search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர்"

    வேதாரண்யம் அருகே குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கள்ளிமேடு ஊராட்சியில் சுமார் 350 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு நிலத்தடி நீர் உப்பு தன்மையை அடைந்து விட்டது.

    இதனால் இப்பகுதிக்கு கடந்த 25 ஆண்டுக்களுக்கு முன்பு அருகில் உள்ள கிராமமான தாமரைபுலத்தில் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் தனியாரிடம் இடம் வாங்கி கிணறு வைத்து அதிலிருந்து தண்ணீர் எடுத்து வழங்கப்பட்டு வந்தது.

    மேலும் இந்த கிராமத்திற்கு அனைக்கரை கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமும் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு வீசிய கஜா புயலில் தாமரைப்புலத்திலிருந்து கள்ளிமேட்டிற்கு தண்ணீர் எடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்இணைப்புகள் பாதிக்கப்பட்டது.

    அதனை சீர் செய்வதற்கு அப்பகுதி மக்கள் விடவில்லை. எங்கள் பகுதியிலிருந்து தண்ணீர் எடுக்கக்கூடாது என கூறி தடுத்துவிட்டனர். இதனால் 25 ஆண்டுகளாக தாமரைப்புலத்திலிருந்து கள்ளிமேட்டிற்கு வழங்கிவந்த குடிநீர் வழங்கமுடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் அணைக்கரை கூட்டுகுடிநீர் திட்டத்தினை மட்டுமே நம்பி குடிநீர் பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. கோடைகாலம் என்பதால் அணைக்கரை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து வாரத்திற்கு ஒரு முறையே தண்ணீர் வருகிறது.

    அதுவும் குறைந்த அளவில் வருவதால் ஒரு வீட்டிற்கு ஒன்று அல்லது இரண்டு குடம் மட்டுமே பிடிக்கமுடிகிறது. இதனால் கள்ளிமேடு பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது.

    எனவே ஊராட்சி நிர்வாகம் தாமரைப் புலத்தில் உள்ள மின்இணைப்புகளை சரிசெய்து மீண்டும் அங்கிருந்து கள்ளிமேட்டிற்கு குடிநீர் வழங்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பம்மல் கல்குவாரி நீர் குடிநீராக பயன்படுத்த தகுதி உள்ளதா என்று ஆய்வு செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
    தாம்பரம்:

    பருவ மழை பொய்த்ததால் இந்த ஆண்டு சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் முற்றிலும் வறண்டு விட்டன.

    பூண்டி, புழல் ஏரியில் உள்ள தண்ணீரை இன்னும் ஒருவாரத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தண்ணீர் பிரச்சினை விசுவரூபம் எடுத்து உள்ளது. குடிநீருக்காக பொதுமக்கள் காலி குடங்களுடன் தினமும் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது.

    குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க கல்குவாரி நீர் மற்றும் காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய கிணற்று தண்ணீரை கூடுதலாக எடுத்து பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இதேபோல பம்மல் காமராஜபுரத்தில் உள்ள செங்கழுநீர் கல்குவாரியில் தேங்கி உள்ள நீரை குடிநீருக்கு பயன்படுத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ. 6.5 கோடி செலவில் பம்மல், அனகாபுத்தூர் ஆகிய 2 நகராட்சிகளிலும் தனித்தனியாக சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

    சோதனை ஓட்டமாக தண்ணீரை சுத்திகரித்து குடிநீருக்கு பயன்படுத்த உகந்ததா? என்று அறிய மாநில சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கிண்டி ஆராய்ச்சி மைய நீர் பரிசோதனை துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ஆனால் இதுவரை தண்ணீரின் தன்மை குறித்த முடிவு தெரிவிக்காமல் உள்ளதாக தெரிகிறது. இதனால் செங்கழுநீர் கல்குவாரி நீரை குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாநில பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி கூறும்போது, ‘கல்குவாரி, ஏரி, குளங்களில் உள்ள நீரை குடிநீருக்கு பயன்படுத்த தகுதி உள்ளதா? என்பதை பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்க முடியும்.

    நீரின் தன்மை குறித்து பரிசோதனைக்கு அனுப்பிய 3 நாட்களில் முடிவை தெரிவிக்க வேண்டும். கல்குவாரி நீரின் தன்மை குறித்த முடிவு என்ன காரணத்தினால் தாமதம் என்று தெரியவில்லை. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    பம்மல், அனகாபுத்தூர் கல்குவாரி நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உடனடியாக ஆய்வு செய்யப்படும்’ என்றார்.

    சீரான குடிநீர் வழங்க கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும். நாடாளுமன்ற தேர்தல் விதிமுறை அமலில் இருப்பதால் குறை தீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுப்பதற்கு வசதியாக நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மனு பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. நேற்று திங்கட்கிழமை என்பதால் பல்வேறு ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கோரிக்கை மனுக்களை மனு பெட்டியில் போட்டு சென்றனர்.

    நெல்லையை அடுத்த கோபாலசமுத்திரம் அருகே உள்ள கொத்தன்குளம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் ஷில்பாவிடம் ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர்.

    அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    எங்கள் ஊர் கோபாலசமுத்திரம் நகர பஞ்சாயத்துக்கு உட்பட்டது. எங்களுக்கு பஞ்சாயத்து சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து, மின் மோட்டார் மூலம், 2 நாட்களுக்கு ஒரு முறை காலை நேரத்தில் மட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது அந்த மின்மோட்டார் பழுதடைந்து விட்டதால், தற்போது குடிநீர் கிடைப்பது இல்லை. எனவே நாங்கள் தற்போது எங்கள் ஊரில் உள்ள ஒரு குளத்தில் இருந்து எங்கள் அன்றாட தேவைக்கான குடிநீரை எடுத்து பயன்படுத்தி வருகிறோம். அந்த குளம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதையும் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். எனவே எங்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குளத்தை தூர்வார வேண்டும். மேலும் எங்கள் ஊரில் உள்ள தொடக்கப்பள்ளியின் பின்பகுதியில் உள்ள பாலம் சேதமடைந்து காணப்படுகிறது அதனையும் சரி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில், கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

    அந்த மனுவில், “நெல்லை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் படித்து வருகிறார்கள். மேலும் பாளையங்கோட்டை பகுதியில் இருந்து நெல்லை டவுன், பழைய பேட்டை போன்ற இடங்களில் ஏராளமானோர் கடைகள் மற்றும் ஓட்டல்களில் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் சென்று வருவதற்கு வசதியாக பாளையங்கோட்டை மகராஜ நகர் ரவுண்டானாவில் இருந்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வரை பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

    நெல்லை பேட்டை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த திருநங்கை கஸ்தூரி, கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், “எனக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருச்செந்தூர் கோவிலில் வைத்து திருமணம் நடந்தது. எனது கணவர் சரண்பாபுவுடன் 4 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தேன். அதன் பிறகு அவர் மாயமாகி விட்டார். தற்போது எனது கணவர் நாகர்கோவிலில் இருப்பதாக தெரிகிறது. அவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.
    ஓமலூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நல்லா கவுண்டம்பட்டி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. கடும் வெயில் காரணமாக ஆள்துளை கிணற்றிலும் தண்ணீர் குறைந்து விட்டது.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக இங்கு மேட்டூர் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் தண்ணீருக்கு பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இது குறித்து ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இன்று காலை குடிநீர் கேட்டு அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு காலி குடங்களுடன் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் இருந்து பழையூர் செல்லும் சாலையில் முள் செடிகளை வெட்டி போட்டும், சிறிய கற்களை குறுக்காக போட்டும் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இன்னும் 2 நாட்களுக்குள் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

    தமிழக மக்கள் அனைவரும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழகம் முழுவதும் இந்தாண்டு சராசரியை விட 69 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. ஜனவரி முதல் மே வரை 108 மில்லிமீட்டருக்கு பதில் 34 மிமீ மழை பெய்துள்ளது.

    எனவே, தமிழக மக்கள் அனைவரும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு முறைகளை செயல்படுத்த தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அளித்து வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    மகுடஞ்சாவடி, கோணங்கியூரில், குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
    இளம்பிள்ளை:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகரில் 300-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி மக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அந்த பகுதியில் கடந்த 20 நாட்களாக காவிரி குடிநீர் வழங்கப்படவில்லை.

    குடிநீர் பிரச்சினை குறித்து கடந்த வாரம் அந்த பகுதி மக்கள் மகுடஞ்சாவடி வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்விழியிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், போதிய குடிநீர் வசதி செய்யுமாறு கேட்டு இருந்தனர். ஆனாலும் குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப் படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பெண்கள் காலிக் குடங்களுடன் நேற்று மதியம் மகுடஞ்சாவடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மகுடஞ்சாவடி-கொங்கணாபுரம் சாலையில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்விழி மற்றும் அலுவலர்கள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதி அளித்தனர். இதையடுத்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கொங்கணாபுரத்தை அடுத்த கச்சுப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கோணங்கியூர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வராததை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் கொங்கணாபுரம் ஓமலூர் சாலையில் எட்டிக்குட்டைமேடு பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வரதராஜன் ஆகியோர் அங்கு சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது, அப்பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் வழங்கப்படவில்லை என்றும், உடைப்பு சரிசெய்யும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. அதனை உடனடியாக சரிசெய்து குடிநீர் வழங்கப்படும் என்றும் கூறினர். இதையடுத்து சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலைமறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
    பழைய வண்ணாரப்பேட்டையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    ராயபுரம்:

    பழைய வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெருவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இங்கு வீடுகளில் குடிநீர் வராததால் லாரிகளில் கொண்டு வரும் தண்ணீரை பிடித்து பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் லாரி தண்ணீரும் சரியாக கொண்டு வரப்படவில்லை.

    இதனால் கடந்த 3 நாட்களாக குடிநீர் இல்லாமல் கடும் அவதி அடைந்தனர். இன்று காலை ஏராளமான பெண்கள் காலி குடங்களுடன் தண்ணீர் லாரிகாக காத்து இருந்தனர்.

    ஆனால் தண்ணீர் லாரி வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் காலி குடங்களுடன் வண்ணாரப்பேட்டை மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தண்ணீர் லாரி கொண்டு வரப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

    அப்போது, போலீசாரிடம் பெண்கள் கூறும்போது, “இப்போது போராட்டம் நடத்தியதால் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. மீண்டும் குடிநீர் விநியோகிக்கவில்லை. என்றால் தினமும் போராட்டாம் நடத்துவோம்” என்றனர்.
    சிவகங்கை அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை அருகே உள்ளது பெரியகோட்டை கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக இந்த கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் 3 ஆழ்துளை கிணறுகளுடன் கூடிய சிறு தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கான ஆழ்துளை மோட்டார் பழுதாகியது.

    மேலும் ஆழ்துளை கிணற்றுடன் அமைக்கப்பட்டுள்ள சிறு தொட்டியும் தற்போது செயல்படவில்லை. இதையடுத்து இங்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவி இந்த கிராம மக்கள் தற்போது குடிநீர் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    மேலும் இந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் தங்கள் கிராமத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வைரவன்பட்டி பகுதிக்கு நடந்து சென்று அங்குள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர்.

    எனவே இந்த அவல நிலையை போக்கிட மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து பெரியகோட்டை கிராமத்துக்கு போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
    சேலம் அருகே இன்று காலை குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் 2 இடங்களில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ளது பருத்திக்காடு கிராமம். இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இந்த கிராமத்திற்கு கடந்த சில மாதங்களாக 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உள்பட பலரிடம் புகார் கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் இன்று காலை ஒன்று திரண்டனர். பின்னர் சேலம்-அரூர் சாலையில் பருத்திக்காடு பிரிவு ரோடு மற்றும் வைதாதனூர் பிரிவு ரோடு ஆகிய 2 இடங்களில் 50 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் சேலம்-அரூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருபுறமும் நீண்ட தூரம் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது ஆவேசம் அடைந்த மக்கள் குடிநீர் இல்லாமல் கடும் அவதிப்படுவதாகவும், இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் கண்டு கொள்ளவில்லை என்றும் புகார் கூறினர். மேலும் வட்டார வளர்ச்சி அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீர் முறையாக வழங்கப்படும் என்று உறுதி அளித்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்றும் ஆவேசமாக கூறினர்.

    அப்போது போலீசாருக்கும், மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் தொடர்ந்து அவர்களை சமாதானப்படுத்தியதை அடுத்து 7 மணிக்கு தொடங்கிய மறியல் போராட்டடம் 7.40 மணிக்கு கைவிடப்பட்டது. ஆனாலும் கலைந்து செல்லாத மக்கள் வட்டார வளர்ச்சி அதிகாரி வருகைக்காக சாலையோரம் காத்து நின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

    குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.
    கரூர்:

    கரூர் மாவட்டம் தாந்தோன்றி ஒன்றியம் மணவாடி கஸ்பா கிராமத்தில் சுமார் 250 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு, ஊர் பொதுக்கிணறு மற்றும் 2 ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சேமித்து வைத்து வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆழ்துளை கிணறுகளில் மோட்டார் பழுதாகிவிட்டதாலும், ஊர் பொதுக்கிணறு தூர்ந்து போய் சேறும், சகதியுமாக உள்ளதாலும் தண்ணீரை பெற முடியாத சூழல் ஏற்பட்டு விட்டது. இதன் காரணமாக கடந்த 2 மாதங்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் கடும் சிரமத்திற்கு ஆளான அந்த கிராம மக்கள், காலிக்குடங்களுடன் நேற்று கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.

    தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் கலெக்டரை சந்திக்க இயலாது. மாறாக அங்குள்ள புகார் பெட்டியிலேயே மக்கள் மனுக்களை போட்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் அந்த கிராம மக்கள் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரை சந்தித்து மனு கொடுத்து, குடிநீர் பிரச்சினை தீர்க்க வேண்டும் என முறையிட்டனர். அப்போது, காவிரி குடிநீர் குறைந்த அளவு வருவதால், அதனை வைத்து தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடிவதில்லை. மேலும் 3 கிலோ மீட்டர் நடந்து சென்று கிணறுகளில் தண்ணீர் எடுத்து வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    எனவே கிணற்றினை தூர்வாருதல், ஆழ்துளை கிணறுகளின் மோட்டார்களை சரி செய்தல் என்பன உள்ளிட்ட நீர்மேலாண்மை பணிகளை மேற்கொண்டு சீராக குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மனுவை பெற்று கொண்ட மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர், இது பற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி அவர்களை அனுப்பி வைத்தார். 
    அம்மாபேட்டை அருகே குடிநீர் கேட்டு இன்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள மாணிக்கம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் குதிரைக்கல் மேடு. இந்த பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இந்த பகுதி மக்களுக்கு காடப்ப நல்லூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக குடி தண்ணீர் வரவில்லையாம். மேலும் அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சும் நிற்பதில்லையாம். இதை கண்டித்தும் குடிநீர் சீராக வழங்க கோரியும் மேலும் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தியும் அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள் பெண்கள் என 50க்கும் மேற்பட்டோர் குதிரைக்கல் மேட்டில் உள்ள பவானி- மேட்டூர் ரோட்டில் காலி குடங்களுடன் இன்று காலை 6.45 மணிக்கு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையில் போலீசார் விரைந்தனர். மேலும் பஞ்சாயத்து செயலாளர் கணேசனும் சென்றார். அவர் சாலை மறியல் நடத்திய பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.

    மேலும் குடிநீர் குழாய் உடைந்து விட்டதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அது விரைவில் சரி செய்யப்படும் என உறுதி அளித்தனர். அதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    பொதுமக்களின் திடீர் சாலை மறியலால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    குஜராத் மாநிலத்தில் குடிநீர் பற்றாக்குறைக்காக போராட்டம் நடத்திய பெண்களிடம் நீங்கள் எனக்கு போட்ட ஓட்டின் அளவுக்கு தான் தண்ணீர் கிடைக்கும் என்று கூறிய மந்திரியின் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது. #KunwarjiBavaliya #Gujaratminister
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கத்தால் பல இடங்களில் ஏரிகளில் உள்ள நீர்மட்டம் குறைந்து சில மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்காக அம்மாநிலத்தின் ஆளும்கட்சியான பாஜக தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது. குடிநீர் பிரச்சனையை மையமாக வைத்து ராஜ்கோட் மாவட்டத்தில் கனேசாரா கிராமத்தில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக குஜராத் மாநில குடிநீர் வினியோகம் மற்றும் கால்நடைத்துறை மந்திரி கன்வர்ஜி பவாலியா வாக்கு சேகரிக்க வந்தார். அவரை வழிமறித்த பெண்கள் தங்கள் பிரச்சனையை கூறி முறையிட்டனர்.


    அவர்களிடம் கடுகடுப்பாக பேசிய மந்திரி கன்வர்ஜி பவாலியா, கடந்த தேர்தலில் நான் உங்களிடம் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டு பிரசாரம் செய்தும் நீங்கள் எனக்கு 55 சதவீதம் வாக்குகளை தானே அளித்தீர்கள்? என்று கிண்டலாக கேட்டார்.

    அவருடன் வந்திருந்த அந்த தொகுதியின் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. பரத் கோக்ரா நீங்கள் ஓட்டு போட்டது போல் பாதி அளவு தண்ணீர் மட்டுமே கிடைக்கும் என கேலியாக குறிப்பிட்ட சம்பவம் குஜராத் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #KunwarjiBavaliya #Gujaratminister
    ×