search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99754"

    திண்டுக்கல் அருகே பனை விதை ஊன்றியதும் மழை கொட்டித் தீர்த்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே பனை விதை ஊன்றியதும் மழை கொட்டித் தீர்த்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    பூலோக கர்ப்பகத்தரு என அழைக்கப்படும் பனை மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுபவையாக உள்ளது. பனை மரத்தில் இருந்து நுங்கு, பதநீர், பனங்கிழங்கு, கருப்பட்டி, பனை நார், பனை ஓலை, உள்ளிட்ட மரத்தின் அனைத்து பாகங்களும் பயன்படுத்தப்படுகிறது.

    ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் பனை மரத்தை யாரும் விரும்புவது இல்லை. எனவேதான் தமிழகம் முழுவதும் உள்ள பனை மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டு செங்கல் காளவாசலுக்கு அனுப்பப்படுகிறது.

    தமிழகத்தில்தான் அதிக அளவில் பனை மரங்கள் இருந்தது. அது தற்போது கனிசமாக குறைந்து விட்டது. ஓங்கி வளரும் பனை மரத்தால் அதிக அளவு மழை பெறுவதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    அதனைத் தொடர்ந்து தற்போது பனை மர விதை ஊன்றுவதற்கு பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பனை மரம் ஒரு இடத்தில் இருந்தால் அதன் வேர்கள் பக்க வாட்டில் பரவி மண் அரிப்பை தடுக்கிறது.

    ஏரிக்கரை, குளக்கரைகளில் இதனை ஊன்றினால் கரைகள் உடையாமல் பாதுகாக்கப்படுகிறது. எனவே தான் திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் குளங்களை தேர்வு செய்து கரைகளில் பனை விதைகள் ஊன்றும் பணி நடைபெறுகிறது.

    அதன்படி முத்தனம்பட்டி கண்மாயில் பனை மர விதை ஊன்றும் பணி நடந்தது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை விதைகளை பொதுமக்கள் மற்றும் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஊன்றினர்.

    பனை விதைகளை ஊன்றிக் கொண்டு இருக்கும் போதே இடியுடன் கூடிய பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். பனை மர விதையை ஊன்றும் போதே இப்படி என்றால் மரம் வளர்ந்தால் எப்படி இருக்கும் என்று ஒருவருக் கொருவர் ஆனந்தத்துடன் பேசிக் கொண்டனர்.

    நடப்பாண்டில் மழை மற்றும் காவிரி நீரால் இதுவரை தமிழ்நாட்டில் 5.432 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட இரு மடங்கு உயர்வாகும். #PaddyCultivation
    சென்னை:

    கர்நாடகாவில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்ததால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. அந்த அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறந்துவிடப்பட்டது. 2 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறந்ததால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    இதையடுத்து மேட்டூர் அணை நிரம்பியதால் கடந்த ஜூலை 22-ந்தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதன் பின்னும் மேட்டூர் அணை 3 முறை நிரம்பியதால் தண்ணீர் தொடர்ந்து திறந்துவிடப்படுகிறது.

    காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் நெல் சாகுபடியில் மும்முரமாக இறங்கினர்.

    ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும். கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் இல்லாததால் ஜூன் 12-ந்தேதிக்கு திறக்க முடியவில்லை. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்தனர்.

    இந்த ஆண்டு மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்பட்டாலும் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.


    நடப்பாண்டில் மழை மற்றும் காவிரி நீரால் இதுவரை தமிழ்நாட்டில் 5.432 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட இரு மடங்கு உயர்வாகும். கடந்த ஆண்டு 2.895 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது.

    இது தொடர்பாக விவசாய துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    நடப்பாண்டில் செப்டம்பர் 24-ந்தேதி வரை 5.432 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு 2.895 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டது. மேலும் நெல் சாகுபடி அதிகரிக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

    டெல்டா மாவட்டங்களில் அதிகபட்சமாக திருவாரூரில் 1.70 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நாகையில் 81 ஆயிரம் ஹெக்டேர், தஞ்சாவூரில் 55 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி நடந்து வருகிறது. பெரும்பாலான பாசன நிலங்கள் காவிரி நீரால் பயன் அடைந்துள்ளன.

    இதே போல் பலத்த மழையால் ஈரோடு, கோவை, கரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் விவசாயம் நடந்து வருகிறது. இந்த மாவட்டங்களில் கடந்த ஆண்டு விவசாயம் முற்றிலும் நடைபெறவில்லை.

    2016-17ம் ஆண்டு 35.54 லட்சம் டன் நெல் உற்பத்தியும், 2017-18ம் ஆண்டு 72.77 லட்சம் டன் நெல் உற்பத்தியும் செய்யப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு அதிகளவில் நெல் உற்பத்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #PaddyCultivation
    #CauveryWater #MetturDam
    நாகப்பட்டினத்தில் பயிர் கருகிய மனவேதனையில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு ஆட்சியாளர்கள்தான் காரணம் என டிடிவி தினகரன் குற்றம் சாட்டி உள்ளார். #Farmersuicide #TTVDhinakaran

    நாகப்பட்டினம்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேற்று முதல் நாகை மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சார நிகழ்ச்சியை தொடங்கினார்.

    நாகை வேளாங்கண்ணி பகுதியில் மக்கள் மத்தியில் டி.டி.வி.தினகரன் பேசும் போது கூறியதாவது:-

    ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழகத்தில் அவரது பெயரை சொல்லி ஆட்சி நடத்துபவர்கள் அவர் வழியில் செல்கிறார்களா? தமிழக மக்களையும், விவசாயிகளையும் பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் ஜெயலலிதா அனுமதித்தது கிடையாது.

    குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ஜெயலலிதா தடுத்து நிறுத்தினார். ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் மத்திய அரசுக்கு அடிமையாக இருந்து வருகிறார்கள். இதனால் மக்கள் செய்வதறியாமல் தத்தளித்து வருகிறார்கள்.

    அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவையும், என்னையும் நீக்கினார்கள். ஆர்.கே. நகர் தொகுதியில் மக்கள் என்னை வெற்றி பெற செய்தனர். எங்களுக்கு தமிழக மக்கள் மீது நம்பிக்கை உள்ளது.

    கமைடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. இதனால் இந்த பகுதியை சேர்ந்த 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்ற செய்தியை அறிந்தேன். விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம் ஆட்சியாளர்கள் தான்.

    ஆறு, குளங்கள், மற்றும் நீர்நிலைகளை சரியாக தூர்வாரவில்லை. தூர்வார ஒதுக்கப்பட்ட நிதியார் பாக்கெட்டுக்கோ போய் சேர்ந்து விட்டது. தடுப்பணையும், ஆறுகளையும், ஏரிகளையும் தூர்வாரி இருந்தால் கடலில் வீணாக தண்ணீர் கலந்திருக்காது.

    வருகிற 2019-ம் ஆண்டில் எம்.பி. தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Farmer #Farmersuicide #TTVDhinakaran
    கோவையில் அரசு கொள்முதல் மையம் அமைக்க கோரி சின்ன வெங்காய செடியுடன் வந்து விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    கோவை:

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. கலெக்டர் ஹரிஹரன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

    அவரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமையில் விவசாயிகள் கையில் வெங்காய செடியுடன் வந்து மனு அளித்தனர்.

    கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளான தொண்டாமுத்தூர், நரசீபுரம், செம்மேடு, பூலுவப்பட்டி, நல்லூர் வயல், ஆலாந்துறை, சென்னனூர், மாதம்பட்டி, தீத்திப்பாளையம், பேரூர் ஆகிய பகுதிகளில் 500 ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    சின்ன வெங்காயத்தை அறுவடை செய்கின்ற காலத்தில் போதிய விலை கிடைக்காததால் பட்டறையில் இருப்பு வைத்து ஐப்பசி முதல் மார்கழி மாதம் வரை போதிய விலை கிடைக்கும் காலத்தில் விற்பனை செய்து வருகிறோம்.

    தற்போது இந்த சின்ன வெங்காயம் அழுக தொடங்கியது. இதனால் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்த விவசாயிகள் பெரும் பொருளாதார நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே சின்னவெங்காய விவசாயிகளுக்கு மானிய விலையை அரசு வழங்க வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள சின்ன வெங்காயம் சேதத்தை கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்ட விசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் வரை நஷ்டு ஈடு வழங்க வேண்டும்.சின்ன வெங்காயம் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் அரசே கொள்முதல் மையம் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

    போத்தனூர் ரெயில்வே பணியாளர் சங்கத்தினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், போத்தனூர் ரெயில் நிலையம் கோவையில் 2-வது பெரிய ரெயில் நிலையமாக உள்ளது.

    இங்கு ஆயிரம் வாகனங்களை நிறுத்தும் அளவு இட வசதி உள்ளது. ஆனால் இங்கு ரெயில்கள் நின்று செல்வதில்லை. இந்த ரெயில் நிலையத்தை 2-வது ரெயில் நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என மனுவில் கூறி உள்ளார்.

    கோவை மேட்டுப்பாளையம் சாலை எருகம்பெனி ஜீவா நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நாங்கள் 200 குடும்பத்தினர் இப்பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.

    கடந்த 30 வருடத்திற்கு முன் குடியிருப்புக்கு 85 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பணம் கட்டினோம். தற்போது எங்களை காலி செய்து கீரணத்தம் பகுதியில் உள்ள குடியிருப்புக்கு செல்லுமாறு அதிகாரிகள் கூறுகிறார்கள்.

    எங்கள் குழந்தைகள் இப்பகுதியில் தான் படித்து வருகிறார்கள். எங்களுக்கு மாநகராட்சி எல்லை பகுதியில் மாற்று இடம் வழங்க வேண்டும் என கூறி உள்ளனர்.

    கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் கே.மோகன்ராஜ் கோவை கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கோவை வெரைட்டிஹால் ரோட்டில் போலீஸ் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பு உள்ளது. இதன் சுற்றுச்சுவர் இடிந்து பல ஆண்டுகள் ஆகிறது. போலீசார் இரவு பகல் பாராமல் மக்கள் பாதுகாப்பு பணிக்கு சென்று விடுகின்றனர்.

    போலீஸ் நிலையத்தையொட்டி ரெயில் நிலையம் உள்ளது. டாஸ்மாக் மதுக்கடையும் உள்ளது. பயணிகள் மற்றும் சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு தகாத வார்த்தைகளில் பேசிவருகிறார்கள். சுற்றுச்சுவர் இல்லாமல் இருக்கும் குடியிருப்பால் போலீசாரின் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர்.

    தற்போது ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலைய சுற்றுச்சுவர் பணி நடைபெற்று வருகிறது. அதேபோன்று வெரைட்டிஹால் காவலர் குடியிருப்பு சுற்றுச்சுவரை கட்டிக்கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றதால் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் மனு கொடுக்க வந்தவர்களை சோதனை செய்த பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர்.

    சோதனையின் போது கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் அரசு ஊழியர் ஒருவர் வந்தார். அவரிடம் போலீசார் சோதனை செய்த போது அவர் தனது அடையாள அட்டையை காண்பித்தார்.

    அவர் வைத்திருந்த பையை திறந்து காண்பிக்கும் படி போலீசார் கூறினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது பையை திறந்து அதில் வைத்திருந்த சாப்பாடு பாக்சை திறந்து அதனை வெளியே கொட்டி விட்டு சென்று விட்டார்.இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. #tamilnews
    நாகை மாவட்டத்தில் இரு விவசாயிகளின் தற்கொலைக்கு தமிழக ஆட்சியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss #Farmersuicide
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டம் கீழையூரை அடுத்த தலையாமழை கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்ற உழவர் அப்பகுதியில் 6 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து நெல் சாகுபடி செய்திருந்தார். ஆனால், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வராததால் அவரது வயலில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் கருகின.

    கடன் வாங்கி குறுவை நெல் சாகுபடி செய்திருந்த நிலையில் பயிர்கள் கருகியதால் வேதனையடைந்த ராமமூர்த்தி, வாங்கிய கடனை அடைக்க முடியாதே என்ற அதிர்ச்சியில் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டார்.


    நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த ஆதமங்கலத்தைச் சேர்ந்த கண்ணன் என்ற விவசாயியும் பயிர்கள் கருகியதால் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    வறட்சி காரணமாக பயிர்கள் கருகியதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், ஒரே மாவட்டத்தில் ஒரு சில நாட்கள் இடைவெளியில், இரு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை சாதாரண நிகழ்வாகக் கருதி கடந்து செல்ல முடியாது.

    காவிரி கடைமடை பாசன மாவட்டங்களில் இன்னும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெற் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகிக் கொண்டிருக்கின்றன. பயிர்கள் கருகியதால் இரு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்னும் ஏராளமான உழவர்கள் மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர்.

    கடைமடை பாசனப் பகுதிகளுக்கு காவிரி நீரை கொண்டு செல்லாத பினாமி அரசு தான் உழவர்களை தற்கொலைக்கு தூண்டியிருக்கிறது.

    பாசனக் கால்வாய்களை தூர்வாரும்படி பல முறை வலியுறுத்தியும் பயனில்லை. கடைமடைப் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதை உறுதி செய்ய காவிரி பாசன மாவட்டங்களுக்கு அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், அதனால் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    ஆனால், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் நீரோட்டம் குறைந்த பின்னர் மணல் கொள்ளை மட்டும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதிலிருந்தே தமிழக ஆட்சியாளர்கள் யார் மீது அதிக அக்கறை காட்டுகின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

    காவிரி பாசன மாவட்டங்களின் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையாததற்கு தமிழக அரசு தான் காரணம். அதனால், நாகை மாவட்டத்தில் இரு விவசாயிகளின் தற்கொலைக்கு தமிழக ஆட்சியாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட இரு விவசாயிகளின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி, பாசனக் கால்வாய்கள் அனைத்தையும் தூர் வாருவதுடன், காவிரியில் மணல் அள்ளவும் நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #PMK #Ramadoss #Farmersuicide
    கடைமடை பகுதிக்கு முறை வைக்காமல் தண்ணீர் திறந்துவிடக்கோரி வாய்மேடு அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வாய்மேடு:

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி நாகை மாவட்டம் தாணிக்கோட்டகம், தரகமருதூர், வடமழை உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் சம்பா சாகுபடி மேற்கொண்டனர். தற்போது ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்து விட்டதால் அந்த கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் கருகி வருகின்றன.

    இந்த நிலையில் கருகி வரும் சம்பா பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கக்கோரியும், கடைமடை பகுதிகளுக்கு தேவையான தண்ணீரை முறை வைக்காமல் திறந்து விட வலியுறுத்தியும் நேற்று வாய்மேடு அருகே உள்ள செங்காத்தலை மெயின் சாலையில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க நிர்வாகி ரவி தலைமை தாங்கினார். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் தமிழ்ச்செல்வன், பணி ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் தேவையான தண்ணீரை திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக திருத்துறைப்பூண்டி-வேதாரண்யம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    பழனி அருகே எரமநாயக்கன்பட்டியில் உள்ள பட்டிகுளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி விவசாயிகள் போராட்டம் செய்ய போவதாக அறிவித்துள்ளனர்.
    பழனி:

    பழனி அருகே உள்ள எரமநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்ட பகுதியில் பட்டிகுளம் உள்ளது. இக்குளம் சுமார் 60 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இக்குளத்தின் மூலம் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும், இக்குளத்தில் உள்ள நீரின் மூலம் எரமநாயக்கன்பட்டி, கணக்கன்பட்டி, பச்சள நாயக்கன்பட்டி, பொட்டம் பட்டி, ராசாபுரம்புதூர் உள்ளிட்ட கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன. இக்கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் இக்குளத்தில் உள்ள நீரின் அளவை பொறுத்ததே ஆகும்.

    குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கு அடிப்படையாக விளங்கும் இக்குளத்தின் நீர்பிடிப்பு பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவு நிலம் தற்போது ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். நேற்று பட்டிகுளம் பாசன விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் இக்குளத்தின் மேல் ஏறிநின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்

    இது குறித்து உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து கூறியதாவது, பட்டிகுளம் 6 கிராமங்களின் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்திற்கு அடிப்படையானது. இக்குளத்தின் நீர்பிடிப்பு பகுதி நாளுக்குநாள் ஆக்கிரமிப்பில் சிக்கி வருகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஒன்றுதிரட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    புளியங்குடியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் கூண்டு வைத்து பிடிக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    புளியங்குடி:

    புளியங்குடி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் மான், காட்டுப்பன்றி, யானை உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது விளை நிலங்களுக்குள் வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. கோடை காலத்தில் யானைகள் தண்ணீரை தேடி ஊருக்குள் அடிக்கடி வரும்.  

    இந்நிலையில் முதன்முறையாக சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். புளியங்குடி மேற்கு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு உள்ளது. இங்கு சிறுத்தை வந்ததற்கான கால் தடம் பதிந்துள்ளது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் வந்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சிறுத்தை வந்தது உறுதி செய்யப்பட்டது. 

     இதையடுத்து சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நெல்லை மாவட்டத்தில் தமிழக அரசு 67 விவசாயிகளுக்கு 90 சதவீதம் மானியத்தில் சூரிய சக்தியால் இயங்கும் மின் மோட்டாரை வழங்க உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    நெல்லை:

    தமிழகத்தின் மின்சாரத் தேவையை குறைக்கும் பொருட்டும், சுற்றுப்புறச் சூழலைப்பேனும் வகையிலும் தமிழக அரசு 90 சதவீதம் மானியத்தில் சூரிய சக்தியால் இயங்கும் மின் மோட்டார் விவசாயிகளுக்காக வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த சூரியசக்தி மின் மோட்டார் மூலம் விவசாயம் செய்து விவசாயிகள் தங்கள் பொருளாதார வளர்ச்சியில் மேம்பாடு அடைந்துள்ளனர்.

    இத்திட்டம் குறித்து மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறியதாவது:-

    தமிழகத்தின் மின் தேவையில் 20 சதவீதம் விவசாயத்திற்காக செல விடப்பட்டு வருகிறது. இதுவரை 20,62,000 மின் இணைப்புகள் வேளாண்மைக்காக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், பல விவசாயிகள் மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்து காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

    தமிழகத்தின் மின் தேவையை குறைத்திடவும், சுற்றுச்சூழலை பேணி காத்திடவும், சோலார் சக்தியினால் இயங்கும் மோட்டர்களை அமைத்திட விவசாயிகளுக்கு 90 சதவிதம் மான்யம் அரசு வழங்கி வருகிறது. 10 குதிரை திறன் கொண்ட மோட்டார் அமைக்க ஆகும் செலவினம் ரூ.6,89,000-ல் ரூ.5,24,200-ஐ மான்யமாக வழங்கி வருகிறது.

    கடந்த 2017ம் ஆண்டில் 35 விவசாயிகளுக்கும், 2018-ம் ஆண்டு இதுவரை 32 விவசாயிகளுக்கும் சோலார் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 105 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சாகுபடி செய்து பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் தேவைப்படும் விவசாயிகள் வேளாண் பொறியியல் துறையினை அணுகி பயன் பெறலாம்.

    வேளாண்மை தொழிலை மேம்படுத்த அரசு எடுக்கும் முயற்சியினை அனைவரும் பின்பற்றி வேளாண்மை செய்து வந்தால் நாளைய தமிழகம் பசுமை செழிப்போடு விளங்கும் என்பதற்கு நெல்லை மாவட்ட விவசாயிகளே முன் உதாரணம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews
    சம்பா பயிர்களை காப்பாற்ற தண்ணீர் வழங்கக்கோரி திருவாரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 43 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருவாரூர்:

    சம்பா பயிர்களை காப்பாற்ற தேவையான அளவு தண்ணீரை வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பெட்ரோலிய பொருட்களின் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும். முக்கொம்பு அணையை விரைவாக சீரமைத்து பலப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர், நாகை, தஞ்சை ஆகிய 3 மாவட்டங்களிலும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.

    அதன்படி நேற்று திருவாரூர் பஸ் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் மாசிலாமணி தலைமை தாங்கினார்.

    இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் சேரன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தம்புசாமி, மாவட்ட செயலாளர் கலியபெருமாள், தி.மு.க. விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் தேசபந்து, காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவர் மீனாட்சிசுந்தரம், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கோசிமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 43 பேரை போலீசார் கைது செய்தனர். 
    கோத்தகிரியில் நீர்பனி பெய்ய தொடங்கி உள்ளதால் தேயிலை மற்றும் மலை காய்கறிகளுக்கு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    கோத்தகிரி:

    கோத்தகிரியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி 3 மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். ஓரிரு மாதங்கள் இடைவெளிக்கு பின் மீண்டும் வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி நவம்பர் மாதம் இறுதி வரை பெய்யும். மழை காலங்களில் தேயிலை மற்றும் மலை காய்கறி மகசூல் அதிகரிக்கும்.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 3 மாதங்களாக பெய்தது. இதனால் கோத்தகிரி பகுதிகளிலும் விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். மழை ஓய்ந்த நிலையில் தற்போது கோத்தகிரியில் நீர்பனி பெய்ய தொடங்கி உள்ளது. நீர்பனியில் தாக்கம் சற்று அதிகமாக காணப்படுகிறது.

    வருடந்தோறும் செப்டம்பர் இறுதி வாரத்தில் தான் நீர்பனி விழும். ஆனால் இந்த ஆண்டு முன்னதாக நீர்பனி பெய்ய தொடங்கி உள்ளதால் தேயிலை மற்றும் மலை காய்கறிகளுக்கு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    நீர்பனியால் காலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படுகிறது. குளிரும் அதிகரித்துள்ளது. அதிகாலையில் குளிரின் தாக்கம் வழக்கத்தை காட்டிலும் சற்று அதிகமாக காணப்படுகிறது. குளிரின் காரணமாக ஸ்வெட்டர், சால்வை மற்றும் ஜெர்கின் போன்ற வெம்மை ஆடைகளுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.
    உத்தங்கரை அருகே விவசாயிகளால் உருவாக்கப்பட்டுள்ள வாரச்சந்தை பொதுமக்களிடம் நல்லவரவேற்பை பெற்றுள்ளது.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கோவிந்தாபுரம் ஊராட்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமங்கள் முழுவதும் விவசாயத்தை முழு தொழிலாக கொண்ட பகுதியாகும். இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் விளை விக்கப்படும் காய்கறிகளை ஊத்தங்கரை, சிங்காரபேட்டை போன்ற பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தனர்.

    இந்த பகுதியை சுற்றியுள்ள படத்தானூர், ஆண்டிïர், எக்கூர், கானம்பட்டி, பெரிய தள்ளப்பாடி, கொம்மம்பட்டு, கெண்டிகானூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பகுதி மக்கள் வார சந்தைக்கு செல்ல வேண்டும் என்றால் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊத்தங்கரை, சிங்காரப் பேட்டைக்கு தான் செல்ல வேண்டிய அவல நிலையில் இருந்தனர், இந்த நிலையை கருதி இப்பகுதி விவசாயிகள் ஒற்றுமையாக சேர்ந்து கோவிந்தாபுரம் கிராமத்தில் உள்ள சிங்காரப்பேட்டை -திருவண்ணாமலை செல்லும் சாலை அருகே செவ்வாய்கிழமை தோறும் வாரச் சந்தை அமைத்து தங்கள் விவசாய நிலத்தில் விளைவித்த காய்கறிகளை சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். 

    விவசாய நிலத்தில் இருந்து நேரடியாக காய்கறிகள் சந்தைக்கு வருவதால் விலையும் சற்று குறைவாக உள்ளது. காய்கறிகள் மிகவும் தூய்மையாக உள்ளதால் மிகவும் மகிழ்ச்சியோடு பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.இது குறித்து விவசாயி ஆறுமுகம் கூறியதாவது:-

    முழுக்க முழுக்க விவசாயிகளால் உருவாக்கப்பட்ட வாரச்சந்தை இதனை அரசு கவனம் செலுத்தி உழவர் சந்தையாக அமைத்து கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விவசாயிகளால் உருவாக்கப்பட்டுள்ள வாரச்சந்தை பொதுமக்களிடம் நல்லவரவேற்பை பெற்றுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×