search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனிமொழி"

    தமிழகத்தில் கவர்னர் வேண்டாம் என்பதே தி.மு.க.வின் நிலைப்பாடு என்று திருப்பூரில் கனிமொழி எம்.பி. கூறினார்.
    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டரணி ஆலோசனைக்கூட்டம் நேற்று காலை திருப்பூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி பேசினார்.

    திருப்பூர் மாவட்ட செயலாளர்கள் க.செல்வராஜ்(திருப்பூர் வடக்கு), இல.பத்மநாபன் (திருப்பூர் தெற்கு), திருப்பூர் மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாநில மகளிர் அணி புரவலர் விஜயா தாயன்பன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சரஸ்வதி ரங்கராஜன்(திருப்பூர் வடக்கு), சரஸ்வதி(திருப்பூர் தெற்கு), மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாமகேஸ்வரி(திருப்பூர் வடக்கு), பிரபாவதி(திருப்பூர் தெற்கு) உள்பட மகளிர் அணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பெண்களை கடவுளாக மதிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் பா.ஜனதா ஆட்சியில் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்கள் வாழ தகுதியே இல்லாத நாட்டில் முதலிடத்தை இந்தியா பெற்றிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாட்டில் தொடர்ந்து போர் ஏற்பட்டுள்ளது. அதைவிட மோசமான நிலை இந்தியாவில் ஏற்பட்டுள்ளது என்பது அவமானமாக உள்ளது. ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு ஆட்சி செய்கிறார்கள் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். பொருளாதார வளர்ச்சி பற்றி பேசுகிறார்கள். ஆனால் ஜி.எஸ்.டி. அமல் உள்ளிட்டவைகளால் தொழில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

    பல நாடுகளுக்கு பிரதமர் சுற்றுப்பயணம் சென்று வருகிறார். பெண்கள் எந்த அளவுக்கு இந்தியாவில் மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். பெண்கள் மட்டுமின்றி, அனைத்து மதத்தினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ தகுதியற்ற நாடாக, பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக இந்தியா மாறி வருகிறது.

    கவர்னருக்கு சில கட்டுப்பாடுகள், வரையறைகள் உள்ளன. அதையும் மீறி அவர் செல்லும்போது, ஜனநாயகத்துக்கு விரோதமாகவும், மாநில சுயாட்சிக்கு விரோதமாகவும் நடக்கும்போது தான் அதை தி.மு.க. கண்டிக்கிறது. 7 ஆண்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என்று மிரட்டும் வகையில் கவர்னர் அலுவலகத்தில் இருந்து அறிக்கை வருகிறது. அவர் இப்படி செய்வதற்கான பின்புலம் என்ன என்று கேள்வி எழுகிறது.

    கவர்னர் வேண்டாம் என்பதே தி.மு.க.வின் நிலைப்பாடு. தமிழகத்திற்கு கவர்னர் தேவையில்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதி அவர் கிடையாது. கவர்னரின் ஆய்வு தேவையற் றது. மதவாதிகளுக்கு யார் காவடி தூக்குகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். கொஞ்சம், கொஞ்சம் இருக்கும் தீவிரவாதம் ஆர்.எஸ்.எஸ். வழியாகத்தான் ஊடுருவுகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அதை அகற்றுவோம்.

    சரியான திட்டமிடல் இல்லாமல் 8 வழிச்சாலை பசுமை திட்டத்தை கொண்டு வருகிறார்கள். தமிழகத்தில் உள்ளவர்களுக்கு என்ன பயன் என்பதை விட சீனாவில் உள்ளவர்களுக்கு என்ன பயன்படுகிறது என்பதை ஆய்வில் தெரிவிக்கிறார்கள். ஆய்வில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பதை ஆராய வேண்டும். இவ்வளவு அவசரமாக, முனைப்பாக ஏன் செயல்படுகிறார்கள் என்று தெரியவில்லை. மதுரவாயல்- சென்னை துறைமுகம் செல்வதற்கான சாலை திட்டம் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அதில் பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. அந்த திட்டம் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதுவும் அடிப்படை வளர்ச்சிக்கான ஒரு திட்டம் தான். அந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் முனைப்பு காட்டியிருக்கலாம்.

    8 வழிச்சாலை உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் எதுவும் வரக்கூடாது என்பது தி.மு.க.வின் நிலைப்பாடு இல்லை. மக்களை அழைத்து பேசி அவர்களின் கருத்துகளை கேட்காமல், பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் ஏன் அவசரமாக பணியாற்று கிறார்கள் என்பது தான் கேள்வி. இதற்கு எதிராக தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தமிழக சட்டசபையிலும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து பேசியுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் ஆட்சியாளர்கள், சர்வாதிகாரியை போல நடந்து கொள்கிறார்கள் என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். #kanimozhi #tamilisai #chennaisalem8wayroad

    கோவை:

    தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேள்வி:- முரண்பாடுகளின் மொத்த உருவம் தி.மு.க. என அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறாரே?

    பதில்:- முரண்பாடுகளுடன் வாழ்றது தான் வாழ்க்கை. அதை அவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் முரண்பாடுகளே ஒரு கட்சியாக இன்றைக்கு நடத்திக் கொண்டிருப்பவர்கள் தான் அவர்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டவர்கள் இன்று ஒன்றாக இருக்கிறார்கள்.

    மேடையில் ஏறி ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை பற்றி ஒரு அமைச்சர் பேசக்கூடிய அளவுக்கு முரண்பாடுகள் இருக்கக் கூடிய கட்சி எது என்று அவர்களுக்கே தெரியும்.

    கேள்வி:- சேலம் 8 வழி பசுமை சாலைக்கு எதிராக போராடும் மக்கள் தூத்துக்குடி சம்பவம் போல நடந்து விடும் என அச்சப்படுகிறார்களே?

    பதில்:- தூத்துக்குடி சம்பவமே, போராட்டங்கள் நடக்கக் கூடாது என மக்களை அச்சுறுத்த வேண்டும், போராளிகளை அச்சுறுத்த வேண்டும் என்று நடத்தப்பட்ட ஒரு நாடகம் தான். அதில் 13 பேர் கொலை செய்யப்பட்டது முன் கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை.

    இன்றைக்கு யார் வாயை திறந்தாலும் கைது செய்யப்படுகிறார்கள். ஒரு ஆரம்ப சாத்தியக்கூறுகள் கூட செய்யாத ஆட்சி இன்று நடந்து கொண்டிருக்கிறது. 8 வழிச்சாலை அமைக்க என்ன செய்யப் போகிறார்கள் என்று மக்களுக்கு தெளிவாக தெரிவித்து விட்டு மக்களுடன் கலந்து பேசி, பிறகு அதை அமைப்பதில் யாருக்கும் எந்த எதிர்ப்பும் இருக்கப் போவதில்லை. அதை எல்லாம் செய்யாமல் ஒரு சர்வாதிகாரியை போல இன்று இருக்கக் கூடிய ஆட்சியாளர்கள் நடந்து கொள்கிறார்கள்.

    கேள்வி:-தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகள் இருப்பதாக தமிழிசை சவுந்தர் ராஜன் கூறி உள்ளாரே?


    பதில்:- ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதீய ஜனதா இரண்டும் போய் விட்டால் இருக்கக் கூடிய தீவிரவாத அமைப்புகள் எல்லாம் போய் விடும்.

    இவ்வாறு அவர் கூறினார். #kanimozhi #tamilisai #chennaisalem8wayroad 

    இந்தியாவில் மோடி ஆட்சியால் பெண்களுக்கு மட்டுமல்ல யாருக்குமே பாதுகாப்பு இல்லை என கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். #DMK #Kanimozhi
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சி பெண்ணின் பெயரால் நடப்பதாக கூறுகிறார்கள். ஆனால் எந்த அளவு மோசமான ஆட்சி நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

    இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு என்று செய்தி வெளியாகி உள்ளது. இந்த நாட்டில் பெண்களுக்கு மட்டுமல்ல யாருக்கும் பாதுகாப்பு இல்லை.

    தமிழ்நாட்டில் ஆட்சியாளர்கள் மக்களுக்கு தேவையான எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. தங்களுக்கு தேவையான திட்டங்களை மட்டுமே கொண்டு வருகிறார்கள்.

    8 வழி சாலை திட்டத்தை நிறைவேற்றுவதில் அவசரம் காட்டுகிறார்கள். மக்களுடைய கருத்தை கேட்கவில்லை. இதற்கான பேச்சு வார்த்தை நடைபெறவில்லை. எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், கேள்வி கேட்பவர்களை கைது செய்கிறார்கள்.

    மதுரவாயல்- துறைமுகம் விரைவு சாலை திட்டம் வளர்ச்சி திட்டம் இல்லையா? அதை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு இருப்பது ஏன்? முக்கியமான இந்த திட்டத்தை நிறைவேற்ற அவசரம் காட்டவில்லையே. இது மிகவும் முக்கியமான வளர்ச்சி திட்டம் என்பது தெரியாதா?

    சட்டசபையில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாங்களும் திராவிட கட்சிதான். மதசார்பின்மை இல்லாதவர்கள் என்று கூறி இருக்கிறார். இது நல்ல நகைச்சுவை.

    தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் இருப்பதாகவும், அதை தடுக்க வேண்டும் என்றும் பா.ஜனதா சொல்லி வருகிறது. பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.-ம்தான் தீவிரவாதம் கொண்டவை. அதை தடுக்க வேண்டும்.

    ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் இரும்பு தொழிற்சாலை அமைக்க மத்திய அரசு கொடுத்த வாக்குறுதியை உடனே நிறைவேற்றக் கோரி தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.யான சி.எம்.ரமேஷ் கடந்த 21-ந் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். அவரது போராட்டம் இன்று 7-வது நாளாக நீடிக்கிறது.

    இந்த நிலையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கடப்பாவுக்கு சென்று உண்ணாவிரதம் இருக்கும் தெலுங்கு தேசம் எம்.பி. ரமேசை சந்தித்து பேசி ஆதரவு தெரிவித்தார்.

    இறையாண்மையை பாதுகாக்கவும், முறையான நிதி பெறவும் மத்தியில் உள்ள பா.ஜனதா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு போராட வேண்டிய நேரம் இது.

    இன்றைக்கு இந்த நாடு, மாநில உரிமை பற்றியும், பா.ஜனதா ஆட்சி இல்லாத மாநில மக்களை பற்றியும் அக்கறை கொள்ளாத அரசால் ஆட்சி செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.

    பிரதமர் மோடி வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டே இருக்கிறார். அவர் பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பதில்லை. மக்களின் பிரச்சினையில் கவனம் செலுத்துவதில்லை என்றார். #DMK #Kanimozhi
    ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் இரும்பு ஆலை அமைக்க தவறியதை கண்டித்து ஆறு நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவரும் தெலுங்கு தேசம் எம்.பி.யை இன்று சந்தித்த கனிமொழி ஆதரவு தெரிவித்தார்.
    ஐதராபாத் :

    ஆந்திரப்பிரதேச மாநிலம் இரண்டாக பிரிக்கப்படுவதற்கு முன்னர் கடப்பா மாவட்டத்தில் இரும்பு ஆலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால், மாநிலம் பிரிக்கப்பட்டதற்கு பிறகு ஆந்திராவில் இரும்பு ஆலை அமைக்கும் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டது.

    இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், கடப்பா மாவட்டத்தில் இரும்பு ஆலை அமைப்பது பொருளாதார ரீதியாக சாத்தியமில்லை என மத்திய அரசு சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL) அளித்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு இதை கூறியது.

    இதற்கிடையே, இரும்பு ஆலை அமைக்கும் விவகாரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய  மத்திய அரசு, உடனடியாக கடப்பாவில் ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெலுங்குதேசம் கட்சி எம்.பி சி.எம்.ரமேஷ் என்பவர் கடப்பா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 21-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டு வரும் சி.எம்.ரமேஷ் எம்.பி.யை இன்று நேரில் சந்தித்தார். சந்திப்பின்போது, இரும்பு ஆலை அமைப்பது தொடர்பான அவரது போராட்டத்திற்கு கனிமொழி ஆதரவு தெரிவித்துள்ளார்.

    தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாஜக கூட்டணியில் இருந்து கடந்த மார்ச் மாதம் வெளியேறியது. தற்போது, இந்த இரு கட்சிகள் இடையே கடப்பா இரும்பு ஆலை புதிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    பா.ஜனதாவுடன் கூட்டணி ஆட்சியில் இருந்த பல கட்சிகள் விலகி வருவதாகவும் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலுவாகி வருவதாகவும் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். #kanimozhi #DMK
    ஆலந்தூர்:

    தி.மு.க. எம்.பி. கனிமொழி, சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இத்தனை ஆண்டுகளாக சிறையில் இருந்தும் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளுக்கு விடுதலை தராதது வருந்தத்தக்கது. சிறையில் இருந்த எத்தனையோ பேருக்கு விடுதலை வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்பது வேதனையாக உள்ளது.

    இந்தியாவில் பல அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு எதிரான நிலைபாட்டைத்தான் எடுத்து உள்ளது. பா.ஜனதாவுடன் கூட்டணி ஆட்சியில் இருந்த பல கட்சிகளும் விலகி வரக்கூடிய நிலையும் ஏற்பட்டு உள்ளது. மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலுவாகி வருகிறது.



    தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராக யாரும் இல்லை. அந்தந்த பகுதிகளில் திட்டங்கள் கொண்டு வரப்படும் போது மக்களிடம் பேசி, அவர்களின் கருத்துகளை கேட்டு அறிந்து கொள்ளாமல் தாங்கள் சொல்வதுதான் சட்டம் என்று கூறுபவர்களுக்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என்று கூறுவதற்கு அருகதை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #kanimozhi #DMK
    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய்யை தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. நேரில் சென்று உடல்நலம் பற்றி விசாரித்தார்.
    புதுடெல்லி:

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நலம் பற்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று விசாரித்து வருகிறார்கள். அதன்படி, தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. நேற்று மாலை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாய் உடல்நலம் பற்றி விசாரித்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், ‘முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் மிகுந்த மரியாதை வைத்திருந்த மூத்த தலைவர். வாஜ்பாயின் உடல்நலம் பற்றி அவரது வளர்ப்பு மகள் நமீதாவிடம் விசாரித்தேன். உடல்நிலை முன்பைவிட முன்னேறி இருப்பதாக அவரும், உறவினர்களும் தெரிவித்தனர். அவர் பூரண நலம் பெற, கருணாநிதி சார்பிலும், மு.க.ஸ்டாலின் சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்தேன்’ என்றார். 
    எஸ்.வி.சேகரை கைது செய்ய விடாமல் பாதுகாப்பது, மத்திய அரசா, அவரது உறவினர்களா? என கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். #DMK #Kanimozhi #SVeShekher
    அவனியாபுரம்:

    தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி இன்று காலை விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி விவகாரத்தில் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. பா.ஜனதா சொல்வதை கேட்டு தலையாட்டும் அரசாக அ.தி.மு.க. உள்ளது.

    பா.ஜனதாவினருக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படுவது இதனை வெளிப்படையாக காட்டுகிறது.


    நடிகர் எஸ்.வி.சேகர் விவகாரத்தில் அவரை கைது செய்யாதது ஏன்? அவரை பாதுகாப்பது மத்திய அரசா? அல்லது இங்குள்ள அவரது உறவினர்களா? என்று தெரியவில்லை. இதை நீங்கள் தான் கேள்வி கேட்க வேண்டும்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது வடமாநிலத்தில் கோவிலுக்குள், ஜனாதிபதி அனுமதிக்கப்படாதது பற்றி நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த கனிமொழி சாதி என்பது இந்திய சமூகத்தில் எப்படி இருக்கிறது? என்பதையே இது காட்டுகிறது.

    தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் இருப்பதால் இது போன்று நடப்பது இல்லை என்றார். #DMK #Kanimozhi #SVeShekher
    அ.தி.மு.க.வுடன் உடன்பட்டு அரசியல் நடத்தக்கூடிய நிலை தி.மு.க.வுக்கு என்றுமே வராது என திருச்சியில் கனிமொழி எம்.பி. தெரிவித்தார். #DMK #Kanimozhi #PonRadhakrishna
    திருச்சி:

    திருவாரூரில் இன்று மாலை தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக இன்று காலை கனிமொழி எம்.பி. சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.

    பின்னர் அவர் காரில் திருவாரூர் புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் எந்தவிதமான ரகசிய உடன்பாடும் இல்லை. அவ்வாறு இருப்பதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது அவரது கற்பனை வளத்தை காட்டுகிறது. அவர் நல்ல கதை எழுத போகலாம். அ.தி.மு.க.வுடன் உடன்பட்டு அரசியல் நடத்தக்கூடிய நிலை தி.மு.க.வுக்கு என்றுமே வராது.


    சட்டமன்றத்தில் தி.மு.க. வின் பங்களிப்பை பலமுறை பார்த்திருக்கிறோம். தலைவர் கலைஞர் அரசாங்கத்தையே நடுங்க வைத்திருப்பதையும் பார்த்திருக்கிறோம். மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்திற்கு தொடர்ந்து சென்று கொண்டு தான் இருக்கிறார். ஆனால் சட்டமன்றத்தை நடத்தும் விதம்தான் புறக்கணிக்க செய்கிறது. அ.தி.மு.க.வை பார்த்து தி.மு.க. பயப்பட வேண்டிய அவசியமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி.க்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். #DMK #Kanimozhi #PonRadhakrishnan
    மத்திய அரசின் தலையாட்டி பொம்மையாக தமிழக அரசு உள்ளது என்று கனிமொழி எம்.பி. கூறினார். #Kanimozhi #BanSterlite #SterliteProtest

    காரைக்குடி:

    காரைக்குடியில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசின் தலையாட்டி பொம்மையாக தமிழக அரசு உள்ளது. தீய சக்தியாக விளங்கக் கூடியதும் இந்த அரசுதான். ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும். இல்லாவிட்டால் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kanimozhi #BanSterlite #SterliteProtest

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி, திருமாவளவன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர். #SterliteProtest #DMKBandh
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள்.

    இதற்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக கோரியும், டி.ஜி.பி. ராஜேந்திரனை பதவி நீக்கம் செய்ய கோரியும், தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள மதுராந்தகம் சென்றிருந்தார். அங்கு திருமணத்தை நடத்தி வைத்த பின் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அவருடன் புதுமண தம்பதியும், கட்சி தொண்டர்களும் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை எழும்பூரில் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, எம்.எல்.ஏ.க்கள் பி.கே.சேகர்பாபு, ப.ரங்கநாதன், கே.எஸ்.ரவிச்சந்திரன், தாயகம் கவி மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர். எடப்பாடி பழனிசாமி அரசு உடனே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள். மறியலிலும் ஈடுபட்டனர். உடனே கனிமொழி- திருமாவளவன் உள்பட எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

    தியாகராயநகர் பஸ் நிலையம் அருகே மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் கண்டன முழக்கமிட்டனர்.

    இதில் அண்ணாநகர் மோகன், கு.க.செல்வம், பகுதி செயலாளர்கள் ஜெ.கருணாநிதி, கே.ஏழுமலை, அகஸ்டின்பாபு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

    சைதாப்பேட்டையில் மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்- மறியல் நடைபெற்றது.

    இதில் தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், தி.மு.க. பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சைதை குணசேகரன், மகேஷ்குமார் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகளும் கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனர்.

    குன்றத்தூரில் மாவட்டச்செயலாளர் தா.மோ. அன்பரசன் எம்.எல்.ஏ. தலைமையில் பஸ் நிலையம் அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பட்டூர் ஜபருல்லா, சத்தியமூர்த்தி உள்பட ஏராளமானோர் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

    குரோம்பேட்டை பஸ் நிலையத்தில் பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி தலைமையில் மறியல் பேராட்டம் நடைபெற்றது.

    இதில் காங்கிரஸ் கட்சி பிரமுகர் தீனதயாளன், ம.தி.மு.க. சார்பில் ரஜினி மற்றும் ஜோசப் அண்ணா துரை, ரமேஷ் உள்பட ஏராளமானோர் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதே போல் நகரின் பல பகுதிகளில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் மறியலில் ஈடுபட்டு கைதானார்கள். #SterliteProtest #DMKBandh
    ×