search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99815"

    2019 இந்திய பொது தேர்தலில் சில பா.ஜ.க. வேட்பாளர்கள் ஒரே அளவு வாக்குகளை பெற்றதாக சமூக வலைதளத்தில் தகவல் ஒன்று வைரலாகியுள்ளது.



    இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த 2019 பொது தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்கள் சிலர் 2,11,820 வாக்குகளையும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் சிலர் 1,40,295 வாக்குகளும் பெற்றதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் அடங்கிய பதிவுடன் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்படாமல், இப்படி ஒரே அளவிலான வாக்குகளை பெறுவது எப்படி சாத்தியம் என்ற கேள்வியும் இடம்பெற்றிருக்கிறது.



    சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவில் ஏழு பா.ஜ.க. வேட்பாளர்கள் ஒரே அளவு வாக்குகளை பெற்றதாக அவர்களின் பெயர்களுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், காங்கிரஸ் வேட்பாளர்கள் பெற்ற ஒரே அளவு வாக்குகளின் எண்ணிக்கை மட்டும் பதிவிட்டு அவர்களின் பெயர் பதிவிடப்படவில்லை. 



    இதில் குறிப்பிடத்தக்க அம்சம் ஏழு பா.ஜ.க. வேட்பாளர்கள் சரியாக 2,11,820 வாக்குகளையும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 1,40,295 வாக்குகளை பெற்றிருப்பதாக பதிவிடப்பட்டுள்ளது. 

    வைரல் பதிவின் படி ஏழு பா.ஜ.க. வேட்பாளர்கள் பெற்ற உண்மையான வாக்குகளை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பார்க்க முடிந்தது. அதில் அவர்கள் பெற்ற வாக்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



    போலா சிங்: 6,77,196
    மேனகா காந்தி: 4,58,281
    உபேந்திரா நர்சிங்: 5,35,594
    ஹரிஷ் திவேதி: 4,69,214
    சத்யபதி சிங்: 5,19,631
    சங் மித்ரா மவுரியா: 5,10,343
    குன்வர் பாரதேந்திரா சிங்: 4,88,061

    தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி சமூக வலைதளங்களில் பகிரப்படும் பா.ஜ.க. வேட்பாளர்களின் வாக்கு விவரங்கள் எதுவும் உண்மையில்லை என உறுதியாகி இருக்கிறது.
    கர்நாடக மாநிலத்தில் இளைஞர் மறைவை சுற்றி வெளியாகி வந்த புரளிகளுக்கு காவல் துறை முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.



    கர்நாடக மாநிலத்தின் பெலகவி பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞர் மாடுகளை காப்பாற்ற முயன்றதால், அடித்துக் கொல்லப்பட்டார் என வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில், உண்மையை கண்டறிய பெலகவி காவல் துறை அதிரடி விசாரணையை துவங்கியது.

    விசாரணையில் உயிரிழந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது முதல், இவர் மாடுகளை காப்பாற்ற முயன்றதால் கொல்லப்பட்டார் என்ற வாக்கில் தகவல்கள் பரவத் துவங்கின. 



    இது தொடர்பாக பா.ஜ.க. எம்.பி.யான ஷோபா, இளைஞரின் படுகொலைக்கு காவல் துறை முறையான விசாரணை மேற்கொண்டு அரசாங்கம் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். 

    இந்நிலையில், காவல் துறை ஆணையர் லோகேஷ் குமார் இளைஞரின் மறைவு தற்கொலை தான் என உறுதிப்படுத்தி இருந்தார். உயிரிழந்த நிலையில், கைப்பற்றப்பட்ட இளைஞரின் உடலில் தாக்கப்பட்டதை உணர்த்தும் காயங்கள் எதுவும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார். இத்துடன் இளைஞர் தற்கொலையை அவரது குடும்பத்தாரும் உறுதிப்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்தார்.
    இந்திய பொது தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்களை பா.ஜ.க. மாற்ற முயன்றதாக சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவின் மறுப்பக்கத்தை தொடர்ந்து பார்ப்போம்.



    இந்திய பொது தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை துவங்கி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

    இந்நிலையில், 2019 இந்திய பொது தேர்தல் பற்றி சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. அவ்வாறு சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டு இருக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களை பா.ஜ.க. மாற்ற முயற்சி செய்ததாக செய்தி தொகுப்பாளர் தெரிவிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.

    டி.என்.என். வொர்ல்டு எனும் பெயர் கொண்ட செய்தி நிறுவனம் சார்பில் இந்த வீடியோ வெளியாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி டெல்லி தேர்தல் அதிகாரியிடம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் பாதுகாப்பு பற்றி குற்றச்சாட்டு தெரிவித்தது.  



    இதேபோன்று 2019 பொது தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானதில் இருந்து நிலவும் சூழல் பற்றி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

    இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் மே 19 ஆம் தேதிக்கு பின் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் சற்று ஓய்வெடுக்கலாம் என்றும் இந்த சமயத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற பா.ஜ.க. ஆதரவாளர்கள் திட்டமிட்டிருப்பதாகவும் செய்தி தொகுப்பாளர் தெரிவிக்கிறார். மேற்கு வங்கம், ஒடிசா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் கேரளா போன்ற பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற இருப்பதாக அவர் தெரிவிக்கிறார். 

    7.53 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் செய்தி தொகுப்பாளரின் பெயர் குறிப்பிடப்படவே இல்லை. மேலும் அவர் வழங்கிய விவரங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் ஆதாரங்களையும் அவர் தெரிவிக்கவில்லை. இவற்றை வைத்து பார்க்கும் போது வைரலான வீடியோ முற்றிலும் பொய் தகவல்களை கொண்டிருப்பதாகவே தெரிகிறது.



    டி.என்.என். வொர்ல்டு வலைதளம்

    வைரலான வீடியோவை வெளியிட்ட வலைதளம் டிரைகலர் நியூஸ் நெட்வொர்க் என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் உலகம் முழுக்க செய்திகளை வெளியிட்டு வருகிறது. எனினும், இந்த வலைதளத்தில் இந்திய பொது தேர்தல் பற்றிய செய்திகளே அதிகம் இடம்பெற்று இருக்கின்றன. 

    இதே வலைதளத்தில் 2014 ஆம் ஆண்டு பொது தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதாக செய்தி வெளியானது. இந்த செய்தி வீடியோவில் அமெரிக்க வல்லுநர் ஒருவர் பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதுதவிர இந்தியாவில் பண மதிப்பிழப்பு அறிவிப்புக்கு பின் பா.ஜ.க. கட்சி பழைய ரூபாய் நோட்டுகளை கமிஷன் அடிப்படையில் மாற்றிக் கொடுத்ததாகவும் இதே தளத்தில் செய்தி வெளியிடப்பட்டது. 

    இந்த வலைதளத்திற்கென ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களும் இயங்கி வருகின்றன. இவற்றிலும் பா.ஜ.க. கட்சிக்கு எதிரான தகவல்கள் அதிகளவில் பதிவிடப்பட்டுள்ளன. டி.என்.என். வலைதளத்தின் உரிமையாளர் டயானா இரினா பிசின் ஆவார். இவர் ரோமானியாவை சேர்ந்தவர் ஆவார். நிறுவனத்தின் ஒற்றை பங்குதாரர் மற்றும் தலைவராக இவர் இருக்கிறார். அலுவலக முகவரி லண்டனில் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த முகவரி போலியானதாகும். இந்த முகவரியை பயன்படுத்த ஆண்டு கட்டணம் செலுத்தினாலே போதுமானது.
    டெல்லியில் 10-ந்தேதி நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் பா.ஜனதா கட்சிக்கு எதிரான வலிமையான கூட்டணியாக மாறும் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். #Kanimozhi #DMK
    சென்னை:

    தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி சென்று சோனியா காந்தியை சந்திக்கிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதுடன் 16-ந்தேதி அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் சிலை திறப்பு பத்திரிகை வழங்கி அழைப்பு விடுக்கிறார்.

    அதன்பிறகு டெல்லியில் 10-ந்தேதி நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இந்த கூட்டம் பா.ஜனதா கட்சிக்கு எதிரான வலிமையான கூட்டணியாக மாறும்.



    பேரறிவாளன் உள்பட நீண்ட காலமாக சிறையில் உள்ள 7 பேர் விடுதலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் வலியுறுத்தினால் 7 பேரும் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தில் கஜா புயல் நிவாரணம் தொடர்பான விவகாரத்தை தி.மு.க. எழுப்பி விவாதிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #Kanimozhi
    சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இருமுடி கட்டுடன் சென்ற கேரள மாநில பா.ஜ.க. பொதுச் செயலாளர் சுரேந்திரனை கைது செய்த போலீசார் அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் அடைத்துள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை விழாவிற்காக கோவில் நடை திறக்கப்பட்டது. இனி மகரவிளக்கு பூஜை முடியும் வரை கோவில் நடை திறந்திருக்கும்.

    இதற்கிடையில், சபரிமலை போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்து ஐக்கிய வேதி அமைப்பின் பெண் தலைவர் சசிகலா நேற்று முன்தினம் இருமுடி கட்டுடன் சபரிமலைக்கு செல்ல வந்தார். பம்பையில் அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    சபரிமலை செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் போலீசாருக்கும், சசிகலாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பம்பையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசார் வரவழைக்கப்பட்டனர். சசிகலாவை அவர்கள் கைது செய்தனர்.

    சசிகலா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா கட்சி மற்றும் சபரிமலை ஐயப்பன் கோவில் பாதுகாப்பு அமைப்பினர் நேற்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்தில் குதித்தனர்.

    இந்நிலையில், கேரள மாநில பா.ஜ.க. பொதுச் செயலாளர் சுரேந்திரன் தனது காரில் மேலும் இருவருடன் ஐயப்பனை தரிசிப்பதற்காக இருமுடி கட்டுடன் சென்று கொண்டிருந்தார். 



    அவரை நிலக்கல் அருகே பத்தினம்திட்டா போலீஸ் சூப்பிரண்ட் யாதிஷ் சந்திரா தடுத்து நிறுத்தினார். ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் கார் நுழைவுக்கான அனுமதி சீட்டும், தரிசனத்துக்காக கோவில் நிர்வாகத்திடம் ரசீதும் பெற்றிருக்கும் எங்களை ஏன் தடை செய்கிறீர்கள்? என்று போலீசாரிடம் சுரேந்திரன் வாக்குவாதம் நடத்தினார்.

    தரிசனத்துக்கான ரசீதை உங்களிடம் நான் ஏன் காட்ட வேண்டும்? காட்டினால் நீங்கள் பூஜை செய்வீர்களா? என்றும் அவர் போலீசாரை பார்த்து கேட்டார். இப்படி வாக்குவாதம் முற்றிய நிலையில் சுரேந்திரனை கைது செய்த போலீசார், சிட்டார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    பின்னர், அவரை மருத்துவ பரிசோதனைக்காக பத்தினம்திட்டா அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அம்மாவட்ட மாஜிஸ்திரேட் இல்லத்தில் இன்று அதிகாலை சுரேந்திரன் ஆஜர்படுத்தப்பட்டார். 

    அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைதொடர்ந்து, சுரேந்திரன் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க. தொண்டர்கள் திருவனந்தபுரம் நகரில் உள்ள கேரள மாநில அரசின் தலைமை செயலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து கொச்சி, கோட்டயம், கன்னூர் மாவட்டங்களிலும் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 10 மணியில் இருந்து வாகனங்களை மறித்து சாலை மறியல் போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான, பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. #KeralaStrike #Sabarimala #KSurendranarrested  #KSurendranremanded
    கரூரில் பா.ஜ.க. கொடி கம்பம் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.#BJP
    கரூர்:

    கரூர் நகராட்சி 19-வது வார்டு அண்ணாநகர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் கொடி கம்பம் வைக்கப்பட்டுள்ளது.

    இரும்பால் ஆன இந்த கம்பம் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு தான் அந்த பகுதியில் நிறுவப்பட்டது.

    இதன் அருகிலேயே பல்வேறு கட்சிகளின் கொடி கம்பங்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் அந்த கொடி கம்பத்தை பெயர்த்து எடுத்து தேசப்படுத்தி உள்ளனர்.மேலும் கொடியை அப்புறப்படுத்தியதோடு, கயிறையும் அறுத்துள்ளனர். இது குறித்து பா.ஜ.க. நகர தலைவர் செல்வம், வார்டு தலைவர் தங்கவேல் ஆகியோர் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    அதன் பேரில் போலீசார் கொடி கம்பத்தை வெட்டி சாய்த்த மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர். #BJP
    மோடி தலைமையிலான மத்திய அரசின் நான்காண்டு சாதனையை விளக்கி, பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி இன்று டெல்லி பிஷப்பை சந்தித்தார். #Naqvi #DelhiBishop
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கடந்த மாதம் 26ம் தேதியோடு 4 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்தது. இதையடுத்து, அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெற்றியை குறிவைத்து “ஆதரவுக்கான தொடர்பு” எனும் பிரச்சாரத்தை அக்கட்சி அறிமுகம் செய்தது. 

    இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம், கட்சியின் 4 ஆயிரம் நிர்வாகிகள், சுமார் ஒரு லட்சம் பேரை தொடர்புகொண்டு சந்தித்து மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கி கூறவேண்டும் என பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா திட்டமிட்டுள்ளார்.

    அவ்வகையில், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி இன்று டெல்லி பிஷப் வாரிஸ் கே.மஸிஹ்-ஐ அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது டெல்லியில் உள்ள பல்வேறு தேவாலயங்கள், கிறிஸ்தவ கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகளும், பிரதிநிதிகளும் உடனிருந்தனர்.

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நான்காண்டு சாதனையை விளக்கும் புத்தகத்தை அவருக்கு அளித்ததுடன், சிறுபான்மையின மக்களுக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்பாகவும் நக்வி எடுத்துரைத்தார். #Naqvi #DelhiBishop
    கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா 4 தடவை நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்தித்து 3 தடவை வெற்றி பெற்றார். இந்த நிலையில் 5-வது முறையாக சந்திக்க உள்ளார்.#KarnatakaElections2018 #yeddyurappa
    கர்நாடகா முதல்-மந்திரி எடியூரப்பா இதற்கு முன்பு 4 தடவை நம்பிக்கை ஓட்டெடுப்பு சோதனையை சந்தித்துள்ளார். 2007-ம் ஆண்டு அவர் முதல் முதலாக நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்தித்தார். அப்போது கூட்டணியில் இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி ஆதரவு கொடுக்க மறுத்ததால் 8 நாட்கள் மட்டுமே ஆட்சியில் இருந்த எடியூரப்பா ஆட்சியைப் பறிகொடுத்தார்.

    2008-ம் ஆண்டு ஜூன் மாதம் எடியூரப்பா இரண்டாவது நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்தித்தார். அப்போது அவரது ஆட்சி நீடிக்க 3 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவைப்பட்டது. “ஆபரேஷன் கமலா” திட்டத்தின்படி எடியூரப்பா அந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் மிக எளிதாக வெற்றி பெற்றார். 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் எடியூரப்பாவை மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி அப்போதைய (காங்கிரஸ்) கவர்னர் பரத்வாஜ் உத்தரவிட்டார். 18 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் எடியூரப்பாவுக்கு கொடுக்கும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறியதைத் தொடர்ந்து இந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டது.

    அப்போது, தற்போதைய தற்காலிக சபாநாயகர் போப்பையா தான் சபாநாயகராக இருந்தார். அவர் அதிரடியாக 11 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், 5 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களை தகுதி இழக்க செய்து உத்தரவிட்டார். பிறகு குரல் ஓட்டெடுப்பு மூலம் ஓட்டெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெற்றதாக அறிவித்தார். 2010-ம் ஆண்டு அக்டோபரில் மீண்டும் ஒரு தடவை நம்பிக்கை ஓட்டெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெற்றார்.

    ஆக இதுவரை 4 தடவை நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்தித்த எடியூரப்பா 3 தடவை வெற்றி பெற்றார். ஒரே ஒரு தடவைதான் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் 5-வது தடவையான இன்று அவருக்கு வெற்றி கிடைக்குமா அல்லது தோல்வியைத் தழுவுவாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.#KarnatakaElections2018 #yeddyurappa
    காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு பா.ஜ.க., காங்கிரஸ் துரோகம் செய்கின்றன என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். #GKVasan #Cauvery
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வர்த்தகர் அணி சார்பில் வணிகர் தினவிழாவையொட்டி சாதனையாளர்கள் சிறப்பு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்க கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார்.

    வர்த்தகர் அணி மாநில தலைவர் ஆர்.எஸ்.முத்து முன்னிலை வகித்தார். மூத்த துணைத்தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், துணைத்தலைவர் கோவைதங்கம், தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாநில இணைச்செயலாளர் மால்மருகன், இளைஞரணி மாவட்ட தலைவர் ஜெயம் ஜெ.கக்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்கிய நடிகர் ரமேஷ்கண்ணா(கலைத்துறை), கே.ராஜா(வணிகத்துறை), தேவானந்த்(கல்வித்துறை), கே.கே.பில்டர்ஸ் (கட்டிடத்துறை), சங்கர்ராஜ்(உணவுத்துறை), டாக்டர் காமராஜ்(மருத்துவத்துறை) உள்பட 9 பேருக்கு ஜி.கே.வாசன் விருதுகளை வழங்கி சிறப்பித்தார். இதையடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

    * சென்னை விமானநிலையம் காமராஜ் உள்நாட்டு முனையம் என்று இருந்ததை, அதில் உள்ள காமராஜ் பெயரை நீக்க இருக்கின்றனர். அதை நீக்கக்கூடாது. காமராஜர் உள்நாட்டு முனையம் என்ற பெயர் இருக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்.

    * தமிழக அரசு வணிக நல வாரியத்தை சீரமைத்து அதில் வணிக பிரதிநிதிகளை வாரிய உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.

    * ஆன்லைன் வர்த்தகத்தால் சில்லரை வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. மருந்து பொருட்கள் கூட ஆன்லைனில் விற்கும் நிலை இருக்கிறது. அதை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அதைத்தொடர்ந்து ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். கர்நாடக அரசு தமிழகத்துக்கு 4 டி.எம்.சி. தண்ணீர் வழங்கும் என்று ஏங்கிக்கொண்டு இருந்த விவசாயிகளுக்கு மத்திய பா.ஜ.க.வும், கர்நாடக காங்கிரசும் துரோகத்தையும், அநீதியையும் இழைத்து இருக்கின்றன. தொடர்ந்து இந்த 2 கட்சிகளும் தேர்தல் தான் முக்கியம் என்றும், தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்றும் உறுதியாக இருக்கிறார்கள்.

    இந்த கட்சிகளை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக அறிக்கை வழங்க வேண்டும். சட்டத்துக்கு மதிப்பு கொடுத்து கர்நாடக அரசு 4 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும்.

    த.மா.கா. தனித்தன்மையோடு இயக்கத்தை பலப்படுத்துகிறது. பெரிய கட்சிகளோ, சின்ன கட்சிகளோ இப்போதுள்ள சூழ்நிலையில் கூட்டணி அவசியம். தேர்தல் வரும்போது, த.மா.கா. சார்பில் கூட்டணி குறித்து ஆலோசிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×