search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி"

    • திங்கட்கிழமை தீபாவளி வருவதால் தொடர்ச்சியாக 3 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
    • 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடும் என்பதால் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    அரசு பஸ்கள், ரெயில்கள், ஆம்னி பஸ்கள் மற்றும் சொந்த வாகனங்களில் சென்னையில் இருந்து சுமார் 10 லட்சம் பேர் பயணம் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தீபாவளிக்கு முந்தைய சனி, ஞாயிறு (22, 23-ந்தேதி) விடுமுறை நாட்களாகும். திங்கட்கிழமை தீபாவளி வருவதால் தொடர்ச்சியாக 3 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடும் என்பதால் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    தீபாவளிக்கு சென்றவர்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப வசதியாக 25, 26-ந்தேதிகளில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றிற்கு முன்பதிவும் நடந்து வருகிறது.

    தீபாவளிக்கு மறுநாள் 25-ந்தேதி பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி அரசு துறைகளும் செயல்படுகிறது. அதனால் விடுமுறையில் சென்றவர்கள் உடனே ஊர் திரும்ப வேண்டிய நிலை உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்படக்கூடும்.

    அதனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு மறுநாள் 25-ந்தேதி அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு அரசு சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

    அதன் அடிப்படையில் 25-ந்தேதி விடுமுறை விடலாமா? என்று அரசு பரிசீலனை செய்கிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நெரிசல் இல்லாமல் பயணம் தொடரவும் ஊர் திரும்பவும் 25-ந் தேதி விடுமுறை விடுவதற்கு வாய்ப்பு உள்ளது.

    கடந்த 2 ஆண்டுகள் தீபாவளிக்கு முந்தைய நாட்கள் விடுமுறை விடப்பட்டு தொடர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டதால் சொந்த ஊரில் இருந்து திரும்ப வசதியாக இருந்தது.

    அதுபோல இந்த ஆண்டும் விடுமுறை விடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்த விடுமுறையை நவம்பர் 12-ந்தேதி இரண்டாவது சனிக்கிழமை அன்று வேலைநாளாக அறிவிக்கலாம் எனவும் அரசு ஆலோசித்து வருகிறது.

    தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வரும் என்று அரசு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • ராமர் கோவிலுக்கு சென்று வழிபாடுகள் செய்யவும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
    • அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் 50 சதவீதம் நிறைவு பெற்று உள்ளன.

    லக்னோ:

    அயோத்தியில் தீபாவளி பண்டிகை வருகிற ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாட்கள் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக அயோத்தியில் ஞாயிற்றுக்கிழமை 17 லட்சம் தீபங்கள் ஏற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சி உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் வகையில் தீபங்கள் ஏற்றுவதற்கான இடங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

    அயோத்தியில் நடக்கும் தீபாவளி திருவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்காக அவர் வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை அயோத்தி செல்கிறார். முன்னதாக வெள்ளிக்கிழமை அவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், கேதர்நாத் தலங்களுக்கு செல்கிறார்.

    ஞாயிற்றுக்கிழமை மாலை அயோத்தியில் தீபம் ஏற்றி பிரதமர் மோடி தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபடுகிறார். சரயு நதிக்கரையில் இருந்தபடி அவர் ஆரத்தி எடுக்கப்படுவதையும், டிஜிட்டல் முறையில் பட்டாசுகள் வெடிக்கப்படுவதையும் பார்வையிட உள்ளார்.

    இதையடுத்து ராமர் கோவிலுக்கு சென்று வழிபாடுகள் செய்யவும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் 50 சதவீதம் நிறைவு பெற்று உள்ளன. இது தொடர்பாகவும் அவர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்ய உள்ளார்.

    • சேலை நெசவு செய்து தர தமிழக அரசின் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் ஆர்டர் வழங்கப்படுவது வழக்கம்.
    • தீபாவளி சேலை ஆர்டர் ரூ.1 கோடிக்கு கடந்த மாதம் ஆர்டர் வழங்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு வருடம் தோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலை நெசவு செய்து தர தமிழக அரசின் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் ஆர்டர் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தாமதமாக தீபாவளி சேலை ஆர்டர் வழங்கப்பட்டதால் அதனை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியாமல் கைத்தறி நெசவாளர்கள் திணறி வருகின்றனர்.

    இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் சொக்கப்பன் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருடம் தோறும் கணபதிபாளையம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கு சேலை நெசவு செய்து தர கோ -ஆப்டெக்ஸ் நிறுவனம் தீபாவளி பண்டிகைக்கு 3 மாதங்களுக்கு முன்பே ரூ. 4 கோடி வரை ஆர்டர் கொடுக்கும். இதனால் நாங்களும் தீபாவளிக்கு முன்பே சேலை நெசவு செய்து வழங்கிவிடுவோம். ஆனால் இந்த வருடம் தீபாவளி சேலை ஆர்டர் ரூ.1 கோடிக்கு கடந்த மாதம் ஆர்டர் வழங்கப்பட்டது. ஆர்டர் குறைவால் இந்த சங்கத்தை சேர்ந்த 450 கைத்தறி நெசவாளர்களுக்கு வருமான இழப்பு ஒரு புறம் இருந்தாலும் காலதாமதமாக கொடுத்த ஆர்டரை தீபாவளிக்குள் முடித்து தரமுடியாமல் கைத்தறி நெசவாளர்கள் திணறி வருகின்றனர்.

    ஒரு கைத்தறியில் ஒரு சேலை நெசவு செய்திட 3 முதல் 4 நாட்கள் ஆகும். இனி வரும் காலங்களில் பண்டிகை கால ஆர்டர்களை முன்கூட்டியை வழங்க வேண்டும். மேலும் கணபதிபாளையம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் அதிகபடியான கைத்தறி நெசவாளர்கள் உறுப்பினர்களாக இருப்பதால் இந்த சங்கத்திற்கு அரசு அதிக சேலை ஆர்டர் வழங்க வேண்டும் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பல்லடம் பகுதியில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
    • விசைத்தறி, பனியன், கோழி வளர்ப்பு ஆகியவை முக்கிய தொழிலாக உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் பகுதியில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். விசைத்தறி, பனியன், கோழி வளர்ப்பு ஆகியவை முக்கிய தொழிலாக உள்ளது. இந்த நிலையில், வருடம் தோறும் தீபாவளி பண்டிகை யை முன்னிட்டு சுமார் ஒரு வார காலத்திற்கு பல்லடத்தின் ஒரே கடைவீதியான என்.ஜி. ஆர். ரோடு மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள், நகைகள் என வாங்குவதற்கு மக்கள் ஆர்வமுடன் கடைவீதியில் கூடுவார்கள். வியாபாரிகளும் தங்களது கடைகள் முன்பு அலங்கார பந்தல்கள் அமைத்து, பொது மக்களை கவரும் வண்ணம் புதிய ஆடைகளை பார்வைக்கு வைத்து வியாபாரம் செய்வார்கள்.

    இந்த நிலையில் இந்த வருடம் தீபாவளி அவ்வளவு சுறுசுறுப்பாக இல்லை. விசைத்தறி தொழில், பனியன் தொழில்கள் முடங்கிப் போய் உள்ளதாக பேச்சு நிலவுகிறது. கடந்த 2 நாட்களாக திடீர் என மழை பெய்வதால், வியாபாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தீபாவளிக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், இன்னும் பல நிறுவனங்களில் போனஸ் வழங்கப்படவில்லை. எனவே கடைசி நேர விற்பனையை எதிர்பார்த்து பல்லடம் வியாபாரிகள் காத்திருக்கின்றனர்.

    • சென்னை தீவுத்திடலில் தீபாவளிக்காக 47 சிறப்பு பட்டாசு விற்பனை கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
    • பட்டாசு வாங்க வருபவர்கள் டெபிட்கார்டு, கிரெடிட்கார்டு, 'கூகுள்பே' உள்பட ஆன்லைன் மூலமும் பணம் செலுத்தலாம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பட்டாசு, புத்தாடை வாங்க கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

    இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பட்டாசு கடை அமைக்க தீயணைப்பு துறையில் அனுமதி பெற வேண்டும். இந்த ஆண்டு சென்னை மாவட்டத்தில் 800 விண்ணப்பங்கள் தீயணைப்பு துறைக்கு வந்துள்ளன.

    தனியார் இடங்களில் பட்டாசு கடை வைக்க சொத்து வரி கட்டிய ரசீது அவசியம் தேவை. அது உள்பட 30 விதிகளை பின்பற்றி பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. பட்டாசு கடைகள் அமைக்கும் இடத்திற்கு தீயணைப்பு துறையினர் நேரில் சென்று பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதா? என ஆய்வு செய்த பிறகே அனுமதி வழங்கி வருகிறார்கள்.

    சென்னை மாவட்டத்தில் நேற்று வரை 600 விண்ணப்பங்களுக்கு பட்டாசு கடை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை தீவுத்திடலில் தீபாவளிக்காக 47 சிறப்பு பட்டாசு விற்பனை கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    தீவுத்திடலில் சிவகாசியில் உள்ள 20 முன்னணி நிறுவனங்கள் "ஸ்டால்" அமைத்து உள்ளன.

    தீபாவளிக்காக 21-ந் தேதிக்குள் முன்கூட்டியே வந்து பட்டாசு வாங்க வருபவர்களுக்கு 25 சதவீத தள்ளுபடியில் பட்டாசு விற்பனை செய்யப்படும் என்று வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

    இந்த பட்டாசு விற்பனையை அமைச்சர்கள் சேகர்பாபு, மதிவேந்தன் மற்றும் விக்கிரமராஜா ஆகியோர் இன்று தொடங்கி வைக்கிறார்கள்.

    தீவுத்திடலில் சிறப்பு பட்டாசு விற்பனையை முன்னிட்டு கண்காணிப்பு கேமரா, உணவகங்கள், கார் பார்க்கிங் வசதி போன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    பட்டாசு வாங்க வருபவர்கள் டெபிட்கார்டு, கிரெடிட்கார்டு, 'கூகுள்பே' உள்பட ஆன்லைன் மூலமும் பணம் செலுத்தலாம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தீவுத்திடலில் எந்த கடையில் பட்டாசு வாங்கினாலும் ஒரே விலையில்தான் கிடைக்கும் என்றும் வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

    பட்டாசு கடை இன்று முதல் திறக்கப்பட்டு உள்ளதால் தீவுத்திடலில் தீயணைப்பு வாகனமும் தயார் நிலையில் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
    • ரேஷன் கார்டுகளுக்கும் அரிசி, சர்க்கரைக்கான பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கான பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

    பாப்ஸ்கோ நிறுவனம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு சிறப்பு அங்காடியை திறந்து மளிகை பொருட்கள் மற்றும் பட்டாசுகள் சிறப்பு தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு சுமார் ரூ.11 கோடி அளவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ரூ.12 கோடி அளவுக்கு விற்பனை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட 25 பொருட்கள் இந்த ஆண்டு மிகவும் மலிவு விலையில் கொடுக்கப்படுகிறது. இந்தத் தொகுப்பு 800 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. பட்டாசு அதன் விலையில் இருந்து 50 சதவீதத்துக்கும் மேல் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    பாப்ஸ்கோ நிறுவனத்துக்கு அரசு சார்பில் ரூ.3.5 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கான்பெட் நிறுவனம் மூலமும் மலிவு விலையில் பொருட்கள் வழங்கப்படுகிறது. பாப்ஸ்கோ, கான்பெட் நிறுவனங்கள் மூலம் பல இடங்களில் சிறப்பு அங்காடிகள் திறக்கப்பட்டிருப்பதால் மக்களுக்கு எளிமையாக பொருட்கள் கிடைப்பதுடன், விலையேற்றமும் கட்டுப்படுத்தப்படுகிறது.

    தீபாவளியையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கான பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என தெரிவித்தார்.

    • ரங்கநாதன் தெருவில் நடப்பதற்கு இடம் கூட கிடைக்காமல் மனித தலைகளாகவே காணப்படுகிறது.
    • தீபாவளி கூட்டத்தில் பொதுமக்களின் நகை, பணம் திருட்டு போகாமல் தடுக்க தி.நகர் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் பொதுமக்கள் ஆடைகள், நகைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    இதனால் சென்னையில் வணிக பகுதிகள் அனைத்துமே களைகட்டி வருகின்றன. கடைவீதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்து வருகிறார்கள்.

    சென்னையில் முக்கிய வணிக பகுதியான தி.நகரில் தீபாவளியையொட்டி ஆடைகள், நகைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்றும், இன்றும் விடுமுறை நாட்கள் என்பதால் அதிக அளவில் கூட்டம் காணப்படுகிறது.

    குறிப்பாக ரங்கநாதன் தெருவில் நடப்பதற்கு இடம் கூட கிடைக்காமல் மனித தலைகளாகவே காணப்படுகிறது. தீபாவளி கூட்டத்தில் பொதுமக்களின் நகை, பணம் திருட்டு போகாமல் தடுக்க தி.நகர் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வாகன போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தி.நகர் ரங்கநாதன் தெருவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பார்வையிட்டார். அந்த பகுதியில் நடந்து சென்றும் ஆய்வு செய்தார். மேலும் அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    தி.நகர் பகுதியில் தற்போது கண்காணிப்பு பணிக்காக முதல்முறையாக 6 எப்.ஆர்.எக்ஸ். கேமரா என்ற அதி நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் அந்த பகுதியில் திரிந்தால் அவர்களை தனியாக கண்டறிந்து அடையாளம் காண இந்த கேமரா உதவும்.

    தி.நகர், பாண்டிபஜார் உள்ளிட்ட பகுதிகளில் 300 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் கடை வீதிகளில் போலீசார் சாதாரண உடையில் கண்காணித்தும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    பொதுமக்களுக்கு உதவி செய்வதற்காக போலீஸ் உதவி மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கார்கள், ஆட்டோக்கள், தனித்தனியே செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    • டாஸ்மாக் கடைகளில் 10 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • மதுபானங்கள் குறைவாக விற்பனையாகும் மாவட்டங்களில் அதற்கான காரணங்களை கண்டறிய மண்டல மேலாளர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் கடந்தாண்டு நவம்பர் 3 மற்றும் 4-ந்தேதி 2 நாட்களில் 431.03 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகிது.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாட்களான சனிக்கிழமை 22-ந்தேதி ரூ.200 கோடி, 23-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ரூ.200 கோடி, தீபாவளி பண்டிகை அன்று ரூ.200 கோடி என்ற அளவில் மது விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்காக டாஸ்மாக் கடைகளில் 10 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை 40 சதவீதம் சாதாரண ரகம் மதுபானங்கள், 40 சதவீதம் நடுத்தர ரக மதுபானங்கள், 20 சத வீதம் உயர்தர மதுபானங்கள் என்று கடைகளில் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மதுபானங்கள் குறைவாக விற்பனையாகும் மாவட்டங்களில் அதற்கான காரணங்களை கண்டறிய மண்டல மேலாளர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் அனைத்து மதுபான கிடங்குகளில் உள்ள சரக்குகள், பதிவேடுகள் மற்றும் கோப்புகளுக்கு எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினால் எவ்வித சேதாரமும் ஏற்படா வண்ணம் உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு பாதுகாப்பான முறையில் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது

    மேலும், தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள மதுபான சில்லரை விற்பனைக் கடைகளில் இருப்பில் உள்ள மதுபான பெட்டிகள், பதிவேடுகள் மற்றும் கோப்புகளுக்கு மழை மற்றும் வெள்ள நீரால் பாதிக்கப்படாதவாறு தரையில் இருந்து உயர்த்தப்பட்டு, பாதுகாப்பான முறையில் விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வருவதால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • சென்னையில் வழக்கமாக இயக்கப்படும் 6,300 பஸ்களுடன் 4,218 சிறப்பு பஸ்களும் சேர்த்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 8 நாட்களே இருப்பதால் சொந்த ஊர் செல்லக்கூடியவர்கள் பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர்.

    பொதுமக்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய வசதியாக 16,888 சிறப்பு பஸ்கள் தமிழகம் முழுவதும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

    தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வருவதால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    சென்னையில் வழக்கமாக இயக்கப்படும் 6,300 பஸ்களுடன் 4,218 சிறப்பு பஸ்களும் சேர்த்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அரசு விரைவு பஸ்களுக்கான இருக்கை முழுவதும் நிரம்பி விட்டன. இதனால் பிற போக்குவரத்து கழக பஸ்களுக்கு தற்போது முன்பதிவு நடைபெற்று வருகிறது. இதுவரையில் 3 நாட்களுக்கும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கும் ஆயிரக்கணக்கானவர்கள் முன்பதிவு செய்து பயணத்திற்கு காத்து இருக்கின்றனர். இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகளவு முன்பதிவு நடந்து வருகிறது. மக்கள் ஆன்லைன் வழியாக விறுவிறுப்பாக முன்பதிவு செய்து வருகின்றனர்.

    வருகிற 21, 22, 23 ஆகிய நாட்களுக்கு அரசு பஸ்களில் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பஸ்களில் எல்லா இருக்கைகளும் நிரம்பி விட்டதால் மக்கள் பயணத்தை வேறு தேதிக்கு மாற்றி வருகிறார்கள். ஆம்னி பஸ்களில் மக்கள் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்ய விரும்பாததால் 20-ந்தேதி (வியாழக்கிழமை) பயணத்திற்கு முன்பதிவு செய்கின்றனர்.

    குடும்பத்தோடு ஆம்னி பஸ்களில் பயணம் செய்ய ரூ. 6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை ஆவதால் அரசு பஸ்களில் குறைவான கட்டணத்தில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். அரசு பஸ்களை நோக்கி மக்கள் வருவதை அறிந்து போக்குவரத்து கழகங்கள் ஒருநாள் முன்னதாக புறப்படும் வகையில் முன்பதிவை தொடங்கி உள்ளது.

    தீபாவளிக்கு 4 நாட்கள் முன்பே சொந்த ஊர் புறப்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. 20-ந்தேதி பயணத்திற்கு மக்கள் அதிகளவில் தற்போது முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். இதுவரையில் 20 ஆயிரம் பேர் வியாழக்கிழமை பயணத்திற்கு முன்பதிவு செய்திருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    சென்னை மற்றும் பிறநகரங்களில் இருந்து வெளியூர் செல்லும் பொதுமக்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகமாக உள்ளது. முன்பதிவு 2 மடங்கு அதிகரித்து உள்ளது. அதனால் பயணத்தை மேலும் ஒருநாள் முன்னதாக தள்ளி 20-ந்தேதிக்கு புறப்படுகிறார்கள்.

    சென்னையில் இருந்து 20-ந்தேதி செல்ல 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். பண்டிகை முடிந்து சென்னை திரும்பவும் முன்பதிவு விறுவிறுப்பாக உள்ளது. 25, 26-ந்தேதி வரை முன்பதிவு செய்யப்படுகிறது.

    விரைவு பஸ்களில் இடங்கள் நிரம்பி விட்டதால் விழுப்புரம், சேலம்,கோவை, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி போக்குவரத்து கழகத்தில் உள்ள பஸ்களுக்கு தற்போது முன்பதிவு வேகமாக நடைபெற்று வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவகாசியில் பெய்த மழை காரணமாக பட்டாசு உற்பத்தி பாதித்தது. கம்பி, மத்தாப்பூ, புஸ்வானம் போன்ற குறிப்பிட்ட பட்டாசுகள் தேவை அதிகமாக உள்ளது.
    • பசுமை பட்டாசு மட்டுமே விற்கப்படுவதால் அதன் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.

    சென்னை:

    சென்னை தீவுத்திடலில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை யொட்டி சிறப்பு பட்டாசு கடைகள் அமைக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு 55 பட்டாசு கடைகள் அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

    ஆனால் முற்றிலும் பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்பதால் அதன் உற்பத்தி குறைந்துள்ளது. அதன் காரணமாக 35 பட்டாசு கடைகள் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று நிறைவடைந்துள்ளன. ஆனால் போதுமான அளவு பட்டாசு சிவகாசியில் இருந்து வரவில்லை.

    தேவைக்கு குறைவாகவே பட்டாசு வந்துள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தீபாவளி பண்டிகைக்கு முன் 3 நாட்களில் தான் பட்டாசு விற்பனை சூடு பிடிக்கும். 40 சதவீத பட்டாசு உற்பத்தி குறைந்ததால் 30 சதவீதம் விலை உயர்ந்து இருப்பதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    பட்டாசு தயாரிக்க கூடிய மூலப்பொருட்கள் விலை மற்றும் பாக்கெட் செய்வதற்கான பொருட்கள் செலவு அதிகரிப்பால் பட்டாசு விலை உயர்ந்துள்ளது.

    இதுகுறித்து வியாபாரி புனிதன் கூறும்போது, பசுமை பட்டாசுகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் விலை உயர்வால் பட்டாசு உற்பத்தி குறைந்துள்ளது. பாதுகாப்பான பட்டாசுகளை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டிய நிலை உள்ளதால் அவற்றின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.

    சிவகாசியில் பெய்த மழை காரணமாக உற்பத்தி பாதித்தது. கம்பி, மத்தாப்பூ, புஸ்வானம் போன்ற குறிப்பிட்ட பட்டாசுகள் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் அதன் உற்பத்தி குறைவாக உள்ளன என்றார்.

    இதுகுறித்து ஜார்ஜ் டவுன் பட்டாசு விற்பனையாளர் சங்க தலைவர் அனிஸ் ராஜா கூறியதாவது:-

    சென்னைக்கு தேவையான அளவு பட்டாசை விட குறைவாகவே வந்துள்ளது. மழை பெய்யாமல் இருந்தால் மேலும் கூடுதலாக பட்டாசு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பசுமை பட்டாசு மட்டுமே விற்கப்படுவதால் அதன் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.

    அதன் காரணமாக பட்டாசு விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளது. நூற்றுக்கணக்கான புதிய ரக பட்டாசுகள் வந்துள்ளன. குழந்தைகள் பாதுகாப்பாக வெடிக்கக்கூடிய பட்டாசுகள் குவிந்துள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தீவுத்திடலில் பட்டாசு விற்பனை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

    • தீபாவளியன்று 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்
    • கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-

    உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த 4ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    மாவட்ட அளவில் உச்சநீதிமன்ற ஆணையின் படி நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சி யர்களும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடுவாரியம் மூலம் கேட்டுக் கொள்ளப் பட் டு உள்ளார்கள். சுற்றுச் சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில்கொண்டு, பொதுமக்கள் கீழ்கண்ட வற்றைக் கடைப் பிடிக்கு மாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது:-

    பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசு களை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வா கம், உள்ளாட்சி அமைப்பு களின் முன் அனுமதியுடன், பொது மக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதி களில் உள்ள நலச்சங்க ங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

    அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவ மனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். ஆகவே, பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டா டுங்கள்.

    இவ்வாறு அவர் அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.

    ×