search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை"

    கோவையில் ஜவுளிக்கடை ஊழியர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கொடைக்கானல் அருகே உள்ள பன்னக்காட்டை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மகன் ராஜேஷ் கண்ணா (வயது 24).

    இவர் கோவை ஒப்பணகார வீதியில் உள்ள ஜவுளிக் கடையில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இதற்காக ராஜேஷ் கண்ணா மகாளியம்மன் கோவில் வீதியில் ஜவுளிக்கடைக்கு சொந்தமான குடோனில் சக ஊழியர்களுடன் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார்.

    நேற்று மாலை இவர் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டு குடோனுக்கு திரும்பினார். குடோனில் இருந்த ராஜேஷ் கண்ணா திடீரென பூச்சி மருந்தை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.

    இதனை பார்த்த சக ஊழியர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் ராஜேஷ் கண்ணாவை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இரவு ராஜேஷ் கண்ணா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பெரியக்கடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் கண்ணா காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை சிறுமுகை அருகே உள்ள மீனம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன் (வயது42). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் மனவேதனை அடைந்த முருகன் மதுவுடன் வி‌ஷத்தை கலந்து குடித்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடடினயாக அவரை மீட்டு அன்னூர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முருகன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவையில் ரவுடி கொலையில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை புலியகுளம் சிறு காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் லியோ மார்ட்டின் (29) இவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.

    நேற்று முன்தினம் இரவு லியோ மார்ட்டின் அலமேலு மங்கா லே-அவுட் அருகே கத்தி குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டு இருந்தார்.

    இதனை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலே அவர் இறந்தார்.

    இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் லியோ மார்ட்டினை புலிய குளம் துல்லா ஆறுமுகம் வீதியை சேர்ந்த தருண் என்கிற இன்பிரண்ட் ராஜன் (19), கொண்டசாமி கோவில் வீதியை சேர்ந்த விக்கி என்கிற சண்முகம் (19) ஆகியோர் கொலை செய்தது தெரிய வந்தது.

    அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்த போது முன் விரோதம் காரணமாக லியோ மார்ட்டினை குத்தி கொன்றதாக தெரிவித்தனர்.

    கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் அதில் இருந்து அடிக்கடி சந்திக்கும் போதெல்லாம் தங்களுக்கும் லியோ மார்ட்டினுக்கும் தகராறு ஏற்படும் என்றும் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் கொன்றதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர்.

    கைது செய்யப்பட்ட 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கோவை அருகே மூதாட்டியிடம் 4½ பவுன் செயின் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் தாமோதரன். இவரது மனைவி இந்திரா (வயது67). நேற்று இரவு இவர் கார்மல் கார்டன் பள்ளி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து 2 மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் மூதாட்டியின் அருகில் சென்று முகவரி கேட்டனர். அவர் சொல்லிக்கொண்டு இருக்கும் போது அவர் கழுத்தில் அணிந்து இருந்த 4½ தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.

    இதில் அதிர்ச்சியடைந்த இந்திரா இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்துச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    கோவையில் பிரபல ரவுடி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை புலியகுளம் சிறு காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் லியோ மார்டின் (வயது 29). இவர் மீது கொலை, அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது.

    நேற்று இரவு லியோ மார்டின் அலமேலுமங்கா லே-அவுட் அருகே கத்தி குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக லியோ மார்டினை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    பின்னர் இது குறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் நேற்று இரவு மது போதையில் இருந்த லியோ மார்டின் புலியகுளம் துல்லா ஆறுமுகம் வீதியை சேர்ந்த தருண் என்கிற இன்பிரண்ட்ராஜன் (19) என்பவரது வீட்டுக்கு சென்றார்.

    அங்கு தருண் மற்றும் கொண்டசாமி கோவில் வீதியை சேர்ந்த விக்கு என்கிற சண்முகம் (19) ஆகியோரிடம் கஞ்சா கேட்டார். அவர்கள் கொடுக்க மறுத்து இங்கு இருந்து செல்லுமாறும் கூறி உள்ளனர்.

    ஆனால் லியோ மார்டின் செல்ல மறுத்து 2 பேரையும் தாக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து கத்தியால் லியோ மார்டினின் வயிறு, மார்பு பகுதிகளில் சரமாரியாக குத்தி உள்ளனர். இதில் அவர் இறந்தது தெரியவந்தது.

    இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபல ரவுடியை குத்தி கொலை செய்து விட்டு தலைமறைவான தருண், சண்முகம் ஆகியோரை தேடி வருகிறார்கள்.

    கோவை அருகே மோட்டார் சைக்கிளை எரித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை ஆவாரம்பாளையம் அருகே உள்ள புராணி காலனியை சேர்ந்தவர் முஸ்தாக் அகமது (வயது 26). சம்பவத்தன்று இவர் குடிபோதையில் வந்து அவரது மனைவியிடம் தகராறு செய்து கொண்டு இருந்தார். இதனை பார்த்த பக்கத்து வீட்டில் வசித்து வரும் சுந்தர் கணேஷ் என்பவர் கணவன்-மனைவி ஆகியோரை சமாதம் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த முஸ்தாக் அகமது, சுந்தர் கணேசின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்து விட்டு தலைமறைவானார்.

    இது குறித்து சுந்தர் கணேஷ் பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முஸ்தாக் அகமதுவை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    சென்னையில் 72 இடங்களிலும், கோவையில் 2 இடங்களிலும் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். #ITRaid
    சென்னை:

    சென்னை, கோவையில் செயல்படும் நகைக்கடை, ஜவுளிக்கடை, சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை விவரத்தை வருமான வரித்துறைக்கு சரிவர தெரிவிக்காமல் வரி ஏய்ப்பு செய்து வருவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

    இதன் அடிப்படையில் முக்கிய நிறுவனங்கள் தாக்கல் செய்திருந்த வருமான வரி விவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது பல நிறுவனங்களில் வருமானத்துக்கு ஏற்ப வரி செலுத்தாதது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்த வணிக நிறுவனங்களின் பட்டியல் எடுக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் இன்று காலை சென்னையில் 72 வணிக நிறுவனங்களின் கடைகள், அலுவலகங்கள், குடோன்களில் ஒரே நேரத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதேபோல் கோவையில் 2 இடங்களிலும் சோதனை நடைபெற்றது.



    இதில் ரேவதி குழுமத்தில் ஜவுளிக்கடை, நகைக்கடை, வீட்டு உபயோக பொருட்கள், சூப்பர் மார்க்கெட் என 8 இடங்களில் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன.

    லோட்டஸ் குழுமம், ஜி.ஸ்கொயர் குழுமம் ஆகியவற்றிலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    சென்னையில் மொத்தம் 72 இடங்கள், கோவையில் 2 இடங்கள் என 74 இடங்களில் 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் கணக்கில் வராத பணம், ஆவணங்கள் எவ்வளவு கைப்பற்றப்பட்டது என்பது சோதனையின் முடிவில் வெளியிட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #ITRaid
    கோவையில் யானை தாக்கி தொழிலாளி பலியானார். 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை ஆனைகட்டி அருகே உள்ள கண்டிவழியை சேர்ந்தவர் முருகன் (வயது 40). கூலித் தொழிலாளி.

    இவர் நேற்று இரவு கொண்டனூர்புதூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிப்பதற்காக சென்றார். பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் பணப்பள்ளியில் உள்ள தனது மனைவி வீட்டுக்கு நடந்து சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒற்றை யானை துதிக்கையால் முருகனை தாக்கி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் யானை தாக்கி முருகன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் இதுகுறித்து பெரிய நாயக்கன் பாளையம் வனத்துறையினர் மற்றும் துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முருகனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மற்றொரு சம்பவம்...

    கோவை பூச்சியூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இந்த யானைகள் அடிக்கடி மலைப்பகுதியில் இருந்து இறங்கி வந்து மலையடிவார பகுதிகளில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து விளைபொருட்களை நாசப்படுத்தி செல்கிறது.

    இந்த மலையடிவார பகுதியில் ஹைடெக் சிட்டி என்ற பகுதி உள்ளது. இங்கு அடிக்கடி யானைகள் வரும் என்பதால் இங்கு பொதுமக்கள் செல்ல வனத்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் இந்த பகுதிக்கு சென்று மது குடிப்பதை வழக்கமாக கொண்டு இருந்தனர்.

    நேற்று இரவு இந்த பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மது குடித்து கொண்டு இருந்தனர்.

    அப்போது மலைப்பகுதியில் இருந்து 2 யானைகள் இறங்கி வந்தது. இதனை பார்த்த இளைஞர்கள் அலறியடித்து உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனை பார்த்த யானைகள் இளைஞர்களை விரட்ட தொடங்கியது.

    அப்போது ஒரு ஆண் யானை சென்னை சிட்டலபாக்கம் நேரு நகரை சேர்ந்த செந்தில்குமார் (வயது 37), துடியலூர் ஆர்.எஸ். ரோட்டை சேர்ந்த மனோஜ் கார்த்திக் (31) ஆகியோரை துதிக்கையால் தூக்கி வீசியது.

    இதில் 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடி யானைகளை காட்டுக்குள் விரட்டினர். பின்னர் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேருக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த தகவல் கிடைத்ததும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
    கோவை அருகே தொழிலாளி உள்பட 2 பேர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை வீரபாண்டி புதூரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 48). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 10 வருடங்களாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார்.

    இதற்காக பல இடங்களில் சிகிச்சை பார்த்தும் வலி குணமாகவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக முருகேசன் மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.

    இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக முருகேசனை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே முருகேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிறுமுகையை சேர்ந்தவர் மணியன் (65). விவசாயி. இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த மணியன் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வி‌ஷத்தை குடித்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மணியன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை சிங்காநல்லூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
    கோவை:

    கோவையில் தனியார் குடியிருப்பு ஒன்றில் தொழிலாளர்கள் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியை செய்துள்ளனர்.

    அப்போது விஷவாயு தாக்கியதில் இரு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் கோவை சிங்காநல்லூரை சேர்ந்த முருகவேல், பாண்டித்துரை என தெரியவந்துள்ளது.

    இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். #tamilnews
    கோவை அருகே ஊருக்குள் புகுந்து ஒற்றை காட்டு யானை அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை நரசிம்ம நாயக்கன் பாளையம் அருகே உள்ள தெற்கு பாளையத்தை சேர்ந்தவர் மணி (55). விவசாயி. இவரது தோட்டத்திற்குள் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கு இருந்த 40 தென்னை மரங்களின் குருத்துக்களை தின்று சேதப்படுத்தியது.

    பின்னர் அங்கிருந்த சிவக்குமார் வீட்டின் காம்பவுண்டு சுவரை உடைத்து உள்ளே நுழைந்தது. வீட்டில் சிவக்குமாரும் அவரது மனைவி முத்துவும் தூங்கி கொண்டு இருந்தனர். யானை காம்பவுண்டு சுவரை உடைக்கும் சத்தம் கேட்டு விழித்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். யானை வீட்டிற்குள் நுழைந்து விடும் என்ற அச்சத்தில் இருவரும் சமையல் அறையில் பதுங்கி கொண்டனர்.

    சற்று நேரம் அங்கிருந்த யானை பின்னர் அப்பகுதி செட்டியார் தோட்டத்தில் உள்ள விஜய கோபால் தோட்டத்திற்குள் புகுந்து சேதப்படுத்தியது. இது குறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து பெரிய நாயக்கன் பானையம் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக போராடி மேற்கு தொடர்ச்சி மலை பூச்சியூர் பகுதிக்கு யானையை விரட்டி விட்டனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன் இப்பகுதியில் விநாயகன், சின்னதம்பி ஆகிய இரு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதில் விநாயகன் யானையை பிடித்து முதுமலையில் விட்டனர். தற்போது ஊருக்குள் புகுந்து இருப்பது மற்றொரு யானையான சின்னதம்பியாக இருக்கலாம் என பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    கோவை அருகே நடந்த ரூ.1 கோடி நகை கொள்ளை வழக்கில் 7 பேர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

    கோவை:

    திருச்சூர் கல்யாண் நகைக் கடையில் இருந்து கடந்த 7-ந் தேதி கோவைக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளை காரில் கொண்டு வந்தனர்.

    கோவை நவக்கரை அருகே கார் வந்த போது, ஒரு கும்பல் வழிமறித்து நகைகளை கொள்ளையடித்து விட்டு காருடன் தப்பிச் சென்றது. இதுகுறித்து கே.ஜி. சாவடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

    ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பைரோஸ் என்பவர் தலைமையில் 12 பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டதும், நகைகளுடன் பைரோஸ் திருப்பதிக்கு தப்பிச் சென்றதும் தெரிய வந்தது. போலீசார் விரைந்து சென்று பைரோசை மடக்கிப் பிடித்தனர்.

    ஆனால் நகைகளை அவர் தனது தாய் சமா, அண்ணன் அகமது சலீம் ஆகியோரிடம் கொடுத்ததும், அவர்கள் திருமலா பகுதியில் பதுங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆந்திர போலீசார் உதவியுடன் சமா, அகமது சலீம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.60 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    போலீசாரிடம் சிக்கி உள்ள பைரோசிடம் நடத்திய விசாரணையில் கொள்ளையில் தொடர்புடையவர்கள் பற்றிய முழுவிவரங்களும் தெரிய வந்தது. அதன்பேரில் மேலும் 5 பேரை மடக்கிப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்டதில் மீதி நகைகள் எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்ற விவரம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

    இதுதொடர்பாக விசாரிக்க சமா, அகமது சலீம் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். அதற்கு கோர்ட்டு அனுமதி பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை தனிப்படை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக திருப்பதியில் முகாமிட்டுள்ள தனிப்படையினர் இன்று அவர்கள் இருவரையும் காவலில் எடுப்பார்கள் என தெரிகிறது.

    ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக சென்னை கோர்ட்டில் சரண் அடைந்த வேலூரை சேர்ந்த தமிழ்ச் செல்வன், ஜெயப்பிரகாஷ் ஆகியோரை இன்று கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். அப்போது இருவரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்கின்றனர்.

    தனிப்படை போலீசாரிடம் சிக்கிய 5 பேரை இன்று  கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். கும்பல் தலைவன் பைரோஸ் உள்பட மேலும் 5 பேர் பேர் ஓரிரு நாட்களுக்குள் கைது செய்யப்பட்டு ஆஜர்படுத்தப்படுவார்கள் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×