search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர்"

    வண்ணாரப்பேட்டையில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் குடிநீர் வாரிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ராயபுரம்:

    வண்ணாரப்பேட்டையில் காத்பாடா தெரு, பென்சிலர் லைன், லெபர் லைன் உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த சில மாதங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் இன்று தங்க சாலை அருகே உள்ள குடிநீர் வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் குடிநீரில் கழிவு நீர் கலந்த தண்ணீரை பாட்டிலில் எடுத்து வந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வண்ணாரப்பேட்டை போலீசார் அங்கு வந்து சமாதான பேச்சு நடத்தினார்கள். ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினார்கள். அதையடுத்து அதிகாரிகள் அங்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    விரைவில் குடிநீர் சுத்தமாக கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். #tamilnews
    பூண்டி ஏரியில் தண்ணீர் வந்து சேரும் பகுதியிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள லிங்க் கால்வாய் மதகு வரை கால்வாய் வெட்டும் பணி நடைபெற்று வருகின்றன.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது.

    இங்கு மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு லிங்க் கால்வாயிலும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயிலும் திறந்து விடப்படுகின்றன.

    கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரியில் நீர் இருப்பு மிகவும் குறைந்ததால் கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி புழல் ஏரிக்கும், மே மாதம் 21-ந்தேதி செம்பரம்பாக்கம் ஏரிக்கும், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. ஆகஸ்டு 27-ந்தேதி பேபி கால்வாயில் தண்ணீர் அனுப்புவதும் நின்று போனது.

    முற்றிலுமாக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து நிலவியது. இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடும்படி தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கடிதம் எழுதினர்.

    இதையடுத்து கடந்த மாதம் 22-ந்தேதி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் 29-ந்தேதி பூண்டிக்கு வந்தடைந்தது.

    தொடக்கத்தில் வினாடிக்கு 70 கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்தது. அதன் பின்னர் தண்ணீர் வரத்து அதிகமானது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 620 கனஅடி வீதம் வந்து தண்ணீர் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. கண்டலேறு அணையிலிருந்து வரும் தண்ணீர் பூண்டி ஏரியில் முழுவதுமாக பரவுவதை தவிர்த்து நேராக லிங்க் கால்வாயில் தண்ணீர் வந்து சேர்வதற்கு பொதுப் பணித்துறை அதிகாரிகள் திட்டம் வகுத்து உள்ளனர்.

    அதன்படி கிருஷ்ணா கால்வாய் வழியாக பூண்டி ஏரியில் தண்ணீர் வந்து சேரும் பகுதியிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள லிங்க் கால்வாய் மதகு வரை கால்வாய் வெட்டும் பணி நடைபெற்று வருகின்றன.

    பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் ரமேஷ் மேற்பார்வையில் நடை பெற்று வரும் இப்பணி ஓரிரு நாட்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த பணிகள் நிறைவடைந்தால் கண்டலேறு அணையிலிருந்து பெறப்படும் தண்ணீரை நேராக லிங்க் கால்வாய் வழியாக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விட முடியும்.

    பூண்டி ஏரியில் 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி 198 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    பூண்டி ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. #Poondilake #Lake

    ஊத்துக்கோட்டை:

    கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் படி கண்டலேறு அணையிலிருந்து கடந்த 22-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    தொடக்கத்தில் வினாடிக்கு 200 கனஅடி திறக்கப்பட்ட தண்ணீர் பின்னர் 300 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது வினாடிக்கு 1200 கன அடியாக திறக்கப்படுகிறது.

    இந்த தண்ணீர் கடந்த 29-ந் தேதி பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. பூண்டி ஏரியில் 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி 146 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 620 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் சென்னை குடிநீருக்கு பேபி கால்வாயில் தண்ணீர் திறந்துவிடும் படி சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் பொதுப் பணித்துறை அதிகாரிகளை கேட்டு கொண்டனர்.

    அதன் படி நேற்று மாலை பூண்டி ஏரியில் இருந்து பேபி கால்வாயில் 20 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் பொதுப் பணித்துறை முதன்மை பொறியாளர் ஜெயராமன், செயற் பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் ரமேஷ், பொறியாளர் சந்திரகுமார் மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர். அவர்கள் மலர் தூவி தண்ணீரை திறந்து வைத்தனர்.

    ஆரணி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வேலூர்:

    ஆரணி அடுத்த பையூர் எம்.ஜி.ஆர். நகரில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 3 மாதங்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் முழுவதுமாக நிறுத்தப்பட்டு உள்ளது. அப்பகுதி பெண்கள் ஒரு குடம் தண்ணீருக்காக பக்கத்து கிராமங்களுக்கு செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    குடிநீர் பிரச்சினையை போக்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டு மனுக்கள் கொடுத்தனர். ஆனால், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த எம்.ஜி.ஆர். நகர் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை காலி குடங்களுடன் ஆரணி- வாழப்பந்தல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து, மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பொன்னேரி அருகே உள்ள சுற்றுவட்டார கிராமங்களுக்கு சீராக குடிநீர் வழங்க கோரி அப்பகுதி மக்கள் 7 அரசு பஸ்களை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த திருப்பாலைவனத்தை சுற்றி காஞ்சிவாயல், ஆலப்பன்நகர், பிரளயம்பாக்கம் உள்ளிட்ட 8 கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராமங்களுக்கு வேப்பம்பட்டில் இருந்து திருப்பாலைவனத்திற்கு தண்ணீர் கொண்டு வந்து அங்கிருந்து குழாய் வழியாக வினியோகிக்கப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக குடிநீர் முறையாக வினியோகிக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் இன்று இன்று காலை அப்பகுதி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பொன்னேரி- பழவேற்காடு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது வந்த 7 அரசு பஸ்களை சிறைப்பிடித்து தண்ணீர் வழங்கினால்தான் பஸ்களை விடுவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து திருப்பாலைவனம் போலீசார் விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளுடன் பேசி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். தற்காலிகமாக டிராக்டர் மூலம் குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து மறியலை கைவிட்டனர்.

    ஆனாலும் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், “ஒரு மாதமாக தண்ணீர் வராததால் கூலி வேலைக்கு போக முடியவில்லை. வாரத்திற்கு ஒருநாள்தான் குளிக்க வேண்டிய நிலை உள்ளது. 5 கிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீர் பிடித்து வரும் நிலை உள்ளது. இதுபற்றி அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சாலையில் உட்கார்ந்தோம்” என்றனர்.

    அடிக்கடி ஏற்பட்டு வந்த மின்வெட்டு காரணமாக குடிநீர் வினியோகிக்க முடியவில்லை. மோட்டார் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மின்சார தடையால் மோட்டார் தொடர்ந்து இயக்க முடியாததால் கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் பாதித்தது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
    வந்தவாசி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல் செய்தனர்.

    வந்தவாசி:

    வந்தவாசி அருகே உள்ள மும்முனி ஒத்தவாடை தெருவில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து பைப் லைன்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யபட்டு வந்தது.

    இந்நிலையில் பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி கடந்த 15 நாட்களாக இப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யபடவில்லை. இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கை எடுக்கபட வில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை வந்தவாசி-ஆரணி சாலையில் காலிகுடங்களுடன் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பாரி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சீதாராமன் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

    இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    குடிநீர் வினியோகத்தை சீரமைக்க கோரி யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
    சிவகாசி:

    சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்குகுப்பணாபுரம் பகுதியில் கடந்த 4 மாதமாக குடிநீர் வினியோகம் சரியான முறையில் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அந்த கிராம மக்கள் பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நேற்று காலை அந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் சிவகாசி யூனியன் அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டனர்.

    அங்கு பணியில் இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சுப்பிர மணியம் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தண்ணீர் பிரச்சினையை தீர்க்க உடனே அந்த பகுதியில் ஆழ்துளைகிணறு அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன் பின்னர் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

    கிராம மக்களின் திடீர் முற்றுகையால் சிவகாசி யூனியன் அலுவலகம் காலை 10¾ மணி முதல் 11¾ மணி வரை பரபரப்பாக காணப்பட்டது. 
    குடிநீர் ஒப்பந்தம் தனியாருக்கு வழங்கியதை கண்டித்து கோவை மாநகராட்சியை முற்றுகையிட்ட ஜி.ராமகிருஷ்ணன் உள்பட 794 பேர் கைது செய்யப்பட்டனர்.
    கோவை:

    கோவை மாநகராட்சி குடிநீர் வினியோகத்தை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கியதை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் மாநகராட்சி மண்டல அலுவலகம் முன் முற்றுகை-மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த பேராட்டத்துக்கு சி.ஐ.டி.யூ.., விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், அனைத்திந்திய மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாற்று திறனாளிகள் அமைப்பு உள்ளிட்டவைகள் ஆதரவு தெரிவித்து இருந்தது.

    இந்த முற்றுகை - மறியல் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. ஆனால் போலீசார் தடையை மீறி முற்றுகை - மறியல் நடைபெற்றது.

    கோவை வடக்கு மண்டல அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அவர் கூறியதாவது-

    கோவை மாநகராட்சி குடிநீர் உரிமை சூயஸ் நிறுவனத்துக்கு விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக 800 பக்க ஒப்பந்த நகல் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் சில மாற்றத்துடன் குடிநீர் கட்டணத்தை சூயஸ் நிறுவனம் நிர்ணயித்து கொள்ளலாம் என கூறப்பட்டு உள்ளது.

    தேவை ஏற்பட்டால் குடிநீர் கட்டணத்தை உயர்த்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி குடிநீர் வினியோக உரிமையை சூயஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்தால் 1200 பொது குடிநீர் குழாய் மூடப்படும் அபாயம் ஏற்படும்.

    குடிநீர் கட்டணமும் உயரும் அபாயம் ஏற்படும். எனவே இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். ஒப்பந்தத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முற்றுகை-மறியல் போராட்டத்தில் முன்னாள் எம்.பி. பி.ஆர். நடராஜன், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிங்கா நல்லூர் கிழக்கு மண்டல அலுவலகம் முன் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் பத்மநாபன் தலைமையில் முற்றுகை - மறியல் நடைபெற்றது.

    ஆர். எஸ்.புரம் மேற்கு மண்டல அலுவலகம் முன் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, மாதர் சங்க மாநில துணை செயலாளர் ராதிகா ஆகியோர் தலைமையிலும், குனியமுத்தூர் தெற்கு மண்டல அலுவலகம் முன் விவசாயிகள் சங்க பொறுப்பாளர் கருப்பையா தலைமையிலும் முற்றுகை - மறியல் நடைபெற்றது.

    மறியலில் ஈடுபட்ட 178 பெண்கள் உள்பட 794 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நத்தம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    செந்துறை:

    திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு தீராத பிரச்சினையாக உள்ளது. நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சிக்குட்பட்ட பூசாரிபட்டியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மோட்டார் பழுதானது. இதனால் குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. மோட்டாரை சீரமைக்க வேண்டும் என பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சிறுகுடி- நத்தம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் நத்தம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் பொது மக்களிடம் சமரசம் பேசினர். மோட்டாரை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.
    அவிநாசியில் குடிநீர் வராதத்தை கண்டித்து இன்று காலை 200-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    அவினாசி:

    அவினாசியில் 18 வார்டுகள் உள்ளன. குடியிருப்பு நிறைந்த இந்த பகுதிகளுக்கு மேட்டுப்பாளையம் பவானி ஆற்று குடிநீர் பேரூராட்சி சார்பாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மாதம் ரூ.150 வசூல் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் இந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக 15 நாட்கள் முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. குடிநீர் சீராக விநியோகம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதில் ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் சேவூர்- அவினாசி செல்லும் சாலை தாசில்தார் அலுவலகம் முன்பு உள்ள பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு வந்தனர். பொதுமக்களிடம் சமாதானப்பேச்சு நடத்தினர். ஆனால் அதிகாரிகளுடன் பொதுமக்கள் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    குடிநீர் சீராக வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் எருத்துக்காரன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கொல்லாபுரம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்திற்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். மேலும் காசு கொடுத்து குடிநீர் வாங்கி குடிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் வராததை கண்டித்தும், குடிநீரை சீராக வினியோகிக்க கோரியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த கொல்லாபுரம் பெண்கள் உள்பட பொதுமக்கள் நேற்று மாலை கையில் காலிக்குடங்களுடன் அரியலூர்-செந்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணி வகுத்து நீண்ட வரிசையில் நின்றன. இது குறித்து தகவலறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அரியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உங்கள் கிராமத்திற்கு குடிநீர் வரும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீர் வரவில்லை என்றும், அதனை சீரமைக்க வரை தற்காலிகமாக தற்போது குடிநீர் வழங்கப்படும் என்றும், பின்னர் குழாயில் உள்ள அடைப்பை எடுத்த பிறகு குடிநீர் சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து போலீசார் சுமார் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இதனை தொடர்ந்து அந்தப்பகுதிக்கு உடனடியாக தற்காலிகமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி கொல்லாபுரம் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சின்னசேங்கலில் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கிருஷ்ணராயபுரம்:

    கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் சேங்கல் ஊராட்சி சின்னசேங்கலில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்களின் குடிநீர் தேவைக்காக ஊராட்சி சார்பில் அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து அதிலிருந்து நீர் எடுத்து 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை நிரப்பி, குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டபோது, ஆழ்துளை கிணற்றில் நீர்மட்டம் குறைந்து போனதால் குடிநீர் வினியோகம் செய்யமுடியவில்லை என கூறி மாற்று ஏற்பாடாக காவிரி கூட்டு குடிநீர் செல்லும் குழாயிலிருந்து குடிநீர் பெற குழாய் அமைத்து கொடுத்தனர். அதிலும் போதுமான அளவு குடிநீர் கிடைக்காமையால் அப்பகுதி மக்கள் அருகில் உள்ள ஊர்களுக்கு சென்று தண்ணீர் கொண்டு வந்து பயன் படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதனால் மிகவும் சிரமப்பட்டு வந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை சேங்கல்- உப்பிடமங்கலம் சாலையில் ஒன்று திரண்டு அனைவருக்கும் குடிநீர் கிடைக்கவும், காவிரி நீரை மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியில் நிரப்பி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாயனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் கலைமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சேங்கல்-உப்பிடமங்கலம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    ×