search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீர்த்தவாரி"

    கணு உற்சவத்திருவிழாவையொட்டி நெல்லை தாமிரபரணி ஆற்றில் வரதராஜபெருமாள், வேதவல்லி தாயாருக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்தமாடினர்.
    நெல்லை சந்திப்பு மேலவீரராகவபுரத்தில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த 10-ந்தேதி கணு உற்சவத்திருவிழா தொடங்கியது. இதையொட்டி தினமும் பெருமாளுக்கும், வேதவல்லி தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. நேற்று முன்தினம் காலையில் வேதவல்லி தாயாருக்கு சிறப்பு தைலகாப்பு அபிஷேகமும் அலங்கார தீபாராதனையும் நடந்தது.

    கணுஉற்சவத்தையொட்டி நேற்று காலையில் கோவிலில் இருந்து வரதராஜபெருமாளும், வேதவல்லிதாயாரும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தாமிரபரணி ஆற்றிற்கு எழுந்தருளினர். அங்கு வரதராஜபெருமாளுக்கும், வேதவல்லிதாயாருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து மேளதாளம் முழங்க பெருமாளுக்கும், தாயாருக்கும் தாமிரபரணிஆற்றில் தீர்த்தவாரி அபிஷேகம் நடந்தது. அப்போது திரளான பக்தர்களும் ஆற்றில் தீர்த்தமாடி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் கணு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

    இதேபோல் சன்னியாசி கிராமம் நெல்லை திருப்பதி, வெங்கடாலபதி கோவிலிலும் கடந்த 10-ந்தேதி கணு உற்சவ திருவிழா தொடங்கியது. இதையொட்டி தினமும் பெருமாளுக்கும், தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. நேற்று மதியம் கோவிலில் இருந்து பெருமாளும், தாயாரும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தாமிரபரணி ஆற்றிற்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு தீர்த்தவாரி நடந்தது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் நேற்று தீர்த்தவாரி கண்டருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ராப்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி காலையில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு பரமபதவாசல் வழியாக சந்திரபுஷ்கரணி குளத்திற்கு சயனப்பெருமாளுடன் வந்தார். அங்கு நம்பெருமாளுக்கு பதிலாக சயனப்பெருமாள் குளத்தில் புனித நீராடினார்். நம்பெருமாள் கரையில் நின்றவாறு சயனபெருமாள் தீர்த்தவாரியை (நீராடுவதை) கண்டருளினார்.

    இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் சந்திரபுஷ்கரணியில் உள்ள நீர் தீர்த்தமாக அனைத்து பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது. தீர்த்தவாரிக்கு பின் சயனப்பெருமாள் பரமபதவாசல் வழியாக மூலஸ்தானம் சென்றடைந்தார். நம்பெருமாள் அங்கிருந்து ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்திற்கு மதியம் சென்றடைந்தார். அங்கு மாலை வரை பொதுஜன சேவை நடைபெற்றது.

    பின்னர் இரவு வரை பொது ஜனசேவையுடன் நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுளினார். இதையடுத்து இரவு 11 மணி முதல் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணி வரை அரையர் சேவையுடன் திருப்பாவாடை கோஷ்டி நடைபெற்றது. இன்று அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை பொதுஜன சேவையும், காலை 6 மணி முதல் 7 மணி வரை நம்மாழ்வார் மோட்சம் நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் 9 மணிவரை உபயக்காரர் மரியாதையுடன், பொதுஜன சேவை நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு படிப்பு கண்டருளி, ஆழ்வார், ஆச்சார்யர் மரியாதையாகி காலை 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை இயற்பா பிரபந்தம் தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணி முதல் நாளை(சனிக்கிழமை) அதிகாலை 2 மணி வரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெறுகிறது. அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருவாராதனம் வகையறாவும், அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை சாற்றுமறையும் நடைபெறுகிறது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது. 
    திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீராடினர்.
    திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை மாத பிரமோற்சவ விழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடந்தது.

    8-வது நாளான நேற்றிரவு குதிரை வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது. இன்று காலை கோவில் அருகேயுள்ள பஞ்சமி தீர்த்த தெப்பகுளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.

    இதற்காக திருமலை ஏழுமலையான் கோவிலில் இருந்து மஞ்சள், குங்குமம் மற்றும் பூஜை பொருட்கள் கொண்டு வரப்பட்டது. சக்கரத்தாழ்வார் தீர்த்த வாரியை கான நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    அவர்கள் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி முடிந்ததும் கோவில் தெப்பக்குளத்தில் புனித நீராடினர்.

    கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தவும், குற்ற சம்பவங்கள் தடுக்கவும் திருப்பதி எஸ்.பி.அன்புராஜன் தலைமையில் 3 கூடுதல் கண்காணிப்பாளர்கள், 15 டி.எஸ்.பி.க்கள், 55 இன்ஸ்பெக்டர்கள் என 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    கும்பகோணம், நாகேஸ்வரன் கோவிலில் ஐப்பசி மாத கடைமுழுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. காவிரியில் திரளான பக்தர்கள் புனித நீராடினார்கள்.
    ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30-ந் தேதி காவிரி ஆற்றில் பஞ்சமூர்த்தி சுவாமிகள் எழுந்தருளி தீர்த்தவாரி கொடுப்பது வழக்கம். மயிலாடுதுறை துலா கட்டம், கும்பகோணம் பகவத் படித்துறை, ராமேஸ்வரம் தீர்த்த கட்டம் ஆகிய 3 இடங்களில் நடைபெறும் இத்தகைய கடைமுழுக்கு தீர்த்தவாரி புகழ்பெற்றது. சிறப்பு பெற்ற ஐப்பசி மாத கடைமுழுக்கு தீர்த்தவாரி நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி நாகேஸ்வரன் கோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், பெரியநாயகி அம்மன், நாகேஸ்வர சாமி, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.

    பின்னர் பகல் 12 மணிக்கு காவிரி ஆற்றின் பகவத் படித்துறையில் அஸ்திர தேவருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காவிரி ஆற்றில் புனித நீராடினர்.

    இதை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி மண்டபத்தில் வைக்கப்பட்டு, இரவு மின்னொளி அலங்காரத்தில் வீதிஉலாவாக வந்து கோவிலை சென்றடைந்தது. 
    மயிலாடுதுறையில் துலா உற்சவத்தையொட்டி அமாவாசை தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரியில் புனித நீராடினர்.
    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் ஐப்பசி துலா உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான துலா உற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் அபயாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும் கோவிலில் உள்ள கொடிமரத்துக்கு தர்ப்பை புல் மற்றும் பட்டு அணிவிக்கப்பட்டு ரிஷப கொடிக்கு தீபாராதனை நடைபெற்றது.

    இதைப்போல மயிலாடுதுறையில் உள்ள ஐயாரப்பர் கோவில், வள்ளலார் கோவில், காவிவிஸ்வநாதர் கோவில், ஆகிய கோவில்களிலும் துலா உற்சவத்தையொட்டி கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் மயூரநாதர்- அபயாம்பிகை, வதாண்யேஸ்வரர்-ஞானாம்பிகை, ஐயாறப்பர்- அறம் வளர்த்த நாயகி, காசிவிஸ்வநாதர் - விசாலாட்சி ஆகிய சாமிகள் ரிஷப வாகனத்தில் புறப்பட்டு காவிரி துலா கட்டத்தை அடைந்தனர்.

    தொடர்ந்து துலா கட்டத்தின் வடகரை, தென்கரை பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட அஸ்திரதேவருக்கு காவிரி ஆற்றில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் அமாவாசை தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது அஸ்திரதேவர் காவிரி ஆற்றில் மூழ்கி ஆறாட்டு நடைபெற்ற போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவ சிவ என்ற சரண கோஷத்துடன் காவிரியில் புனித நீராடினர். இதில் தருமபுரம் ஆதீனம் இளையசன்னிதானம் மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த சுவாமிகள், திருவாவடுதுறை அம்பலவாண கட்டளை தம்பிரான் சுவாமிகள், ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினர்.
    தாமிரபரணி ஆற்றுக்கு மகா புஷ்கர விழா தொடங்கியது. மகா புஷ்கர விழாவையொட்டி, நெல்லை ஜடாயு படித்துறையில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடந்தது.
    தாமிரபரணி ஆற்றுக்கு மகா புஷ்கர விழா நேற்று தொடங்கியது. இந்த விழா வருகிற 23-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி தாமிரபரணி ஆற்றங்கரையில் பல்வேறு இடங்களில் உள்ள படித்துறைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    நெல்லை பகுதியில் கைலாசபுரம் தைப்பூச மண்டபம், குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறை, வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் படித்துறை, சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவில் தீர்த்தக்கட்ட படித்துறை, மேலநத்தம் அழியாபதீசுவரர் கோவில் படித்துறை, ராஜவல்லிபுரம் செப்பறை கோவில் படித்துறை, பாலாமடை படித்துறை உள்ளிட்ட படித்துறைகளில் நேற்று காலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் தமிழகம், ஆந்திரா மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள், சாமியார்கள் புனித நீராடி வழிபட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சென்றனர்.

    நெல்லை அருகன்குளத்தில் ஜடாயு துறையில் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை சார்பில் தாமிரபரணி ஆற்றங்கரையில் 144 அடி நீளத்துக்கும், 16 அடி அகலத்துக்கும் கருங்கற்களால் புதிய படித்துறை கட்டப்பட்டு உள்ளது. நேற்று காலை அந்த படித்துறைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தேனி ஓம்காரனந்தா சுவாமி சிறப்பு பூஜை நடத்தி புனிதநீர் ஊற்றினார்.

    எட்டெழுத்து பெருமாள் தருமபதி அறக்கட்டளை நிர்வாகி ராமலட்சுமி தேவி புதிய படித்துறையை மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் அங்கு வரதராஜ பெருமாள் சுவாமி தலைமையில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடத்தப்பட்டது. அங்கு வெற்றிலையில் கற்பூர ஜோதி ஏற்றி பெண்கள் ஆற்றில் விட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் இந்த படித்துறையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆரத்தி பூஜையை தொடங்கி வைத்தார்.

    நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டபத்தில் தாமிரபரணி மகா புஷ்கர விழாவுக்கான கால்கோள் விழா நடைபெற்றது. இதையொட்டி கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அங்கிருந்து மேளதாளம், வேதமந்திரங்கள் முழங்க கொடிமரம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தைப்பூச மண்டபத்தின் முன்பு சிறப்பு பூஜை நடத்தி கால் நாட்டப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில், பெருங்குளம் செங்கோல் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம், லட்சுமணன் எம்.எல்.ஏ., அமைப்பாளர்கள் உஷா ராமன், நிர்மலா ராமரத்தினம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
    திருப்பதி பிரமோற்சவ விழாவின் நிறைவு நாளான இன்று காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தினமும் ஏழுமலையான் மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. சக்கரத்தாழ்வாருக்கு வராகசாமி கோவில் முன்பாக வைத்து திருமஞ்சனம் நடைபெற்றது.

    இதையடுத்து மாடவீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்ட சக்கரத் தாழ்வார் தெப்பகுளத்தில் வேதவிற்பண்ணர்கள் வேத மந்திரங்கள் ஓத தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரியை காண லட்சகணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தெப்பகுளத்தின் அருகில் காத்திருந்தனர்.

    சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி முடிந்தவுடன் அனைத்து பக்தர்களும் தெப்பகுளத்தில் நீராடினர்.

    சக்கர ஸ்நானத்தை தொடர்ந்து மாலை ஊஞ்சல் சேவை நடைபெறும். இதனைத் தொடர்ந்து இரவு பிரம்மோற்சவத்திற்கான கொடி இறக்கும் நிகழச்சி நடைபெறும். இத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.

    அடுத்த மாதம் 10-ந் தேதி, நவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்கி, 18-ந்தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற உள்ளது.
    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் விநாயகர் சதுர்த்தி விழாவில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான விழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி தினந்தோறும் இரவு சுவாமி பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து கடந்த 9-ந் தேதி மாலை கஜமுஹாசுர சம்ஹாரமும், 12-ந்தேதி மாலை தேரோட்டமும் நடைபெற்றது. தேரோட்டம் அன்று மாலை மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று காலை 10 மணிக்கு உற்சவர் தங்க மூஷிக வாகனத்தில் திருக்குளக்கரை எதிரே எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து திருக்குளத்தில் அங்குச தேவருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் பிச்சைக்குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்களின் வேதமந்திரங்கள் முழங்க பூக்களால் அலங்கரிக்கப்பட்டு 3 முறை குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவ விநாயகர் தங்க மூஷிக வாகனத்தில் திருவீதி உலா வந்தார். பின்னர் மதியம் 1.30 மணிக்கு மூலவர் கற்பக விநாயகருக்கு முக்குறுணி மெகா கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டது. தொடர்ந்து இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகளின் திருவீதி உலா நடைபெற்றது.

    விழாவையொட்டி காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பிள்ளையார்பட்டிக்கு சிறப்பு பஸ்கள் விடப்பட்டன. மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. அன்னதானம் நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி நம்பெருமாள் நேற்று தீர்த்தவாரி கண்டருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி-புரட்டாசி மாதத்தில் பவித்ர உற்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான பவித்ர உற்சவம் கடந்த 22-ந் தேதி தொடங்கி நேற்று (30-ந்தேதி) வரை நடைபெற்றது.

    இந்த உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்தின் மேல்புறம் உள்ள பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பவித்ர உற்சவத்தின் 7-ம் நாளான கடந்த 28-ந்தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் கோவில் திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். பின் தாயார் சன்னதியில் திருவந்திகாப்பு கண்டருளி இரவு 9 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    விழாவின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு சந்திரபுஷ்கரணி குளத்திற்கு சயனப்பெருமாளுடன் வந்து சேர்ந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    பின்னர் சந்திரபுஷ்கரணியில் காலை 9.30 மணியளவில் நம்பெருமாளுக்கு பதிலாக சயனப்பெருமாளை புனித நீராட வைத்தனர். நம்பெருமாள் கரையில் நின்றவாறு சயனபெருமாள் நீராடுவதை கண்டருளினார். இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் இருந்து புறப்பட்டு பவித்ர உற்சவ மண்டபத்திற்கு காலை 10 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு பகல் 1 மணி முதல் 3 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் மதியம் 3.30 மணி முதல் இரவு 7.45 மணி வரை பொதுஜனசேவை நடைபெற்றது. பவித்ர உற்சவ மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணைஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள், அர்ச்சக பட்டர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர். 
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் நிறைவையொட்டி அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு வாய்ந்த ஆனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 7-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியாக அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். கொடியேற்றம் நடந்த அன்று அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன் மற்றும் பராசக்தி அம்மன் வீதி உலா நடந்தது.

    அதன்பின் தினமும் காலையும், மாலையும் சந்திரசேகர் மற்றும் விநாயகர் வீதி உலா நடந்தது. இந்த நிலையில் ஆனி பிரம்மோற்சவ நிறைவு நாளான நேற்று காலை மாட வீதியில் சந்திரசேகர் வீதியுலா நடந்தது.


    சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் அம்மனுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பதை படத்தில் காணலாம்.

    இதையடுத்து அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அய்யங்குளம் முன்பு உள்ள மண்டபத்தில் சந்திரசேகரர் அம்பாளுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதனை நேரில் கண்டு தரிசனம் செய்வதற்காக அய்யங்குளத்தை சுற்றி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இதனை தொடர்ந்து சந்திரசேகரருக்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை நடத்தினர். பின்னர் சிவாச்சாரியார்கள் சாமியிடம் இருந்து சூலத்தை எடுத்து சென்று அய்யங்குளத்தில் தீர்த்த வாரி நிகழ்ச்சி நடத்தினர். அதன் பின் சிவாச்சாரியார்கள் சூலத்தை சாமியிடம் வைத்தனர். தொடர்ந்து அய்யங்குளம் எதிரே உள்ள அருணகிரிநாதர் கோவிலில் சந்திரசேகரருக்கு சிறப்பு பூஜை நடந்தது. அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. மாலையில் கோவில் ஆனி பிரம்மோற்சவ கொடியிறக்கம் நிகழ்ச்சி நடந்தது.
    தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆனித் திருவிழாவின் நிறைவாக தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலும் ஒன்றாகும்.

    இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஆனி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டு ஆனித்திருவிழா கடந்த 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா சென்றனர். கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கில் தினமும் இரவு பக்தி இசை நிகழ்ச்சிகள் நடந்தன.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது.


    நெல்லையப்பர் கோவிலில் சுவாமி - அம்பாளுக்கு அபிஷேகம் நடந்த போது எடுத்த படம்.

    இதையொட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது.

    இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டனர்.

    சுவாமி- அம்பாள், விநாயகர், சுப்பிரமணியன், சண்டிகேசுவரர் ஆகிய 5 தேர்களும் இழுத்து ஒரே நாளில் நிலைக்கு கொண்டு வரப்பட்டன.

    இதையடுத்து நேற்று விழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சி நடந்தது.

    அதாவது விழாவின் 10-வது நாளையொட்டி காலையில் சுவாமி, அம்பாள் சப்பர வீதிஉலா நடந்தது. மதியம் அம்பாள் சன்னதி அருகில் பொற்றாமரைக்குளம் கரையில் சுவாமி, அம்பாள் எழுந்தருளினர்.

    அங்கு சுவாமி, அம்பாளுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடந்தன. பின்னர் அஸ்திர தேவர், அஸ்திரதேவி ஆகிய சுவாமிகளுக்கு பொற்றாமரை குளத்துக்குள் தீர்த்தவாரி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். 
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவில் அம்மனுக்கு வைகையாற்றில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 21-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தினசரி அம்மன் புறப்பாடு நடந்தது. 9-ம் நாள் பால்குடம், அக்னிசட்டி, பூப்பல்லக்கும், 10-வதுநாள் பூக்குழி விழாவும், 16-ம்நாள் தேரோட்டம் நடைபெற்றது.

    நிறைவு நாளான நேற்றைய முன்தினம் மாலை 4.30 மணியளவில் திருவிழா கொடி இறக்கப்பட்டு மஞ்சள் நீராடுதல் நடந்தது. அம்மன் கேடயத்தில் எழுந்தருளி வைகை ஆற்றுக்குச் சென்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம் தொடங்கி அம்மனுக்கு வண்ண வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சள்ஆடும் நிகழ்ச்சி விடிய விடிய நடந்தது.

    இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் வைகையாற்றிலிருந்து அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதியில் பவனி வந்து கோவிலை வந்தடைந்தார். 
    ×