search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99754"

    புதிய நெல் கொள்முதல் விலை நிர்ணயம் செய்ததில் மத்திய அரசு விவசாயிகளை ஏமாற்ற தவறான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது என்று அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நெல், நிலக்கடலை, பருத்தி உள்ளிட்ட குறுவைப் பாசனப் பயிர்களுக்கான கொள்முதல் விலைகளை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது இப்போது கொள்முதல் விலை சற்று கூடுதலாக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், மத்திய அரசு பெருமிதப்பட்டுக் கொள்வதைப் போல வேளாண் விளை பொருட்களுக்கு 50 சதவீதம் லாபம் கிடைக்கும் அளவுக்கு விலை உயர்த்தப்படவில்லை.

    மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி 14 வகையான விளை பொருட்களுக்கு உற்பத்திச் செலவுடன் 50 சதவீதம் லாபம் சேர்த்து தான் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், புள்ளி விவரப் பயன்பாட்டுக்குத் தான் இது பொருத்தமாக இருக்குமே தவிர, எதார்த்தத்திற்கு எவ்வகையிலும் பொருந்தாது. எடுத்துக்காட்டாக சாதாரண ரக நெல்லுக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு 1,550 ரூபாயிலிருந்து 1,750 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    சன்னரக நெல்லுக்கான கொள்முதல் விலை 1,590 ரூபாயிலிருந்து 1,770 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதாரண ரக நெல்லுக்கான உற்பத்திச் செலவு ரூ.1166 என்றும், அத்துடன் 50.09%, அதாவது ரூ.584 லாபம் சேர்த்து புதிய கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    எனினும், இந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் உழவர்களை ஏமாற்றுவதற்காக திட்டமிட்டே தவறாக கணக்கிடப்பட்டிருக்கின்றன என்பது தான் உண்மை. நெல்லுக்கான உற்பத்திச் செலவாக அரசால் கணக்கிடப்பட்டுள்ள ரூ.1166 என்பது மிகவும் குறைவாகும்.

    தமிழ்நாட்டில் நெல் உற்பத்திக்கான செலவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தான் கணக்கிடுகிறது. தமிழகத்தில் ஒரு குவிண்டால் நெல் உற்பத்தி செய்ய ரூ.1,549 செலவாகிறது. இதுவும் 2015-ம் ஆண்டு மதிப்பு தான். ஆண்டுக்கு 5 சதவீதம் உற்பத்தி செலவு அதிகரிப்பதாக வைத்துக் கொண்டாலும், நடப்பாண்டில் ஒரு குவிண்டால் நெல் உற்பத்திச் செலவு ரூ.1781 ஆக அதிகரித்திருக்க வேண்டும். அத்துடன் 50 சதவீதம் லாபம் சேர்த்தால் ஒரு குவிண்டால் நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ. 2671 ஆக அதிகரித்திருக்க வேண்டும்.

    நிலக்கடலை தவிர மற்ற பயிர்களின் உற்பத்திச் செலவுகள் அனைத்துமே மிகவும் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பாசிப்பயறு விலை குவிண்டாலுக்கு ரூ.1400 அளவுக்கும், சூரியகாந்தி எண்ணெய் வித்து ரூ.1288 அளவுக்கும், பருத்தி ரூ.1130 அளவுக்கும், ராகி விலை ரூ.997 அளவுக்கும் உயர்த்தப்பட்டிருப்பது வரலாறு காணாத ஒன்றாகும்.

    ஆனால், அவற்றின் விலையும் உண்மையான உற்பத்திச் செலவுடன் 50 சதவீதம் லாபம் சேர்த்து நிர்ணயிக்கப்படவில்லை என்பது தான் உண்மையாகும்.

    எனவே, மத்திய அரசு உற்பத்திச் செலவுகளில் நிலையான செலவு, நிர்வாகச் செலவு ஆகியவற்றையும் சேர்த்து கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டும்.

    தமிழக ஆட்சியாளர்கள் தமிழகத்தில் நெல் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்திச் செலவாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் எவ்வளவு தொகை நிர்ணயித்துள்ளதோ, அந்த பட்டியலை மத்திய அரசிடம் அளித்து, அதனுடன் 50 சதவீதம் லாபம் சேர்த்து கொள்முதல் விலையை தீர்மானிக்கும்படி வலியுறுத்த வேண்டும். அதை ஏற்க மத்திய அரசு மறுத்தால், வித்தியாசத் தொகையை தமிழக அரசே ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும். தமிழகத்தில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்தது ரூ.2500 கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    வெள்ளகோவில் அருகே இரும்பு தாது எடுக்கும் பணியை தொடர்ந்தால் போராட்டம் நடத்த போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள ஓலப்பாளையம், பூசாரி வலசு, மொட்டகாடு, திருமண்காடு உள்ளிட்ட 17 கிராமங்களில் கனிம வளத்துறையை சேர்ந்த கியாசில் என்ற தனியார் நிறுவனம் இரும்பு தாது எடுக்க முடிவு செய்துள்ளது. இதற்காக 100 சதுர கிலோ மீட்டர் பரப்பு நிலத்தை கையகப்படுத்த உள்ளது.

    இந்த நிறுவனம் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் தகவல் தெரிவிக்காமல் ஆய்வு செய்துவிட்டது. தற்போது ஆழ்குழாய் கிணறு அமைக்க முடிவு செய்துள்ளது.

    வருகிற டிசம்பர் 6-ந் தேதி முழு பணியை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    இந்த திட்டத்தால் 1000 அடி முதல் 3000 அடி ஆழம் வரை ஆழ்குழாய் கிணறு அமைக்கப்படும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும். மேலும் பிரதான விவசாயமான பவானி - ஆழியாறு பாசனம், லோயர் பவானி பாசன திட்டம் பாழ்படும் என விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த திட்டத்தால் வெள்ளகோவில் டவுன், உப்பு பாளையம், குமரவலசு, முத்துகுமார் நகர், திருமங்கலம், வேலகவுண்டன் பாளையம், கல்லாங்காடடு வலசு, திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரம் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்.

    மேட்டுப்பாளையம் கிராமத்தில் 7500 பொதுமக்கள் பாதிக்கபடுவார்கள். இதுமட்டுமின்றி பல ஆயிரம் விசைத்தறி கூடங்கள், தேங்காய் பருப்பு உலர் கலம், கறி கோழி பண்ணை, நூற்றுக்கும் மேற்பட்ட நூற்பாலைகள், ஆயில் மில்கள், செங்கல் சூளைகள் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி இதில் வேலை செய்யும், வெளியூர், வெளிமாநில தொழிலாளர்கள் 50 ஆயிரம் பேர் என மொத்தம் 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் மற்றும் விவசாயிகள், கால்நடைகள், கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என குற்றம் சாட்டி உள்ளனர்.

    இரும்பு தாது எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் நிலத்தடி நீர் அடி பாதாளத்திற்கு சென்று விடும். இதனால் இத் திட்டத்தை கைவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக மேட்டுப்பாளையம், பச்சா பாளையம் , வீர சோழபுரம் கிராம மக்கள் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் உள்ள புவியியல் மற்றும் சுரங்க ஆணையர், திருப்பூர் கலெக்டர், தாராபுரம் கோட்டாட்சியர், காங்கயம் தாசில் தார் ஆகியோருக்கு மனு அனுப்பி உள்ளனர்.

    இரும்பு தாது எடுக்கும் பணியை தொடர்ந்தால் போராட்டம் நடத்த போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டம் தொடர்பாக கோர்ட்டு மூலம் அனுமதி பெற்று விவசாயிகளை நேரில் சந்திப்பேன் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். #anbumani #chennaisalem8wayroad

    தருமபுரி:

    தருமபுரி தொகுதி எம்.பி.யும்., முன்னாள் மத்திய மந்திரியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தருமபுரியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்க காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் எனக்கு அனுமதி அளித்தனர். ஆனால் எனது சொந்த தொகுதியான தருமபுரி மாவட்டத்தில் நான் கருத்து கேட்க அனுமதி மறுத்து உள்ளனர்.

    ஏற்கனவே அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் இல்லை. உள்ளாட்சி பிதிநிதிகளும் இல்லை.

    இந்த நிலையில் பாராளுமன்ற மக்கள் பிரதிநிதி என்ற முறையில் மக்களின் கருத்துக்களை கேட்பது எனது ஜனநாயக கடமை. அதை தடுப்பது மிகவும் தவறான செயலாகும்.

    இது தொடர்பாக பாராளு மன்ற சபாநாயகருக்கும், பாராளுமன்ற உரிமை குழுவிற்கும் கடிதம் அனுப்பி உள்ளேன். கோர்ட்டு மூலம் உரிய அனுமதி பெற்று தருமபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் சென்று கருத்து கேட்பேன்.

    மக்கள் கருத்தை கேட்டு 8 வழி சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தி.மு.க. கூறுகிறது. இந்த 8 வழி சாலை திட்டமே தேவையில்லாதது என்று நாங்கள் கூறுகிறோம். இந்த விவகாரத்தில் தி.மு.க. தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.


    தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் யார் அறிவாளி? என்ற வாதத்திற்கு என்னை அழைக்கிறார். அவர் அறிவாளிதான் ஏற்றுக் கொள்கிறேன்.

    நான் மருத்துவ படிப்பிற்கான சீட்டை மெரிட் அடிப்படையில் பெற்றேன். அவர் எம்.ஜி.ஆரிடம் பரிந்துரையை பெற்று அதன் மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்து டாக்டரானவர்.

    நான் மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக இருந்த போது தேசிய கிராமப்புற சுகாதார திட்டம் உள்பட பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சுகாதார திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வந்தேன்.

    கடந்த 4 ஆண்டு கால பாரதீய ஜனதா ஆட்சியில் தமிழகத்துக்கு ஒரு சுகாதார திட்டம் கூட கொண்டு வரப்படவில்லை. மத்திய அரசின் மூலம் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட ஒரு சுகாதார மேம்பாட்டு திட்டத்தையாவது தமிழிசை சவுந்தரராஜனால் சொல்ல முடியுமா?

    இவ்வாறு அவர் கூறினார். #anbumani #chennaisalem8wayroad

    பசுமை வழிச்சாலை அமைப்பதற்கு பெரும்பாலான விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை கொடுக்கிறார்கள் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #EdappadiPalanisamy
    சேலம்:

    சென்னையில் இருந்து நேற்று சேலத்திற்கு சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்குள்ள விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- தொடர்ந்து கர்நாடக அரசு முரண்டு பிடித்துக்கொண்டிருக்கிறது, ஆணையத்திற்கான உறுப்பினரை நியமிக்கவில்லையே?.

    பதில்:- ஏற்கனவே, சுப்ரீம் கோர்ட்டால் தெளிவாக தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையிலே, மத்திய அரசால், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு இரண்டும் அமைக்கப்பட்டு அதற்குத் தேவையான உறுப்பினர்களை 4 மாநிலமும் வழங்க வேண்டும் என்று தகவல் கொடுக்கப்பட்டு, அதனடிப்படையிலே, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகள் தங்களுடைய பிரதிநிதிகளை மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளன. ஆனால், கர்நாடக மாநில அரசு மட்டும் அவர்களுடைய பிரதிநிதிகளை பரிந்துரைக்காத காரணத்தினால், மத்திய அரசு, தானாக கர்நாடகத்திற்கான பிரதிநிதிகளை நியமித்திருக்கிறது.



    கேள்வி:- தொடர்ந்து நமக்கு கிடைக்கக்கூடிய தண்ணீர், இந்த மாதம் வருவதற்கான வாய்ப்பு இருக்கின்றதா?.

    பதில்:- ஒவ்வொரு மாதமும், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு 10 நாட்களுக்கு ஒரு முறை அதைக் கணக்கிட்டு, நமக்கு வழங்க வேண்டிய நீரை வழங்குவதற்கு உண்டான நடவடிக்கையை மேற்கொள்ளும். அதை ஆணையம் மேற்பார்வையிட்டு நடைமுறைப்படுத்தும்.

    கேள்வி:- பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்ற நிலைமாறி, இன்றைக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறதே?.

    பதில்:- சுமார் 56 கிலோ மீட்டருக்கு தர்மபுரியில் எல்லைக் கல் நடப்பட்டுவிட்டது. சேலத்தை பொறுத்தவரை 30 கிலோ மீட்டருக்கு எல்லைக் கல் நடப்பட்டுவிட்டது, இன்னும் 6 கிலோ மீட்டர் மட்டும் நடப்படவேண்டியிருக்கிறது. இதில், 100-க்கு 4 அல்லது 5 விவசாயிகள் தங்களுடைய நிலத்தைக் கொடுக்க மறுக்கின்றார்கள். பெரும்பாலான விவசாயிகள் தங்களுடைய நிலங் களை பசுமை வழிச்சாலை அமைப்பதற்கு தாமாக முன்வந்து வழங்கி இருக்கின்றார்கள்.

    இந்த பசுமை வழிச்சாலை மிக முக்கியமான சாலை, உங்களுக்கே நன்றாகத் தெரியும். 2006-ம் ஆண்டு என்று கருதுகின்றேன், கிருஷ்ணகிரியில் இருக்கின்ற தேசிய நெடுஞ்சாலை, பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக மதுரை, திருச்சி செல்கின்ற சாலை, அதேபோல, உளுந்தூர்பேட்டை சாலை இரண்டும் கிட்டத்தட்ட 2006-ல் அமைக்கப்பட்டது.

    2009-ல் இருந்து 2011 வரை உளுந்தூர்பேட்டை சாலை அமைக்கப்பட்டது. தமிழகத்தில் அப்பொழுது வாகனங்களுடைய எண்ணிக்கை 1 கோடியே 7 லட்சம். தற்போது வாகனங்களுடைய எண்ணிக்கை 2 கோடியே 57 லட்சம், எந்தளவிற்கு உயர்ந்திருக்கிறது என்பதை சிந்திக்க வேண்டும். அதற்கேற்றவாறு சாலைகளை உருவாக்குவது அரசினுடைய கடமையாகும். அதற்கு மத்திய அரசாங்கம் இப்பொழுது முன்வந்து, இந்த பசுமை வழிச்சாலையை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது, அதற்கு மாநில அரசும் உதவி செய்கிறது.

    கேள்வி:- இழப்பீட்டைப் பொறுத்தவரை இன்னும் கொஞ்சம்.....

    பதில்:- அதாவது, ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் வாயிலாக, தங்கள் பகுதியில் எவ்வளவு இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம்கூட பத்திரிகையிலும், ஊடகத்திலும் வெளியிடப்பட்டிருக்கிறது.

    கேள்வி:- அரசியல் கட்சிகள் மறியல் செய்தால், அன்றைக்கு மாலையே விடப்படும் சூழ்நிலைமாறி அவர்கள் மீது வழக்கு பதியக்கூடிய சூழ்நிலை.....

    பதில்:- இதுவரைக்கும் யாரும் வழக்கு பதிவு செய்யவில்லை. இன்றைக்கும் பெரும்பாலான இடங்களில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடைபெற்றது, யாரும் கைது செய்யப்படவில்லை. சட்டத்திற்கு புறம்பாக அவர் கள் நடந்து கொள்கின்றபொழுதுதான் கைது செய்யவேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படுகின்றது. இன்றைக்கு நாமக்கல்லைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்லியிருக்கின்றீர்கள். கவர்னர் அங்கே வருகின்றபொழுது அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அவர்கள் கருப்புக்கொடி காட்டுவதைத் தவிர்த்து, வேறு இடத்திலே, சட்டம்-ஒழுங்கை சீர்படுத்துகின்ற விதத்திலே காட்ட முற்பட்ட காரணத்தினால்தான் தவிர்க்க முடியாத சூழ்நிலை அவர்களை கைது செய்ய வேண்டி வந்தது.

    கேள்வி:- விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் எடுப்பது பற்றி.....

    பதில்:- ஏற்கனவே நிலம் எடுக் கப்பட்டிருக்கிறது, இப்பொழுது நாங்கள்வந்து எடுக்கவில்லை. ஏற்கனவே, முந்தைய காலத்திலே இருந்து நிலம் எடுக்கப்படுகின்ற சூழ்நிலை இருந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு வளர்ந்து வருகின்ற ஒரு சூழ்நிலை. சேலத்தில் பார்த்தீர்களானால், ராணுவ வழித்தடம் வரவிருக்கிறது, இன்னும் தொழிற்சாலை அதிகமாக வரவேண்டும். படித்த, பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும். பொருளாதார வளர்ச்சி அடையவேண்டும் என்று சொன்னால், அந்த பகுதியிலே தொழில் வளர்ச்சி சிறக்க வேண்டும், அந்தத் தொழிற்சாலைகள் நம்முடைய பகுதியில் வருவதற்கு இன்றைக்கு மிகுந்த வாய்ப்பு இருக்கின்ற காரணத்தினால் இந்த விமான நிலைய விரிவாக்கம் தவிர்க்க முடியாத சூழ்நிலை இருக்கிறது.

    கேள்வி:- இது தொடர்பாக ஒரு கருத்துகூட கேட்டவில்லை என்ற ஒரு கேள்வி இருக்கிறதே.....

    பதில்:- இதுவரை 20 முறை கருத்துக் கேட்புக் கூட்டம் கூடியிருக்கிறது, 1200 பேருக்கு மேல், இந்தக் கூட்டங்களில் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். நம்முடைய சேலம் மாவட்டத்தில் 20 முறை கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது, ஆங்காங்கே தாலுகா அளவில் நடத்தியிருக்கிறார்கள்.

    கேள்வி:- நில மதிப்பீடு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறதா?

    பதில்:- இதுவரை இல்லாதவகையில் ஏழைகளுக்கு அதிகமான நில இழப்பீடு வழங்கப்படும். கடந்த காலத்தில் தி.மு.க. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தது. அப்பொழுதெல்லாம் நில இழப்பீட்டுத்தொகை குறைவாகத்தான் கொடுத்தார்கள். இன்றைக்கு அப்படியல்ல, ஏற்கனவே நம்முடைய மாவட்ட கலெக்டர், பலன் கொடுக்கின்ற மரங்களுக்கு என்னென்ன வகையிலே இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்ற ஒரு அறிக்கை தந்திருக்கின்றார்.

    அதுமட்டுமல்ல, வீடுகளுக்கும், அதேபோல ஓட்டு வீடுகளுக்கும், தேய்மானம் இல்லாமல், கடந்த காலத்தில் தேய்மானங்களை கணக்கிட்டுத்தான் இழப்பீட்டுத் தொகை வழங்கினார்கள், அதையெல்லாம் தவிர்த்து, தேவையான அளவிற்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கு உண்டான நடவடிக்கையை அரசு எடுக்கும்.

    அதுமட்டுமல்லாமல், பசுமை வழிச்சாலை அமைக் கின்றபொழுது, கால் ஏக்கர், அரை ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள், இழந்தால், அவர்களுக்கு வீடு கட்டுவதற்கு தேவையான இடத்தைக் கொடுத்து, பசுமை வீடுகள் அவர்களுக்கு அரசு கட்டிக்கொடுக்கின்றது.

    கேள்வி:- இரும்பு ஆலையை தனியார் மயமாக்கத்திற்கு அனுமதிக்க மாட்டோம் என்று சொல்கிறார்களே?.

    பதில்:- இது மத்திய அரசாங் கத்தின் கீழ் வருகிறது. நம்முடைய இரும்பு ஆலை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை, மத்திய அரசினுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஏற்கனவே, நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்திலே, இதை தனியார் மயம் ஆக்கக்கூடாது என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்களும், பிரதமருக்கும், மத்திய அரசினுடைய துறை மந்திரிகளுக்கும் கடிதம் மூலமாக, இதை தனியார் மயமாக ஆக்கக்கூடாது என்ற, தமிழக மக்களுடைய உணர்வை பிரதிபலிக்கின்ற விதத்திலே கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்திலும், இதை வலியுறுத்தி பேசப்பட்டிருக்கின்றது.

    கேள்வி:- தொடர்ந்து எம்.பி.க்கள் பேசுவார்களா?.

    பதில்:- ஏற்கனவே பேசப்பட்டது, பேசிக் கொண்டிருக்கிறார் கள், இன்னும் பேசுவார்கள்.

    கேள்வி:- குறிப்பாக 18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு மிகவும் விமர்சிக்கப்படுகிறது.....

    பதில்:- தீர்ப்பை விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை. நீதிமன்றம் என்பது ஒரு பொதுவானது. ஆகவே, அந்த நீதிமன்றத்தை விமர்சிப்பதை அனைவரும் தவிர்க்கவேண்டும்.

    கேள்வி:- எந்த மாதிரியான நடவடிக்கை இருக்கும்?

    பதில்:- நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்பொழுது, இதைப்பற்றி பேசுவது முறையாக இல்லை.

    கேள்வி:- நீதிமன்ற தீர்ப்பு வந்தபொழுது அதை விமர்சிப்பவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நீதிபதி குற்றம் சாட்டியிருக்கிறாரே?

    பதில்:- நேற்றையதினம்கூட, தலைமை நீதிபதியே தன்னுடைய கருத்தை தெளிவாக சொல்லியிருக்கின்றார்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.  #EdappadiPalanisamy #Tamilnews 
    சென்னை-சேலம் பசுமை சாலைக்காக சேலம் அருகே 5-வது நாளாக நிலம் அளவிடும் பணி நடந்தது. அப்போது விவசாய நிலம் பறிபோவதாக கூறி அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு விவசாயிகள் கதறி அழுதனர். #greenwayroad #Farmers
    சேலம்:

    சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை அமைப்பதற்காக சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களை அளவிடும் பணி நேற்று 5-வது நாளாக நடந்தது.

    சேலம் அருகே உள்ள உடையாப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வாழைத்தோப்பு பகுதியில் நேற்று காலை நில அளவீடு செய்யும் பணி தொடங்கியது. நில எடுப்பு தாசில்தார் பெலிக்ஸ்ராஜா தலைமையில், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், தேசிய நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் அங்கு நிலம் அளவீடு செய்து எல்லைக்கல் பதித்தனர்.

    அந்த பகுதியை சேர்ந்த அண்ணாமலை என்ற விவசாயிக்கு சொந்தமான 2 ஏக்கர் மாந்தோப்பு நிலம் முழுவதும் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த நிலத்தை அதிகாரிகள் அளவீடு செய்த போது அண்ணாமலையின் மனைவி கன்னியம்மாள் அங்கு உட்கார்ந்து, “தோப்பு முழுவதும் பறிபோகிறதே, கடந்த சில ஆண்டுகளாகத்தான் மா அறுவடை செய்து அதை விற்று, அந்த பணத்தின் மூலம் பிழைப்பு நடத்துகிறோம். அதற்குள் எங்கள் வாயில் மண்ணை போட்டு விட்டீர்களே” என்று கூறி ஒப்பாரி வைத்து கதறி அழுதார்.

    அங்கிருந்த அதிகாரிகளும், அவரது உறவினர்களும் அவரை சமாதானப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கந்தாஸ்ரமம் பின்புறம் வரகம்பாடி செல்லும் சாலையில் நில அளவீடு செய்யும் பணி நடந்தது.

    அங்கிருந்த பெண்கள், விவசாயிகள் அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு கதறி அழுதனர். இதேபோல் எருமாபாளையம் பகுதியில் நில அளவீடு செய்யும் பணி நடந்தபோது அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் நின்று கொண்டு “நம் நிலம் நம்மை விட்டு போகப்போகிறதே” என்று கூறி கதறி அழுததுடன், சோகமாக காணப்பட்டனர்.

    நிலம் அளவீடு செய்யும் பணியின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. #greenwayroad #Farmers
    2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்தும் நோக்கத்துடன் தான் பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு நிதி ஒதுக்கீடு 2 மடங்காக உயர்த்தப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #PMmodi
    புதுடெல்லி:

    பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சியில் 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அவரது திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து நாட்டு மக்களுடன் காணொளி மூலம் பிரதமர் மோடி பேசி வருகிறார்.

    அதன்படி இன்று 600 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் கலந்துரையாடினார். அப்போது பேசிய மோடி, 2017 - 18ம் ஆண்டில் 280 மில்லியன் டன் உணவு பொருட்களின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடும்போது 10.5 சதவிகித கூடுதல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகளுக்கு மண் வளம் காப்பது குறித்தும் மண்ணின் தரம் குறித்து அறிந்து அதற்கேற்ப பூச்சிக்கொல்லிகளை உபயோகம் செய்வது குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும் எனவும், நல்ல விதைகளை தேர்ந்தெடுப்பது குறித்தும் ஆலோசனை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், விவசாயிகள் தங்களது விளை பொருட்களுக்கான விலையை எவ்வித இடைத்தரகரும் இன்றி நேரடியாக பெறுவதற்காக இ-நாம் என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக உயர்த்தவே மத்திய அரசின் பட்ஜெட்டில் வேளாண்துறைக்கான நிதி இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். #PMmodi 
    ஒரு போக சாகுபடிக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்த பிறகே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
    திருக்காட்டுப்பள்ளி:

    கர்நாடக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவைக்காக அவசர கதியில் மேட்டூர் அணையை திறக்கக்கூடாது. ஒரு போக சாகுபடிக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்த பிறகே திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று சொல்லப்படும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் கடந்த 7 ஆண்டுகளாக பெரும் சோதனைகளை சந்தித்து வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் தாமதமாக திறக்கப்படுவது, அப்படி திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை சென்று சேருவதில் தடங்கல் ஏற்படுவது, நடவு செய்த பின்னர் போதுமான தண்ணீர் கிடைக்காமல் இருப்பது என காவிரி பாசன பகுதி விவசாயிகள் பல்வேறு நிலைகளில் சோதனைகளை தாங்கி விவசாயம் செய்து வருகின்றனர்.

    காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதால் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை திறந்துவிடும். இந்த ஆண்டு தடையின்றி விவசாயம் செய்யலாம் என்று விவசாயிகள் எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தங்கள் பிரதிநிதிகளை அறிவித்த நிலையில் கர்நாடக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இதனால் ஆணையம் அமைக்கப்பட்டும் சிக்கல் தான் நீடிக்கிறது.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் தற்போது கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு நீ்ர்வரத்து அதிகரித்து வருகிறது. கபினி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. கர்நாடக அணையில் இருந்து அதிகஅளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து அணை நிரம்பினால் தடையின்றி நெல் சாகுபடி செய்ய இயலும் என காவிரி பாசன விவசாயிகள் மத்தியில் நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும் தண்ணீர் வருகிறதே என்ற காரணத்தை வைத்து கொண்டு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    தஞ்சையை அடுத்த கரையாம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி கலியமூர்த்தி: மேட்டூர் அணையில் தண்ணீ்ர் முழு கொள்ளளவை எட்டிய பிறகு திறந்தால் மட்டுமே விவசாயிகள் கவலையின்றி ஒரு போக நெல்சாகுபடி மேற்கொள்ள இயலும். அதை விடுத்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதை காரணம் காட்டி அவசர கோலத்தில் திறக்கப்பட்டால் விவசாயிகள் நிலை திண்டாட்டம் தான். எனவே ஒரு போக சாகுபடிக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்த பிறகு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்.

    நாச்சியார்பட்டியை சேர்ந்த விவசாயி திருமாறன்: மேட்டூர் அணையில் குறைந்த பட்சம் 90 அடி அளவுக்கு தண்ணீர் வரட்டும். அதன் பின்னர் விவசாயிகளுக்கு உரிய முறையில் முன்னறிவிப்பு செய்து முதல் மடை முதல் கடைமடை வரை தண்ணீர் சென்று சேர வழிவகை செய்து ஒரு போக நெல் சாகுபடி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கிறது என்ற ஒரே காரணத்தை மட்டும் வைத்து கொண்டு தண்ணீரை திறந்தால் விவசாயிகளை திரிசங்கு சொர்க்க நிலைக்கு தள்ளிவிடும்.

    மேற்கண்டவாறு விவசாயிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    கர்நாடக அணைகளில் இருந்து வரும் தண்ணீர் எத்தனை நாட்களுக்கு வரும் என்பது உறுதியாக தெரியாத நிலை உள்ளது. மழை நின்று விட்டால் தண்ணீர் வரத்து குறைந்துவிடும். மதுரைக்கு வந்த கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கே வேலை இல்லை என்று கூறியுள்ளார். காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உறுப்பினர் பெயரை அறிவிக்காத கர்நாடக முதல்-மந்திரி இப்படி சொல்வது எந்த நோக்கத்துக்காக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கபட வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தப்பட்டதோ அதை அவமதிப்பது போன்று உள்ளது.

    இன்றைய நிலையில் காவிரியில் கர்நாடகம் உபரிநீரைதான் திறந்து விட்டுள்ளது. தமிழகத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் வழங்கப்பட வேண்டிய உரிமை தண்ணீரை பெற்று தமிழக விவசாயிகள் நிம்மதியாக சாகுபடி செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்பதே விவசாயிகளின் எண்ணமாக உள்ளது
    வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் மனைவி, மற்றும் விவசாயிகளின் கடன்களை திரும்ப தருவதற்கு தலா ரூபாய் 1 கோடி நிதி வழங்க பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. #AmitabhBachchan
    மும்பை:

    பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் சமூக சேவையிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

    இந்த நிலையில் அவர் நாட்டைக் காக்கும் பணியின்போது வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் விதவை மனைவிகளுக்கு ரூ. 1 கோடியும், கடன்களால் அல்லாடி வருகிற விவசாயிகள் கடன்களை திரும்பத் தருவதற்கு ரூ. 1 கோடியும் என மொத்தம் 2 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்போவதாக தகவல்கள் வெளியாகின.

    இந்த தகவல்களை நடிகர் அமிதாப்பச்சன் இப்போது உறுதி செய்து உள்ளார்.

    இது பற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள பதிவில், “ ஆமாம், என்னால் முடியும். நான் செய்வேன்” என கூறி உள்ளார்.

    இதில், பண உதவி உண்மையாகவே தேவைப்படுவோரை சென்று அடைவதை உறுதி செய்யும் தொண்டு அமைப்புகளை கண்டறிந்து பட்டியல் அளிக்குமாறு ஒரு குழுவை அமிதாப்பச்சன் அமர்த்தி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

    ஆனால் இது பற்றி அவர் டுவிட்டர் பதிவில் எதுவும் குறிப்பிடவில்லை. #AmitabhBachchan  
    தமிழகத்தில் விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்தில் சூரிய சக்தி மோட்டார் பம்ப் செட்டுகள் நிறுவப்படும் என சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #TNAssembly #EPS #SolarPumpSets
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று 110-வது விதியின்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், விவசாயப் பெருமக்களின் வளமான வாழ்வுக்கு முக்கியமாக விளங்கும் வேளாண்மை தொழிலை மேம்படுத்துவதற்கும், விவசாயப் பெருமக்களின் வாழ்வு வளம் பெறச் செய்வதற்கும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அவ்வகையில், தமிழ்நாட்டில் அபரிமிதமாகக் கிடைக்கும் சூரிய சக்தியை, பல்வேறு வழிகளில் பயன்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு “சூரிய சக்திக் கொள்கை” ஒன்றை 2012-ஆம் ஆண்டில் உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. இதுவரை, தமிழ்நாட்டில் 3,112 சூரிய சக்தி பம்ப் செட்டுகளும், 181 சூரிய உலர்ப்பான்களும், 117 கோடியே 24 லட்சம் ரூபாய் மானியத்தில்
    நிறுவப்பட்டுள்ளன. இலவச மின் இணைப்பை ஏற்கனவே பெற்றுள்ளவர்களும், இலவச மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தவர்களும், மின் இணைப்பை துறப்பதற்கு முன்வந்தால், இத்திட்டத்தின் கீழ், 90 சதவீத மானியத்தில் சூரிய சக்தி மோட்டார் பம்ப் செட்டுகள் அமைத்து தரப்படும்.



    தற்போது விவசாயிகளிடையே, சூரிய சக்தி மோட்டார் பம்ப் செட்டுகளுக்கு அதிக தேவை இருப்பதை கருத்தில் கொண்டு, ஏற்கனவே டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்துடன் அறிவிக்கப்பட்ட 500 சூரிய சக்தி மோட்டார் பம்ப் செட்டுகள் போக, டெல்டா மாவட்டங்கள் அல்லாத பிற பகுதிகளுக்கும் 500 சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்டுகள் என மொத்தம் 1,000 சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்டுகள் 50 கோடி ரூபாய் செலவில் 90 சதவீத மானியத்தில் நிறுவப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNAssembly #EPS #SolarPumpSets 
    8 வழிச்சாலை பசுமை திட்டத்தில் விவசாயிகளை காவல் துறையினர் மூலம் அச்சுறுத்துவது ஜனநாயக மக்கள் விரோத போக்கு என்று திருநாவுக்கரசர் கூறினார். #congress #thirunavukkarasar
    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆய்வு மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் ராஜபாளையத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற மாநில தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

    தமிழகத்தில் சேலம்- சென்னை 8 வழி பசுமை சாலை திட்டத்தில் ஆட்சியாளர்கள் காவல்துறையை பயன்படுத்தி விவசாயிகளை அச்சுறுத்தி, அவர்களின் நிலத்தை அபகரிக்க முயல்வது ஜனநாயக மக்கள் விரோத போக்காகும்.

    சமீப காலமாக சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகமாகி வருகிறது. இப்பிரச்சனை நிகழாமல் இருக்க மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப காவல்துறை எண்ணிக்கையை அதிகரித்து மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


    தமிழகத்தில் 90 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். மோடி ஆட்சியில் மத்திய அரசின் சார்பிலோ அல்லது மாநில அரசின் சார்பிலோ எந்த தொழில் நுட்பமும் கடந்த நான்கு ஆண்டுகளில் தொடங்கப்படவில்லை. இதனால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து பொருளாதார வளர்ச்சியின்மை நாட்டில் ஏற்பட்டுள்ளது.

    குஜராத், பீகார் போல் தமிழகத்திலும் பூரண மது விலக்கு அமல்படுத்த காங்கிரஸ் பேரியக்கம் தமிழகம் முழுவதும் விரைவில் போராட்டம் நடத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தளவாய்பாண்டியன், ராஜ பாளையம் நகர கமிட்டி நிர்வாகி சங்கர்கணேஷ் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர். #congress #thirunavukkarasar
    பெருமாள் கோவில் புலம் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்து இருக்கின்றனர்.

    கூடலூர்:

    தேனி அருகே கூடலூர் மந்தைவாய்க்கால் பாலத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் பெருமாள் கோவில் புலம் உள்ளது. மானாவாரி நிலங்களில் எள், நிலக்கடடலை, தட்டைப்பயறு, அவரை, மொச்சை, கம்பு, சோளப் பயிர்களையும், தோட்டங்களில் வாழை, தென்னை, திராட்சை, வெங்காயம், மா உள்ளிட்ட பணப்பயிர்களையும் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இவர்கள் தினசரி இருசக்கர வாகனங்கள் மற்றும் மினி ஆட்டோக்களில் கூலி ஆட்களை ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். விவசாயிகள் விளைவித்த பொருட்களை மாட்டுவண்டிகள் மற்றும் டிராக்டர் வண்டிகளில் ஏற்றி சந்தைகளுக்கு கொண்டு செல்கின்றனர்.

    கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தார் சாலை அமைக்கப்பட்டது. தொடர்ந்து சாலையில் பராமரிப்பு பணிகள் செய்யாததால் சாலைகள் தற்போது சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளித்து வருகிறது. இதனால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து அப்பகுதி விவசாயிகள் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு வழங்கினர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே, பெருமாள் கோவில் புலம் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்து இருக்கின்றனர். #tamilnews

    கரூர் பகுதியில் வாழைத்தார் உற்பத்தி குறைவால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், நடையனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, என் புகழுர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் வாழைத்தார்களை உள்ளுர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கும், வியாபாரிகளுக்கும் விற்பனை செய்கின்றனர். 

    வாழைத் தோட்டத்தில் விளையும் வாழைத்தார்களை விவசாயிகளிடமிருந்து வியாபரிகள் வாங்கி லாரிகள் மூலம் தமிழ் நாட்டிலுள்ள திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, கோவை நாமக்கல், நீலகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.  

    கடந்த வாரத்தில் பூவன் வாழைத்தார் ரூ.350-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.400-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.400-க்கும், பச்சை நாடன் வாழைத்தார் ரூ.350-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.500-க்கும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். நேற்று பூவன் வழைத்தார் ரூ.400-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.450-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.500-க்கும், பச்சை நாடன் வாழைத்தார் ரூ400-க்கும், மொந்தன் வாழைக்காய் ரூ.600-க்கும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். வாழைத்தார் உற்பத்தி குறைவால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ×