search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர்"

    திருவாடானை அருகே ஆறுமாதமாக குடி தண்ணீர் கிடைக்காமல் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கல்லூர்பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமமான திருமடிமிதியூர் தொத்தார் கோட்டை காலனி குடியிருப்பு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடியிருப்பு பகுதிக்கென்று ஒருவருடத்திற்கு முன்பு தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் குடி தண்ணீர் வரவே இல்லை.

    குடிநீர் தொட்டியை திறப்பதற்காக வந்த அதிகாரிகள் முன்பு 5, 6 குடங்கள் தண்ணீர் ஊற்றி குழாயை திறந்து வைப்பது போல் போட்டோ எடுத்து சென்றவர்கள் அதன் பிறகு தண்ணீர் வரவே இல்லை.

    அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இது குறித்து கிராம மக்கள் கூறும் போது, இந்த கிராமத்திற்கு ஆறுமாதமாக தண்ணீர் கிடைக்கவில்லை. குடிநீர் குழாய் உடைந்துள்ளது.

    பலமுறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் இந்தப்பகுதி மக்களை புறக்கணிப்பதாகவே கருதுகிறோம். எனவே உடனடியாக குடி நீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரிட்டிவாக்கம் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு அருகே உள்ள ஆரணி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றிலிருந்து கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு பின்னர் குழாய்கள் வழியாக குடிநீர் வினியோகிக்கப்படுறது.

    சுமார் 25 வருடங்குளுக்கு முன் கட்டப்பட்ட இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி இடிக்கப்பட்டு புதிய மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதன் காரணமாக ஆழ்துளை கிணற்றிலிருந்து பெறப்படும் தண்ணீர் மேல் நிலை நீர் தேக்க தொட்டிக்கு செல்லாமல் நேரடியாக குழாய்கள் மூலம் வீடுகளுக்கு வினியோகிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் பேரிட்டி வாக்கம் பகுதியில் கடந்த 4 நாட்களாக மின் சப்ளை சரியாக இல்லாதால் குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் குடிநீர் வழங்க கோரி இன்று காலை பேரிட்டிவாக்கம்- ஊத்துக்கோட்டை ரோட்டில் காலி குடங்களுடன் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    சீரான மின் சப்ளைக்கு நடவடிக்கை எடுத்து குடிநீர் வினியோகிக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் பேரிட்டிவாக்கம்- ஊத்துக்கோட்டை இடையே சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கீழ்பென்னாத்தூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் இன்று சாலை மறியல் செய்தனர்.

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கொளத்தூரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த 3 மாதங்களாக குடிநீர் முறையாக வழங்கவில்லை. இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் 150-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் கீழ்பென்னாத்தூர் சானிப்பூண்டி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து பெண்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். அப்போது சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    இதையடுத்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க காலிக்குடங்களுடன் திரண்டு வந்து பொதுமக்கள் மனு கொடுத்தனர். அப்போது போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்றார். பின்னர் இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு கலெக்டர் உத்தரவிட்டார். இதில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், கரூர் மாவட்டம் தென்னிலை மேற்கு ஊராட்சிக்கு உட்பட்ட கூனம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஊர்தலைவர் பழனிசாமிகவுண்டர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது நுழைவு வாயிலில் நின்று கொண்டிருந்த பெண் போலீசார் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்ததால் சிறிது நேரம் வாக்குவாதம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து அதிலுள்ள 5 பேர் மட்டும், பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்க சென்றனர். அந்த மனுவில், எங்கள் ஊரியல் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் காவிரிக்குடிநீர் கடந்த 15 நாட்களாக வீடுகளுக்கும், தெருக்குழாயிலும் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை. எங்கள் ஊரில் அமைக்கப்பட்டிருந்த ஆழ்குழாய் கிணறுகள் வறண்டு விட்டதால், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளிலும் நீரை சேமித்து வைத்து பொதுமக்களின் அன்றாட பயன்பாட்டிற்கு வினியோகிக்க முடியவில்லை. குடிநீர் தொட்டி யுடன் சேர்ந்த ஆழ்குழாய் கிணறு மற்றும் அடிபம்புகளும் பழுதாகி உள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டால் வேலைக்கு செல்வோர், பள்ளி-கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் ஆகியோர் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பலரும் விவசாய கிணறுகளை தேடி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. எனவே புதிதாக ஆழ்குழாய் கிணறுகளை எங்கள் ஊரில் அமைத்து தண்ணீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எங்கள் ஊரின் தொடக்க பள்ளி அருகே பொதுக்கிணறு சுற்றுசுவரின்றி உள்ளது. எனவே விபரீத சம்பவம் நிகழ்வதற்கு முன்பு அங்கு சுற்றுசுவர் கட்ட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    கரூர் மாவட்ட சாமானிய மக்கள்நலக்கட்சியினர் கொடுத்த மனுவில், கரூரில் சாய ஆலைக்கழிவுகள் நீர்நிலைகளில் விதிகளுக்கு புறம்பாக கலக்கப்படுகிறதா? என மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் அருகேயுள்ள சணபிரட்டி, செல்லாண்டிபாளையம், சுக்காலியூர், செட்டிபாளையம் உள்ளிட்ட இடங்களில் இரவு நேரங்களில் சிலர் சட்டவிரோதமாக மணல் அள்ளும் செயலலில் ஈடுபடுகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

    கரூர் மாவட்ட சமூக நீதிக்கான மக்கள் கூட்டியக்கம் சார்பில் கொடுத்த மனுவில், கரூர்-மதுரை நெடுஞ்சாலை, திருச்சி பிரிவுரோடு, சுக்காலியூர் உள்ளிட்ட இடங்களில் சந்துக்கடைகள் வைத்து மதுவிற்பனை செய்கின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மதுபான பார்களின் செயல்பாடு குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து, அவை விதிமுறைப்படி இயங்குகின்றனவா? என கண்காணிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சியில் முறைப்படி கிராம சபை கூட்டம் நடத்துவதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிக்கல் ஏற்பட்டது. இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தற்கு சிலர் மிரட்டுகின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த ஊராட்சி பொதுமக்கள் மனு கொடுத்து இருந்தனர்.

    மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார். 
    வாணியம்பாடி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம் செய்தனர்.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அருகே உள்ள மதனஞ்சேரி பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதிக்கு கடந்த 1 மாதமாக குடிநீர் முறையாக வழங்கபடவில்லை.

    இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திம்மாம்பேட்டை வாணியம்பாடி செல்லும் சாலையில் இன்று அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

    இது குறித்து தகவலறிந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

    ராணிப்பேட்டை அடுத்த கல்மேல்குப்பம் பகுதியில் கடந்த 6 மாதமாக குடிநீர் சரிவர வழங்கவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்திலும் மற்றும் கலெக்டரிடமும் மனு கொடுத்து உள்ளனர்.

    ஆனால் மனுவின் மீது எந்தவித நடவடிக்கை எடுக்கபடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆற்காடு கல்புத்தூர் செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இலக்குவன் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். #tamilnews
    தண்டையார்பேட்டையில் குடிநீர் கேட்டு பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் எண்ணூர் நெடுஞ்சாலை 3-வது பாலம் அருகே திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை ராஜிவ்காந்தி நகர், ராஜ சேகரன்நகர், தமிழன் நகர் பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு கடந்த 6 மாதத்துக்கு மேலாக சரிவர குழாய்களில் குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை.

    சிலநேரங்களில் வரும் குடிநீரும் கழிவுநீர் கலந்து பயன்படுத்த முடியாத அளவுக்கு வந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனை கண்டித்தும், குடிநீர் முறையாக சப்ளை செய்ய கோரியும் இன்று காலை அப்பகுதி பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் எண்ணூர் நெடுஞ்சாலை 3-வது பாலம் அருகே திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    ஆர்.கே.நகர் போலீசார் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    பொதுமக்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சட்டவிரோத கட்டிடங்களுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர்-மின் இணைப்பை துண்டித்து, அதை பிறருக்கு வழங்கவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #HighCourt #DrinkingWater
    சென்னை:

    திருவள்ளூர் மாவட்டம், சென்னீர்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ரவிக்குமார் உள்பட சிலர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தங்களின் நிலங்களுக்கு பட்டா வழங்க மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

    இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத் ஆஜராகி, ‘மனுதாரர்களின் அரசு நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டு பட்டா கேட்பதால், அவர்களது கோரிக்கையை நிராகரித்து கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 28-ந் தேதி இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று வாதிட்டார்.

    இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக வழக்கில் ஐகோர்ட்டு தடை எதுவும் விதிக்காத பட்சத்தில், தங்கள் முன்புள்ள கோரிக்கை புகார் மனுவை அதிகாரிகள், வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி முடித்து வைக்கக்கூடாது.

    ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கப்படும் மின் இணைப்பையும், குடிநீர் இணைப்பையும் துண்டிக்க வேண்டும். விரைவில் தண்ணீர் பஞ்சம் வரப்போகிறது. எனவே, இதுபோன்ற ஆக்கிரமிப்பாளர்களுக்கும், சட்டவிரோத கட்டிடங்களுக்கும் வழங்கப்படும் குடிநீர் இணைப்பை துண்டித்து, அந்த குடிநீரை வேறு நபர்களுக்கு வழங்கலாம். இந்த வழக்கை முடித்துவைக்கிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
    கோத்தகிரியில் குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி கடைவீதி பகுதியில் 350-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மக்களின் குடிநீர் தேவை ஈளாடா தடுப்பணை மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. அதாவது தடுப்பணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் ராம்சந்த் சதுக்கத்தில் உள்ள நீர்உந்து நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து கடைவீதி குடியிருப்புகளுக்கு குடிநீராக வினியோகிக்கப்படுகிறது. வழக்கமாக வாரம் 2 முறை குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2 வாரங்களாக கடைவீதி பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என தெரிகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்தை நேற்று திடீரென முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    குடிநீர் வினியோகிக்கப்படாதது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டோம். அப்போது ஈளாடா தடுப்பணையில் உள்ள நீரேற்று நிலையத்தில் மோட்டார் பழுதடைந்து விட்டது, அதனை சரி செய்து தண்ணீரை ராம்சந்த் சதுக்கத்தில் உள்ள நீர்உந்து நிலையத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்தோம், ஆனால் அதற்குள் ஈளாடாவில் இருந்து குருக்குத்தி வழியாக ராம்சந்த் சதுக்கத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் குழாயை காட்டெருமை மிதித்து சேதப்படுத்தி விட்டது, அதனை சரி செய்யும் பணி நடந்து வருகிறது, அதன்பின்னர் குடிநீர் வினியோகிக்கப்படும் என்று தெரிவிக்கின்றனர். கடந்த 2 வாரங்களாக இதையே சொல்லி வருகின்றனர். இதனால் குடிநீர் இன்றி கடும் அவதி அடைந்து வருகிறோம். மாற்று ஏற்பாடு செய்து, குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இன்னும் 2 நாட்களில் குழாய் சீரமைப்பு பணிகள் முடிந்துவிடும், அதன்பிறகு சீராக குடிநீர் வினியோகிக்கப்படும், அதுவரை லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்கவோ அல்லது மிஷன் காம்பவுண்ட் பகுதியில் இருந்து குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்கவோ நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    திருத்தணி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பள்ளிப்பட்டு:

    திருத்தணி அருகே உள்ள தாடூர் காலனியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    அவர்களுக்கு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனை கண்டித்தும், குடிநீர் வழங்கக் கோரியும் அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் இன்று காலை இ.என். கண்டிகையில் திருத்தணி- சித்தூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கிராம மக்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திண்டுக்கல்லில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகரில் பல வார்டுகளில் 15 நாட்களுக்கு மேல் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    நேற்று பழனி சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்ட நிலையில் இன்று 40 மற்றும் 41-வது வார்டுக்குட்பட்ட பொது மக்கள் காலிக்குடங்களுடன் குடைப்பாறைப்பட்டியில் மறியலில் ஈடுபட்டனர்.

    ஜிகா பைப்புகள் பொருத்தப்பட்டதால் தண்ணீர் கிடைக்கவில்லை என்றும் 2 மாதமாக இதே நிலை தொடர்வதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    எனவே பழைய முறையிலேயே குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். நகர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றிச் செல்வி, சேகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. #tamilnews
    செந்துறை அருகே குடிநீர் மோட்டார் பழுதால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ஆலம்பட்டியில் மக்களின் குடிநீர் தேவைக்காக போர்வெல் அமைத்து மேல்நிலைத் தொட்டியில் தேக்கி குடிநீர் விநியோகம் செய்தனர்.

    கடந்த 3 வாரங்களுக்கு முன்பு மின்மோட்டர் பழுதடைந்தது. இதனால் போர்வெல் குடிநீரை பயன்படுத்த இயலவில்லை.முறையான தகவலை சேத்தூர் ஊராட்சிக்கு தகவல் கொடுத்தும்இதுவரை யாரும் வரவில்லை. இதனால் குடிநீர் தேவைக்காக பல மணி நேரம் நடந்து சென்று கிணறுகளிலும்,விவசாய தோட்டங்களிலும் குடிநீருக்காக அலைய வேண்டிய அவலம் உள்ளது.

    பள்ளி மற்றும் கல்லூரி,வேலைக்கு செல்லும் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். உடனடியாக பழுதான மோட்டர்களை பழுதுநீக்கி தண்ணீர் கிடைக்க ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்யவேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று பொது மக்கள் அறிவித்து உள்ளனர்.

    குடிநீர் வழங்கக் கோரி பழவந்தாங்கல் சுரங்கப் பாதையில் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    ஆலந்தூர்:

    பழவந்தாங்கல் எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள குடிநீர் குழாய்களில் நீண்ட நாட்களாக தண்ணீர் வரவில்லை.

    கடந்த சில தினங்களாக இந்த தெருவில் உள்ள சிந்தடிக் டேங்குகளிலும் தண்ணீர் திறக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து இந்த பகுதி பெண்கள் இன்று காலை 9 மணி அளவில் பழவந்தாங்கல் ரெயில்வே சுரங்கப்பாதையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் இந்த வழியாக கிண்டி, பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. வேலைக்கு செல்வோரும், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும் அவதிக்குள்ளாயினர்.

    தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தனர். மெட்ரோ குடிநீர் அதிகாரிகளும் வர வழைக்கப்பட்டனர். அவர்களிடம் பெண்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    உடனே தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக இந்த பகுதியில் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×