search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகார்"

    திருவண்ணாமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றுள்ளன.
    திருவண்ணாமலை:

    தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படாததால் அதன் நிர்வாக பொறுப்புகளை தனி அதிகாரிகள் நிர்வகித்து வருகின்றனர். இதில் குறிப்பாக கிராம ஊராட்சிகளின் ஒட்டுமொத்த நிதி அதிகாரமும் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 69 ஊராட்சிகளில் அரசு வளர்ச்சி திட்டப் பணிகளை நிறைவேற்றுவதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தெருவிளக்குகள் மாற்றம், மின் மோட்டார் சீரமைப்பு, ஆழ்துளை கிணறு பராமரிப்பு, கால்வாய் சீரமைப்பு போன்ற பணிகளை செய்ததாக போலி ரசீதுகள் தயாரித்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டு உள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்து உள்ளன.

    இதுகுறித்து ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அரவிந்தனிடம் கேட்டபோது, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 69 ஊராட்சிகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் வந்து உள்ளன. இதுகுறித்து இன்று (திங்கட்கிழமை) முதல் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் இந்த ஊராட்சிகளின் கணக்கில் இருந்து நிதி பரிமாற்றம் செய்யும் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது’ என்றார்.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகியிடம் கேட்டபோது, ‘திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளின் நிதி அதிகாரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இருந்தது. வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த கருணாகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். ஒரு அலுவலர் ஓய்வு பெற்றுவிட்டால் மற்றொரு அலுவலர் பொறுப்பேற்கும் வரை நிதி பரிமாற்றம் செய்வது நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி, தற்போது நிதி பரிமாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் நிதி ஆதாரம் குறைவு தான். அதனால் அங்கு மோசடி ஏற்பட வாய்ப்பு இல்லை. இருப்பினும் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்’ என்றார்.
    புதுவையில் சுற்றுலா பயணியிடம் பணப்பையை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    கொல்கத்தாவை சேர்ந்தவர் கவுர் கோபால்ஷா. ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இவரது மனைவி அமிதஷா (வயது 55). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக வேலூருக்கு வந்திருந்தார். பின்னர் சிகிச்சை முடிந்து புதுவையில் அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்ட சுற்றுலா இடங்களை சுற்றி பார்க்க புதுவை வந்தார்.

    புதுவை விடுதி அறையில் தங்கி சுற்றுலா இடங்களை பார்க்க வந்தார். நேற்று இரவு 9 மணியளவில் அமிதஷா புதுவை ரோமண்ட் ரோலண்ட் வீதியில் நடந்த சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென அமிதஷா தோளில் மாட்டி சென்ற கைப்பையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார்.

    அமிதஷா அந்த பையில் 2 செல்போன், ரூ.12 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஏ.டி.எம். கார்டு உள்ளிட்டவைகளை வைத்திருந்தார்.

    இதுகுறித்து அமிதஷா பெரியகடை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றிவேல், முருகன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அந்த பகுதியில் பொறுத்தப்பட்டு இருந்த சி.சி.டி. கேமராக்களை ஆய்வு செய்து பணப்பையை பறித்து சென்றவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    தனியார் நிறுவன பெண் ஊழியர் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருச்சி:

    திருச்சி-சென்னை பைபாஸ் ரோடு செந்தண்ணீர்புரம் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜசேகர்-விமலா தம்பதியினர். இவர்களுக்கு பிரியதர்ஷிணி (வயது 21) என்ற மகள் உள்ளார். இவர் திருச்சி கல்லுக்குழி பகுதியில் உள்ள தனியார் பைக் விற்பனையகத்தில் பணி புரிந்து வந்தார். இதற்காக தினமும் பேருந்தில் வந்து செல்வது வழக்கம். 

    சம்பவத்தன்று வழக்கம் போல் வேலைக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் இரவு நீண்ட நேரமாகியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டபோதும் எந்த தகவலும் கிடைக்கவில்லையாம்.
    இதனால் உறவினர்கள் நண்பர்களிடம் விசாரித்தும் பிரியதர்ஷிணி குறித்த தகவல் இல்லாததால் பொன்மலை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். 

    அதன்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், அவர் தானாக எங்கும் சென்றாரா? அல்லது மர்ம நபர்கள் எவரேனும் அவரை கடத்தி சென்றனரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அசாம் குடிமக்கள் பதிவேடு பிரச்சனையை மையமாக வைத்து சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிப்பதாக மாநிலத்தில் 3 போலீஸ் நிலையங்களில் மம்தா பானர்ஜி மீது புகார்கள் பதிவு செய்ப்பட்டுள்ளது. #NCR #FIRagainstMamata
    கவுகாத்தி:

    வங்காளதேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 

    அதன் இறுதி வரைவு அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 3,29,91,384 விண்ணப்பதாரர்களில் 2,89,83,677 பேர் குடிமக்களின் தேசிய பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

    40 லட்சம் பேர் பதிவேட்டில்  சேர்க்கப்படவில்லை. தற்போதைய நிலையில் இவர்கள் சட்டவிரோத குடிமக்களாக கருதப்படுவார்கள். எனினும், விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்தது. மாநிலங்களவை துவங்கியதும் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.  காங்கிரஸ் எம்.பிக்களும் அவர்களுக்கு ஆதரவாக அமளியில் ஈடுபட்டனர். 

    இதற்கிடையில்,  அசாம் குடிமக்கள் பதிவேட்டில் அம்மாநில சட்டசபை உறுப்பினர் உள்பட சுமார் 40 லட்சம் மக்களின் பெயர் விடுபட்டுப் போனதற்கு மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ஓட்டுவங்கி அரசியலுக்காக சுமார் 40 லட்சம் மக்களை அசாம் மாநிலத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்திய பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் எண்களை பெற்றுள்ள பலரும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

    இந்தியர்களான இவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த மம்தா பானர்ஜி, சமீபத்தில் டெல்லி சென்றபொது இவ்விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் விவாதிதார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இந்த பிரச்சனையால் உள்நாட்டுப் போர் வெடிக்கும் என மத்திய அரசை எச்சரித்தார்.

    இந்நிலையில், அசாம் குடிமக்கள் பதிவேடு பிரச்சனையை மையமாக வைத்து, மக்களிடையே வெறுப்புணர்னை விதைப்பதாகவும், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும்,  மாநிலத்தில் 3 போலீஸ் நிலையங்களில் மம்தா பானர்ஜி மீது புகார்கள் பதிவு செய்ப்பட்டுள்ளது.

    அசாம் மாநிலத்தில் உள்ள கீதாநகர், ஜகி ரோடி மற்றும் கோலாஹட் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு, அந்த புகார்களின் அடிப்படையில் இன்று முதல் தகவல் அறிக்கைகள் பதிவாகியுள்ளன. #NCR #FIRagainstMamata 
    மார்த்தாண்டம் அருகே வீட்டில் இருந்து வெளியில் சென்ற இளம்பெண் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    மார்த்தாண்டம் விரிகோடு கோணம் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர். இவரது மகள் லிட்டில் பிளவர் (வயது24).

    இவர் கடந்த மாதம் 14-ந்தேதி இவர் வீட்டில் இருந்து நாகர்கோவிலுக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றார். ஆனால் இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை பெற்றோர் பல இடங்களில் தேடினர். இந்த நிலையில் லிட்டில் பிளவர் தனது தம்பியின் செல்போனுக்கு ஒரு குறுந்செய்தி அனுப்பினார். அதில் என்னை யாரும் தேட வேண்டாம் என அனுப்பி இருந்தார்.

    இதையடுத்து அவரை உறவினர்கள் வீடு, தோழிகள் வீடுகளில் தேடி பார்த்தனர். எங்கும் அவர் இல்லாததால் இது குறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரபிள்ளை மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகிறார்கள்.
    கள்ளக்காதல் தகராறில் வாலிபரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி அருகே உள்ள வடக்கு குண்டல் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 32). ராஜேசுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜேசுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.

    இதில் ராஜேசின் மனைவி, கணவரை பிரிந்து கீழ்குளத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இந்நிலையில் ராஜேஷ் குழந்தைகளை பார்க்க கீழ்குளத்திற்கு சென்றார். அங்கு அவர் மனைவி வீட்டுக்கு சென்றபோது, வாலிபர் ஒருவர் ராஜேசை வழிமறித்து சரமாரியாக தாக்கினார். இதில் ராஜேஷ் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் பற்றி ராஜேஷ் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். அதில் கீழ்குளத்தில் தங்கியிருந்த குழந்தைகளை பார்க்க சென்றேன். அப்போது என்னை மனைவியின் கள்ளக்காதலன் வழிமறித்து தாக்கினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சனல்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இந்திரமணி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மேலகிருஷ்ணன்புதூரில் வீட்டில் இருந்து கோவிலுக்கு சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியை மாயமானது குறித்து போலீசில் செய்யப்பட்டுள்ளது. போலீசார் ஆசிரியை தேடி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலை அடுத்த மேலகிருஷ்ணன்புதூர் பகுதியை சேர்ந்தவர் பால்துரை. இவரது மனைவி கிருஷ்ணம்மாள் (வயது 70). ஓய்வு பெற்ற ஆசிரியை. கடந்த 29-ந் தேதி வீட்டில் இருந்து கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. 

    இதையடுத்து அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் அவர் இல்லாததால் இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான கிருஷ்ணம்மாளை தேடி வருகின்றனர். 
    சென்னையில் மலிவு விலையில் தங்க காசு தருவதாக கூறி ரூ.14½ லட்சம் மோசடி செய்ததால பெண் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் விஜய குமார். இவர், உறவினர்கள் லாவண்யா, உஷா, இந்திரா காந்தி ஆகியோருடன் அசோக் நகர் உதவி கமி‌ஷனர் வின்சென்ட் ஜெயராஜிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

    நான் எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வருகிறேன். கே.கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருகிறேன்.

    கடந்த 2017-ம் ஆண்டு மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவரின் மனைவியான மேனகா (30) மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும்போது எனக்கு அறிமுகமானார்.

    அவர் என்னிடம், “வெளிநாடுகளில் இருந்து தனக்கு தங்க காசுகள் அடிக்கடி வரும். அதை கிராம் ரூ.500-க்கு தருகிறேன் என்று கூறினார்.

    இதை நம்பி நானும் என்னுடைய உறவினர்களான இந்திராகாந்தி, உஷா, லாவண்யா ஆகிய நால்வரும் சேர்ந்து சுமார் 14 லட்சத்து 50ஆயிரம் ரூபாயை கடந்த வருடம் நவம்பர் மாதம் மேனகாவிடம் கொடுத்தோம்.

    ஆனால் இதுவரை சொன்னபடி தங்க காசும் தரவில்லை எங்கள் பணத்தையும் திருப்பி தராமல் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து எம்.ஜி.ஆர். நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சொர்ண களஞ்சியம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    வியாபாரி மனைவியிடம் 6 பவுன் நகையை 2 வாலிபர்கள் பறித்துச் சென்றனர்.

    மதுரை:

    மதுரை கரிமேடு மேல பொன்னகரம் சிஸ்டர் ரோஸ் தெருவைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவர் மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இவர் நேற்று இரவு 7 மணி அளவில் வீட்டு வாசலுக்கு தண்ணீர் மோட்டாரை அணைக்க வந்தார்.

    அப்போது அங்கு 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் சாந்தி கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் எஸ்.எஸ்.காலனி ராஜீவ் காந்தி தெருவைச் சேர்ந்தவர் அழகுமலை (வயது30). இவர் மேலவெளிவீதியில் நடந்து சென்றபோது திடீர் நகர் முதல் பிளாக்கை சேர்ந்த செல்லப்பாண்டி (21) வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.500-ஐ பறித்து சென்றான்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லப்பாண்டியை கைது செய்தனர்.

    நடந்து சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 7 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
    திருவட்டார்:

    திருவட்டார் அருகே மேக்காமண்டபம் மயிலோடும் பாறை விளையைச் சேர்ந்தவர் சில்வான்ஸ். இவரது மனைவி ஜெசி ஜெயனேட் (வயது 78), ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர், அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் ஜெசி ஜெயனேட் கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்தார்.

    உடனே அவர், திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். அதற்குள் மர்மநபர் நகையை பறித்து விட்டு தப்பியோடி விட்டார். இது குறித்து திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். ஜெசி ஜெயனேட்டிடம் கொள்ளையன் குறித்த அடையாளங்களை போலீசார் கேட்டறிந்தனர். பின்னர் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டது. ஆனால் கொள்ளையர்கள் யாரும் சிக்கவில்லை.

    செயின் பறிப்பு குறித்து ஜெசி ஜெயனேட் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    மணல் கடத்தல் குறித்து புகார் அளித்த பா.ஜனதா பிரமுகரை அரிவாளால் வெட்டி சம்பவம் குத்தாலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் விளாவடி காலனியை சேர்ந்தவர் புகழேந்தி. பா.ஜனதா கட்சியில் எஸ்.சி, அணியின் குத்தாலம் நகர பொதுச் செயலாளராக உள்ளார். மயிலாடுதுறை சீனிவாசபுரத்தை சேர்ந்த வேளாண்மை பொறியியல் துறையைச் சேர்ந்த உதவி என்ஜினீயர் பாஸ்கரன் என்பவர் மீது, விளாவடி காலனி பகுதியில் பிளாட் போடுவதாக கூறி அரசு அனுமதியின்றி அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததாக, குத்தாலம் தாசில்தார் மற்றும் போலீசில் புகழேந்தி புகார் அளித்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று குத்தாலம் விளாவடி காலனிக்கு கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மநபர்கள் கத்தி மற்றும் அரிவாளால் புகழேந்தியை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் அவர் படுகாயமடைந்தார்.

    இதைக்கண்ட அப்பகுதி மக்கள் புகழேந்தியை மீட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து என்ஜினியர் பாஸ்கரன் மீது குத்தாலம் போலீசில் புகழேந்தி புகார் அளித்தார். போலீசார் சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மணல் கடத்தல் குறித்து புகார் அளித்த பா.ஜனதா பிரமுகரை அரிவாளால் வெட்டி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தேனி அருகே கைக்குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே பழனி செட்டிபட்டி அரசுநகர் பகுதியை சேர்ந்தவர் முகமதுரபீக். இவரது மனைவி ரசீதாபானு(வயது24). இவர்களுக்கு சுப்ரீம்ரியா என்ற ஒருவயது பெண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    இதனால் கோவித்துக் கொண்டு கைக்குழந்தையுடன் ரசீதாபானு வீட்டைவிட்டு வெளியேறினார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து கைக்குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    ×