search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர்"

    வேலூர் மாவட்டத்தில் மேட்டூர் குடிநீர் இல்லா கிராமத்திற்கும் தண்ணீர் கிடைக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கேசி வீரமணி தெரிவித்துள்ளார்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார் பேட்டை ஊராட்சி ஒன்றியம் தாமலேரி முத்தூர் ஊராட்சியில் கால் நடைத்துறையின் சார்பில் 240 பயனாளிகளுக்கு ரூ.31 லட்சம் மதிப்பிலான விலையில்லா ஆடுகளையும், தாமலேரிமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 208 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள், கூட்டுறவுத் துறையின் மூலம் 25 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1 கோடியே 3 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும் அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.

    தமிழகத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தினார். அதன் அடிப்படையில் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் ஏழைகளுக்கு பசுமை வீடுகள் திட்டம், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், மகளிர் தன்னம்தனியாக பொருளாதாரத்தை பெற்றிட கடனுதவிகள், அனைத்து குக்கிராமங்களுக்கும் சாலை வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்றாம்பள்ளி பகுதிகள் மிகவும் வறட்சி மிகுந்த பகுதியாக கண்டறிப்பட்டு மாவட்டத்தில் கணியம் பாடியில் செயல்படுத்தப்பட்ட உறைகிணறு நமது பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் மேட்டூர் குடிநீர் இல்லா கிராமத்திற்கும் தண்ணீர் கிடைக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதுபோன்று மக்கள் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களை மக்கள் கேட்காமலே செய்து கொடுத்து வருகிறது. இவற்றை எல்லாம் பெற்று பயன்படுத்திக் கொண்டு என்றென்றும் அரசுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். திட்ட இயக்குநர் முகமை பெரியசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், மண்டல கால்நடை இணை இயக்குநர் சாந்தகுமாரி, துணைபதிவாளர் முனிராஜ், திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், தாமலேரி முத்தூர் தொடக்க வேளாண்மை கடன் சங்க தலைவர் ரமேஷ், உதவி இயக்குநர் கால்நடை ராஜேந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் சிவா, திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தலைவர் ராஜேந்திரன், தலைமை ஆசிரியர் மோகன் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    பேராவூரணி பகுதியில் குடிநீர் மற்றும் நிவாரணப்பொருட்கள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் கடந்த மாதம் 15-ந்தேதி அதிகாலை கஜா புயல் வீசியதில் தென்னை மரங்கள்,வாழை மரங்கள், மா, பலா, வேப்ப மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின் வயர்கள் அறுத்து விழுந்தது. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதியுற்றனர்.

    ஜெனரேட்டர் மூலம் மேல் நிலை நீர் தேக்கதொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது.

    இந்நிலையில் பேராவூரணியை அடுத்த கொரட்டூர் பகுதியில் கடந்த 4 நாட்களாக குடிதண்ணீர் கிடைக்காமல் அவதியுற்றனர். இதைத்தொடர்ந்து நேற்று காலகம் ஆவுடையார் கோயில் சாலையில் கொரட்டூர் கடைத்தெருவில் பொதுமக்கள் திரண்டு சாலைமறியல் செய்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் அஷ்ரப் அலி உள்ளிட்டோர் போராட்டம் நடத்தியவர்களிடம் குடிதண்ணீர் கிடைக்க உடனடியாக ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    பேராவூரணி அருகே பழுக்காடு கிராமத்தில் ஆதிதிராவிடர் தெருவில் 21 குடும்பங்கள் தொகுப்பு வீடுகளில் வசித்து வருகின்றனர். கஜா புயலில் பாதிக்கப்பட்டதால் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், தனிப்பட்ட நபர்கள் மூலம் நிவாரண பொருட்களை வழங்கினர்.இந்நிலையில் தமிழக அரசின் 27 பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்குவதாக கிராம நிர்வாக அலுவலர் பழுக்காடு ஆதிதிராவிடர் தெருவில் கணக்கெடுத்து சென்றனர்.

    தற்போது தொகுப்பு வீடுகளுக்கு நிவாரணம் கிடையாது என்பது மக்களுக்கு தெரியவந்துள்ளது, இதனையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு ரெட்ட வயல் கடைவீதியில் காலகம் ஆவுடையார்கோயில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் பேராவூரணி சப்-இன்ஸ் பெக்டர் கார்த்திக்,வருவாய் ஆய்வாளர் பாண்டியராஜன் இருவரும் சம்பவ இடம் சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டம் நடத்திய மக்கள் இன்னும் எங்கள் பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை, அனைவருக்கும் நிவாரணம் வழங்கிட வேண்டும் என கூறினர். அதிகாரிகள் அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. #tamilnews
    அவினாசி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள துலுக்கமத்தூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்களுக்கு கடந்த 6 மாதமாக முறையான குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

    பக்கத்து ஊர்களுக்கு சென்றுதான் பொதுமக்கள் தங்கள் தேவைக்கு குடிநீர் பிடித்து வந்தனர். இதனால் ஆத்திரத்தில் இருந்தனர்.

    இன்று காலை துலுக்க மத்தூர் பொதுமக்கள் அங்குள்ள நால் ரோட்டில் காலி குடங்களுடன் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதில் 50 பெண்கள் பங்கேற்றனர்.

    மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் அவினாசி போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    உசிலம்பட்டி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பி இருந்தாலும் கிராம பகுதிகளில் குடிநீர் பிரச்சினை தீர்ந்த பாடில்லை.

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மேக்கிலார்பட்டி ஊராட்சிக்குட்பட்டது மாருதிநகர், சத்யாநகர். இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    கடந்த சில வாரங்களாக இந்த பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லை. பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. குடிநீருக்காக பெண்கள் நீண்டதூரம் சென்று அலையும் நிலை ஏற்பட்டது.

    குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் திடீரென காலிகுடங்களுடன் உசிலம்பட்டி-மதுரை மெயின் ரோட்டில் திரண்டனர்.

    பின்னர் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் மதுரை-தேனி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டது. கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் தகவல் அறிந்த போலீசார் மற்றும் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்செல்வி ஆகியோர் சம்பவ இடம் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

    புயல் தாக்கி 13 நாட்களாகியும் மின்சாரம், குடிநீர் வழங்காததால் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #Gajastorm

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம், மருங்குளம் அருகே உள்ள கோபால் நகரில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    கடந்த 16-ந் தேதி கஜா புயல் தாக்கியதில் மருங்குளம் பகுதியில் உள்ள மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் அனைத்தும் முற்றிலும் சாய்ந்தது.

    இதனால் புயல் தாக்கி 13 நாட்கள் மேல் ஆகியும் இந்த பகுதியில் இன்னும் மின்சாரம் வழங்கப்படாமல் உள்ளது. மேலும் குடிப்பதற்கு குடிதண்ணீர் இல்லை. நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட வில்லை என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை 6 மணிக்கு மருங்குளம் அருகே உள்ள கறம்பக்குடி சாலையில் 200-க்கும் மேற்பட்டோர் மாட்டு வண்டிகள் மற்றும் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இன்னும் ஒரு வாரத்திற்குள் அனைத்தும் சீர்செய்யபடும் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து கோபால் நகரை சேர்ந்த சேகர் என்பவர் கூறியதாவது:-

    கஜா புயல் தாக்கி 13 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதுவரைக்கும் எந்தவொரு அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் எங்களை பார்த்தது கிடையாது.

    மேலும் சாலைகளில் விழுந்த மரங்கள் அனைத்தும் அகற்றாமல் அப்படியே உள்ளது. மின்சாரம் இன்னும் வழங்கப்பட வில்லை. அன்றாடம் தேவைக்கு தண்ணீர் இல்லை. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும் அவதிப்பட்டு வருகிறோம்.

    எனவே அரசு உரிய நிவாரண பொருட்கள் மற்றும் குடிதண்ணீர், மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Gajastorm

    தூசி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வெம்பாக்கம்:

    வெம்பாக்கம் அடுத்த மாமண்டூர் சந்தைமேடு, லெட்சுமிபுரம் ஆகிய கிராமங்களில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆத்திரமடைந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை வந்தவாசி - காந்திபுரம் மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர்.

    1 மணி நேரத்துக்கு மேல் போராட்டம் நீடித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணன், தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உடனயாக குடிநீர் கிடைக்க நடவடடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மணப்பாறை, மருங்காபுரி பகுதிகளிலும் மின்சாரம், குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #GajaCyclone
    பொன்னமராவதி:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்திலும், திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, மருங்காபுரி பகுதிகளிலும் மின்சாரம், குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் இன்று மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி ஒன்றியம் தொட்டியப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நவலூரணிப்பட்டி பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கஜா புயல் பாதிப்பால் அப்பகுதிக்கு இன்னும் குடிநீர், மின்சாரம் விநியோகம் செய்யப்படவில்லை. அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை தொட்டியப்பட்டியில் மணப்பாறை-கோவில்பட்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.



    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் பகுதி பொதுமக்களும் குடிநீர் -மின்சாரம் விநியோகிக்க கோரி இன்று காலை கொட்டும் மழையிலும் காலிகுடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். #GajaCyclone
    பள்ளிப்பட்டு அருகே குடிநீர் கேட்டு அப்பகுதி பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காலிகுடங்களுடன் பொதட்டூர்பேட்டை - நகர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பள்ளிப்பட்டு:

    பள்ளிப்பட்டு அருகே உள்ள பாண்டரவேடு பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதுகுறித்து பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் குடிநீர் வழங்கக்கோரி அப்பகுதி பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காலிகுடங்களுடன் பொதட்டூர்பேட்டை - நகர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதட்டூர் பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    அவினாசி அருகே குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு உள்பட அடிப்படை வசதிகளை கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சியில் காசிக்கவுண்டன் புதூர், கருணைபாளையம் கொடிக்காத்த குமரன் நகர், வி.பி.கார்டன், பாரதிவீதி உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த பல மாதங்களாக குடிநீர், ஆழ்குழாய் தண்ணீர் எதுவும் கிடைப்பதில்லை.

    கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை என்று கூறியும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலை 10 மணி அளவில் அவினாசி-மங்கலம் சாலையில் ராயன் கோவில் பிரிவு அருகே அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில் “எங்கள் பகுதியில் கடந்த சில வருடங்களாக 20 நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் குறைந்த அளவே கிடைக்கிறது. தெருவில் எந்த மின்விளக்குகளும் எரிவதில்லை, வருடகணக்கில் குப்பைகள் அள்ளப்படாமல் அப்படியே குவிந்து கிடக்கிறது. கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தி அதிக அளவில் உள்ளது. குடி நீருக்காக காலை நேரத்தில் குடங்களை எடுத்துக்கொண்டு அவினாசிக்கு சென்றுவரவேண்டிய அவல நிலை உள்ளது.

    இதனால் எங்களது அன்றாட வேலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் முறையாக வழங்க வேண்டும் என்று பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் அவர்களால் எந்த பயனும் இல்லை. எனவே தடையின்றி அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டும். அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நாங்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் ” என்று கூறினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவினாசி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சாந்திலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், செந்தில் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் நீண்ட நேரம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    முடிவில் குடிநீர் வினியோகம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும், தெருவிளக்குகள் எரிவதற்கும், கழிவுநீர்கால்வாய்களை தூர்வாரவும் உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி கூறினார்கள். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் அனைத்து வாகனங்களும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.
    சங்கராபுரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சங்கராபுரம்:

    சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தில் 1,400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 8 வார்டுகளும், இதன் துணை கிராமம் பாவளத்தில் 4 வார்டுகளும் உள்ளது.

    இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக திரவுபதியம்மன் கோவில், 4-வது வாய்க்கால், ஆற்றங்கரை, ஏரி ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதில் இருந்து மின் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில் மேட்டுத்தெரு 12-வது வார்டு மற்றும் மேற்குத்தெரு 10-வது வார்டு பகுதி மக்களுக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை 6.30 மணி அளவில் பஸ்நிறுத்தம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதியில் உடனே குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கூறினர். அதற்கு போலீசார், இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனை ஏற்ற பொதுமக்கள் காலை 7.15 மணிக்கு மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ¾ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதற்கிடையே அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேச்சல் கலைச்செல்வி, கருணாநிதி ஆகியோர் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தனர். அதன் பேரில் அப்பகுதியில் நேற்று மதியம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
    செந்துறை அருகே 5 மாதங்களாக சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் இதனை கண்டித்து பொதுமக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பெரியாக்குறிச்சி கீழத்தெரு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்ய ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, நீரேற்று குழாய் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் நீர் ஏற்றப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

    இந்த நிலையில் நீரேற்று குழாய் மின்மோட்டாரில் பழுது ஏற்பட்டதால் , நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக கீழத் தெரு பகுதியில் கடந்த  5 மாதங்களாக  சரியாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை.   மின்மோட்டாரும் பழுது செய்யப்படவில்லை. 

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை பெரியாக்குறிச்சி 4ரோடு சந்திப்பு பெண்ணாடம் சாலையில்  காலி குடங்களுடன்  ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அவர்கள்  சாலையின் நடுவே அமர்ந்து , சீராக குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்று கோரி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  

    இது குறித்த தகவல் அறிந்ததும் செந்துறை போலீசார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பானுமதி ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    வேடசந்தூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    வேடசந்தூர்:

    வேடசந்தூர் அருகேயுள்ள குதுப்பணம்பட்டியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்குள்ள மக்களுக்கு, ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்தநிலையில் ஆழ்துளை கிணறு வறண்டு விட்டது. இதனால் கடந்த 6 மாதமாக குடிநீர் வழங்கும் பணி பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து திண்டுக்கல்லுக்கு செல்லும் காவிரி கூட்டுகுடிநீர் குழாயில் ஒரு திருகு குழாய் அமைக்கப்பட்டது. எனவே, பொதுமக்கள் நடந்து சென்று அதில் குடிநீர் பிடித்து வருகின்றனர். இதனால் பெண்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே, ஆழ்துளை கிணற்றை ஆழப்படுத்தி மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் கிராம மக்கள் மனு கொடுத்தனர். எனினும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த கிராம மக்கள் நேற்று காலிக்குடங்களுடன் தொட்டணம்பட்டியில் உள்ள நல்லமனார்கோட்டை ஊராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அங்கு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    இதற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஒன்றிய தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் முனியப்பன், பால் உற்பத்தியாளர் சங்க மாநில பொருளாளர் சங்கர், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஒன்றிய செயலாளர் சிக்கனன், விவசாய சங்க தலைவர் பிச்சைமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×