search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகார்"

    அரியலூரில் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் 3 பேரை தேடி வருகிறார்கள்.
    அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ள செந்துறை பெரிய குறிச்சியை சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மகள் சுகுணா(வயது 18). இவர் உடையார்பாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். 

    இந்நிலையில் நேற்று காலை கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து செந்துறை போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சுகுணாவை தேடி வருகிறார்கள். 

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள எடையார் கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன். இவரது மனைவி பானுபிரியா (வயது22). இவர்களது மகள் அபி (வயது2).

    அன்பரசனுக்கும் அவரது மனைவி பானுபிரியாவுக்கு  இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்களுக்குள் மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் பானுபிரியா தனது குழந்தை அபியை தூக்கி கொண்டு வெளியே சென்றார். மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை. பானுபிரியாவை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.

    இது குறித்து பானுபிரியாவின் தந்தை எத்திராஜ் உடையார்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து குழந்தையுடன் மாயமான பானுபிரியாவை தேடி வருகிறார்கள்.
    திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகள் கூறி இளம்பெண் கடத்தப்பட்டதாக உசிலம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
    மதுரை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் குபேந்திரன் இவருடைய மகள் சிவரஞ்சனி (வயது 27). எம்.சி.ஏ. பட்டதாரி.

    சம்பவத்தன்று காலை தேர்வு எழுதுவதற்காக சிவரஞ்சனி மதுரை சென்று உள்ளார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் குபேந் திரன் உசிலம்பட்டி டவுன் போலீசில், மகள் மாயமானது குறித்து புகார் கொடுத்தார். அதில், திருமங்கலம் மறவன்குளத்தை சேர்ந்த வீரபாண்டி (29) என்பவர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகள் கூறி, சிவரஞ்சனியை கடத்தி சென்று உள்ளார்.

    இதற்கு அவரின் தந்தை கணேசன், தாய் பழனியம்மாள் மற்றும் நல்லபெருமாள் பட்டியை சேர்ந்த உறவினர்கள் மகாலிங்கம், தாய் பாப்பு ஆகியோர் உடந்தையாக இருந்தனர் என்று குறிப் பிட்டு உள்ளார்.

    அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து மாயமான பெண் மற்றும் வாலிபரை வலை வீசி தேடி வருகிறார். #tamilnews
    திருப்பூரில் காண்டிராக்டரிடம் ரூ.37 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக வங்கியின் முன்னாள் மேலாளர் மற்றும் புரோக்கர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. பில்டிங் காண்டிராக்டர். இவருக்கு முத்தனம்பாளையம் என்ற பகுதியில் ஒரு வீடு உள்ளது. இந்த வீட்டை திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் அடகுவைத்து ரூ. 14 லட்சம் கடன் பெற்றார்.

    பணத்தை கொடுத்த பைனான்ஸ் நிறுவனம் பணத்தை திருப்பி கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

    இதையடுத்து பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் இருந்த கிருஷ்ணமூர்த்திக்கு கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த புரோக்கர் செல்வகுமார் என்பவர் அறிமுகமானார்.

    செல்வகுமார் காண்டிராக்டர் கிருஷ்ணமூர்த்தியிடம் தனக்கு தெரிந்த ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் வங்கி கடன் பெற்று தருகிறேன் என்று கூறியுள்ளார். அதன்படி திருப்பூர் பழைய பஸ்நிலையம் பின்புறம் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு கிருஷ்ணமூர்த்தியை செல்வகுமார் அழைத்து சென்றார். அந்த வங்கியின் மேலாளராக இருந்த சிலம்புசெல்வி என்பவர் கடன் தருவதாக கூறி பல ஆவணங்களில் கையெழுத்து பெற்றார். மொத்தம் ரூ.54 லட்சத்து 50 ஆயிரம் கடன் ஒதுக்கிய அவர் கிருஷ்ணமூர்த்திக்கு ரூ.17 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுத்துவிட்டு மீதி பணம் ரூ.37 லட்சத்தை புரோக்கர் செல்வகுமாருடன் பங்குபோட்டு கொண்டார்.

    இந்த நிலையில் சிலம்புசெல்வி சென்னைக்கு மாறுதலாகி சென்று விட்டார். வங்கியில் இருந்து காண்டிராக்டர் கிருஷ்ணமூர்த்திக்கு ரூ.54லட்சத்து 50 ஆயிரம் கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வங்கிக்கு வந்து தான் ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் தான் கடன் வாங்கினேன் என்றார். ஆனால் வங்கி அதிகாரிகள் ரூ.54 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கி இருப்பதை காட்டினர்.

    தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கிருஷ்ணமூர்த்தி இதுகுறித்து திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வங்கியின் முன்னாள் மேலாளர் சிலம்புசெல்வி, புரோக்கர் செல்வகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    சென்னிமழை அருகே அரசு டவுன் பஸ்சில் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கண்டக்டரை மாணவிகளே போலீசில் ஓப்படைத்தனர்.
    சென்னிமலை:

    சென்னிமலையில் இருந்து தடம் எண் சி-8 அரசு டவுன் பஸ் எழுமாத்தூர் அரசு கல்லூரி வரை தினமும் சென்று வருகிறது.சென்னிமலை பகுதியில் இருந்து 20 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தினமும் இலவச பஸ் பாஸ் மூலம் காலையில் கல்லூரிக்கு சென்று மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

    இந்நிலையில் இந்த பஸ்சில் கண்டக்டராக பணியாற்றும் துடுப்பதி கல்லாகுளத்தை சேர்ந்த அம்மாசை என்பவர் மகன் அய்யப்பன் (31) கல்லூரி மாணவிகளிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு வந்தாராம். தொடர்ந்து இதுபோலவே கல்லூரி மாணவிகளின் மீது மோதுவது, அவர்களின் காது அருகே வந்து சினிமா பாட்டு பாடுவது என தொடர்ந்து டார்ச்சர் கொடுத்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று மாலை பஸ்சில் கூட்டம் இல்லாத போதும் வழக்கம் போல மாணவிகளிடம் சில்மி‌ஷம் செய்துள்ளார். இதனால் வெகுண்டு எழுந்த மாணவிகள் கண்டக்டர் அய்யப்பனை பிடித்து சென்னிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மாணவிகளின் புகாரின் பேரில் அய்யப்பனிடம் சென்னிமலை இன்ஸ்பெக்டர் சுகவனம் (பொறுப்பு) விசாரணை மேற்கொண்டார். அரசு கண்டக்டருக்கு ஆதரவாக தொழிற்சங்கத்தினரும், போக்குவரத்து கழக அதிகாரிகளும் மாணவிகளிடம் சமரச முயற்சி மேற்கொண்டனர்.

    ஆனாலும் பாதிக்கப்பட்ட மாணவிகள் இதனை ஏற்க மறுத்து உறுதியுடன் இருந்தனர். இதனால் இரவு 10 மணிக்கு மேல் கண்டக்டர் அய்யப்பன் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தில் கீழ் வழக்கு போடப்பட்டு கைது செய்யப்பட்டார். இன்று காலை கொடுமுடி நீதிமன்றத்தில் அய்யப்பன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். #tamilnews
    கல்லப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களை கேலி செய்த மாணவன் மீது ஒழுங்கீன புகார் குறித்து கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளை சேர்ந்த சுமார் 400 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர் ஒருவர் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது செல்போனை பயன்படுத்துதல், சக மாணவர்களை செல்போனை பார்க்க வைத்து தொந்தரவு செய்வது, மாணவர்களையும், ஆசிரியர்களையும் கேலி, கிண்டல் செய்வது என ஒழுங்கீனமாக நடந்து வந்துள்ளார்.

    இந்த மாணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் சில தினங்களுக்கு முன்பு வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்தனர்.

    இதனையடுத்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின்பேரில் நேற்று பள்ளிக்கு வாணியம்பாடி கல்வி மாவட்ட அலுவலர் சி.டி.வீரமணி தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் வந்தனர்.

    அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியை பரிதா பிரேமா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சபாபதி, துணைத் தலைவர் குருசாமி மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், சம்மந்தப்பட்ட மாணவனின் பெற்றோர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணைக்கு பின்னர் கல்வி அலுவலர் வீரமணி கூறுகையில், ’பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடைபெற்றது. விசாரணை அறிக்கை மேல்நடவடிக்கைக்காக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும்’’ என்றார். #tamilnews
    செங்குன்றத்தில் நர்சை கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட டாக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்குன்றம்:

    சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் 108 ஆம்புலன்சு அலுவலகம் உள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அவரிக்காடு பகுதியை சேர்ந்தகுமார் மனைவி தாமரைக்கனி நர்சாக பணி புரிந்து வந்தார்.

    அங்கு வேலைபார்த்த டாக்டர் ஒருவர் கடந்த 6 மாதத்துக்கு முன்பு தாமரைக் கனிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுபற்றி தாமரைக்கனி அப்போதே தேனாம்பேட்டையில் உள்ள 108 ஆம்புலன்சு தலைமை அலுவலகத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

    இதனால் மனஉளைச்சல் அடைந்த டாக்டர் அப்போதே வேலையை ராஜினாமா செய்துவிட்டார். தாமரைக்கனி தொடர்ந்து அந்த அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் தாமரைக்கனி நேற்று இரவு பாடிய நல்லூர் அங்காள பரமேஸ்வரி கோவில் மைதானம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் அவரை தாக்கி கடத்த முயன்றனர். அவர்களிடம் இருந்து தாமரைக்கனி தப்பி வந்து செங்குன்றம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரில், தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டரே ஆட்களை வைத்து தன்னை கடத்த முயன்றதாக கூறி இருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மர்மநபர்கள் தாக்கியதில் தாமரைக்கனி பலத்த காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #tamilnews
    ஆதம்பாக்கத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக சாலை நடுவில் போடப்பட்ட பந்தலை அகற்றியது தொடர்பாக புகார் அளித்த பேராசிரியர் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம், கிழக்கு கரிகாலன் தெருவில் விநாயகர் கோவில் உள்ளது. வருகிற 13-ந்தேதி நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக கோவில் அருகே பந்தல் போடப்பட்டு இருந்தது. இதற்காக சாலை நடுவே கம்பு நட்டு இருந்தனர்.

    இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுவதாக அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் சுரேஷ் என்பவர் ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதையடுத்து போலீசார், மாநகராட்சி ஊழியர்களுடன் வந்து பந்தலை அகற்றினர். இதுபற்றி அறிந்ததும் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அவர்களிடம் போலீசார் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர். பின்னர் சாலை நடுவே இருந்த பந்தல் அகற்றப்பட்டது. மீண்டும் அதே இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பந்தல் அமைக்க கோவில் நிர்வாகிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இதற்கிடையே புகார் கொடுத்த ஓய்வு பெற்ற பேராசிரியர் சுரேஷ் வீட்டை ஏராளமானோர் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். போலீசார் அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

    தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பான நிலை நீடிப்பதால் சுரேஷ் வீட்டு முன்பும், கோவில் அருகேயும் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். #tamilnews
    தூத்துக்குடி மாணவி சோபியா மீது புகார் கூறிய பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #TamilisaiSoundararajan #Sophia
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும். அப்படிச் சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை லட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள். நானும் சொல்கின்றேன். பா.ஜ.க.வின் பாசிச ஆட்சி ஒழிக.



    இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

    அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்:-

    தமிழிசையின் புகார் மீது அரசு அவசரம் அவசரமாக நடவடிக்கை எடுத்து, ஆராய்ச்சி படிப்பு முடித்து நாடு திரும்பும் ஓர் இளம்பெண்ணை இரவோடு இரவாக சிறையில் தள்ளி தங்கள் விசுவாசத்தை காட்டியிருக்கிறது.

    ஆனால், தமிழிசையின் தூண்டுதலின் பேரில் பா.ஜனதாவினர் தனது மகளை அவதூறாகப் பேசி அவமானப்படுத்தினார்கள், தனது மகள், மனைவி மற்றும் தனக்கு தமிழிசையே அத்தனைபேர் மத்தியிலும் கொலை மிரட்டல் விடுத்தார் என்று அவரது தந்தை கொடுத்த புகார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:-



    பா.ஜ.க.வை எதிர்த்து முழக்கமிட்ட ஒரே காரணத்தினால் மாணவி சோபியா கைது செய்யப்பட்டிருப்பது என்பது இந்த நாடு காலம் காலமாய் அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாக கொண்டிருக்கிற கருத்துரிமையின் மீது நிகழ்த்தப்பட்டு இருக்கிற கொடும் தாக்குதலாக கருதுகிறேன்.

    முழக்கமிட்டால் கைதா? நடப்பது மக்களாட்சியா? மன்னராட்சியா? இங்கு நடப்பது ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்று கேள்வி எழுகிறது. சகிப்புத்தன்மையற்று, எதிர் கருத்து எதுவும் தோன்றி விடக் கூடாது என்பதான ஏதேச்சதிகார உளவியல் என்பது பாஜக கட்சியின் அடிப்படை குணாதிசயங்களாக மாறி இருக்கின்றன என்பதற்கு இந்த கைது நடவடிக்கை ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

    இயக்குனர் பாரதிராஜா தனது குரலிலேயே பேசி ஒரு ஆடியோவை பகிர்ந்துள்ளார். அதில், ‘‘நீங்கள் தமிழக பி.ஜே.பியில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறீர்கள். நாங்களெல்லாம், தேசிய சிந்தனையுடைய இலக்கிய வாதி குமரி அனந்தனின் மகள் என்பதிலும், ஒரு தமிழச்சி என்ற வகையிலும் இதற்காகப் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

    பொது வாழ்வில் ஈடுபடும்போது எதையும் நீங்கள் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் தகுதிக்கு அவரை அழைத்து உங்கள் பக்க நியாயங்களைக் கூறி சமாதானப்படுத்தி விளக்கம் கொடுத்திருக்க வேண்டுமல்லவா?

    அதை விடுத்து அந்த வீரமுள்ள தமிழச்சி மீது புகார் கொடுத்து அவளைக் கைது செய்து உள்ளே தள்ள வேண்டும் என்பது எவ்வளவு அநாகரிகமான வி‌ஷயம். உங்களை நான் குமரி அனந்தனின் பெண்ணாக நினைக்க முடியவில்லை.

    அந்தப் பெண்ணைப் பற்றி முறையிட்ட வழக்கை வாபஸ் பெற்றுவிட வேண்டும் இல்லையென்றால் வரலாறு உங்களை மன்னிக்காது” என்று பேசியுள்ளார். #TamilisaiSoundararajan #Sophia
    பாரீஸின் பிக்சரெஸ்கியூ கிராமத்தில் பூச்சிகள் அதிகம் சப்தமிடுவதால் தொந்தரவாக இருப்பதாக மேயரிடம் சுற்றுலா பயணிகள் புகார் அளிக்க, அது எங்கள் பகுதியின் சங்கீதம் என மேயர் உருக்கமாக பதிலளித்துள்ளார். #Paris #Cicadas
    பாரீஸ்:

    உலகின் மிக அழகிய நகரங்களில் ஒன்றான பாரீஸ் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர். அவ்வாறு பிக்சரெஸ்கியூ எனும் கிராமத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள், மேயரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அந்த புகாரில் அப்பகுதியில் சுற்றித்திரியும் குறிப்பிட்ட வண்டு இன பூச்சிகள் அதிகம் சப்தமிடுவதால் தொந்தரவாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

    வண்டுகள் காலையிலும், மாலையிலும் தொடர்ந்து சப்தமிட்டு தொந்தரவு செய்வதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வானொலி மூலம் பதிலளித்த அப்பகுதி மேயர் ஜியார்ஜஸ் ஃபெர்ரேரோ, இந்த சப்தம் புதிதாக வந்த சுற்றுலா பயணிகளுக்கு தொந்தரவாக இருக்கலாம், ஆனால் இது இப்பகுதி மக்களின் சங்கீதம் என அவர்கள் உணரவில்லை என தெரிவித்துள்ளார்.

    மேலும், சுற்றுலா பயணிகள் சில பூச்சி மருந்துகள் கொண்டு அவற்றை அகற்ற முயற்சிப்பதாகவும், அது மிகவும் முட்டாள்தனமான விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த சப்தத்தை புதிதாக இங்கு வருபவர்கள் எதிர்த்தாலும் பரவாயில்லை ஆனால், ப்ரெஞ்சின் பூர்வீக குடிமக்களும் இதனை தொந்தரவாக எண்ணுகிறார்கள் என மனவருத்தத்துடன் தெரிவித்துள்ளார். #Paris #Cicadas
    சங்கரன்கோவில் அருகே தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் நகையை மர்மநபர் திருடி தப்பி சென்று விட்டார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள தளவாய்புரம் மேலத் தெருவை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி பிரமு (வயது 45). இவர்கள் இருவரும் சம்பவத்தன்று இரவு காற்றிற்காக வீட்டின் முன் அறையில் வெளிகதவை திறந்து வைத்து தூங்கி கொண்டிருந்தனர். 

    இந்நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு அங்கு வந்த மர்மநபர் தூங்கி கொண்டிருந்த பிரமுவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை அறுத்து கொண்டு செல்ல முயன்றுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த பிரமு சத்தம் போடுவதற்குள் மர்மநபர் செயினுடன் தப்பி ஓடிவிட்டார்.

    சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் மர்மநபரை விரட்டி சென்றும் பிடிக்க முடியவில்லை. இது குறித்து புகாரின் பேரில் சின்னகோவிலான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ஜோலார் பேட்டை போலீசார் எங்கள் குடும்பத்தை விசாரணைக்கு அழைத்து அடித்து உதைத்து துன்புறுத்தி உள்ளதாக கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
    வேலூர்:

    வாணியம்பாடி தாலுகா கலந்திரா கிராமம் அருந்ததியர் காலனியை சேர்ந்த பாபு மனைவி ராஜாத்தி என்பவர் தனது குடும்பத்துடன் மனு கொடுப்பதற்காக வந்தார். கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் சோதனை செய்த போது, அவரிடம் 1 லிட்டர் பாட்டிலில் மண்எண்ணை இருந்தது. மண்எண்ணையை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அதில், எங்களது மகன், பாலாணங்குப்பத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து, ஊரை விட்டு இழுத்துக் கொண்டு ஓடி விட்டார். மகன் காதலித்த விவகாரத்தில் ஜோலார் பேட்டை போலீசார் எங்கள் குடும்பத்தை விசாரணைக்கு அழைத்து அடித்து உதைத்து துன்புறுத்துகின்றனர்.எங்களை கொடுமைப்படுத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தனர்.

    புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியினர் கொடுத்த மனுவில், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அருகில் தரை கடை வைத்து 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் பென்னாத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரி, போலீசாருடன் சேர்ந்து தரைக்கடைகளை அகற்றினர்.

    மீண்டும் கடைகளை வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். #tamilnews
    ராஜபாளையம் அருகே காதல் திருமணம் கசந்து அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுதால் மனைவி போலீசில் புகார் கொடுத்தார். இதனால் விரக்தியடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமன் போலீஸ் சரகத்துக்குட்பட்ட குடல்குடி நத்தத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (வயது 25). இவர் மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரும், அதே பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரி (18)என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால், 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டது. பின்னர் இருவரும் மதுரையில் குடியேறினர். இருவரது குடும்பத்தினரும் தொடர்பு இல்லாமல் வாழ்ந்து வந்தனர்.

    திருமணம் செய்து சில நாட்களிலேயே காதல் கசந்து அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தினேஷ் விரக்தியுடனே இருந்து வந்தார். இந்த நிலையில் இருவரும் பிரிந்து அவர்களது வீட்டுக்கு சென்று விட்டனர்.

    காளீஸ்வரி குடும்ப பிரச்சினை தொடர்பாக கணவர் மீது சாத்தூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் தினேசை அடிக்கடி அழைத்து விசாரணை நடத்தினர். மனைவி போலீசில் புகார் கொடுத்ததால் மேலும் விரக்தி அடைந்த தினேஷ் சம்பவத்தன்று ஊரின் அருகே உள்ள சிவலிங்காபுரம் குளக்கரை அய்யனார் கோவிலுக்கு சென்று வி‌ஷம் குடித்தார்.

    உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தினேஷ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கீழராஜகுலராமன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். காதல் திருமணம் செய்து கொண்டது. மனைவி கொடுத்த புகாரில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    ×