search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகார்"

    நீடாமங்கலம் அருகே வீட்டில் இருந்து வெளியே சென்ற இளம்பெண் மாயமானது குறித்து போலீசில் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் காவல் சரகத்திற்குட்பட்ட சோனாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவருடைய மகள் சூர்யா என்ற சுப்புலெட்சுமி. பி.ஏ. முடித்து விட்டு தற்போது வீட்டில் இருந்து வந்தார்.

    அவருக்கு பெற்றோர்கள் மாப்பிளை பார்த்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள் சூர்யாவை பல இடங்களில் தேடினர். அவர் எங்கு சென்றார் என்பது தெரியாததால் இது குறித்து நீடாமங்கலம் போலீசில் புகார் செய்தனர்.

    அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி வழக்கு பதிவு செய்து மாயமான சூர்யாவை தேடி வருகிறார்கள். 
    மதுரையில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்தார். இந்த சம்பவம் குறித்து கூடல்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை விளாங்குடி காமாட்சிநகரைச் சேர்ந்த அனுசுயாதேவி (வயது19)க்கும், கணேசன் என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடை பெற்றது. அதன் பிறகு சமயநல்லூர் அருகே உள்ள தோடனேரியில் கணவருடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி அனுசுயாதேவி திடீரென மாயமானார். இதுகுறித்து சமயநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் விசாரணையில் பாலமுருகன் என்பவருடன் அனுசுயாதேவி சென்றிருப்பது தெரியவந்தது அவருடன் கள்ளக்காதல் இருப்பதும் உறுதியானது.

    தொடர்ந்து போலீசாரால் மீட்கப்பட்ட அனுசுயாதேவி விளாங்குடியில் உள்ள தாயார் வீட்டில் தங்கி இருந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    இது குறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வானூர் அருகே 6 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு தோட்டம் தீயில் எரிந்து சாம்பலாகி கிடந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வானூர்:

    புதுவை மாநிலம் வில்லியனூரை அடுத்த ஊசுட்டேரி பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவருக்கு விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தை அடுத்த நவமால்மருதூர் பகுதியில் 15 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் நெல், கரும்பு போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டு இருந்தது. வழக்கம்போல் இன்று காலை தண்டபாணி வயலுக்கு வரும்போது 6 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு தோட்டம் முற்றிலும் தீயில் எரிந்து சாம்பலாகி கிடந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.7 லட்சம்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தண்டபாணி கதறி துடித்தார். இன்னும் சில நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் இருந்த கரும்புகள் இப்படி எரிந்து சேதமாகி விட்டதே என நினைத்து மனம் வருந்தினார். சிறிது நேரத்தில் அங்கேயே மயங்கி விழுந்து விட்டார். இதைப்பார்த்த அருகே உள்ள வயல்வெளியில் வேலை பார்த்த விவசாயிகள் ஓடிவந்தனர்.

    அவர்கள் தண்டபாணி மீது தண்ணீர் தெளித்ததும் அவருக்கு மயக்கம் தெளிந்தது. பின்னர் இது தொடர்பாக தண்டபாணி கண்டமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக கரும்பு தோட்டத்துக்கு மர்ம மனிதர்கள் தீ வைத்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியகுளம் அருகே அ.தி.மு.க. கொடி கம்பம் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே எண்டபுளிபுதுப்பட்டி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் அ.தி.மு.க. கொடி கம்பம் மற்றும் கல்வெட்டு உள்ளது.

    இந்த கம்பத்தை ஒரு கும்பல் அகற்றி விட்டு அதே இடத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடி கம்பத்தை நடமுயன்றனர். மேலும் அருகில் இருந்த கல்வெட்டையும் இடித்து சேதப்படுத்தினர்.

    இது குறித்து ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர் அன்னகொடி மற்றும் கட்சியினருக்கு தெரியவரவே அப்பகுதியில் ஒன்று திரண்டனர். இந்த வி‌ஷயம் அந்த பகுதியில் காட்டு தீ போல் பரவியது. இதனால் எண்டபுளிபுதுப்பட்டி கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு இருந்த கொடி கம்பங்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    குடியாத்தம் அருகே லாரி டிரைவர் திருநங்கையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்க்கு பின் வீட்டுக்கு அழைத்து செல்லாததால் திருநங்கை போலீசில் புகார் அளித்துள்ளார்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் மொர்சபல்லி கிராமத்தை சேர்ந்த ஒரு திருநங்கைக்கும், மவுசன்பேட்டையை சேர்ந்த லாரி டிரைவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நெருக்கம் இருக்கமானதால் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்தனர்.

    கடந்த ஜனவரி 15ம் தேதி திருநங்கையான தனது காதலியை லாரி டிரைவர் திருமணம் செய்து கொண்டார்.

    பின்னர், தனது வீட்டுக்கு திருநங்கையை அழைத்துச் செல்லாமல் தனி குடித்தனம் வைத்தார். மாமியார் வீட்டுக்கு சென்ற பிறகு தான், இல்லற வாழ்க்கையை தொடங்க வேண்டும் என திருநங்கை முடிவு செய்திருந்தார். ஆனால் திருநங்கை ஆசை நிராசையானது. திடீரென திருநங்கையை விட்டு லாரி டிரைவர் ஒரே அடியாக விலகிவிட்டார்.

    இந்த நிலையில் மனம் நொந்துபோன திருநங்கை, கணவன் வீட்டிற்கு நியாயம் கேட்க சென்றார். எனக்கும் மனம் இருக்கிறது. ஆரம்பத்திலேயே நான் திருநங்கை என தெரியும். திருமணம் செய்த பிறகு என்னை வெறுப்பது எந்த விதத்தில் நியாயம் என்றார்.

    பதில் சொல்ல முடியாமல் விழி பிதுங்கிய காதல் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் திருநங்கையை அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது.

    மேலும் திரும்ப வந்தால் கொன்று விடுவோம் என மிரட்டினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட திருநங்கை, தனது கணவருடன் சேர்த்து வைக்குமாறு குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரில், நானும் காதல் கணவனும் உண்மையாக காதலித்தோம்.

    திருமணத்திற்கு பிறகு குடும்பத்தினரின் பேச்சை கேட்டுக் கொண்டு காதலை தூக்கி எறிந்துவிட்டார்.மீண்டும் என் காதல் கணவருடன் சேர்த்து வையுங்கள். அவருடன் இல்லற வாழ்க்கையை தொடங்க வேண்டும் என கூறியுள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார். வித்தியாசமான வழக்கு என்பதால் குழம்பி நிற்கின்றனர். #tamilnews
    கேரள மாநிலம் கோட்டையம் காவல்நிலையத்தில் கிறிஸ்தவ பிஷப் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக கன்னியாஸ்திரி ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Kerala
    திருவனந்தபுரம்:

    கிறிஸ்தவ மதத்தினர் அதிகம் வாழும் பகுதிகளில் ஒன்று கேரள மாநிலம். இங்கு சமீப காலமாக கிறிஸ்தவ பாதிரியார்கள் மீதான பாலியல் புகார்கள் அதிகரித்து வருகிறது.

    அதன் ஒருபகுதியாக, கேரள மாநிலம் கோட்டயம் காவல்நிலையத்தில் பிஷப் ஒருவர் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக கன்னியாஸ்திரி புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் பிஷப் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கன்னியாஸ்திரியை பணியிடமாற்றம் செய்ததால் தம்மை பழிவாங்கும் நோக்கில் கன்னியாஸ்திரி தம் மீது புகார் அளித்துள்ளதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறும் கன்னியாஸ்திரி மீது பிஷப் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Kerala
    குத்தகை நிலுவைத்தொகை தொடர்பாக பிரதமரின் அத்தை தாஹிபென் அளித்த புகாரின்பேரில் மத்திய அரசு அதிகாரிகளுக்கு தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். #DahibenNarottamdasModi
    புதுடெல்லி:

    குஜராத் மாநிலம் மெசானா மாவட்டம் வாத்நகரை சேர்ந்தவர் தாஹிபென் நரோட்டம்தாஸ் மோடி. 90 வயதான இந்த மூதாட்டி, தன்னை பிரதமர் நரேந்திர மோடியின் அத்தை என்று சொல்கிறார். வத்நகரில் இவருக்கு சொந்தமான கட்டிடத்தை, பீடி தொழிலாளர்களுக்கு மருந்தகம் அமைப்பதற்காக மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் 1983-ம் ஆண்டு குத்தகைக்கு எடுத்தது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை குத்தகை புதுப்பிக்கப்பட வேண்டும்.

    ஆனால், 1998-ம் ஆண்டுக்கு பிறகு குத்தகையை புதுப்பிக்காத அமைச்சகம், அப்போது கொடுத்த மாத வாடகை ரூ.1,500-ஐ இப்போதும் அளித்து வருகிறது. இதனால், குத்தகை புதுப்பிப்பது தொடர்பாகவும், புதுப்பிக்காத ஆண்டுகளுக்கு நிலுவைத்தொகை வழங்கப்படுமா? என்றும் கேட்டு தகவல் ஆணையத்தில் கடந்த ஆண்டு தாஹிபென் மனு அளித்தார்.

    ஆனால், மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் உதவி நல்வாழ்வு அதிகாரி மொய்த்ராவும், அவருடைய உயர் அதிகாரி போப்லேவும் போதிய தகவல்களை அளிக்கவில்லை. தான் பிரதமரின் அத்தை என்று அவர் மேல்முறையீட்டு மனுவில் கூறியும் அவர்கள் அலட்சியமாக செயல்பட்டனர்.

    எனவே, மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சர்யலு, மேற்கண்ட 2 அதிகாரிகளுக்கும் ஏன் அபராதம் விதிக்கக்கூடாது? என்று கேட்டு, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.  #DahibenNarottamdasModi #Tamilnews 
    அரியாங்குப்பம் அருகே குடும்ப தகராறில் பெண்ணை தாக்கி பொருட்களை சூறையாடிய கணவர்- உறவினர்கள் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் அருகே மணவெளி திருமால் நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜகோபால். (வயது 45). இவரது மனைவி கலைவாணி. (41). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது.

    ராஜகோபால் ஷெட்டர் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மதுகுடிக்கும் பழக்கம் உள்ள இவர் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். இதனால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும்.

    அது போல் சம்பவத்தன்று இவர்களிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ராஜகோபால் தனது உறவினர்களான செல்வி, நந்தினி, பிரியா ஆகியோருடன் சேர்ந்து கலைவாணியை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து உடைத்து சூறையாடியதாக தெரிகிறது.

    இதுகுறித்து கலைவாணி அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். அது போல் ராஜகோபாலும் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரில் தன்னை கலைவாணி இரும்பு பைப்பாலும், கிரிக்கெட் மட்டையாலும் தாக்கியதாக தெரிவித்தார். போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முன் விரோத தகராறில் வாலிபர்கள் மீது தாக்குததில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார்பாளையம் லாம்பேட் சரவணன் நகரை சேர்ந்தவர் ராமு (வயது25), பெயிண்டர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேலு என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று இரவு ராமுவும், அவரது நண்பர்களான சக்திவேல், முருகன், சூர்யா ஆகியோர் அதே பகுதியில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். வேலுவும், அவரது நண்பர்களான வினோத், ஸ்டீபன், செல்வா ஆகியோர் அங்கு வந்தனர். அப்போது வேலு ராமுவிடம் இங்கு ஏன் நிற்கிறாய் என கேட்டதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த வேலு அவரது நண்பர்களுடன் சேர்ந்து ராமுவையும், அவரது நண்பர்களையும் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஒடிவிட்டனர். இதில் காயம் அடைந்த ராமுவும், சக்திவேலுவும் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் ராமு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். சக்திவேல் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து ராமு ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் வழக்குபதிவு செய்து வேலு மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகிறார்கள்.

    பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக பேசிய எஸ்.வி.சேகர் போலீஸ் பாதுகாப்புடன் வலம் வரும் நிகழ்வு தொடர்கதை ஆகியுள்ளது. போலீசாரின் அலட்சிய போக்கு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.#svesekar
    சென்னை:

    காமெடி நடிகரும், பா.ஜனதா பிரமுகருமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி பேஸ்புக் பக்கத்தில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

    இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால் போலீசார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

    இதனால் எஸ்.வி.சேகர் எந்தவித பயமும், பதட்டமும் இன்றி சர்வ சாதாரணமாக சுற்றி வருகிறார். இதற்கிடையே எஸ்.வி.சேகர் கோர்ட்டில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களும் தள்ளுபடியானது. இதனால் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இதன் பிறகும் எஸ்.வி.சேகர் மீது கைது நடவடிக்கை பாயவில்லை.

    இந்த நிலையில் எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் எழும்பூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதனையடுத்து வருகிற 20-ந்தேதி அவர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எஸ்.வி.சேகர் பொது நிகழ்ச்சிகளில் பலத்த பாதுகாப்புடன் பங்கேற்பது தொடர் கதையாகியுள்ளது.

    தாம்பரம் அருகே படப்பையில் உள்ள ஓட்டலுக்கு நேற்று மாலை எஸ்.வி. சேகர் சென்றார். அப்போது அவருடன் 2 போலீசார் பாதுகாப்புக்காக சென்றனர்.

    எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாத விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் கண்டன குரல்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வெற்றிகரமாக 50 நாள் ஆவதாகவும் பதிவுகள் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் போலீசாரின் அலட்சியமான நடவடிக்கைகள் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. #svesekar
    அமெரிக்காவில் பெண் மருத்துவர் ஒருவர் ஆபரேசன் தியேட்டரில் ஆடிப்பாடி கவனக்குறைவாக ஆபரேசன் செய்ததால், பாதிக்கப்பட்டதாக சுமார் 100 பெண்கள் புகார் கூறியுள்ளனர். #DancingDoctor
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் அட்லாண்டாவைச் சேர்ந்த பெண் மருத்துவர் விண்டெல் பூட்டே. தோல் நோய் மற்றும் முக அழகு சிறப்பு சிகிச்சை நிபுணரான இவர் தனது மருத்துவமனையில் உள்ள ஆபரேசன் தியேட்டருக்குள் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது,  இடையிடையே மியூசிக் போட்டு ஆடிப்பாடி மகிழ்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

    இவ்வாறு ஆடிப் பாடும்போது எடுத்த வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பதிவேற்றமும் செய்துள்ளார். அதில், அறுவை சிகிச்சைக்காக நோயாளி மயக்க நிலையில் படுத்திருக்க, அருகில் டாக்டர் வெண்டெல் நடனமாடுகிறார். அவரது உதவியாளர்களும் சேர்ந்து ஆடுகின்றனர்.



    அவரிடம் அறுவை சிகிச்சை செய்துகொண்ட முன்னாள் நோயாளிகள் பலர் இந்த வீடியோக்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஒருவேளை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட உடல் உபாதைகள் மற்றும் பிரச்சனைகளுக்கு டாக்டரின் இதுபோன்ற அலட்சியமான நடவடிக்கை காரணமாக இருக்கலாம் என சுமார் 100 பேர் கூறியுள்ளனர்.

    இந்நிலையில் டாக்டர் விண்டெலுக்கு எதிராக சில பெண்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். டாக்டர் விண்டெலிடம் சிகிச்சை பெற்ற பிறகு நோய்த்தாக்கம், தொற்றுநோய்கள் மற்றும் மூளை பாதிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதாக மனுதாரர்கள் கூறியுள்ளனர். ஆனால் டாக்டரோ, அவரது மருத்துவமனை தரப்பில் இருந்தோ எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. #DancingDoctor
    பசுமை வழி சாலை திட்டம் மூலம் சேலத்தில் கலவரம் ஏற்படுத்த முயற்சிப்பதாக பாராதிராஜா, வைகோ, திருமாவளவன், சீமான் மீது டி.ஜி.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    சேலத்தை சேர்ந்த தேசிய மக்கள் இயக்கத்தின் சட்ட ஆலோசகர் வக்கீல் மணிகண்டன் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனை சந்தித்து இன்று புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    சேலத்தில் வசித்து வரும் வடநாட்டை சேர்ந்த பீயூஸ் மனுஷ் என்ற நபர் பசுமை வழி சாலை திட்டத்தை சீர்குலைக்கவும், சேலம் தர்மபுரி திருவண்ணாமலை ஆகிய வடமாவட்டங்களில் கலவரத்தை ஏற்படுத்தவும் முயற்சிக்கிறார்.

    இவர் கடந்த மாதம் நடிகர் மன்சூர் அலிகானை சேலத்திற்கு வரவழைத்து ‘‘சேலம்-சென்னை பசுமை வழி சாலை போட நிலம் எடுக்க வரும் அரசாங்க ஊழியர்களின் கையை வெட்டுவேன்’’ என பேட்டி கொடுக்க செய்து வன்முறையை தூண்டி உள்ளார்.

    சீமான், வேல்முருகன், திருமாவளவன், வைகோ, இயக்குநர்கள் அமீர், கவுதமன், பாரதிராஜா, வெற்றிமாறன், சுப.உதயகுமார், திருமுருகன் காந்தி, மன்சூர் அலிகான் மற்றும் பூலோக நண்பர்கள், மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர்கள் அமைப்பு ஆகியோரை சேலத்திற்கு அழைத்து வந்து சேலம் மக்களிடம் வன்முறையை தூண்டும் விதமாக கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

    எனவே இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவர்கள் சேலம் தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் நுழைய உடனடியாக தடைவிதித்து ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்றவற்றில் கலந்து கொள்ள தடை விதிக்குமாறும் வேண்டுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×