search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99754"

    விருத்தாசலத்தில் கரும்பு நிலுவை தொகை கேட்டு மண்டை ஓடு மற்றும் மனித எலும்புகளுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விருத்தாசலம்:

    விருத்தாச்சலம் பாலக்கரையில் கரும்புக்கான நிலுவை தொகை வழங்க கோருதல் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7 -ந் தேதியிலிருந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் விருத்தாசலம் பாலக்கரையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விருத்தாச்சலம் சப்கலெக்டர் பிரசாந்த், தாசில்தார் கவியரசு ஆகியோர் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படாததால் விவசாயிகள் போராட்டத்தை தொடருவோம் என்றனர். அதன்படி இன்று காலை விவசாயிகள் மண்டையோடு மற்றும் மனித எலும்புகளையும் வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தனியரசு தலைமை தாங்கினார்.

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு பங்கேற்றார். பின்னர் அவர் கூறியதாவது:-

    உலகம் முழுவதும் பதவி உயர்வு கேட்டும் ஊதிய உயர்வு கேட்டும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. ஆனால் நாங்கள் இருபத்தி மூன்று மாதங்களுக்கு முன்பு எங்களுடைய கரும்புகளை வெட்டி சித்தூர் தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்பினோம். ஆனால் அந்த கரும்பிற்கான பணத்தை கேட்டு போராட வேண்டிய ஒரு அவல நிலையில் இன்று போராடி வருகிறோம். ஆனால் அந்த பணத்தை சம்பந்தப்பட்ட ஆலை நிர்வாகம் தர மறுக்கிறது.

    தமிழக முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுத்து எங்களுக்கு தர வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரதமர் மோடியை வீழ்த்த எந்தவித பயமுமின்றி விவசாயிகளும், இளைஞர்களும் முன்வர வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். #RahulGandhi #PMModi #Farmers
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடியின் ஆட்சியை கிரிக்கெட்டுடன் ஒப்பிட்டு இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

    கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீசும் போது முன்னால் வந்து ஆடுவது சிரமமாக இருக்கும். ஆனால், நாம் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியை வீழ்த்துவதற்கு களத்தில் முன்னால் வந்து ஆடி சிக்சர் அடிக்க வேண்டும்.



    விவசாயிகளும், இளைஞர்களும் எந்தவித பயமுமின்றி முன்வர வேண்டும். களத்தில் அவர்கள் முன்னால் வந்து ஆடவேண்டும்.
    கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரதமர் மோடி தடுப்பு ஆட்டத்தை மட்டுமே ஆடி வந்துள்ளார்.
     
    சமீபத்தில் நடைபெற்ற மூன்று  மாநில சட்டசபை தேர்தல்களில் விவசாயிகள் தங்கள் பலத்தை நிரூபித்துக் காட்டியுள்ளனர். இதன்மூலம் உலகுக்கு நமது பலத்தையும் வெளிப்படுத்தி உள்ளோம்.

    கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்யாததை, நாங்கள் ஆட்சிக்கு வந்த 2 தினங்களில் செய்துகாட்டி உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். #RahulGandhi #PMModi #Farmers
    மராட்டிய விவசாயிகளுக்கு பா.ஜனதா அரசு ரூ.50 ஆயிரம் கோடி நிதியுதவி செய்துள்ளதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். #DevendraFadnavis #BJP
    மும்பை :

    அவுரங்காபாத் மாவட்டம் புலம்பிரியில் அரசு விருந்தினர் மாளிகை, நிர்வாக கட்டிடம் ஆகியவற்றுக்கான கட்டுமான பணி மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் விழாவில் கூறியதாவது:-

    மராட்டியத்தில் எங்களது அரசு பொறுப்பேற்ற 4½ ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடி நிதி உதவி செய்துள்ளது. ஆனால் முந்தைய காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் அவர்களது 15 வருட ஆட்சிகாலத்தில் விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி முதல் ரூ.22 ஆயிரம் கோடி வரை மட்டும் நிதியுதவி அளித்தது.

    மேலும் எனது தலைமையிலான அரசு ஏழை மற்றும் சாமானிய மக்களுக்காக பாடுபட்டு வருவதுடன் மராட்டியத்தில் பல்வேறு நல திட்டங்களையும் வழங்கி வருகிறது. கிராமப்புறங்களில் மக்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கிறது. அதற்கான முடிவுகளை விரைந்து எடுக்கிறது.

    வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் வழங்க அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. வறட்சி நிவாரணத்துக்காக மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி கோரப்பட்டுள்ளது.

    மரத்வாடா மண்டலத்தில் எங்களது ஆட்சியில் இதுவரை 2 லட்சம் விவசாயிகளுக்கு நீர்ப்பாசன மின் மோட்டார்கள் வழங்கப்பட்டு உள்ளது. இது விவசாயிகளின் நீர்ப்பாசனத்துக்கு பெரும் உதவி புரியும்.

    இவ்வாறு அவர் பேசினார். #DevendraFadnavis #BJP
    மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி, புத்தாண்டு பரிசாக விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார். #MamtaBanerjee #Farmers
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மேற்கு வங்காள அரசு விவசாயிகளுக்கு என்றும் துணையாக இருக்கும். விவசாயிகளுக்காக இரண்டு திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்.



    முதலில், விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு தொகையை மாநில அரசே செலுத்தும். இதுபோல், விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 18 முதல் 60 வயது  வரையிலான விவசாயிகள் இறந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்.

    முத்தலாக் விவகாரத்தில் பெண்களுக்கு ஆதரவான நிலையை எடுப்பதில் உரிய கவனம் செலுத்தி வருகிறோம். எங்கள் கட்சி எம்.பியான சுதீப் பந்தோபத்யாய இதுதொடர்பாக ஏற்கனவே பேசியுள்ளார் என தெரிவித்துள்ளார். #MamtaBanerjee #Farmers
    உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வாழப்பாடியில் விவசாயிகள் மண்ணை சாப்பிடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சேலம் :

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உயர்மின் கோபுரங்கள் விவசாய நிலங்களில் அமைக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சேலம் மாவட்டம் வாழப்பாடியில் விவசாயிகள் நேற்று 12-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் 6-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதமும் இருந்தனர். தொடர்ந்து விவசாயிகள் மண்ணை சாப்பிடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள்.

    இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது:-

    வாழப்பாடியில் ஏற்கனவே விவசாய நிலங்களில் அமைக் கப்பட்ட மின் கோபுரங்களுக் காக உரிய இழப்பீடு தொகை வழங்கப்படாமல் உள்ளது. தற்போது மீண்டும் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படுகிறது. இதை கண்டித்து கடந்த 12 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எதிர்காலத்தில் விவசாயம் செய்ய வழியில்லாமல் போனால் அடுத்த தலைமுறை மண்ணைதான் சாப்பிட வேண்டி இருக்கும். இதை வலியுறுத்தி மண்ணை சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டோம். எங்களது கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இந்த போராட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது பந்தலில் அமர்ந்திருந்த சிறுவனுக்கு மண்ணை ஊட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    என் மகன் மீது சத்தியமாக விவசாய கடனை தள்ளுபடி செய்யாமல் நான் பதவியை விட்டு போக மாட்டேன் என்று குமாரசாமி உருக்கமாக கூறியுள்ளார். #Kumaraswamy #AgriculturalLoans
    பெங்களூரு :

    கர்நாடக அரசின் விவசாயத்துறை சார்பில் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கும் விழா பாகல்கோட்டையில் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழை வழங்கி பேசியதாவது:-

    விவசாயிகளை ஏமாற்றுவதாக பா.ஜனதா சொல்கிறது. ஆனால் விவசாய கடனை தள்ளுபடி செய்ய திடமான முடிவை எடுத்துள்ளோம். விவசாயிகளை நாங்கள் ஏமாற்ற மாட்டோம். என்னை நம்புங்கள். எனது மகன் மீது சத்தியம் செய்து சொல்கிறேன், விவசாய கடனை தள்ளுபடி செய்வேன்.



    எங்களுக்கு பலத்தை கொடுங்கள். கூட்டணி அரசுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நீங்கள் பயப்பட வேண்டாம். விவசாய கடனை தள்ளுபடி செய்யாமல் நான் போக மாட்டேன். கடன் தள்ளுபடிக்கு எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.

    விவசாய கடன் தள்ளுபடியால் 44 லட்சம் விவசாயிகள் பயன் பெறுகிறார்கள். கடன் தள்ளுபடிக்கு நிதி பற்றாக்குறை இல்லை. தேசிய வங்கி விவசாய கடனையும் தள்ளுபடி செய்துள்ளேன். தேசிய வங்கிகளில் கடனை 4 தவணைகளில் திரும்ப செலுத்துவோம். வருகிற பட்ஜெட்டில் ரூ.25 ஆயிரம் கோடிக்கு விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பு இடம் பெறும்.

    நான் வட கர்நாடகத்திற்கு எதிரி அல்ல. வருகிற பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்வேன். விவசாய திட்டங்கள் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு குமாரசாமி பேசினார். #Kumaraswamy #AgriculturalLoans
    விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகளை தவறான முறையில் காங்கிரஸ் வழி நடத்துகிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
    தரம்சாலா:

    இமாச்சல பிரதேசத்தில் ஜெய் ராம் தாகூர் தலைமையிலான பா.ஜனதா அரசு ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, கடன் தள்ளுபடி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி விவசாயிகளை தவறாக வழி நடத்துகிறது என்று குற்றம் சாட்டினார்.

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்காரில் பா.ஜனதாவை ஆட்சிலிருந்து நீக்கிய காங்கிரஸ் விவசாயக் கடன் தள்ளுபடியை அறிவித்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், ‘‘நாடுமுழுதும் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யாமல்  பிரதமர் மோடியை தூங்கவிட மாட்டோம்’’ என்றார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்தார்.

    ‘‘2009-ல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் ரூ. 60,000 கோடி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தது. ஆனால் ரூ.6 லட்சம் கோடி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக வாக்குறுதியளித்து இருந்தது. அப்போது காங்கிரஸ் கொண்டு வந்த விவசாயக் கடன் தள்ளுபடியில் விவசாயிகள் அல்லாத லட்சக்கணக்கானோர் பலன் அடைந்தனர் என்பது சிஏஜி அறிக்கையில் தெரியவந்தது. பஞ்சாப், அரியானா மாநில தேர்தலுக்கு முன்னதாகவும் விவசாயக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை அளித்தது. ஆனால் நிறைவேற்றப்படவில்லை.

    பஞ்சாப் விவசாயிகளுக்கு ஒன்றும் கிடைக்காத நிலையில், கர்நாடகாவில் 800 விவசாயிகளுக்கு அடையாள ரொக்கம் மட்டும் அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி விவசாயக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியின் மூலம் மக்களை முட்டாளாக்கி வருகிறது’’ என குற்றம் சாட்டினார் பிரதமர் மோடி.
    அசாமில் நெல் வயல்களில் பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை விவசாயிகள் பொறி வைத்து பிடித்து வியாபாரிகளிடம் விற்பனை செய்கிறார்கள். 1 கிலோ எலிக்கறி ரூ.200க்கு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலம் பக்சா மாவட்டம் குமரிகட்டா என்ற கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கும். இங்கு எலிக்கறி விற்பனை மிகவும் அமோகமாக நடைபெற்று வருகிறது. கோழிகறி, பன்றி கறியை விட எலிக்கறி அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.

    நெல் வயல்களில் பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை விவசாயிகள் பொறி வைத்து பிடிக்கிறார்கள். இந்த எலிகளை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்கி வாரச்சந்தையில் விற்பனை செய்கிறார்கள்.

    புதிதாக பிடிக்கப்பட்ட எலிகளுடன் தோல் உரிக்கப்பட்ட எலிக்கறி, வேக வைக்கப்பட்ட எலிக்கறி விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிலோ எலிக்கறி ரூ.200க்கு விறக்கப்படுகிறது.

    பழங்குடி மக்களுக்கு எலிகள் நல்ல வருமானம் தரும் தொழிலாக உள்ளது. தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் அவர்கள் குளிர் காலத்தில் வேலை இல்லாதபோது எலிகளை பிடித்து விற்று வருமானம் தேடிக் கொள்கிறார்கள்.

    இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறும்போது, “கடந்த சில ஆண்டுகளாக வயல்வெளிகளில் எலிகள் அதிகமாகி வருகின்றன. அவைகள் பயிர்களை நாசம் செய்வதால் பொறி வைத்து பிடிக்கிறோம். பின்னர் வியாபாரிகளிடம் விற்று விடுகிறோம்” என்றார். #ratmeat 

    வலங்கைமான் அருகே வெண்ணாற்றில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    வலங்கைமான்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே புலவர்நத்தம் பகுதியில் தற்போது சம்பா மற்றும் தாளடி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது நெற்பயிர்கள் கதிர்விடும் நிலையிலும், ஒரு சில இடங்களில் இளம் பயிராகவும் உள்ளது. இந்த நேரத்தில் பயிர்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. இதனால் வெண்ணாற்றில் தண்ணீரை உடனடியாக திறந்துவிட வேண்டும்.

    மேலும் எருமைபடுகை முதல் தென்குளவேலி, நெம்மேல்குடி, இருகரை, மகிமாலை வரையிலான வெண்ணாற்றில் மணல் திருடப்படுவதையும், ஆற்றுக்கரை சேதப்படுத்துவதையும் கண்டித்தும், இதில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் புலவர்நத்தத்தில் நேற்று விவசாயிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வலங்கைமான் தாசில்தார் சந்தானகோபாலகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் மறியலை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    நீடாமங்கலம் அருகே வயலில் களை எடுத்தபோது மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள காளாச்சேரி ஊராட்சி மாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மனைவி பானுமதி(வயது 55). விவசாய கூலி தொழிலாளியான இவர் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள ஒரு வயலில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் மிதித்து விட்டார். இதனால் பானுமதி மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பானுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வயலில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    கஜா புயலால் அறுந்து விழுந்த மின்கம்பிகளுக்கு பதிலாக புதிய மின்கம்பிகள் பொருத்தாமல், அறுந்து போன மின்கம்பிகள் மூலமாகவே மின் இணைப்பு கொடுத்ததால் காற்று வீசும்போது மின்கம்பிகள் இணைப்பு துண்டாகி வயர்கள் மீண்டும் அறுந்து விழுவதால் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
    சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமைச்சாலைக்கு எதிராக சேலத்தில் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். #ChennaiSalemExpressway #Farmers
    சேலம்:

    சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமைச்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த திட்டத்தால் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் பாதிக்கப்படும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் இந்த திட்டத்தை கைவிடக்கோரி பாதிக்கப்படுபவர்கள் மற்றும் விவசாய சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விவசாயிகள் சிலர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, அந்த நிலங்களில் எல்லை கற்கள் நடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து 8 வழிச்சாலை அமைக்கும் பணிக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

    இந்த நிலையில் 8 வழிச்சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களை சர்வே எண்ணுடன் பட்டியலிட்டு கடந்த வாரம் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கிடையே 8 வழிச்சாலைக்காக கூடுதலாக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் பரவியது.

    இதைத்தொடர்ந்து மீண்டும் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு போலீசாரின் தடையை மீறி சேலம் அருகே உள்ள உத்தமசோழபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

    8 வழிச்சாலை தொடர்பாக சேலம் அருகே உள்ள நிலவாரப்பட்டி பகுதியில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.


    இதையடுத்து சேலம் நிலவாரப்பட்டி பகுதியில் 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தனர். ஆனால் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த விவசாயிகளை மல்லூர் போலீசார் அழைத்து கைது செய்வோம் என எச்சரிக்கை விடுத்தனர், இதையும் மீறி நிலவாரப்பட்டியில் விமல் என்பவரது விவசாய தோட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    இந்த கூட்டத்தில் வருகிற 14-ந்தேதி விவசாயிகள் கலெக்டர் ரோகிணியை சந்தித்து இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுப்பது என்றும், 2-வது கட்டமாக அந்தந்த பகுதியில் ஒரே இடத்தில் திரண்டு விவசாய நிலங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்து அறிவித்தனர். கூட்டத்தில் பேசிய அனைவரும் 8 வழிச்சாலைக்கு எதிராக ஆவேசமாக பேசினர்.

    8 வழிச்சாலைக்கு எதிராக ஏற்கனவே பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளோம். இதுதொடர்பாக கோர்ட்டிலும் முறையிட்டதால் 8 வழிச்சாலை பணிக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்தோம்.

    இந்த நிலையில் மத்திய அரசின் அறிவிப்பால் மீண்டும் நிலங்களை கையகப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. எங்களின் ஒரே வாழ்வாதாரமாக திகழும் அந்த நிலத்தையும் பறித்துக் கொண்டால் நாங்கள் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை.

    8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் யாரும் ஒன்று திரண்டுவிடக் கூடாது என்பதில் போலீசார் தீவிரமாக இருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.

    போலீசாரின் மிரட்டல்படி கைது செய்தாலும் எங்கள் உயிர் இருக்கும் வரை தொடர்ந்து போராடுவோம், ஒருபோதும் நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் ஆவேசமாக கூறினர்.

    இதனால் சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிராக மீண்டும் போராட்டம் தீவிரம் அடைய வாய்ப்புள்ளது.  #ChennaiSalemExpressway #Farmers
    எழும்பூரில் போராட்டம் நடத்திய விவசாயிகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். #ayyakannu #FarmerStruggle #KamalHassan

    சென்னை:

    தமிழக விவசாயிகளில் ஒரு பிரிவினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தென் இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடந்த இந்த போராட்டத்தால் டெல்லி போலீசார் திணறிப் போனார்கள். பல நாட்களாக நீடித்த இந்த போராட்டம் பின்னர் முடிவுக்கு வந்தது.

    இந்தநிலையில் அய்யாக்கண்ணு தலைமையிலான போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த போராட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகளும் பங்கேற்றன.

    டெல்லியில் போராட்டத்தை முடித்துக் கொண்ட விவசாயிகள் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் இன்று காலை சென்னை திரும்பினார்கள். காலை 7.30 மணிக்கு சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வந்த அவர்கள் அங்கிருந்து எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு சென்றனர்.

    பின்னர் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் எழும்பூர் ரெயில் நிலையத்தில் 4-வது பிளாட் பாரத்தில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     


    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி இந்த போராட்டம் நடந்தது. ஆண்கள், பெண்கள் என சுமார் 200 பேர் இதில் பங்கேற்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் 2 பேர் மண்டை ஓடுகளை கழுத்தில் தொங்கவிட்டிருந்தனர். போராட்டம் நடத்தியவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். முதல்-அமைச்சரை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. எனவே போராட்டத்தை கைவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டனர். இருப்பினும் விவசாயிகள் அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.

     


    விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கமலை வரவேற்று போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார். விவசாயிகளிடம் போராட்டம் குறித்து கமல் கேட்டறிந்தார்.

    பின்னர் விவசாயிக்ள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    நீங்கள் கேட்டிருக்கும் கோரிக்கைகள் நியாயமனது தான் அரசால் நிறைவேற்ற முடிந்ததுதான். நீங்கள் அனைவரும் இதேபோல் ஒற்றுமையோடு இருக்க வேண்டும். இந்த ஒற்றுமையால் தான் டெல்லியில் இவ்வளவு கூட்டத்தை கூட்ட முடிந்தது.

    உங்கள் மொழி விவசாயம். எங்களால் முடிந்தவரை உங்களோடு தோள் கொடுத்து உங்கள் கோரிக்கைகளுக்காக அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்.

    கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதை தவிர வழியே இல்லை. புயலும், வெள்ளமும் மட்டுமே தேசிய பேரிடர் அல்ல. பஞ்சமும் தேசிய பேரிடர்தான்.

     


    நாங்களும் உங்கள் குடும்பம்தான். உங்கள் தொழில் எங்களுக்கு தெரியாது. ஆனால் உங்கள் கையால் வாங்கி சாப்பிடுகிறோம். அதற்கு மரியாதை செலுத்தத்தான் இங்கு வந்தேன். அரசு விவசாயிகளின் நிலைமையை உணர்ந்து செயல்பட வேண்டும். இப்போது கெஞ்சி கேட்கிறோம். எப்போதும் இப்படியே நிலைமை இருக்காது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விவசாயிகள் நாடு தழுவிய அளவில் விவசாய கடன்களை ரத்து செய்வது, விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயிப்பது, உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அறவழி போராட்டத்தை நடத்துகிறார்கள். அவர்களுக்கு எங்கள் ஒத்துழைப்பு உண்டு.

    நேற்று வரை கஜா புயல் பாதித்த பகுதிகளில் தான் இருந்தேன். எங்கள் குரல் எதிர்க் கட்சிகளின் குரல் அல்ல. மக்களின் குரலாக பார்க்க வேண்டும். 15 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் பல கிராமங்களில் மின்சாரம் இல்லை. குடி தண்ணீர் வசதி இல்லை. மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

    இன்னும் ஒரு கிராம நிர்வாக அதிகாரிகள் கூட போய் பார்க்கவில்லை. நாங்கள் போன பல இடங்களில் மக்கள் ஆத்திரத்தில் கண்ணீர் அஞ்சலி என்று வைத்திருந்ததை பார்த்தோம்.

    நாங்கள் அரசை விமர்சிக்க வில்லை. பணிகளை துரிதப்படுத்த வேண்டியது எங்கள் கடமை. அதைத்தான் சொல்கிறோம். இதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். சேத விவரங்களை கூட இருந்த இடத்தில் இருந்தே சேகரித்ததாகத்தான் நான் கருதுகிறேன். மத்திய அரசு இடைக்காக நிவாரணம் வழங்கி இருப்பதற்கு நன்றி.

    விவசாயிகள் டெல்லியில் போராடிய விதம் தவறு என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறி இருப்பது சரியல்ல. விவசாயிகள் பசியோடு இருக்கிறார்கள். பசிக்காக போராடுபவர்களும் இப்படித்தான் போராட வேண்டும், அப்படித்தான் போராட வேண்டும் என்று சொல்ல முடியாது.

    கஜா புயல் பாதித்த பகுதிகளில் அவலங்களை நேரில் பார்த்து வந்தவன் நான். அங்குள்ள விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். பரிசீலனையில் இருப்பதாக கூறுகிறார்கள். அதற்கான கால அவகாசம் இல்லை. உடனே தள்ளுபடி செய்வதுதான் நல்லது.

    பாதிக்கப்பட்டுள்ள பகுதி முழுவதுமாக மீண்டு வருவதற்கு இன்னும் 7 ஆண்டுகள் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விவசாயிகள் எழும்பூரில் இருந்து இன்று மதியம் செல்லக்கூடிய வைகை எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களில் செல்வதற்கு முன்பதிவு செய்து இருந்தனர். ஆனால் விவசாயிகள் தொடர்ந்து சில மணிநேரம் எழும்பூர் ரெயில் நிலையத்திலேயே தங்கி இருக்க வேண்டி இருந்தது. அதுவரை போலீஸ் பாதுகாப்பு தேவைப்பட்டதால் ரெயில்வே உயர் அதிகாரிகளிடம் பேசி வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக ஒரு பெட்டி இணைத்து அனைத்து விவசாயிகளையும் ஒரே ரெயிலில் ஏற்றி அனுப்பி வைத்தனர். #ayyakannu #FarmerStruggle #KamalHassan

    ×