search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99754"

    கோரிக்கைகளை ஏற்காவிட்டால் மோடிக்கு எதிராக போட்டியிடபோவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். #PMModi #Ayyakannu

    திருச்சி:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விவசாயிகள் கோரிக்கைக்காக 140 நாட்கள் டெல்லி சென்று போராடினோம். அப்போது, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் 5 முறை எங்களை சந்தித்து உரிய உதவி செய்வதாக கூறினார்.

    ஆனால், இன்று வரை உதவி செய்யவில்லை. வருகிற பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில், லாபகரமான விலையை விவசாயிகளின் விளை பொருட்களுக்கும், கடன் தள்ளுபடியும், பென்சன், தனிநபர் இன்சூரன்ஸ் அளிப்பதாக தெரிவிக்க வேண்டும்.

    இல்லையென்றால், மோடி ஒரு தொகுதியில் போட்டியிட்டால், அவருக்கு எதிராக தமிழகத்தில் இருந்து விவசாயிகள் 111 பேர், 2 தொகுதியில் போட்டியிட்டால் 222 பேர், 3 தொகுதியில் போட்டியிட்டால் 333 பேர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்வார்கள்.

    ஒரு மாதம் விவசாயி அலைந்து திரிந்து சோறு இல்லாமல் போய், சுயேச்சை வேட்பாளர் இறந்தால் அந்த தொகுதியில் தேர்தல் நடக்குமா? இல்லையா? என்பது அவருக்கு தெரியும். தமிழகத்தை பொறுத்தவரை, எங்களது கோரிக்கைகளை ஏற்காத கட்சிகளை எதிர்த்து வேலை செய்வோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #PMModi #Ayyakannu

    தேர்தல் நேரத்தில் மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரமும், தமிழக அரசு ரூ.2 ஆயிரமும் வழங்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். #thirumavalavan #tngovt #centralgovernment #modi

    நெல்லை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது: -

    பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை முதலில் தொடங்கியது தி.மு.க. கூட்டணி தான். ஒவ்வொரு கட்டமாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தி.மு.க. கூட்டணியில் மொத்தம் 7 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது 1 கட்சிக்கு தொகுதி உடன்பாடு முடிந்தது.

    விரைவில் மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளன. கூட்டணி தொகுதி பங்கீட்டுக்காக அமைக்கப்பட்ட குழுவுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. இதில் எந்தவித தொய்வும் இல்லை. எங்களுக்கு விரைவில் தொகுதி ஒதுக்கப்பட உள்ளது.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். இந்த தேர்தலுடன் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என நம்புகிறேன். தி.மு.க. கூட்டணி வெற்றி கூட்டணி ஆகும். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்து உள்ளது. பா.ம.க. வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை கேட்டு வாங்கி உள்ளது. இதனால் அ.தி.மு.க.வுக்கு எந்தவித வெற்றி வாய்ப்பும் கிடையாது. மாறாக அ.தி.மு.க., பா.ஜ.க. ஓட்டுகள் பா.ம.க.வுக்கு விழ வாய்ப்பு உண்டு.

    தேர்தல் நேரத்தில் மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரமும், தமிழக அரசு ரூ.2 ஆயிரமும் வழங்குகிறது. அரசு கஜானாவில் இருந்து ஓட்டுக்காக மக்களிடம் பணம் கொடுப்பது போல் இருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனால் மக்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்கு அளிக்க மாட்டார்கள்.

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும். இதற்கு கவர்னர் தடை போடுகிறார். மோடி அரசு தேர்தல் நேரத்தில் கூட அவர்களை விடுவிக்க மறுக்கிறது.


    முகிலன் மாயமானது பற்றி போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வி‌ஷயத்தில் முதல்-அமைச்சர் கவனம் செலுத்தி காவல்துறைக்கு உரிய வழிகாட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #tngovt #centralgovernment #modi

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்கு ரூ 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். #EdappadiPalaniswami #Farmers
    சென்னை:

    நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தது. இந்த திட்டத்தை நடப்பு நிதியாண்டிலேயே தொடங்க திட்டமிட்டு, அதற்காக ரூ.75 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. 

    இந்த நிதி 3 தவணைகளாக வழங்க முடிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில், இதற்காக 1 கோடி விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அடுத்த ஓரிரு தினங்களில் மேலும் 1 கோடி பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    தற்போது தேர்வு செய்யப்பட்டு உள்ள விவசாயிகளுக்கு முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். 

    இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு தலா ரூ.2000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதற்கான விழா கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த திட்டத்தில் பயனடையும் தமிழ்நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலைவாணர் அரங்கத்தில் திரண்டு இருந்தனர். அவர்களுக்கு தலா ரூ.2000-க்கான உதவித்தொகையை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அப்போது முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:

    தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன. கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பல்வேறு பணிகளை துரிதமாக செயல்படுத்தி வருகிறோம். வேளாண் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்படும் என்றார். #EdappadiPalaniswami #Farmers
    விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் அளிக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். #PMModi #Farmers

    புதுடெல்லி:

    மத்திய பட்ஜெட்டில் நாடு முழுவதும் ஏழை விவசாயிகளுக்கு தலா ரூ.6000 உதவித் தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

    5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு ஓராண்டில் தலா ரூ.2,000 வீதம் 3 தவணையாக வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் 12 கோடி விவசாயிகள் இதன்மூலம் பயன்அடைவார்கள். இதற்காக மத்திய அரசு ரூ.75,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    முதல் தவணையாக தலா ரூ.2,000 இன்று முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் போடப்படுகிறது.

    உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் இன்று நடந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தலா ரூ.2000 வழங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    முன்னதாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், “இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள், கோரக்பூரில் பிரதம மந்திரியின் விவசாயிகள் உதவி தொகை திட்டத்தை தொடங்கி வைக்கிறேன், இந்த திட்டம் நாட்டுக்கே உணவு வழங்கும் கோடிக்கணக்கான கடின உழைப்பாளிகளான விவசாயிகளுக்கு பயன்அளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    “பிப்ரவரி 1-ந்தேதி அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் ஒரே மாதத்தில் செயல் வடிவம் பெறுகிறது. இது புதிய இந்தியாவின் புதிய கலாச்சாரம்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

    இந்த விழாவில் உத்தரப் பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மத்திய வேளாண்மைத்துறை மந்திரி ராதாமோகன்சிங், நிதித்துறை இணை மந்திரி சிவ்பிரதாப் சுக்லா ஆகியோர் கலந்து கொண்டனர். #PMModi #Farmers

    பெரம்பலூர் அருகே இலவச மின்சாரம் வழங்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு பெரம்பலூர் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் கருப்பையா தலைமை தாங்கி மின் நுகர்வோர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில், விவசாயிகளின் சார்பில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் ஒரு மனு கொடுத்தார். அதில், மின்நுகர்வோர்கள் குறைதீர் கூட்டத்தில் கொடுக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விவசாய மின் இணைப்பு கேட்டு கடந்த 2000-ம் ஆண்டு மனு செய்து 18 ஆண்டுகளாக காத்திருக்கும் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மின்சாரத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய மின் இணைப்பு கேட்டு பதிவு செய்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எதற்காக மின் இணைப்பு கிடைக்கவில்லை என்ற காரணங்களை அதிகாரிகள் தெரிவித்து, அவர்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும், என்று வலியுறுத்தி கூறப்பட்டிருந்தது. இதேபோல் விவசாயிகள், மின்நுகர்வோர்கள் பலர் மேற்பார்வை பொறியாளரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா விவசாயிகள் குமுறி எழுவார்கள் என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார். #PazhaNedumaran #Hydrocarbon

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த கூடாது என்று தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

    குடியரசு தினத்தன்று தொடங்கிய காத்திருப்பு போராட்டம் 16-வது நாளாக நடந்தது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களை உலகத்தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

    பின்னர் பழ.நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சங்க காலத்தில் இருந்து தமிழகத்தின் நெற்களஞ்சியமாக காவிரி டெல்டா பகுதி திகழ்ந்து வருகிறது. தற்போது டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு, ஹைட்ரோகார்பன் திட்டங்களால் விளை நிலங்களை அழித்து வருகிறது. வேளாண்மை நிலங்களை நாசமாக்கினால் இந்த மக்கள் என்ன செய்வார்கள்.

    கிராம மக்களும், விவசாயிகளும் வாழையடி வாழையாக வசித்து தாங்களும் வாழ்ந்து மக்களையும் வாழ வைத்து வருகிறார்கள்.

    இன்றைய நவீன உலகில் பெட்ரோலிய பொருட்களின் தேவை மிகவும் குறைந்து வருகிறது. 2030-ம் ஆண்டு பெட்ரோலிய காரே கிடைக்காது என மோடி அரசு அறிவித்துள்ளது.

    இதன் பின்னர் மின்சார கார்கள் தான் 2030-க்குப் பிறகு வர உள்ளது. எனவே இன்னும் 11 ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில் விவசாய நிலங்களை பாழ்படுத்துவதால் என்ன பயன்? காவிரிப் படுகையை பாதுகாப்பதற்கு தான் இப்பகுதி மக்கள் போராடுகிறார்களே தவிர சொந்த நலனுக்காக அல்ல.

    எனவே ஹைட்ரோகார்பன் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெறவேண்டும். இல்லையென்றால் காவிரி டெல்டா முழுவதும் விவசாயிகள் குமுறி எழுவார்கள்.

    இவ்வாறு நெடுமாறன் தெரிவித்தார். பேட்டியின் போது விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் உடன் இருந்தார்.

    இமாச்சல பிரதேசத்தில் விவசாய பாசனத்திற்கான மின்சார கட்டணத்தில், யூனிட்டுக்கு 25 காசுகள் குறைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. #HimachalBudget #PowerTariff
    சிம்லா:

    இமாச்சல பிரதேசத்தில் இன்று 2019-20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல் மந்திரி ஜெய் ராம் தாக்கூர் தாக்கல் செய்து உரையாற்றினார். பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    விவசாய பாசனத்திற்கான மின்சார கட்டணம், யூனிட்டுக்கு 75 பைசாவில் இருந்து 50 பைசாவாக குறைக்கப்படும். விவசாயிகள் தங்கள் பயிர்களை குரங்குகளிடம் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக சோலார் வேலி அமைத்தால், 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். விவசாயிகளுக்காக 5000 பாலிஹவுஸ்கள் அமைக்கப்படும்.



    எமர்ஜென்சி காலத்தில் மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர்களுக்கு ரூ.11 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்.

    பொதுமக்களின் குறைகளைக் கேட்டு, நிவர்த்தி செய்வதற்காக இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்படும். அந்த எண்ணில் தொடர்பு கொள்ளும் மக்களிடம் முதல்வர் மற்றும் அமைச்சர்களே நேரடியாக பேசுவார்கள்.

    இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. #HimachalBudget #PowerTariff

    விவசாயிகளுக்கு 2019-2020-ம் ஆண்டில் 10,000 கோடி ரூபாய் அளவிற்கு பயிர்க்கடன் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.#TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS

    சென்னை:

    தமிழக அரசின் 2019- 2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல் - அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    கஜா புயல் ஏற்படுத்திச் சென்ற பாதிப்பைத் தணிப்பதற்கான தற்காலிக மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, தேசியப் பேரிடர் நிவாரண நிதியத்திலிருந்து மத்திய அரசு 900.31 கோடி ரூபாயை விடுவித்தது.

    இந்த நிதி ஆதாரங்களுடன் மாநிலத்தின் சொந்த நிதியையும் ஒருங்கிணைத்து, பயிர் தேசங்களுக்காக 774.13 கோடி ரூபாயும், உதவி நிவாரணத்திற்காக 577.46 கோடி ரூபாயும், வீடுகள் மற்றும் குடிசைகள் சேதமடைந்த குடும்பங்களுக்கு நிவாரணமாக 401.50 கோடி ரூபாயும், மீனவர்களின் சேதமடைந்த படகுகளுக்காக 41.63 கோடி ரூபாய் உட்பட ஆக மொத்தம் உடனடி நிவாரணப் பணிகளுக்காக 2,361.41 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    குடிசைகள், தென்னை மரங்கள் மற்றும் மீனவர்களின் எப்.ஆர்.பி. படகுகளுக்கு ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டுத் தொகையை, மாநிலப் பேரிடர் நிவாரண நிதியத்தின் வரையறையைவிடக் கூடுதலாக இந்த அரசு கணிசமாக உயர்த்தி வழங்கியுள்ளது.

    மேலும் தற்போது நிலவிவரும் வறட்சியைக் கருத்தில் கொண்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் தடையின்றி குடிநீர் வழங்க இதுவரை 157 கோடி ரூபாய் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    2019-2020-ம் ஆண்டிற்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியத்திற்காக 825 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சேதமடைந்த குடிசைகளுக்கு மாற்றாக கான்கிரீட் வீடுகள் கட்டுதல், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் தென்னை மற்றும் இதர மரத்தோட்டப் பயிர்களை மீண்டும் பயிர் செய்தல் போன்ற நிரந்தர நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தனியே ஒரு திட்ட அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது. தென்னை மற்றும் இதர மரத்தோட்டப் பயிர்களை மீண்டும் பயிரிடுவதற்காக, இதுவரை 230.09 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.

     


    முதல்-அமைச்சர் ஏற்கனவே அறிவித்தபடி, கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் சேதமடைந்த குடிசைகளுக்கு மாற்றாக ஒரு வீட்டுக்கு 1.70 லட்சம் ரூபாய் அலகுத் தொகை வீதம், 1,700 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான பணிகளை இந்த அரசு மேற்கொண்டுள்ளது. இத்திட்டச் செலவின் 720 கோடி ரூபாயை மத்திய அரசு தனது பங்காக ஏற்றுக் கொள்ளும்.

    மீதமுள்ள 980 கோடி ரூபாயை மாநில அரசின் பங்குத் தொகையாக தமிழ் நாடு ஊரக வீட்டு வசதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் மூலம் கடன் பெற்று இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்பதை இப்பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மாநிலத்தில் பல்வேறு வேளாண் பருவநிலை மண்டலங்கள் உள்ளதால், ஏற்றுமதிக்கு பல்வகை வேளாண் பயிர் சாகுபடி ஏற்றுமதியை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. வேளாண் பொருட்களின் ஏற்றுமதியின் முக்கியத்துவத்தை இந்த அரசு உணர்ந்துள்ளதால், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்கத்தில் ஒரு சிறப்பு வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு அலகினை இந்த அரசு ஏற்படுத்தும்.

    இயற்கை வேளாண்மை மற்றும் பிறதரச்சான்றிதழ் அளித்தல், விவசாயிகளுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்குதல் போன்ற அனைத்து ஏற்றுமதி சம்பந்தமான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை இந்த மையம் ஒருங்கிணைத்து செயல்படுத்தும்.

    இயற்கை வேளாண்மையை மேம்படுத்துவதற்கு, மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இயற்கை வேளாண்மை சான்று அளிக்கும் மையங்கள் அமைக்கப்படும்.

    2019-2020-ம் ஆண்டில் அரசு வேளாண்மைக் கல்லூரிகள் மற்றும் தோட்டக்கலை கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து மேம்படுத்துவதற்காக 79.73 கோடி ரூபாய் செலவிடப்படும்.

    2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்திற்காக 300 கோடி ரூபாயும், நீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கத்திற்காக 87.22 கோடி ரூபாய் உட்பட வேளாண்மைத் துறைக்கு 10,550.85 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    பயிர்க் கடன்களை வழங்குவதற்கும், வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கும் மாநிலத்தில் வலுவான கூட்டுறவு அமைப்புகள் செயல்படுகின்றன. 2018- 2019-ம் ஆண்டில், பயிர்க் கடன் வழங்க 8 ஆயிரம் கோடி ருபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 9.37 லட்சம் விவசாயிகளுக்கு 6,118 கோடி ரூபாய் அளவிற்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

    உரிய காலத்தில் பயிர்க் கடனைத் திருப்பிச் செலுத்துபவர்களுக்கு வட்டி முழுவதுமாகத் தள்ளுபடி செய்யப்படுகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் விவசாயிகளுக்கு வேளாண் விளைபொருட்கள் மீதான அடமானக் கடனையும் வழங்குகின்றன.

    2019-2020-ம் ஆண்டில் 10,000 கோடி ரூபாய் அளவிற்கு பயிர்க் கடன் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பயிர்க் கடன்கள் மீதான வட்டித் தள்ளுபடிக்காக 200 கோடி ரூபாய் வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS

    விவசாயிகள் வருமானம், கடன் ஆகியவை குறித்து மத்திய அரசு இந்த ஆண்டு ஆய்வு நடத்த உள்ளது. #Agriculture #farmers #CentralGovernment
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும் என்று மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. விவசாயிகளின் வருமானம், 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பு ஆக்கப்படும் என்றும் கூறியுள்ளது.



    இந்நிலையில், விவசாயிகள் நிலை குறித்து ஆய்வு செய்யப்போவதாக மத்திய அரசு நேற்று தெரிவித்தது. இதுபற்றி மத்திய வேளாண்துறை இணை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத், பாராளுமன்ற மக்களவையில் எழுத்துமூலம் கூறியதாவது:-

    தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு, இந்த ஆண்டு 77-வது சுற்று ஆய்வு நடத்த உள்ளது. அப்போது, விவசாய குடும்பங்களின் நிலை பற்றியும் ஆய்வு நடத்தப்படும்.

    விவசாய குடும்பங்களின் நிலை எப்படி இருக்கிறது என்பது பற்றிய விரிவான மதிப்பீடு அளிப்பதே இதன் நோக்கம். அதாவது, விவசாயிகளின் வருமானம், செலவு, கடன் ஆகியவை பற்றி இதில் கணக்கு எடுக்கப்படும்.

    இதற்கு முன்பு, 2012-2013-ம் சாகுபடி ஆண்டில்தான் இதுபோன்ற ஆய்வு நடத்தப்பட்டது. அதன் பிறகு இத்தகைய ஆய்வு நடத்தப்படாததால், விவசாயிகளின் வருமான அதிகரிப்பு பற்றிய தகவல் இல்லை.

    புதிய சூழ்நிலை, தேவை, நிதி ஆதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் இத்தகைய சோதனை நடத்தும் முடிவு எடுக்கப்படுகிறது.

    குடும்பங்களின் நுகர்வோர் செலவு, வேலைவாய்ப்பு-வேலைவாய்ப்பின்மை ஆகியவை பற்றி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு நடத்தப்படுகிறது.

    இவ்வாறு கஜேந்திரசிங் ஷெகாவத் கூறினார். #Agriculture #farmers #CentralGovernment

    மத்திய அரசு அறிவித்துள்ள விவசாயிகளுக்கான உதவித் தொகை ரூ.2 ஆயிரம் அடுத்த மாதம் கிடைக்கும் என மத்திய மந்திரி கஜேந்திர செகாவாத் தெரிவித்துள்ளார். #GajendraShekhawat
    புதுடெல்லி:

    மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

    இதில் 5 ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதை இப்போதைய நிதியாண்டிலேயே (2018-19) முன்தேதியிட்டு டிசம்பர் மாதத்தில் இருந்து கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது.

    இந்த தொகை அடுத்த மாதமே (மார்ச்) அனைத்து விவசாயிகள் வங்கி கணக்கில் சேர்க்கப்படும் என்று மத்திய விவசாயத்துறை மந்திரி கஜேந்திரசெகாவாத் கூறியுள்ளார்.

    நாட்டில் மொத்தம் 5 ஏக்கர் நிலத்திற்கு கீழ் வைத்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 12 கோடியே 50 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அதிக பட்சமாக உத்தரபிர தேசத்தில் 2 கோடியே 21 லட்சம் பேர் உள்ளனர்.

    டிசம்பர் மாதத்தில் இருந்து மார்ச் மாதம் வரை 4 மாதத்திற்கான தொகை ரூ.2 ஆயிரம் ஆகும். இந்த தொகை விவசாயிகள் வங்கி கணக்கில் அடுத்த மாதம் செலுத்தப்படும். இதற்காக ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    அடுத்த நிதியாண்டில் (2019-20) இந்த திட்டத்திற்காக ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட இருக்கிறது. சம்பந்தப்பட்ட விவசாயிகள் ஆதார் எண்ணுடன் வங்கி கணக்குகளை இணைத்திருந்தால் அதன் அடிப்படையில் பணத்தை செலுத்த உள்ளனர். ஆனால் பல விவசாயிகள் இவ்வாறு இணைக்காமல் உள்ளதாகவும் 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகள் யார் என்பதை கணக்கிடுவதில் சிக்கல் இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

    பல மாநிலங்களில் டிஜிட்டல் ரீதியாக நிலப்பதிவேடுகள் செய்யப்படவில்லை. எனவே யார், யாருக்கு எவ்வளவு நிலம் இருக்கிறது என்பதை கண்டுபிடித்து அதை வழங்குவது கடினமாக இருக்கும் என்றும் அவர்கள் கூறினார்கள்.

    ஆனால் இதுபற்றி மத்திய மந்திரி கஜேந்திர செகாவாத் கூறும்போது, நாட்டில் பெரும்பாலான விவசாயிகள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். ஏற்கனவே மத்திய அரசு பெரும்பாலான விவசாயிகளுக்கு நில சுகாதார அட்டை வழங்கி இருக்கிறது. அவர்கள் பற்றிய பட்டியல் முழுமையாக எங்களிடம் இருக்கிறது. அதன் அடிப்படையில் பணத்தை வழங்கி விடுவோம்.

    முதல் தடவை சற்று சிரமமாக இருக்கலாம். அடுத்த தடவை அது எல்லாம் சரியாகி விடும். குறைந்த நிலம் வைத்துள்ள விவசாயிகள் பட்டியலை மாநில அரசிடம் கேட்க இருக்கிறோம். எனவே எல்லா விவரங்களும் கிடைத்துவிடும். பணம் வழங்குவதில் பிரச்சினை இருக்காது என்று கூறினார். #GajendraShekhawat
    மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பிரதமருக்கு தபால்கள் அனுப்பினர்.
    கரூர்:

    கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதால், தமிழக விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பை பெற்றுள்ளது. மேலும் அங்கு அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் தண்ணீர் தட்டுப்பாட்டால் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும், குடிநீருக்கும் போதிய தண்ணீர் கிடைக்காது. எனவே அந்த அணை கட்டும் முடிவை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவனை அமைப்பது தொடர்பாக மதுரையில் நடைபெற உள்ள விழாவில் பங்கேற்க வருகிற 27-ந்தேதி அன்று பிரதமர் மோடி வர இருக்கிறார்.

    இதையொட்டி மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் கோரிக்கையினை மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், அது தொடர்பாக 1 லட்சம் தபால் கார்டுகளை புதுடெல்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பும் வகையிலான நூதன போராட்டத்தை கரூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் மாணவ-மாணவிகள் நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் காவிரி பாசன விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மகாதானபுரம் ராஜாராம், திருச்சி மாவட்ட தலைவர் பாலுதீட்சிதர், பொது செயலாளர் காந்தி பித்தன் உள்பட விவசாயிகள் பலர் நேற்று கரூர் ஜவகர்பஜாரிலுள்ள தலைமை தபால் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு எழுதிய தபாலினை தபால் பெட்டியில் போட்டு சென்றனர். மேலும் இதை வலியுறுத்தி அனுப்பிய தபால் பதிவுகளுக்கு கட்டாயம் பதில் அளிப்பதோடு பிரதமர் தமிழக விவசாயிகள் நலனை காக்க முன்வர வேண்டும் என்று தெரிவித்தனர்.
    புதுக்கோட்டை அருகே புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு வழங்கப்பட்ட நிவாரண தொகை , மகளின் கல்வி கடனுக்காக பிடித்தம் செய்யப்பட்ட சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. #Gajastorm #Storm

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சி பனசக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், விவசாயி. இவரது மகள் ரம்யா. இவர் கொத்தமங்கலத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் கடந்த 2009ம் ஆண்டு ரூ.2.92 லட்சம் கடன் பெற்று புதுக்கோட்டை அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் படித்து வந்தார்.

    இந்த நிலையில் கஜா புயலால் ராஜேந்திரன் தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வந்த தென்னை மரங்கள் மற்றும் பயிர்கள் முழுமையாக சேதமடைந்தது.

    இதற்காக தமிழக அரசு ரூ.34ஆயிரம் நிவாரணத்தொகையை அவரது வங்கி கணக்கில் செலுத்தியது. இது தொடர்பாக அவரது செல்போனுக்கு எஸ்.எம்.எஸ்.தகவல் வந்ததையடுத்து, ராஜேந்திரன் தொகையை பெற வங்கிக்கு சென்றார்.

    அப்போது அந்த நிவாரண தொகையை வங்கி நிர்வாகம் மகளுக்காக வாங்கியிருந்த கல்வி கடனுக்கு வரவு வைத்து கொண்டது தெரியவந்தது. மேலும் ராஜேந்திரன், அவரது மனைவி ராணி ஆகியோருக்கு 100 நாள் வேலை திட்டத்தில் கிடைக்கும் தொகையையும் வங்கி வரவு வைத்தது தெரியவந்தது. இதனால் ராஜேந்திரன் அதிர்ச்சியடைந்தார்.

    புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடன், வட்டி செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிட்டுள்ள நிலையில், வங்கி நிர்வாகத்தின்செயலால் அதிருப்தியற்ற ராஜேந்திரன், நிவாரணத்தொகையை பெற்று தரக்கோரி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்துள்ளார். மேலும் இது போன்று பலரின் நிவாரண தொகைகள் கடனுக்காக பிடித்தம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. #Gajastorm #Storm

    ×