search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனிமொழி"

    பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழிக்கும், தமிழிசைக்கும் இடையேயான ஒற்றுமைகள் பற்றி பார்க்கலாம். #LSPolls #Kanimozhi #TamilisaiSoundararajan
    பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதி நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இங்கு தி.மு.க. கூட்டணி வேட்பாளராக தி.மு.க.வின் மாநில மகளிரணி செயலாளரான கனிமொழி எம்.பி.யும், அ.தி.மு.க. கூட்டணி சார்பாக பா.ஜ.க. மாநில தலைவரான தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிடுவது தான் இதற்குக் காரணம்.

    எதிரெதிர் துருவங்களான இந்த இரு வேட்பாளர்களும் இங்கு களத்தில் இறங்கினாலும் இவர்கள் இருவருக்குமிடையே சில ஒற்றுமைகளும் உள்ளன. பெண் வேட்பாளர்களான இருவரின் பெயர்களும் தமிழின் சிறப்பை உணர்த்தும் பெயர்களாகும். அத்துடன் இவ்விருவரும் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்கள். இருவருமே பிரபல அரசியல்வாதிகளின் வாரிசுகள் என்பது குறிப்பிடத்தக்கது.



    கனிமொழியின் தந்தையான தி.மு.க.வின் முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி, முத்தமிழறிஞர் என்று போற்றப்பட்டவர். தமிழிசையின் தந்தையான தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன், இலக்கியச் செல்வர் என்று போற்றப்படுபவர்.

    தென் தமிழகத்தின் கடைக்கோடியான தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி, தமிழிசை ஆகிய இருவரும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வசித்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #LSPolls #Kanimozhi #TamilisaiSoundararajan
    துன்பப்படும் மக்களின் துயர் துடைக்க கனிமொழியை வெற்றி பெற செய்யுங்கள்“ என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ பேசினார். #Vaiko #kanimozhi #LSPolls
    தூத்துக்குடி :

    தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தி.மு.க. வேட்பாளராக கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று இரவு நடந்தது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-

    தமிழர் உரிமைக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த கலைஞரின் மகள், இன்றைய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர். நாளைய தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். இவர் அன்பும், பரிவும், கனிவும், பாசமும், மனிதாபிமானமும் கொண்ட அணுகுமுறையால், சாதி, மதம், கட்சி கடந்து ஒடுக்கப்பட்டவர்களுக்காக, மீனவர்களுக்காக, விவசாயிகளுக்காக, வேலையில்லா திண்டாட்டத்தால் வாடி வதங்கும் இளைஞர்களுக்காக மாநிலங்களவையில் குரல் கொடுத்து உள்ளார்.



    பாசிசமா, ஜனநாயகமா என்பதற்காகத்தான் இந்த தேர்தல். ஜனநாயகம் வெற்றி பெற வேண்டும். 40 தொகுதிகளிலும் வெற்றியை தாருங் கள். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் எங்கள் தங்கை கனிமொழி என்ற நிலையை உருவாக்க வேண்டும். கட்சி பார்க்காமல், சாதி பார்க்காமல், துன்பப்படும் மக்களின் துயர் துடைக்க, இந்த தொகுதிக்கு என்ன தேவை என்று திட்டமிட்டு செயலாற்றக்கூடிய கனிமொழியை வெற்றி பெறச் செய்யுங்கள். உங்கள் வாக்குகளை திரட்டுங்கள். சிந்தப்பட்ட ரத்தத்துக்காக, நீதிக்காக வாக்குகளை திரட்டுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, ஆத்தூர், முக்காணி உள்ளிட்ட பகுதிகளில் வைகோ திறந்த வேனில் சென்று கனிமொழி எம்.பி.க்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். #Vaiko #kanimozhi #LSPolls
    நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று அ.தி.மு.க.வினர் மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்று கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார். #LSPolls #DMK #Kanimozhi

    சாயல்குடி:

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கனிமொழி எம்.பி. சாயல்குடி, கமுதி பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

    பா.ஜ.க. அரசு தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது. மத்திய அரசின் பினாமியாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக மக்களின் நலன் கருதாமல் ஆட்சி தொடர வேண்டும் என்பது அவர்களின் நோக்கமாக உள்ளது.

    இந்த பாரளுமன்ற தேர்தல் இந்திய ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாக உள்ளது. மருத்துவ கல்லூரிகளில் தமிழக மாணவ-மாணவிகள் படிக்க முடியாத அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

    நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துக்கொண்டு அதிகாரத்தில் உள்ளவர்களும் கூட்டணி அமைத்துக்கொண்டு நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.


    வளர்ச்சி, வளர்ச்சி என்று சொல்லி ஆட்சி செய்த மோடி எந்தவிதமான முன்னேற்றத்தையும் கொண்டு வரவில்லை. 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்போம் என்று கூறிய பா.ஜ.க. ஆட்சியில் தான் இளைஞர்களுக்கு வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

    விவசாயிகள் தாங்கள் வாங்கிய கடன்களை கட்ட முடியாமல் ஆண்டுக்கு சராசரியாக 21,000 பேர் தற்கொலை செய்து வருகின்றனர்.

    தூத்துக்குடி வேதாந்த நிறுவனத்திற்கு ஒரு லட்சத்து மூவாயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டம் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. கியாஸ் மானியம் வழங்குவேன் என்று கூறிய மோடி, ஆட்சிக்கு வரும் போது சிலிண்டர் விலை 300 ரூபாயாக இருந்தது. தற்போது அதன் விலை ரூ.1,000.

    பாஜக மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால் நம் நாட்டை காப்பாற்ற முடியாது. ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் முகம் தான் பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடி. தி.மு.க. கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற வாக்களியுங்கள்.

    மேற்கண்டவாறு அவர் பேசினார்.  #LSPolls #DMK #Kanimozhi

    தூத்துக்குடி மாவட்டத்தை கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் முதன்மை மாவட்டமாக மாற்ற பாடுபடுவேன் என்று கனிமொழி பிரசாரம் செய்தார். #LSPolls #DMK #Kanimozhi
    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி., இன்று திருச்செந்தூர் வட்டார பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருச்செந்தூர் கீழரதவீதி தேரடி அருகில் ஓட்டுவேட்டையை தொடங்கிய அவர் தொடர்ந்து பரமன்குறிச்சி பஜார், அய்யனார்நகர், பரமன்குறிச்சி கஸ்பா, வெள்ளாளன்விளை, வட்டன்விளை, குருநாதபுரம், சிறுடையார்புரம், வீரப்ப நாடார் குடியிருப்பு, கரிசன் விளை ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் சென்று வாக்கு சேகரித்தார்.

    அப்போது பொதுமக்கள் மத்தியில் கனிமொழி பேசியதாவது:-

    ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பை மத்திய அரசு அறிவித்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் திண்டாடும் நிலைக்கு ஆளாகி உள்ளனர். எனவே நாடு முன்னேற்றம் அடைய மத்தியில் ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமையவேண்டும்.



    தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. அ.தி.மு.க. அரசால் மாவட்டத்தில் எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தை கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் முதன்மை மாவட்டமாக மாற்றவேண்டும். அதற்கு என்னுடைய பங்கும் இருக்கவேண்டும். எனவே எனக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அவர் மெஞ்ஞானபுரம், அணைத்தலை, பூலிக்குடியிருப்பு, நங்கை மொழி, செட்டியப்பத்து, தேரியூர், வேப்பங்காடு அடைக்கலாபுரம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். மதியம் லங்கநாதபுரத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தார். வேட்பாளர் கனிமொழியுடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. உள்பட பலர் சென்றிருந்தனர். #LSPolls #DMK #Kanimozhi
    விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் தேர்தல் பிரசாரத்தின் போது கனிமொழிக்கு வாக்கு கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #ADMK #Kanimozhi
    விளாத்திகுளம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெறுகிறது. அதனுடன் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்கிறது. இதற்கான மனுதாக்கல் கடந்த 19-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியும் ஒன்றாகும். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன், தி.மு.க. சார்பில் ஜெயக்குமார் போட்டியிடுகிறார்கள். அவர்கள் தங்களது தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன் நேற்று விளாத்திகுளம் பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பிருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அங்கு அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.

    அவர்கள் மத்தியில் சின்னப்பன் பேசும் போது, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் தமிழிசைக்கு வாக்களியுங்கள் என கூறுவதற்கு பதிலாக கனிமொழிக்கு ஓட்டு போடுங்கள் என பேசினார்.


    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு திரண்டு நின்ற கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. இதையடுத்து கூட்டத்தில் நின்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் தமிழிசை பெயரை சொல்லுமாறு கூறினர். இதை கேட்ட வேட்பாளர் சின்னப்பன் பின்பு சுதாரித்துக்கொண்டு தமிழிசைக்கு வாக்களியுங்கள் என கூறினார். இதன் காரணமாக பிரசார கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு உண்டானது.  #ADMK #Kanimozhi
    தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து 22-ந்தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார். #LSPolls #Kanimozhi #Vaiko
    சென்னை:

    தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்திலும், புதுவையிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றிபெறும். இந்திய அரசியலில் இந்த தேர்தல் திருப்புமுனையாக அமையும்.

    முல்லைபெரியாறு, காவிரி நதிநீர் விவகாரத்திலும், மேகதாதுவில் அணை கட்டுவதற்கான அனுமதி அளித்ததிலும் மோடி அரசு தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இந்துத்துவா சக்திகளின் பிரதிநிதித்துவமாக இருக்கும் பா.ஜனதா தலைமையிலான அணி வெற்றிபெறாது. வெற்றிபெறக்கூடாது.

    ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாராளுமன்ற மாநிலங்களவையில் குரல் கொடுத்து தி.மு.க.வுக்கு பெருமை சேர்த்த கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அவர் நிச்சயமாக வெற்றி பெறுவார்.

    நான் எனது பிரசாரத்தை 22-ந்தேதி தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் இருந்துதான் தொடங்குகிறேன். ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர், தூத்துக்குடி, குறுக்குச்சாலை, குளத்தூர், விளாத்திகுளம் என்று முதல் நாள் பிரசாரத்தை மாலை 4 மணிக்கு தொடங்கி முடித்து மறுநாள் மாலை 4 மணிக்கு தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவில்பட்டியில் பிரசாரத்தை தொடங்குகிறேன்.


    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் திருவாரூரில் பிரசாரத்தை தொடங்குகிறார். தமிழகம் எங்கும் அவருடைய பிரசார பயணம் மகத்தான வெற்றியை இந்த அணிக்கு குவிக்க இருக்கிறது. நானும் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய விரும்புகிறேன். அதைத்தான் மு.க. ஸ்டாலினும் விரும்பினார்.

    எங்களது தேர்தல் அறிக்கை 20-ந்தேதி வெளியிடப்படும். 22-ந்தேதி முதல் ஏப்ரல் 16-ந்தேதி மாலை 4 மணி வரை என்னுடைய பிரசாரம் நடைபெறும். என்மீது பாசமும், பரிவும் கொண்ட அன்புத்தங்கை கனிமொழி மாபெரும் வெற்றிபெற்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்றத்தில் அவரது குரல் ஒலிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் கனிமொழி எம்.பி. கூறியதாவது:-

    கேள்வி:- தூத்துக்குடி தொகுதியில் உங்களை எதிர்த்து மு.க.அழகிரி மகன் போட்டியிடப் போவதாக சமூக வலைதளங்களில் செய்தி வருகிறதே?

    பதில்:- இது உங்களின் கற்பனையாகவும், ஆசையாகவும் இருக்கலாம். எனக்கு தெரிந்து அது உண்மை இல்லை.

    கே:- தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் வாரிசுகளுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?

    ப:- தி.மு.க. இயக்கத்தில் இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு தான் வாய்ப்பு அளிக்கப்படுகிறதே தவிர வெளியில் இருந்து யாரையும் கொண்டுவந்து வாய்ப்பு வழங்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #Kanimozhi #Vaiko
    தூத்துக்குடி தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் தமிழிசை போட்டியிட்டால் சந்திக்க தயார் என்று திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். #DMK #Kanimozhi #TamilisaiSoundararajan
    சென்னை:

    தி.மு.க. எம்.பி.யும், தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளருமான கனிமொழி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தக் கூடிய மிக மோசமான சூழ்நிலையை நாம் சந்தித்து இருக்கிறோம். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி.யால் தூத்துக்குடியில் சிறு தொழில்கள், வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    அங்கு பெண்களும், இளைஞர்களும் வேலை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கு புதிய தொழில் முயற்சிகளுக்கு சாத்தியம் உள்ளது. விவசாயிகளுக்கு உதவி செய்யக்கூடிய வழிவகைகள் இருந்தும் அது செயல்படுத்தப்படவில்லை.

    கிராமப்புற மக்களுக்கு பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் கூட செய்து தரவில்லை. எனவே அங்கு பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நான் நம்புகிறேன்.

    கேள்வி:- கலைஞர் இல்லாமல் முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறீர்களே?

    பதில்:- கலைஞர் இல்லை என்பது எல்லோருக்குமே பாதிப்புதான். தனிப்பட்ட முறையில் தந்தை என்கிற வகையில் எனக்கு பெரிய வலியையும், வருத்தத்தையும உருவாக்கி உள்ளது. ஆனால் மு.க.ஸ்டாலின் அந்த இடத்தை நிரப்பக்கூடிய தலைவராக கடினமாக உழைக்கக்கூடிய தலைவராக எனக்கு வழிகாட்டக்கூடிய தலைவராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.



    கே:- தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடப் போவதாக கூறப்படுகிறதே?

    ப:- இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. பா.ஜனதா என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. யாராக இருந்தாலும் தேர்தல் களத்தில் சந்திக்கலாம்.

    கே:- தமிழிசை போட்டியிட்டால் போட்டி கடுமையாக இருக்குமா?

    ப:- பார்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #Kanimozhi #TamilisaiSoundararajan
    பாராளுமன்ற தேர்தலுக்கு பின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கூறினார். #ParliamentElection #Kanimozhi
    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் ஒன்றியத்தில் தி.மு.க. சார்பில் நடந்த ஊராட்சி சபை கூட்டங்களில் மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டார். வல்லநாட்டில் நடந்த ஊராட்சிசபை கூட்டத்தில் கனிமொழி எம்பி. பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

    அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தல் நடத்த பயந்து வருகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தாலே போதும் குடிதண்ணீர் பிரச்சனை தீர்ந்து விடும். மேலும் தூத்துக்குடி செல்லும் அனைத்து பேருந்துகளும் வல்லநாட்டில் நின்று செல்ல தி.மு.க. ஆட்சி வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஊரில் மாணவன் ஒருவன் ஆண்கள் பயன்படுத்த பள்ளியில் கழிவறை இல்லை என பேசியுள்ளார். உண்மையிலேயே இது யோசிக்க வேண்டியது. அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். பொங்கல் விளையாட்டு விளையாட திடல் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.



    மேலும் தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. மத்தியில் ஆளும் பி.ஜே.பி.க்கு காவடி தூக்கி வருகிறது. நீட் பிரச்சனையாக இருந்தாலும் சரி, ஸ்டெர்லைட் பிரச்சனையாக இருந்தாலும் சரி இதற்கெல்லாம் காரணம் அ.தி.மு.க. தான். அவர்களை மன்னிக்கவே கூடாது. 3 இடத்திற்கு இடைத்தேர்தல் வரவில்லை என்றாலும் கூட மற்ற சட்டமன்றத்திற்கு தேர்தல் வருகின்றது. வருகின்ற தேர்தலில் நிச்சயமாக ஆட்சி மாற்றம் வரும். அப்போது தமிழக பிரச்சனை அனைத்தும் தீரும். கன்னியாகுமரியில் ராகுல் பேசியது போலவே எங்கள் கூட்டணி ஆட்சி வந்தவுடன் ஜி.எஸ்.டி பிரச்சனையும் தீரும்.

    இவ்வாறு அவர் பேசினார். #ParliamentElection #Kanimozhi


    கமல்ஹாசனுக்கு நாங்கள் பதில் சொல்வது வீணான வேலை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். #MinisterKadamburRaju #KamalHaasan
    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

    பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக கொண்டாடப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட மெரினா கடற்கரையில் ரூ.50.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவாலயம் கட்டப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

    அடுத்த ஆண்டு நினைவு நாள் வருவதற்குள் இந்தியாவிலேயே எந்த தலைவருக்கும் இல்லாத ஒரு நினைவாலயமாக உருவாக்கப்படும். அதே போல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை ரூ.20 கோடி செலவில் நினைவு இல்லமாக மாற்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

    கோவில்பட்டியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் பிரிவுக்கு கூடுதல் கட்டடம் கட்ட ரூ.15 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்ட உடன், கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டப்படும்.

    ஒரு அரசியல் தலைவருக்கான இலக்கணம் கமலுக்கு இல்லை. எதை சொன்னாலும் பொத்தாம் பொதுவாக படத்தில் வேண்டுமென்றால் வசனம் பேசலாம். எந்த மாண்பு குறைந்து விட்டது, யாருடைய மாண்பு குறைந்து விட்டது என்று அவர் சொன்னால் பதில் அளிக்கலாம். ஆனால், அவருக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்வது வீணான வேலை. அவருக்கு அரசியல் அரிச்சுவடியே தெரியாமல், ஆழம் தெரியாமல் காலை விட்டுக்கொண்டு முழித்துக் கொண்டிருக்கிறார்.

    மாண்பு போய் விட்டது என்று சொன்னால், ஒரே இடத்தில் பத்திரிகையாளர்களை வைத்துக்கொண்டு சந்திக்க தயார். அவர் தயாரா?. அவரது மாண்பு, மரியாதை, மானம் வேண்டுமானால் போகலாம். இன்று அரசியலுக்கு வந்த பின்னர் அதனை தக்க வைத்துக்கொள்ள அவருக்கு தெரியவில்லை. இதுவரை பேசிய எதையும் நிரூபிக்க தவறிய கமல்ஹாசன் மக்களால் நிராகரிக்கப்படுவார். அரசியலில் மட்டுமல்ல பொதுவாழ்வில் இருந்தும் அவர் காணாமல் போவார்.



    எங்கள் கூட்டணியை பற்றி தி.மு.க.வுக்கு என்ன கவலை. கனிமொழி 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் சிக்கிய நேரத்தில், பழத்தை சாப்பிட்டவர் ஒருவர், அதனை பார்த்துக் கொண்டிருந்தவர் மீது வழக்கா என அப்போதைய தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்தார். காங்கிரஸ்காரர்களுக்கு அதில் தொடர்பு உண்டு என மறைமுகமாக சொன்னதோடு மட்டுமில்லாமல் அவர்களெல்லாம் வழக்கில் சேர்க்கப்படாமல் கனிமொழி, ராசாவை மட்டும் சேர்த்ததற்காக கூடா நட்பு கேடாய் முடியும் எனவும் தெரிவித்தார்.

    எங்கள் கூட்டணியை பார்த்து நாங்கள் கூறவில்லை. 2ஜி ஸ்பெக்டரம் வழக்கு வந்த உடனே நாங்கள் தெரியாமல் அவர்களுடன் கூட்டணி சேர்ந்துவிட்டோம். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை நாங்கள் அனுபவிக்கிறோம் என காங்கிரசை சொன்னார். அந்த காங்கிரசுடன் இன்று கூட்டணி வைத்துள்ளனர். யார் முரண்பாடான கூட்டணி வைத்துள்ளனர் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.

    இது கொச்சைப்படுத்துகின்ற வார்த்தை. தேர்தல் வரும் நேரத்தில் கொள்கைகள் வேறாக இருக்கலாம். தேர்தலை சந்திப்பதற்காக கூட்டணி வைப்பது காலம் காலமாய் நடந்து வருகிறது. பேரறிஞர் அண்ணாவும், மூதறிஞர் ராஜாஜியும் எதிர்மறை கொள்கைகள் கொண்டவர்கள். ஆனால், தேர்தல் கூட்டணியாக காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும். இங்கே திராவிட பாரம்பரியம் வர வேண்டும் என்று அண்ணா கூட்டணி அமைத்தார்.

    கொள்கை வேறு, கூட்டணி வேறு. கூட்டணி என்பது அவர்களது விருப்பம். நாங்கள் அதனை விமர்சனம் செய்யவில்லை. அதே போல் இது எங்களுடைய விருப்பம். கனிமொழி பாராளுமன்ற உறுப்பினராகவும், மகளிரணி செயலாளராகவும் உள்ளார். ஆனால் தரமில்லாமல் விமர்சிக்கிறார். இது மக்களிடையே எடுபடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterKadamburRaju #KamalHaasan
    ‘விஜயகாந்தை மு.க.ஸ்டாலின் சந்திப்பதில் தவறில்லை’ என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். #kanimozhi #mkstalin #vijayakanth
    சென்னை:

    தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் நடக்க உள்ள பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு கனிமொழி எம்.பி. சென்றார்.

    அப்போது அவரிடம் நிருபர்கள் ‘தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை, மு.க.ஸ்டாலின் சந்தித்ததில் ஏதேனும் முக்கியத்துவம் உள்ளதா?’ என கேட்டனர், அதற்கு பதில் அளித்த கனிமொழி ‘விஜயகாந்த் உடல் நலம் விசாரிக்க மு.க.ஸ்டாலின் சென்று இருக்கலாம். உடல் நலம் சரியில்லாமல் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்தவரை மு.க.ஸ்டாலின் சந்திப்பதில் தவறில்லை’ என்றார். #kanimozhi #mkstalin #vijayakanth
    தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி நிற்பது உறுதி என்று அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேசியுள்ளார். #anitharadhakrishnanmla #kanimozhi #parliamentelection

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் ஒன்றியம் முதலூர் ஊராட்சியில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளை செயலாளர் ராசபாண்டி தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அவர் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்களுக்காக உழைக்கும் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும். இந்த தொகுதியில் கனிமொழி எம்.பி. போட்டியிடுவார். அவர் பெண்களின் குறைகளை நன்கு அறிந்து புரிந்தவர். எனவே பெண்கள் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும்.


    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். காரணம் இது சந்தர்பவாத கூட்டணி. இந்த கூட்டணியில் பா.ம.க.வும் உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் இருப்பதாக கவர்னரிடம் பா.ம.க. தலைவர் ராமதாஸ் மனு கொடுத்ததை தமிழக மக்கள் மறந்துவிடவில்லை. இந்த பகுதியில் சடையனேரி மற்றும் கன்னடியன் திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் தான் வந்தது.

    இப்போது கன்னடியன் திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. இதைப்போல் சடையனேரி கால்வாய் வலுவாக இருக்க வேண்டும். நிரந்தர கால்வாய் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். நிச்சயமாக ஸ்டாலின் தமிழக முதல்வராக வந்தால் கோரிக்கைகள் நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும்.

    தி.மு.க. கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் மத்தியில் ராகுல்காந்தி பிரதமராக வருவார். எனவே தமிழக மக்களுக்கு பல நல்ல திட்டங்கள் கிடைத்திட மத்தியிலிருந்து அதிக நிதி பெற்றிட தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும்.

    இந்த பகுதிக்கு மயான இட வசதி வேண்டும் என்று கேட்டுள்ளார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நிச்சயமாக நானே நேரில் வந்து இடம் வசதி செய்து தருவேன். தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி நிற்பது உறுதி. கனிமொழியை குறைந்தபட்சம் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #anitharadhakrishnanmla #kanimozhi #parliamentelection

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு எந்த இழுபறியும் இல்லாமல் மிக எளிதாக நிறைவு பெறுவதற்கு கனிமொழியின் அணுகுமுறையே காரணம் என்று கூறப்படுகிறது. #DMK #Kanimozhi #Congress #RahulGandhi
    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு தேர்தல் வரும்போது எல்லாம் தமிழ்நாட்டில் எத்தகைய கூட்டணி அமைகிறது என்பது தேசிய அளவில் உற்றுப் பார்க்கப்படும் ஒன்றாக இருக்கிறது.

    உத்தரபிரதேசம், பீகார், மராட்டிய மாநிலங்களைப் போல தமிழ்நாட்டில் வெளியாகும் தேர்தல் முடிவுகளும் மத்தியில் ஆட்சி அமைப்பது யார் என்பதை முடிவு செய்யும் வகையில் உள்ளது. எனவேதான் தமிழகத்தில் பிரதானமாக உள்ள தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளின் ஆதரவை பெற தேசிய கட்சிகள் தாமாக முன் வருவது வழக்கமாக உள்ளது.

    தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வை விட தி.மு.க. தான் தேசிய அளவில் அதிக தடவை கூட்டணி அமைத்து மத்தியில் அதிகாரம் செலுத்தி உள்ளது. அதிலும் காங்கிரஸ் கட்சியுடன்தான் தி.மு.க. அதிக தடவை கூட்டணி அமைத்து இருக்கிறது.

    இதற்கு முன்பு 1971, 1980, 2004, மற்றும் 2009 ஆண்டுகளில் நான்கு தடவை காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து உள்ளது. தற்போது 5-வது முறையாக தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி மலர்ந்துள்ளது.

    தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி முதன் முதலில் ஏற்பட்டபோது அதற்கு அச்சாரம் இட்டவர்கள் தி.மு.க. தலைவர் கருணாநிதியும், அவரது மனசாட்சியாக திகழ்ந்த முரசொலி மாறனும் ஆவார்கள். 1971 மற்றும் 1980-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி அமைத்தபோது டெல்லி மேலிடத்தில் தொகுதி பங்கீடு குறித்தும், தொகுதிகள் ஒதுக்கீடு குறித்தும் தி.மு.க. சார்பில் பேச்சு நடத்தியது முரசொலிமாறன்தான்.

    1967-ம் ஆண்டு 2003-ம் ஆண்டு வரை சுமார் 36 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்த முரசொலி மாறன் தி.மு.க.வின் டெல்லி தலைவராக திகழ்ந்தார். டெல்லியில் தி.மு.க.வின் செயல்பாடுகள் அனைத்தும் அவரை மையமாக வைத்தே சுழன்று வந்தன.

    முரசொலி மாறன் வழிகாட்டுதல் இல்லாமல் அந்த 36 ஆண்டுகளும் டெல்லி அரசியலில் தி.மு.க. எந்த முடிவும் எடுத்தது இல்லை. டெல்லியில் தி.மு.க. மீது வட மாநில தலைவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் ஏற்பட அவர்தான் முக்கிய பங்கு வகித்தார்.

    2003-ம் ஆண்டு முரசொலி மாறன் மறைந்த பிறகு டெல்லி அரசியலில் தலைமைக்கான வெற்றிடம் ஏற்பட்டதை தி.மு.க. மூத்த தலைவர்களே உணர்ந்தனர். இதன் காரணமாகத்தான் 2004-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்தபோது பேச்சு வார்த்தைகளில் இழுபறி ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்தே தி.மு.க. தலைவர் கருணாநிதி அந்த வெற்றிடத்தை போக்கும் வகையில் கனிமொழியை 2007-ம் ஆண்டு மேல்-சபை எம்.பி.யாக்கினார். தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுவிலும், கலை இலக்கிய பிரிவிலும், மகளிர் அணியிலும் இடம் பெற்று அரசியல் அனுபவத்தை பெற்றுள்ள கனிமொழி டெல்லி அரசியலிலும் படிப்படியாக மேன்மை பெற்றுள்ளார்.

    2009-ம் ஆண்டு தி.மு.க. - காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தபோது கனிமொழி அதில் பங்கேற்றார். மூத்த தலைவர்களுடன் அமர்ந்து தொகுதி பங்கீடு அனுபவத்தை பெற்றார்.

    2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி அமைக்கவில்லை. 2ஜி பிரச்சனை காரணமாக தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் விரிசல் ஏற்பட்டு இருந்தது.

    2016-ம் ஆண்டு தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடந்தபோதுதான் அவர்களுக்கிடையே மீண்டும் சுமூகநிலை உருவானது.

    இந்த நிலையில் தற்போது பாராளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரசும், தி.மு.க.வும் ஒன்று சேர்ந்துள்ளன. 2004, 2009-ம் ஆண்டுகளில் தி.மு.க.வுக்கு நல்ல அணுகுமுறை உள்ள டெல்லி தலைவர் இல்லாததால் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் நீண்ட இழுபறி ஏற்பட்டது. ஆனால் தற்போது அந்த குறையை கனிமொழி தீர்த்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தி தொகுதி பங்கீடு செய்வதற்கான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் உரிமையை கனிமொழிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கி இருந்தார். இதையடுத்து களத்தில் குதித்த கனிமொழி மொத்தம் 3 கட்டமாக காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    முதல் கட்டமாக அவர் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம், கே.எஸ். அழகிரி, முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர் ஆகியோரை சந்தித்து கூட்டணி குறித்து பேசினார். பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? எத்தனை தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது? கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெற வேண்டும் என்பன போன்ற தகவல்களை மிக தெள்ளத்தெளிவாக காங்கிரஸ் தலைவர்களிடம் கனிமொழி எடுத்துரைத்தார்.

    அதன் பயனாக தி.மு.க.வும், காங்கிரசும் எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம் என்ற ஒருமித்த கருத்து முதல் கட்ட பேச்சு வார்த்தையிலே ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கனிமொழி 2 தடவை சந்தித்து பேசினார்.



    ராகுல்காந்தியுடன் நடந்த 2 கட்ட பேச்சுவார்த்தையிலும் கனிமொழி மிக திறமையாக வாதாடினார். தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டுமானால் ஒவ்வொரு கட்சியும் எத்தனை தொகுதிகளில் போட்டியிட்டால் சிறப்பாக இருக்கும் என்பதை புள்ளி விவரத்துடன் தெரிவித்தார்.

    அதுமட்டுமின்றி 39 தொகுதிகளில் எங்கெங்கு எந்தெந்த கட்சிகள் போட்டியிட வேண்டும் என்பதையும் ராகுல்காந்தியிடம் கனிமொழி தெளிவுப்படுத்தினார். ஒரு கட்டத்தில் சில தொகுதிகளில் யாரை நிறுத்தினால் நன்றாக இருக்கும் என்பதையும் கூட கனிமொழி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    கனிமொழியின் இந்த புள்ளி விவர பேச்சால்தான் அவரது கூட்டணி பேச்சு வார்த்தை 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாக தகவல்கள் வெளியானது.

    39 தொகுதி நிலவரங்களையும் கைவிரல் நுனியில் வைத்து பேசிய கனிமொழியின் ஆற்றலை கண்டு வியந்த ராகுல்காந்தி 9 தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் போட்டியிட சம்மதித்தார். அந்த வகையில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு எந்த இழுபறியும் இல்லாமல் மிக எளிதாக நிறைவு பெறுவதற்கு கனிமொழியின் அணுகுமுறையே காரணம் என்று கூறப்படுகிறது.

    ராகுலை சம்மதிக்க வைத்த பிறகு கூட்டணி தொகுதி பங்கீடு முடிவை சென்னையில்தான் அறிவிக்க வேண்டும் என்ற உரிமையையும் கனிமொழி பெற்று கொடுத்தார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முகுல் வாஸ்னிக், கே.சி.வேணுகோபால் இருவரும் சென்னை வந்து தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வரலாற்றில் இதற்கு முன்பு இப்படி நடந்தது இல்லை. எனவே கனிமொழியின் அணுகுமுறைகள் காங்கிரஸ் மூத்த தலைவர்களிடமும், தி.மு.க. மூத்த தலைவர்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளன.

    பாராளுமன்ற மேல்-சபையில் 12 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்து அனுபவம் பெற்றுள்ள கனிமொழியின் பதவி காலம் வருகிற ஜூலை மாதத்துடன் நிறைவு பெற உள்ளது. இதை கருத்தில் கொண்டு வருகிற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் களம் இறங்க கனிமொழி திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

    தூத்துக்குடி தொகுதியில் இருந்து பாராளுமன்ற மக்களவைக்கு கனிமொழி எம்.பி.யாக தேர்வு செய்யப்படும் பட்சத்தில் அவரது டெல்லி அரசியலில் மேலும் அந்தஸ்து உருவாகும். குறிப்பாக மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும் பட்சத்தில் கனிமொழியின் பங்களிப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    இதன் மூலம் தி.மு.க.வின் டெல்லி அடையாளமாக கனிமொழி மாற வாய்ப்பு உள்ளது. #DMK #Kanimozhi #Congress #RahulGandhi
    ×