search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை"

    கோவை அருகே விபத்தில் 2 தொழிலாளர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை இருகூரை சேர்ந்தவர் அழகிரி (வயது 53). பீடம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சக்தி வேல்(44). கட்டிட தொழிலாளிகள்.

    இவர்கள் இருவரும் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக மொபட்டில் சென்றனர்.

    சின்னியம்பாளையத்தை அடுத்த தொட்டிப்பாளையம் பிரிவு பகுதியில் மொபட் சென்ற போது எதிரே வந்த ஜீப் இவர்கள் மீது வேகமாக மோதியது.

    இதில் அழகிரி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த சக்திவேலை பொதுமக்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விபத்துக்கு காரணமான ஜீப்பை உப்பிலிபாளையத்தை சேர்ந்த அருண்(27) என்பவர் ஓட்டி வந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை அருகே மீண்டும் ஊருக்குள் நுழைந்த சின்னதம்பி யானையை பார்த்த பொது மக்கள் அச்சம் அடைந்தனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடையில் இன்று அதிகாலை ஒற்றை காட்டுயானை அங்குள்ள கிருஷ்ணசாமி கோவில், தர்மராஜர் கோவில் எதிரே வந்தது.

    அங்கு ஜெகநாதன் என்பவரின் மனைவி வளர்மதி (வயது 51) நடத்தி வரும் மளிகை கடையை உடைத்து உள்ளே இருந்த அரிசி, உப்பு, பருப்பு, புளி, வெல்லம் உள்ளிட்டவைகளை தின்றும் மிதித்தும் நாசப்படுத்தின. இதில் 2 மூட்டை அரிசியை துதிக்கையால் தூக்கிச்சென்றது.

    பின்னர் அங்குள்ள விநாயகர் நகரில் பழனிச்சாமி, அம்மாயியம்மாள் உள்ளிட்ட 3 பேரின் வீடுகளை உடைத்து சேதப்படுத்தின. பின்னர் அங்கிருந்த வாழை மற்றும் விவசாய பயிர்களை தின்று நாசப்படுத்தியது.

    ஊருக்குள் புகுந்த ஒற்றை யானையை பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் அங்குள்ள மலைப்பகுதிக்குள் விரட்டினர்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது, கணுவாய், அப்பநாயக்கன்பாளையம், வரப்பாளையம், தாளியூர் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகன், சின்னத்தம்பி ஆகிய 2 காட்டுயானைகள் சுற்றித்திரிந்து குடியிருப்பை நாசப்படுத்தின. அதனை இடமாற்றம் செய்ய 4 கும்கிகள் வரவழைக்கப்பட்டன.

    அது பலன் அளிக்காமல்போகவே மயங்க ஊசி செலுத்தி விநாயகன் என்ற யானை பிடிக்கப்பட்டு முதுமலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது சின்னத்தம்பி என்ற யானை தப்பியது. அந்த யானை தான் இன்று ஊருக்குள் நுழைந்துள்ளது. இதனையும் இடமாற்றம் செய்ய வேண்டும். இல்லையென்றால் கோவிந்தராஜ் நகர், தர்மராஜ் நகர், பாலாஜி நகர், சூர்யா கார்டன், பன்னீர் கார்டன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறினர்.

    மீண்டும் காட்டுயானை ஊருக்குள் புகுந்ததால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவையில் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கல்வீசி தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை:

    கோவை வழியாக செல்லும் ரெயில்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது. இதுகுறித்து பயணிகள் ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்து வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று மாலை 5 மணியளவில் திருப்பூரில் இருந்து கோவை ரெயில் நிலையத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டு இருந்தது. ரெயில் வடகோவை ரெயில் நிலையத்தை தாண்டி வந்துகொண்டு இருந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த 3 வாலிபர்கள் ரெயில் மீது கல்வீசி தாக்கினர்.

    இதனை பார்த்த அந்த வழியாக ரோந்து சென்ற ஆர்.எஸ்.புரம் போலீஸ்காரர் சவுந்தரபாண்டியன் ரெயில் மீது கல்வீசி தாக்கிய 2 வாலிபர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தார். அப்போது ஒரு வாலிபர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் சிக்கிய வாலிபர்களை போலீஸ்காரர் சவுந்தரபாண்டியன் கோவை ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர்கள் ரத்தினபுரியை சேர்ந்த சூர்யா (வயது 18), சதீஸ்குமார் (18) என்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து ரெயில்வே போலீசார் 2 வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய ரத்தினபுரியை சேர்ந்த பிரவீன் என்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.

    கோவை அருகே தனியார் கல்லூரி ஊழியர் வீட்டில் நகை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை அருகே உள்ள கோவிந்த நாயக்கன் பாளையம் ஏ.ஜி. நகரை சேர்ந்தவர் தேவராஜ். தனியார் கல்லூரியில் லேப்-டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவிதா. இவர் அதே கல்லூரியில் அலுவலக உதவியாளராக உள்ளார். இவர்களது மகன் விக்னேசும் அக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று 3 பேரும் கல்லூரிக்கு சென்று விட்டனர். மாலை 4 மணியளவில் விக்னேஷ் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு திறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வீட்டிற்கு விரைந்து வந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது.

    அதில் வைக்கப்பட்டு இருந்த 4 பவுன் செயின்,2 பவுன் மைனர் சங்கிலி, 2 பவுன் மோதிரம் ஆகியவை திருட்டு போய் இருந்ததை கண்டு திடுக்கிட்டனர். இது குறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த ஆண்டு இதே போல் தேவராஜ் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு போய் இருந்தது.

    அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இன்னும் பிடிபடவில்லை.

    இந்த நிலையில் மீண்டும் திருட்டு நடைபெற்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது ஸ்டாலினின் விருப்பம் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். #EdappadiPalaniswami
    கோவை:

    கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  கூறியதாவது: 

    அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கான ஒப்பந்தம் விரைவில் முடிவு செய்யப்படும். விதிகளை மீறியதால்தான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

    ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது ஸ்டாலினின் விருப்பம். கூட்டணி அறிவிக்கப்பட்ட பிறகே யார் யார் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியும்.

    நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்தவுடன் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். தேர்தல் அறிவித்தவுடன் கூட்டணி அறிவிக்கும் சூழல் உருவாகும். அப்போது தெரிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார். #EdappadiPalaniswami 
    கோவையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பெற்ற குழந்தைகளை தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கோவை:

    கோவை சிங்காநல்லூர் மசக்காளிபாளையம் ரோடு, நீலிகோணார் வீதியை சேர்ந்தவர் பத்மநாபன்(வயது 45).

    இவர் சவுரிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவு மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி செல்வராணி(37)

    இவர்களுக்கு ஹேமாவர்சினி (15), ஸ்ரீஜா(8) என்ற 2 மகள்கள் உள்ளனர். ஹேமா வர்சினி 10-ம் வகுப்பும், ஸ்ரீஜா 3-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    பத்மநாபனுக்கு குடிப்பழக்கம் உண்டு. இவர் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம். இதனால் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    வழக்கம் போல நேற்று இரவும் பத்மநாபன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். எனவே செல்வராணி அவரை கண்டித்தார். இதில் ஆத்திரமடைந்த பத்மநாபன் மனைவியை அடித்து உதைத்து தாக்கினார். இதனால் மனமுடைந்த செல்வராணி வெள்ளலூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இன்று காலை 8.30 மணி அளவில் செல்வராணி தனது வீட்டுக்கு சென்றார். வீட்டுக்குள் குழந்தைகள் இருவரும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த பத்மநாபனை காணவில்லை.



    குழந்தைகள் உடலை பார்த்து செல்வராணி கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவஇடத்துக்கு உதவி கமி‌ஷனர் சுரேஷ், சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.

    குழந்தைகள் சடலமாக கிடந்த இடத்தில் ரத்தக்காயங்கள் எதுவும் இல்லை. ஆனால் குழந்தைகள் இருவரது கழுத்தும் நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்காக தடயங்கள் தெரிந்தது. இதனால் பத்மநாபன் தனது குழந்தைகள் கழுத்தை நெரித்து கொலைசெய்து விட்டு தப்பி ஓடியதை போலீசார் உறுதி செய்தனர்.

    சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தப்பி ஓடிய பத்மநாபனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பத்மநாபனின் செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவான பத்மநாபனை தீவிரமாக தேடி வருகின்றனர். #tamilnews
    கோவை அருகே விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலூர்:

    கோவை சூலூர் காங்கேயம் பாளையத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 22). இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி., இறுதி ஆண்டு படித்து வந்தார். தினமும் அதிகாலையில் புறப்பட்டு பீளமேடு காந்திமாநகரில் உள்ள 2 மாணவர்களுக்கு டியூசன் எடுப்பார். பின்னர் கல்லூரிக்கு செல்வது வழக்கம். இன்று அதிகாலை காங்கயம்பாளையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    சூலூர் பெரியகுளம் என்ற இடத்தில் வந்தபோது எதிரே அப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த சுரேஷ் வேலை முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதின. இதில் தூக்கி வீசப்பட்ட கல்லூரி மாணவர் சதீஷ்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சூலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிங்காநல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சுரேஷ் லேசாக காயத்துடன் தப்பினர்.

    இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #SwineFlu

    கோவை:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள எருக்கலாம்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 65). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

    இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. இதனையடுத்து கடந்த 24-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

    டாக்டர்கள் கந்தசாமியின் ரத்தத்தை பரிசோதனை செய்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து கந்தசாமியை டாக்டர்கள் சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை கந்தசாமி பரிதாபமாக இறந்தார்.

    தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 23 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 4 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 63 பேரும் என மொத்தம் 90 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #SwineFlu

    கோவை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை வீரகேரளம் அருகே உள்ள பெரிய தோட்டத்தை சேர்ந்தவர் ஈஸ்வர்குமார் (வயது 39). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் பெருமாள் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது தோட்டத்தில் உள்ள மோட்டார் சுவிட்சை போடுவதற்காக சென்றார்.

    அப்போது அதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசியது. இதில் உடல் கருகி உயிருக்கு போராடிய அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஈஸ்வர்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து காருண்யா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவையில் பன்றிக்காய்ச்சலுக்கு தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல், டெங்கு, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு பழையபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி(வயது 45). தொழிலாளி. பன்றிக்காயச்சலால் பாதிக்கப்பட்ட இவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை இறந்தார்.

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் கருப்பசாமி(வயது 68). பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 16-ந் தேதி முதல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இறந்தார்.

    நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் சரஸ்வதி (60). பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 9-ந் தேதி முதல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இவர் பரிதாபமாக இறந்தார். திருவாரூரை சேர்ந்தவர் ஹரிஹரன்(வயது 26). காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ரத்தபரிசோதனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து கடந்த 22-ந் தேதி ஹரிஹரன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். டெங்கு சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் இறந்தார்.

    கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் மல்லிகா(45). வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    மேல்சிசிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இறந்தார்.

    இதன்மூலம் கோவையில் டெங்கு, வைரஸ், பன்றிக் காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 76-ஆக உயர்ந்துள்ளது.

    தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக் காய்ச்சலுக்கு 42 பேர், டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர், வைரஸ் காய்ச்சலுக்கு 63 பேர் என மொத்தம் 108 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கோவையில் இருந்து 200 மது பாட்டில்கள் கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    கேரள மாநிலம் அட்டப்பாடி அகழி உதவி போலீஸ் சூப்பிரண்டு நவநீதுசர்மா, சோலையூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை அட்டப்பாடி கோட்டத்தரை பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள அரசு ஆஸ்பத்திரி அருகே சென்றபோது பெரிய பெட்டியுடன் 2 வாலிபர்கள் நின்றனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த பெரிய பெட்டியை சோதனை செய்தபோது 200 பாட்டில் வெளிநாட்டு மதுபாட்டில் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி சாவடியூரை சேர்ந்த மாரியப்பன் (வயது 27), சாலையூரை சேர்ந்த ராஜேந்திரன் (22) ஆகியோர் என்பதும் தெரியவந்தது.

    கோவையில் உள்ள வெளிநாட்டு மதுக்கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி அட்டப்பாடி ஆதிவாசி மக்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தியதாக கூறினர். இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    கோவை அருகே போலீஸ் ஏட்டு மயங்கி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாநகர போலீசில் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவில் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் குணசேகரன்(வயது 55). இவர் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை வீட்டில் இருந்த இவர் திடீரென மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்தார்.

    இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ×