search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை"

    பாராளுமன்ற தேர்தலையொட்டி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் 3 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    கோவை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி விஜய லலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் அதிகாலை 3 மணியில் இருந்து வெளியூரில் இருந்து கோவைக்கு வரும் ஆம்னி பஸ்களில் காந்திபுரம், நவ இந்தியா, ஆவாரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது பெங்களூரில் இருந்து கோவைக்கு வந்த ஆம்னி பஸ்சில் காய்கறி பொருட்களுக்கு நடுவே 3 மூட்டைகளில் 150 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த 3 மூட்டை புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் என தெரிய வந்தது.மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த ஆம்னி பஸ்சையும் பறிமுதல் செய்தனர்.

    புகையிலை பொருட்களை எடுக்க வந்த மர்மநபர்கள் அதிகாரிகள் சோதனையிடுவதை அறிந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களையும் அதிகாரிகள் தேடி வருகிறார்கள். #LSPolls

    கோவை, மேட்டுப்பாளையத்தில் சொகுசு காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.8½ லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். #LSPolls
    கோவை:

    பாராளுமன்றத் தேர்தலையொட்டி கோவை தெற்கு தொகுதியில் பறக்கும்படை அதிகாரி ஷீலா தலைமையிலான குழுவினர் இன்று கோவை காந்திபுரம் ஜி.பி. சிக்கனல் அருகே சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரூ.7 லட்சத்து 21 ஆயிரத்து 500 இருந்தது. காரில் கோவை சித்ரா பகுதியை சேர்ந்த மனோ (வயது 29) மற்றும் 2 பேர் இருந்தனர்.

    பணம் குறித்து விசாரித்தபோது வியாபாரத்துக்கு பணம் கொண்டு செல்வதாக கூறினார்.

    இருந்தாலும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரி அதனை கருவூலத்தில் ஒப்படைத்தார்.

    இதேபோன்று சிறுமுகை சத்தி மெயின் ரோடு கூத்தமண்டிபிரிவில் இன்று காலை பறக்கும் படை அதிகாரி ரவிச்சந்திரன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பெத்திக்குட்டையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு ஒரு கார் வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் வந்த கேரளாவை சேர்ந்த பென்னி (44) என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் குமரேசன், புனிதா ஆகியோரிடம் ஒப்படைத்தனர். #LSPolls

    கோவை பீளமேட்டில் மண்ணில் புதைந்து வடமாநில தொழிலாளி பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் மிதுன் மஞ்சித் (30). இவர் கடந்த 3 மாதமாக கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் சாலையில் உள்ள காஸ்டிங் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று எந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென எந்திர பிளேட் உடைந்து 7 அடி ஆழ குழிக்குள் மிதுன் மஞ்சித் தவறி விழுந்தார். அவரை மணல் மூடியது. இதனை பார்த்த சக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மணலை அகற்றி மிதுன் மஞ்சித்தை மீட்க முயன்றனர். ஆனால் அவர் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை தான் மீட்க முடிந்தது.

    இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போதிய பாதுகாப்பு வசதி இல்லாமல் தொழிலாளர்களை பணியில் அமர்த்தியதாக சூப்பர்வைசர் கருப்பசாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவையில் ஜோதிடரை தாக்கி ரூ.5 லட்சம் பறித்த தம்பதி உள்பட 6 பேர் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் தெக்குபாளையத்தை சேர்ந்தவர் குபேரன். இவரது மனைவி காயத்ரி. இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் திருபுவனம் புளியூரை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் பாலமுருகன் (33) என்பவரை பார்க்க சென்றனர்.

    பாலமுருகன் நீர்ஜோதிடம் பார்த்து வருகிறார். ஜோதிடர் தம்பதியின் நிலையை ஆராய்ந்த பின்னர் நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறீர்கள். குறிப்பாக பணக்கஷ்டம் மற்றும் கடன் தொல்லையால் அவதி மற்றும் அவமானப்பட்டு வருகிறீர்கள் என்று கூறினார்.

    ஆமாம் என்று ஒப்புக்கொண்ட தம்பதி இது எப்போது சரியாகும். பரிகாரம் உள்ளதா? என்று கேட்டனர். ரூ.3 ஆயிரம் கொடுத்தால் பரிகாரம் செய்து தருகிறேன். அதற்கு பின்னர் உங்கள் பணப்பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்று கூறினார். தற்போது அவ்வளவு பணம் இல்லை என்று கூறி விட்டு கோவை திரும்பினர்.

    சிறிது நாட்கள் கழிந்து ஜோதிடரை போனில் தொடர்பு கொண்ட தம்பதி பரிகாரம் செய்ய பணம் தயாராக உள்ளது வீட்டிற்கு வந்து பரிகாரம் செய்து தரவேண்டும் என்று கூறினர்.

    இதனையடுத்து கடந்த 14-ந்தேதி ஜோதிடர் பாலமுருகன் கோவை வந்தார். காந்திபுரத்தில் காத்திருந்த அவரை தம்பதி வந்த காரில் ஏற்றிக்கொண்டனர். பரிகாரம் செய்வது அக்கம் பக்கத்தினருக்கு தெரியக்கூடாது என்று கேட்டுக்கொண்டனர். அதற்கும் ஜோதிடர் சம்மதித்தார்.

    காரில் இருந்து இறங்கிய பின்னர் வீட்டுக்குள் சென்றனர். வீட்டில் தம்பதி உறவினர்கள் போத்திராஜ், சதீஷ் உள்பட 4 பேர் இருந்தனர். கதவை சாத்திய பின்னர் குபேரன் ஜோதிடரை தாக்கினார். நாங்கள் பணகஷ்டத்தில் இருப்பது உனக்கு தெரியும். பரிகாரம் எல்லாம் வேண்டாம். நீயே ரூ.40 லட்சம் கொடு என்று மிரட்டினர்.

    பரிகாரம் செய்ய வந்த ஜோதிடர் அதிர்ச்சியடைந்தார். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறினார். இதில் ஆத்திரமடைந்த கும்பல் ஜோதிடரை சரமாரியாக தாக்கியது. வலி தாங்கமுடியாத ஜோதிடர் ரூ.40 லட்சம் முடியாது. என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சினார்.

    ரூ.5 லட்சத்துக்கு ஒப்புக்கொண்ட கும்பல் உனது தந்தையை மதுரை மாட்டுத்தவணியில் காத்திருக்கும் எங்கள் நண்பர் பாண்டி என்பவரிடம் கொடுக்க சொல் என்று மிரட்டினர். அதன்படி ஜோதிடர் தனது தந்தையிடம் அவசர தேவை என்று கூறி ரூ.5 லட்சத்தை மதுரை மாட்டுத்தாவணியில் காத்திருக்கும் பாண்டி என்பவரிடம் கொடுக்கும்படி கூறினார்.

    ஜோதிடர் தந்தையும் ரூ.5 லட்சத்தை எடுத்துக்கொண்டு மாட்டுத்தாவணியில் காத்திருந்த பாண்டி என்பவரிடம் கொடுத்தார். பணம் பெற்றுக்கொண்ட பாண்டி கோவை கும்பலுக்கு பணம் பெற்றுக்கொண்டாக தகவல் தெரிவித்தார்.

    இதனையடுத்து காரில் ஜோதிடரை ஏற்றி மெயின் ரோட்டில் இறக்கி விட்டனர். மேலும் இது பற்றி வெளியே கூறினால் தொலைத்து விடுவோம் என்று மிரட்டினர்.

    தாக்குதலில் படுகாயம் அடைந்த ஜோதிடர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிந்த பின்னர் நரசிம்மநாயக்கன்பாளையம் போலீசில் இது குறித்து புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தேவராஜ் வழக்குப்பதிவு செய்து தம்பதி உள்பட 6 பேர் கும்பலை தேடி வருகிறார்கள்.

    கோவையில் இருந்து கேரளாவுக்கு ரெயிலில் 3½ கிலோ தங்க நகைகள் கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு ரெயில் நிலையத்தில் நேற்று ஒலவக்கோடு ரெயில்வே இன்ஸ்பெக்டர் அனிஷ் தலைமையில் போலீசார் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கோவையில் இருந்து கோர்பா- திருவனந்தபுரம் ரெயில் வந்தது. ரெயிலில் ஏறி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அதிகாரிகளை கண்டதும் ரெயிலில் இருந்து 3 பேர் குதித்து தப்பி ஓட முயன்றனர்.

    உஷாரான அதிகாரிகள் அவர்களை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள் இன்றி 3.48 கிலோ தங்க நகைகள் கடத்தி வந்தது தெரியவந்தது.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தர்மேந்திர குமார் (வயது 30), பூபேந்திர சிங் (20), ரேஞ்சர் சிங் (26) ஆகியோர் என்பதும் அவர்கள் கோவையில் இருந்து தங்க நகைகளை திருச்சூருக்கு கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    கோவையில் பறக்கும் படை சோதனையில் ரூ. 7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #ParliamentElection
    கோவை:

    பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கோவை வடவள்ளி அருகே உள்ள பொம்மனாம் பாளையம் பகுதியில் பறக்கும் படை அதிகாரி உலகநாதன் தலைமையில் இன்று வாகன சோதனை நடைபெற்றது. அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஒரு பையில் ரூ. 7 லட்சம் இருந்தது.

    இதனை வடவள்ளியை சேர்ந்த சதீஷ் என்பவர் கொண்டு வந்தார். அவரிடம் விசாரித்தபோது திருமண நிகழ்ச்சிக்கு மணமேடை அமைக்க அட்வான்சாக இந்த பணத்தை வாங்கி வந்ததாக தெரிவித்தார்.

    ஆனால் அதற்கு உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் இந்த பணம் கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. #ParliamentElection

    கோவை அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை மதுக்கரை பாரதி காலனியை சேர்ந்தவர் பிரின்ஸ் ஜோசப் (32). கால் டாக்சி டிரைவர்.சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பிய போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த 3 பவுன் நகை திருட்டு போய் இருந்தது. இது குறித்து பிரின்ஸ் ஜோசப் மதுக்கரை போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை சுண்டக்காமுத்தூரை சேர்ந்தவர் திருப்பதி (47). இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    வீட்டின் உள்ளே இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த 5 பவுன் நகையை காணவில்லை. அதனை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.இது குறித்து பேரூர் போலீசில் திருப்பதி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகர் ரஞ்சித் அறிவித்தார். #PMK #ActorRanjith

    கோவை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பல கட்சிகளிடம் தொகுதி பங்கீடு பேசப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகர் ரஞ்சித் அறிவித்தார்.

    கோவையில் நடிகர் ரஞ்சித் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கடந்த வாரம் வரை முதலமைச்சருக்கு எதிராக பேசிவிட்டு, தற்போது அவர்களோடு கூட்டணி வைப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    கூட்டணி தொடர்பாக பா.ம.க. தலைமை தொண்டர்களிடம் எந்த கருத்தும் கேட்கவில்லை, ஆனால் தொண்டர்களிடம் கருத்து கேட்கப்படும் என பொதுக்குழுவில் அறிவித்தார்கள்.

    மதுவுக்கு எதிராகப் போராடிவிட்டு மதுக்கடை நடத்துவோர் உடன் கூட்டணி வைப்பது ஏற்புடையதல்ல. இளைஞர்கள், பொதுமக்களை நொடிப்பொழுதில் பாமக ஏமாற்றிவிட்டது.

    நான்கு பேருக்கு கூஜா தூக்கிக்கொண்டு என்னால் வாழ முடியாது. நம்பிக்கையுடன் கட்சியில் இணைந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

    அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார்களை கூறிவிட்டு எப்படி அதிமுகவோடு கூட்டணி வைக்கலாம்? அன்புமணி எப்படி மக்களிடம் சென்று வாக்குகள் சேகரிப்பார்? என கேள்வி எழுப்பியுள்ளார். #PMK #ActorRanjith
    கோவையில் அனுமதியின்றி இயங்கிய 40 பைக் டாக்சிகளை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    கோவை:

    கோவையில் பல்வேறு கால்டாக்சி நிறுவனங்கள் இயங்கி வருகிறது. ஆன்லைன் அழைப்பு அல்லது முன்பதிவு செய்தால் வீட்டிற்குகோ அல்லது இருக்கும் இடத்துக்கோ டாக்சி வந்து விடும். விரும்பிய இடங்களுக்கு சிரமம் இன்றி பயணிக்கலாம்.

    கால் டாக்சியை தொடர்ந்து பைக் டாச்சி விடப்பட்டது. இது பொதுமக்களுக்கு புதுமையாக தெரிந்தது. கால் டாச்சியை விட குறைந்த கட்டணமாகவும், குறுகிய சாலையில் எளிதில் சென்றுவர வசதியாகவும் இருந்தது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. ஆனால் டாக்சி உரிமையாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    அண்மையில் ஓலா- ரேபிடோ இணைந்து இயக்கும் பைக் டாச்சி குறித்து அறிவிப்பு வெளியானது. இது குறித்து அறிந்த சிலர் பைக் டாச்சிகள் உரிய அனுதியின்றியும், ஆவணங்கள் இன்றியும் செயல்படுவதாக போக்குவரத்து இணை கமி‌ஷனர் கிருஷ்ணமூர்த்தியிடம் புகார் தெரிவித்தனர்.

    இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மத்திய போக்குவரத்து அதிகாரி பாஸ்கர் தலைமையில் இன்று வாகன சோதனை செய்யப்பட்டது.

    இதில் 40 பைக் டாச்சியை சோதனை செய்தபோது உரிய அனுமதியோ, ஆவணங்களோ இல்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து 40 பைக் டாச்சியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


    கோவையில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை மதுக்கரை யார்டு பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் இதுகுறித்து ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் ராணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கேரளாவில் இருந்து வந்த ரெயிலில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவையில் 3 இடங்களில் நடந்த விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலியாகினர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் சேகர். இவர் தேவகோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகி றார்.

    இவரது மகன் கோகுல பாண்டியன்(வயது 21) கோவை அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி, வகுப்புக்கு சென்ற வந்தார். சம்பவத்தன்று இவர் நண்பரது மோட்டார் சைக்கிளில் நரசிபுரம் ரோட்டில் சென்றார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    இதில் கீழே விழுந்த கோகுலபாண்டியன் படுகாயம் அடைந்தார். அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்....

    பீகார் மாநிலம் சாம்ஷெட்பூர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீத்குமார் மாதோ(25). இவர் கோவை கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவரும், இவரது நண்பரான சதாத் உசைன்(20) என்பவரும் மோட்டார் சைக்கிளில் அன்னூர்-தென்னம்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஒரு வேன் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சஞ்சீத்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த சதாத் உசைன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடகோவை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமசாமி என்பவரது மனைவி ராமாத்தாள்(73). இவர் சாய்பாபாகாலனி பாரதிபார்க் 2-வது வீதியில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த கிரேன் இவர் மீது மோதியது.

    இதில் படுகாயமடைந்த ராமாத்தாளை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக கிரேனை ஓட்டி வந்த டிரைவரான பென்னாகரத்தை சேர்ந்த அஜித்குமார்(21) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயமான சம்பவத்தையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    தொண்டாமுத்தூர் அருகே உள்ள போளுவாம் பட்டியை சேர்ந்த சவுந்தர் ராஜன் என்பவரது மகள் கல்பனா என்ற சவுடேஸ்வரி(21). பி.சி.ஏ. பட்டதாரி. இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து நிச்சயித்துள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 14-ந் தேதி மணியகாரம்பாளையத்தில் உள்ள உறவினரை பார்க்க சென்ற கல்பனா அதன்பிறகு வீட்டுக்கு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கல்பனா கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின்பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்பனாவை தேடி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    குனியமுத்தூர் திருமூர்த்தி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் யமுனா தேவி (22) ஆவாரம்பாளையத்தில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற யமுனா தேவி அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

    புகாரின்பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து யமுனா தேவியை தேடி வருகின்றனர்.

    கோவை கோல்டுவின்ஸ் பகுதியை சேர்ந்தவர் மரிய அந்தோணி. இவரது மனைவி சங்கமேஸ்வரி என்ற சாந்தி(வயது 35).

    இவர்களது மகள் மகேஷ்வரி(9). சம்பவத்தன்று மரிய அந்தோணி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் இருந்த சாந்தி, மகேஷ்வரியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பல இடங்களில் தேடிப் பார்த்தும் இருவரும் கிடைக்க வில்லை. இதுகுறித்து மரிய அந் தோணி பீளமேடு போலீ சில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான சாந்தி, மகேஷ்வரி ஆகியோரை தேடி வருகின்றனர்.

    ×