search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99754"

    கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்காதது வேதனை அளிக்கிறது என்று குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். #Farmers

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த விவசாயிகள் குறை கேட்பு நாள் கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என கேட்டு கொண்டனர்.

    மேலும் விவசாயி ஒருவர் பேசும் போது, “கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் தேதியை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். ஆனால் அதன் படி வாய்க்காலில் ஏன் தண்ணீர் திறக்கவில்லை? இதனால் எங்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது” என்று கூறினார்.

    இதற்கு பதில் அளித்து மாவட்ட கலெக்டர் பிரபாகர் கூறியதாவது.-

    கீழ்பவானி வாய்க்காலுக்கு முன் கூட்டியே தண்ணீர் திறந்தால் அது பாசனத்துக்கு சரியாக இருக்காது என்று ஒரு சில விவசாயிகள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த விசயத்தில் சில விவநாய சங்கத்தினர் உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்து வருகிறார்கள். இது சரியானது அல்ல.

    விவசாயிகளுக்கு தண்ணீர் திறப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயிகளுக்கு தண்ணீர் தேவைப்படும் பொழுது தண்ணீர் திறக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Farmers

    கல்விராயன்பேட்டை கிராமத்தில் கல்லணை கால்வாய் தென்கரையில் உடைப்பு ஏற்பட்டதால் அதனை சரிசெய்யும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. #Kallanai
    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்கு கடந்த 19-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதையடுத்து கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆறுகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் தற்போது கடைமடை பகுதி வரை சென்று விட்டது.



    இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் கல்லணை கால்வாய் கரையில் நேற்று காலை திடீரென உடைப்பு ஏற்பட்டது.

    தஞ்சை மாவட்டம் ஆலக்குடியை அடுத்த கல்விராயன்பேட்டை கிராமத்தில் கல்லணை கால்வாய் தென்கரையில் உடைப்பு ஏற்பட்டது. தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் உடைப்பில் இருந்து வெளியேறிய தண்ணீர் அருகே இருந்த வயல்களில் பாய்ந்தது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் இருந்த வயல்களில் தண்ணீர் கடல் போல் தேங்கியது.

    இதைபார்த்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே டிப்பர் லாரிகள் மூலம் மண்ணை கொட்டி உடைப்பை சரிசெய்ய முயன்றனர். ஆனால் தண்ணீரின் வேகம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்ததால் உடைப்பை சரி செய்ய முடியவில்லை.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் செந்தில் குமரன், ரவிச்சந்திரன், முருகேசன், சண்முகவேல், ஆகியோர் விரைந்து வந்து கரை உடைப்பு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டனர்.

    இதற்கிடையே தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் கல்லணை கால்வாயில் இருந்து தண்ணீர் திறப்பு நேற்று மதியம் முதல் நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து தண்ணீர் வரத்து பாதிக்கும் மேல் குறைந்ததால் கரை உடைப்பை அடைக்கும் பணி மீண்டும் முழுவீச்சில் நடந்தது.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், வல்லம் டி.எஸ்.பி. ஜெயசந்திரன் மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் இரவு முழுவதும் அங்கேயே முகாமிட்டு பணிகளை துரிதப்படுத்தினர்.

    மேலும் அமைச்சர் துரைக்கண்ணு சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார்.

    அப்போது அமைச்சர் துரைக்கண்ணு கூறும் போது, ‘கல்விராயன் பேட்டை கல்லணை கால்வாய் கரை உடைப்பை சரிசெய்யும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இதற்காக கல்லணை கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு விட்டது. இன்று மாலைக்குள் உடைப்பு சரிசெய்யப்பட்டு விடும்’. மேலும் மீண்டும் தண்ணீர் திறப்பது பற்றி பொதுப்பணி துறை அதிகாரிகள் முடிவு செய்வார்கள்’ என்றார்.

    நேற்று இரவு முதல் விடிய விடிய கரை உடைப்பு பணி மும்முரமாக நடந்தது. சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன், தஞ்சை தீயணைப்பு நிலைய வீரர்களும் பணியில் ஈடுபட்டனர்.

    கரை உடைப்பு அருகே சவுக்கு கட்டைகளை கட்டி அதன் அருகில் மணல் மூட்டைகள் அடுக்கி உடைப்பு சரிசெய்யும் பணி விடிய விடிய நடந்தது. இன்று காலையிலும் தொடர்ந்து நடந்தது.

    இதற்காக 10-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் , டிராக்டர்கள், பொக்லைன் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்த பகுதியிலேயே முகாமிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். #Kallanai
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 வழிச்சாலைக்கு நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 873 விவசாயிகள் ஆட்சேபனை மனுக்கள் அளித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    திருவண்ணாமலை:

    சென்னை-சேலம் இடையே 277 கிலோ மீட்டர் தொலைவில் 8 வழி பசுமைச்சாலை திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இதற்காக, மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கியுள்ள நிலையில், சாலை அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பசுமை சாலை அமையும் 122 கிலோ மீட்டர் தொலைவில் நிலங்களை அளவீடு செய்து எல்லை குறியீடு கற்களை பதிக்கும் பணியை, விவசாயிகளின் எதிர்ப்பு போராட்டத்தை மீறி அதிகாரிகள் போலீசாரின் அடக்குமுறையோடு முடித்துள்ளனர். இந்த நிலையில் நிலம் கையகப்படுத்துவது குறித்து விவசாயிகள் கருத்து தெரிவிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

    நிலம் கையகப்படுத்த ஆட்சேபனை மனுக்கள் அளிக்க கூடுதலாக வழங்கப்பட்ட 15 நாட்கள் அவகாசமும் நேற்றுடன் முடிந்துவிட்டது.

    அதன்படி 873 விவசாயிகள் நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து ஆட்சேபனை மனுக்கள் அளித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் கூடுதல் இழப்பீடு மற்றும் அரசு வேலை வாய்ப்பு மாற்று இடம் போன்றவற்றை கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

    பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவண்ணாமலையில் இருந்து சேலம் வரை நடைபயணம் நடக்கிறது. வரும் 1-ந் தேதி, திருவண்ணாமலை அண்ணா சிலையில் இருந்து தொடங்கும் நடைபயணத்தை, அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார்.

    திருவண்ணாமலையில் இருந்து சேலம் வரை 170 கிலோ மீட்டர் தூரம் இந்த நடை பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளதாக மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் சிவக்குமார் தெரிவித்தார்.
    8-வழி பசுமை சாலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் ஒவ்வொரு பேருக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் உதவி தொகை வழங்க வேண்டும் என கலெக்டரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
    சேலம்:

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:-

    8-வழி பசுமை சாலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் ஒவ்வொரு பேருக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் உதவி தொகை வழங்க வேண்டும். தலைவாசல் பகுதியில் ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசிகள் மிகவும் மோசமாக உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் நிலைகளை தூர்வார வேண்டும். பயிர் காப்பீட்டு திட்டம் மூலம்  அனைத்து விவசாயிகளுக்கும் இன்சூரன்ஸ் தொகை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதற்கு கலெக்டர் ரோகிணி பதில் அளித்து பேசுகையில் ரேசன் அரிசி தரம் குறைவாக இருப்பது குறித்து வட்ட வழங்கல் துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.
    மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் வீராணம் ஏரிக்கு இன்று இரவு வருமா? என்று விவசாயிகள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து இருக்கின்றனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசனவசதி பெறுகிறது. ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 72 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு வரத்தொடங்கியது. தொடர்ந்து நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த வடகிழக்கு பருவ மழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது.

    தொடர்ந்து மழை இல்லாததாலும், ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததாலும் நீர்மட்டம் படிபடியாக குறைந்தது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. தொடர்ந்து வீராணம் ஏரியில் நீர்மட்டம் குறைந்து ஏரி வறண்டு காணப்பட்டது. இதனால் விவசாயிகள் பாசனத்துக்கு தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.

    இந்தநிலையில் கர்நாடகத்தில் பெய்துவரும் தொடர் மழையினால் அங்குள்ள அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறந்துவிடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்தது. இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அது கல்லணையை வந்தடைந்தது. அங்கிருந்து அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் உள்ள அணைக்கரை பகுதிக்கு காவிரிநீர் வந்து சேர்கிறது.

    இதையடுத்து கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே உள்ள கீழணைக்கு இன்று மாலை காவிரிநீர் வந்து சேரும். அங்கிருந்து இன்று இரவு அல்லது நாளை வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீராணம் ஏரிக்கு தண்ணீர் எப்போது வரும் என்றும் விவசாயிகள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து இருக்கின்றனர்.

    வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்தவுடன் அங்கிருந்து சென்னை குடிநீருக்கு 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.
    கார்த்தி நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழாவில் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் விவசாயிகளுக்கு ரூ.1 கோடி வழங்கப்பட்டது. #KadaikuttySingam
    கார்த்தி - சாயிஷா நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் கடைக்குட்டி சிங்கம். பாண்டிராஜ் இயக்கியிருக்கும் விவசாயம் மற்றும் குடும்பத்தின் ஒற்றுமையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்த நிலையில், படத்தின் வெற்றி விழா இன்று நடந்தது. இதில் இயக்குநர் பாண்டிராஜ், படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா, கார்த்தி, சாயிஷா, ப்ரியா பவானி சங்கர், அர்த்தனா, சத்யராஜ், சரவணன், சூரி, பொன்வண்ணன், விஜி சந்திரசேகர், யுவராணி, மௌனிகா, இளவரசு மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.



    இதில் தமிழக விவசாயிகளின் நலன் மற்றும் அவர்களது மேம்பாட்டுக்காக ரூ.1 கோடியை 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா வழங்கினார். மேலும் விவசாயத்தில் சாதனை படைத்த 5 பேருக்கு தலா ரூ. 2 லட்சமும் வழங்கப்பட்டது. #KadaikuttySingam

    சென்னிமலை அருகே நேற்று இரவு 6 ஆடுகளை மர்ம விலங்கு கடித்ததில் பரிதாபமாக இறந்து போனது. இறந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள முருங்கத்தொழுவு கிராமம் பனங்காட்டு தோட்டத்தில் வசிப்பவர் ரங்கசாமி (வயது 80). விவசாயி.

    இவர் 24 செம்மறி மற்றும் வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். இவர் இரவு ஆடுகளை வீடு அருகே உள்ள அவருக்கு சொந்தமான இடத்தில் பட்டி அமைத்து அதில் அடைத்து விடுவார்.

    நேற்று இரவு பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு வீட்டில் படுக்க சென்று விட்டார். இன்று காலை 6 மணிக்கு வந்து ஆட்டு பட்டியை பார்த்தபோது ரங்கசாமி திடுக்கிட்டார்.

    அங்கு அடைக்கப்பட்டு இருந்த ஆடுகளில் 6 ஆடுகளை ஏதோ மர்ம விலங்கு கடித்து குதறி மிக கோரமாக இறந்து கிடந்தன. மேலும் 5 ஆடுகள் மர்ம விலங்க கடித்து ரத்த காயத்துடன் கிடந்தன. அவை உயிருக்கு போராடின.

    ஆடுகள் பயந்து ஓடியதில் சில ஆடுகளுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இதை பார்த்து ரங்கசாமி கதறி அழுதார். இந்த தகவல் அறிந்து அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

    கால்நடை மருத்துவர் வந்து கடிபட்ட ஆடுகளுக்கு வைத்தியம் பார்த்தார். ஆட்டு பட்டியை சுற்றி குடியிருப்பு பகுதி உள்ளதால் மற்ற மர்ம விலங்குகள் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு எனவும் நாய் கடித்து ரத்தம் குடித்திருக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் மக்கள் பேசி கொண்டனர்.

    இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ. ஒரு லட்சம் இருக்கும். உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 

    மேற்குவங்க மாநிலம் மிட்னாப்பூரில் பேசிய பிரதமர் மோடி, தேசிய கீதம் உருவான மாநிலத்தை ஆளும் அரசு வாக்கு வங்கிக்காக பயன்படுத்திக்கொள்வதாக குற்றம்சாட்டியுள்ளார். #Modi #WestBengal
    கொல்கத்தா:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு, பிரதமர் மோடி பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். அதன் ஒருபகுதியாக மேற்கு வங்க மாநிலம் மிட்னாப்பூரில் இன்று நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்தார்.

    அப்போது பேசிய மோடி, மேற்கு வங்க மாநிலத்தில், மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றகூட அனுமதி பெற வேண்டி இருப்பதாகவும், கோவிலில் பூஜை செய்யக்கூட அரசு அனுமதி பெற வேண்டிய நிலை இங்கு இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

    மேலும், பல்வேறு ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆட்சியால் மாநிலத்தில் பிரச்சனைகள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலமானது தேசிய கீதம் உருவான புனிதமான மண் எனவும், அதனை வாக்குவங்கிக்காக மட்டுமே ஆளும் மாநில அரசு பயன்படுத்துவதாகவும் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.



    இதைத்தொடர்ந்து, மேற்கு வங்க ஆளும் அரசு எதிரிகளை கொலை செய்வதையே மும்முரம் காட்டிவருவதாகவும், அதன் முகத்தை இப்போது அறிந்துகொள்ளுங்கள் எனவும் பிரதமர் மோடி பேசினார். மேலும், மக்களுக்கு அநியாயம் செய்யும் இந்த அரசு ஆட்சியில் இருப்பதையே நோக்கமாக கொண்டுள்ளதாகவும், வாக்கு வங்கியை குறிவைத்தே செயல்படுவதாகவும் குறிப்பிட்டார்.

    தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மத்தியில் ஆளும் பாஜக அரசு விவசாயிகளுக்கான அரசு என்றும், 2022-ம் ஆண்டில் விவசாயிகளின் வருவாயை இருமடங்காக உயர்த்தவே உழைத்து வருவதாகவும் தெரிவித்தார். #Modi #WestBengal
    கிருஷ்ணராயபுரம் பகுதியில் சோளம் அறுவடை செய்யும் பணியில் அப்பகுதி விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    கரூர்:

    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டாரத்திற்கு உட்பட்ட கட்டளை, மேலகட்டளை, ரங்கநாதபுரம், மணவாசி, வீரராக்கியம், மேலமாயனூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் காவிரி ஆற்றுப்பாசன திட்டம் மற்றும் தங்களுடைய நிலங்களில் உள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் நீரை கொண்டு பல ஏக்கர் பரப்பளவில் சிவப்பு சோளத்தை பயிரிட்டுள்ளனர். 

    சித்திரை மாதத்தில் பயிர் செய்த இந்த சோளப்பயிர் தற்போது நன்கு வளர்ந்து கதிர்கள் முற்றிய நிலையில் அவற்றை அறுவடை செய்யும் பணியில் அப்பகுதி விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக இந்த பகுதிக்கு தேவைப்படும் விவசாய கூலி தொழிலாளர்கள் உள்ளூரில் கிடைக்காமையால் மாவட்டத்தின் தென்பகுதி ஒன்றியமான கடவூர் ஒன்றியத்தின் தரகம்பட்டி, வரவணை, சுண்டுகுழிப்பட்டி, தெற்கு பிச்சம்பட்டி, கள்ளபொம்மன்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் லந்தக்கோட்டை, சீரங்கபட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள விவசாய கூலி தொழிலாளர்களை வேன்கள் மூலம் அழைத்து வந்து அறுவடை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    மேலும் பல விவசாய கூலி தொழிலாளிகள் பிற பகுதியில் இருந்தும் பஸ்கள் மூலம் இந்த பகுதிக்கு வந்து கூலிக்கு அறுவடை செய்து வருகின்றனர். இதுகுறித்து சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது:-

    தற்போதைய சூழ்நிலையில் இளம் வயது பெண்கள் விவசாய கூலிகளாக வேலைக்கு செல்லாமல் கரூரில் உள்ள பல தனியார் தொழில் நிறுவனங்களுக்கு அந்நிறுவன பஸ்களின் மூலம் சென்று விடுவதாலும், ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் 100 நாள் வேலைக்கு சென்று விடுவதாலும் அறுவடைக்கு ஆட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். இதை கருத்தில் கொண்டு விவசாய பயிர்களின் அறுவடை காலங்களில் 100 நாள் பணியாளர்களை விவசாயிகளின் அறுவடை பணிக்கு பயன்
    படுத்தும் வகையில் அரசு ஏற்பாடு செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    கரூர் மாவட்டத்தில் வெல்லம் உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக வெல்லம் மற்றும் கரும்பு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், முத்தனூர், கவுண்டன்புதூர், நடையனூர், கரைப்பாளையம், நொய்யல், சேமங்கி, கொளத்துப்பாளையம், வேட்டமங்கலம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர்.

    கரும்பு விளைந்தவுடன் பல்வேறு பகுதிகளில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலை அதிபர்களுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2600-க்கு விற்பனை செய்கின்றனர். வாங்கிய கரும்புகளை இயந்திரத்தின் மூலம் சாறு பிழிந்து இரும்பு கொப்பரையில் ஊற்றி காய வைத்து சரியான பதம் வந்து பாகு ஆனவுடன், மர அச்சுத்தொட்டியில் ஊற்றி அச்சு வெல்லம் தயாரிக்கின்றனர்.

    அதே போல் மரத்தொட்டியில் கரும்பு பாகுவை ஊற்றி உலரவைத்து துணிகள் மூலம் உருண்டை வெல்லம் தயாரிக்கின்றனர். பின்னர் நன்கு உலரவைத்து சாக்கு களில் 30 கிலோ கொண்ட சிப்பங்களாகதயார் செய்கிறனர்.

    தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை வியாபாரிகள் வாங்கி லாரிகள் மூலம் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்ராஞ்சல், உத்திரப்பிரதேசம், சண்டிகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.

    கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1300-க்கும், 30 கிலோ கொண்ட அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1300 க்கும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். இந்த வாரம் வியாபாரிகள் 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் உருண்டை வெல்லம் ரூ.1130-க்கும், 30 கிலோ கொண்ட அச்சு வெல்லம் ரூ.1130-க்கும் வாங்கிச் சென்றனர்.

    உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக வெல்லம் மற்றும் கரும்பு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    பெரம்பலூர் மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களை மானிய விலையில் விவசாயிகள் சாகுபடி செய்யலாம் என்று கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களை மானிய விலையில் விவசாயிகள் சாகுபடி செய்யலாம் என்று கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு விவசாயிகள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், குறைந்த நீரில் விவசாயிகள் அதிக வருவாய் ஈட்டக் கூடிய காய்கறிகள், பழப் பயிர்கள், மலர் பயிர்கள் மற்றும் மலை தோட்டப் பயிர்கள் ஆகியவற்றை சாகுபடி மேற்கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ஒரு பயனாளிக்கு 4 எக்டருக்கு மானிய உதவிகள் வழங்கப்படுவதோடு உயர் சாகுபடி தொழில்நுட்பங்கள் திட்ட விரிவாக்க அலுவலர்கள் மூலம் வழங்கப்படுகிறது.

    இந்த திட்டத்தில் காய்கறி பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு வீரிய ஒட்டு ரக விதைகள் அல்லது குழித்தட்டு நாற்றுகள் மற்றும் இதர இடு பொருட்கள் எக்டருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் வழங்கப்படுகிறது. மஞ்சள் மற்றும் மிளகாய் போன்ற சுவை தாளித பயிர்கள் சாகுபடி மேற்கொள்ள எக்டருக்கு ரூ.12 ஆயிரம் வீதம் நடவுச்செடிகள் மற்றும் இதர இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. மல்லிகை மற்றும் சாமந்தி போன்ற உதிரி மலர்கள் சாகுபடி செய்ய எக்டருக்கு ரூ.16 ஆயிரம் வீதம் நடவுச்செடிகள் வழங்கப்படுகிறது. சம்பங்கி போன்ற கிழங்கு வகை மலர்களுக்கு ரூ.60 ஆயிரம் வீதம் மானியம் வழங்கப்படும்.

    விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகள், நடவு செடிகளின் விவரங்கள் மற்றும் அனைத்து திட்ட விவரங்கள் “உழவன் செயலி’’ மூலம் அறிந்து இச்செயலி மூலம் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் திட்ட பயன்கள் வழங்கப்படுகிறது. இது தவிர, விவசாயிகள் திட்டங்கள் தொடர்பாக தேவைப்படும் விவரங்களை தங்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலர்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் தகவலுக்கு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பாப்பிரெட்டிப்பட்டியில் போலீஸ் அனுமதி இல்லாமல் விவசாயிகளிடம் கருத்து கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பாப்பிரெட்டிப்பட்டி:

    சென்னை முதல் சேலம் வரையிலான எட்டு வழி பசுமைச் சாலையானது ரூ. 10 ஆயிரம் கோடியில் அமைய உள்ளது. இந்த பசுமை வழிச்சாலையானது தருமபுரி மாவட்டத்தில் 53 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. இதற்காக சுமார் 919.24 ஏக்கர் நிலங்களை அரசு கையகப்படுத்த உள்ளது.

    பசுமை வழிச்சாலை அமைவதால் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. கே.பாலபாரதி தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கோம்பூர், காளிப்பேட்டை, சாமியாபுரம் கூட்டுசாலை, கோட்டமேடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.

    போலீஸ் அனுமதி இல்லாமல் விவசாயிகளை சந்திப்பது தவறு என்று அரூர் டி.எஸ்.பி. செல்ல பாண்டியன் கூறினார். ஆனால் போலீஸ் தடையை மீறி தொடர்ந்து பாலபாரதி மற்றும் மார்க்சிஸ்டு கட்சியினர் விவசாயிகளிடம் கருத்து கேட்டனர். இதை தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. கே.பாலபாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலர் ஏ.குமார் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. என்றாலும் போலீசார் அவர்களை வேனில் ஏற்றி சென்றனர். இரவு அவர்களை போலீசார் விடுதலை செய்தனர்.

    சென்னை முதல் சேலம் வரையிலான பசுமை வழிச்சாலையால் மலைவாழ் பழங்குடியின மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வீடுகள், விவசாய நிலங்கள் அதிக அளவில் பாதிக்கின்றது. பசுமை வழிச்சாலையால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

    வருவாய்த்துறை சார்பில் விவசாயிகளிடமிருந்து ஆட்சேபனை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால், மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. பசுமை வழிச்சாலையை விவசாய நிலங்கள், வீடுகள், கல்வி நிறுவனங்கள் பாதிக்காத வகையில் மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும்.

    பசுமை வழிச்சாலை குறித்து கருத்து தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்வதை அரசு கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாலபாரதி கைதை கண்டித்து தருமபுரி, அரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிளில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    போலீஸ் அனுமதி இல்லாமல் விவசாயிகளிடம் கருத்து கேட்ட பாலபாரதி உள்பட 15 பேர் மீது எ.பள்ளிப்பட்டி போலீசார் இன்று காலை வழக்கு பதிவு செய்தனர். சட்டவிரோதமாக கூடுதல், பதட்டத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    ×