search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகார்"

    பிளஸ்-1 மாணவர்கள் 3 பேர் திடீரென மாயமானார்கள். அவர்கள் கடத்தப்படார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தில் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி (வயது 16), முத்துக்குமார்(16) மற்றும் முகவூரை சேர்ந்த கார்த்திக் பெரியசாமி (16) ஆகியோர் பிளஸ்-1 படித்து வருகிறார்கள்.

    நண்பர்களான 3 பேரும் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்றனர். மாலையில் வீடு திரும்பிய அவர்கள் வெளியே சென்றுவிட்டு வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றனர்.

    நீண்ட நேரமாகியும் கருப்பசாமி, முத்துக்குமார், கார்த்திக் பெரியசாமி ஆகியோர் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டமடைந்த பெற்றோர்கள், தங்களது மகன்களை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். பலனில்லை.

    இதுகுறித்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து, மாணவர்கள் தாங்களாகவே எங்கேனும் சென்றார்களா? அல்லது கடத்தப்பட்டார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.

    தவளக்குப்பம் அருகே வீட்டில் புகுந்து நகையை கொள்ளையடித்த கொள்ளையர்கள் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த செயினையும் பறித்து சென்று விட்டனர்.

    பாகூர்:

    தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கம் பங்கஜம் நகரை சேர்ந்தவர் பலராமன். இவரது மனைவி அஞ்சலைதேவி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

    இதில் 2 மகன்கள் வெளி நாட்டில் வேலை செய்து வருகின்றனர். பலராமன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அஞ்சலைதேவி தனது மற்றொரு மகனான சாப்ட்வேர் என்ஜினீயரான முரளியுடன் வசித்து வந்தார். நேற்று இரவு அஞ்சலைதேவி வீட்டின் கீழ் தளத்திலும், முரளி தனது மனைவியுடன் வீட்டின் மாடியிலும் தூங்கினர்.

    நள்ளிரவில் மர்ம வாலிபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கிருந்த 3 பீரோக்களை உடைத்து பார்த்துள்ளனர்.

    அதில் நகை- பணம் எதுவும் இல்லாததால் பூஜை அறைக்குள் புகுந்தனர். அங்கிருந்த பீரோ லாக்கரை உடைத்து அதில் இருந்த 12 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்தனர்.

    பின்னர் வீட்டு வராண்டாவில் தூங்கிக் கொண்டு இருந்த அஞ்சலைதேவி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினையும் பறித்தனர். இதனால் திடுக்கிட்டு எழுந்த அஞ்சலைதேவி திருடன்... திருடன் என கூச்சலிட்டார்.

    தாயார் அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் முரளி மாடியில் இருந்து கீழே இறங்கி வருவதற்குள் கொள்ளையர்கள் வயல் வெளியில் புகுந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை பதிவு செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுபோன்று திருட்டு, கொள்ளை சம்பவம் இப்பகுதியில் அடிக்கடி நடப்பதாகவும், இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணி மேற் கொள்ளாததால் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    திருவாரூரில் நண்பருடன் ஆற்றில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருவாரூர்:

    திருச்சி, அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 38). இவரது நண்பர் பொன்மலையை சேர்ந்த செந்தில்குமார் (38). தொழிலார்கள்.இவர்கள் லாரியில் நேற்று திருவாரூர் வந்தனர். அங்கு விளமலில் உள்ள ஓடம்போக்கி ஆற்றில் இருவரும் குளித்தனர். ஆற்றில் சேறு அதிகமாக இருந்ததால் அதில் சிக்கி செல்வம் பலியாகி விட்டார். இதுபற்றி திருவாரூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. 

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் மூழ்கி பலியான செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    அரூர் அருகே கல்லூரி மாணவர் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கோட்டப்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ஹரிதாஸ். இவரது மகன் வேடன் (வயது 23). இவர் அரூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை சென்ற அவர் பின்னர் மீண்டும் வீடு திரும்பி வரவில்லை. 
    உடனே பதறிபோன அவரது பெற்றோர் பல இடங்களில் வேடனை தேடிபார்த்தனர். எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது. 

    இந்த சம்பவம் குறித்து அண்ணன் கிளிண்டன் என்பவர் அரூர் போலீசாரிடம் புகார் தெரிவித்ததார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவையில் இருந்து சில வழித்தடங்களில் இயக்கப்படும் அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக போலீஸ் கமிஷனரிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
    கோவை:

    கோவை மண்டலத்தில் 1200 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதில் சில வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்களில் அரசு அனுமதித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து பொது தொழிலாளர் சங்க மாநில பொது செயலாளர் சுப்பிரமணியம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மண்டல போக்குவரத்து அதிகாரியிடம் சில தகவல்கள் கேட்டார். அதில் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு ரூ.45 கட்டணம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    ஆனால் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் ரூ.64 வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்துதுறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சாதாரண பஸ்களில் கட்டணம் ரூ.45 மட்டும் தான். வால்பாறை- பொள்ளாச்சி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் பஸ்களில் தான் ரூ.64 கட்டணமாக உள்ளது என கூறுகின்றனர். ஆனால் வால்பாறை- பொள்ளாச்சி இடையே இயக்கப்படும் சாதாரண பஸ்களை கூட எக்ஸ்பிரஸ் பஸ் என பெயரை மட்டும் மாற்றி விட்டு, ரூ.64 கட்டணமாக வசூலிக்கின்றனர் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து கோவை கன்ஸ்யூமர்காஸ் அமைப்பின் நிர்வாகி கதிர்மதியோன் கூறியதாவது:-

    கோவையில் இருந்து சில வழித்தடங்களில் இயக்கப்படும் அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கோவை -திருப்பூருக்கு அரசு கட்டணம் ரூ.33-க்கு பதிலாக சில பஸ்களில் ரூ.36 வசூலிக்கப்படுகிறது.

    கோவையில் இருந்து ஈரோட்டுக்கு அரசு அனுமதித்த ரூ.61-க்கு பதிலாக ரூ.85 வசூலிக்கின்றனர். ஆனால் தனியார் பஸ்களில் ரூ.65 மட்டும் வசூலிக்கின்றனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் போக்குவரத்து இணை கமி‌ஷனரிடம் புகார் செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    புதுவை அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான நாவற்குளம் அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகள் ஹரிதா (வயது19). இவர் புதுவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    ஹரிதா ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்ததாக தெரிகிறது. இதனால் சோகத்தில் இருந்து வந்த ஹரிதா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். சம்பவத்தன்று அவர் வி‌ஷத்தை குடித்து விட்டார்.

    இதில் மயங்கி விழுந்த ஹரிதாவை அவரது பெற்றோர் மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு ஹரிதா பரிதாபமாக இறந்து போனார்.

    இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    வேலூர் அருகே கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண்ணிடம் முகமூடி அணிந்து வந்த வாலிபர் செயின் பறித்து சென்ற சம்பவம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள பெருமுகை தனியார் என்ஜினியரிங் கல்லூரி சாலை பகுதியில் வசிப்பவர் ராமமூர்த்தி. இவரது மனைவி சரஸ்வதி (50). இவரது வீட்டின் முன்பு கோலம் போட்டுக்கொண்டிருந்தார்.

    இதனை நோட்டமிட்ட மாம் நபர்கள் முகமூடி அணிந்து பைக்கில் வந்தனர். அவர்கள் சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த 10 1/2 பவுன் தங்க செயினை பறித்து சென்று விட்டனர். இதனால் திடுக்கிட்ட சரஸ்வதி கூச்சலிட்டார். அதற்குள் மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர்.

    இதுபற்றிய புகாரின் பேரில் சத்துவாச்சாரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோலம் போட்ட பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருமண ஆசைகாட்டி நர்சை பாலியல் பலாத்காரம் செய்ததாக ராணுவ வீரர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் செல்லம்பட்டியை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி. இவரது மகள் அன்புச்செல்வி (வயது19). நர்சிங் பயிற்சி முடித்துள்ள இவர் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் அன்புச் செல்வி ஒரு புகார் கொடுத்தார்.

    அதில் தங்கள் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் மாரீஷ் வரன் (24) என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்தோம்.

    அப்போது திருமண ஆசைகாட்டி அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் நான் கர்ப்பமானேன்.

    இதுபற்றி மாரீஷ்வரனிடம் கூறி தற்போது திருமணம் செய்யக்கேட்டபோது மறுத்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களை இதுவரை சந்திக்காத அதிகாரிகள் குறித்து அரசிடம் புகார் தெரிவிக்க போவதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் முடிவு செய்துள்ளார். #KamalHassan #GajaCyclone
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள அக்கச்சிப்பட்டி, பந்துவக்கோட்டை கிராமங்களில் கஜா புயலால் பாதித்த பொதுமக்களை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார்.

    அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

    எங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருகிறோம். பொதுமக்களின் பாதிப்புகள் குறித்து அரசிடம் தகவல் தெரிவிப்போம். சம்பந்தப்பட்ட துறைகளை சார்ந்த அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பொது மக்களை இதுவரை சந்திக்காமல் இருப்பது குறித்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

    தற்போது ஏற்பட்டுள்ள இழப்பை பாதிக்கப்பட்ட தனி ஒருவரால் ஈடு செய்ய முடியாது. அதற்கு கண்டிப்பாக பலர் உதவ வேண்டும். புயலின் போது வீடு இழந்த பொதுமக்களை, பள்ளியில் தங்கிக்கொள்ள அனுமதி அளித்த நிர்வாகிகளுக்கும், அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்கிய ஆசிரியர்களுக்கும் நன்றி.

    வகுப்புகளில் படித்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறினை ஏற்படுத்தி கூடாதென்பதற்காகத்தான் பள்ளி வளாகத்திற்குள் வராமல், வெளியே ரோட்டில் நின்று பேசி கொண்டிருக்கிறேன். எனவே பள்ளிக்குள் வராமல் இருந்ததை எவரும் தவறாக நினைத்து கொள்ள வேண்டாம். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

    நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக வருகை தர இருந்த கமலுக்காக, பந்துவாக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியின் முன்புறமிருந்த போர்டிக் கோவை கட்சியினர் தற்காலிக மேடையாக மாற்றியிருந்தனர்.

    அந்த பகுதிக்கு வந்த கமல், பள்ளிக்குள் அரசியல்வாதிகள் நுழைந்து மாணவர்களின் படிப்புக்கு இடையூறினை ஏற்படுத்தக்கூடாது என்று கூறி உள்ளே செல்ல மறுத்து விட்டார். பின்னர் சாலையோரத்தில் தனது காரை நிறுத்தி அதில் ஏறி நின்று பொதுமக்களிடம் பேசினார். #KamalHassan #GajaCyclone
    சபரிமலை அய்யப்பன் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை, திருப்பூர் போலீஸ் நிலையங்களில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. #Sabarimala #seeman
    கோவை:

    கோவை சரவணம்பட்டி விநாயகபுரத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவர் சரவணம்பட்டி போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அய்யப்பன் பற்றியும், சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் குறித்தும் மிகவும் இழிவாக பேசி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இது மத வழிபாட்டு சுதந்திரத்துக்கு எதிரானதாகும். எனவே சீமான் மீது இந்திய அரசியல் தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    சூலூர் அருகே உள்ள அரசூரை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகி ஜெஹிந்த் முருகேசன் சூலூர் போலீசில் அளித்த புகாரில் இந்து தெய்வங்களையும், இந்து மத வழிபாட்டு முறைகளையும், ஆன்மிக குருக்கள் மற்றும் இந்து மக்களை இழிவாக கொச்சைபடுத்தி பேசி வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் இந்து மக்கள் கட்சி (தமிழகம்) அமைப்பை சேர்ந்த சுப்பிரமணியம், செந்தில், ரவிக்குமார், மணிகண்டன், முருகன் மற்றும் நிர்வாகிகள் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சபரிமலை அய்யப்பனையும், பக்தர்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசி உள்ளார். மேலும் இந்து மதம் சார்ந்தவர்களையும், பெண்களையும் தரக்குறைவான முறையில் விமர்சித்து பேசி உள்ளார்.

    இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், மத ஒற்றுமையை சீர்குலைத்து மதகலவரத்தை தூண்டும் வகையில் அவர் பேச்சு இருந்தது. அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர். #Sabarimala #seeman
    தருமபுரியில் 2 பேர் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகிறார்கள்.
    தருமபுரி:

    வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தில்லைநகர் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் தரணிகுமார் (வயது13). இவர் தருமபுரி மாவட்டம், இருமத்தூரில் உள்ள மாணவர்கள் விடுதியில் தங்கி அங்குள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 28-ந்தேதி அன்று தரணிகுமார் விடுதியில் இருந்து பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் மாலையில் விடுதிக்கு திரும்பவில்லை. இது குறித்து பள்ளி தாளாளர் கம்பைநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான பள்ளி மாணவன் தரணி குமாரை தேடி வருகின்றனர்.

    இதேபோல் இண்டூர் அடுத்துள்ள பரப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜு (75). நேற்று வீட்டில் தூங்கி கொண்டிருந்த இவர் திடீரென மாயமாகி விட்டார். இது குறித்து அவரது மகன் ராஜ்குமார் இண்டூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான ராஜுவை தேடி வருகின்றனர். 
    ஆத்தூர் அருகே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயலை சேர்ந்தவர் ஜெயபாலன். இவரது மகன் ஒலிபர் (வயது31). இவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாக வில்லை.

    இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டுள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஆத்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×