search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை"

    கோவை கொடீசியா மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நதிநீர் இணைப்பு திட்டம் வந்தால் தண்ணீர் பிரச்சினை இருக்காது என தெரிவித்தார். #LokSabhaElections2019 #EdappadiPalanisamy
    கோவை:

    கோவை கொடீசியா மைதானத்தில் அதிமுக-பாஜக கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சாரம் இன்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:

    130 கோடி மக்கள் வாழும் தேசத்தில் மோடியை மட்டுமே பிரதமராக ஏற்றுள்ளனர். 2ஜி முறைகேடு மூலம் தமிழகத்தை தலைகுனிய வைத்தது திமுக. எதிர் கூட்டணியில் பிரதமர் வேட்பாளரை தேடிக் கொண்டிருக்கின்றனர். 

    ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்த ஸ்டாலினின் கருத்தை அவர்களின் கூட்டணி கட்சிகளே ஏற்கவில்லை. மிகப்பெரிய ஊழல் செய்த திமுகவினர் ஊழல் தொடர்பாக பிரச்சாரம் செய்கின்றனர்.

    நதிநீர் இணைப்பு திட்டம் வந்தால் தண்ணீர் பிரச்சினை இருக்காது. நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது

    40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று பிரதமர் மோடிக்கு வெற்றியை தருவோம். மோடி தான் மீண்டும் பிரதமராக வேண்டும். 40 மக்களவை தொகுதிகள் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். எதிர்காலம் சிறப்பாக இருக்கவும் வளம் காணவும் மோடியை மீண்டும் பிரதமராக்குவோம்.

    மழைநீரை சேமிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #EdappadiPalanisamy
    கோவை கொடீசியா மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தேசியம் பற்றி நான் பேசுவது குற்றமா? என கேள்வி எழுப்பினார். #LokSabhaElections2019 #PMModi
    கோயம்புத்தூர்:

    கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரதமர் மோடி  உரையாற்றினார். இதில் தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், பாஜக பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது அவர் பேசியதாவது: 
     
    வணக்கம், சகோதர சகோதரிகளே, தமிழக மக்களுக்கு வணக்கம், மருதமலை முருகனுக்கு அரோகரா என தமிழில் உரையை ஆரம்பித்தார்.

    உலகளவில் தமிழர் பண்பாடு சிறப்புடையது.  தமிழ் கலாச்சாரம், மொழி தனித்துவம் வாய்ந்தது, சிறப்பானது.

    தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். புரட்சி தலைவர் எம் ஜி ஆர் , ஜெயலலிதா அம்மா அவர்களை நினைவு கூர்கிறேன்.

    எம்.ஜி.ஆர், ஜெ.வின் எண்ணங்கள் நம்மை வழிநடத்தும் என நினைக்கிறேன். கல்வி வளமும் செல்வ வளமும் மிகுந்த கோவை நகரத்தில் உரையாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.



    பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது; உலகளவில் தமிழர் பண்பாடு பிரசித்தி பெற்றது. நிலையான ஆட்சி அமைய வேண்டும் என தேசிய ஜனநாயக கூட்டணி விரும்புகிறது. 21ஆம் நூற்றாண்டில் இந்தியா எப்படி இருக்கும் என்பதை காட்டப்போகும் தேர்தல் இது. 

    தேசிய பாதுகாப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகளிடம் எந்த திட்டமும் இல்லை.  நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளாமல் உறுதியாக இருக்கிறோம். நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் வட்டியும் முதலுமாக தரப்படும். பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது.

    நான் தேசியம் பற்றி பேசுவது குற்றமா? நான் தேசியம் குறித்து பேசினால் எதிர்க்கட்சிகள் என்னை கேள்வி கேட்பது சரியா? #LokSabhaElections2019 #PMModi 
    கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று இரவு கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். #BJP #PMModi

    கோவை:

    தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 18-ந்தேதி தேர்தல் நடை பெறுகிறது.

    அதே தினத்தன்று தமிழகம், புதுச்சேரியில் காலியாக உள்ள 19 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    தேர்தல் பிரசாரம் ஓய இன்னும் 7 நாட்களே உள்ளதால் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தமிழகத்தில் பிரதமர் மோடி ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார். அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி ஏற்பட்ட பின் தமிழகத்தில் மோடி பங்கேற்கும் பிரமாண்ட பொதுக் கூட்டம் கோவை கொடிசியா மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடை பெறுகிறது.

    இதில் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிடும் பாரதிய ஜனதா மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

    பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மாலை 6.45 மணிக்கு மைசூரில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வருகிறார். விமான நிலையத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் அவரை வரவேற்கிறார்கள்.

     


    பின்னர் மோடி குண்டு துளைக்காத காரில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள கொடிசியா மைதானத்திற்கு வருகிறார். இரவு 7 மணி முதல் 8 மணி வரை அவர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    பின்னர் இரவு 8.15 மணிக்கு விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் - அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், கொ.மு.க. தலைவர் பெஸ்ட் ராமசாமி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

    மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பேச உள்ள பொதுக்கூட்ட மேடை பாராளுமன்ற வடிவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளது.

     


    பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடை சிறப்பு பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது. பொதுக்கூட்ட மேடையில் வெடி குண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள்.

    போலீஸ் மோப்ப நாய் உதவியுடன் மைதானத்திலும் சோதனை நடத்தப்பட்டது. பாதுகாப்பு பணியில் கோவை மாநகர போலீசார் மட்டுமின்றி வெளி மாவட்ட போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட் டுள்ளனர்.

    பொதுக்கூட்ட மைதானம் மற்றும் விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பொதுக்கூட்டம் நடைபெறும் கொடிசியா வளாகத்தில் பொதுமக்கள், கட்சியினர் வாகனங்கள் நிறுத்த தனி இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

    அவினாசி சாலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் நேரத்தில் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

    அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்த பின் பிரதமர் பங்கேற்கும் முதல் கூட்டம் என்பதால் லட்சக்கணக்கான தொண்டர்களை பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரட்டுகிறார்கள்.

    தேர்தல் அறிக்கை வெளியிட்ட அடுத்த நாள் கோவையில் மோடி பேச உள்ளது கட்சியினர் மற்றும் கூட்டணி நிர்வாகிகளிடம் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை முதலே வெளியூர்களில் இருந்து பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் வர தொடங்கி விட்டனர்.

    கடந்த 2014-ம் ஆண்டு கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்று பேசினார். அதே கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் இன்று 2-வது முறையாக பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  #BJP #PMModi

    கோவை சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய தொண்டாமுத்தூரை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். #GirlHarassment
    கோவை:

    கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை ஒரு கும்பல் கடத்தி கொலை செய்தது. பிரேத பரிசோதனையில் சிறுமி ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதும் மூச்சுத் திணறலால் உயிரிழந்திருப்பதும் தெரிய வந்தது.

    கொலையாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர், பிளஸ்-2 மாணவர், ஆட்டோ டிரைவர் உள்பட பலரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் ஒரு வாலிபர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். அவர் மீது சந்தேகம் வலுக்கவே போலீஸ் அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

    இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிக்கும் நபர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.
    பெயர்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, துண்டு பிரசுரங்கள் அச்சடித்து வினியோகம் செய்தனர்.

    இந்நிலையில், கோவை சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக, 7 பேரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் அதில் ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தோஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர். #GirlHarassment
    கோவை அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.95 லட்சம், துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

    சூலூர்:

    சூலூர் தொகுதிக்குட்பட்ட சுல்தான் பேட்டை பகுதியில் பல்லடம் பொள்ளாச்சி சாலையில் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். திருப்பூர் மாவட்ட சரக்கு மற்றும் சேவை வரி ஆய்வாளர் மலர்விழி தலைமையிலான இந்த படையினர் சுல்தான்பேட்டை பொதுப்பணித்துறை அலுவலர்கள் குடியிருப்புப் பகுதி முன்பாக நின்று சோதனை செய்து கொண்டுருந்தனர்.

    அப்போது பொள்ளாச்சியிலிருந்து வேகமாக வந்த காரை தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர். காரின் பின் இருக்கையில் ஒரு இரும்பு பெட்டி இருந்தது.

    மேலும் அந்த காரில் ஒரு தனியார் வங்கியின் அடையாள அட்டையுடன் பாலராமஜோதி சுந்தரேஷ்வரி(55) என்ற பெண் அதிகாரியும் வங்கி உதவியாளர் பிரகாஷ் ஆகியோர் இருந்தனர்.

    அவர்களிடம் விசாரிக்கையில் காரில் இருந்த இரும்பு பெட்டியில் வங்கிப் பணம் 95 லட்சம் ரூபாய் இருப்பதாக தெரிவித்தனர்.அதைத் தொடர்ந்து அந்த பணத்தினை கொண்டு செல்வதற்கான ஆவணங்களைக் கேட்ட போது அவர்களிடம் சரியான ஆவணங்கள் இல்லாதது தெரிய வந்தது.

    மேலும் இவ்வளவு பெரிய தொகையைக் கொண்டு செல்வதற்கு போதிய காவலர்களும் இல்லாததால் சந்தேகமடைந்த பறக்கும் படை அதிகாரிகள் காரில் இருந்த பணத்தை காருடன் பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.அதைத் தொடர்ந்து தாசில்தார் அளித்த தகவலின் பேரில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி பாலகிருஷ்ண்ணிடம் ஒப்படைத்தனர்.

    சூலூர் அருகே சிந்தாமணி புதூர் எல் என் டி பைபாஸ் ரோடு பகுதியில் திருப்பூர் 5-ம் பகுதி மத்திய கலால் துறை கண்காணிப்பாளர் சுந்தரராஜ் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அதே சமயம் கோவை பகுதியில் உள்ள வங்கியிலிருந்து பிற வங்கிகளுக்கு பணம் கொண்டு செல்லும் வாகனம் பல்லடத்திலிருந்து குனியமுத்தூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது.

    தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் வாகனத்தில் உள்ள பெட்டியை பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.

    பெட்டிக்குள் இரட்டை குழல் துப்பாக்கி இருந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவருக்கு சொந்தமான துப்பாக்கி என்பது தெரியவந்தது பறிமுதல் செய்த துப்பாக்கி சூலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்

    திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் திருப்பூர் மாநகராட்சி இளநிலை பொறியாளர் கோவிந்தபிரபாகர் தலைமையிலான பறக்கும் படையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். காலேஜ் ரோடு அணைப்பாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் அவர்கள் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தார்கள்.

    அந்த வாகனத்தில் ரூ.26 லட்சம் இருந்தது. ஆனால் அதில் ரூ.6லட்சத்திற்கு மட்டுமே ஆவணங்கள் இருந்தது. மீதமுள்ள ரூ.20 லட்சம் பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை.

    இதைத்தொடர்ந்து வாகனத்தில் இருந்த திருப்பூர் காலேஜ் ரோடு ஜவான் நகரை சேர்ந்த பிரபு(வயது 29) என்பவரிடம் விசாரித்தனர்.

    அவர், கோவையை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் ஊழியராக தான் பணியாற்றி வருவதாகவும், அந்த நிறுவனம் திருப்பூரில் உள்ள வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணியை செய்து வருவதாகவும், ஏ.டி.எம்.களில் நிரப்புவதற்காக பணத்தை எடுத்து வந்ததாகவும் அவர் கூறினார்.

    இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.20 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் சிவகுமாரிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை கொண்டு வந்து காண்பித்து பணத்தை பெற்று செல்லலாம் என்று அதிகாரிகள் பிரபுவிடம் அறிவுறுத்தியுள்ளனர். #LokSabhaElections2019

    கோவை மதுக்கரையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSpolls

    கோவை:

    கிணத்துக்கடவு சட்டமன்றத்தொகுதி பறக்கும்படை அதிகாரி மற்றும் போலீசார் மதுக்கரை பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது.

    அதனை கொண்டு வந்த சென்னை அமைந்தகரையை சேர்ந்த பகாத் (வயது 34) என்பவரிடம் விசாரணை நடத்தியபோது சேலத்தில் பேக்கரி வைக்க பணம் கொண்டு செல்வதாக கூறினார். இருந்தாலும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரி அதனை மதுக்கரை தாசில்தார் சரண்யாவிடம் ஒப்படைத்தார்.

    இதேபோன்று அதே பகுதியில் குழந்தைசாமி தலைமையிலான பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாலக்காட்டில் இருந்து வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் வந்த ஷெரோன் (32) என்பவரிடம் ரூ.98 ஆயிரம் இருந்தது.

    இதுகுறித்து கேட்டபோது கோவையில் ஜவுளி வாங்க பணம் கொண்டு வந்ததாக கூறினார். உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து தாசில்தாரிடம் ஒப்படைத்ததார். #LSpolls

    கோவையில் இன்று அதிகாலை தேர்தல் வாகன சோதனையில் 15 கிலோ குட்காவை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை வைத்திருந்த திருச்சூரை சேர்ந்த ஹரிஷ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #LokSabhaElections2019
    கோவை:

    கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பறக்கும்படை அலுவலர் கனகராஜ் தலைமையிலான குழுவினர் இன்று அதிகாலை 5 மணி அளவில் காந்திபுரம் பகுதியில் வாகனசோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது காரில் 15 கிலோ குட்கா இருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை வைத்திருந்த திருச்சூரை சேர்ந்த ஹரிஷ் என்பவரிடம் பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர் தாமஸ் வீதியில் ஒரு வியாபாரியிடம் இருந்து வாங்கி சென்றதாக கூறினார். இதையடுத்து பறிதல் செய்த குட்கா பாக்கெட்டுகளை உணவு பாதுகாப்பு அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.3 லட்சத்து 98 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 11-ந் தேதி முதல் இதுவரை எந்த ஆவணங்களும் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியே 83 லட்சத்து 38 ஆயிரத்து 865 பறிமுதல் செய்யப்பட்டது.

    இதில் உரிய ஆவணங்களை 19 பேர் சமர்ப்பித்ததின் அடிப்படையில் ரூ.1 கோடி 6 லட்சத்து 26 ஆயிரத்து 980 மற்றும் 64 பட்டுப்புடவைகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

    மீதமுள்ள ரூ.77 லட்சத்து 11 ஆயிரத்து 885 மற்றும் 213 பட்டுப்புடவைகள் சம்பந்தப்பட்ட கருவூலகங்களிலும், 1497 மது பாட்டில்கள் மற்றும் ஒரு ஏர்பிஸ்டல் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களிலும் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  #LokSabhaElections2019

    கோவை அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அமீர்பாளையத்தை சேர்ந்தவர் சீத்தாராமன் (வயது 29). திருமணமாகவில்லை. இவர் கோவை சோமனூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக சீத்தாராமன் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று அறையில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த சக ஊழியர்கள் இது குறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட சீத்தாராமனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உரிய அனுமதியின்றி கலந்துரையாடல் நடத்தியது தொடர்பாக பள்ளிக்கு விளக்கம் கேட்டு தேர்தல் அதிகாரி நோட்டீசு அனுப்பி உள்ளார். #LSPolls #KamalHaasan
    கோவை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த 24-ந் தேதி கோவையில் பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, வேட்பாளர் களை அறிமு கம் செய்து வைத்தார்.

    முன்னதாக சிங்காநல்லூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், டாக்டர்களுடன் கலந்துரையாடினார். தகவல் அறிந்து சிங்காநல்லூர் தொகுதி பறக்கும் படை அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, உரிய அனுமதி இல்லாமல் இதுபோன்ற கூட்டம் நடத்தக் கூடாது என்று அதிகாரிகள் கூறினர். இதைத் தொடர்ந்து கலந்துரையாடல் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

    இந்நிலையில், உரிய அனுமதியின்றி கூட்டம் நடத்த அனுமதி வழங்கியது ஏன்? என விளக்கம் கேட்டு விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கலெக்டர் ராஜாமணி, சிங்கா நல்லூர் தொகுதி தேர்தல் உதவி அலுவலர் பிரபாகரனுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் பள்ளிக்கு விளக்கம் கேட்டு உதவி தேர்தல் அலுவலர் பிரபாகரன் நோட்டீசு அனுப்பி உள்ளார்.

    அதில், உரிய அனுமதியின்றி கூட்டம் நடத்தியது தொடர்பாக 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. விளக்கத்தில் திருப்தி இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #LSPolls #KamalHaasan

    கோவை அருகே மாயமான சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சிறுமி நேற்று வழக்கம் போல பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு திரும்பினார். வீட்டில் இருந்த அவர் விளையாடுவதற்காக வெளியே சென்றார்.

    ஆனால் இரவு நீண்ட நேரம் ஆகியும் சிறுமி திரும்பி வீட்டுக்கு வரவில்லை. இதனையடுத்து அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் சிறுமி கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து தடாகம் போலீசில் புகார் செய்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை இவர்களது வீட்டின் அருகே உள்ள சந்தில் சிறுமி கை, கால் கட்டப்பட்ட நிலையில் உடலில் காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த தகவல் கிடைத்ததும் தடாகம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கொலை செய்த மர்ம நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்ட சிறுமியின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் 40-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். சிறுமியை கொலை செய்த குற்றவாளிகளை உடனே கண்டு பிடித்து கைது செய்ய வேண்டும். சிறுமியின் சாவுக்கு நீதி வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர். திடீர் சாலை மறியலால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

    இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    குடி பழக்கத்தில் இருந்து விடுபட முடியாத விரக்தியில் லாரி டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

    கோவை:

    உடுமலை அருகே உள்ள செல்லப்பம்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜ். இவரது மகன் முத்துக்குமார் (வயது 33). லாரி டிரைவர். திருமணமாகவில்லை. குடிபழக்கத்துக்கு அடிமையான முத்துக்குமார் அதில் இருந்து விடுபடுவதற்காக கடந்த 2 வருடங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

    ஆனால் குடி பழக்கத்தில் இருந்து விடுபட முடியவில்லை. இதனால் மனவேதனை அடைந்த முத்துக்குமார் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தான் தங்கி இருந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து முத்துக்குமாரின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த துப்புரவு தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    கோவை போத்தனூரை சேர்ந்தவர் மோகன் (வயது 48). துப்புரவு தொழிலாளி. சம்பவத்தன்று இவர் குடிபோதையில் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மோகனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×