search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை"

    கோவையில் வளர்த்தவர் ‘போ’ என்று கூறியதால் அம்மனிடம் தஞ்சம் அடைந்த ‘கிளி’ 2 நாட்களுக்கு பின் பறந்து சென்றது.
    கோவை:

    கோவை பாப்பநாயக்கன் பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 40). பிட்டர். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    முருகேசன் தனது வீட்டில் 1 வருடமாக ஸ்ரீ என்ற பச்சை கிளியை வளர்த்து வந்தார். இந்த கிளியை முருகேசனின் மகனின் நண்பர் பரிசளித்து இருந்தார். வீட்டில் உள்ள அனைவரிடமும் பாசமாக பழகும் இந்த கிளி முருகேசனின் மனைவி விஜயலட்சுமியை பப்பு என்று அழைக்கும்.

    பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பு முருகேசன், அவரது மனைவி, மகன்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருந்தனர். அப்போது வீட்டின் மேல் பகுதிக்கு சென்று கிளி அமர்ந்து கொண்டது. கிளியை முருகேசனின் மகன் மிரட்டும் வகையில் போ என்று கூறி உள்ளார். இதில் கோபம் அடைந்த கிளி பறந்து சென்றது. நீண்ட நேரம் ஆகியும் கிளி வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் கிளியை முருகேசன் அக்கம் பக்கத்தில் தேடினார்.

    அப்போது கிளி அந்த பகுதியில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் இருப்பது தெரிய வந்தது.

    அங்கு சென்று முருகேசன் பார்த்தபோது கிளி கோவிலில் உள்ள அம்மன் சிலையின் வலது தோளில் அமர்ந்து இருந்தது. கிளியை முருகேசன் ஸ்ரீ வா வா என்று பல முறை அழைத்தார். ஆனால் கிளி வரவில்லை. மேலும் கடந்த 2 நாட்களாக கிளி அம்மன் சிலையை விட்டு கீழே இறங்கவில்லை.

    இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் வேகமாக பரவியது. கிளியை பார்க்க அங்கு ஏராளமானோர் திரண்டனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மனின் வலது கையில் கிளி அமர்ந்து இருப்பது போல இந்த கிளியும் அமர்ந்து இருந்ததால் பொதுமக்கள் கிளியை அதிசயத்துடன் பார்த்து சென்றனர்.

    இது குறித்து கிளியின் உரிமையாளர் முருகேசன் கூறும்போது

    ஸ்ரீ எப்போதும் வீட்டை விட்டு வெளியே செல்லாது. மிளகாய் பழம், கொய்யா பழம் ஆகியவற்றை விரும்பி சாப்பிடும். பேசும், கோபம் வந்தால் யாரிடமும் பேசாமல் இருக்கும். என் மகன் போ என்று கோபமாக கூறியதால் கோபித்துக்கொண்டு பறந்து சென்ற கிளி அம்மன் மேல் அமர்ந்துள்ளது. எவ்வளவு அழைத்தும் வரவில்லை. எனவே கிளியை அம்மனுக்கே காணிக்கையாக வழங்குகிறேன் என்றார்.

    கடந்த 2 நாட்களாக அம்மன் சிலையின் மீது அமர்ந்து இருந்த கிளி இன்று காலை பறந்து சென்றது.

    கோவை அருகே கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 26). இவர் கோவையில் உள்ள ஒரு கலை கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார்.

    வெரைட்டிஹால் ரோட்டில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்த இவர் பகுதி நேரமாக ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்தும் வந்தார். நேற்று இவரது அறைக்கதவு வெகுநேரமாகியும் திறக்கப்படவில்லை.

    இதனால் சந்தேமதடைந்த லாட்ஜ் ஊழியர்கள் கதவை தட்டினர். அதன்பிறகும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பாலமுருகன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவஇடத்துக்கு இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அறையில் பாலமுருகன் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

    அதில், எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லாததால் தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதி இருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை ரெயிலில் இளம்பெண்ணிடம் நகை- பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் கணேசபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27). இவரது மனைவி அனுப்பிரியா (25). இவர்கள் மன்னார்குடி- கோவை செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருச்சியில் நேற்று இரவு ஏறினர்.

    இன்று அதிகாலை திருப்பூர் வந்ததும் அனுப்பிரியா தனது பேக்கை வைத்து வீட்டு பாத்ரூமுக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அங்கிருந்த பேக்கை காணவில்லை. அதில் 5 பவுன் நகை, ரூ.5.500 பணம், ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகள் இருந்தன. மர்ம நபர் கைபையை திருடிச்சென்றது தெரியவந்தது.

    இந்நிலையில் ரெயில் கோவை வந்தது. கோவை ரெயில்வே போலீசில் கார்த்திக் புகார் செய்தார். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகை பையை திருடிச்சென்ற நபரை தேடி வருகிறார்கள்.

    கோவை அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சரணடைந்த இருவரையும் காவலில் எடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    ராயபுரம்:

    திருச்சூர் கல்யாண் நகைக்கடையில் இருந்து கோவைக்கு காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் கடந்த 7-ந்தேதி கொள்ளையடிக்கப்பட்டது.

    கோவை நவக்கரை அருகே ஒரு கும்பல் காரை வழிமறித்து ஊழியர்களை மிரட்டி காருடன் நகைகளை கொள்ளையடித்து சென்றது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    நகைக்கடை ஊழியர்கள் வந்த கார் மதுக்கரை தென்றல் நகரிலும், கொள்ளையர்கள் தப்பிச் சென்ற 2 கார்களில் ஒரு கார் வலுக்குப்பாறையிலும் நிறுத்தப்பட்டு இருந்தது தெரிய வந்தது. கார்களை மீட்டு விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர்.

    கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் உரிமையாளர் சென்னையை சேர்ந்தவர் ஆவார். அவரிடம் விசாரித்த போது கோவையை சேர்ந்த ஒருவருக்கு காரை விற்று விட்டதாக கூறினார்.

    தொடர்ந்து நடந்த விசாரணையில் வேலூரை சேர்ந்த ஒருவர் இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்டதும், மொத்தம் 11 பேர் இந்த கொள்ளையை அரங்கேற்றியதும் தெரிய வந்தது. அவர்களை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டது. சென்னை, வேலூர், கேரளா உள்ளிட்ட இடங்களில் முகாமிட்டு போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

    இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக வேலூரை சேர்ந்த தமிழ்செல்வன், ஜெய பிரகாஷ் ஆகியோர் நேற்று சென்னை ஜார்ஜ் டவுண் கோர்ட்டில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இவர்கள் இருவரையும் காவலில் எடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருவரும் கோவை கோர்ட்டில் 18-ந் தேதி ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

    அப்போது இருவரையும் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு செய்யப்பட உள்ளது.

    40 ஆண்டுகளுக்கு முன் டென்மார்க் தம்பதிக்கு தத்துக்கொடுக்கப்பட்ட வாலிபர் தற்போது கோவையில் தனது பெற்றோரை தேடி வருகிறார்.
    கோவை:

    கோவை தொண்டாமுத்தூர் லிங்கனூரை சேர்ந்தவர் அய்யாவு. இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு கடந்த 1975-ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ராஜ்குமார் என்று பெயர் சூட்டினர். கருத்து வேறுபாட்டால் தாய் பிரிந்து சென்றார். அய்யாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இதனால் ராஜ்குமார் ஒரு தனியார் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

    கோர்ட்டு முறைப்படி டென்மார்க் தம்பதியான கெல்ட்- பெர்த் ஆண்டர்சன் ஆகியோருக்கு தத்துக்கொடுக்கப்பட்டார். ராஜ்குமார் கேஸ்பர் ஆண்டர்சனாக மாறினார்.

    டென்மார்க் அல்பர்க் நகரில் வசித்த ஆண்டர்சன் 40 வருடங்களுக்கு பின்னர் தன்னை பெற்றெடுத்த தாய்- தந்தையை பார்க்க கோவை வந்துள்ளார். கோவை வந்த அவர் சொந்த ஊரான லிங்கனூர் கருப்பராயன் கோவில் பகுதியில் விசாரித்து பார்த்தார். ஆனால் அவரால் பெற்றோர் மற்றும் உறவினர் குறித்த தகவலை சேகரிக்க முடியவில்லை. இதுகுறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் உதவுமாறு கேட்டுள்ளார்.


    கோவை அருகே வி‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை துடியலூர் அருகே உள்ள இடையர்பாளையம் அன்பு நகரை சேர்ந்தவர் சக்தி வேல் (25). குடிப்பழக்கம் இருந்து வந்தது. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர் வி‌ஷம் குடித்து விட்டார். இதனால் வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலே பரிதாபமாக இறந்தார். இது குறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை அருகே சித்த வைத்தியரை யானை மிதித்து கொன்றது.இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

    வடவள்ளி:

    கோவை ஆலாந்துறை அருகே உள்ள முள்ளங்காடு ஆதிவாசி கிராமத்தை சேர்ந்தவர் கிட்டி (75). சித்த வைத்தியர். நேற்று இவர் மூலிகை பறிக்க வெள்ளியங்கிரி மலைக்கு செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறி விட்டு சென்றார்.

    ஆனால் இரவு நேரமாகியும் கிட்டி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை தேடி வெள்ளியங்கிரி மலை பகுதிக்கு சென்றனர்.

    இன்று காலை முள்ளங்காடு ஊர் தலைவர் ரமேஷ் அத்தி மரக்குட்டை ஜல்லி மேடு பகுதியில் கிட்டியை தேடி சென்றார். அப்போது அங்கு கிட்டி பிணமாக கிடந்தார். அவரது குடல் வெளியே தள்ளியபடி இருந்தது.

    கிட்டியை யானை மிதித்து கொன்றது தெரிய வந்தது. இது குறித்து போளூவாம் பட்டி வனத்துறையினருக்கும் ஆலாந்துறை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வனத்துறையினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். வருவாய் ஆய்வாளர் குபேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் சரவணன் ஆகியோரும் வந்து விசாரணை நடத்தினார்கள்.

    யானை தாக்கி பலியான கிட்டியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் இப்பகுதியில் கடந்த 4 வருடத்தில் 7 பேர் யானை தாக்கி இறந்து உள்ளனர். இதனால் ஆதிவாசி மக்கள் பீதியில் உள்ளனர்.

    கோவையில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்காநல்லூர்:

    கோவை சிங்காநல்லூர் காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினசாமி (வயது 33). லேத் பட்டறை தொழிலாளி.

    இவர் இன்று காலை ஒண்டிப்புதூர் மேம்பாலத்தின் கீழ்புறம், பட்டணம் ரோடு பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    தகவல் அறிந்து மாநகர கிழக்கு சரக உதவி கமி‌ஷனர் சுரேஷ், இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ரத்தினசாமி உடல் அருகே விறகு கட்டைகள் கிடந்தன. மர்மநபர்கள் அவரை கட்டையால் தலையில் தாக்கி கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

    ரத்தினசாமிக்கு சுமா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். கொலை குறித்து தகவல் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் சம்பவ இடத்துக்கு ஓடி வந்தனர். ரத்தினசாமி உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

    ரத்தினசாமியை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை நடந்தது? அவருக்கு யாருடனாவது முன் விரோதம் இருந்ததா? என போலீசார் விசாரித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை அருகே ஆட்டோ மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை சுங்கம், தியாகி சிவராம் நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(வயது 23). இவர் நேற்று முன்தினம் இரவு சுங்கம் பைபாஸ் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோ, கோபாலகிருஷ்ணன் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த கோபாலகிருஷ்ணனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்தார்.

    தகவல் அறிந்து போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்தனர். ஆட்டோ டிரைவரான ராமநாதபுரத்தை சேர்ந்த சீனிவாசன் (32) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை அருகே சைக்கிளில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை காந்திபார்க் அருகே உள்ள சலீவன் வீதியை சேர்ந்தவர் மோகன் (வயது 61). கூலித் தொழிலாளி. நேற்று மதியம் இவர் தனது சைக்கிளில் வீட்டுக்கு சென்றார். ராகவேந்திரா கோவில் அருகே சென்ற போது திடீரென சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு மோகன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பெரியகடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவையில் நகை பட்டறை உரிமையாளர் வீட்டில் 45 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை பெரியகடை வீதி அருகே சாமி அய்யர் புது வீதி கே.சி.தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 44).

    இவர் பெரியகடை வீதியில் தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு 7 மணி அளவில் இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியே சென்றார். பின்னர் இரவு 8.30 மணிக்கு வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்ற போது பீரோவை திறந்து மர்ம நபர்கள் 45 பவுன் நகையை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து பெரியகடை வீதி போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவஇடத்துக்கு மாநகர மேற்கு சரக குற்றப் பிரிவு உதவி கமி‌ஷனர் ராஜ்குமார்நவராஜ், இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இதில் 2 இடங்களில் பதிவாகி இருந்த கைரேகைகள் சிக்கியது.

    கொள்ளை நடந்த வீட்டின் அருகே ஏராளமான வீடுகள், நகைபட்டறைகள் உள்ளன. வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது.

    இந்த மையத்தின் முன்புறம் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு  கேமிரா காட்சி களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கணேசன் வீட்டில் இருந்து குடும்பத்தினருடன் வெளியே செல்வதை கண்காணித்து மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே அதேபகுதியை சேர்ந்தவர்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம்? என போலீசார் கருதுகின்றனர். அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்கள் யார்-யார்? என பட்டியல் சேகரித்து போலீசார் விசாரணையை தீவிரப் படுத்தி உள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவையில் 4 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை நஞ்சப்பா ரோட்டில் உள்ள 4 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்து. அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர்கள் இன்று காலை உள்ளே சென்று பார்த்தபோது 3 கடைகளில் இருந்த ரூ.20 ஆயிரம் கொள்ளை போயிருந்தது. மற்றொரு கடையில் பூட்டு மட்டும் உடைக்கப்பட்டிருந்தது.

    இது குறித்து கடை உரிமையாளர்கள் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில் உள்ள பிளாஸ்டிக் எந்திரம் தயாரிக்கும் கம்பெனி, பேரிங் இரும்பு கம்பெனி உள்ளிட்ட 4 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் உள்ள மற்ற கடை உரிமையாளர்களையும் பீதியடைய செய்துள்ளது.

    ×