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மின் இணைப்பு வழங்குவதில் போலி ரசீது கொடுத்து ரூ.1கோடி மோசடி செய்த அரியலூர் மின்வாரிய பெண் அதிகாரி மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் உள்ளது. இங்கு வருவாய் மேற்பார்வையாளராக சோபனா பணியாற்றி வந்தார். இந்த நிலையில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் சோபனா தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். 

    இதனிடையே 5 பேர்கள் கொண்ட மின்வாரிய தணிக்கை குழுவினர் ஆய்வு செய்ததில் 2013 முதல் 2018 வரை சோபனா வேலை பார்த்த காலங்களில் பஞ்சாயத்துகளில் மின் இணைப்பு வழங்குவதில் போலி ரசீது வழங்கி சுமார் ரூ.1கோடி வரையில் மோசடி செய்தது கண்டறியப்பட்டது.

    இது தொடர்பாக உதவி மின் பொறியாளர் ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சோபனா மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    மதுரை அழகப்பன் நகரில் போலீஸ் போல் நடித்து பெண்ணிடம் 8 பவுன் தங்க செயினை மோசடி செய்த நபர்கள் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை அழகப்பன் நகர் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி முத்து ராக்கு (வயது 55). இவர் அந்தப்பகுதியில் நடந்து சென்றபோது 2 மர்ம வாலிபர்கள் முத்துராக்குவிடம் நைசாக பேச்சு கொடுத்தனர். இந்தப்பகுதியில் அடிக்கடி திருட்டு நடக்கிறது.

    எனவே நீங்கள் அணிந்திருக்கும் நகையை கொடுங்கள், பத்திரமாக மடித்து தருகிறோம் என்று கூறினர்.

    இதை நம்பிய முத்துராக்கு, தான் அணிந்திருந்த 8 பவுன் தங்க தாலிச்செயினை அவர்களிடம் கொடுத்தார். அதை வாங்கிய 2 வாலிபர்களும் ஒரு காகிதத்தில் வைத்து பொட்டலமாக மடித்துக் கொடுத்தனர்.

    வீடு திரும்பிய முத்து ராக்கு பொட்டலத்தை பிரித்து பார்த்த போது அதில் காகிதங்கள் சுற்றி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த முத்து ராக்கு இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

    இதேபோல் மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த கருப்பையா மனைவி பாண்டியம்மாள் (வயது 45). இவர் ஆரப்பாளையத்தில் இருந்து எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்துக்கு டவுன் பஸ்சில் சென்றார்.

    கோரிப்பாளையம் அருகில் சென்றபோது பாண்டியம்மாள் வைத்திருந்த மணிபர்சை யாரோ அபேஸ் செய்து விட்டனர். அதில் அவர் 7 பவுன் தங்க தாலிச்செயினை வைத்திருந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பதியில் ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டது தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பதி:

    திருப்பதி பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் சந்தேகப்படும்படியாக 2 பேர் நின்று கொண்டிருந்தனர்.

    ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருப்பதி போலீசார் சந்தேகத்தின் பேரில் 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.

    அதில் 14 வைர கற்களும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 501 ம் இருந்தன. அவர்களிடம் கேட்டபோது வியாபாரம் செய்து வருவதாக கூறியுள்ளனர்.

    ஆனால் அவர்மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்ததால் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் கள்ள நோட்டுகள் என தெரியவந்தது.

    இதில் மேலும் 9 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்ததால் அவர்களை விஜயநகரம் நிடமனூர், நாரயணனபுரம் காலணியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு 8 பேர் கொண்ட கும்பல் ஸ்கேனரில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கலர் பிரிண்ட் எடுத்து கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்திய 2 லேப்டாப், 2 கலர் பிரிண்டர்கள், 1 ஸ்கேனர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அனந்தபூரை சேர்ந்த முகமத் காஜா இம்ரான் (27), முகமத் ஆலி (55), மோகன் (40), சரண்குமார் (23), நவநீத குமார் (27), விஜயவாடா பாலகுமார் (29), பவன்குமார் (23), விசாகப்பட்டினம் மங்குநாயுடு (37), அனந்தபுரம் மாவட்டம் தர்மாவரம் மோகன் (40), ஐதராபாத் நிஜாம்பேட்டை வர்மா (50), கிருஷ்ணா மாவட்டம் கனப்பவரம் முரளி கிருஷ்ணாரெட்டி என்பது தெரியவந்தது.

    மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த கள்ள நோட்டு கும்பலுடன் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? எவ்வளவு ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திறமையாக விசாரணை நடத்தி கள்ள நோட்டு கும்பலை பிடித்த போலீசாரை திருப்பதி எஸ்.பி. அன்புராஜன், டி.எஸ்.பி. ரவிசங்கர், ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.

    அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த வைர கற்கள் ரூ. 5.30 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். #tamilnews
    ஓமலூர் அருகே ரூ. 4 கோடியே 67 லட்சம் மோசடி செய்தது குறித்து கைதான கூட்டுறவு சங்க செயலாளர் உள்பட 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    காடையாம்பட்டி:

    ஓமலூர் அருகே குண்டுக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது.

    இந்த சங்கத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தகுதி இல்லாத விவசாயிகளுக்கு கடன் வழங்குவதாகவும், விவசாயிகள் கொடுத்த நகைகளை எடுத்து விட்டு போலி நகைகளை வைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் புகார் கூறப்பட்டது.

    இதையடுத்து அதிகாரிகள் குண்டுக்கல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் தணிக்கை செய்தனர். அப்போது கூட்டுறவு சங்கத்தில் ரூ.4 கோடியே 67 லட்சம் மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் கடன் சங்க செயலாளர் பழனிசாமி (56), உதவி செயலாளர் பெரியசாமி (54), காசாளர் ரகுமணி (52), நகை மதிப்பீட்டாளர் சேட்டு (53), உதவியாளர் பெரியதம்பி (50) ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து சேலம் வணிக குற்ற புலனாய்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் தொடர் விசாரணைக்கு பிறகு 5 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். ரூ. 4 கோடியே 67 லட்சம் மோசடி செய்ததாக 5 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களை ஓமலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
    ஜீவானந்தபுரத்தில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.2 லட்சம் மோசடி செய்து குடும்பத்துடன் தலைமறைவான பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை ஜீவானந்தபுரத்தை சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மனைவி பாஞ்சாலி. இவர்களுக்கு அய்யப்பன் என்ற மகனும், கோமதி என்ற மகளும் உள்ளனர். ஆதிமூலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் பாஞ்சாலி தீபாவளி சீட்டு பிடித்தார். மாதம் ரூ.100 வீதம் செலுத்தினால் தீபாவளி பண்டிகையின் போது பாத்திரத்துடன் இனிப்பு, தங்ககாசு, பட்டாசு போன்றவை அளிப்பதாக வாக்குறுதி அளித்தார்.

    இதனை நம்பி திருப்பூர்குமரன் நகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மனைவி குணா உள்பட அதேபகுதியை சேர்ந்த 170-க்கும் மேற்பட்டோர் தீபாவளி ஏலச்சீட்டில் சேர்ந்தனர். தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் திடீரென பாஞ்சாலி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மாயமானார். பலநாட்களாகியும் பாஞ்சாலி வீடு திரும்பாததால் தீபாவளி சீட்டு பணத்தை மோசடி செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. சுமார் ரூ. 2 லட்சம் வரை பாஞ்சாலி மோசடி செய்துள்ளார்.

    இதுகுறித்து குணா கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வங்கி அதிகாரி போல் பேசி ரகசிய எண்ணை பெற்று ரூ.1¼ லட்சம் மோசடி செய்த நபர் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை சொக்கிக்குளம் எச்.ஏ.கே. ரோட்டைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 55). இவர் அதே பகுதியில் உள்ள அரசுடமை வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார்.

    சம்பவத்தன்று இவரிடம் செல்போனில் பேசிய மர்ம நபர் தான் வங்கி அதிகாரி என்றும், உங்களுக்கு குறுந்தகவலில் வந்துள்ள ரகசிய எண்ணை சொல்லுங்கள், சரிபார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    வங்கி அதிகாரி கேட்கிறார் என்ற ஆர்வத்தில் கார்த்திகேயனும் ரகசிய எண்ணை கூறியுள்ளார்.

    சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.90 ஆயிரம் எடுக்கப்பட்டிருப்பதாக குறுந்தகவல் வந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனே வங்கி மேலாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது, வங்கியில் இருந்து யாரும் பேசவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் தனது வங்கி கணக்கை முடக் குமாறு தெரிவித்துள்ளார். ஆனால் வங்கி மேலாளர் அதை செய்யவில்லை என கூறப்படுகிறது.

    தொடர்ந்து மறுநாள் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரம் எடுக்கப்பட்டிருப்பதாக மீண்டும் குறுந்தகவல் வந்தது. இதனால் மேலும் அதிர்ச்சிக்குள்ளான கார்த்திகேயன் வங்கியை தொடர்பு கொண்டபோது, அவரது கணக்கை முடக்கம் செய்யவில்லை என தெரியவந்தது.

    இது குறித்து அவர் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் கணக்கை முடக்காமல் மேலும் மோசடிக்கு வழி வகுத்ததாக வங்கி மேலாளர் மீதும் ரகசிய எண் மூலம் பணத்தை எடுத்த மர்ம நபர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை புதுராமநாதபுரம் ரோட்டில் தனியார் கான்கிரீட் கலவை நிறுவனம் உள்ளது. இங்கு வரவு-செலவு கணக்கை ஆடிட்டர் ஆய்வு செய்த போது அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையைச் சேர்ந்த குமார் என்பவர் ரூ.20 லட்சம் மோசடி செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×