search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர்"

    பூதப்பாண்டி அருகே முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
    பூதப்பாண்டி:

    பூதப்பாண்டி அருகே ஞாலம் பகுதியில் பள்ளிகொண்டான் அணை உள்ளது. இந்த அணையின் அருகே பழையாறு பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஞாலம், செக்கடி, கண்டங்குலி, அந்தரபுரம் போன்ற பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது கோ டை வெயில் காரணமாக பழையாற்றில் தண்ணீர் இல்லாததால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு கடந்த 5 நாட்களாக முறையாக குடிதண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, முன்னாள் தோவாளை ஒன்றிய தலைவர் பூதலிங்கம் பிள்ளை தலைமையில் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பூதப்பாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிசெல்வன், தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் செரீனா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் முறையாக குடிநீர் வழங்கவேண்டும் என்று வற்புறுத்தினர்.

    அதிகாரிகள் விரைவில் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    அயோத்தியாப்பட்டணம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள கோராத்துபட்டி, சத்தியா நகர் காலனி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு மாதத்திற்கு ஒரு முறைதான் குடிநீர் மற்றும் உப்பு தண்ணீர் வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும், அரசியல் கட்சி அலுவலகத்திலும் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் இன்று காலை காலிகுடங்களுடன் திரண்டு வந்து திடீரென வீராணம் மெயின் ரோடு மண்ணார்பாளையம் பிரிவு ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதித்தது. வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையின் 2 பக்கமும் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.

    இது பற்றி தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார், அங்கு வரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது இன்ஸ்பெக்டரிடம் பொதுமக்கள் நாங்கள் குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் குடிநீர் இல்லாமல் தவித்து வருகிறோம். குளிக்க தண்ணீர் இல்லை. இதனால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. தண்ணீர் வராவிட்டால் நாங்கள் தற்கொலை தான் செய்து கொள்வோம் என்று ஆவேசமாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அதற்கு இன்ஸ்பெக்டர், உங்களது குடிநீர் பிரச்சினை தீர்த்து வைக்கப்படும். அயோத்தியாப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் கொடுத்து உள்ளேன். அவர் இங்கு வர உள்ளார். ஆகவே சாலை மறியலை கைவிட்டு போக்குவரத்திற்கு வழிவிடும்படி கேட்டுக்கொண்டார்.

    இதனை தொடர்ந்து பொதுமக்கள், மறியலை கைவிட்டு சாலையின் ஓரமாக அதிகாரி வருகைக்காக காத்து நின்றனர். அப்போது அவர்கள் கூறு கையில் அதிகாரி இங்கு வந்து உறுதி அளிக்கவில்லை என்றால் நாங்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    பெரும்பாலை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ஏரியூர்:

    தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே உள்ள பெரிய கடமடை கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கடந்த 2 மாதமாக ஒகேனக்கல் குடிநீர் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் கிராமமக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று காலை குடிநீர் வழங்கக்கோரி பெரிய கடமடை கிராமத்தில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் பென்னாகரம், நெருப்பூர் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமஜெயம் மற்றும் பெரும்பாலை போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது கடந்த 2 மாதமாக இந்த கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஒகேனக்கல் குடிநீர் வருவதே இல்லை. இதனால் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக பெண்கள் விவசாய நிலங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டிய நிலை உள்ளது.

    இந்த கிராமத்திற்கு சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 24 மணி நேரத்தில் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    குடிநீர் வழங்க கோரி கிராம பொது மக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி அலுவலகம் எதிரே தர்ணா போராட்த்தில் ஈடுபட்டனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரிட்டிவாக்கம் ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட எடம்பேடு கிராமத்தில் சுமார் 100 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு பேரிட்டி வாக்கத்தில் அமைத்துள்ள ராட்சத ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து எடம்பேடுவில் உள்ள உள்ள மேல்நிலை தொட்டிக்கு அனுப்பப்படுகிறது.

    அங்கிருந்து குழாய் மூலம் எடம்பேடு கிராமத்துக்கு வினியோகிக்கப்பட்டது. தற்போது பேரிட்டிவாக்கத்தில் உள்ள ஆழ்துளை கிணறு வற்றிவிட்டதால் எடம்பேடு கிராமத்தில் 10 நாட்களாக குடிநீர் வினியோகம் நடைபெற வில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் கிராம பொது மக்கள் தூரத்தில் உள்ள வயல்களில் உள்ள பம்பு செட்களுக்கு சென்று குடங்களில் குடிநீரை எடுத்து வருகின்றனர்.

    இதுகுறித்து பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் செய்தும் தண்ணீர் வரவில்லை. இதனை கண்டித்தும், உடனடியாக குடிநீர் வழங்க கோரி கிராம பொது மக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி அலுவலகம் எதிரே தர்ணா போராட்த்தில் ஈடுபட்டனர்.

    பென்னாலூர்பேட்டை போலீசார் மற்றும் ஊராட்சி செயலாளர் பாஸ்கர் ஆகியோர் சம்பவ இடம் சென்று தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்தை நடத்தினார்கள்.

    புதிய ஆழ்துளை கிணறு அமைக்க தமிழக அரசு நிதி வழங்கி உள்ளது. ஓரிரு நாட்களில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது.

    வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் பயணிகள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர்.

    வத்தலக்குண்டு:

    கொடைக்கானல், மூணாறு, தேக்கடி, குமுளி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சபரிமலை உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கு செல்வதற்கு வத்தலக்குண்டு பஸ் நிலையம் முக்கிய சந்திப்பாக உள்ளது.

    தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் கொடைக்கானலுக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். இதனால் வத்தலக்குண்டு பஸ்நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. பொதுமக்கள் வசதிக்காக பஸ்நிலையத்தில் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.

    தற்போது அந்த சின்டெக்ஸ்தொட்டி தண்ணீர் இன்றி காட்சிப் பொருளாக உள்ளது. இதனால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

    குறிப்பாக குழந்தைகளுடன் வரும் பயணிகள் தண்ணீர் கிடைக்காமல் பஸ்நிலையத்தில் தவித்து வருகின்றனர். அம்மா குடிநீர் பாட்டிலும் குறைந்த அளவே வருவதால் வேகமாக விற்று தீர்ந்து விடுகிறது. இதனை பயன்படுத்தி கடைக்காரர்கள் குடிநீர் பாட்டிலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் தடையின்றி மதுபானங்கள் கொண்டு வரப்படுகிறது. ஆனால் குடிநீருக்காக அலைந்து திரிவது தொடர் கதையாகி வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பஸ்சில் பயணம் செய்யும் முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. சில நேரங்களில் அவர்கள் மயக்கமடையும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

    பல்வேறு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் குடிநீர் இல்லாதது சுற்றுலா பயணிகளை தவிப்புக்குள்ளாகி வருகிறது.

    மேலும் இலவச கழிப்பறை வசதி இல்லாததால் பெண்கள் அதிக அளவில் சிரமப்படுகின்றனர். எனவே பஸ்நிலையத்தில் குடிநீர் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    பள்ளிப்பட்டு அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஸ்ரீகாளிகாபுரம் கிராமம் உள்ளது.

    ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இங்கு உள்ளன. இவர்களுக்கு ஊராட்சி சார்பில் ஆழ் துளை கிணற்றில் இருந்து மேல்நிலை குடிநீர் தொட்டியில் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

    கடந்த 4 மாதமாக ஆழ் துளை கிணற்றில் தண்ணீர் இல்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. மாற்று ஏற்பாடும் செய்யப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீ காளிகாபுரம் பெண்கள் சோளிங்கர்-வீரமங்கலம் நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

    மறியலுக்கான காரணம் குறித்து பெண்கள் கூறியதாவது:-

    கடந்த 4 மாதங்களாக இங்கு குடிநீர் கிடைக்க வில்லை. பஞ்சாயத்து, தாசில்தார் அலுவலகங்களில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மறியலில் ஈடுபட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ஆத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குடிநீருக்கு மக்கள் தவம் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆத்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், சித்தையன்கோட்டை, செம்பட்டி, சீவல்சரகு, சமத்துவபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    கோடைகாலம் தொடங்கியது முதல் தண்ணீர் தேவை மேலும் அதிகரிப்பால் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. குடிநீர் குழாய்களில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் காலி குடங்களை வரிசையில் வைத்து தவம் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    விவசாய கிணறுகளில் தண்ணீர் பிடித்து அதனை குடிப்பதற்கும் மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

    குடிநீர் பிரச்சினையால் பல்வேறு கிராமங்களில் அடிக்கடி சாலை மறியல் போராட்டங்களும் யூனியன் அலுவலக அதிகாரிகளை கண்டித்து முற்றுகையிடும் போராட்டமும் நடந்து வருகிறது.

    நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால் மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்தாலும் குறைந்த அளவு தண்ணீரே மேல்நிலை தொட்டியில் சேமிக்க முடிகிறது. அந்த தண்ணீர் அனைத்து பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடமும் தண்ணீர் பிரச்சினை குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருவதால் பல கிராமங்களை கண்டு கொள்ளாமல் அரசியல் கட்சியினர் வந்து விடுகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள காட்டரம்பாக்கம் ஊராட்சியில் கடந்த 3 நாட்களாக குடி தண்ணீர் சப்ளை செய்யப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இருங்காட்டுகோட்டை - காட்டரம்பாக்கம் சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரசன்ன லட்சுமி பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தார். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விஜயகோபாலபுரத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    பாடாலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் ஊராட்சி விஜயகோபாலபுரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அப்பகுதி மக்கள் கேட்டபோது அவர் சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை விஜயகோபாலபுரத்தில் மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன், பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், ஆலத்தூர் வட்டாட்சியர் ஷாஜகான், வருவாய் ஆய்வாளர் பழனியப்பன், ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், விஜயகோபாலபுரம் பகுதியில் விரைவில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருச்சி- சென்னை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மை செயல் அதிகாரி அறிவுறுத்தினார்.
    அரியலூர்:

    அரியலூர் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடன் வளர்ச்சிப்பணிகள் மற்றும், குடிநீருக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு இ-சேவை மைய ஆணையரும் முதன்மை செயல் அதிகாரியுமான சந்தோஷ் மிஸ்ரா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முதன்மை செயல் அதிகாரி சந்தோஷ் மிஸ்ரா பேசியதாவது:-

    அரியலூர் மாவட்டத்தில் வருகிற கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் அனைத்து பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஆழ்குழாய் கிணறுகள், மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகள் ஆகியவைகளின் செயல்பாடுகள் குறித்து அனைத்து அலுவலர்களும் கண்காணித்து, அவற்றில் பழுது ஏற்பட்டிருந்தால் உடனடியாக பழுது நீக்கம் செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். பழுது ஏற்பட்டிருக்கும் காலங்களில் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் தற்காலிக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுத்தப்பட்டுள்ளது.

    மேலும் வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல், தோட்டக்கலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கல்வித்துறை, கூட்டுறவு, உணவு வழங்கல் துறை, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வளர்ச்சித்துறை ஆகிய துறை அலுவலர்களிடம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டப்பணிகளையும் விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம், கட்டையன் குடிகாடு கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுவதை பார்வையிட்டு முதன்மை செயல் அதிகாரி ஆய்வு செய்தார். மேலும் பொன்பரப்பி கிராமத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்தினை பார்வையிட்டு, மையத்தில் உள்ள அடிப்படை வசதிகளையும், பணியாளர்களின் தேவைகளையும் கேட்டறிந்தார்.

    இதில், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, நகராட்சி ஆணையர்கள் திருநாவுகரசு, வினோத் மற்றும் வருவாய், வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  
    காடையாம்பட்டி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட பொட்டியபுரம் கிராமத்தில் ஆசாரிபட்டறை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இந்த பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக சரியாக குடிநீர் தண்ணீர் விநியோகம் செய்யவில்லை என தெரிகிறது. இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்தில் பொதுமக்கள் புகார் கூறினர்.

    அதற்கு அதிகாரிகள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் தான் குடிநீர் வழங்க முடியவில்லை. பணிகள் சரி செய்து முடித்ததும் உடனடியாக குடி தண்ணீர் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

    ஆனால், அதிகாரிகள் கூறியபடி குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து காலி குடங்களை எடுத்துக் கொண்டு வந்து இன்று காலை ஓமலூர்- தின்னப்பட்டி சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். மறியலால் சுமார் 1 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது, நீங்கள் மறியல் செய்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. பயணிகள் சிரமம் அடைகின்றனர். எனவே நீங்கள் மறியலை கைவிடுங்கள். உங்களது கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும். ஒரு வாரத்திற்குள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து பொதுமக்கள், போலீசாரின் சமாதான பேச்சுவார்த்தையை ஏற்று சாலை மறியலை கைவிட்டனர்.

    சேங்கல் ஊராட்சி பகுதியில் சீரான குடிநீர் வினியோகம் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடு பட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கிருஷ்ணராயபுரம்:

    கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், சேங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னசேங்கல் இந்திராநகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களின் குடிநீர் தேவைக்காக ஊராட்சி சார்பில் ஆழ்துளைகிணறு அமைக்கப்பட்டு மின்மோட்டார் மூலம் நீர்எடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பி அதிலிருந்து குழாய்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வறட்சி காரணமாக ஆழ்துளை கிணற்றின் நீர்மட்டம் குறைந்து போனதால் பொதுமக்களுக்கு போதிய குடிநீர் வினியோகம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு மாற்று ஏற்பாடாக காவிரி நீர் வினியோகம் செய்யப்பட்டபோதும் அதுவும் போதுமானதாக இல்லை. இதனால், அவதிப்பட்டு வந்த அப்பகுதிமக்கள் இதுகுறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி, நேற்று காலை சின்னசேங்கல் கடைவீதி பகுதியில் ஒன்று திரண்டு சேங்கல்-உப்பிடமங்கலம் சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாயனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்) பிரபாகரன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனஅதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று சாலை மறியலை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்தப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    ×